மானின் இறைச்சி மிகுந்த சுவையுடையது.
மான் தோல் விலைமதிப்பற்றது.
அதன் மருண்ட பார்வையோ வசீகரம்
இரை மேயும் கணத்திலும் பசித்த புலிதான் அதன்
அச்சம்
குறி வைக்கப்பட்ட வேடனின் அம்பு
புறங்கழுத்தில் மயிற்கூச்செரிய வைக்கும்.
காவலன் கைகளில் அகப்பட்ட மான்
துன்புறும் கணங்களைக் கண்ணீரில் சொல்லும்.
கானகத்தின் காற்றையுண்டு
தடாகத்து நீர் பருகி
காட்டுப் புற்கள் மென்றபடி
சாவதானமாய் நடக்கும் வாழ்க்கை இனி இல்லை.
மினுக்கும் தோலும் அப்பாவிக் கண்களும்
தளிர் நடையுந்தான் உன் எதிரிகள்.
காட்டின் தவிர்க்கவியலா அங்கமல்ல இனி நீ.
இறைச்சி சுகம் இயற்கை நியதிகளை வென்றுவிடும் இனி.
24/01/13