நத்தைக் கூடுகளைப் பற்றிய வியாக்கியானம்
இந்தக் கட்டுரைகளை நான் எனது வலைப்பூவான பெருங்கனவைத் துவங்கிய புதிதில் எழுதினேன். எழுத வேண்டும் என்ற ஆர்வம் பின்புறம் கிழிந்த ட்ரவுசர் போட்டிருந்த காலத்திலிருந்தே அரித்துக் கொண்டிருந்த ஒன்று. மேலும் பெருங்கனவைத் துவக்கிய காலகட்டத்தில் நான் ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டவனாயிருந்தேன். ஆன்மிக வளர்ச்சிக்கு இந்த வலைப்பூ உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் துவங்கி, பிறகு இதை மேற்கொண்டு எப்படி நகர்த்துவது என்று திகைத்து நின்ற போது, பிரபல பதிவர்கள் என்ன மாதிரி தங்கள் வலைப்பூக்களில் எழுதுகிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தேன். அதே போன்ற கட்டுரைகளை நானும் எழுதினேன். இந்தத் தொகுப்பில் உள்ள இருபத்தேழு கட்டுரைகளில் பெரும்பாலானவை திரைப்படம் குறித்து இருப்பதற்குக் காரணமும் அதுவே.
எப்போதுமே எனது பிரதானமான ஆர்வங்கள் இரண்டு. ஆன்மிகமும், இலக்கியமும். இரண்டு துறைகளிலுமே தவறான வழிகாட்டுதல்களின் மூலம் நாம் வழி தப்பி விடுவதற்கானச் சாத்தியங்கள் உண்டு. எழுதுவது என்பது பெரும்பாலும் நான் என்னைச் சரியான பாதையில் இருத்திக் கொள்வதற்கான முயற்சியே.
ஜெகதீஷ் குமார்.
நான் இந்தத் தளத்தில் அவ்வப்போது எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுப்பாக கிளிஞ்சல்களும், நத்தைக் கூடுகளும் என்ற தலைப்பில் pdf உருவில் இணைத்துள்ளேன். கீழ்கண்ட சுட்டியைத் தொடர்ந்து அந்தத் தொகுப்பைத் தரவிறக்கிக் கொள்ளலாம்.