20 ஆகஸ்ட், 2011

நான்கு கேள்விகள்


 சாதன சதுஷ்டய சம்பத்திகளை அடைந்த பின்னர் ஞானயோகத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். ஞானயோகம் என்பது விசார ரூபமாக இருக்கிறது. சாதன சதுஷ்டய பண்புகள் பக்க விளைவுகளாக மன அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கும். அத்தோடு திருப்தி அடைந்து விடாமல் மேற்கொண்டு நம் பயணத்தைத் தொடர்ந்தால்தான் இறுதி இலக்கான ஆன்ம விடுதலையை அடைய முடியும். ஆன்ம விடுதலை ஆத்ம ஞானத்தினால் மட்டுமே அடையப்படுகிறது. ஞானத்தை அடைவதற்கான ஒரே சாதனம் விசாரம் மட்டுமே. எப்படி ஒரு பொருளின் இருப்பு ஒளியின் துணையின்றி நமக்கு விளங்குவதில்லையோ அதேபோல் விசாரம் தவிர்த்த பிற சாதனைகள் மூலம் ஞானம் உற்பத்தி ஆகாது. மேற்குறிப்பிட்ட பண்புகள் அனைத்தும் கர்மங்களின் மூலமே அடையப்படும். கர்மத்தின் மூலம் அடையப்படும் எதுவும் காரக வியாபாரம் எனப்படும். கர்மயோகம், தியானம் முதலியன இதில் அடங்கும். ஆனால் விசாரமானது பிரமாண வியாபாரம் எனப்படுகிறது. அறிவைக் கொடுக்கும் கருவியான பிரமாணத்தைப் பயன்படுத்தி விசாரம் செய்வதின் மூலம் ஞானத்தை அடைகிறோம். ஆத்ம ஞானத்துக்கான ஒரே கருவி உபநிஷத் அல்லது வேதாந்தம் ஆகும். மேலும் உபநிஷத் என்பது ஒரு ஷப்தப் பிரமாணம். உபநிஷத்தின் உட்பொருள் அறிந்த ஞானி ஒருவர் அதன் மந்திரங்களைச் சொல்லக் காதால் கேட்டு, அதன் பொருள் விளங்கும் வரை சிந்தித்துத் தெளிதலே விசாரம் எனப்படுகிறது. எனவே குரு என்பவர் இந்தப் பிரமாண வியாபாரத்தில் ஒரு முக்கிய அங்கமாகிறார். அதாவது வேதாந்த விசாரம் என்பது எப்போதும் குருமுகமாகவே செய்யப்பட வேண்டும்.
          விசாரம் என்பது எந்த முறையில் செய்யப்பட வேண்டும் என்பதைக் காணலாம். இதற்கு விசாரப் பிரகாரம் அல்லது விசார சொரூபம் என்று பெயர். தகுதிகளை அடைந்த மாணவன் குருவை அடைந்து கேட்க வேண்டிய கேள்விகளாக நான்கு விஷயங்கள் கூறப்படுகின்றன. அவை;
1.    கஹ அஹம் - நான் யார்?       இது ஜீவ விஷயமான கேள்வி ( ஜீவ விஷய ப்ரஸ்ன: )
2.    கதம் இதம் ஜாதம் – இவ்வுலகம் எவ்வாறு தோன்றியது?      இது உலக சம்பந்தமான கேள்வி ( ஜகத் விஷய ப்ரஸ்ன: )
3.    கோவை கர்த்தா அஸ்ய வித்யதே – இவ்வுலகம் இப்படி இருப்பதற்கு யார் காரணம்? யார் இவ்வுலகைத் தோற்றுவித்தார்கள்?      இது ஈஸ்வர சம்பந்தமான கேள்வி ( ஈஸ்வர விஷய ப்ரஸ்ன: )
4.    உபாதானம் கிம் அஸ்தி இஹ – மேற்சொன்ன மூன்றுக்கும் ஆதாரமாக, அதிஷ்டானமாக இருப்பது எது?
விசாரம் என்பது இத்தகைய தன்மை வாய்ந்ததுதான். இதுவே உபநிஷதங்களின் பேசுபொருள் ஆகும். வேதாந்தத்தின் நான்கு முக்கியமான விஷயங்கள்; 1. ஜீவன். 2. ஜகத். 3. ஈஸ்வரன் 4. பிரம்மம்.
முதலில் நான் யார் என்னும் கேள்விக்கு இவ்வாறு விசாரம் செய்ய வேண்டும். பார்க்கப்படும் பஞ்சபூதங்களால் ஆன இந்த ஸ்தூல உடல் நான் அல்ல. புலன்களின் கூட்டமும் நான் அல்ல. பார்ப்பவன் நான் அல்ல. பார்ப்பவனைப் பார்க்கிறவனும் நான் அல்ல. இதற்கெல்லாம் வேறானவன் நான் என்று அறியவேண்டும். இதற்கான கருவி த்ருக் – த்ருஷ்ய விவேகம். பார்ப்பவன் பார்க்கப்படும் பொருளாக இருக்கமுடியாது என்பதே இந்த விவேகத்தின் மூலம் நாம் அடையும் தெளிவு. ஷங்கரர் எந்த முறைப்படி நாம் சிந்திக்க வேண்டும் என்று இங்கு காட்டுகிறார்.
இரண்டாவது உலகம் எதிலிருந்து வந்தது என்ற விசாரம். இந்தக் கேள்விக்குப் பலவித பதில்கள் நிலவுகின்றன. தர்க்க மதம் உலகம் அணுவிலிருந்து தோன்றியது என்று சொல்கிறது. சாங்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் உலகம் பிரக்ருதியிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். சிலர் உலகம் இயற்கையிலிருந்து தோன்றியதாகக் கூறுகிறார்கள். ஆனால் வேதாந்தமோ உலகம் அஞ்ஞானத்திலிருந்து தோன்றியதாகக் கூறுகிறது. நாம் பார்க்கும் அனைத்துமே அஞ்ஞானத்திலிருந்து தோன்றியுள்ளது. இவ்வுலகம் சமஷ்டி (தொகுப்பு) அஞ்ஞானத்திலிருந்து தோன்றியுள்ளது. அஞ்ஞானத்தின் பிறிதொரு பெயர் மாயை. மாயை என்பது அநிர்வசனீயம் எனப்படுகிறது. அதாவது அதை விளக்க முடியாது. ஆனால் ஞானத்தினால் மாயையை ஒடுக்கி விட முடியும். இவ்வுலகம் இவ்வாறு இருக்கக் காரணம் என்ன என்று மற்றொரு கேள்வி கேட்கப்படுகிறது. நம் மனதில் தொடர்ந்து வரும் எண்ணமான விதவிதமான சங்கல்பங்களே இவ்வுலகம் இவ்வாறு இருக்கக் காரணமாகும். எனவே இவ்வுலகம் இவ்வாறிருக்க மாயை சாதாரண காரணமாகவும், சங்கல்பம் விசேஷ காரணமாகவும் இருக்கின்றன.
இந்த உலகத்துக்கும், அஞ்ஞானத்துக்கும் ஒன்றே ஆதாரமாக இருக்கின்றது. அதை நாம் காண இயலாது. அதன் சொரூபம் இருத்தல். அது அவ்யயம், அதாவது மாறாமல் இருக்கிறது. எல்லாப் பானைகளுக்குள்ளும் களிமண்ணின் இருப்பு மாறாமல் இருப்பதைப் போல் எல்லாவற்றுக்குள் அது மாறாமல் தொடர்ந்து இருக்கிறது.
அந்த ஆதாரமான தத்துவமே எனக்கும் ஆதாரமாக இருக்கிறது. அந்த ஆதாரம் ஒன்றுதான். அவனை நான் பார்க்க முடியாது. அவன் அறிவு சொரூபமாக இருக்கிறான். அவனே நான். நான் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பவன். இப்படிப்பட்ட நான் அழியாத சத் பிரம்மமாகவே  இருக்கிறேன். இந்தப் பகுதியில் அபரோக்ஷ அனுபூதி கூறும் இக்கருத்து ஒரு ஜீவ பிரம்ம ஐக்கியம் ஆகும். இது இந்நூலில் உள்ள ஒரு மஹா வாக்கியம்.
மேற்கூறப்பட்ட கருத்து நம் அனுபவத்துக்கு விரோதமாகவே உள்ளது. ஆனால் இந்த வாக்கியத்தில் சிரத்தை வைத்து மீண்டும் மீண்டும் விசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வாசிக்க