14 ஆகஸ்ட், 2011

ஜேசுதாசின் சங்கீத மழை



       இரவு உணவுக்கு அமர்கையில் நிகழும் வழக்கமாகவே அன்றும் தொலைக்காட்சியைப் போட்டு விட்டு நேரடியாக நியோ கிரிக்கெட்டுக்குத் தாவினேன். மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக ராகுல் திராவிட் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி முடித்தவுடன் விளம்பரம் போட்டு விட்டதால் சானல் மாற்ற வேண்டியதாகி விட்டது. சானல்களில் தவ்வித் தவ்வி ராஜ் தொலைக்காட்சிக்கு வந்த போது, ஓர் ஆணும்,  பெண்ணும் மேடையொன்றில் ஆளுக்கொரு மூலையில் நின்றபடி முக்கி, முக்கிப் பாடிக் கொண்டிருந்தனர். கூல் கோடை என்ற கோடை விடுமுறைக்கான திறந்தவெளி நிகழ்ச்சி அது. தொலைக்காட்சி ம்யூட்டில் இருந்ததால் என்ன பாடலென்று தெரியவில்லை. காமெரா பார்வையாளர் பக்கம் திரும்பிய போதுதான் மழை பெய்து கொண்டிருந்தது தெரிந்தது. குடை பிடித்தபடி சிலர் அடக்கமாய் நின்றிருக்க, நூற்றுக்கணக்கான இசைப்பிரியர்கள் தெப்பலாய் நனைந்தபடி சன்னதம் வந்ததைப் போல் ஆடிக்கொண்டிருந்தனர். என்ன பாடலாயிருக்கும் என்று ஒலியைக் கூட்டிப் பார்த்தேன். ‘ கரிகாலன் காலைப் போல . . .’ என்று துருப்பிடித்த பிளேடு தொண்டையில் சிக்கிக் கொண்ட அவஸ்தையில் பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண் மீது கூடச் சாரல் அடித்துக் கொண்டிருந்தது. மழையும், மேடைக் கச்சேரியும் பார்த்தவுடன் எனக்கு உடனே ஜேசுதாஸ் ஞாபகம் வந்தது ( நமக்குத்தான் அவர் ஜேசுதாஸ். என் மலையாள நண்பர்கள் அவரைச் சரியாக யேசுதாஸ் என்றே குறிப்பிடுகிறார்கள்.)
       பனிரெண்டு உறுப்பினர்கள் கொண்ட என் தாத்தா வீட்டின் இன்னொரு உறுப்பினராகவே வானொலி என்ற மாயப்பெட்டி இருந்த காலத்தில்தான் எஸ்பிபியும், ஜேசுதாசும் எனக்கு அறிமுகமாயினர். இவர்தான் இந்தப்பாடலைப் பாடுகிறார் என்று இனம் பிரித்துப் அறியமுடியாத வயது எனக்கு. சிறுவர் பூங்காவில் குழந்தைகளைக் கூட்டி வைத்துக் கொண்டு, ஆசிரியையாக இருக்கக்கூடும் என்று நான் நம்பிக்கொண்டிருந்த பெண்ணொருத்தி சொல்கிற கதைகளுக்கும், அந்தக் குழந்தைகள் பாடுகிற பாடல்களுக்கும், கதை சொல்பவரே கதையின் பாத்திரங்களாகக் குரல் மாற்றிப்பேசி, சொந்தக்குரலில் வர்ணனைகளையும் தொடரும் ஓரங்க நாடகங்களும்தான் எனக்கு விருப்பமாயிருந்தன. இரவில் படுக்கை நேரத்தில் யார் தலைமாட்டில் வானொலியை வைக்க வேண்டும் என்று வீட்டுக்குள் பெரிய சண்டை நிகழும். நிகழ்ச்சியின் தன்மைக்கேற்ப வானொலி தலைமாடு மாறும். நானும் ஒரு நீளத்துண்டும், தையல் பிரிந்து பஞ்சு எட்டிப்பார்க்கும் அழுக்குத் தலையணை ஒன்றும் அடங்கிய என் படுக்கையை வானொலிக்கருகில் மாற்றியபடியே இருப்பேன். கடைசித் தலைமாட்டுக்குச் சென்றவுடன் துவங்குவது ‘காலத்தால் அழியாத காவிய’ப் பாடல்களாகத்தான் இருக்கும். டி.எம்.சௌந்தர்ராஜனும், பி.சுசீலாவும் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள் அவ்வப்போது தலைகாட்டும் பி.பி. ஸ்ரீனிவாசை எனக்குப் பிடித்திருந்தது.
       பின்னால் கொஞ்சம் வளர்ந்து எஸ்.பி.பி, ஜேசுதாஸ் கட்சிக்கு நிரந்தரமாய்த் தாவியபின், மரபிசை சார்ந்த திரைப்பாடல்களென்றாலே ஜேசுதாஸ்தான் என்றாகி விட்டிருந்தது தெரியவந்தது. சிந்துபைரவியின் அத்தனைப் பாடல்களையும் உருத்தட்டி, ஜேசுதாஸின் ஆவியே எனக்குள் புகுந்து கொண்ட மாதிரி பாடித் திரிந்திருக்கிறேன். அவரது பல பாடல்களைப் பாடிப் பார்க்கும் போதெல்லாம் அந்த மாதிரி அவரால் மட்டும்தான் பாட முடியும் என்று தோன்றும். அவரது கர்நாடக சங்கீதத்தைக் கேட்கிற அளவுக்கு அறிவு வளர்ந்தும் இந்தத் தீர்மானம் மாறாமல்தான் இருந்தது. கல்லூரி முடித்த பருவத்தில் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை மீது அடங்காத காமம் ஏற்பட்டது (அவசர அவசரமாய் அனுபவிப்பதை அப்படித்தானே சொல்லமுடியும்? தீராக்காதல் என்று சொல்வது பொருத்தமாய் இருக்காதே!)
       சாஸ்திரிய இசை கற்பதன் மீதிருந்த ஆர்வக்கோளாறில் கர்நாடக இசைக்கச்சேரிகளுக்குப் போனதைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஒருமுறை பள்ளிபாளையத்தில் ஒரு கிராமத்துக் கோயிலில் நடந்த கச்சேரிக்குச் சென்றிருந்தேன். முதல் இரண்டு மணி நேரங்களுக்கு நெளிந்தபடி, கச்சேரி கேட்க வந்த சங்கீத ஆசிரியைகளையும், அங்குமிங்கும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் பட்டுப்பாவாடை கட்டிய எட்டு வயதுச் சிறுமிகளான அவர்களது மாணவிகளையும் (அவர்கள் சங்கீத மாணவிகளாக இருக்க வேண்டும்), விரைவிலேயே அவர்களுக்கு அரங்கேற்றம் நிகழ்த்திப் பார்த்து விட வேண்டும் என்ற கனவிலிருக்கிற அவர்களது பெற்றோர்களையும், மீதி தொண்ணூறு சதவீத பிராமணக் கிழவர்களையும் பராக்கு பார்த்தபடி அமர்ந்திருந்தேன்; அவ்வப்போது கோயில் வாசலில் விட்டு வந்த என் இருநூற்றைம்பது ரூபாய் புதுச் செருப்பையும்.
       சீர்காழி சிவசிதம்பரம் ஒவ்வொரு கீர்த்தனையையும் துவங்குவதற்கு முன் அதன் ராகம், தாளம் மற்றும் இயற்றியவர் பெயர் பற்றிய குறிப்புகளைக் கொடுத்ததும், அதை நான் பவ்யமாக என் டயரியில் குறித்துக் கொண்டதை என் அருகில் இருந்த பெரியவர் கவனித்து என்னைப் பற்றித் தவறாக நினைத்துக் கொண்டார் போலும். பாடப்பட்டுக் கொண்டிருக்கும் கீர்த்தனைகளின் நுணுக்கங்கள் பற்றி என்னிடம் விளக்க ஆரம்பித்து விட்டார். சீர்காழி எந்தெந்த இடங்களில் தவறு செய்கிறார் என்றும், மேல் ஸ்தாயியில் சஞ்சரிக்க வேண்டிய இடங்களிலெல்லாம் அவர் குரல் மேம்போக்காக நிரவி விட்டுக் கீழிறங்கிக் கொள்வதைக் குறிப்பிட்டுக் காட்டி, ‘ இது ச்சீட்டிங் ‘ என்றார். இது டார்ச்சர் என்று சொல்லியிருந்தால் ஆட்சேபணையின்றி ஒப்புக்கொண்டிருப்பேன்.
       துக்கடா பகுதி வந்ததும்தான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். கீர்த்தனைகளைப்போல் நிரவி, நிரவிப் பாடாமல், அழகான, சிறிய, இனிய பாடல்கள். அதில் சில தமிழ்ப்பாடல்களும் உண்டு. தன் தந்தையின் பிரசித்தி பெற்ற பாடலான ‘சின்னஞ்சிறு பெண்போலே’ பாடியபோது எனக்கு எங்கள் ஊர் குளித்தலை கடம்பர் கோயில் ஒலிபெருக்கி நினைவுக்கு வந்தது. அது வழியாக அந்தப்பாடலை நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.
       நான் செல்லும் எல்லாக் கச்சேரிகளிலும் இதே கதைதான். சுதா ரகுநாதன், நெய்வேலி சந்தான கோபாலன் போன்றோர் கச்சேரிக்கெல்லாம் போனாலும் முதல் இரண்டுமணி நேரங்களுக்கு என் உலகில் சஞ்சாரம் செய்து விட்டு துக்கடா துவங்கும் போது பூவுலகுக்குத் திரும்பி வருவேன். எங்கள் தொழிற்சாலை காசாளர் சண்முகம் ஒருமுறை பிராமணர்கள் இல்லம் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் சௌமியா கச்சேரி இருப்பதாகக் கூறி என்னையும் அழைத்துச் சென்றார். முதலில் பூணூல் அணிவிக்கப்படும் சிறுவன் ஸ்ரீமன் நாராயண பாடினான். அழகாக இருந்தது. சௌமியா ஜலதோஷம் பிடித்த தொண்டையில் கரகரப்பாகவே கச்சேரியைக் கொண்டு போனார். ஆனால் அவருக்கு வயலின் வாசித்த எம்பார் கண்ணன் கையில் வயலினை ஒரு குழந்தையைப் போல் வைத்துக் கொண்டிருக்க, அதிலிருந்து பரவிய தெய்வீக இசைக்கு அவரே கரைந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்து நானும் கரைந்தேன்.
       ஒருநாள் என் தொழிற்சாலையில் காலை ஷிஃப்டில் இருந்தேன். எந்திரங்கள் பதப்படுத்தித் துப்பிக் கொண்டிருந்த துணிகளிலிருந்து மாதிரி எடுத்துக்கொண்டு அவற்றின் சாயம் போகும் தன்மையைப் பரிசோதிப்பதற்காக ஆய்வகம் வந்தேன். காசாளர் சண்முகம் என்னைப் பார்க்க விரும்பியதாகச் சொன்னார்கள். கொடுத்த சம்பளத்தைத் திரும்பப் பிடுங்கிக் கொள்வதற்கான சாத்தியங்கள் நிறைந்த நிலையில் அப்போது எங்கள் தொழிற்சாலை ஓடிக்கொண்டிருந்ததால் கொஞ்சம் யோசனையாகத்தான் சென்றேன். ஆனால் அவர் சொன்ன விஷயம் சம்பள உயர்வை விட மகிழ்ச்சி தரக்கூடியதாகிறது.
அன்று மாலை ஜேசுதாஸ் சேலம் வருகிறாராம். பைபாஸ் ரோட்டுக்கு அருகில் ஓர் இடத்தைச் சொல்லி, அங்குள்ள ஐயப்பன் கோயில் ஒன்றின் திறப்பு விழாவின் திறப்பு விழாவின் சிறப்புக் கச்சேரிக்காக வருவதாகச் சொன்னார்.
ஷிஃப்ட் மூன்றரை மணிக்குத்தான் முடியுமென்றாலும் ஒருமணிநேரம் அனுமதி கேட்டுக் கொண்டு சேலம் புறப்பட்டேன். சண்முகம் வேலைப்பளுவால் வரமுடியாதென்று சொல்லி விட்டார். சேலம் பைபாஸில் இறங்கி ஒரு டவுன் பேருந்தைப் பிடித்து சாலையோரமாகவே அமைந்திருக்கிற அந்த ஐயப்பன் கோயிலை அடைந்தால் ஜேசுதாஸ் இன்னும் வந்திருக்கவில்லை.
ஆனால் கோயிலுக்குப் பின்புறமிருந்த வெற்று நிலத்தில் போடப்பட்டிருந்த கச்சேரி மேடைக்கு முன்னால் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. நான் முதலில் கோயிலுக்குப் போய் விட்டு அப்புறம் மேடைக்கு  முன் சென்றமரலாமா என்று யோசித்தபடியே கோயில் வாயிலில் காத்திருக்க, சற்று நேரத்தில் ஒரு கார் வந்து நின்று உள்ளிருந்து ஜேசுதாஸ் இறங்கினார். கச்சேரி கேட்க வந்த கூட்டத்துக்கு அவர் வந்தது தெரியவில்லை. நிர்வாகிகள் மட்டும் நாலைந்து பேர் அவரைச் சூழ்ந்து கொண்டு, அவரைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். நானும் நிர்வாகிகளில் ஒருவனாகி அவர்களைப் பின்தொடர்ந்தேன்.
சன்னிதானத்தில் நான் ஜேசுதாஸுக்கு எதிரில் நின்றிருந்தேன். உதடுகள் மென்மையாகத் துடித்தபடி மனமுருக வேண்டிக்கொண்டிருந்தார். அவர் என்னைவிடக் குள்ளமாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அந்த தாடியும் ஜிப்பாவும்தான் அவரை சற்று உயரமாகக் காட்டுகிறதோ என்று தோன்றியது.
சரியாக ஆறுமணிக்கு மேடையேறினார். எனக்கு மூன்றாவது வரிசையில் இடம் கிடைத்து விட்டது. மேடையில் அமர்ந்தவுடன் பைக்குள்ளிருந்து ஒரு படத்தை எடுத்துத் தன் எதிரில் வைத்து, கண்மூடி வணங்கினார். பிறகு கீர்த்தனைகளை அந்த வெண்கலக் குரலில் ஆரம்பித்தவுடன் நான் அவருள் மூழ்கி விட்டேன்.
கர்நாடக சங்கீதத்தில் ஜேசுதாஸ் சங்கீதம் என்றே ஒரு பிரிவு இருப்பதாகச் சொல்வார்கள். அவரது மானச தர்மத்துக்கு ஏற்ற வகையில் அவருக்கே உரித்தான பாணியில் அவர் சாஸ்திரீய சங்கீதத்தை நமக்குத் தருகிறார். அந்தக் குரலைப் போன்றதொரு இசைக்கருவியை மனிதன் இதுவரையிலும் கண்டுபிடிக்கவேயில்லை என்றுதான் நினைக்கிறேன். எந்த ஸ்தாயியிலும் தெய்வீகமாக சஞ்சாரம் செய்யும் சாரீரம் அவருடையது. அன்றைக்கு இறைவனையே நேரில் கண்டது போல்தானிருந்தது எனக்கு.
கச்சேரி துவங்கி இருபது நிமிடங்களுக்குள் தூறலாக ஆரம்பித்த மழை வலுத்து பொத்துக் கொண்டு ஊற்ற ஆரம்பித்து விட்டது. இருந்தும் பார்வையாளர்கள் ஒருவர் கூட நகரவில்லை. மேடை பல இடங்களில் ஒழுக ஆரம்பித்து விட்டது. ஜேசுதாஸ் பாடுவதை நிறுத்தவில்லை. ஒருவர் குடை கொண்டு வந்து அவர் பின்னால் நிற்க அவர் அவரிடம் மென்மையாகக் கையசைத்து மறுத்து விட்டார். காற்று மழையை அவர் திசைக்குக் கொண்டு சென்று சாரல் அவர் மீது கடுமையாக அடிக்க ஆரம்பித்து விட்டது. அவர் பாடுவதை நிறுத்தவில்லை. நான் உள்பட கூட்டம் முழுவதும் தெப்பலாய் நனைந்து விட்டது. கீர்த்தனைகள் நிறைவடைந்து துக்கடா ஆரம்பித்தபோதும் மழையும் நிற்கவில்லை; கூட்டமும் கலையவில்லை. எனக்குள் எலும்புகளெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டன. ஜேசுதாஸ் குரல் நடுங்காமல் அந்தக் குளிரில் எப்படிப் பாடுகிறார் என்பது ஆச்சரியமாகவே இருந்தது. துக்கடா பகுதியில் பெரும்பாலும் ஐயப்பன் பாடல்கள்தாம். கூட்டம் எழுந்து ஆட ஆரம்பித்து விட்டது. நானும்தான். இசை இறைவனுக்கு மிக நெருக்கமானது என்று அன்று அனுபவத்தில் உணர்ந்தேன்.
கச்சேரி முடிந்து சற்று நேரம் கழித்துதான் மழைவிட்டது. இரவு நேரமாகிவிட்டபடியால் பைபாஸூக்கு ஆட்டோவில்தான் செல்லமுடிந்தது. வயிற்றுக்குள் பசி தீயாய்க் கனன்று கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்த தள்ளுவண்டிக்கடையில் கோழி பிரியாணி சாப்பிட்டேன். குளிருக்கு இதமாக இருந்தது. வீட்டுக்குச் சென்று சேர்ந்து படுக்கையில் வீழ்ந்ததும் உறக்கத்துள் விழுந்து விட்டேன். காலையில்தான் அந்த சந்தேகம் வந்தது. ஜேசுதாஸ் கச்சேரியைக் கேட்ட அந்த அனுபவங்களும், அன்றிரவு நான் சாப்பிட்டது உண்மையிலேயே கோழி பிரியாணிதானா என்ற சந்தேகமும் இன்றுவரை என்னிலிருக்கின்றன.

மேலும் வாசிக்க