என் பெயர் சிவப்பு என்ற நாவலுக்காக நோபல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் முதல் நாவல் வெள்ளைக் கோட்டை (The White castle). நாவல்கள் பிரிவில் ஜான் கிருஷாம்களும், சிட்னி ஷெல்டன்களும் குவித்து வைக்கப்பட்டிருக்கும் எங்கள் பள்ளி நூலகத்தில் ஓரான் பாமுக்கைப் பார்த்ததும், ஹித்ததூ கடைகளில் பாகற்காயைப் பார்த்தது என் மனைவிக்குக் கண்கள் விரிவதைப் போல் என் கண்களும் விரிந்தன. ஒன்று அல்ல, அவர் எழுதிய மூன்று புத்தகங்கள் இருந்தன. The New Life என்ற நாவலும், தன் சொந்த ஊர் அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய புத்தகமான இஸ்தான்புல்லும். வெள்ளைக் கோட்டை அவரது முதல் நாவல் என்பதாலும், கொஞ்சம் சின்ன புத்தகமாக இருந்ததாலும் (145 ப) அதையே முதலில் தேர்வு செய்தேன்.
துருக்கிப் படைகளிடம் மாட்டிக் கொள்கிற வெனிஸ் நகர அறிஞன் ஒருவன் சுல்தான் முன்னிலையில் கைதியாகக் கொண்டு வரப்படுகிறான். பிற போர்க்கைதிகள் கடினமான உடலுழைப்புத் தொழில்களைப் புரியப் பணிக்கப்பட்டபோதிலும், இவனது பல்துறை அறிவின் காரணமாக அந்தக் கொடுமையிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். அறிவியலிலும், புதிய விஷயங்களைக் கற்பதிலும் ஆர்வம் கொண்ட ஹோஜா என்பவன் இவனை அடிமையாக வாங்கிச் செல்கிறான். ஹோஜா தோற்றத்தில் தன்னைப் போலவே இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது வெனிஸ் அறிஞனுக்கு. ஹோஜா தன்னிடமிருந்து பலதுறைகள் பற்றிய அறிவையும் பெறுவதற்காகவே தன்னை வாங்கியிருப்பதாகப் புரிந்து கொள்கிறான். இருவரும் இணைந்து வாழ்கிறார்கள். விலங்குகள் குறித்த, மருத்துவம் குறித்த, வானவியல் மற்றும் அறிவியல் குறித்த தனது ஞானத்தையெல்லாம் ஹோஜாவுடன் பகிர்ந்து கொள்கிறான் வெனிஸ் அறிஞன். இதைக்கொண்டு மெல்ல மெல்ல சிறுவயது சுல்தானைத் தன் வசப்படுத்துகிறான் ஹோஜா. சுல்தான் தன் அரண்மனையின் அனைத்து விஷயங்களிலும் ஹோஜாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான். சுல்தானின் ஆணையின் பேரில் ஒரு பிரம்மாண்டமான போர் ஆயதத்தைத் தயாரிக்கிறான் ஹோஜா. அந்த பீரங்கியோடு இறுதியில் துருக்கிப்படை வெள்ளைக்கோட்டை நோக்கிப் படையெடுத்துச் செல்கிறது.
பதினேழு வருடங்கள் இருவரும் ஒரே அறையில் இணைந்து வாழ்கிறார்கள். வெனிஸ் அறிஞன் தன் தாய்நாட்டின் நினைவுகளை மெல்ல மெல்ல இழக்கிறான். இருவருமே ஒருவரில் மற்றொருவர் தங்கள் அடையாளங்களை இழப்பதையும், ஒருவர் மற்றவருடைய குணங்களை சுவீகரித்துக் கொள்வதையும் அழகாகச் சித்திரித்திருக்கிறார் பாமுக். கொஞ்சம் கடினமான எழுத்துநடையாகத்தான் இருக்கும் என்று யூகிக்கிறேன். இருந்தபோதிலும் ஆங்கில மொழிபெயர்ப்பு நன்றாகவே செய்யப்பட்டிருந்தது (விக்டோரியா ஹோல்ப்ரூக்).