27 ஆகஸ்ட், 2010

நல்ல சிவம் -(2) சிறுகதை


நல்ல சிவம் -(2) சிறுகதை
நல்ல சிவத்தின் பரந்த உடம்பையும், கரகரத்த குரலையும், புறங்கையில் தேன் நிறத்தில் படர்ந்திருக்கிற பூனை ரோமத்தையும் முதலில் காண்பவர்கள் அவன் அருகாமையில் இருப்பதற்குச் சற்று யோசிப்பார்கள். அப்படியும் மீறி அவனோடு பழக முயற்சித்தவர்களில் பலபேருக்கு கசப்பான அனுபவமே ஏற்பட்டிருக்கிறது. இரண்டு, மூன்று நாள் ஒன்றாக சுற்றித் திரிவார்கள். அப்புறம் திடீரென்று மதியச் சாப்பாட்டு இடைவேளையில் பள்ளி மைதானத்தில் அவனோடு கட்டிப் புரண்டு உருண்டு கொண்டிருப்பார்கள். நல்ல சிவம், மாதேஸ், நான் மூவரும்தான் ஆறாவதிலிருந்தே நண்பர்கள். அதற்காக கட்டிப் புரண்டு சண்டை போட்டதில்லை என்று பொருளல்ல.
என்னதான் முரடனென்றாலும் நல்ல சிவம் மனசு அவன் வீட்டிலிருந்து கொண்டு வருகிற எருமைத் தயிர் மாதிரி அத்தனை வெள்ளை.  எங்கள் பள்ளிக்கூடத்தின் பின் சுவரில் ஒரு ஆள் குனிந்து நுழையுமளவுக்கு ஒரு ஓட்டை உண்டு. ஆசிரியர்கள் விடுமுறையிலிருக்கும் நாட்களில் வகுப்பிலிருந்து நழுவி அந்த ஓட்டை வழியே நல்லசிவம் எங்களை வழி நடத்திச் செல்வான். அந்த ஓட்டை ஏற்படுத்தியதில் நல்லசிவத்துக்குப் பெரும்பங்கு உண்டு என்று பள்ளியில் ஒரு பேச்சு உண்டு.
மூன்று பேரும் வயல், தோட்டம் என்று ஆட்களில்லாத இடமாய்ப் பார்த்துத் திரிவோம். புளிய மரம், கொடுக்காப் புளி மரம், பனை மரம் எதுவாக இருந்தாலும், அரணாக் கயிற்றில் ட்ரவுசரை சுருட்டிவிட்டுக் கொண்டு விருவிருவென்று மேலேறி விடுவான். எங்கள் இருவருக்கும் நல்ல வேட்டைதான். வீட்டிலிருந்தும் பொரிமாவு உருண்டை, இலந்தை வடை, தூக்கிப்போசியில் இறுக மூடின கம்மங்கூழ் என்று வரிசையாக பைக்குள்ளிருந்து எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருப்பான். ஒருமுறை பைக்குள் எத்தனை நோட்டு வைத்திருக்கிறான் என்று பார்த்ததில் இரண்டுதான் இருந்தது. ஆனாலும் வாத்தியார்களிடமிருந்து எப்படியும் தப்பி விடுவான். அவன் பைக்குள்ளிருந்து அவர்களுக்கும் ஏதாவது கொடுக்கிறானா என்று எனக்குச் சந்தேகம் இருந்தது. எங்களுக்கு ஏதாவது கொடுத்துவிட்டு அவன் முகத்தில் தெரிகிற வெளிச்சத்தைப் பார்க்கவேண்டுமென்பதற்காகவே அவனிடமிருந்து ஏதாவது வாங்கிக் கொண்டே இருக்கலாமென்று இருக்கும். எங்களது டவுன் கூச்சத்தையும், தயக்கத்தையும் ஒப்பிடும் போது அவனது கிராமத்துச் சுறுசுறுப்பும், எதையும் அநாயசமாக எதிர் கொள்ளும் துணிச்சலும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஒருமுறை வீட்டுப்பாடம் முடிக்காததற்காக தமிழய்யா என்னைப் பின்னி எடுத்துவிட்டார். நல்லசிவம் அவர் டிவிஎஸ் புகைக்குழாயில் மண்ணைப் போட்டுவிட்டான். நட்புதான் முதல் அவனுக்கு. படிப்பு இத்யாதி எல்லாம் அப்புறம்தான்.
நீண்ட நேரம் ஆலோசனைக்குப் பின் நாங்கள் இருவரும் சேர்ந்து நல்லசிவத்தை சென்னைக்கு அனுப்பி அவன் அண்ணனிடமிருந்து அவனது உயிரைக் காப்பாற்றுவது என்று முடிவு செய்தோம். அவனைச் சென்னைக்கு அனுப்ப ரயில் டிக்கெட்டுக்கு, ஏதாவது வேலை கிடைக்கும் வரை அங்கு செலவுக்கு என்று எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கணக்குப் போட்டோம். போன உடனே ஏதாவது டீக்கடையிலாவது சேர்ந்து விடுவேன் என்றான்.
‘எங்கடா தங்குவே?’ என்றேன்.
‘பிளாட்பாரத்துல படுத்துக்க வேண்டியதுதான். இங்க மட்டும் என்ன, தினம் காட்டுக்குள்ளதான் படுத்துக்கறேன்.
குறைஞ்சது அடி இல்லாமயாவது வாழ்க்கை ஓடுமில்ல’
போட்டிருக்கிற துணி தவிர மாற்றுத்துணி ஏதும் கிடையாது. நானும், மாதேஸும் எப்படியாவது எங்கள் பழைய துணிகளில் ஒன்றிரண்டை எடுத்து ஒரு மஞ்சள் பையில் போட்டுத் தந்துவிடலாம் என்று முடிவு செய்தோம். அடுத்த நாள் மதியம் மூன்று மணிக்கு ரயில் ஏறும் வரை அவனை என் வீட்டில் தங்க வைப்பதற்கு முடிவாயிற்று. அதுவரை நல்லசிவத்தின் அண்ணன் தேடாமல் இருப்பானா?
‘அவன் பம்பு வாங்க கோயம்புத்தூர் போயிருக்கான். விவரம் தெரிஞ்சு வரதுகுள்ள நான் கிளம்பிடறேன்’
திட்டம் ஒரு வடிவத்துக்கு வந்து செயல்படுத்துவதென்று முடிவாவதற்கு பத்தே முக்காலாகி விட்டது. எது நடந்தாலும் இந்த விஷயம் பற்றி வாய் திறப்பதில்லை என்று மூன்று பேரும் கை மேல் கையடித்துச் சத்தியம் செய்து கொண்டோம். மனசுக்குள் நட்புக்காகச் செய்யப்போகும் சாகசம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ‘நாளைக்குப் பரீட்சைக்குப் படிக்காம இவ்வளவு நேரம் என்னடா பேச்சு?’ என்றாள் அம்மா. அவளிடம் நல்லசிவம் கதையையும் எங்கள் திட்டத்தையும் அப்படியே சொன்னேன். ‘ஏதாவது வினையாயிடப் போயிடறதுடா’ என்றாள். ‘அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.  நீ மட்டும் ஏதும் வாய் திறக்காதே’ என்றேன். அம்மா நான் சொன்னால் கேட்பாள். நான் காரணமில்லாமல் ஒரு காரியத்தில் இறங்க மாட்டேன் என்று அவளுக்குத் தெரியும். அப்பாவுக்கு நைட் ஷிஃப்ட். காலையில் வந்தாரென்றால் மதியம் சாப்பிடக்கூட எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டிருப்பார்.
நல்ல சிவம் எங்கள் வீட்டில் படுத்துக்கொண்டான். மறுநாள் காலையும், மதியமும் எங்கள் வீட்டிலேயே சாப்பிட்டான். என் அம்மா சமையலையே ஒருவனால் இப்படி ருசித்துச் சாப்பிட முடியும் என்று அப்போதுதான் கண்டேன். இரண்டு மணிக்கெல்லாம் மாதேஸ் வந்து விட்டான். அவன் வீட்டில் இருந்து சுருட்டிக்கொண்டு வந்தது, வரலாறு புவியியல் கைடு வாங்குவதற்காக நான் வைத்திருந்த பணம் எல்லாம் சேர்த்து நூற்றியிருபது ரூபாய் வந்தது. மஞ்சள் பையோடு ரயில் நிலையத்தில் நல்லசிவம் நின்றிருந்தபோது அவன் கண்ணில் தேங்கி நின்றது ஆனந்தக் கண்ணீரா, பிரிவுத் துயரில் பொங்கிய கண்ணீரா என்று தெரியவில்லை.
‘கொஞ்ச நாளைக்கு இவுங்க அண்ணன் கண்ணில படாம இருக்கணும்’ என்றான் மாதேஸ்.
‘நான் ஒழிஞ்சேன்னு நிம்மதியா இருப்பான் அவன். என்னையெல்லாம் தேடி வர மாட்டான். கவலைப்படாதீங்கடா’
நல்லசிவம் போய் மூன்று நாள் கழித்து அவன் அண்ணன் அவனைத் தேடி வந்தே விட்டான். கடைக்குப் போய்விட்டுத் திரும்பி வருகிற வழியில் என்ஃபீல்டு மோட்டார் பைக்கில் தாட்டியாக ஒருத்தன் வந்தான். கிட்ட வந்து நின்று அவன் மூக்கைப் பார்த்ததும் இது நல்லசிவம் அண்ணன் என்று தெரிந்து விட்டது.
‘தம்பி, நீ நல்லா சினேகிதன்தானே, நல்லா இங்கே வந்தானா?’
‘இல்லீங்களே, நான் அவனப் பார்த்தே பதினைஞ்சு நாளைக்கு மேல் இருக்குமே. ஸ்கூலுக்குக் கூட அவன் வரதில்ல’
‘ஒரு வாரமா ஆளக்காணம். நாலு நாள் முன்னாடி இங்க வந்தான்னு உரக்கடைக்காரர் சொல்றார். அதான் இங்க வந்தேன். நீ அவன்லாம் ஒன்னாத்தானே சுத்திட்டு இருப்பீங்க. அவன் இங்க வரவே இல்லியா?
‘இல்லீங்க. நான் பரீட்சைக்குப் படிச்சுகிட்டு இருந்தேன். எனக்கு ஒன்னும் தெரியாது’ என்றேன். அவன் முறுக்கின மீசையும், சுருட்டி விடப்பட்ட சட்டைக்குப் பின்னால் புடைத்துத் தெரிந்த புஜங்களும் பார்த்தபோது கால்கள் மெலிதாக நடுங்க ஆரம்பித்தன.
‘உங்க குரூப்புல இன்னொருத்தன் இருப்பானே, அவன் வீடு எங்க சொல்லு’
சொல்லலாமா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் தான் சொன்னேன். மாதேஸ் எப்படியும் சமாளித்து விடுவான் என்ற நம்பிக்கை இருந்தது.
ஒரு வாரம் கழித்து ராஜ் மாஸ்டர் வகுப்பில் இருக்கும் போது பியூன் சண்முகம் வந்து தலைமையாசிரியர் என்னை அழைத்து வரச் சொன்னதாகச் சொன்னான். ராஜ் மாஸ்டர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாதவர்கள் வரிசையில் நானும் நின்று கொண்டிருந்தேன். ராஜ் மாஸ்டருக்கு ஏரோப்ளேன் மாஸ்டர் என்றொரு பெயர் உண்டு. பதில் தெரியாதவர்களை டேபிள் மேல் குப்புறப்படுக்க வைத்து ட்ரவுசரை முழங்கால் வரை இழுத்துவிட்டு விடுவார். எங்கள் பள்ளியில் எல்லாரும் பசங்கள் என்பதால் அது பற்றிக் கவலையில்லை. ஆனால் அவர் கொடுக்கிற அடிகளுக்கு பிருஷ்ட பாகம் சிவந்து பழுத்து கன்னிப் போய்விடும். மூன்று நாட்களுக்கு கால்களை அகட்டி, அகட்டிதான் நடக்க வேண்டும். அதிலிருந்து என்னைக் காப்பாற்றிய சண்முகத்தைப் பார்த்து நட்பாய்ப் புன்னகைத்தேன். சென்ற மாதம் லால்குடி தமிழ்சங்கம் நடத்திய பேச்சுப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. இன்னும் கைக்கு வரவில்லை. அதைக் கொடுக்கத்தான் இப்போது ஹெட்மாஸ்டர் கூப்பிடுகிறாரோ? பிரேயரில் வைத்துக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ராஜ் மாஸ்டர் என்னைப் பார்த்து விரோதமாய்ப் புன்னகைத்து, ‘போய்ட்டு வாங்க மாப்பிள்ளை, உங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் காத்திட்டு இருக்கு’ என்றார்.
தலைமையாசிரியர் அறை ரொம்பச் சின்னது. வெளியிலிருந்து பார்த்தபோது அவருக்கு முதுகுகாட்டி நின்றிருந்தவனைப் பார்த்துத் திடுக்கிட்டேன். மாதேஸ். நான் எதற்கு அழைக்கப்பட்டேன் என்று புரிந்துவிட்டது. அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தேன். உள்ளே நுழைந்ததும் முன்னேறாமல் அப்படியே நின்று விட்டேன். ஓரத்தில் உட்கார்ந்திருந்தது நல்லசிவத்தின் அண்ணன். அவனுக்குப் பக்கத்தில் அழுக்குப் படிந்து போய், பரட்டைத் தலையுடன் நின்று கொண்டிருந்தது நல்லசிவம்.
‘ஆக ரெண்டு பெரிய மனுஷங்களும் ஒத்தாசை பண்ணி சாரை மெட்ராஸ் அனுப்பிச்சி வச்சிட்டீங்க. எதுக்கு? ஐயா பெரிய சினிமா நடிகன் ஆகணும்னு சொன்னாரா?’
‘சார், சத்தியமா நாங்க எதும் பண்ணல சார். நாங்க அவனப் பாத்தே ரொம்ப நாளாச்சு சார். இல்ல மாதேஸ்?’ என்றேன்.
‘நீங்க ஒண்ணும் விளக்கம் சொல்ல வேண்டாம். எல்லாம் நல்லசிவம் சொல்லிட்டான். பரதேசிப்பசங்களா, ரெண்டுபேருக்கும் டீசி கிழிக்கறேன் இரு’ என்றார் தலைமையாசிரியர். நல்ல சிவம் பக்கம் திரும்பி, ‘சொல்லுடா, இவனுங்கதான உனக்கு ஓடிப்போற ஐடியா கொடுத்து அனுப்பிச்சு வச்சது?’
நல்ல சிவம் தலையாட்டியதைப் பார்த்தபோது ஆமாம் என்கிற அர்த்தம் கொடுக்கிற மாதிரிதான் இருந்தது.
‘சார், சார், சார், வேணாம் சார், ஒன்னும் பண்ணிடாதீங்க சார்’ என்று இரண்டு பேரும் ஒரே நேரத்தில் குமுறிக்கொண்டு அழ ஆரம்பித்தோம்.
        ‘உங்களைப் போலீசுல புடிச்சுக் குடுக்காம உட்டேனேன்னு சந்தோஷப்படுங்க, ஏங்க முத்து, நீங்க உங்க தம்பியக் கூட்டிட்டுப் போய் புத்தி சொல்லுங்க. நான் இவனுங்களப் பாத்துக்கறேன்’ என்றார்.
        நல்லசிவத்தின் அண்ணன் எங்களைப் பார்த்து, ‘ஃப்ரண்ட்ஸுன்னா நல்லவிஷயங்கள்ல கூடிக்கணும். அவன் வாழ்க்கையையே கெடுக்கப்பார்த்தீங்களேடா.’ என்று விட்டு ‘மெட்ராசுல சட்டையில்லாம ஓட்டை டவுசரோட ஓட்டல்ல டேபிள் துடச்சிட்டிருக்கிறான் சார் என் தம்பி’ என்றான் அவர் பக்கம் திரும்பி. ‘இனி இவனுங்களோட உன்னைப் பார்த்தேன் வெட்டிப் புதைச்சுடுவேன்’ என்றான் தம்பியைப் பார்த்து.
        நல்லசிவம் எங்களைப் பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த உணர்ச்சியை என்னவென்று கணிக்க முடியவில்லை. அவன் அண்ணன் நல்லசிவத்தின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு விறுவிறுவென்று வெளியேறி விட்டான்.
டீசி கொடுக்கவில்லை. ஆனால் இரண்டு பேர் வீட்டிலும் கூப்பிட்டுக் கடுமையாக எச்சரித்தார்கள். ஏரோப்ளேன் மாஸ்டரிடம் ரெண்டுபேரையும் கொண்டு விட்டார்கள். மூன்று மாதம் கழித்து நல்லசிவம் மீண்டும் பள்ளிக்கு வர ஆரம்பித்து விட்டான். நானும் மாதேஸும் அவனை விரோதமாய்ப் பார்த்துக் கொண்டு விலகி இருந்தோம். மதிய உணவு இடைவேளைகளில் மைதானத்தில் பார்க்கும்போது நட்பைப் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் எங்களைப் பார்த்துப் புன்னகைப்பான். கடைசி வரை அவனை மன்னிக்கவே முடியவில்லை என்னால். பத்தாவது முடித்ததும் மேல்நிலைப் படிப்புக்கு ஆளாளுக்கு ஒரு பக்கம் போய்விட்டோம். நல்லசிவம் பத்தாவதுக்கு மேல் படித்தானா என்று தெரியவில்லை. இப்போது அவனை நினைத்துப் பார்க்கும்போது உயிரோடு இருக்கிறானா என்றுகூட சந்தேகமாக இருக்கிறது.
நன்றி உயிரோசை இணைய வார இதழ்

17 ஆகஸ்ட், 2010

ரோபோக்களின் இதயமும், கணினிக் கனவுகளும் 2



 நாங்கள் அமர்ந்திருந்த கருத்தரங்கில் உள்ள அனைவரின் (சுமார் 200 பேர் இருந்தோம்) பிம்பத் தகவல்களையும் சேமிப்பதற்கு குறைந்தது ஒரு ஜிகா பைட்(Gb) செலவாகும் என்றார். அதையே இப்போதிருக்கிற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 30 கிலோ பைட்டுக்குள் (Kb) அடக்கி விட முடியும் என்றார். இந்த பிம்பத் தகவல் சேமிப்பு என்பது கணினித் துறை சார்ந்தவர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாகவே இருக்கிறது. சேர்ந்து கொண்டே இருக்கிற தகவல்களை என்ன செய்வது? ஒரு மனிதனின் வாழ்நாள் முழுதும் சேகரிக்கப்படும் தகவல்கள் கிட்டத்தட்ட இருபது டெர்ரா பைட்டுகள் (Tb) அளவுக்கு வருமாம். இது ஒரு பெரிய சுமை.
இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு உகைலும் அவரது குழுவும் ஒரு புதிய முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ளனர். அவர் சொன்ன சம பரப்பு கொண்ட உலோகங்களுக்கிடையே வெப்பங்கடத்தப்படுதல், பார்ஷியல் டிஃப்ரென்ஷியல் ஈகுவேஷன் என்பதெல்லாம் சுத்தமாகப் புரியவில்லையென்றாலும், சொல்ல வந்த கருத்தை சுமாராகப் புரிந்து கொண்டேனென்றே நினைக்கிறேன். ஒரு பொருளின், உயிரினத்தின் பிம்பத் தகவலைக்கொண்டுதான் அவற்றின் கணினிப் பிம்பங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்தத் தகவல் சுமை தாங்கமுடியவில்லை. அதற்கு பதிலாக பிம்பத் தகவல்களை சமன்பாடுகளாக மாற்றிக்கொள்கிறார்கள். இந்த வகையில் ஒரு எளிய சமன்பாட்டை வைத்துக்கொண்டு அதில் சிறு சிறு திருத்தங்களைச் செய்து நூற்றுக்கணக்கான கணினிப் பிம்பங்களை உருவாக்கமுடிவது மட்டுமல்லாமல், அச்சு அசல் அப்படியே அசலை நகலெடுக்கலாம்.
5. வர்ச்சுவல் சிங்கப்பூர் என்றொரு ப்ராஜெக்ட் அவர் வசம் இருக்கிறதாம். முழு சிங்கப்பூருமே வர்ச்சுவலாக. நாம் அதனுள் நுழைந்து எல்லா இடங்களையும் பார்க்கமுடியும். கடைகளுக்குச் சென்று வாசனைத்திரவியம் வாங்க முடியும். ஏன் அதை வாசனை கூடப் பார்க்க முடியும். இன்னும் பத்து வருடங்களில் அந்த ப்ராஜெக்ட் முடிந்து விடுமென்றார். எனக்கு மேட்ரிக்ஸ் படம் நினைவுக்கு வந்தது.
 பொய் டிடெக்டர் பற்றி அவர் சொன்னபோது பார்வையாளர் மத்தியில் நிறைய சந்தேகங்கள் எழுந்தன. யு.கேயில் அதன் முக்கியத்துவம் பற்றிச் சொன்னார். அந்நாட்டில் வாழும் அனைவருக்கும் இலவச உணவும், இருப்பிடமும் தரப்படுகிறது. இந்தச் சுகவாழ்வுக்கு ஆசைப்பட்டு பலர் சட்டத்துக்குப் புறம்பாக யு.கேயில் நுழைகிறார்கள். ஃப்ரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் எல்லைகளை இணைக்கும் கெலி என்ற இடத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒன்பது லட்சம் கண்டெய்னர் லாரிகள் கடக்கின்றன. இவற்றுக்குள் யாருமறியாமல் மறைந்து கொண்டு பலர் இங்கிலாந்தில் நுழைந்து விடுகின்றனர். ஒவ்வொரு கண்டெய்னெரையும் சோதிப்பதென்பது இயலாத காரியம். இதற்காகப் பல உத்திகளைக் கையாண்டு வருகின்றனர் அதிகாரிகள். உள்ளே இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு அளவை சோதிக்கும் கருவியைப் பயன்படுத்துதல், இதயத்துடிப்பு அறியும் கருவியைப் பயன்படுத்துதல், பாம்பு வடிவம் கொண்ட ரோபோ ஒன்றை கண்டெய்னருக்குள் விட்டு உள்ளே ஆள் இருக்கிறதா என்று கண்டறிதல், ஏன் மோப்ப நாய்களைக் கூடப் பயன்படுத்துகிறார்கள். அந்த வரிசையில் இப்போது பொய் டிடெக்டரும் சேர்ந்து கொள்கிறது. பெரும்பாலும் இந்த மாதிரிக் குற்றங்கள் ஓட்டுனர் அறிந்தே செய்யப்படுகின்றன. அவர் பொய் சொல்கிறாரா என்று கண்டறிவதன் மூலம் கண்டெய்னருக்குள் திருட்டுத்தனம் நடக்கிறதா என்று ஊகித்து விட முடியும்.
ஒருவர் பொய் சொல்லும் போது அவர் கண்களின் கீழே இரைப்பையில் 0.15 டிகிரி வெப்பமாற்றம் ஏற்படுகிறது. அதை வைத்து அவர் பொய் சொல்கிறார் என்பதைச் சொல்லிவிட முடியும். தான் பரிசோதிக்கப்படுகிறோம் என்று தெரிந்த உடனேயே ஏற்படும் பதட்டம் கூட அந்த வெப்பமாற்றத்துக்குக் காரணமாக இருந்துவிட முடியும் என்று பங்கேற்பாளர்களிடையே எழுந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் ஒத்துக்கொண்டார். ஆனால் விமான நிலையம் போன்ற இடங்களில் சுமுகமான சூழ்நிலை நிலவுகையில் இந்தக் கருவியை உபயோகிப்பது எளிது என்றார்.
எல்லாம் சொல்லிவிட்டு எளிய விஷயங்களைக் கூடக் கண்டறிய முடியாமல் எவ்வாறு கணினி திணறுகிறது என்று விளக்கினார். ஒரு புகைப்படத்தில் உள்ள நாற்காலிகளை எண்ணச் சொன்னால் நாற்காலியின் நிழல்களையும் நாற்காலியாக எண்ணி எண்ணுகிறது. இன்னொரு புகைப்படத்தில் உள்ள யானைக்கு எத்தனைக் கால்கள் என்றால் இல்யூஷன் காரணமாக பதினாறு கால்கள் என்று பதிலிறுக்கிறது. நம்மிடம் இருக்கும் பல தேடு யந்திரங்கள் இன்னும் நிறைய பரிணாமம் அடைய வேண்டியிருக்கிறது. (எனக்குக் கூட ஒரு சந்தேகம் இருக்கிறது. இப்போது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த இடம் எது? என்று கூகுளில் அடித்தால் அது தன்னுள் தேடி ஏன் உடனே அதற்கான பதிலைத் தரக்கூடாது? ஏன் அடுத்தாத்து ஆல்பர்ட்டின் தளமும், ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் பற்றியும், பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும் தளத்தையும் எனக்குத் தேடிக்கொடுக்கிறது?) மனிதன் முன்னிலையில் இப்போதிருக்கும் சவால் தன்னைப் போலவே கணினி சிந்திக்கச் சொல்லிக்கொடுப்பதுதான்.
கருத்தரங்கின் இறுதியில் கேள்விநேரம் வந்தபோது ஒரே மாணவனே தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் பேசியதில் புளூ ரே திரைப்படம், முப்பரிமாண தொலைக்காட்சி என்று பலவிஷயங்கள் புரியவில்லை. இப்போதெல்லாம் தலைமுறை இடைவெளி என்பது பத்து வருடங்களுக்குள்ளேயே இருக்கும் போலிருக்கிறது. ‘3டி டிவி வாங்காதீர்கள். சுத்த குப்பை’ என்று உகைலுக்கு அறிவுரை சொன்னான். நானும் ஏதாவது கேட்க வேண்டுமென்பதற்காக ஒரு மனிதன் உண்மை என்றே நம்பும்படியான பிம்பங்களையும், சூழ்நிலைகளையும் உருவாக்குவதன் மூலம் ஒரு சாதாரண மனிதன் இவைகளால் எளிதில் ஏமாற்றப்பட்டு விட முடியும். எனவே ஹ்யூமன் ஜீனோம் பிராஜெக்ட் போல உங்கள் ஆய்வுகளுக்கும் ஏதேனும் தடைகள் உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர் எங்கள் வேலை புதிய சாத்தியங்களை உருவாக்கித் தருவது. அது செயல்படுத்தப்படும் நிலை வரும்போது வரும் எதிர்வினைகளைப் பொருத்தே அவை அமல்படுத்தப்படும் என்றார். ஒரு மாணவன் வர்ச்சுவல் உலகில் விபத்து ஏற்பட்டால் உண்மையாகவும் ஏற்படுமா என்றான். ஏற்படாது. வர்ச்சுவல் உலகின் வசதியே அதுதான் என்றார்.
உலகம் இப்போதிருக்கிற நிலையிலிருந்து மேம்பட்ட நிலைக்குக் கொண்டு செல்வதில் ஒரு சிறுபணியையே நாங்கள் செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டார். நீங்களும் சராசரிகளாக இல்லாமல் உங்களை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று அவர் உணர்ச்சி பூர்வமாகக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மாணவர்கள் பின்னால் சொந்தக் கதை பேசிக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், சில ஆசிரியர்களும் அரட்டையில் ஈடுபட்டிருந்தனர். வெளியே மாணவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த வேன்கள் விடாது ஹார்ன் அடித்துத் தங்கள் நாகரிகத்தை நிலை நாட்டின. என் அருகில் ஆசிரியர் ஒருவர் ‘சீக்கிரம் முடிங்கப்பா, வீட்டுக்குப் போய் பொண்டாட்டிக்கு ஃபோன் பண்ணனும்’ என்றார். ஒரு மாணவி கடைசியாக எழுந்து உங்கள் சம்பளம் எவ்வளவு என்று கேட்டதற்கு, இங்கிலாந்தில் ஒரு வீடு உண்டு. நல்ல கார். எனக்கொரு நல்ல வாழ்க்கை அங்கு உள்ளது. அதுவரை தெரிந்தால் போதும் என்றார். உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாரும் கேட்கவேயில்லை.
ரோபோக்களின் இதயமும், கணினிக் கனவுகளும் 1

14 ஆகஸ்ட், 2010

வாசகர் அனுபவம் - நீங்களும் பங்களிக்கலாமே!

பாஸ்கர், ராஜா, சம்முவம். மூவரும் வாசகர் அனுபவம் என்ற தளத்தில் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் அற்புதமான சேவையைச் செய்து வருகிறார்கள். சமீபத்தில் என்னையும் அதில் இணைத்துக் கொண்டது எனக்குப் பெருமை. அதோடு அவர்கள் நட்பும் கிடைத்தது நெகிழ்வு. நானும் சில நூல்களை அதில் பரிந்துரைத்திருக்கிறேன். வாசிப்பு ஆர்வம் கொண்ட அனைவரையும் வாசகர் அனுபவம் வரவேற்கிறது. தாங்கள் வாசித்த நூல்களை அதில் நீங்கள் பரிந்துரைக்கலாம். தங்கள் தளத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்தாலும் சரி. நல்ல புத்தகங்கள் பரவலான வாககரிடத்துச் சென்றடைய வேண்டும் என்பதே இத்தளத்தின் குறிக்கோள்.
தள முகவரி
தொடர்பு மின்னஞ்சல்
நண்பர்களின் கடிதங்கள்
அன்புள்ள பாஸ்கர், ராஜா, கரிகாலன்
புத்தக பரிந்துரை தவிர்த்து வேறு விஷயங்களையும் என் தளத்தில் எழுத முயன்று வருகிறேன். நேரங்கிடைக்கும்போது நீங்கள் வாசித்துக் கருத்துரைத்தால் மகிழ்வேன்.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்.

அன்புள்ள ஜெகதீஷ்,
உங்கள் தளத்தில் ஜாக்கி வாசுதேவ் ஆசிரம அனுபவங்களைப் படித்தேன், ரசித்தேன். தமிழ் உங்களுக்கு லாவகமாய் வருகிறதுமெல்லிய நகையுணர்வோடு உங்கள் அனுபவங்களை தொகுத்தது சுவராசியமான பதிவாக  இருந்தது
அன்புடன்.
சம்முவம்.


அன்புள்ள ஜெகதீஷ்:
உங்கள் வலைதளத்தில் உள்ள பதிவுகளை நான் அடிக்கடி படித்து வருகிறேன்அண்மையில் நீங்கள் எழுதி இருந்த பதிவுகளில், ஜக்கி வாசுதேவ் - ஈஷா, பயிற்ச்சியில் உங்களுடைய அனுபவங்களைப் பற்றி எழுதி இருந்ததை விரும்பிப் படித்தேன்.   உங்களுக்கு மிகவும் சரளமான நடை இருக்கிறதுபடிக்க எளிதாகவும் இருக்கிறது.
எனக்கும் அத்வைதத்தில் கொஞ்சம் ஈடுபாடு உண்டுஎன் புரிதல் மிகவும் மேலானது; அந்தப் புரிதல் வெறும் தர்க்கத்தின் தளத்தில் மட்டுமே உள்ளது, என்று எனக்குத் தெரியும்.   அதைப் பற்றிப் புரிந்து கொள்ளத் தேவையான தியானம், அகத்தாய்வு செய்யும் மனக் கட்டுப்பாடு எனக்கு இதுவரை இல்லை

நீங்கள் எழுதியிருந்ததில் பல கருத்துக்கள் என் மன நிலையை ஒத்தவையேநீங்கள் கூறியிருந்தது போலவே நானும் எந்த குருவும் ஒரு வழிகாட்டியே, என்று தான் நினைக்கிறேன்  ஆற்றைக் கடக்க தோணி தேவை தான்கடந்த பின்னும் தோணியைச்   சுமந்து கொண்டிருப்பது மூடத் தனம் என்று எண்ணுகிறேன்

உங்களைப் போலவே என்னாலும் அவ்வளவு சுலபமாக பல பேர் முன்னால், என் உள்ளத்தில் உள்ளவற்றை வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லைஇது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லைவெறும் நல்ல பிள்ளை வேஷம் போடும் முயற்சியா என்று என்னை நானே கேட்டுக் கொண்டால் - இல்லை என்று தான் படுகிறதுஇருந்தாலும், நீங்கள் எழுதியதைப் படித்த போது, "அட, நம்மைப் போலவே இவரும் நினைகிறாரே", என்று நினைத்தேன்.  

தொடர்ந்து எழுதுங்கள்ஆன்மீகத் தேடல் ஒரு சிலருக்கு இயல்பிலேயே அமைந்து விடுகிறது.  உங்களுக்கு அப்படித் தான் என்று நினைக்கிறேன்நீங்கள் தொடர்ந்து அந்த பயிற்சிகளைச் செய்து வருகிறீர்களா?

அன்புடன்,
ராஜா


   
அன்புள்ள ராஜா,
என் பதிவுகளைப் படித்துக் கருத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி.
ஆன்மிகம் தொடர்பான பதிவுகளை என் புரிதலை மறுபரிசீலனை செய்து கொள்வதற்காகவே நான் எழுதி வந்தாலும், நம் அலைவரிசையை ஒத்த யாரேனும் அதை வாசித்து வருகிறார்கள் என்று அறியும் போது சற்று தெம்பும், உற்சாகமும் கிடைக்கிறது.
நம் போன்று பணிகாரணமாக எங்கெங்கோ சிதறிக்கிடப்பவர்களுக்கு ஒரே குரு என்பது சாத்தியமில்லையென்றே படுகிறது
நான் கடந்த ஒரு வருடமாக வேதாந்தம் பயின்று வருகிறேன். விட்டு விட்டுத்தான். ஸ்வாமி குருபரானந்தர் மற்றும் ஸ்வாமி ஓம்காரனந்தா  ஆகியோரது வகுப்புகளை ஒலி வடிவில் கேட்டு வருகிறேன். என் நண்பன் ஜெயச்சந்திரனின் வழிகாட்டுதலின் பேரில் தான் இவர்கள் அறிமுகமானார்கள். இருவருமே எளிய மனிதர்கள். விளம்பரம் விரும்பாதவர்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்கிறவர்கள். குருபரானந்தரின் உரைகள் 
தமிழில் www.poornalayam.org ல் இலவசமாகவே கிடைக்கின்றன. வேதாந்தம், உபநிஷத், பகவத் கீதை இன்னும் பிற ஆன்மிகத் தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வகுப்புகள்.  மேலும் நானே முயற்சி செய்து ஒரு முறை பகவத் கீதையைப் படித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. நான் பிராணயாமா செய்தது என் மூச்சுக் கோளாறு காரணமாகத்தான். ஆனால் நிரந்தரத் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.  உடம்பு இளைக்கும் என்று ஆசைப்பட்டு யோகா செய்து பார்த்தேன். அடிக்கடி முதுகு பிடித்துக் கொள்கிறது. மூச்சுப் பிரச்னைக்கு ஜெயச்சந்திரனே வழி சொன்னான். அக்கு பஞ்சர். மூக்கிற்கு இருபுறமும் நான்கு புள்ளிகளில் ஊசி குத்தி பத்து நாள் சிகிச்சை எடுத்ததில் 90% பிரச்னை குறைந்து விட்டது. பிராணயாமா, யோகா  போன்றவற்றின் ஆன்மிக முக்கியத்துவத்தை ரமணர் போன்றவர்களே ஆதரித்தாலும் எனக்கு அந்த மாதிரி அனுபவம் இதுவரை ஏற்படவில்லை. பயிற்சிகள் என்று எதுவும் நான் இப்போது செய்வதில்லை. ஆன்மிகப் படிப்போடு சரி. அதில் முக்கால் வாசி நேரம் இப்போது இலக்கியத்திற்குப் போய் விடுகிறது. சரி அதுவும் ஒருவகை ஆன்மிகத் தேடல்தானே. எனக்கு உங்கள் மூவரின் எழுத்தும் மிகவும் பிடிக்கும். சுருக்கமாக எழுதினாலும், சுருக்கென்று எழுதுகிறீர்கள். வாசகர் அனுபவம் மட்டுமல்ல. எப்போது புதிய பதிவு வந்தாலும் நான் உடனே செல்லும் தளம் பாஸ்கரின் வடிவேலு கோலோச்சும் வரலாறு முக்கியம்.
நம் இந்த உரையாடலை நீங்கள் சம்மதித்தால் என் தளத்தில் பதிவாகப் போட விரும்புகிறேன்.
மீண்டும் நன்றி உங்கள் எதிர்வினைக்கு.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்


அன்புள்ள ஜெகதீஷ்:

பூர்ணலயம் வலை தளத்திற்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிநானும் கேட்க முயற்சி செய்கிறேன்நீங்கள் நம் பகிர்தல்களை தாராளமாக இணையத்தில் போடுங்கள்உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

நீங்கள் சொன்னது போல், ஒரு குருவை துணை கொள்ளும் வாய்ப்பு நம்மைப் போன்றவர்களுக்கு மிகவும் குறைவு தான்.

தொடர்ந்து உரையாடலாம்உங்கள் தொலை பேசி எண  என்ன?

அன்புடன்,

ராஜா
அன்புள்ள ராஜா,
என் தொலைபேசி எண் 00960 7731390.
gtalk லிருந்து அழைப்பு அனுப்புகிறேன் ஏற்றுக்கொள்ளவும்.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்

மேலும் வாசிக்க