வண்ணதாசனின் கதைகள் எப்போதும் மிக நீண்ட உரைநடைக் கவிதைகள் போலவே தோன்றும்.
அவரது கதைசொல்லும் முறையும் வர்ணனைகளும் ஒரு அழகான லயத்தோடு நம்முடன் பயணிக்கும்.
கதைபடித்து முடித்தவுடன், வண்ணத்துப் பூச்சியை பிடித்துப் பின் விடுதலை செய்த பிறகும் அதன் வண்ணங்கள் விரல்களில் ஒட்டிக் கொள்வதைப் போலக் கதையின் நிகழ்வுகள் நெஞ்சில் ஒட்டிக் கொள்கின்றன.
முதலில் நிலை என்னும் கதையை தனக்குப் பிடித்த மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாக சுஜாதா அறிமுகப்படுத்தியதிலிருந்துதான் வண்ணதாசன் பற்றிய ஆர்வம் ஏற்பட்டது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் அவரது ஒரு சிறுகதைத் தொகுதியைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கதைகள் எதுவும் இப்போது நினைவில்லை. ஆனால் வண்ணதாசன் மீதான பிரமிப்பு இன்றுவரை அப்படியே இருக்கிறது. அதில் ஒரு கதை, (நினைவிலிருந்து எழுதுகிறேன்) பெயர் நினைவில்லை, அதில் டிஃபன் பாக்ஃஸூக்குள் சாப்பாட்டுக்குப் பிறகு தனது கடிகாரத்தை கழட்டிவைக்கும் பழக்கம் கொண்ட ஒரு பெண் ஒரு நாள் அதை மறந்து அலுவலகத்திலேயே வைத்துவிட்டு வந்துவிடுவதால், திரும்ப எடுக்கச் செல்கையில், நேரங்கடந்து தட்டச்சுப் பணிபுரிந்து கொண்டிருக்கும் விரல்களின் மீது அவளுக்கு ஏற்படும் பரிவைப் பற்றியது. (வாக்கியம் கொஞ்சம் நீளமோ?). அதுவரை அந்தமாதிரி கதைகளைப் படித்தில்லை.
அப்போது தமிழில் நான் படித்திருந்த நல்ல சிறுகதைகள் என்றால் அது சுஜாதாவுடையது மட்டுமே. லா.ச.ரா, மௌனி, போன்ற எழுத்தாளர்கள் கதைகள் படிக்கக் கிடைத்தாலும் என் மரமண்டைக்கு அவையெல்லாம் சலிப்பை ஊட்டியதால், சாண்டில்யன், பாலகுமாரன், இந்திரா சௌந்தர்ராஜன், இந்த பட்டியலுக்குள் வராத சுஜாதா, தி.ஜா என்று என் வாசிப்பு வாழ்க்கை சுகமாகப் போய்க் கொண்டிருந்தது.
ஆனால் கதை சொல்வதற்கு நிகழ்வுகள் தேவையில்லை என்றும் நம் வாழ்வின் கவிதைக்கணங்களை அப்படியே உறையவைத்துப் புகைப்படங்கள் போல் பாதுகாப்பதற்குச் சிறுகதை ஒரு சிறந்த வடிவம் என்று வண்ணதாசன் கதைகளிலிருந்துதான் தெரிந்துகொண்டேன். அதற்குப் பிறகு சில வருடங்கள் தீவிர இலக்கிய வாசிப்பு கைகூடியது. பொருளாதாரச் சூழ்நிலையை மேம்படுத்தும், பணம்துரத்தும் முட்டாள்தனமான ஆனால் உபயோகமான ஓட்டப் பந்தயத்தில் நானும் கலந்துகொள்ள, ஆறேழு வருடங்கள் தமிழ் இலக்கியத்தோடு இருந்த தொடர்பு விட்டுப் போயிற்று. இப்போது மீண்டும் இறையருளால் தமிழிலக்கியம் பக்கம் திரும்பியிருக்கிறேன்.
சமீபத்தில் அழியாச் சுடர்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டிருந்த வண்ணதாசனின் கதைகளைப் படித்த போது,
மீண்டும் அதே கிளர்ச்சி ஏற்பட்டது. அழியாச் சுடர்களுக்கு நன்றி.
கிருஷ்ணன் வைத்த வீட்டில் வருகிற தியேட்டர் முன்பு தரையில் பரப்பி விற்கப்படும் பாட்டுப் புத்தகங்களும், விறகுக் கடையில் விழும் சம்மட்டி அடியும், ஈரவிறகு வாசனையும் சட்டென்று சிறுவயது ஞாபகங்களைக் கிளறிவிடுகின்றன். எட்டு வயதில் மசூதிக்குப் பக்கவாட்டில் தரைபரப்பி விற்கப்படும் ரஜினி, கமல், எம்.ஜி.ஆர் படங்களைப் பரவசத்தோடு தினமும் பார்ப்பேன். அதில் ஒன்று கூட வாங்கியதில்லை. வாரா வாரம் விறகுக்கடையில்ருந்து விறகு வாங்கி சைக்கிளில் எடுத்து வந்ததும், விறகுகள் சிராய்த்த காயங்களும் நினைவூட்டப்பட்டன.
வண்ணதாசன் சாதாரண மனிதர்களின் எளிய பண்புகள் எவ்வளவு மகத்தானவை என்று நினைவுறுத்தி அவர்களை நமக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்து விடுகிறார். நம்மைச் சுற்றி உலவும் மனிதர்களை நமக்குச் சாதகமான பகடைக்காய்களாகவே உபயோகிக்க நினைக்கும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, தன் சக மனிதர்களின் உயர் பண்புகளைக் கூர்ந்து கவனித்து அங்கீகாரம் அளிக்கும் வண்ணதாசனின் குணம் வியப்பை அளிக்கக் கூடும்.
ஒன்றுமே கொடுக்காவிட்டால் கூட எல்லாவற்றையும்
கொடுத்துவிட்டது போல அம்மாவால் உபசரித்துவிடமுடியும்.
அம்மா முதலில் ஒரு டம்ளர் தண்ணீர்தான்
கொண்டுவந்து கொடுப்பாள். கொடுப்பதற்கு முன்
டம்ளரின் வெளிப்புறத்தில் வழிகிற
சொட்டுக்களை லேசாக விரல்களால் துடைத்துவிடுவாள்.
அந்தத் துடைப்பிலேயே எல்லா மாயமும் நிகழ்ந்துவிடும்.
அம்மாவிடமிருந்து தண்ணீரை வாங்கிக் குடித்த யாரும் அம்மாவை
மறந்திருக்க முடியுமா.. தெரியவில்லை.
தங்கள் தெருவில் தனி அடையாளமும், மரியாதையும் கொண்ட கிருஷ்ணன் வைத்த வீட்டை முப்பத்தைந்து வருடங்களுக்கப்புறமும் ஞாபகம் வைத்துக் கொண்டு விசாரிக்கும் நண்பனைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது ஆசிரியருக்கு. அந்தக் கேள்வி கிளறிவிடும் நினைவுகள் தொடர்கின்றன. பாக தென்னை, பாக்கு மரங்கள் சூழ்ந்து, புல்லாங்குழல் வாசிக்கிற கிருஷ்ணன் சிலை வைத்த தெருவில் தனித்துத் தெரியும் அந்த வீடும் அவ்வீட்டின் அதிகம் பரிச்சயமற்ற மனிதர்களும் அவரைச் சுற்றிக்கொள்கின்றன. டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் பெண்ணைவிட நன்றாக நடனம் ஆடும் அந்த வீட்டின் பெண், அது நகர்ந்த பின்னும் இருக்கும் கனகாம்பர கலர், எதிர்பாராது அவ்வீட்டிலிருந்து பிணங்களாக வெளிவரும் உறுப்பினர்கள் எல்லாம் ஞாபகம் வருகின்றன. ஒன்னு போல போயிரலாம், ஒன்னுபோல வரமுடியுமா என்ற கேள்விக்கு, வரமுடியாது என்ற பதிலையே ஏன் கேள்வியாகக் கேட்கிறார்கள் என்று அவருக்குப் புரியவில்லை. அதே மாதிரி கேள்விதான், கிருஷ்ணன் வைத்த வீடு இப்போ இருக்கா என்று நண்பர் கேட்ட கேள்வியும். இப்போது மூளியாகி விட்ட கிருஷ்ணன் சிலையும்,
முதுகில் விழுந்திருந்த
பழுப்புக் கோடுகளில் சசியைச் சிறகுகளாகச்
செருகிக் கொண்டு பறந்தஅணிலும்,
கிருஷ்ணனின் தலை உச்சியில் இருந்த மயில்பீலிகளையும் பிய்த்துக்
கொண்டுபோன வேம்பின் மஞ்சள் இலைகளும் ரகசிய அறையில் வைத்திருக்கும் ஆசிரியர்,
வாசல் முழுவதும் புல் பூண்டுகள் மண்டி, ஒரு மழைக்காலத்துக்கு
பிந்திய வெயில் நாளில்,
தட்டான் பூச்சிகள் பறக்கிற கோலத்தில்,
வாசிக்கின்ற புல்லாங்குழல் முற்றிலும் உடைபட்டு,
மூக்கு நுனி மூளியாகி, வலது முழங்கைப் பக்கம்
துருபிடித்த கம்பி தெரிய
கிருஷ்ணன் அந்த வீட்டில் கால்மாற்றி நிற்பதைப் பற்றி
தனுஷ்கோடி அழகரிடம் சொல்ல வேண்டுமா என்ற தயக்கம் வந்தது.
உண்மையின் கரிக்கோடுகளால்,
முப்பது வருஷத்துக்கு முந்திய ஞாபகத்தின் சுவர்களில்,
தனுஷ்கோடி அழகர் வரைந்து வைத்திருக்கிற,
கிருஷ்ணன் வைத்த வீடு பற்றிய சித்திரங்களை
நான் கோரப்படுத்த வேண்டுமா என்று நினைக்கிறார் ஆசிரியர்.