17 ஜூலை, 2010

அசோகமித்திரனின் பிரயாணம்

   அசோகமித்திரன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரது படைப்புகள் பலவற்றை நான் படித்ததில்லை. சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் அவரது கரைந்த நிழல்களையும்,  ஒற்றனையும், பதினெட்டாவது அட்சச்கோட்டையும் எங்கிருந்தோ   கிடைத்து படித்தேன். அப்போது எனக்கு அவற்றின் இலக்கிய மதிப்பு பற்றி பெரிய அபிப்ராயம் இல்லையென்றாலும் கூட அவை கொடுத்த வாசிப்பனுபவம் அலாதியானது
        அப்போது நான் சாண்டில்யன், கல்கிராஜேஷ் குமார்லக்ஷ்மிரமணி சந்திரன் (இருவருமே  அம்மாவுக்கு 
பிரியமான  எழுத்தாளர்கள்போன்ற எழுத்தாளர்களை மட்டுமே அறிந்திருந்தேன். சுஜாதா கூட அப்போது எனக்கு அறிமுகமாகவில்லை. கேளிக்கை இலக்கியம், தீவிர இலக்கியம் இது பற்றியெல்லாம் பேதம் பிரித்துப் பார்க்கத்  தெரியாத வயது. தொலைக்காட்சியின் ஆதிக்கம் இல்லாத காலம். எனவே வாசிப்பு ஒன்றே உகந்த பொழுதுபோக்காக இருந்தது. வாசிக்கும்போது நாம் ஒரு பிரத்யேக உலகிற்குள் சஞ்சரிக்கும் அனுபவத்தை அது தர வேண்டும் என்பதே வாசிப்புக்கு என் அளவுகோலாக வைத்திருந்தேன். கதையும் கதை தரும் அனுபவமும்தான் முக்கியமாகப் பட்டதே தவிர எழுத்தாளர் பெயரோ அவர் ஆளுமை தருகிற மயக்கமோ அப்போது என்னை ஆட்கொண்டிருக்கவில்லை 
அந்த நாவல்கள் வாசித்துப் பல வருடங்கள் ஓடிவிட்டாலும் அவற்றின் பக்கங்களில் விவரிக்கப்பட்டிருந்த சிற்சில சம்பவங்கள் ஓவியத்தின் தீற்றலைப்  போல என்னுள் அப்படியே உறைந்து போய்விட்டன. இரண்டு நாவல்களின் கதைகளும் நீராவி படர்ந்த கண்ணாடியினூடே பார்ப்பதைப் போல மங்கலாக ஞாபகமிருக்கின்றன. பதினெட்டாவது அட்சக் கோட்டில் என்னை மாதிரியே ஒரு சிறுவன் தன் வயதொத்த ஹைதராபாத் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடுவது மட்டும் நினைவிருக்கிறது.   அந்தச் சிறுவன் நிச்சயமாக அசோகமித்திரனாகத்தான் இருக்க வேண்டும். ஒற்றன் அவரது அயோவா எழுத்துப் பட்டறை அனுபவங்களைப் பற்றியது என்று நினைக்கிறேன். எல்லாம் நினைக்கிறேன்தான். படிப்பது எல்லாமே மறந்து விடுகிறது. அப்புறம் என்னத்துக்கு இப்படி மாஞ்சு, மாஞ்சு படிக்கிறீங்க? என்று என் மனைவி கேட்கும் கேள்விக்கு நான் கொடுக்கும் அறிவுபூர்வமான பதில்கள் அவளுக்கு எப்பொழுதுமே ஏற்புடையதாக இருந்ததில்லை. இருப்பினும் ஏதோ ஒன்று இலக்கியத்தின் பக்கம் இழுத்துக் கொண்டுதானிருக்கிறது.
அசோகமித்திரனுக்கு வருவோம். ஒற்றனில் அவர் தனது எளிமையான, பூடகமும், குறியீடுகளுமற்ற மொழிநடையால் உருவாக்கிக் கொடுத்திருந்த ஒரு புது உலகத்தைப் போன்று வேறொருவர் படைப்புகளில் அதற்கப்புறம் என்னால் அரிதாகவேதான் நுழைய முடிந்திருக்கிறது. வாசகனைக் கவர வேண்டுமென்றோ, அவனை சுவாரசியப்படுத்தும்படியாகச் சம்பவங்களைப் பின்னிக் கொடுக்கவேண்டுமென்ற பிரக்ஞையிலோ அவர் எழுதுவதில்லையெனினும் அவரது வார்த்தைகள் சங்கிலிக் கண்ணிகள் போன்று ஒன்றோடொன்று பிணைந்து நமக்கு புதிய அனுபவத்தை உருவாக்கித் தந்துவிடுகின்றன. அந்தச் சூழ்நிலையில் நாமே நின்று கொண்டிருப்பதைப் போன்று; நாம் பாத்திரமாகி நடமாடும் கதையையே எழுத்தாளன் நமக்குச் சொல்வது போன்று. இயல்பாகத் தன் அனுபவங்களையே அவர் பதிவு செய்வது போலத் தோன்றினாலும் அவரது சொல்முறையில் பொதிந்திருக்கும் மாயம் கதைக்கு ஒரு தனி நிறத்தைக் கொடுத்துவிடுகிறது. அது அசோகமித்திரனின் நிறம்.
             தற்போது மீண்டும் தமிழ் படிக்கும் ஆர்வம் துளிர்த்திருக்கும் போது கையில் அசோகமித்திரன் இல்லை. சமீபத்தில் தாய்நாடு சென்று திரும்பியபோது வாங்கி வந்த புத்தகங்களில் மானசரோவர் இருக்கிறது. தற்போதைக்கு எஸ்.ராவின் உப பாண்டவமும் (படிக்க வேண்டுமென்றால் பக்கத்தில் அவரே வேண்டும் போலிருக்கிறது), ஜில்லி கூப்பரின் போலோவும் நேரத்தை எடுத்துக் கொண்டிருப்பதால் மானசரோவர் காத்துக் கொண்டிருக்கிறது. அவரது சிறுகதைகளை அழியாச் சுடர்களில் படித்தேன். ( தமிழின் மிகச்சிறந்த படைப்பாளர்களின் எழுத்துக்களை அயராது பதிப்பித்து வரும் அழியாச் சுடர்களுக்கும், ராமுக்கும் நன்றி.) சிறுகதைகளில் அசோகமித்திரனின் பிரத்யேக உலகம் காணக் கிடைக்கவில்லை. பெரும்பாலான சிறுகதைகள் அவர் சாட்சியாக இருந்து பார்த்த பிறர் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருப்பதாய்ப் பட்டது. கதைகளைச் சட்டென்று முடித்து விடுகிறார். அவர் சிறுகதைகளைப் புரிந்துகொள்வதற்கு இன்னும் சற்று இலக்கியப் பயிற்சி வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் திடீரென்று ரத்தினம் மாதிரி ஒரு கதை கண்ணில் பட்டது. (மற்றதெல்லாம் ஒன்று குறைவில்லை. மாணிக்கங்கள்தாம்) கதையின் பெயர் பிரயாணம். அவர் தன் குருவோடு கழித்த ஓர் இரவைப் பற்றியது.
     தனக்கு ஒரு வருடம் யோகம் சொல்லிக் கொடுத்த குருவுக்கு வயோதிகத்தின் காரணத்தால் உடல் தளர்ந்திருப்பதால் எங்கு சென்றாலும் அவரை ஒரு கட்டையில் வைத்து இழுத்துச் செல்கிறார். இளமையில் பிராணாயாமம், யோகம் எல்லாம் செய்து ஸ்வாசம் நிகழ்வதே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருந்த குருவுக்கு இப்போது சாதாரணமாக சுவாசிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இருவரும் எங்கெல்லாமோ பயணித்து இறுதியில் ஒரு மலை உச்சியை அடைவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. யாருமற்ற அம்மலையில் இருவரும் ஒரு பாழ் குடிசையில் தங்குகிறார்கள். மிகுந்த களைப்புடனும், உயிர் போகும் நிலையிலுமிருக்கும் தன் குருவுக்கு, தன் தோள்பையிலிருந்து கிழங்கு மாவு எடுத்து கஞ்சி வைத்துக் கொடுக்கிறார். இரண்டு வாய் குடித்து விட்டுக் கண் மூடிக் கொள்கிறார் குரு. சிறிது நேரம் கழித்து அவரது இதயத் துடிப்பைச் சோதித்து அவர் இறந்துவிட்டதை அறிய வருகிறார் அசோகமித்திரன். குரு கடைசியாக அவரிடம் கேட்டிருந்த காரியங்கள் இரண்டு. சாகும் தருவாயில் அவர் வாயில் பசும் பால் விட வேண்டும்; அவரைச் சமவெளியில்தான் புதைக்க வேண்டும். இரண்டாவதையாவது நிறைவேற்ற நினைக்கிறார் அ.மி. ஆனால் அவரைக் கீழே கொண்டு செல்வதற்கு முன் இருள் சூழ்ந்து விடும். விடியும் வரைக் காத்திருக்க வேண்டும். பிணத்தை உள்ளே வைத்து விட்டுக் குடிசைக்கு வெளியில் சிந்தித்தபடி அமர்ந்திருக்கிறார். இரண்டு மின்மினிப் பூச்சிகள் அருகில் ரீங்கரிக்கின்றன. அவற்றை விரட்டப் போக அவை மின்மினிப் பூச்சிகள் அல்ல, ஓர் ஓநாயின் இரு கண்கள் என்று தெரிய வருகிறது. இனி தன் குருவை இங்கு வைத்திருப்பது பாதுகாப்பானதல்ல என்று உணர்ந்து அவரைக் கட்டையில் படுக்க வைத்து கீழே இழுத்துச் செல்கிறார். வழியில் அவரை ஓர் ஓநாய்க் கூட்டம் சூழ்ந்து கொள்கிறது. எல்லாம் குருவின் மேல் பாய ஆயத்தமாயிருக்கின்றன. இவர் ஒரு உடைந்த மரக்கிளையை எடுத்துக் கொண்டு சுழற்றிச் சுழற்றி அவைகளை விரட்டுகிறார். இருந்தும் இரண்டு ஓநாய்கள் அவரது குருவை இழுத்துக் கொண்டு ஒரு புதர்ப்பக்கம் போய் விடுகின்றன. பதற்றத்தோடு அவைகளைத் தடுக்கப்போன அ.மி. கட்டை தடுக்கித் தரையில் வீழ்ந்து மயங்குகிறார். அவர் மயக்கம் தெளிந்து எழுந்து என்ன கண்டார் என்பதை நீங்கள் கதையில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
     கதையில் வரும் பாத்திரங்கள் அசோகமித்திரனும், சில ஓநாய்களும்தான். அவரது குருவுக்கு இறந்துபோவதைத் தவிர வேறு பங்களிப்பு எதுவும் கதையில் இல்லை (என்று சொல்லி விட முடியாது). அட்ரீனலின் அதிக அழுத்தத்தில் பரவும் ஒரு உச்சக்கட்ட விநாடியில் ஒரு மனிதனுக்குள் உறைந்து கிடக்கும் வாழ வேண்டும் என்ற உந்துதல் அவனை ஓநாய்களில் ஒருவனாக்கி விடும் அபூர்வக்கணம் இக்கதையில் நிகழ்வது கதையை வேறு தளத்தில் நகர்த்தி விடுகிறது. கதை முழுவதுமே முற்றிலும் வேறு ஒரு தளத்தில் தான் நிகழ்கிறது. கதை படித்ததும் ஏற்படும் அனுபவத்தை ஒருவேளை ஒரு தேர்ந்த எழுத்தாளர் அழகாக விளக்கலாம். என்னால் முடியவில்லை. அசோகமித்திரன் மீதான பிரமிப்பு மட்டும் மாறாது அப்படியே நிலைத்து விட்டது.

13 ஜூலை, 2010

மனித மனமெனும் ரகசியக் கிடங்கு

ஆவிகளில் எனக்கு இதுவரை நம்பிக்கையில்லை. சிறுவயதில் பார்த்த திகில் திரைப்படங்கள் கூட பயமுறுத்தினதில்லை.  ஒரு முறை மதியம் தூங்கி எழுந்திருந்த போது, காயப்போடப்பட்டிருந்த  தாத்தாவின் வேஷ்டியில் ஏற்பட்ட அலைவுகள் ஆவிகள் அசைவது போலவே இருந்தது. நீண்ட நேரம் அதன் அசைவுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைச் சிந்தனைச் சிற்பி போல பாவித்துக் கொண்டு அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேனே தவிர பயமெதுவும் ஏற்படவில்லை. ஆனால் இருட்டின் மேல் இருக்கும் பயம் இன்னும் தொடர்கிறது. எங்கேனும் தனிமையில் இருளைச் சந்திக்க நேரிடும்போது மனம் துணுக்குற்று விடுகிறது. ஆவிகளை விட அறியாமைதான் அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறது. நம்மை மீறிய கடவுள் என்ற ஒரு சக்தி உண்டா என்ற முடியாத விவாதத்தைப் போல, ஆவிகள் இருக்கின்றனவா இல்லையா என்பதும் ஒரு தீராத சர்ச்சைக்குரிய கேள்விதான்.
     ஆவிகள் உண்மையில் இருக்கின்றனவோ, இல்லையோ ஆவிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் எல்லா மொழிகளிலுமே கவனிக்கப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன. தமிழில் ஆயிரம் ஜென்மங்கள், மை டியர் லிசா (அது டப்பிங்கா?) போன்ற திரைப்படங்கள் வந்துள்ளன. கதாநாயகியின் பின்பக்கமாக இருந்து கேமரா மர்மான முறையில் மெதுவாக நகர்ந்து வந்து அவள் தோள்மீது ஒரு கை தொடும். திகில் இசை பிண்ணனியில் ஒலிக்க அவள் திடுக்கிட்டுத் திரும்பினால் அவள் காதலன் நின்றிருப்பான். இரவில் வெள்ளைப் புடவை அணிந்த ஒரு பெண்(ஆவி) விளக்கைத் கையில் ஏந்திக் கொண்டு பாட்டுப் பாடியபடியே நடக்கும். கோரமான, குதறப்பட்ட முகங்கள்; ஏமாற்றபட்ட நபர் ஆவியாக உருவெடுத்து வந்து பழி வாங்குவது; ஆவியை வசப்படுத்தும் மாந்த்ரீகம் (இது கேரளா ஸ்டைல்) என்று அனைத்துப் பேய்ப் படங்களிலும் சில ஒற்றுமைகளைக் காண முடியும். ஆங்கிலத்திலும் இது மாதிரியான படங்கள் ஒரே ரத்தமும் சதையுமாய் அருவெறுப்பையும், திகிலையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்துபவை உண்டு. எனக்கு தெரிந்து நான் பார்த்த சில படங்கள் (சிறு வயதில்தான்) ஈவில் டெட் (பல பாகங்கள்).
     வேறு சிலவகைப் படங்களும் உண்டு. இவை உளவியல் ரீதியான திகில் படங்கள். மனோஜ் நைட் ஷ்யாமளன் இந்த வகைப் படங்களை வரிசையாக எடுத்துக் கொண்டே இருக்கிறார். Rings, lady in the water, the sixth sense போன்றவை. தமிழில் (மலையாளத்திலிருந்து வந்த) சந்திரமுகி ஒரு உதாரணம். இவற்றிலெல்லாம் பேய் இருக்கிறது என்றும் சொல்லமாட்டார்கள், இல்லை என்றும் சொல்ல மாட்டார்கள். நம் உறுதியின்மையை அழகாகப் பயன்படுத்திக் குழப்பி விடுவார்கள். மனித மனதின் ஆழங்களில் புதைந்திருக்கும் விபரீதக் கற்பனைகளுக்கு உருவம் கொடுக்கப்படுவதும் அதற்கு அம்மனமே அதிர்ச்சியூட்டும் வகையில் எதிர்வினையாற்றுவதுமே இத்திரைப்படங்களின் அடிநாதமாக இருக்கும்.
     மிகச் சமீபமாகப் பார்த்த தி எக்லிப்ஸ் (the eclipse) திரைப்படம் உளவியல் திகில் (psychological horror) வகையைச் சார்ந்தது.
முழுக்க அயர்லாந்திலேயே எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அயர்லாந்து தகவல் தொடர்பு நிறுவனமும், அயர்லாந்து திரைப்பட நிறுவனமும் இணைந்து வழங்கியுள்ளன. நம் ஊரில் அரசாங்கம் நிதி உதவி செய்து எடுக்கப்படும் படங்கள் உள்ளடக்கம் நன்றாக இருப்பினும் தொழில்நுட்ப ரீதியில் சற்று பின்தங்கியே இருக்கும். ஆனால் இப்படம் இரண்டிலுமே மிளிர்கிறது. நிறைய அயர்லாந்து நடிகர்களும், அவர்களது வித்தியாசமான ஆங்கில உச்சரிப்பும் படம் நெடுக இருக்கின்றன.
     கதை மைக்கேல் என்கிற ஒரு தோல்வியடைந்த எழுத்தாளருடையது. மனைவி அகால மரணமடைந்துவிட இரண்டு குழந்தைகளுடன் தனியாகத் தவித்துக் கொண்டிருக்கிறார். இரவுகளில் வீட்டுக்கு வெளியிலிருந்து யாரோ கண்காணிப்பதைப் போலவே உணர்ந்து அடிக்கடி எழுந்து கொள்கிறார். யாரோ நடக்கும் ஓசையும், பேசும் குரலும் இவருக்கு மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. இது ஏதேனும் அமானுஷ்யத்தின் செயலோ என்ற சந்தேகத்தில் ஆவிகளைப் பற்றி இணயத்தில் தேடிப் பார்க்கிறார். பேயறைந்த மாதிரி என்று சொல்வார்களே அதைப் போலவே திரிந்து கொண்டிருக்கிறார்.
     இந்த வேளையில் அயர்லாந்தில் கோப் (cobh) இலக்கியத் திருவிழா நடக்கிறது. உலகெங்கிலும் இருந்து எழுத்தாளர்களும், வாசகர்களும் வந்து குழுமுகிறார்கள். மிகுந்த பிரபலமடைந்த எழுத்தாளரான நிகோலஸும், தி எக்லிப்ஸ் என்ற நாவலை எழுதியுள்ள எழுத்தாளர் லீனாவும் அங்கு தங்கள் நாவலின் பக்கங்களை வாசகர்களுக்குக் படித்து காட்டும் நிகழ்வு நடக்கிறது. லீனாவுக்கு அயர்லாந்தில் தங்கும் காலம் வரை வேண்டிய உதவிகளைச் செய்வதற்காக மைக்கேல் நியமிக்கப்படுகிறார். லீனாவின் நாவல் ஆவிகளைப் பற்றியது. எனவே தன் அனுபவங்களைப் பற்றியும், தனது சந்தேகங்களைப் பற்றியும் லீனாவிடம் பேசுவதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆனால் லீனாவின் மேல் மையல் கொண்டு அவள் பின்னாலேயே நிகோலஸ் சுற்றி வருகிறார். அவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் போலத் தெரிகிறது. லீனாவை அடைவதற்காகத் தன் மனைவியை விவாகரத்து செய்யவும் தயார் என்கிறார் நிகோலஸ். நீ விவாகரத்து செய்துவிட்டு வா, பிறகு பேசிக் கொள்ளலாம் என்கிறாள் லீனா. மைக்கேல் லீனாவிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தும் கூட ஆவிகள் பற்றிப் பொதுவான கேட்கிறாரே தவிர, தன் சொந்த அனுபவங்கள் பற்றியோ, தன் மனைவியின் மரணம் குறித்தோ எதுவும் பேசுவதில்லை. சொல்லப் போனால் தன் மனைவி மறைந்ததை முதலில் மறைக்கிறார். பிறகு மனைவி எங்கு புதைக்கப்பட்டிருக்கிறாள் என்பதையும் மறைக்கிறார். லீனா தங்கியிருக்கும் இடத்தில் அவளை விட்டுவிட்டு வரும் வழியில் அவரது காருக்குள் கோரமுகத்தோடு ஒரு மனிதன் அவரை பயமுறுத்துகிறான், காரைத் தாறுமாறாக ஓட்டி எதன் மேலோ மோதி நிறுத்துகிறார். நடு இரவில் இன்னொரு கோர உருவம் அவரைப் பிடித்து இழுக்கிறது. சிலவேளைகளில் நடப்பவை கனவு போலும் தோன்றுகிறது.
     லீனா பின் நிகோலஸ் சுற்றுவதும், மைக்கேலின் திகில் அனுபவங்களும் தொடர்கின்றன. ஒரு நாள் தனிமையில் மைக்கேல் லீனாவிடம் அவளுக்கு ஆவிகள் பற்றிய நேரடி அனுபவம் இருக்கிறதா என்று கேட்கிறார். அவள் ஒரு நாள் இரவு தன் படுக்கையில் ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்ததாகவும், அவள் சற்று நேரம் தன்னையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மறைந்து விட்டதாகவும் சொல்கிறாள். அன்றிரவு மீண்டும் மைக்கேலை கனவில் ஆவி துரத்துகிறது. மறுநாள் காலை தன் மாமனாரைப் பார்க்கச் செல்கிறார் மைக்கேல்.  அவரது அறையைத் திறந்தவுடன் ரத்த வெள்ளத்தில் வழுக்கி விழுகிறார். மாமனார் படுக்கையில் இறந்து கிடக்கிறார். மைக்கேலுக்கு பதட்டம் அதிகரித்துவிட இதை லீனாவிடம் சொன்னால் மட்டுமே விடை கிடைக்கும் என்று அவளைச் சந்திக்கச் செல்கிறார். அவள் இருப்பிடத்தில் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த நிகோலஸ் கோபத்தில் அவரைத் தாக்க இருவருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது.
     மாமனாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வரும் மைக்கேலுக்கு இரவில் திடீரென்று விழிப்பு ஏற்பட, அருகில் அவர் மனைவி அமர்ந்திருக்கிறாள். அதிர்ச்சியில் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவள் மெல்ல எழுந்து வந்து அவர் மீது சாய்ந்து நெற்றியில் முத்தமிடுகிறாள். பிறகு எழுந்து போய் விடுகிறாள். மைக்கேல் அடக்க முடியாமல் குமுறிக் குமுறி அழுகிறார்.
     விடிந்து எழும் மைக்கேலுக்கு எல்லாம் பளிச்சென்று தெளிவான மாதிரி இருக்கிறது. மனதில் இருந்த முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டதைப் போலத் தெரிகிறது. இதுவரையில் தன்னை அச்சத்தின் ஆதிக்கத்துக்குள் வைத்திருந்தது தன் மனைவியின் பிரிவில் விளைந்த துக்கத்தை தாம் பூரணமாக வெளிப்படுத்திக் கொள்ளாததுதான் என்று உணர்கிறார். இலக்கியவிழா முடிந்து ஊர் சென்று விட்ட லீனா அவரது கதைகளை தனக்குத் தெரிந்த ஒரு பதிப்பாளரிடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் அவை வெளிவரும் என்று நம்புவதாகவும் தொலைபேசியில் அழைத்துச் சொல்கிறாள். மைக்கேலின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிப்பதைப் போலத் தெரிகிறது.
     மழைக்குளத்தின் கதைகள் என்ற புத்தகத்தின் கதையே திரைப்படமாகியிருக்கிறது. படம் நெடுக அயர்லாந்தின் மெல்லிய சாரலும், காற்றும் வீசும் காலநிலை விரிந்து கிடக்கிறது மனித மனமெனும் ரகசியக் கிடங்கில் ஆழப்புதைந்து கிடக்கும் நம் எண்ணங்களே விபரீதக் கற்பனைகளாக உருக்கொண்டு நம்மை துன்புறுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதை தி எக்லிப்ஸ் அழகாகத் தெரிவிக்கிறது. 

11 ஜூலை, 2010

மறதியின் நாயகன்

சமீபத்தில் ஹிந்தி கஜினி பார்த்தேன். தமிழ் கஜினியை ஏற்கனவே பார்த்திருந்தாலும் அதன் ஹிந்தி வடிவம் முற்றிலும் புதிய அனுபவத்தைத் தந்ததற்கு இரு காரணங்கள். ஒன்று ஆமிர் கானின் நடிப்பு. மற்றொன்று . ஆர். ரஹ்மானின் பின்னணி இசை. தமிழ் ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்திருந்த பின்னணி இசை இன்னும் காதில் நாராசமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ரஹ்மான் தன்இசையின் மூலம் சம்பவங்களுக்கு ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குகிறார். பாடல்கள் ஒன்றும் கேட்கும்படி இல்லையெனினும், பின்னணி இசை படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. சமீபத்தில் கே. டிவியில் பாபாவைப் பார்த்த போதுகூட அதுதான் தோன்றியது. இவ்வளவு சுமாரான படத்திற்கு lord of the rings லெவலுக்கு இசை அமைத்திருக்கிறாரே என்று. அதிலும் ரஜினியைப் பட்டம் துரத்தும் இடத்தில் terrific.

ஆமிர்கான் எப்போதும் போல் தன் பாத்திரத்தின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சூர்யா போல எடுத்ததெற்கெல்லாம் தலையை வெட்டிக் கொள்வதில்லை பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை
மறதி ஏற்படும்போது மட்டுமே அவர் முகம் மாறுகிறது. அதுவும் ஒரு மெல்லிய திகைப்புணர்ச்சி மட்டுமே முகத்தில் இழையோடுகிறது. இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என்று சொன்னால் நம்புகிற மாதிரி இருக்கிறது.  ஆனால் நம்ம ஊர் எம்.ஜி .ஆர் மாதிரி ஏன் அரைக்கை சட்டையை சுருட்டி விட்டுக் கொள்கிறார் என்றுதான் புரிய வில்லை. கடைசியில் வில்லன் ஆட்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போதே மறதி ஏற்பட்டு திகைத்து நிற்கும் தருணம் அருமை. தமிழில் போல வில்லனுக்கு இரட்டை வேடம் இல்லை. நிம்மதியாக இருந்தது. தமிழின் உச்சக்கட்டக் காட்சி உச்சகட்ட அருவெறுப்பு.  அசின் தமிழில்தான் நன்றாகச் செய்திருந்த மாதிரி இருந்தது. ஹிந்தியில் யாரோ தன்னைக் கவனிக்கிறார்கள் என்ற உணர்விலேயே நடித்திருந்தார்.
தமிழில் பார்த்ததைவிட ஹிந்தியில் பார்த்தபோது நிறைவான அனுபவமாக இருக்கிறது. ஆனால் இதே வகையில் எப்போதோ ஒரு ஃப்ரென்ச்சுப் படத்தைப் பார்த்தது ஞாபகம் வந்தது.

2 ஜூலை, 2010

சுந்தர ராமசாமியின் புளியமரம்



ஒரு புளியமரத்தின் கதை
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
பதிப்பகம்: காலச்சுவடு
பரிந்துரை: ஜெகதீஷ் குமார்

தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல் என்று கே.என். பணிக்கரால் குறிப்பிடப்படுகிற ஒரு புளியமரத்தின் கதையை நான் வெகு தாமதமாகத்தான் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், 2000 ல் ஹீப்ரு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு, இந்திய மொழிகளில் இருந்து அம்மொழிக்குச் சென்ற முதல் நூல் என்ற புகழ் கொண்டது. இத்தனைப் பெருமைகளையும் கொண்ட இந்த நாவல் சுந்தர ராமசாமியின் முதல் நாவல் என்று தெரியவரும் போது ஆச்சரியமாக இருக்கிறது. நான் இதுவரை ஆங்காங்கே இலக்கிய இதழ்களில் வெளியாகியிருக்கும் அவரது சிறுகதைகளில் மிகச்சிலவற்றையும், சில கட்டுரைகளையும் மட்டுமே வாசித்துள்ளேன். அவற்றில் பிரசாதம் கல்லூரிக் காலத்தில் படித்தது ஞாபகம் வருகிறது. அந்த அறிமுகத்திலும் மற்றும் என் தமிழாசிரியையின் பரிந்துரையின் பேரிலும் நான் முதலில் படித்த அவரது நாவல் ஜே.ஜே. சில குறிப்புகள். அப்போதெல்லாம் தீவிர இலக்கியப் பரிச்சயம் இல்லாததால் (இப்போதும் எவ்வளவு படித்தாலும் பரிச்சயம் ஏற்பட்ட மாதிரியே இல்லை) அந்த நாவல் எனக்குப் புரியவில்லை. ஆனால் ஏதோ அறிவு ஜீவிகளின் வரிசையில் சேர்ந்து விட்டதாய் மிதப்பு இருந்தது. பல ஆண்டுகள் கழித்து இப்போது அவரை வாசிக்கிறபோது கொஞ்சம் மூளை வளர்ந்து விட்டதாலோ, வாழ்க்கையின் காணாத பக்கங்களைத் தரிசித்து விட்டதாலோ, அனுபவித்து வாசிக்க முடிகிறது. தீவிர இலக்கிய வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருமே கொண்டாடும் சுந்தர ராமசாமியின் எழுத்து ஆச்சரியகரமாக மிக எளிமையாகத்தான் இருக்கிறது.

நாவலின் பிரதான பாத்திரமாக, தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒரு சாட்சியாய் நின்று நோக்கி, அவற்றில் எந்தவித பங்கெடுத்துக் கொள்ளாவிட்டாலும், சூழ்நிலைகளையும், சுற்றுப்புறத்தின் உயிரினங்களையும் தன் சுகவாழ்விற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத்துடிக்கும் மனிதர்களின் சதிவேலைகளுக்குத் தன்னைப் பலிகொடுத்துவிட்ட ஒரு புளியமரத்தின் வாழ்வும், வீழ்ச்சியும்தான் கதையின் மையம். சொல்லப் போனால் தன்னைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் கதையையும் அது  மவுனமாகச் சொல்லிகொண்டே செல்கிறது.
புளியமரத்தின், அதையொட்டி வாழ்ந்த மனிதர்களின் பழங்கதைகளை அறிந்த ஒரே மனிதர் தாமோதர ஆசான். மண்டபத்தின் முன் அமர்ந்து, ஈத்தாமொழி வெற்றிலையும், பச்சைப்பாக்கும், யாழ்ப்பாணம் நம்பர் ஒன் புகையிலையும் போட்டுத் துப்பிய பின், தொண்டையைச் செறுமிக் கொண்டு ஆர்ப்பாட்டமாய் அவர் ஆரம்பித்து சொல்கிற கதைகளில் கோணலும், நெளிசலுமான மன இயல்புகள் கொண்ட எத்தனைப் பாத்திரங்கள்? ஒரு மனிதனால் இத்தனைக் கதைகளைச் சுமக்க முடியுமா என்று வியக்கிறார் ஆசிரியர்.

எண்பது வயதான ஆசானின் வாயிலாகத்தான் புளியமரம் தொடர்பான பலகதைகளைத் தெரிந்து கொள்கிறார் சுரா. அப்போதெல்லாம் மரத்தைச் சுற்றிலும் குளம் தண்ணீர் நிரம்பிக் கிடக்குமாம். மாலை வேளைகளில் மனித நடமாட்டமே இல்லாத அந்தக் குளத்தில் குளித்த செல்லத்தாயிக்கு நேர்ந்த கதியை ஒரு ஸ்வாரசியமான மாந்தீரிகக் கதைக்குண்டான தொனியில் கூறுகிறார் ஆசான். அதன் காரணமாக வெட்டப்படவிருந்த புளியமரத்தை எப்படித் தன் சமயோஜித புத்தியால் காப்பாற்றினார் என்பதையும் பெருமையோடு கூறுகிறார். பூரம் திருநாள் மகாராஜாவின் விஜயத்தின் போது அவரால் நாற்றம் தாங்கமுடியாமல் போனதால்தான், புளிக்குளம் தூர்வாறப்பட்டு, புதிய ரோடுகள் எல்லாம் போடப்பட்டு ஊரின் வளர்ச்சிக்கு வழிவகுக்கப்பட்டது என்கிறார் ஆசான்.
        ஆனால் புளிக்குளத்தை ஒட்டிய தனது மதியத்தூக்கத்துக்கான இடமான காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்படும் கோரத்தை காண்பதற்கு முன்பே ஆசான் விடைபெற்றுக் கொள்கிறார். தோப்பு அழிக்கப்பட்டு அங்கு பூங்கா அமைக்கப்படுகிறது. மரங்கள் வெட்டப்பட்டு, செடிகள் நடப்படுகின்றன.
‘மரத்தெக் காட்டிலும் செடியாடேய் கூடுதல் காத்துத் தரும்’ என்கிறார் வயோதிக நாடார்.
‘அளகுக்கு” என்கிறான் இளைஞன்.
செடிதான் அளகாட்டு இருக்குமோ?’
‘உம்’
செடி மரமாயுடாதோவ்?’
‘மரமாட்டு வளராத செடிதான் வெப்பாங்க. இல்லை, வெட்டி வெட்டி விடுவாங்க’
‘அட பயித்தாரப் பயலுகளா!’

பூங்காவில் அபூர்வமாகச் சந்தித்துக் கொள்ளும் காதலர்கள், புதிதாய்த் திருமணமானவர்கள், பரஸ்பரம் உடல்நிலை குறித்து விசாரித்துக் கொள்ளும், தங்கள் பத்திய உணவின் பட்டியலைப் பிறருடையதுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும், சகாக்களில் எவருக்கேனும் திடீர் மரணத்துக்குச் சீட்டு விழும் போது ‘கடவுளே எனக்கும்’ என்று பிரார்த்தனை செய்யும்  பென்ஷன் பெறும் முதியவர்கள், நடிகைக்கு நேர்ந்த கருச்சிதைவு பற்றி கவலையோடு பேசிக் கொள்ளும் கல்லூரி மாணவர்கள், புல்தரையில் கேட்கும் காதைத் துளைக்கும் அரசியல் விமர்சனங்கள் எல்லாம் ஆசானின் காலம் மாறிவருவதைக் குறித்துக் காட்டுகின்றன.

நாவலில் ஆசானின் மறைவுக்குப் பின்பான பகுதியில், ஆசிரியரே புளியமரத்தைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைச் சாட்சியாக இருந்து காண நேரிடுகிறது. வருடாவருடம் வஞ்சமில்லாமல் காய்க்கும் புளியமரத்தின் காய்கள் ஏலம் விடப்பட்டு அந்தத்தொகை முனிசிபாலிட்டிக்குச் சேர்க்கப்படும். ஏலத்தை எடுப்பதற்காகப் பலரும் முயற்சிப்பினும் அதற்காகத் தாழக்குடி மூத்தப்பிள்ளையும், கோட்டாறு அப்துல் அலி சாயபுவும் பொருதிக்கொள்ளும் காட்சிகள் அலாதியானவை. அந்த ஆண்டு எப்படியும் நாப்பத்தஞ்சுக்குப் போகும் என்று கணக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்த முனிசிபாலிடி சிப்பந்தி வள்ளிநாயகத்துக்கு மரத்தில் ஒரு காய் கூட இல்லாதிருப்பது கண்டு அதிர்ச்சி ஏற்படுகிறது. மேற்றிராணியார் அரண்மனையில் பெரியபாதிரி விடும் பாலுக்குக் காத்திருந்த குழந்தைகளும், தோட்டிகளும் கல்லெறிந்து காய்களைக் கவர்ந்து சென்றுவிட்டது அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. காய்களை காணோமென்று பராதி சொல்வதற்கு மூத்தபிள்ளையைப் பின் தொடர்ந்து ஒரு ஐம்பதுபேர் முனிசிபாலிடி செல்கிறார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கிறது வினை.

புளியமர ஜங்ஷனில் கடைகள் வைத்திருக்கும் அப்துல் காதருக்கும், தாமுவுக்கும் சிறு பொறியாகக் கிளம்பும் பகை பிற்பாடு எவ்வாறு அந்தப் பிரதேசத்தின் அமைதியின்மைக்கே காரணமாகிறதென்றும், இரு தனிமனிதர்களின் தொழில் போட்டிகள் எப்படி மதப் பிரச்னையாகவும், அரசியலாகவும் மாற்றப்படுகிறதென்றும் காண்கிறோம். இரண்டு பக்கமும் ஜால்ரா தட்டிக்கொண்டும், இருபுறமும் எண்ணெய் ஊற்றிப் பகைத்தீயை வளர்த்துக் கொண்டுமிருக்கும் பத்திரிகை நிருபர் இசக்கியின் கதாபாத்திரத்தைப் பார்க்கும் போது ஏனோ தில்லானா மோகனாம்பாள் நாகேஷின் கதாபாத்திரம் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியவில்லை. சாதாரண தொழிற்சண்டை அரசியல் போட்டிக்கும், பதவியை அடைவதற்கான சதித்திட்டங்களுக்கும், குழிபறித்தல் வேலைகளுக்கும் வழிவகுக்கின்றன. இந்தக் களேபரங்களில் புளியமரம் பலிகடா ஆக்கப்படுகிறது. அமங்கலச் சின்னமாகவும், ஊரின் வளர்ச்சிக்குத் தடையாகவும், எந்நேரமும் சரிந்து விழுந்து உயிர்ப்பலி வாங்கும் நிலையிலுமிருக்கிற புளியமரத்தை வெட்டிவிடவேண்டுமென்ற கோஷத்தை ஒரு தரப்பு தூக்கிப்பிடிக்கிறது. (அதன் உண்மையான காரணம் புளியமரத்தை வெட்டினால் எதிராளியின் தொழில் பாதிக்கப் படும் என்பதே) மற்றொரு தரப்பு அவசர அவசரமாகக் புளியமரத்தைக் கடவுளாக்கி விடுகிறது. ஒரு நள்ளிரவில் புளியமரம் விஷம் வைத்துக் கொல்லப்படுகிறது. இலைகள் உதிர ஆரம்பித்து, சல்லிக்கிளைகளை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டே வந்து சர்வமொட்டையாகி உயிரை விடுகிறது புளியமரம். நமக்கு நெருங்கிய ஒரு நபரின் மரணத்தை அருகிலிருந்து காணும்போது மனதில் ஒரு வெறுமையும், சோகமும் கப்பிக் கொள்வது இங்கும் நிகழ்கிறது. காய்ந்து கருகி இறந்தபின்னும் சடலமாகவே சில நாட்களுக்கு நின்று கொண்டிருக்கிறது அந்தப் புளியமரம். புளியமரம் அகற்றப்பட்ட பின்னரும் புளியமர ஜங்ஷன் என்ற பெயர் மட்டும் மாறுவதேயில்லை.

தீவிர இலக்கியம் என்றால் மிக நிதானமாகவும், இழுவையாகவும் செல்லும் என்று நினைத்துக் கொண்டிருந்த என் நினைப்பைப் பொய்யாக்கிய நாவல் இது. நோபல் பரிசு பெறத் தகுதியானதென்று ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே.எம் ஜார்ஜ் அவர்களால் குறிப்பிடப்படும் இந்த நாவல் விறுவிறுப்பாகவே செல்கிறது. நாவலில் சுந்தர ராமசாமி பயன்படுத்தியுள்ள நாகர்கோவில் வட்டாரவழக்கு சொக்க வைக்கிறது. சுராவின் உரையாடல் உத்தி கதை மாந்தர்களின் மனதில் ஊறிக்கிடக்கும் சுயநல நினைப்புகளையும், வஞ்சக எண்னங்களையும், பிடிவாதக் குணங்களையும் லாவகமாக வெளிக்கொண்டு வந்துவிடுகிறது. ஒரு உடனடி உதாரணம் வேண்டுமெனில் அவரது பிரசாதம் கதையைப் படித்துப் பாருங்கள்.
இந்த நாவலில் பெண்பாத்திரங்கள் மிகக்குறைவு. இதை சுராவே சொன்னபிறகுதான் நமக்கு உறைக்கிறது. பஜாரில் நடந்து செல்லும் ஒரு வாத்தியாரம்மாவின் சாயலிலேயே செல்லத்தாயியின் பாத்திரத்தைப் படைத்ததாகக் கூறுகிறார். நாவலின் ஆறாவது பதிப்பிலும் கூட சில திருத்தங்களை மேற்கொண்டு அதில் வருவதாகச் சொல்லப்பட்டிருக்கிற காலக்குழப்பத்தைத் தீர்ப்பதற்கு முயன்றிருக்கிறார்.

இந்த நாவல் தொட்டிருக்கும் இலக்கியச் சிகரங்களையும், இதனுள் விவரிக்கப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் ஆழம் பற்றியும் ஆராய்ந்து எழுதுவதற்கான தகுதி எனக்கில்லையென்று நன்கு தெரியும். வாசகர்களும், விமர்சகர்களும் ஒருசேரக் கொண்டாடும் ஒரு புளியமரத்தின் கதையின் வாசிப்பனுபவத்தை என் அறிவிற்கெட்டிய வரையில் பதிவு செய்துள்ளேன். நாவலை நீங்கள் வாசித்துப் பார்க்கும்போது ஒரு பிரத்யேக அனுபவத்தை அடைவது திண்ணம். காலச்சுவடு பதிப்பகம் இந்நாவலை கிளாசிக் வரிசையில் அழகாகப் பதிப்பித்திருக்கிறார்கள். பின்புறத்தில் நாவலில் புழங்கும் வழக்குச் சொற்களுக்கான அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய விரும்பிகள் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய நாவல் ஒரு புளியமரத்தின் கதை.

மேலும் வாசிக்க