சமீபத்தில் ஹிந்தி கஜினி பார்த்தேன். தமிழ் கஜினியை ஏற்கனவே பார்த்திருந்தாலும் அதன் ஹிந்தி வடிவம் முற்றிலும் புதிய அனுபவத்தைத் தந்ததற்கு இரு காரணங்கள். ஒன்று ஆமிர் கானின் நடிப்பு. மற்றொன்று ஏ. ஆர். ரஹ்மானின் பின்னணி இசை. தமிழ் ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்திருந்த பின்னணி இசை இன்னும் காதில் நாராசமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ரஹ்மான் தன்இசையின் மூலம் சம்பவங்களுக்கு ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குகிறார். பாடல்கள் ஒன்றும் கேட்கும்படி இல்லையெனினும், பின்னணி இசை படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. சமீபத்தில் கே. டிவியில் பாபாவைப் பார்த்த போதுகூட அதுதான் தோன்றியது. இவ்வளவு சுமாரான படத்திற்கு lord of the rings லெவலுக்கு இசை அமைத்திருக்கிறாரே என்று. அதிலும் ரஜினியைப் பட்டம் துரத்தும் இடத்தில் terrific.
ஆமிர்கான் எப்போதும் போல் தன் பாத்திரத்தின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சூர்யா போல எடுத்ததெற்கெல்லாம் தலையை வெட்டிக் கொள்வதில்லை பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை
மறதி ஏற்படும்போது மட்டுமே அவர் முகம் மாறுகிறது. அதுவும் ஒரு மெல்லிய திகைப்புணர்ச்சி மட்டுமே முகத்தில் இழையோடுகிறது. இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என்று சொன்னால் நம்புகிற மாதிரி இருக்கிறது. ஆனால் நம்ம ஊர் எம்.ஜி .ஆர் மாதிரி ஏன் அரைக்கை சட்டையை சுருட்டி விட்டுக் கொள்கிறார் என்றுதான் புரிய வில்லை. கடைசியில் வில்லன் ஆட்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போதே மறதி ஏற்பட்டு திகைத்து நிற்கும் தருணம் அருமை. தமிழில் போல வில்லனுக்கு இரட்டை வேடம் இல்லை. நிம்மதியாக இருந்தது. தமிழின் உச்சக்கட்டக் காட்சி உச்சகட்ட அருவெறுப்பு. அசின் தமிழில்தான் நன்றாகச் செய்திருந்த மாதிரி இருந்தது. ஹிந்தியில் யாரோ தன்னைக் கவனிக்கிறார்கள் என்ற உணர்விலேயே நடித்திருந்தார்.
தமிழில் பார்த்ததைவிட ஹிந்தியில் பார்த்தபோது நிறைவான அனுபவமாக இருக்கிறது. ஆனால் இதே வகையில் எப்போதோ ஒரு ஃப்ரென்ச்சுப் படத்தைப் பார்த்தது ஞாபகம் வந்தது.
தமிழில் பார்த்ததைவிட ஹிந்தியில் பார்த்தபோது நிறைவான அனுபவமாக இருக்கிறது. ஆனால் இதே வகையில் எப்போதோ ஒரு ஃப்ரென்ச்சுப் படத்தைப் பார்த்தது ஞாபகம் வந்தது.