9 அக்டோபர், 2024

காம்யுவின் துப்பாக்கி - தேவேந்திர பூபதி கவிதைகள்

நன்றி: கவிதைகள் இணைய இதழ் 




கவிதை என்பது ஓர் அனுபவம். பொதுவாக எந்த ஒரு இலக்கியப் படைப்பையுமே அதன் நுகர்வோராகிய வாசகர் அணுகி அனுபவிக்க இயலும்போதே அப்படைப்பின் நோக்கம் நிறைவேறுகிறது. மாறாக, படைப்பைக் கூறுபோட்டு அறுவைச் சிகிச்சை செய்து அதன் உள்ளுறுப்புகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து, கண்டுபிடித்து விட்டேன் பார் என்று எக்காளமிடுவது ஒருவகையில் குரூரமான ஆனந்தமே. எளிய மனத்துடன் படைப்பை அணுகும் வாசகருக்கு அப்படைப்பு அளிக்கும் அனுபவம் அலாதியானது. சமயங்களில் அதைத்தான் ஒவ்வொரு படைப்புமே கோருகிறது. படைப்பு என்பது படைப்பாளி நமக்காகச் சமைத்துத் தரும் ஓர் அறாக்கனவு. அவன்/ள் உலாவிய அந்தக் கனவை வாசகராக நாமும் சுவீகரித்து கனவுக்குள் சஞ்சரிக்க இயலும் ஓர் புள்ளியில் படைப்பாளியும் வாசகரும் ஒன்றாகி விடுகிறார்கள். அப்போது வாசகன் ஒரு சகபடைப்பாளனாகவே மாறி விடுகிறான்.


விழிதிறந்த அறாக்கனவெனும் அனுபத்தை அளிக்க, கவிதை என்ற இலக்கிய வடிவம் படிமங்கள், குறியீடுகள் போன்ற கருவிகளைக் கையாளுகின்றது. விமர்சகர் அந்தப் படிமங்களையும், குறியீடுகளையும் ஆராய்ந்து தரும் விளக்கங்கள் வாசகருக்கு ஒரு கவிதையைப் புரிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. எனினும் நம் கனவுகளில் வரும் காட்சிகள் சில சமயங்களில் அர்த்தமற்ற படிமங்களாகவே நின்று விடுவதைக் காண்கிறோம். ஆழ்ந்த பொருள் எதுவும் இல்லாது போனதினாலேயே அக்கனவுகளின் காட்சிகள் நம்முள் நிரந்தரமாகத் தங்கி விடுவதையும் காண்கிறோம். ஓர் முழு மதிய முன்னிரவில், காவிரியின் பரப்பில் பிரதிபலித்த நிலவொளியில் ஊறியபடி மக்கள் தண்மணலில் அமர்ந்து கட்டுச்சோறு அவிழ்த்து உண்டபடியிருக்க, கரைதாண்டித் தொலைவில் இருந்த ஒரு நாவல் மரத்திலிருந்து உதிர்ந்த பழங்களை நண்பர்களுடன் மணலூதிச் சேகரிப்பதாய் ஒரு கனவு பல ஆண்டுகளுக்கு முன் வந்தது. அந்தக் காட்சி அப்படியே படிமமாக மனதில் உறைந்து விட்டது. எந்த அர்த்தமும் இல்லாத அந்தக் காட்சி எண்ணுந்தோறும் கிளர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஒருவேளை எந்த அர்த்தமும் இல்லாததினால்தான் அப்படிமம் ஒவ்வொரு முறை நினைவில் எழும்போதும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறதோ?


கடற்கரையில் அமர்ந்து கடலை நோக்கும் காட்சி அலாதியானது. சென்னையில் இருப்பவர்களுக்கு மக்கள் கூட்டத்தோடு மட்டுமே கடலை தரிசிக்க வாய்த்திருக்கிறது. ஆனால் நான் மாலத்தீவுகளில் வசித்தவனென்பதால் மாலைவேளைகளில் நான் மட்டுமே தனியனாய்க் கடற்கரையில் அமர்ந்து கடலைக் காணும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அங்கே கடலும், வானமும், நானும் மட்டுமே இருப்பதாக ஒரு மாயம் நிகழும். இக்கவிதையும் கரைமணலை எண்ணுபவனையும், கடல் நடுவே தோன்றும் காட்சிகளையும் மட்டுமே பதிவு செய்திருக்கின்றது. இந்தப் பிரம்மாண்டத்தின் முன்னிலையில் நான் எவ்வளவு சிறியவன் என்ற தத்துவ அலசல்களுக்குள் இறங்கி விடாமல், கடலெனும் மாபெரும் உயிர் வெளியில் நிகழும் அன்றாட நிகழ்வுகளை வெறுமனே சாட்சியாய் நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் அந்தக் கடல் கோளத்தில் இழுக்கப்பட்டு விடுவதை துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறது இக்கவிதை. காட்சிகளை வெறுமே வரைந்து காட்டுவதன் மூலமே கவிதை சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறது. திமிங்கிலத்தின் பெருமூச்சில் எழும் நீரூற்று நிலவை எட்டுவதற்கு முன் நம் மீதும் சில துளிகளைத் தெறித்து விட்டுச் செல்கிறது.


ராட்சச பாழ்வெளி


நீலத் திமிங்கிலங்கள் வாழும் கடலில்

அதன் பெரும் மூச்சு

எழும்பும் மஞ்சள் நிலவின் மீது

நீரூற்றினைப் பாய்ச்சுகிறது

மணல் எண்ணி முடிக்க அமர்ந்தவன்

நட்சத்திரங்களைக் கைவிட்டு

கண்மூடுகிறான்

ராட்சசம் பொங்க

சாய்ந்தாடும் மேகங்கள்

தொடு விளிம்பில் வளைந்து பந்தாகிச் சுழல

அந்தக் கடல் கோளத்தினுள் இழுக்கப்பட்டவன்

வானம் கண்டு மிதக்கிறான்

சிறு சப்தத்துடன் அந்தரத்தின் பாழ்வெளியில்

கொட்டுகிறது

எண்ணிய மணல்துகள்களும்

மதி வடித்த நீர்த்துளிகளும்


* * *


எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். அன்றாடம் அனுபவிக்கும் விஷயம்தான். ஆனால் அது கவிஞனின் கண்களுக்கு மட்டுமே பொருட்படுத்தத் தக்க பொருளாகத் தெரிகிறது. கவிதையின் வாயிலாக ஒரு அன்றாட நிகழ்வின் காட்சி பரிமாறப்படும் போது அது நமக்களிக்கும் வியப்பே அது தரும் அனுபவம். முடி திருத்தகத்தின் எதிரெதிர்க் கண்ணாடிகளில் ஒன்றினுள், ஒன்றினுள் ஒன்று என்று பிம்பங்கள் தொடர்ச் சங்கிலியாய்த் தோன்றி விளையாடுவதை எத்தனை முறை கண்டிருப்போம். நம் பாலிய பருவத்தின் ஆதி நினைவுகளில் இந்தக் காட்சியும் ஒன்றல்லவா?


எதிரெதிர் நிஜம்


எதிரெதிரே கண்ணாடிகளில்

என்னுருவம் பல்கிப்பெருகுவதால்

கடைசிப் பிம்பத்தில் முடிதிருத்தும் 

சலூனில் இருந்து வெளியேறுகிறேன்

திருத்துனர் எதிர் கண்ணாடியின் 

முதல் பிம்பத்தில் பணம்  பெற்றுக் கொண்டிருந்தார்.


* * *


வாழ்வின் அத்தனைத் துயரங்களினின்றும், அச்சங்களிலிருந்தும், தளைகளிலிருந்தும் பரிபூரணமாக விடுதலையடைவதற்கு வழி ஒன்றே. நான் யார், எத்தன்மையுடையவன், எனக்கும், இவ்வுலகுக்கும் உள்ள உறவு எத்தகையது என்று அறிந்து, அந்த அறிவின் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்வதே. எல்லாக் கேள்விகளிலும் அடிப்படையானதும், ஆகச் சிறந்ததும் நான் யார் என்ற கேள்வி ஒன்றே. அக்கேள்விக்கான விடையை அடையும் தருணத்தில் வாழ்வு குறித்த பிற கேள்விகளனைத்தும் பொருளிழந்து விடுகின்றன. 

ஆனால் அக்கேள்விக்கான விடையை எங்கிருந்து அடைவது? நான் இதுதான் என்று அறுதியிட்ட வரையறைக்கான நிரூபணங்கள் எவரிடம் உள்ளன? அப்பதில் எம்மிடம் உண்டு. அதற்கு எம் தெய்வங்களை வழிபட்டால் போதும் என்று மதங்கள் உரைக்கின்றன. தத்துவவாதிகளோ நாங்கள் அதைக் கண்டுபிடித்துத் தருகிறோம். எம்மோடு சேர்ந்து தேடலாம் வா என்றழைக்கின்றன. நண்பரும், தாயும், மனைவியும் நம்மைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கள் கூட இக்கேள்விக்கான பதிலை அடையும் பயணத்தில் நமக்கு உதவுவதில்லை. ஏதோ ஒரு மீச்சிறு கணத்தில்தான் பதிலென்னும் அந்தப் பூனையின் கண்களைச் சந்திக்க நேரிடுகிறது. அப்போது பிற கேள்விகள் பொருளிழந்து விடுகின்றன. ஆகச் சிறந்த கேள்விகூட நம்மிடமிருந்து விடைபெற்று விடுகிறது.


ஆல்பெர் காமு எழுதிய விருந்தாளி என்ற கதையில் தரு என்ற பள்ளி ஆசிரியரிடம் அவனது நண்பன் பல்டுக்கி ஒரு அரபுக்கைதியைக் கொண்டு வந்து சேர்த்து, அக்கைதியை காவல் துறை உயர் அலுவலகத்தில் சேர்த்து விடுமாறு பணிக்கிறான். அவனது பாதுகாப்புக்கு ஒரு துப்பாக்கியையும் தந்து செல்கிறான். முதலில் துப்பாக்கியைத் தன் வசம் வைத்திருக்கும் தரு, பின் மெல்ல துப்பாக்கியின் மூலம் எதையும் சாதிக்க இயலாது என்றுணர்ந்து அதை விலக்கி விடுகிறான். அவனுக்கு உணவும், உடையும் கொடுத்து உறங்க வைத்து, மறுநாள் காவல்துறை அலுவலகம் திசையில் நடப்பதா, அல்லது அதற்க் எதிர்த்திசையில் நடந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதா என்ற முடிவை எடுக்கும்படி கைதியிடமே விட்டு விடுகிறான் என்பதாகக் கதை முடிகிறது. மனிதன் சதா தன்னைக் குறித்து உணரும் பாதுகாப்பின்மையையும், வன்முறையின் மீது அவனுக்கு இயல்பாக உள்ள பற்றினையும், வாழ்வின் மீது அவனுக்குள்ள அவநம்பிக்கையையும் துப்பாக்கி என்னும் குறியீடு குறிப்பதாகக் கொள்ளலாம். தருவின் இந்தத் துப்பாக்கிப் பற்றித் தெரிந்து கொள்வது இந்தக் கவிதையை சிலாகிக்க உதவும் என்று எண்ணுகிறேன்.


தப்பிக்கும் கேள்விகள்


மிகச்சிறந்த கேள்விகளிலொன்று

என் மூன்றாம் தலைமுறை தாண்டியும் தொடர்கிறது

நான் யார் எனச் சொல்ல


நிரூபணங்கள் அதிகம் கைவசம் உள்ளன

தெய்வத்தின் பெயரால் எதையும் பின்தொடரலாம்

தத்துவத்தின் நடுவில் வேறு ஒருவர் அதைக் கண்டுபிடிக்கலாம்

இரகசியமாய் குசுகுசுக்கலாம்

எல்லாம் தெரிந்த நண்பனும் உண்டு

இப்படித்தான் இவர் எனப் பெண்டிர் முடிவு

தப்பிப்பது எக்காலம் 

கடந்தமுறை வந்த பூனை

என்னை உற்றுப் பார்க்கிறது

அதே பூனைதானா என நானும்

அவனேதானா எனப் பூனையும்

மீச்சிறு கணத்திலிருந்தோம்

காம்யுவின் துப்பாக்கியைத் தேடினேன்

மிகச்சிறந்த கேள்வி சன்னல் வழி

பதற்றத்துடன் தப்பி ஓடிவிட்டது


* * *

நடுக்கடல் மௌனம் - தேவேந்திர பூபதி

கவிதைத் தொகுப்பு

காலச்சுவடு வெளியீடு




7 அக்டோபர், 2024

நிகழ்கணத்தைத் தியானித்தல்


வேணு தயாநிதியின் வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள் கவிதைத் தொகுப்பை முன்வைத்து.

நன்றி: அகழ்


வேணுவின் இந்தத் தொகுப்பு ஒரு கலைடாஸ்கோப்பைப் போல. எப்படி ஒரு கலைடாஸ்கோப்பை உருட்டி, உருட்டிப் பார்க்கையில் ஒவ்வொரு முறையும் நிறங்களின் களியாட்டைக் காண முடியுமோ அதோ போலத்தான் இவரது இந்தத் தொகுப்பை ஒவ்வொரு முறை புரட்டும் போதும், ஒவ்வொரு கவிதையும் தனித்துவமான அனுபவங்களைக் கொடுக்கிறது. கலைடாஸ்கோப்புக்குள் இருப்பது வெறும் கண்ணாடித் துண்டுகள்தாம். அவை தங்களை அந்தப் பெட்டிக்குள் ஒருங்கமைத்துக் கொள்ளும் தன்மையாலேயே மாய உலகங்களை சிருஷ்டிக்க முடிகிறது. அப்புறம் அதை நோக்குபவரின் பார்வையும் அதில் பங்கு வகிக்கிறது. வேணுவின் கவிதைள் அனைத்தும் ஆடம்பரமற்ற, பாசாங்குகளற்ற எளிய சொற்களால் உருவானவை. அச்சொற்கள் தங்களுக்கான சரியான இடத்தில் ஒரு கவிதைக்குள் பொருத்திக் கொண்டமையால் ஒவ்வொரு கவிதையும் தனித்துத் தெரிகின்றது. ஒரே கவிதையே வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு அனுபவங்களைத் தர வல்லதாகின்றது. ஒரு வேளை அது வாசகனின் அந்தக் கணத்து மன நிலையைப் பிரதிபலிக்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம். வேணுவே இத்தொகுப்பின் முன்னுரையில் சொல்வது போல, “நிகழ்கணத்தை மனதில் தியானிப்பதன் வழி சாதகன் பெறும் சுயவிழிப்புணர்வில்” இருந்து இக்கவிதைகள் எழுந்திருக்கின்றன. “மொழியை நாமறிந்த பாகுபாடுகளின் வழி கட்டமைத்து பெறப்படும் மாயைகளும், மயக்குகளும்”  கொண்டவை இக்கவிதைகள்.

ஒட்டு மொத்தமாகவே இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கவிதைகளும் எனக்கு வாசிக்கும் தருணத்திலேயே அணுக்கமாகி விட்டன. சில காரணங்கள்: முதலில் வேணுவின் கவிமொழி. கவிதையின் சொல்முறையிலும், கவிதை எடுத்துக் கொள்கிற பாவனையிலும் அவரது கவனம் குவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் கவிதைகள் முழுமையான அனுபவங்களாக மாறுகின்றன. கவிதைக்கென்று தனித்துவமான சொற்களைக் கையாள்வதிலோ, திருகலான படிமங்களைச் சமைப்பதிலோ அவர் மெனக்கெடாமல், எளிய சொற்களில், கவிதைகளை அமைக்கிறார். அச்சொற்கள் ஒன்றுடன் ஒன்று கோர்த்து இயல்பாகவே படிமங்களாகவும், உருவகங்களாகவும் உருமாறிக் கொள்கின்றன.


வேலைகள்  

அதிகமில்லாத நாளில் 

வீட்டில் யாருமில்லாமல் இருக்கையில்  

எப்பவாவது நேரம் கிடைக்கையில் 

சாவகாசமாய் அழலாம்


என்பது அழுகையின் விதிமுறைகளில் ஒன்று. எளிய, ஆடம்பரமற்ற கூறுமுறை. ஆனால் தான் நினைத்த உணர்வெழுச்சியை வாசகனில் தூண்டி விடும் வல்லமை கொண்டிருக்கிறது. 

இன்னொரு காரணம், இத்தொகுப்பின் பன்முகத் தன்மை. இத்தொகுப்பில் ஒரு விடலைக் காதலனின் ஏக்கக்குரல்களையும் கேட்கலாம். தன்னை அறிந்து தானாக நிலைத்து நிற்கும் ஒரு தத்துவ ஞானி இவ்வுலகின் செயற்பாடுகள் மீதான தன் அவதானங்களை வைக்கும் ஏளனக் குரலையும் கேட்கலாம். மேற்கில் வாழ்ந்தாலும்,  தான் பிறந்து வளர்ந்த சுற்றுச் சூழ்நிலையையும், வளர்பருவத்தில் தன் ஆளுமையைப் பாதித்த மனிதர்கள் குறித்தும் இக்கவிதைகள் பேசுகின்றன. நவீன காலக் கவிதைகளில் இருந்த எள்ளலும், பகடியும், ஏளனமும் இவரது கவிதைகளிலும் இருக்கின்றன. அந்த வகையில் இவரை ஞானக்கூத்தனின், சி. மணியின், அபியின் வழி வந்தவராகக் காணலாம். நவீன கவிதையின் கூறுகள் வேணுவின் பெரும்பாலான கவிதைகளில் தெரிகின்றன. அலையலையாக எழுந்து வந்த “கள்ளமற்ற கூறுமுறையின்” பிடியிலிருந்து இவர் தன்னைத் தற்காத்துக் கொண்டு, பெரும் கவிஞர்களுக்குரிய தனித்துவமிக்க மொழியோடு தன் முதல் தொகுப்பைத் தந்திருக்கிறார் என்பதைக் காணும்போது உவகை பொங்குகிறது. தொகுப்புதான் முதல். ஆனால் வேணு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் விடாது இயங்கி வருபவர்.


* * *


வேணுவின் இத்தொகுப்பை வாசித்து விட்டு என் எண்ணங்களைத் தொகுத்துக் கொள்ளும் வசதிக்காக இதிலுள்ள கவிதைகளை கீழ்க்கண்டவாறு பாகுபடுத்த விரும்புகிறேன்.

இயற்கையைப் பாடும் கவிதைகள்: பல கவிதைகள் இயற்கையை நேரடியாகவும், சில கவிமனம் இயற்கையைக் காண்கையில் எழும் காதலுணர்வையும் கருப்பொருளாகவும் கொண்டிருக்கின்றன. சில கவிதைகள் இயற்கையின் கூறுகளை உருவகங்களாக மாற்றி தனக்கேயுரிய தத்துவ விசாரத்தில் ஈடுபடவும் தயங்கவில்லை. தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் இத்தலைப்பின் கீழ் வருபவைதான். தனித்த பறவையின் நிலப்பரப்பு, தங்கமீனின் உளவியல், பிரபஞ்ச விளையாட்டு, புள் ஓர்தல், திருப்பள்ளியெழுச்சி மினியாபொலிஸில், மேப்பிள் மரத்துக்கு ஆயிரமாயிரம் கைகள், தூரதேசத்து ஓடையின் ஒரு துளி, எண்ண முடியாத இலைகளின் வெறுமை, முதல் துளியின் பனி, திரை விலகிய அறையின் அதிசயங்கள், தற்செயல்களின் அற்புதங்களில் எழும் தெய்வம், வீட்டுக்கு வெளியில் வடதுருவம்,  யாதினும் யாது நீங்கி, தூய வெண்மையின் பொருளின்மை, போதிமரம் இல்லாத ஊரில் என்று ஒரு நீண்ட பட்டியலே இத்தலைப்பின் கீழ் வருகிறது.

உருவகம் மற்றும் குறியீட்டுக் கவிதைகள்: நம்மைச் சுற்றிலுமுள்ள பொருட்கள், உயிரினங்கள் இவற்றைக் கருவிகளாகக் கொண்டு மனிதனை நெருக்கும் பிரச்னைகள் குறித்தும், மனிதனின் அகவிடுதலைக்கான வழிகள் குறித்தும், சொற்களாலும், உருவகங்களாலும், குறியீடுகளாலும் பிரபஞ்ச தரிசனம் ஒன்றைச் சுட்டி விட முடியுமா என்று முயலுபவை இவ்வகைக் கவிதைகள். அழுகையின் விதிமுறைகள், ஒரு புத்தகத்தின் மரணம் அல்லது கவிதையைக் கொலை செய்வது எப்படி?, என் வீட்டு முற்றத்தின் டைனோஸர், பூனைக்குட்டி, டைனோஸார்களின் மகாத்மியம், முகமூடிகளின் நகரம், வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள், மேசன்களின் உலகம், முகமூடித் தொழிற்சாலை, கைதவறிய மூக்குக் கண்ணாடியின் ஞானோபதேசம் போன்றவை இத்தலைப்பின் கீழ் வரும். முதல் வாசிப்பிலேயே கவியின்பத்தை அளிக்கும் இக்கவிதைகள், மீண்டும் வாசிக்கையில் கவிஞர் உருவகப்படுத்துவது எதை என்று புன்முறுவலோடு சிந்திக்க வைக்கிறார். 

வளர்பருவ நினைவுகள்: கவிஞர் பல ஆண்டுகளாக வேறொரு நிலத்தில் வாழ்கிறார். புலம் பெயர்ந்து வாழும் எல்லாரையும் போலவே இவரின் நினைவுகளையும் தான் பிறந்து வளர்ந்த நிலமும், தெருக்களும், தான் பார்த்து வியந்த மனிதர்களும் ஆட்கொண்டிருக்கின்றன. அவை கவிதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன. ஏக்கமாகவோ, கழிவிரக்கமாகவோ மட்டும் அல்லாது, தன் ஆளுமையை ஆக்கிய நிலத்தின் மீதும், அதன் மனிதர்கள் மீதும் பொங்கும் நன்றியுணர்வாகவும், பேருவகையாகவும் வெளிப்பட்டிருக்கிறது. மந்திரத்தின் சமையல்காரி, குஞ்சம்மா பாட்டியின் வியாழக்கிழமை, வாழ்த்து அட்டைகள், இடமாற்றம் போன்ற கவிதைகள் கவிஞர் சிறுவயதில் வாழ்ந்த சுற்றுச் சூழலையும், மனிதர்களை நினைவுகூருகின்றன.

சனாதனக் கருவிகள்: (சனாதனம் என்பது கெட்ட வார்த்தை அல்ல) இந்தத் தொகுப்பு வெளிவருமுன்னரே வேணுவின் சில கவிதைகளை அவை இணைய இலக்கிய இதழ்களில் வெளியாகும் பொழுது வாசித்திருக்கிறேன். அக்கவிதைகளில் இந்து மதக்கடவுளர்களும், கோயில்களும், மதவழிபாட்டுச் சடங்குகளும், அவற்றுக்கான பொருட்களும் தவறாமல் இடம் பெறும். வேணு விசிஷ்டாத்வைதத்தை முறையாகக் கற்று வருபவர் என்ற புரிதலும் எனக்குண்டு. இவை அளித்த பிம்பத்தில் வேணுவின் கவியுலகம் சனாதனக் குறியீடுகளால் நிரம்பியிருக்கும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவ்வெண்ணத்தை இத்தொகுப்பு தகர்த்து விட்டது. இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை வாசிக்கையில் வேணு இயற்கையின் மீது தீராக்காதலும், வாழ்வின்  சாரம் என்ன என்றறிய முயலும் தத்துவப்பித்தும் கொண்ட கவிஞர் என்ற எண்ணமே வலுப்பட்டது. ஆனாலும் சனாதனத்தின் குறியீடுகள் கொண்ட கவிதைகள் இத்தொகுப்பின் இன்றியமையாத ஒரு பகுதியாகவே உள்ளன. ராஜ கோபுரம், பூதகணங்களின் கனவில் வரும் தேவதைகள், நந்தி, சடாரி, புத்தவீரசாமி  போல. இந்து மதத்தின் பண்பாட்டுக் கூறுகளை மிக இயல்பாக கவிதைக்குள் கொண்டு வந்து விடுகிறார். 

காதல் கவிதைகள்: தொகுப்பின் சில கவிதைகள் காதலைப் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன. சாராவின் ஆவி, நம் கடைசி இடம், தக்காளிக் காதல், இன்னுமொரு நாள் போன்ற கவிதைகள் நேரடியான காதல் கவிதைகள். மேலும், அவரது இயற்கைக் கவிதைகளிலும், தத்துவக் கவிதைகளிலும் காதல் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் இடங்களும் உண்டு. 

அங்கதக் கவிதைகள்: வேணுவின் பெரும்பாலான கவிதைகளில் ஒரு மெல்லிய எள்ளல் தன்மையையும், அங்கதம் தொனிக்கும் தன்மையையும் காணலாம். அந்த சம்பவத்துக்குப் பிறகு என்ற கவிதை ஒரே நேரத்தில் அங்கதக் கவிதையாகவும், சுய அனுபவக் கவிதையாகவும் நோக்கத் தக்கது. நாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள் ஒரு அழகான அங்கதக் கவிதை, அதே நேரம் பல குறியீடுகளை உள்ளடக்கியது. 

வேணு தொழில்முறையில் மூலக்கூறு உயிரியில் அறிவியலாளர். ஆனால் ஒப்பு நோக்க அறிவியலை அடிப்படையாகக் கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில் குறைவே. கருந்துளை என்ற கவிதையை அறிவியலைக் கருப்பொருளாகக் கொண்ட கவிதைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

கவனமற்ற 

புதர் கத்தரிப்பு, கவனமாக நீக்கப்பட்டு 

ஏதுமற்ற மையம் 

இவற்றில் 

மறைந்திருக்கும். 

கோள்களின் ஆகர்ஷம் 

புவிஈர்ப்புவிசை 

பிரபஞ்ச பேராற்றல் 

இவற்றையெல்லாம் விட 

வலியது மிகவும்.


என்பது கருந்துளையைப் பற்றிய அவரது முடிவு.


* * *


எல்லாக் கவிஞர்களையும் போலவே வேணுவுக்கும் இயற்கை கவிதைக்கான கருப்பொருளாக அமைந்திருக்கிறது. ஆனால் இவர் பார்த்த இயற்கை மேற்குலகுக்குச் சொந்தமானது. தெளிவாக கட்டமிடப்பட்ட காலநிலைகளைக் கொண்டது. வெண்ணிறப் பகலிரவுகளிலான பனிபொழியும் குளிர்காலமும், மரங்கள் தீப்பற்றி எரிவது போன்று இலைகள் பல நிறங்கள் காட்டி நிற்கும் இலையுதிர்காலமும், பச்சை துளிர்க்கும் வசந்தமும், வெயிலெரிக்கும் கோடையும் கொண்டது. இங்குள்ள மரங்கள் வேறு, பறவைகள் வேறு, நிலக்காட்சிகள் வேறு. பல்லாயிரம் ஆண்டு மரபு கொண்ட தமிழ்க் கவிதையில் ஊறிய கவிமனம் இவற்றை முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்கும். அவ்வாறுதான் வேணுவின் கவிதைகள் இயற்கையைக் காணுகின்றன.

பனியால் 

புவியை வென்று விடுவது போல 

தழுவிக் கொண்டிருக்கும் 

வானம். 

வெண்கடலாய் 

விரைத்துக் கிடக்கும் பூமி. 

பெரு வெடிப்பின் சூடு 

ஆழத்தில் எங்காவது 

மீதமிருக்கலாம்.


என்று அவதானிக்கிறார். “விளையாடுவதற்கு அணில்களும், பறவைகளும் அற்ற பைன் மரங்கள் குளிரில் பனியை ஏந்தியபடி சோம்பி நிற்கின்றன”. இன்னும் ஒரு பிர்ச் மரம் “பிடுங்கித் தலைகீழாய் நட்டது போல் இலையின்றி” நிற்கிறது. புள் ஓர்தலில்  வீழ்ந்த பறவையொன்றின் அதிசய உடலைக் கண்களால் அருந்தி, விரல்களால் நுகர்ந்து கொண்டிருக்கையிலேயே நொடிப்பொழுதில் வெடித்துக் கிளம்பி விடுகிறது அதன் சிறகுகளில் சிக்கியிருந்த வானம். செல்லக்குட்டியின் விடுமுறையில் வீட்டுக்குள் வரும் காற்று

நிதானித்து 

தெருவைக் கடந்து 

உறைந்த ஏரியின் 

கண்ணாடிப் பாளத்தின் ஆழத்துள் 

யதேச்சையாய் சந்தித்த மீன்கள் 

பேசுவதன் கிசுகிசுப்பை 

கவனித்துக் கேட்கிறது.


மின்னல் போன்ற காட்சிகள் இவரது கவிதைகளில் ஆங்காங்கே தோன்றுகின்றன. அவை அப்படியே வாசகர் மனதில் பதிந்தும் விடுகின்றன. 

அலையாடித் ததும்பும் 

நீர்ப்பரப்பின் விளிம்பில் 

சிவந்த பிளவால் துளாவி 

காற்றின் ஒரு பருக்கையை 

அவசரமாய் அள்ளிக் கொண்டு 

கல்லிடுக்குள் மறையும் 

கருத்த நீர்ப்பாம்பு


என்ற சொல்முறை ஆயிரம் ஆண்டுகள் மரபில் வந்த சங்கக் கவிஞனின் ஆன்மாவிலிருந்து பெற்றதன்றி வேறென்ன?


* * *


வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள் என்ற தொகுப்பின் தலைப்பு இந்நூல் மேலாண்மை வழிகாட்டி நூலோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடும். இந்தத் தலைப்பிலமைந்த கவிதை வேணுவின் கவிக்குரலின் தனித்தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. வேதாளம் என்று இக்கவிதை குறிப்பிடுவது எதை? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு கவிதையை வாசிக்கையில் கவிதையின் பொருள் பல மடங்கு விரிகின்றது. இதேபோல்தான் பூனைக்குட்டி கவிதையில் வருவது பூனைதானா அல்லது பூனை என்ற சொல் வேறு எதையேனும் (எவரையேனும்) குறிக்கிறதா என்ற வினா கவிதையை வேறு தளத்துக்குக் கொண்டு சென்று விடுகிறது. இந்த பூனைக்குட்டி மின்னஞ்சல் அனுப்பும் அளவுக்குத் திறன் வாய்ந்தது.


வெறும் 

சாதாரண 

ஒரு பூனைக்குட்டி. 


அது இல்லாமல் 

வாழவே முடியாது 

என்று நினைத்ததுதான்- 


எவ்வளவு பெரிய 

முட்டாள்தனம்?


கவிஞரின் வீட்டு முற்றத்தில் ஒரு டைனோசர் அவரைக் காவல் காக்கிறது. அவருக்குப் பணிவிடை செய்கிறது. மணிக்கட்டை அறுத்து மதுக்கிண்ணத்தில் குருதி நிரப்பி அவரது மனத்தளர்ச்சியைப் போக்குகிறது. ஆனால் அது ஏன் இன்னும் அவரைக் காவல் காக்கிறதென்று அவருக்குப் புரிவதேயில்லை. விசுவாசம், தைரியம், உறுதி என்ற மூன்று சொற்களைத்தான் அதற்கு விடையாக அளிக்கிறது டைனோசர். டைனோசார்களின் மகாத்மியம் என்ற கவிதையில் டைனோஸார்களை சர்வ வல்லமை கொண்டவர்கள் என்று மதிப்பிடுகிறார். ஒரு சிறிய சபலம், பேராசை, முரட்டுத்தனம் அல்லது ஏதோ ஒரு கணத்தின் எதிர்பாரா சிறுசொல் போதும் அவைகளை நிகழ்காலத்துக்குள் கொண்டுவர என்கிறார். இங்கு டைனோஸார்கள் என்ற பதத்தில் குறிப்பிடப்படுவது நமது பலவீனங்களா, நமது சினம், காமம், வெறுப்பு, துரோகம் என்ற நம்மைக் காவு வாங்கும் உணர்வுகளா என்ற சிந்தனையில் நம்மை ஆழ்த்தி விடுகிறது இக்கவிதை.  


* * *


கவிஞரின் காதல் உள்ளத்தை விம்மச் செய்யும் தன்மையுடையது. சற்று தாமதமாய் விழித்துக் கொள்ளும் கடிகாரம் உன் பெயரை பாராயணம் செய்ய ஆரம்பிக்கிறது என்று சாதாரணமாய் துவங்கும் கவிதை,

ஆற்றங்கரையை அடைந்து 

படித்துறையில் இறங்கி கால் வைக்கும்போது 

அலையடித்துத் ததும்பி 

பாதம் நனைக்கிறது 

நிறைந்து ததும்பும் 

நின் கருணையின் பெருக்கு


என்று உயர்தளத்துக்குச் சென்று விடுகிறது. 

வாழ்த்து அட்டைகள் கவிதையில் இவருடன் கூடப்படித்த கிச்சா, சங்கரன், குமார், அவர்களின் குழந்தைகள், மாமா மகள்களின் மகள்கள், ஒன்று விட்ட உறவினரின் குழந்தைகள் என்று எல்லாரும் வருகிறார்கள். எல்லாருக்குமே அவர்களின் பிறந்த நாளின் போது வாழ்த்து அட்டைகள் அனுப்பியபடியிருக்கும் கவிஞர் நாள் காட்டியில் குறிப்பிடாத எல்லா நாளுமே ஏதோ ஒரு குழந்தையின் பிறந்த நாளே என்பதை சட்டென்று உணர்கிறார்.

நாய்வேடமிட்டவர்  கவிதையில் கடவுள் ஒரு நற்குல டால்மேஷனைப் போல நடந்து செல்கிறார். தனக்கு முன் செல்லும் திரளுடன் பேச அவருக்கு எவ்வளவோ இருப்பினும் அவரால் லொள் லொள் என்று குரைக்கத்தான் முடிகிறது. அதைத் தவிர அவரால் வேறென்ன செய்ய முடியும் என்று வினவுகிறார் கவிஞர், அவர் கடவுளாகவே இருந்தாலும்.

ஒருவன் முகமூடித் தொழிற்சாலையின் முழு நேரப்பணியாளன். ஆனால் மேசைக்கண்ணாடியில் பார்க்கும் அவன் சொந்த முகம் அவனைத் திடுக்கிட வைக்கிறது. நாமும் பல்வேறு முகமூடிகளை தினந்தோறும் அணிந்து கொள்கிறோம். நம் உண்மையான முகத்தைப் பார்க்கையில் ஏற்படும் அதிர்ச்சியைத் தவிர்ப்பதற்காகத்தானே நாம் பல்வேறு முகமூடிகளை அணிந்து கொள்கிறோம்? முகமூடிகளற்று சகமனிதரோடு பழக வாய்க்கும் ஒரு வாழ்வு என்பது எவ்வளவு உன்னதமானது!

இன்னொரு கவிதையில் பூதகணங்கள் குழந்தைகளோடு உறவாடுகின்றன. 

இறுக்கம் அவிழ்ந்து 

புன்னகை இடம் மாறி 

குடி கொள்கையில் 


பூதமும் 

தேவதையும் 

ஒன்று


என்கிறார். இன்னொரு கவிதை நம்மைப் பெருமாள் கோயிலுக்குள் அழைத்துச் சென்று விடுகிறது. 

பெருமாளின் பிரசாதமாய் 

மஞ்சள் காப்பு குங்குமம் 

திருத்துழாய் உடன் 

திருமாலின் திருவடி 

பொறித்த திருமகுடம் 

பூர்வஜென்ம கர்மத்தின் 

சடம் சபித்த 

ஸ்ரீ சடகோபர் 

வடிவான சடாரியுடன்  


நிற்பதைத் தரிசிக்கிறோம். 

கவிதைக்கான பாடுபொருட்கள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தங்கள் நவீன கவிதையில் ஈடுபடும் வாசகனுக்குத் தோன்றுவது இயல்புதான். சில பாடுபொருட்கள் எழுதப்படாத விதிகளாக விலக்கப்பட்டிருக்கின்றன.  ஆனால் கவிதை என்பது பிரம்மத்தைப் போல எங்கும் நிறைந்தது. வாழ்வின் எந்த அம்சங்களிலிருந்து கவிதை உருவாக முடியும். ஏனெனில் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் கவிதைதான், கலைதான். இத்தொகுப்பில் கவிஞர் பிற நவீன கவிஞர்கள் தொடத் தயங்கும் தலைப்புகளை எடுத்தாண்டிருக்கிறார். அதே நேரம் கவிதைக்குள் புழங்கி சலித்துப் போன விஷயங்களைத் தயக்கமின்றித் தவிர்த்தும் விட்டிருக்கிறார். உதாரணத்துக்கு காமம்.

கவிஞரின் இந்த துணிச்சல்தான் பிர்ச் மரங்களையும் பாடுகிறது. தேய்பிறையின் அஷ்டமியையும், சூலாயுதம் கொண்ட காலபைரவரையும், பனிரெண்டு ராசிகளையும், பஞ்சபூதங்களையும் பாடுகின்றது. ஏரிக்கரையோரம் மீசை முறுக்கி ராத்திரி பகலாய் காவலுக்கு நிற்கும் பொன்னழகு சாமிக்குப் பூசை வைப்பதையும் பாடுகிறது. பூக்கோவும், தெரிதாவும், செகுவேரோவும் இவர் கவிதைக்குள் இயல்பாக வந்து போகிறார்கள்.

கடவுளர்களின் தேர்வு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் தேர்வு. இவருடைய தேர்வு எப்படி?

கரடி பொம்மையை 

தன் குட்டிக் கைகைகளால் 

இறுக அணைத்தபடி 

மனைவிக்குப் பக்கத்தில் 

ஒருக்களித்து உறங்கும் 

என் கடவுள்


* * *

ஒரு விதத்தில் வேணுவின் கவிதைகள் பெண்களைப்போல. இளமையின் விளிம்பில் இருக்கும் வரை பெண்களின் அழகு ஆண்களை ஈர்க்கிறது. ஆனால் திறந்த மனதுள்ள ஒரு ஆண் அவர்களை நெருங்கும் தருணத்தில் அவர்களது உள்ளுக்குள் புழுங்கும் துயரங்களையும், அவர்கள் உடல் கடந்து வந்த வலி மிகுந்த தூரங்களையும் உணர்ந்து கொள்வான். 

பட்டுப்புழுவின் துன்பம் 

தோண்டியெடுத்தவனின் துயரம் 

நெய்தவனின் கற்பனை 

சமைத்தவனின் வியர்வை 

அறுத்தவனின் கருணை 

விற்றவனின் சாதுர்யம் 

காதல் பயம் கோபம் குரோதம் 

ஏதோ ஒரு ரசாயனம் ஆகியவற்றை 

சுமந்து செல்கின்றனர் 

பெண்கள்


வேணுவின் கவிதைகள் இளம்பெண்களின் அழகும், அணுகிப்பார்க்கையில் தென்படும் ஆழமும் ஒருங்கே பொருந்தியவை. எளிய சொற்களால் கனமான விஷயங்களைப் பேச முற்படுபவை. அவை கவிஞனால் மட்டுமே கண்டு விடக் கூடிய உலகங்களை வாசகனுக்குக் காட்டுகின்றன. இது வேணுவின் முதல் தொகுப்பு என்று நம்பக் கடினமாக இருக்கிறது. ஒரு பழுத்த கவிஞனிடமிருந்து முழுமையாகவே பரிணமித்திருக்கிற கவிதைகள் மட்டுமே இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு முறை வாசிக்கையிலும் கவிதைக்குள்ளிருக்கும் ஏதோ ஒன்று நம்மை மீண்டும் அவரது உலகங்களுக்குள் இழுத்துப் போட்டு விடுகிறது.


​​​​​​​​​—-----------------------------------------------------------------------------------------------------------




23 செப்டம்பர், 2024

மொழிபெயர்ப்புக்கான கனடிய இலக்கியத் தோட்டத்தின் விருது



கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2023-க்கான மொழிபெயர்ப்பு விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பவா செல்லத்துரையின் புகழ்பெற்ற நூலான “சொல்வழிப்பயணம்” நூலை A Journey Through Words என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயெர்த்திருந்தேன். அதற்கு முன் ஜெயமோகனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவை அமெரிக்க, ஆங்கில இதழ்களில் வெளியாகி கவனம் பெற்றன. புது தில்லியின் ரத்னா பதிப்பகம் அவற்றை நூலாக A Fine Thread and Other Stories என்ற பெயரில் வெளியிட்டது. இப்பணிகளைக் கருத்தில் கொண்டு எனக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 

கனடிய இலக்கியத்தோட்டத்தின் நிறுவனர்களில் ஒருவரான எழுத்தாளர் திரு. முத்துலிங்கம் சென்ற மாதம் அலைபேசியில் அழைத்து என்னிடம் இதை அறிவித்தார். எனக்கு விருது அறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியைவிட அவர் மூலம் தெரிவிக்கப்பட்டதுதான் பெரும் உவகை கொள்ள வைத்தது.  முத்துலிங்கம் அய்யா தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளி. அவர் கையால் இந்த விருது வழங்கப்படுவது எனக்குப் பேறு. 

இதற்கான விருது விழா கனடாவின் ஓண்டாரியாவில் வரும் அக்டோபர் 20 தேதி நடக்கிறது. என் மனைவி அனுஷாவும், நானும் அங்கு பதினெட்டாம் தேதி வாக்கில் செல்வோம். கனடா செல்வதற்கான விசாவுக்கு விண்ணப்பித்து, இன்னும் இரண்டொரு நாட்களில் கனடிய எம்பஸியிலிருந்து  கடவுச்சீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்,

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும்.



என்னுடன் சேர்ந்து புனைவுக்கான விருதை ஏ.எம். றஷ்மியும், அல்புனைவு விருது பி. விக்னேஸ்வரனுக்கும், கவிதை விருது இளவாலை விஜயேந்திரனுக்கும், இலக்கியம் மற்றும் சமூகப்பணிக்கான விருது பார்வதி கந்தசாமிக்கும் வழங்கப்படுகிறது. 

இவ்வாண்டுக்கான இயல் விருது பெறுபவர் சிந்து வெளி ஆய்வாளர் திரு. ஆர். பாலகிருஷ்ணன். இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல, அது ஒரு நாகரிகத்தின் மொழி’ என்றும் ‘சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்திற்கான இலக்கியம்’ என்றும் தொடர்ந்து வலியுறுத்திவருபவர். சிந்துவெளி நாகரிகத்துக்கும் பண்டைய தமிழகத்திற்கும் உள்ள உறவு குறித்த பாலகிருஷ்ணன் எழுதிய ‘Journey of a Civilization: Indus to Vaigai’ என்கிற நூல் வெளியானபோது, அது சிந்துவெளி ஆய்வுலகில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது. பின்னர் வெளியான அதன் தமிழ்ப் பதிப்பான ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடைய பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது முப்பது ஆண்டிற்கும் மேலான ஆராய்ச்சியில் உருவான இந்த நூலை மக்கள் பதிப்பாகக் கொண்டுவர தமிழ்நாடு அரசிற்கு அர்ப்பணித்துள்ளார். அது விரைவில் வெளிவர உள்ளது. திருக்குறள், சங்க இலக்கியம் ஆகிய இரண்டையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதை தனது வாழ்நாள் பணியாகச் செய்து வருகிறார் பாலகிருஷ்ணன். 

கனடிய இலக்கியத்தோட்டத்தின் விருதுகள் மீது எனக்கு மிகுந்த மதிப்புண்டு. சென்ற ஆண்டுகளில் பெரும் மேதைகளுக்கு இயல் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கான மொழிபெயர்ப்புகள் இதற்கு முன்பு  கல்யாண் ராமன்,  ரா. கார்த்திகேசு, வைதேகி ஹெர்பெர்ட், மார்த்தா ஆன் செல்பி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் நிரையில் இணைவது எனக்குப் பெருமை. அதே நேரம், தொடர்ந்து செயலில் ஈடுபட்டிருக்கச் செய்யும் வினையூக்கியாகவும் இவ்விருதினைக் கொள்வேன்.




மேலும் வாசிக்க