14 ஆகஸ்ட், 2010

வாசகர் அனுபவம் - நீங்களும் பங்களிக்கலாமே!

பாஸ்கர், ராஜா, சம்முவம். மூவரும் வாசகர் அனுபவம் என்ற தளத்தில் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் அற்புதமான சேவையைச் செய்து வருகிறார்கள். சமீபத்தில் என்னையும் அதில் இணைத்துக் கொண்டது எனக்குப் பெருமை. அதோடு அவர்கள் நட்பும் கிடைத்தது நெகிழ்வு. நானும் சில நூல்களை அதில் பரிந்துரைத்திருக்கிறேன். வாசிப்பு ஆர்வம் கொண்ட அனைவரையும் வாசகர் அனுபவம் வரவேற்கிறது. தாங்கள் வாசித்த நூல்களை அதில் நீங்கள் பரிந்துரைக்கலாம். தங்கள் தளத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்தாலும் சரி. நல்ல புத்தகங்கள் பரவலான வாககரிடத்துச் சென்றடைய வேண்டும் என்பதே இத்தளத்தின் குறிக்கோள்.
தள முகவரி
தொடர்பு மின்னஞ்சல்
நண்பர்களின் கடிதங்கள்
அன்புள்ள பாஸ்கர், ராஜா, கரிகாலன்
புத்தக பரிந்துரை தவிர்த்து வேறு விஷயங்களையும் என் தளத்தில் எழுத முயன்று வருகிறேன். நேரங்கிடைக்கும்போது நீங்கள் வாசித்துக் கருத்துரைத்தால் மகிழ்வேன்.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்.

அன்புள்ள ஜெகதீஷ்,
உங்கள் தளத்தில் ஜாக்கி வாசுதேவ் ஆசிரம அனுபவங்களைப் படித்தேன், ரசித்தேன். தமிழ் உங்களுக்கு லாவகமாய் வருகிறது.  மெல்லிய நகையுணர்வோடு உங்கள் அனுபவங்களை தொகுத்தது சுவராசியமான பதிவாக  இருந்தது. 
அன்புடன்.
சம்முவம்.


அன்புள்ள ஜெகதீஷ்:
உங்கள் வலைதளத்தில் உள்ள பதிவுகளை நான் அடிக்கடி படித்து வருகிறேன்.  அண்மையில் நீங்கள் எழுதி இருந்த பதிவுகளில், ஜக்கி வாசுதேவ் - ஈஷா, பயிற்ச்சியில் உங்களுடைய அனுபவங்களைப் பற்றி எழுதி இருந்ததை விரும்பிப் படித்தேன்.   உங்களுக்கு மிகவும் சரளமான நடை இருக்கிறது.  படிக்க எளிதாகவும் இருக்கிறது.
எனக்கும் அத்வைதத்தில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு.  என் புரிதல் மிகவும் மேலானது; அந்தப் புரிதல் வெறும் தர்க்கத்தின் தளத்தில் மட்டுமே உள்ளது, என்று எனக்குத் தெரியும்.   அதைப் பற்றிப் புரிந்து கொள்ளத் தேவையான தியானம், அகத்தாய்வு செய்யும் மனக் கட்டுப்பாடு எனக்கு இதுவரை இல்லை. 

நீங்கள் எழுதியிருந்ததில் பல கருத்துக்கள் என் மன நிலையை ஒத்தவையே.  நீங்கள் கூறியிருந்தது போலவே நானும் எந்த குருவும் ஒரு வழிகாட்டியே, என்று தான் நினைக்கிறேன்  ஆற்றைக் கடக்க தோணி தேவை தான்.  கடந்த பின்னும் தோணியைச்   சுமந்து கொண்டிருப்பது மூடத் தனம் என்று எண்ணுகிறேன். 

உங்களைப் போலவே என்னாலும் அவ்வளவு சுலபமாக பல பேர் முன்னால், என் உள்ளத்தில் உள்ளவற்றை வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை.  இது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லை.  வெறும் நல்ல பிள்ளை வேஷம் போடும் முயற்சியா என்று என்னை நானே கேட்டுக் கொண்டால் - இல்லை என்று தான் படுகிறது.  இருந்தாலும், நீங்கள் எழுதியதைப் படித்த போது, "அட, நம்மைப் போலவே இவரும் நினைகிறாரே", என்று நினைத்தேன்.  

தொடர்ந்து எழுதுங்கள்.  ஆன்மீகத் தேடல் ஒரு சிலருக்கு இயல்பிலேயே அமைந்து விடுகிறது.  உங்களுக்கு அப்படித் தான் என்று நினைக்கிறேன்.  நீங்கள் தொடர்ந்து அந்த பயிற்சிகளைச் செய்து வருகிறீர்களா?

அன்புடன்,
ராஜா


   
அன்புள்ள ராஜா,
என் பதிவுகளைப் படித்துக் கருத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி.
ஆன்மிகம் தொடர்பான பதிவுகளை என் புரிதலை மறுபரிசீலனை செய்து கொள்வதற்காகவே நான் எழுதி வந்தாலும், நம் அலைவரிசையை ஒத்த யாரேனும் அதை வாசித்து வருகிறார்கள் என்று அறியும் போது சற்று தெம்பும், உற்சாகமும் கிடைக்கிறது.
நம் போன்று பணிகாரணமாக எங்கெங்கோ சிதறிக்கிடப்பவர்களுக்கு ஒரே குரு என்பது சாத்தியமில்லையென்றே படுகிறது. 
நான் கடந்த ஒரு வருடமாக வேதாந்தம் பயின்று வருகிறேன். விட்டு விட்டுத்தான். ஸ்வாமி குருபரானந்தர் மற்றும் ஸ்வாமி ஓம்காரனந்தா  ஆகியோரது வகுப்புகளை ஒலி வடிவில் கேட்டு வருகிறேன். என் நண்பன் ஜெயச்சந்திரனின் வழிகாட்டுதலின் பேரில் தான் இவர்கள் அறிமுகமானார்கள். இருவருமே எளிய மனிதர்கள். விளம்பரம் விரும்பாதவர்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்கிறவர்கள். குருபரானந்தரின் உரைகள் 
தமிழில் www.poornalayam.org ல் இலவசமாகவே கிடைக்கின்றன. வேதாந்தம், உபநிஷத், பகவத் கீதை இன்னும் பிற ஆன்மிகத் தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வகுப்புகள்.  மேலும் நானே முயற்சி செய்து ஒரு முறை பகவத் கீதையைப் படித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. நான் பிராணயாமா செய்தது என் மூச்சுக் கோளாறு காரணமாகத்தான். ஆனால் நிரந்தரத் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.  உடம்பு இளைக்கும் என்று ஆசைப்பட்டு யோகா செய்து பார்த்தேன். அடிக்கடி முதுகு பிடித்துக் கொள்கிறது. மூச்சுப் பிரச்னைக்கு ஜெயச்சந்திரனே வழி சொன்னான். அக்கு பஞ்சர். மூக்கிற்கு இருபுறமும் நான்கு புள்ளிகளில் ஊசி குத்தி பத்து நாள் சிகிச்சை எடுத்ததில் 90% பிரச்னை குறைந்து விட்டது. பிராணயாமா, யோகா  போன்றவற்றின் ஆன்மிக முக்கியத்துவத்தை ரமணர் போன்றவர்களே ஆதரித்தாலும் எனக்கு அந்த மாதிரி அனுபவம் இதுவரை ஏற்படவில்லை. பயிற்சிகள் என்று எதுவும் நான் இப்போது செய்வதில்லை. ஆன்மிகப் படிப்போடு சரி. அதில் முக்கால் வாசி நேரம் இப்போது இலக்கியத்திற்குப் போய் விடுகிறது. சரி அதுவும் ஒருவகை ஆன்மிகத் தேடல்தானே. எனக்கு உங்கள் மூவரின் எழுத்தும் மிகவும் பிடிக்கும். சுருக்கமாக எழுதினாலும், சுருக்கென்று எழுதுகிறீர்கள். வாசகர் அனுபவம் மட்டுமல்ல. எப்போது புதிய பதிவு வந்தாலும் நான் உடனே செல்லும் தளம் பாஸ்கரின் வடிவேலு கோலோச்சும் வரலாறு முக்கியம்.
நம் இந்த உரையாடலை நீங்கள் சம்மதித்தால் என் தளத்தில் பதிவாகப் போட விரும்புகிறேன்.
மீண்டும் நன்றி உங்கள் எதிர்வினைக்கு.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்


அன்புள்ள ஜெகதீஷ்:

பூர்ணலயம் வலை தளத்திற்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.  நானும் கேட்க முயற்சி செய்கிறேன்.  நீங்கள் நம் பகிர்தல்களை தாராளமாக இணையத்தில் போடுங்கள்.  உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

நீங்கள் சொன்னது போல், ஒரு குருவை துணை கொள்ளும் வாய்ப்பு நம்மைப் போன்றவர்களுக்கு மிகவும் குறைவு தான்.

தொடர்ந்து உரையாடலாம்.  உங்கள் தொலை பேசி எண  என்ன?

அன்புடன்,

ராஜா
அன்புள்ள ராஜா,
என் தொலைபேசி எண் 00960 7731390.
gtalk லிருந்து அழைப்பு அனுப்புகிறேன் ஏற்றுக்கொள்ளவும்.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்

11 ஆகஸ்ட், 2010

ரோபோக்களின் இதயமும், கணினிக் கனவுகளும் 1

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எந்திரன் இசை வெளியீட்டில் படத்திலிருந்து சில காட்சிகளைக் காட்டினார்கள். அதில் ஐஸ்வர்யா ரோபோ ரஜினிக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு காட்சி. மனிதனால் உருவாக்கப்படும் ரோபோக்களை மனிதனே காதலிக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று காட்டியதைப் போலிருந்தது. அதுபோலவே ஒரு ரோபோவும் மனுஷியைக் காதலிக்கும் சாத்தியம் உண்டென்றும் காட்டியது.
இதெல்லாம் உண்மையில் சாத்தியமா என்ற கேள்விகள் இன்றி வெறும் பொழுதுபோக்குக்காகவே இந்த சயன்ஸ் ஃபிக்ஷன் படங்களை நாம் பார்த்துக் கொண்டிருந்தாலும், இவற்றை சாத்தியமாக்கிக் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் ஒரு கூட்டம் வேலை செய்து கொண்டிருக்கிறது என்று சமீபத்தில் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது.
நான் வேலை பார்க்கும் இஸ்லாமியா பள்ளிக்கு அருகிலேயே முஹிபுத்தீன் என்றொரு மிகப்பெரிய பள்ளி உண்டு. மாலத்தீவுகளின் குறிப்பிடத்தகுந்த புகழ் பெற்ற பள்ளிகளில் ஒன்று. என் மனைவி அங்குதான் கணித ஆசிரியையாகப் பணிபுரிகிறார். அங்கிருந்து சென்ற வாரம் எங்கள் பள்ளிக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. மாலத்தீவுகளில் இருந்து யு.கே சென்று பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஊடகக் கணிணி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு. ஹசன் உகைல் ஒரு கருத்தரங்கு நடத்தப் போவதாகவும், கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டும் கலந்து கொள்ளும்படியும் அழைப்பு வந்திருந்தது. அன்று மாலையே முஹிபுத்தீன் சென்றோம்.
ஹசன் உகைல் பார்க்க மிகவும் எளியவராகத் தெரிந்தார். பேச்சில், உடல் மொழியில் இங்கிலாந்து வாசம் வீசியது. லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். அங்கேயே சில ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்த பின் பிராட்ஃபோர்ட் பல்கலையில் கடந்த ஏழு வருடங்களாகப் பணிபுரிகிறார். அறிவுப் பறிமாற்றம் என்ற தலைப்பில் அவர் செய்த ஆய்வுக்கு விருது கிடைத்திருக்கிறது.
அங்கு என்ன வேலை என்று கேட்டால், சும்மா உட்கார்ந்து கொண்டு ஐடியாக்களை உருவாக்கிக் கொடுப்பதுதான் என்கிறார். I get paid for my ideas. பொய் கண்டறியும் கருவி பற்றிய அவர்களது ஐடியாவைச் செயலாக்குவதற்கு ஒரு நிதி நிறுவனம் ஒரு மில்லியன் பவுண்டுகள் நிதியளித்திருக்கிறது. அவர் பணிபுரியும் துறையான ஊடகக் கணிணித்துறையில் (என் தமிழ் தவறென்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் விஷூவல் கம்ப்யூட்டிங்) அவர்கள் முயற்சிகள் அனைத்தும் அசலுக்கும், நகலுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை குறைத்துக் கொண்டே வருவது பற்றியது. கருத்தரங்கின் துவக்கத்தில் இரண்டு விடியோக்களைக் காட்டி இதில் எது உண்மையான நபர், எது கணிணி பிம்பம் என்று கேட்டார். நாங்கள் பார்த்ததில் ஒரு பிம்பம் கணிணியுடையது என்று தெளிவாகத் தெரிந்ததால் நாங்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டதாக நினைத்தோம். ஆனால் இரண்டுமே கணிணிப் பிம்பங்கள்தாம். நாங்கள் அசல் என்று நினைத்தது அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.
1. அப்புறம் புதிர்ப் பள்ளத்தாக்கு (the uncanny valley) என்று ஒன்று சொன்னார். ரோபோக்கள் ஏன் மனித ரூபத்திலேயே தயாரிக்கப்பட வேண்டுமென்பதற்குப் பின்னாலுள்ள உளவியல் உண்மையை இந்த புதிர்ப் பள்ளத்தாக்கு கருதுகோள் வெளிப்படுத்துகிறது. முதன் முதலில் ரோபோக்கள் மனித உருவம் கொண்டதாகத் தயாரிக்கப்பட்டபோது அது மக்களின் விருப்பத்துக்குரியதாக இருந்திருக்கிறது. அது எந்திரமாகவே இருந்தாலும் பார்க்க ஏறத்தாழ மனிதன் போல இருக்க வேண்டும். பூனை போலவோ, நாய் போலவோ இருப்பதைக் காட்டிலும் மனிதன் போல இருப்பதே நமக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் ரோபோக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மனிதத் தன்மையைக் கூட்டிக்கொண்டே சென்றால் அவற்றில் மேலுள்ள விருப்பம் குறைந்து வெறுப்பு வளர ஆரம்பிக்கிறது. தன்னைப் போலவே ஆனால் தன்னிலும் சக்தி மிகுந்தவனாகக் காட்டிக் கொள்ளும் உருவத்திலிருக்கிற ரோபோவின் இருப்பு நமக்குப் பிடிப்பதில்லை. அதன் மீது வெறுப்பை உமிழ்கிறோம். பிறகு மனிதனின் உருவத்தை நூறு சதவீதம் ஒத்த ரோபோ உருவாக்கப்படும்போது மீண்டும் அதன் மீதான விருப்பம் நமக்குக் கூடுகிறது. இரும்பிலே ஓர் இருதயம் முளைத்ததே என்று பாட ஆரம்பித்து விடுகிறோம். மிகு விருப்பத்திலிருந்து சட்டென்று விருப்பம் குறைந்து கீழிறங்கி மீண்டும் விருப்பம் மேலேறும் இந்த நிகழ்வினைத்தான் புதிர்ப்பள்ளத்தாக்கு என்கிறார் உகைல். இந்தத் தலைப்பின் கீழ்தான் கடந்த ஐந்தாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன் என்று சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. இப்போது உருவாக்கப்படும் ரோபோக்களின் உருவங்களும், கணிணி விளையாட்டுகளில் உருவாக்கப்படும் பிம்பங்களும் இந்தப் புதிர்ப் பள்ளத்தாக்கை அடைப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஒரு பிம்பம் உருவாக்கப்படும்போது அது புதிர்ப் பள்ளத்தாக்கின் சரிவுப்பகுதியிலோ, ஆழத்திலோ இல்லாதவறு பார்த்துக்கொள்ளப் படுகிறது. அப்போது அது நுகர்வோர்களால் விரும்பப்பட ஏதுவாகிறது. கணிணி விளையாட்டு என்ற ஒரு துறையில் மட்டும் எட்டு பில்லியன் டாலர்கள்கள் புழக்கத்திலிருக்கிறதாம்.
அசல் எது? நகல் எது?             
2. அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும் இன்னொரு விஷயம் ஒரு கணிணி விளையாட்டை எந்த விதப் பின்புலத்திலும், தளத்திலும் விளையாட வைக்க முடியுமா என்பது பற்றியது. அதாவது ஒரே விளையாட்டை இணைய அலைபேசி, மடிக்கணிணி அல்லது தொலைக்காட்சி என்று எதில் வேண்டுமானாலும் விளையாட வைக்க முடியுமா என்பது பற்றியது.
3. நிழற்படங்களின் தரத்தை மேம்படுத்துதல். 1975 ல் 0.01 மெகா பிக்ஸல் புகைப்படக்கருவியை சாதனையாகக் கருதியிருக்கிறார்கள். 2008ல் 80 மெகா பிக்ஸல் கேமரா வந்தது. இப்போது 900 மெகாபிக்ஸலில் ஒரு கேமரா வரவிருக்கிறதாம். 

5 ஆகஸ்ட், 2010

சாயாவனம் - காலத்தின் அழியாத குறியீடு

சாயாவனம்
ஆசிரியர் : சா. கந்தசாமி
பதிப்பகம் : காலச்சுவடு
பரிந்துரை : ஜெகதீஷ் குமார்
 தக்கையின் மீது நான்கு கண்கள் என்கிற அபூர்வமான சிறுகதைதான் நான் வாசித்த சா. கந்தசாமியின் முதல் படைப்பு. தலைப்பு கொடுப்பதில் சில பேருக்குத்தான் இப்படி லாவகமான திறமை இருக்கும். அந்த வகையில் சுஜாதா கொஞ்சம் சுமார்தான். நில்லுங்கள் ராஜாவே என்பது மாதிரி ஈஸ்ட்மென் வண்ணத்திரைப்படங்கள் தலைப்பு போலெல்லாம் கொடுப்பார். ராஜேஷ் குமார் இந்த விஷயத்தில் கில்லாடி. அவரது தலைப்புகள் எப்போதுமே என்னைக் கவரும். ஐந்து கிராம் நிலவு என்று ஒரு மாத நாவலுக்குப் பெயர் வைத்திருந்தார். சமீபத்தில் வெளி வருகிற பல கவனிக்கத்தக்க படைப்புகள் கூட கவர்ச்சியற்ற தலைப்புகளையே கொண்டிருப்பது போலத்தான் தெரிகிறது. எனக்கும் பதிவுகளுக்குத் தலைப்பு போடும் நேரங்கள் மட்டும் கண் முன்னால் பூச்சி பறக்க ஆரம்பித்து விடுகிறது.
     தலைப்பு போலவே கதையும் தனித்தன்மை கொண்டிருந்தது. ஒரு தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையில் ஓடையில் மீன் பிடிக்கையில் நடக்கும் போட்டியும், தாத்தாவுக்குப் பேரனின் மேலுள்ள ego clash கோபமாக வெளிப்படுவதும் மிக இயல்பாகவும் அழகாகவும் வெளிப்பட்டிருந்த கதை.
     சா. கந்தசாமி என்ற பெயர் இலக்கிய வட்டாரத்தில் தவிர்க்க முடியாத பெயராதலால் எனக்கு அவர் பற்றி நீண்டகாலமாகத் தெரியும். ஆனால் ஒரு கதை கூடப் படித்ததில்லை. சாயாவனம்தான் நான் படித்த அவரது முதல் நாவல். அதற்கு முன்பு அவரது சிறுகதை தக்கையின் மீது நான்கு கண்கள்.
     சாயாவனம் காலச்சுவடு கிலாசிக் வரிசையில் (ஏன் கிளாசிக் என்று எழுதுகிறோம்?) வெளியாகியுள்ளது. இப்பதிப்புக்கு பாவண்ணன் ஆழமான நீண்ட முன்னுரை ஒன்று எழுதியுள்ளார். நாவல் எழுதப்பட்ட காலகட்டம் மட்டுமின்றி, தற்காலச் சூழ்நிலையிலும் எப்படி சாயாவனம் ஒரு இன்றியமையாத படைப்பாகிறது என்பதை அழகாக விளக்குகிறது அம்முன்னுரை. நான் எழுதப் போவது நாவல் ஒரு வாசகனாக எனக்குக் கொடுத்த அனுபவங்களைப் பற்றி.
     தன்னுடைய இருபத்தைந்தாவது வயதில் சா. கந்தசாமி இந்த நாவலை எழுதினார் என்பதையும், நாற்பதாண்டுகளுக்கு முன் இந்நாவல் எழுதப்பட்டது என்பதையும் கவனத்தில் கொண்டு நாவலுக்குள் புகுதல் நலம்.
     தன் சுயநலத்துக்காக மனிதன் இயற்கையை எவ்வாறு சீரழிக்கிறான் என்பதற்கான உதாரணங்கள் ஒரு நாவலுக்கும் மீறிய சுவாரசியத்தோடு நம் கண் முன் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. Clayrose கூட தன்னுடைய சமீபத்திய ஒரு பதிவில் மெக்சிகோ குடாப்பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் செய்த அட்டூழியத்தைப் பற்றி எழுதியிருந்தார். விளைநிலங்கள் அழிக்கப்பட்டு பிளாட் போட்டு விற்கப்படுவது தினந்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் சேர்த்து வைத்த பணத்தில் ஒரு ஐந்து சென்டாவது அந்த நிலத்தை வாங்கிவிடவேண்டுமென்று எந்தக் குற்ற உணர்ச்சியுமின்றித் தயாராக இருக்கிறோம். ஈரோட்டில் காவேரிக்கு இரு கரைகளிலும் தொழிற்சாலைகள். ஒரு கரையில் ஆடை பதனிடும் தொழிற்சாலைகள். மற்றொரு கரையில் தோல். பகலில் கழிவு நீரைச் சுத்திகரிப்பதாக பாவ்லா காட்டிவிட்டு இரவு ஏழு மணிக்கு மேல் ஆயிரக்கணக்கான லிட்டர்கள் கழிவுநீரை நேரடியாகத் திறந்து விட்டு விடுவார்கள். தொழிற்சாலைகளுக்கு அருகாமையில் நதி பச்சை நிறத்திலிருக்கும். அந்நீரில் தொடர்ந்து குளித்தாலே புற்றுநோய் வந்துவிடும். அதிலிருந்துதான் குடிநீரும். தோல்கழிவின் வீச்சம் ஈரோட்டிலிருந்து சித்தோடு வழியாக பவானி செல்லும் வரை தொடரும். தன் மீதான எத்தனையோ அத்துமீறல்களை இயற்கை பொறுத்துக் கொண்டே இருப்பதைப் போலத்தான் தெரிகிறது.
     சாயாவனம் இயற்கை மனிதனின் கையில் ஒரு பண்டமாற்றுப் பொருளைப் போலவே எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான ஒரு பதிவுதான். செல்லும் பாதையிலிருந்து கொஞ்சம் நகர்ந்தாலும் பிரச்சாரநெடி அடித்துவிடும் அபாயமுள்ள கதைக்கரு. ஆனால் மிகவும் கவனமாகக் கையாண்டிருக்கிறார் சா. கந்தசாமி. கரும்பு ஆலை அமைப்பதற்காக சாயாவனம் என்ற தோப்பும், அதன் உயிரினங்களும், தோப்பை ஒட்டிய மேலும் பல மரங்களும் வயல்களும் அழிக்கப்படுவது நுணுக்கமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. சிறுவயதிலேயே தாயோடு இலங்கைக்குப் போய்விடுகிற சிதம்பரம் தாய் ‘அம்மை வாத்துக் குளுந்து’ போன பிறகு சொந்த கிராமத்துக்கே திரும்பி வருகிறான். கையில் அயல் நாட்டில் சம்பாதித்த காசு நிறைய இருக்க, தன் ஊரில் ஒரு கரும்பாலை அமைக்க ஆசைப்படுகிறான். அதற்காக சாயாவனம் என்ற தோப்பை விலைக்கு வாங்கிப் போடுகிறான். துவக்கத்தில் உதவிக்கு யாருமற்ற நிலையில் தானே களத்தில் இறங்கி சாயாவனத்தின் மரஞ்செடிகொடிகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெட்ட ஆரம்பிக்கிறான். வனத்தை அழித்து ஆலை அமைக்கும் இம்முயற்சியில் அவனுக்கு அவன் மாமா முறையாகும் சிவனாண்டித் தேவர் துணையாக இருக்கிறார். ஆரம்பத்தில் சாம்பமூர்த்தி ஐயர் சிதம்பரத்துக்கு சாயாவனத்தை விற்றது சிவனாண்டித் தேவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் சிதம்பரம் தன் பணிவான நடத்தையாலும், கனிவான சொற்களாலும் அவரைக் கவர்ந்து விடுகிறான். மேலும் இருவர் சேர்ந்து கொள்ள வனம் அழிக்கும் பணி தொடர்கிறது.
     ஒரு ஆசிரியராகவோ, அல்லது ஏதேனும் ஒரு கதாமந்தரின் மூலமாகவேனுமோ தலையிட்டு இயற்கையை இந்த மனிதர்கள் இப்படி இரக்கமின்றிச் சிதைக்கிறார்களே என்று தன் ஆதங்கத்தை வெளிப்படையாகச் சொல்வதேயில்லை சா. கந்தசாமி. காட்டை அழிப்பதில் சிதம்பரம் மேற்கொள்ளும் தொழில்நுட்ப நேர்த்தியையும், தனக்குச் சாதகமான விஷயங்களைப் பிறரிடமிருந்து சாதித்துக் கொள்ளும் அவனது திறமையையும் சிலாகிப்பதைப் போலவே விவரித்துக் கொண்டு செல்கிறார். சிதம்பரத்தின் மனதில் கணந்தோறும் காட்டை அழிப்பது பற்றிய திட்டமே ஓடிக்கொண்டிருக்கிறது. இயற்கையோடு அவன் நிகழ்த்தும் போராட்டமாகவே அதை எடுத்துக்கொள்கிறான். முதலில் பணிய மறுக்கும் இயற்கை அவன் கொடுக்கும் தொடர்ந்த அடிகளால் பலவீனப்பட்டுத் தலை தாழ்ந்து விடுகிறது.
சிதம்பரத்தின் மனதில் கரும்பாலை தவிர வேறேதுமில்லை. கிராமத்தவர் கூட தங்கள் ஊருக்கு வரவிருக்கும் ஆலை பற்றிய எதிர்பார்ப்பிலிருக்கிறார்களே தவிர யாரும் ஒரு வனம் இப்படி அழிக்கப்படுகிறதே என்று வருத்தப்படுவதில்லை. மரங்கள் வெட்டப்பட்டுச் சாயும்போதும், வழியேற்படுத்துவதற்காக கொடிகள் அறுக்கப்படுவதும், தேனடைகள் உடைக்கப்படுவதும், மூங்கில் கூட்டம் எரிக்கப்படுவதும் வாசகனுக்குத்தான் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. வனத்துள் உறையும் பறவைகளும், சிறுவிலங்குகளும், வனத்துக்குள் யாரும் அறியாது இருந்த சமவெளியில் மேய்ந்து கிடந்த மாடுகளும் கூட நெருப்புக்கு இரையாகி தீய்ந்து கிடப்பதும் மனிதனின் பொறுப்பற்ற செயலின் உணராத தீவிரத்தை காட்டுகிறது.
     சாயாவனத்தை ஒட்டிய பகுதியில் நிறைய புளிய மரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு முறை மரங்கள் காய்த்த பிறகும் சிவனாண்டித் தேவர் மரங்களைக் குலுக்கி புளி எடுப்பார். ஒவ்வொரு மரப் புளியும் ஒரு வீட்டுக்குச் செல்லும். ஒரு மரப்புளிதான் சுவையாக இருக்கும். கடையில் கிடைப்பதெல்லாம் எல்லா மரப் புளியும் கலந்தது. கிராமத்தாருக்கு அதெல்லாம் உவப்பாக இருப்பதில்லை. சாயாவனத்துக்கு வைக்கப்பட்ட தீ புளியமரங்களையும் அழித்து விடுகிறது. ‘அதான் எல்லாத்தையும் கருக்கிட்டியே? அப்புறம் எங்கிருந்து சுவையான புளி வரும்? என்று கேட்கும் கிழவிக்கு பதில் சொல்ல முடியாது சிதம்பரம் திகைத்து நிற்பதோடு நாவல் முடிகிறது. நம்மையும் பார்த்து இது போன்ற கேள்விகள் வீசப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. அதற்கு நாமும் திகைத்து நிற்கலாம் அல்லது கேள்விகளை உதாசீனப் படுத்தி விட்டு நம் சகஜ வாழ்வைத் தொடரலாம்.
     சா. கந்தசாமி பாத்திரங்களின் உரையாடல் மூலமே கதையைப் பெரும்பாலும் நகர்த்திச் செல்கிறார். கதை சாயாவனத்தின் அழிவு என்ற ஒற்றைக் கோட்டிலேயே செல்வது சற்று அயர்ச்சியைத் தருகிறது. ஆனால் இந்த நாவலை பிரம்மாண்டமான நாவலாக மாற்றி விடும் சாத்தியக்கூறுகள் உள்ளே நிறையவே இருக்கின்றன. எண்ணற்ற கதை மாந்தர்கள் நாவலில் பிரசன்னமாகி உடனே மறைந்து விடுகிறார்கள். சொல்லப்பட்ட ஒரு சிலரின் கதைகளும் மையக்கதையின் போக்கிலிருந்து விலகிவிடக்கூடாதென்ற விழிப்புணர்வுடனேயே சிறுகதைக்குரிய கச்சிதத்துடன் கொடுக்கப்படுகின்றன. சிதம்பரத்தின் அயல் நாட்டு வாழ்க்கையும், அவனது போராட்டங்களும் விவரிக்கப்படுவதற்கான சாத்தியங்களும் புறக்கணிக்கப் பட்டிருக்கின்றன. சிவனாண்டித் தேவரின் மருமகள் குஞ்சம்மாவின் மகள் திருமணம் விஸ்தாரமாகச் சொல்லப்படுகிறது. கடைசிச் சில பக்கங்களில் இரண்டு நாவல்களுக்குண்டான கதையைப் படபடவென்று சொல்கிறார். எல்லாம் புதிதாக அறிமுகமாபவர்களின் கதைகள்.
மனிதர்களினூடே நிகழும் எந்தப் பெரிய சம்பவங்களுமின்றி, திருப்பங்கள் ஏதுமின்றி, பாத்திரங்களின் குணத்திரிபுகள் கதையின் போக்கை பாதிப்பது போன்ற எந்த நிகழ்வுமின்றி ஒரு நாவலைப் படிப்பது சாதாரண வாசகனுக்கு ஆச்சரியத்தையும், திகைப்பையும் அளிக்கும். ஆனால் பாவண்ணன் தன் முன்னுரையில் சொல்வதைப் போல ‘ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கும் காலத்தை சுட்டிக்காட்டியபடி அழியாத குறியீடாக நிற்கிறது சாயாவனம்.’
     

மேலும் வாசிக்க