19 ஜூலை, 2010

யாமம் – கூடிக் கதை பேசும் மிகு சுடர்கள்


பதிப்பகம்: உயிர்மை
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பரிந்துரை: ஜெகதீஷ் குமார்.






உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் எஸ். ராமகிருஷ்ணனின் நாவலான யாமம் சமீபத்தில் வாங்கி வந்து வாசித்தேன்.  ஏற்கனவே கதாவிலாசம், அயல் சினிமா போன்ற நூல்களை வாசித்திருப்பினும் அவரது புனைகதை ஒன்றைப் படிப்பது, (சில சிறுகதைகள் தவிர்த்து ) இதுவே முதல். அறிமுகமே தேவையில்லாத எழுத்தாளர் எஸ்.ரா. கீழைத்தேய மரபையும், மேற்கத்திய கலாசாரம் அதில் ஊடுருவுவதையும் வைத்து அவர் எழுதியுள்ள நாவலான யாமம் ஒரு புதுமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மக்கள் உறங்கச் சென்றபின் அவ்வீட்டின் விளக்குகளின் சுடர்கள் அனைத்தும் ஒன்று கூடி அம்மனிதர்களின் குண இயல்புகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும் பற்றி உரையாடி விட்டுத் திரும்புகின்றன என்று  நாவலின் முன்னுரையில் எஸ். ரா குறிப்பிடுகின்றார்.  அந்தச் சுடர்களைப் போலவே சற்று நேரம் பரிமளத்தோடு இருந்து மறைந்து போன மனிதர்களின் கதைகளின் தொகுப்பாகத்தான் யாமம் இருக்கிறது.  யாமம் என்பது ஒருவகை அத்தரின் பெயர். எந்நேரத்திலும் இருளைக் கவிய வைக்கும்,   காமத்தை தூண்டும் வல்லமை   கொண்டது யாமம். நாவலின் பெயர்தான் யாமமே தவிர இது யாமம் என்கிற அத்தர் பற்றின கதை அல்ல. 

நாவல் நான்கு பெருங்கதைகளின் தொகுப்பாக இருப்பினும் அவற்றின் கதைமாந்தர்களில் பெரும்பாலானவர்களை  இணைக்கும் மெல்லிய சரடாக யாமம் என்கிற அத்தர்  இருக்கிறது.  வெளிப்படையாகப் பார்க்கும் போது நான்கு தனிக் கதைகளைப் படிப்பது போலவே இருப்பினும் ஆழ்ந்த வாசிப்பில் கதை மாந்தர்களுக்கிடையே ஊடாடும் ரகசியங்களின், குணஇயல்புகளின், மனத்திரிபுகளின் ஒற்றுமைகளை  ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கிறது.

 பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்குள் வணிகம் செய்வதற்காக நுழைந்ததும், அதன் பின்னர் அவர்கள் சிறிது சிறிதாக நில ஆக்கிரமிப்புகளைச் செய்து குடியேற ஆரம்பித்ததும் நாவலின் துவக்கத்தில் சொல்லப்படுகின்றன. இந்தியாவிலிருந்து மிளகு இறக்குமதி செய்வதற்காய் மகாராணியிடம் அனுமதி கேட்டு இந்தியா வருகின்றனர் வெள்ளையர்கள். அனுமதி கேட்பவர்களிடம் மகாராணி இந்தியாவில் உள்ள நீலக்கிளிகள் அனைத்தும் தனக்கு வேண்டுமென்றும் அவற்றின் இறகுகளைத் துண்டித்து மேலாடை செய்துகொள்ளவேண்டுமென்றும் சொல்கிறாள். அப்படியே இறக்கை முளைத்த வெள்ளை நிற யானைகளையும் கொண்டுவரச் சொல்கிறாள்.

வெள்ளையர்கள் வரும் இடத்தில் ஷாஜஹானின் மகளுக்குத் தீ விபத்தில் முகத்தில் ஏற்பட்ட காயத்தை ஒரு ஆங்கிலேயன் குணப்படுத்த, மகிழ்ந்து போன ஷாஜஹான், அவர்களுக்கு இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையை அளிக்கிறான். ஆங்கிலேயர்கள் கடலோரம் குடியிருந்த மீனவ இன மக்களை வன்முறையாக வெளியற்றி அங்கு குடியேறுகிறார்கள். ஒரு பரத்தையைப் போல் எல்லாரையும் மகிழ்வித்துக் கொண்டும் ஆனால் தன் துக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமலும் மெல்ல மெல்ல மதராப் பட்டினம் உருவாகிறது.

யாமம் ஒரு புனைகதையை வாசிப்பது போன்ற அனுபவத்தைத் தரவேயில்லை.  பட்டணத்து வாசிகளின் சரிதம் என்கிற தலைப்பில் மதராப் பட்டணத்தைச்  சுற்றி வாழ்ந்த மனிதர்களின் வாழ்வும், வீழ்ச்சியும், ஏக்கங்களும், ஆசைகளும், உறவுப் பிறழ்வுகளும்,  நம்பகமான வரலாற்றுக் குறிப்புகளைப் போல அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அக்குறிப்புகளின் வாயிலாகவும், தனது எளிமையானதும், நேரடியானதும், குறியீட்டுத் தன்மை கொண்டதுமான மொழிநடையின் உதவியோடும் எஸ்.ரா தன் பார்த்த உலகத்தை நமக்கு அறிமுகப் படுத்துகிறார்.  நம்மீது ஆதிக்கம் செலுத்தியவர்கள் என்ற நிலையைத் தாண்டி நமக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இருந்த உறவு விவரிக்கப் படுகிறது. 

அப்துல் கரீம் என்ற வணிகர்தான் நகரத்துப் பிரமுகர்கள் பலரும் உபயோகிக்கும் யாமம் என்ற அத்தரைத் தயாரிக்கிறார்.  அதைத் தயாரிக்கும் ரகசியம் அவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவரது குடும்பத்துக்குப்  பதினாலு தலைமுறைகளாக அல் அசர் முசாபர்  என்ற பக்கீர்தான் வழிகாட்டி வருகிறார். அவர்  யார் முன்பும் தோன்றியதில்லை. அக்குடும்பத்தின் மூத்த ஆண்மகனின் கனவில் தோன்றி வழி நடத்துவார். பல தலைமுறைகளுக்கு முன்பாக கரீமின் முன்னோரான மீர்காசிமின் கனவில் முதன்முறையாகத் தோன்றி மர்மமானதும் புதிரானதுமான பல கேள்விகளைக் கேட்கிறார் பக்கீர். அக்கேள்விகள் பல்வேறு தத்துவ அடுக்குகளைக் கொண்டதாக இருக்கின்றன. பதில்களுக்கான தேடல் மீர்காசிமுக்குப் பல்வேறு புரிதல்களை உண்டாக்குகிறது. வாசனையை அதன் ஊற்றுக் கண்ணிலேயே கண்டுபிடித்து விடும் திறமை படைத்த காசிமுக்கு யாமம் தயாரிக்கும் ரகசியத்தைச் சொல்கிறார் பக்கீர். அதன்பின் தலைமுறை தலைமுறையாக யாமம் தயாரிக்கும் ரகசியம் அந்தக் குடும்பத்து ஆண்களிடம் மட்டுமே இருந்து வருகிறது.

ஆண் வாரிசு இல்லாத கரீம் மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்தும் பயனில்லை. யாமம் தயாரித்தல் தன்னோடே முடிந்து விடுமோ என்று அஞ்சுகிறார். விரக்தியடைந்த அவர் மனம் அவரை சூதாட்டத்தில் ஈடுபட வைக்கிறது. சொத்தெல்லாம் இழக்கிறார். மூன்று மனைவியரையும் பிரிந்து எங்கோ சென்றுவிடுகிறார். மனைவியர் மூவரும் அவர் இல்லாது பட்டணத்தில் அல்லாடுகிறார்கள்.

மற்றொரு கதை ஆங்கிலேயரின் நிலவரைபட ஆய்வுப் பணியிலிருக்கும் பத்ரகிரியினுடையது. சிறுவயதில் தாயை இழந்த அவன் தன் தம்பியைப் பாசமாய் வளர்க்கிறான். மேற்படிப்புக்காக லண்டன் அனுப்புகிறான். அவன் தம்பியின் மனைவி அவன் வீட்டில் இருக்கிறாள். பத்ரகிரியின் மனைவிக்குத் தெரியாமல் அவனுக்கும் தம்பி மனைவிக்கும் உறவு ஏற்படுகிறது. அவள் பத்ரகிரிக்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். பத்ரகிரியின் மனைவி அவனைப் பிரிகிறாள். இது எதுவுமே அறியாமல் லண்டனில் படிக்கும்போதே கணிதத்துறையில் புகழ் பெற்று நாடு திரும்பும் அவன் தம்பி திருச்சிற்றம்பலத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

திருச்சிற்றம்பலத்தின் லண்டன் வாசம் மூலமாக நமக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இங்கிலாந்து ஒரு அழகான ஓவியத்தைப் போலக் காணக் கிடைக்கிறது. லண்டன் மாநகரின் விஸ்தாரமான பழமை கொஞ்சும் பிரம்மாண்டமான தெருக்கள் மட்டுமல்லாது, அவற்றின் அழுக்கு படிந்த வீதிகள், அந்நகரின் உழைக்கும் கருப்பின மக்களின் வலிகள், ஒடுக்கப்படுதலுக்கெதிராய் அவர்களது போராட்டங்கள் ஆகியன நம்முன் விரிகின்றன. திருச்சிற்றம்பலத்துடன் உடன் பயணம் செய்த சற்குணம் உழைக்கும் மக்களுக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை செல்கிறான். அவனுக்கு மரண தண்டனை கூடக் கிடைக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். திருச்சிற்றம்பலம் தன் கணிதத் திறமையை லண்டனில் நிலைநாட்டி மிகுந்த புகழ் பெறுகிறான். அவனது பாத்திரப் படைப்பு எனக்கு கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தை நினைவூட்டியது.

இன்னொரு கதை சதாசிவப் பண்டாரத்தினுடையது. வாழ்வின்மீது பற்றற்ற பண்டாரம் வீட்டைத் துறந்து கோயில் வாசலில் போய் உட்கார்ந்து கொள்ளுகிறது. அம்மா வந்து அரற்றியும் மனம் இரங்குவதில்லை. நாய் ஒன்று பண்டாரத்தையே பார்த்துக் கொண்டு நிற்கிறது. நீ சோறு தின்று சோம்பிக் கிடக்கத்தான் சன்யாசியானாயோ? என்று அந்த நாய் கேட்பதைப் போலிருக்கவே, எழுந்து உறுதியுடன் நாயையே பின் தொடர்கிறது பண்டாரம். நாய் பண்டாரத்தை கிராமம் கிராமமாகக் கூட்டிச் செல்கிறது. ஒரு கிராமத்தில் பெண்ணொருத்தியுடன் அவருக்குத் தொடர்பு ஏற்படுகிறது. அவள் கர்ப்பமுறுகிறாள். நாய் அங்கிருந்து நகராததால், பண்டாரமும் அங்கேயே வீட்டு வேலைகளை செய்து கொண்டு தங்கிவிடுகிறது. அவள் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் நாய் அங்கிருந்து ஓடுகிறது. பண்டாரமும் அதன்பின்னேயே புறப்பட்டு விடுகிறது. நாய் அவரைப் பட்டினத்தார் சமாதியான இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. ஒருநாள் பண்டாரம் களிப்போடு, குதித்துக் கொண்டாடியபடியே அருகிலிருக்கும் மடம் ஒன்றில் புகுந்து தாழிட்டுக் கொள்கிறது. அதற்கப்புறம் அடைத்த கதவு திறப்பதே இல்லை.

அடுத்த கதை குடும்பச் சொத்தைக் காப்பாற்றுவதற்காய் பங்காளியிடம் போராடிக் கொண்டிருக்கும் கிருஷ்ணப்பக் கரையாளருடையது. ஆங்கிலோ இந்தியப் பெண்ணான எலிசபெத்தை அழைத்துக் கொண்டு போய் மேல்மலையில் தங்கி இருக்கிறார். மலைவாசம் அவர் மனதை மெல்ல கனியச் செய்கிறது. வழக்கு முடிந்தால் சொத்து முழுவதையும் இழந்து விடுவோம் என்று அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. இந்த மேல் மலையையாவது காப்பாற்றி விட வேண்டுமென்று உறுதியோடிருக்கிறார். பங்காளியிடம் சமாதானம் பேசி மேல்மலை தவிர அனைத்தையும் அவனுக்கே கொடுத்து விடுகிறார். மேல்மலையை எலிசபெத்துக்கு எழுதி வைத்து விடுகிறார். ஆங்கிலேயர் தேயிலை பயிரிடுவதற்கு அது ஒரு துவக்கமாக அமைந்து விடுகிறது.

மலையின் வசீகரங்களும்,காட்டின் ரகசியங்களும் எஸ். ராவின் வருணனையில் உயிர் பெறுகின்றன. இரவை மட்டுமல்ல, வெயிலையும் பல்வேறு கோணங்களிலிருந்து உற்றுநோக்கித் தன் வருணனைகளால் அடர்ந்த குறியீடுகளாக மாற்றி விடுகிறார் எஸ். ரா. ஆனாலும் திரும்பத் திரும்ப படிமங்களை உள்ளடக்கிய வருணனைகள் வருவது ஒரு சாதாரண வாசகனான எனக்குச் சலிப்பையூட்டியது. நாவலில் ஆங்காங்கே நிறைய எழுத்துப் பிழைகள் தென்படுகின்றன. பாத்திரங்களின் பெயர்களில் கூட வரும் எழுத்துப் பிழைகள் பாத்திரத்தின்  உண்மையான பெயர் எது என்பதை நாமேதான் ஊகித்துக் கொள்ளவேண்டும் என்ற அளவிற்கு இருந்தது சற்று எரிச்சல்தான். அடுத்த பதிப்பில் தவிர்த்து விட வேண்டும்
நாவலின் தொடர்ந்த வாசிப்பில் சுதந்திரத்துக்கு முந்தைய மதராப் பட்டிணம் கண்முன் உருக்கொள்கிறது. பட்டிணத்தை ஒயிட் டவுன், பிளாக் டவுன் என்று இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். இந்தியர்கள் பிளாக் டவுனில் உள்ள ஏழுகிணற்றிலிருந்து வெள்ளையர்களுக்கு நீர் எடுக்கப் போவதை எதிர்த்துப் போராடும் இந்தியர்கள் மீது நடக்கும் தாக்குதல் ஜாலியன் வாலாபாக்கை நினைவூட்டியது. போதையூட்டும் நீலாவரணச் செடிகளும், ஒளிரும் ஸ்வேதாமிணிச் செடிகளும், கிளர்ச்சியூட்டும் தி கிராண்ட் விர்த் சர்க்கஸ் போன்ற ஸ்வாரசியமான விஷயங்களும் நாவல் நெடுக சிதறிக் கிடக்கின்றன. சதாசிவப் பண்டாரத்தின் கதை தவிர எல்லாக் கதைகளிலும் வரும் யாரோ ஒருவருக்கு யாமம் பிடித்தமான அத்தராக இருக்கிறது. பண்டாரத்துக்கும் இந்த நாவலுக்கும் என்ன தொடர்பு என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன். மனைவி துரோகம் செய்த உண்மை அறிந்து விரக்தியில் அமர்ந்திருக்கும் திருச்சிற்றம்பலம் ஒரு நாய்க்கூட்டத்தைப் பார்த்து அதன் பின்னேயே போய்விடலாமா என்று நினைக்கிறான். இது பண்டாரத்தை நினைவுபடுத்தியது. வேறு ஏதேனும் தத்துவ ரீதியிலான கயிறு எல்லாக் கதாபாத்திரங்களையும் இணைக்கிறதா என்று தெரியவில்லை.

17 ஜூலை, 2010

அசோகமித்திரனின் பிரயாணம்

   அசோகமித்திரன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரது படைப்புகள் பலவற்றை நான் படித்ததில்லை. சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் அவரது கரைந்த நிழல்களையும்,  ஒற்றனையும், பதினெட்டாவது அட்சச்கோட்டையும் எங்கிருந்தோ   கிடைத்து படித்தேன். அப்போது எனக்கு அவற்றின் இலக்கிய மதிப்பு பற்றி பெரிய அபிப்ராயம் இல்லையென்றாலும் கூட அவை கொடுத்த வாசிப்பனுபவம் அலாதியானது. 
        அப்போது நான் சாண்டில்யன், கல்கி, ராஜேஷ் குமார், லக்ஷ்மி, ரமணி சந்திரன் (இருவருமே  அம்மாவுக்கு 
பிரியமான  எழுத்தாளர்கள்) போன்ற எழுத்தாளர்களை மட்டுமே அறிந்திருந்தேன். சுஜாதா கூட அப்போது எனக்கு அறிமுகமாகவில்லை. கேளிக்கை இலக்கியம், தீவிர இலக்கியம் இது பற்றியெல்லாம் பேதம் பிரித்துப் பார்க்கத்  தெரியாத வயது. தொலைக்காட்சியின் ஆதிக்கம் இல்லாத காலம். எனவே வாசிப்பு ஒன்றே உகந்த பொழுதுபோக்காக இருந்தது. வாசிக்கும்போது நாம் ஒரு பிரத்யேக உலகிற்குள் சஞ்சரிக்கும் அனுபவத்தை அது தர வேண்டும் என்பதே வாசிப்புக்கு என் அளவுகோலாக வைத்திருந்தேன். கதையும் கதை தரும் அனுபவமும்தான் முக்கியமாகப் பட்டதே தவிர எழுத்தாளர் பெயரோ அவர் ஆளுமை தருகிற மயக்கமோ அப்போது என்னை ஆட்கொண்டிருக்கவில்லை.  
அந்த நாவல்கள் வாசித்துப் பல வருடங்கள் ஓடிவிட்டாலும் அவற்றின் பக்கங்களில் விவரிக்கப்பட்டிருந்த சிற்சில சம்பவங்கள் ஓவியத்தின் தீற்றலைப்  போல என்னுள் அப்படியே உறைந்து போய்விட்டன. இரண்டு நாவல்களின் கதைகளும் நீராவி படர்ந்த கண்ணாடியினூடே பார்ப்பதைப் போல மங்கலாக ஞாபகமிருக்கின்றன. பதினெட்டாவது அட்சக் கோட்டில் என்னை மாதிரியே ஒரு சிறுவன் தன் வயதொத்த ஹைதராபாத் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடுவது மட்டும் நினைவிருக்கிறது.   அந்தச் சிறுவன் நிச்சயமாக அசோகமித்திரனாகத்தான் இருக்க வேண்டும். ஒற்றன் அவரது அயோவா எழுத்துப் பட்டறை அனுபவங்களைப் பற்றியது என்று நினைக்கிறேன். எல்லாம் நினைக்கிறேன்தான். படிப்பது எல்லாமே மறந்து விடுகிறது. அப்புறம் என்னத்துக்கு இப்படி மாஞ்சு, மாஞ்சு படிக்கிறீங்க? என்று என் மனைவி கேட்கும் கேள்விக்கு நான் கொடுக்கும் அறிவுபூர்வமான பதில்கள் அவளுக்கு எப்பொழுதுமே ஏற்புடையதாக இருந்ததில்லை. இருப்பினும் ஏதோ ஒன்று இலக்கியத்தின் பக்கம் இழுத்துக் கொண்டுதானிருக்கிறது.
அசோகமித்திரனுக்கு வருவோம். ஒற்றனில் அவர் தனது எளிமையான, பூடகமும், குறியீடுகளுமற்ற மொழிநடையால் உருவாக்கிக் கொடுத்திருந்த ஒரு புது உலகத்தைப் போன்று வேறொருவர் படைப்புகளில் அதற்கப்புறம் என்னால் அரிதாகவேதான் நுழைய முடிந்திருக்கிறது. வாசகனைக் கவர வேண்டுமென்றோ, அவனை சுவாரசியப்படுத்தும்படியாகச் சம்பவங்களைப் பின்னிக் கொடுக்கவேண்டுமென்ற பிரக்ஞையிலோ அவர் எழுதுவதில்லையெனினும் அவரது வார்த்தைகள் சங்கிலிக் கண்ணிகள் போன்று ஒன்றோடொன்று பிணைந்து நமக்கு புதிய அனுபவத்தை உருவாக்கித் தந்துவிடுகின்றன. அந்தச் சூழ்நிலையில் நாமே நின்று கொண்டிருப்பதைப் போன்று; நாம் பாத்திரமாகி நடமாடும் கதையையே எழுத்தாளன் நமக்குச் சொல்வது போன்று. இயல்பாகத் தன் அனுபவங்களையே அவர் பதிவு செய்வது போலத் தோன்றினாலும் அவரது சொல்முறையில் பொதிந்திருக்கும் மாயம் கதைக்கு ஒரு தனி நிறத்தைக் கொடுத்துவிடுகிறது. அது அசோகமித்திரனின் நிறம்.
             தற்போது மீண்டும் தமிழ் படிக்கும் ஆர்வம் துளிர்த்திருக்கும் போது கையில் அசோகமித்திரன் இல்லை. சமீபத்தில் தாய்நாடு சென்று திரும்பியபோது வாங்கி வந்த புத்தகங்களில் மானசரோவர் இருக்கிறது. தற்போதைக்கு எஸ்.ராவின் உப பாண்டவமும் (படிக்க வேண்டுமென்றால் பக்கத்தில் அவரே வேண்டும் போலிருக்கிறது), ஜில்லி கூப்பரின் போலோவும் நேரத்தை எடுத்துக் கொண்டிருப்பதால் மானசரோவர் காத்துக் கொண்டிருக்கிறது. அவரது சிறுகதைகளை அழியாச் சுடர்களில் படித்தேன். ( தமிழின் மிகச்சிறந்த படைப்பாளர்களின் எழுத்துக்களை அயராது பதிப்பித்து வரும் அழியாச் சுடர்களுக்கும், ராமுக்கும் நன்றி.) சிறுகதைகளில் அசோகமித்திரனின் பிரத்யேக உலகம் காணக் கிடைக்கவில்லை. பெரும்பாலான சிறுகதைகள் அவர் சாட்சியாக இருந்து பார்த்த பிறர் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருப்பதாய்ப் பட்டது. கதைகளைச் சட்டென்று முடித்து விடுகிறார். அவர் சிறுகதைகளைப் புரிந்துகொள்வதற்கு இன்னும் சற்று இலக்கியப் பயிற்சி வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் திடீரென்று ரத்தினம் மாதிரி ஒரு கதை கண்ணில் பட்டது. (மற்றதெல்லாம் ஒன்று குறைவில்லை. மாணிக்கங்கள்தாம்) கதையின் பெயர் பிரயாணம். அவர் தன் குருவோடு கழித்த ஓர் இரவைப் பற்றியது.
     தனக்கு ஒரு வருடம் யோகம் சொல்லிக் கொடுத்த குருவுக்கு வயோதிகத்தின் காரணத்தால் உடல் தளர்ந்திருப்பதால் எங்கு சென்றாலும் அவரை ஒரு கட்டையில் வைத்து இழுத்துச் செல்கிறார். இளமையில் பிராணாயாமம், யோகம் எல்லாம் செய்து ஸ்வாசம் நிகழ்வதே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருந்த குருவுக்கு இப்போது சாதாரணமாக சுவாசிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இருவரும் எங்கெல்லாமோ பயணித்து இறுதியில் ஒரு மலை உச்சியை அடைவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. யாருமற்ற அம்மலையில் இருவரும் ஒரு பாழ் குடிசையில் தங்குகிறார்கள். மிகுந்த களைப்புடனும், உயிர் போகும் நிலையிலுமிருக்கும் தன் குருவுக்கு, தன் தோள்பையிலிருந்து கிழங்கு மாவு எடுத்து கஞ்சி வைத்துக் கொடுக்கிறார். இரண்டு வாய் குடித்து விட்டுக் கண் மூடிக் கொள்கிறார் குரு. சிறிது நேரம் கழித்து அவரது இதயத் துடிப்பைச் சோதித்து அவர் இறந்துவிட்டதை அறிய வருகிறார் அசோகமித்திரன். குரு கடைசியாக அவரிடம் கேட்டிருந்த காரியங்கள் இரண்டு. சாகும் தருவாயில் அவர் வாயில் பசும் பால் விட வேண்டும்; அவரைச் சமவெளியில்தான் புதைக்க வேண்டும். இரண்டாவதையாவது நிறைவேற்ற நினைக்கிறார் அ.மி. ஆனால் அவரைக் கீழே கொண்டு செல்வதற்கு முன் இருள் சூழ்ந்து விடும். விடியும் வரைக் காத்திருக்க வேண்டும். பிணத்தை உள்ளே வைத்து விட்டுக் குடிசைக்கு வெளியில் சிந்தித்தபடி அமர்ந்திருக்கிறார். இரண்டு மின்மினிப் பூச்சிகள் அருகில் ரீங்கரிக்கின்றன. அவற்றை விரட்டப் போக அவை மின்மினிப் பூச்சிகள் அல்ல, ஓர் ஓநாயின் இரு கண்கள் என்று தெரிய வருகிறது. இனி தன் குருவை இங்கு வைத்திருப்பது பாதுகாப்பானதல்ல என்று உணர்ந்து அவரைக் கட்டையில் படுக்க வைத்து கீழே இழுத்துச் செல்கிறார். வழியில் அவரை ஓர் ஓநாய்க் கூட்டம் சூழ்ந்து கொள்கிறது. எல்லாம் குருவின் மேல் பாய ஆயத்தமாயிருக்கின்றன. இவர் ஒரு உடைந்த மரக்கிளையை எடுத்துக் கொண்டு சுழற்றிச் சுழற்றி அவைகளை விரட்டுகிறார். இருந்தும் இரண்டு ஓநாய்கள் அவரது குருவை இழுத்துக் கொண்டு ஒரு புதர்ப்பக்கம் போய் விடுகின்றன. பதற்றத்தோடு அவைகளைத் தடுக்கப்போன அ.மி. கட்டை தடுக்கித் தரையில் வீழ்ந்து மயங்குகிறார். அவர் மயக்கம் தெளிந்து எழுந்து என்ன கண்டார் என்பதை நீங்கள் கதையில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
     கதையில் வரும் பாத்திரங்கள் அசோகமித்திரனும், சில ஓநாய்களும்தான். அவரது குருவுக்கு இறந்துபோவதைத் தவிர வேறு பங்களிப்பு எதுவும் கதையில் இல்லை (என்று சொல்லி விட முடியாது). அட்ரீனலின் அதிக அழுத்தத்தில் பரவும் ஒரு உச்சக்கட்ட விநாடியில் ஒரு மனிதனுக்குள் உறைந்து கிடக்கும் வாழ வேண்டும் என்ற உந்துதல் அவனை ஓநாய்களில் ஒருவனாக்கி விடும் அபூர்வக்கணம் இக்கதையில் நிகழ்வது கதையை வேறு தளத்தில் நகர்த்தி விடுகிறது. கதை முழுவதுமே முற்றிலும் வேறு ஒரு தளத்தில் தான் நிகழ்கிறது. கதை படித்ததும் ஏற்படும் அனுபவத்தை ஒருவேளை ஒரு தேர்ந்த எழுத்தாளர் அழகாக விளக்கலாம். என்னால் முடியவில்லை. அசோகமித்திரன் மீதான பிரமிப்பு மட்டும் மாறாது அப்படியே நிலைத்து விட்டது.

13 ஜூலை, 2010

மனித மனமெனும் ரகசியக் கிடங்கு

ஆவிகளில் எனக்கு இதுவரை நம்பிக்கையில்லை. சிறுவயதில் பார்த்த திகில் திரைப்படங்கள் கூட பயமுறுத்தினதில்லை.  ஒரு முறை மதியம் தூங்கி எழுந்திருந்த போது, காயப்போடப்பட்டிருந்த  தாத்தாவின் வேஷ்டியில் ஏற்பட்ட அலைவுகள் ஆவிகள் அசைவது போலவே இருந்தது. நீண்ட நேரம் அதன் அசைவுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைச் சிந்தனைச் சிற்பி போல பாவித்துக் கொண்டு அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேனே தவிர பயமெதுவும் ஏற்படவில்லை. ஆனால் இருட்டின் மேல் இருக்கும் பயம் இன்னும் தொடர்கிறது. எங்கேனும் தனிமையில் இருளைச் சந்திக்க நேரிடும்போது மனம் துணுக்குற்று விடுகிறது. ஆவிகளை விட அறியாமைதான் அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறது. நம்மை மீறிய கடவுள் என்ற ஒரு சக்தி உண்டா என்ற முடியாத விவாதத்தைப் போல, ஆவிகள் இருக்கின்றனவா இல்லையா என்பதும் ஒரு தீராத சர்ச்சைக்குரிய கேள்விதான்.
     ஆவிகள் உண்மையில் இருக்கின்றனவோ, இல்லையோ ஆவிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் எல்லா மொழிகளிலுமே கவனிக்கப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன. தமிழில் ஆயிரம் ஜென்மங்கள், மை டியர் லிசா (அது டப்பிங்கா?) போன்ற திரைப்படங்கள் வந்துள்ளன. கதாநாயகியின் பின்பக்கமாக இருந்து கேமரா மர்மான முறையில் மெதுவாக நகர்ந்து வந்து அவள் தோள்மீது ஒரு கை தொடும். திகில் இசை பிண்ணனியில் ஒலிக்க அவள் திடுக்கிட்டுத் திரும்பினால் அவள் காதலன் நின்றிருப்பான். இரவில் வெள்ளைப் புடவை அணிந்த ஒரு பெண்(ஆவி) விளக்கைத் கையில் ஏந்திக் கொண்டு பாட்டுப் பாடியபடியே நடக்கும். கோரமான, குதறப்பட்ட முகங்கள்; ஏமாற்றபட்ட நபர் ஆவியாக உருவெடுத்து வந்து பழி வாங்குவது; ஆவியை வசப்படுத்தும் மாந்த்ரீகம் (இது கேரளா ஸ்டைல்) என்று அனைத்துப் பேய்ப் படங்களிலும் சில ஒற்றுமைகளைக் காண முடியும். ஆங்கிலத்திலும் இது மாதிரியான படங்கள் ஒரே ரத்தமும் சதையுமாய் அருவெறுப்பையும், திகிலையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்துபவை உண்டு. எனக்கு தெரிந்து நான் பார்த்த சில படங்கள் (சிறு வயதில்தான்) ஈவில் டெட் (பல பாகங்கள்).
     வேறு சிலவகைப் படங்களும் உண்டு. இவை உளவியல் ரீதியான திகில் படங்கள். மனோஜ் நைட் ஷ்யாமளன் இந்த வகைப் படங்களை வரிசையாக எடுத்துக் கொண்டே இருக்கிறார். Rings, lady in the water, the sixth sense போன்றவை. தமிழில் (மலையாளத்திலிருந்து வந்த) சந்திரமுகி ஒரு உதாரணம். இவற்றிலெல்லாம் பேய் இருக்கிறது என்றும் சொல்லமாட்டார்கள், இல்லை என்றும் சொல்ல மாட்டார்கள். நம் உறுதியின்மையை அழகாகப் பயன்படுத்திக் குழப்பி விடுவார்கள். மனித மனதின் ஆழங்களில் புதைந்திருக்கும் விபரீதக் கற்பனைகளுக்கு உருவம் கொடுக்கப்படுவதும் அதற்கு அம்மனமே அதிர்ச்சியூட்டும் வகையில் எதிர்வினையாற்றுவதுமே இத்திரைப்படங்களின் அடிநாதமாக இருக்கும்.
     மிகச் சமீபமாகப் பார்த்த தி எக்லிப்ஸ் (the eclipse) திரைப்படம் உளவியல் திகில் (psychological horror) வகையைச் சார்ந்தது.
முழுக்க அயர்லாந்திலேயே எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அயர்லாந்து தகவல் தொடர்பு நிறுவனமும், அயர்லாந்து திரைப்பட நிறுவனமும் இணைந்து வழங்கியுள்ளன. நம் ஊரில் அரசாங்கம் நிதி உதவி செய்து எடுக்கப்படும் படங்கள் உள்ளடக்கம் நன்றாக இருப்பினும் தொழில்நுட்ப ரீதியில் சற்று பின்தங்கியே இருக்கும். ஆனால் இப்படம் இரண்டிலுமே மிளிர்கிறது. நிறைய அயர்லாந்து நடிகர்களும், அவர்களது வித்தியாசமான ஆங்கில உச்சரிப்பும் படம் நெடுக இருக்கின்றன.
     கதை மைக்கேல் என்கிற ஒரு தோல்வியடைந்த எழுத்தாளருடையது. மனைவி அகால மரணமடைந்துவிட இரண்டு குழந்தைகளுடன் தனியாகத் தவித்துக் கொண்டிருக்கிறார். இரவுகளில் வீட்டுக்கு வெளியிலிருந்து யாரோ கண்காணிப்பதைப் போலவே உணர்ந்து அடிக்கடி எழுந்து கொள்கிறார். யாரோ நடக்கும் ஓசையும், பேசும் குரலும் இவருக்கு மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. இது ஏதேனும் அமானுஷ்யத்தின் செயலோ என்ற சந்தேகத்தில் ஆவிகளைப் பற்றி இணயத்தில் தேடிப் பார்க்கிறார். பேயறைந்த மாதிரி என்று சொல்வார்களே அதைப் போலவே திரிந்து கொண்டிருக்கிறார்.
     இந்த வேளையில் அயர்லாந்தில் கோப் (cobh) இலக்கியத் திருவிழா நடக்கிறது. உலகெங்கிலும் இருந்து எழுத்தாளர்களும், வாசகர்களும் வந்து குழுமுகிறார்கள். மிகுந்த பிரபலமடைந்த எழுத்தாளரான நிகோலஸும், தி எக்லிப்ஸ் என்ற நாவலை எழுதியுள்ள எழுத்தாளர் லீனாவும் அங்கு தங்கள் நாவலின் பக்கங்களை வாசகர்களுக்குக் படித்து காட்டும் நிகழ்வு நடக்கிறது. லீனாவுக்கு அயர்லாந்தில் தங்கும் காலம் வரை வேண்டிய உதவிகளைச் செய்வதற்காக மைக்கேல் நியமிக்கப்படுகிறார். லீனாவின் நாவல் ஆவிகளைப் பற்றியது. எனவே தன் அனுபவங்களைப் பற்றியும், தனது சந்தேகங்களைப் பற்றியும் லீனாவிடம் பேசுவதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆனால் லீனாவின் மேல் மையல் கொண்டு அவள் பின்னாலேயே நிகோலஸ் சுற்றி வருகிறார். அவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் போலத் தெரிகிறது. லீனாவை அடைவதற்காகத் தன் மனைவியை விவாகரத்து செய்யவும் தயார் என்கிறார் நிகோலஸ். நீ விவாகரத்து செய்துவிட்டு வா, பிறகு பேசிக் கொள்ளலாம் என்கிறாள் லீனா. மைக்கேல் லீனாவிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தும் கூட ஆவிகள் பற்றிப் பொதுவான கேட்கிறாரே தவிர, தன் சொந்த அனுபவங்கள் பற்றியோ, தன் மனைவியின் மரணம் குறித்தோ எதுவும் பேசுவதில்லை. சொல்லப் போனால் தன் மனைவி மறைந்ததை முதலில் மறைக்கிறார். பிறகு மனைவி எங்கு புதைக்கப்பட்டிருக்கிறாள் என்பதையும் மறைக்கிறார். லீனா தங்கியிருக்கும் இடத்தில் அவளை விட்டுவிட்டு வரும் வழியில் அவரது காருக்குள் கோரமுகத்தோடு ஒரு மனிதன் அவரை பயமுறுத்துகிறான், காரைத் தாறுமாறாக ஓட்டி எதன் மேலோ மோதி நிறுத்துகிறார். நடு இரவில் இன்னொரு கோர உருவம் அவரைப் பிடித்து இழுக்கிறது. சிலவேளைகளில் நடப்பவை கனவு போலும் தோன்றுகிறது.
     லீனா பின் நிகோலஸ் சுற்றுவதும், மைக்கேலின் திகில் அனுபவங்களும் தொடர்கின்றன. ஒரு நாள் தனிமையில் மைக்கேல் லீனாவிடம் அவளுக்கு ஆவிகள் பற்றிய நேரடி அனுபவம் இருக்கிறதா என்று கேட்கிறார். அவள் ஒரு நாள் இரவு தன் படுக்கையில் ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்ததாகவும், அவள் சற்று நேரம் தன்னையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மறைந்து விட்டதாகவும் சொல்கிறாள். அன்றிரவு மீண்டும் மைக்கேலை கனவில் ஆவி துரத்துகிறது. மறுநாள் காலை தன் மாமனாரைப் பார்க்கச் செல்கிறார் மைக்கேல்.  அவரது அறையைத் திறந்தவுடன் ரத்த வெள்ளத்தில் வழுக்கி விழுகிறார். மாமனார் படுக்கையில் இறந்து கிடக்கிறார். மைக்கேலுக்கு பதட்டம் அதிகரித்துவிட இதை லீனாவிடம் சொன்னால் மட்டுமே விடை கிடைக்கும் என்று அவளைச் சந்திக்கச் செல்கிறார். அவள் இருப்பிடத்தில் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த நிகோலஸ் கோபத்தில் அவரைத் தாக்க இருவருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது.
     மாமனாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வரும் மைக்கேலுக்கு இரவில் திடீரென்று விழிப்பு ஏற்பட, அருகில் அவர் மனைவி அமர்ந்திருக்கிறாள். அதிர்ச்சியில் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவள் மெல்ல எழுந்து வந்து அவர் மீது சாய்ந்து நெற்றியில் முத்தமிடுகிறாள். பிறகு எழுந்து போய் விடுகிறாள். மைக்கேல் அடக்க முடியாமல் குமுறிக் குமுறி அழுகிறார்.
     விடிந்து எழும் மைக்கேலுக்கு எல்லாம் பளிச்சென்று தெளிவான மாதிரி இருக்கிறது. மனதில் இருந்த முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டதைப் போலத் தெரிகிறது. இதுவரையில் தன்னை அச்சத்தின் ஆதிக்கத்துக்குள் வைத்திருந்தது தன் மனைவியின் பிரிவில் விளைந்த துக்கத்தை தாம் பூரணமாக வெளிப்படுத்திக் கொள்ளாததுதான் என்று உணர்கிறார். இலக்கியவிழா முடிந்து ஊர் சென்று விட்ட லீனா அவரது கதைகளை தனக்குத் தெரிந்த ஒரு பதிப்பாளரிடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் அவை வெளிவரும் என்று நம்புவதாகவும் தொலைபேசியில் அழைத்துச் சொல்கிறாள். மைக்கேலின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிப்பதைப் போலத் தெரிகிறது.
     மழைக்குளத்தின் கதைகள் என்ற புத்தகத்தின் கதையே திரைப்படமாகியிருக்கிறது. படம் நெடுக அயர்லாந்தின் மெல்லிய சாரலும், காற்றும் வீசும் காலநிலை விரிந்து கிடக்கிறது மனித மனமெனும் ரகசியக் கிடங்கில் ஆழப்புதைந்து கிடக்கும் நம் எண்ணங்களே விபரீதக் கற்பனைகளாக உருக்கொண்டு நம்மை துன்புறுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதை தி எக்லிப்ஸ் அழகாகத் தெரிவிக்கிறது. 

11 ஜூலை, 2010

மறதியின் நாயகன்

சமீபத்தில் ஹிந்தி கஜினி பார்த்தேன். தமிழ் கஜினியை ஏற்கனவே பார்த்திருந்தாலும் அதன் ஹிந்தி வடிவம் முற்றிலும் புதிய அனுபவத்தைத் தந்ததற்கு இரு காரணங்கள். ஒன்று ஆமிர் கானின் நடிப்பு. மற்றொன்று ஏ. ஆர். ரஹ்மானின் பின்னணி இசை. தமிழ் ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்திருந்த பின்னணி இசை இன்னும் காதில் நாராசமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ரஹ்மான் தன்இசையின் மூலம் சம்பவங்களுக்கு ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குகிறார். பாடல்கள் ஒன்றும் கேட்கும்படி இல்லையெனினும், பின்னணி இசை படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. சமீபத்தில் கே. டிவியில் பாபாவைப் பார்த்த போதுகூட அதுதான் தோன்றியது. இவ்வளவு சுமாரான படத்திற்கு lord of the rings லெவலுக்கு இசை அமைத்திருக்கிறாரே என்று. அதிலும் ரஜினியைப் பட்டம் துரத்தும் இடத்தில் terrific.

ஆமிர்கான் எப்போதும் போல் தன் பாத்திரத்தின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சூர்யா போல எடுத்ததெற்கெல்லாம் தலையை வெட்டிக் கொள்வதில்லை பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை
மறதி ஏற்படும்போது மட்டுமே அவர் முகம் மாறுகிறது. அதுவும் ஒரு மெல்லிய திகைப்புணர்ச்சி மட்டுமே முகத்தில் இழையோடுகிறது. இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என்று சொன்னால் நம்புகிற மாதிரி இருக்கிறது.  ஆனால் நம்ம ஊர் எம்.ஜி .ஆர் மாதிரி ஏன் அரைக்கை சட்டையை சுருட்டி விட்டுக் கொள்கிறார் என்றுதான் புரிய வில்லை. கடைசியில் வில்லன் ஆட்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போதே மறதி ஏற்பட்டு திகைத்து நிற்கும் தருணம் அருமை. தமிழில் போல வில்லனுக்கு இரட்டை வேடம் இல்லை. நிம்மதியாக இருந்தது. தமிழின் உச்சக்கட்டக் காட்சி உச்சகட்ட அருவெறுப்பு.  அசின் தமிழில்தான் நன்றாகச் செய்திருந்த மாதிரி இருந்தது. ஹிந்தியில் யாரோ தன்னைக் கவனிக்கிறார்கள் என்ற உணர்விலேயே நடித்திருந்தார்.
தமிழில் பார்த்ததைவிட ஹிந்தியில் பார்த்தபோது நிறைவான அனுபவமாக இருக்கிறது. ஆனால் இதே வகையில் எப்போதோ ஒரு ஃப்ரென்ச்சுப் படத்தைப் பார்த்தது ஞாபகம் வந்தது.

மேலும் வாசிக்க