23 மே, 2010

ஹர்ட் லாக்கர் - கொடிய கரங்கள் நெறிக்கும் குரல்வளைகள்



விபத்துகளும்,தீவிரவாதமும், வன்முறையும் அத்துமீறலும் தொலைக்காட்சியின் அன்றாடச் செய்திகளாகி நம்முடனேயே பயணித்துக் கொண்டிருப்பதால் அவற்றின் உண்மையான தாக்கம் பெரும்பாலான நேரங்களில் நம்முள் நிகழ்வதில்லை. சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், புகைமண்டலத்துக்கிடையில் ஒலிக்கும் அலறல்களையும் பாராமல், கேளாமல் எந்தச் சலனமுமின்றி சானல் மாற்றி கிரிக்கெட்டுக்கோ, நெடுந்தொடருக்கோ தாவி விடுகிறோம். மங்களூரு விமான நிலையத்தில் விமானம் பள்ளத்தாக்கில் விழுந்து எரிந்துபோன செய்தியைக் கேட்டவுடன் திடுக்கென்றிருந்தது. வருடாவருடம் நானும், என் மனைவியும் பங்களூரு புதிய விமானநிலையம் சென்று இறங்கி அங்கிருந்து ஈரோடு பயணிப்போம். விமான நிலையத்தில் சாப்பிட்ட வடையும், பொங்கலும், சாண்ட்விச்சும் இன்னும் ஞாபகம் இருக்கிறது. துபாயிலிருந்து பணி முடித்துத் திரும்பியவர்களும், அவர்கள் குழந்தைகளும், மனைவியரும், அவர்களை ஏந்திவந்த விமானிகளும், பணியாளர்களும் கணநேரத்தில் பொசுங்கிப் போய்விட்டதை நினைத்து நெஞ்சு கனக்கிறது. உயிரிழந்த அனைவருக்கும் கனத்த நெஞ்சுடன் கண்ணீர் அஞ்சலி. உயிர் பிழைத்த சிலர் உடலளவிலும், மனதளவிலும் பெரும் காயங்கள் ஏதுமின்றி விரைவில் குணமடைந்து சகஜ வாழ்விற்குத் திரும்ப இறையைப் பிரார்த்திக்கிறேன்.

மேற்கத்திய நாடுகளில் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தரையிறங்குவது தடைசெய்யப்படுவதைக் காண்கிறோம். சமீபத்தில் இந்தியாவில் இருந்து கிளம்பவேண்டிய விமானங்கள் கூட ரத்து செய்யப்பட்டன. லைலாப் புயலின் தீவிரத்தில் மழை ஆவேசமாய் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் தரையிறங்குவதற்குத் தகுதியான சூழ்நிலையில் விமான நிலயம் உள்ளதா என்று நிர்ணயம் செய்வதில் கவனக் குறைவு ஏற்பட்டுள்ளதோ என்று தோன்றுகிறது. ஊரே வெள்ளத்தில் மிதந்தாலும் சமாளித்துவிடலாம் என்ற அசட்டு நம்பிக்கையோடு வெளியே கிளம்பும் சராசரி இந்தியனைப் போலவே இந்திய விமானத்துறையும் இருந்து விட்டதா என்று தோன்றுகிறது.

கனமழை பெய்யவில்லை; விமானத்தில் பழுது இல்லை.; விமானி பல ஆயிரம் மணிகள் பறந்தவர் என்றெல்லாம் சொல்கிறார்கள். விமானதளத்தின் ரன்வே தரைமட்டத்திலிருந்து உயரத்தில் அமைந்துள்ளது. ரன்வே முடியும் இடத்தில் சட்டென்று ஒரு பள்ளத்தாக்கு அரம்பிப்பதாகவும், approaching speed சரியாக இல்லாததால் பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இப்போதுதான் கருப்புப்பெட்டி சிக்கியிருக்கிறது. விபத்துக்கான காரணங்கள் இன்னும் விவாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் தவிர்க்க ஆவண செய்தால் நன்று.

உயிரின் மதிப்பு இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவின் பல நாடுகளில் சட்டை செய்யப்படுவதில்லை. பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் பயங்கரவாதமும், வன்கொடுமைகளும் நம் முகத்தில் மாறிமாறி அறைந்துகொண்டேதான் இருக்கின்றன. எவ்வளவு வாங்கினாலும் நமக்குச் சொரணை வர வாய்ப்பில்லை. அந்த ரத்தபூமிகளில் போய், இடைவிடாது வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கும் உடல்களுக்கு நடுவே நின்று பார்த்தால்தான் அந்த வலி புரியும்.
2009ம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் பெற்ற ஹர்ட் லாக்கர் நமக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது. வெறிச்சோடிக்கிடக்கும் ஈராக் தெருக்கள்; அமைதியில் உறைந்து, மெல்ல,மெல்ல சிதைந்துகொண்டிருக்கும் கட்டிடங்கள், அவற்றுக்குள்ளிருந்து வெளியே அமெரிக்க வீரர்கள் நடத்திக்கொண்டிருக்கும் விளையாட்டை வேடிக்கை பார்க்கும் குழந்தைகளின் கண்கள்; எங்கு வேண்டுமானாலும் புதைக்கப்பட்டிருக்கும் சாத்தியம் கொண்ட குண்டுகள்; நெருப்பு, ரத்தம் என்று படம் முழுக்க தீவிரவாதத்தின் கரங்கள் வரைந்த கோலங்கள்.

ஒரு புதைகுண்டைச் செயலிழக்கச் செய்யும் முயற்சியில் தோற்று உயிர்விடும் வெடிகுண்டு நிபுணரோடு படம் ஆரம்பிக்கிறது. அவருக்குப் பதிலாக ஈராக்கில் அமெரிக்க ராணுவக் குழுவில் வெடிகுண்டு நிபுணராக ஜேம்ஸ் வந்து சேருகிறான். உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சல் நிறைந்தவன். அந்த பூமியில் எல்லாருமே அப்படித்தான் என்றாலும் இவனுக்குச் சாவோடு விளையாடுவது ரொம்பப் பிடித்திருக்கிறது. அபாயகரமான விஷயங்களை அநாயசமகச் செய்து முடிக்கிறான். கண்ணுக்குத் தெரியாத இடங்களில் புதைத்து வைக்கப் பட்டிருக்கும் குண்டுகளைக் கண்டறிவதும், அவற்றைச் செயலிழக்கச் செய்வதுமே அவனது வேலை.

படம் நெடுக வெயில் அனலாக வீசிக்கொண்டே இருக்கிறது. புழுதி பறந்து கொண்டே இருக்கிறது. எங்கு நோக்கினும் மணல். ஜேம்ஸ் குண்டுகளைச் செயலிகச் செய்கையில் நிகழும் மௌனம் நம்மைப் பதைக்க வைக்கிறது. ஆனால் அந்நகர மக்கள் மட்டும் வீடுகளுக்குள்ளிருந்து வெகு இயல்பாக எட்டிப் பார்க்கிறார்கள். துப்பாக்கிகளுக்கோ, டாங்கர்களுக்கோ அவர்கள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.. ஜேம்ஸ் போர்ன் டிவிடி விற்கும் சிறுவனுடன் நட்பாகி விளையாடும்போதே பின்னால் இந்தப் பையன் கோரமாகச் சாகப்போகிறான். என்று தெரிந்து விடுகிறது. ஆனால் அப்படிப் பார்த்தால் படத்தில் வரும் எல்லாருக்குமே அது பொருந்தும். ஒரு இடிந்த கட்டிடத்துக்குள் அந்தப் பையன் வயிற்றைப் பிளந்து உள்ளே குண்டு வைத்திருக்கிறார்கள். ஜேம்ஸ் அவனை எடுத்துவந்து உரிய முறையில் அடக்கம் செய்கிறான்.

படத்தின் இசையை மார்கொ பெல்ட்ராமியும், பக் சாண்டர்ஸும் இணைந்து அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் மௌனமும், குண்டுச் சத்தமும், டாங்கர் வண்டிகளின் ஓசையுமே இசையாக இருக்கின்றது. நீண்ட தூரம் தாக்கும் துப்பாக்கிகளைக் கொண்டு பாலைவனம் ஒன்றில் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் காட்சி அமைப்பும், இசையும் நேர்த்தி. பல ஆயிரம் அடிகளுக்கு அப்பாலுள்ள ஒரு சிறிய கட்டிடத்திலிருந்து சுடும் மூன்று பேரை இங்கிருந்து தாக்குகிறார்கள். சண்டை பலமணிநேரம் நடக்கிறது. வெயில் சுட்டெரிக்கிறது. உடலின் நீர் அளவு குறைந்து ஜேம்ஸின் குழுத்தலைவன் மயங்குகிறான். இருப்பினும் கை துப்பாக்கியிலிருந்து விலகுவதில்லை. மீண்டும், மீண்டும் சுதாரித்துக் கொண்டு குறிபார்க்கிறான். மேலும் தோட்டா தேவை என்ற நிலையில் ஒரு வீரன் இறந்த கூட்டாளியின் சட்டைப்பையிலிருந்து தோட்டாக்களை எடுத்து அதில் படிந்திருக்கும் ரத்தத்தை நக்கி சுத்தம் செய்து கொடுக்கிறான்.

இன்னொரு காட்சியில் ஒரு அப்பாவி மனிதன் உடலெங்கும் ஜெலட்டின் குச்சிகள் கட்டப்பட்டு நடுத்தெருவில் விடப்படுகிறான். உடலைச் சுற்றி வளையங்கள் மாட்டி பெரிய பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றன. டைம்பாம் வெடிப்பதற்குள் ஜேம்ஸ் பூட்டுகளை அறுத்து அவனைக் காப்பாற்ற முயற்சிக்கிறான். முடியவில்லை. சில செகண்டுகளே இருக்கும் நிலையில் என்னை மன்னித்துவிடு என்று அவனிடம் கெஞ்சுகிறான். அங்கிருந்து அனைவரும் ஓடிவிட, அந்த மனிதன் வான் நோக்கித் தலையுயர்த்தி இறைவனை வணங்குகிறான். ஒரு மைக்ரோ விநாடி அமைதிக்குப் பின்………………………… வெடித்துச் சிதறுகிறான்.


மார்க் போல் எழுதி ஜேம்ஸ் காமரூனின் மனைவி கேத்ரின் பிகெலோ இயக்கியுள்ள இந்தப் படம் தீவிரவாதத்தின் கொடிய கரங்கள் யுத்தபூமிகளின் குரல்வளையை நெறித்துக் கொண்டிருப்பதை அப்படியே பதிவு செய்திருக்கிறது. டெல்டா கம்பெனியின் சுழற்சி முடிந்து ஜேம்ஸ் நாடு திரும்புகிறான். தன் குழந்தையைக் கொஞ்சுகிறான்; வீட்டைச் சுத்தம் செய்கிறான். சில நாட்களிலேயே அடுத்த சுழற்சி ஆரம்பிக்கிறது. இன்னொரு யுத்தபூமியில் வெடிகுண்டு கவச உடையை மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். பயங்கரவாதமும், அதற்கெதிரான போராட்டமும் முடிவற்ற தொடர்கதையாகவே இருக்கின்றது.

20 மே, 2010

வாளிப் பட்டியல்


வயோதிகத்தின் விளிம்பிலிருக்கிற ஒவ்வொருவருக்குள்ளும். தங்களது நாட்கள் எண்ணப்படுவது பற்றிய விழிப்புணர்வு இருந்து கொண்டே இருக்கும். இந்த நாட்களில் ஒவ்வொரு தினமும் ஒரு பரிசுப்பொருள் போலத் துலங்குகிறது என்கிறார் சுஜாதா. தன் தேக ஆரோக்கியம் இப்போதுபோல் முன்னெப்போதும் மேன்மையாக இருந்ததில்லை என்று தன் கடைசி நாட்களில் சுந்தரராமசாமி எழுதுகிறார். குழந்தைப் பருவத்தில் நம்மை விட்டுத் தொலைந்துபோன தெய்வீகத்தின் பிரசன்னம் முதுமையின் இறுதிநாட்களில் குடியேறிவிடுகிறது. வாக்கியங்கள் நிதானமாகவும், எளிமையாகவும் வெளிப்படுகின்றன. வாழ்வை அணுகும் முறை நேர்த்தியாகின்றது. சொற்படிக் கேட்க மறுக்கின்ற இரைப்பைக்கும், இருதயத்துக்கும் ஏற்றார்போல் அன்றாட நடவடிக்கைகள் மென்மையாகின்றன.
செத்துப் போவதற்குமுன் என்னென்ன செய்துவிட வேண்டுமென்ற ஆசைகளின் பட்டியல் எல்லோரிடமும் இருக்கிறது. ஒரு நாவல் எழுதிவிட வேண்டும்; எகிப்து பிரமிடை, சீனப் பெருஞ்சுவரை, தாஜ்மஹாலைப் பார்த்துவிட வேண்டும். நகரத்தின் எல்லையிலாவது ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்பன போன்று. நம் வீட்டுக் கிழவிகள் கூட கொள்ளுப் பேத்தியின் கல்யாணத்தைப் பார்த்துவிட்டுத்தான் மண்டையைப் போட வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். எல்லாருக்குமே அந்தக் கடைசித் தருணத்தில் நுழைவதற்குள் முடித்துவிட வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.
திடீரென்று ஒருநாள் உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்னும் மூன்று மாதங்கள்தான் வாய்தா என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்? மத்திம வயதிலிருக்கிறவர்களுக்கு ஏற்படக் கூடிய பதற்றமும், நடுக்கமும், விரக்தியும் குறித்து வேறெப்போதாவது பேசிக்கொள்ளலாம். ஆனால் ஏற்றுகொண்டேயாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிற, மூட்டையைக் கட்டிக் கொண்டு புறப்படவேண்டிய நிலையிலிருக்கிற முதுமையின் விளிம்பிலிருக்கிற மனிதர்கள் இதை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?
ஜாக் நிக்கல்சன், மார்கன் ஃப்ரீமன் இணைந்து நடித்துள்ள பக்கெட் லிஸ்ட் திரைப்படத்தில் இருவருக்கும் இதுதான் பிரச்னை. கார் மெக்கானிக்காகப் பணிபுரியும் கார்ட்டருக்கு (மார்கன் ஃப்ரீமன்) இன்னும் மூன்று மாதங்கள்தான் என்று மருத்துவர் சொல்லிவிடுகிறார். அவர் அனுமதிக்கப் பட்டிருக்கும் மருத்துவமனையின் உரிமையாளர் கோடீஸ்வரர் எட்வர்ட் கோல் (ஜாக் நிக்கல்சன்). அறிமுகக் காட்சியிலேயே அவர் எப்படிப்பட்டவர் என்று காட்டிவிடுகிறார்கள். தன் மருத்துவமனையில் ஒரு அறைக்கு இருநோயாளிகளை அனுமதித்து அவர்கள் தனிமையைப் பாதிக்கிறார் என்று அவர் மீது வழக்கொன்று நீதிமன்றத்தில் வருகிறது. தனக்கு விருப்பமான ஃபில்டர் காஃபியைக் அருந்தியவாறே (தங்கநிற ஃபில்டரிலிருந்து நேரடியாக இறக்கிக் குடிக்கிறார்). தன் முடிவை மாற்றிக்கொள்ள முடியாது என்று வாதாடிக் கொண்டிருக்கும்போதே இருமி ரத்தவாந்தி எடுக்கிறார். அவரது மருத்துவமனையிலேயே அவரை அனுமதிக்கிறார்கள். அவருக்குப் பக்கத்துப் படுக்கையில் கார்ட்டர்.
தன்னைத் தனி அறைக்குக் கொண்டுசெல்ல அவர் நிர்பந்திக்கும்போது, நீதிமன்றத்தில் வாதாடியது நீங்கள்தான்; இங்கேயே இருங்கள், இல்லையெனில் தீர்ப்பு பாதகமாகிவிடும் என்கிறார்கள்.
எட்வர்டுக்கு மூளை அறுவைச் சிகிச்சை நடக்கிறது. சிகிச்சையின் முடிவில் அவருக்கும் நாள்குறித்து விட்டது தெரியவருகிறது. இருப்பினும் அவர் கவலைப்பட்டது மாதிரித் தெரியவில்லை. வகைவகையான உணவுகளை உண்டுவிட்டு நாள்பூரா வாந்தி எடுக்கிறார். எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிற மருத்துவருக்கு நடுவிரலைக் காட்டுகிறார். இன்னமும் தன் மேலாளரைப் பெயர் மாற்றி தாமஸ் என்றுதான் அழைக்கிறார்.
இறந்து போவதற்கு ஆங்கிலத்தில் ‘வாளியை உதைத்தல் ‘(kicking the bucket) என்று ஒரு மரபுத்தொடர் உண்டு. ஒருநாள் பக்கத்து படுக்கையிலிருக்கும் கார்ட்டர் பக்கெட்லிஸ்ட் என்று தலைப்பிட்டு ஏதோ எழுதிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார் எட்வர்ட். என்னவென்று கேட்க ஒன்றுமில்லை என்கிறார். சாவதற்கு முன்னால் அவர் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியல் அது என்று தெரியவருகிறது. “இங்கபார், எங்கிட்ட பணம் இருக்கு, சாவதற்கு முன்னால் செய்து பார்க்க நினைக்கும் விஷயங்களை நாம் ஏன் செய்து பார்க்கக் கூடாது என்கிறார் கண்ணைச் சிமிட்டியபடியே.
முதலில் தயங்கும் கார்ட்டர் பின்பு ஒப்புக்கொள்கிறார். மனைவியின் அழுகையையும், அரற்றலையும் மீறி எட்வர்டுடன் புறப்படுகிறார் கார்ட்டர். இருவரும் சேர்ந்து பல ஆயிரம் அடி உயரத்தில் விமானத்திலிருந்து குதிக்கிறார்கள்; சீனப்பெருஞ்சுவரில் புல்லட் ஓட்டுகிறார்கள்; பிரமிடின் உச்சியில் அமர்ந்து வியர்க்கிறார்கள்; தாஜ்மஹாலின் வராந்தாக்களில் உலாவியபடி, தங்களை எரித்தால் அந்தச் சாம்பலை என்ன செய்வது என்று விவாதிக்கிறார்கள். ( இந்தியாவில் அவர்களைச் சூழ்ந்து கொள்கிற இந்தியக் குழந்தைகளையும், அவர்களுக்கு எட்வர்ட் வீசி எரிகிற காசுகளையும் காட்டிய போது எரிச்சலாக இருந்தது.) இமயமலை மீதுள்ள புத்தவிஹாரத்தில் வழிபடுகிறார்கள். ஏதோ ஒரு மலைச்சிகரத்தில் ஏறமுயற்சித்து, காலநிலை காரணமாகக் கைவிட்டுவிடுகிறார்கள்.
ஆடம்பரமான சொகுசு ஓட்டலில் தங்கியிருக்கும்போது, (உங்கிட்ட எவ்வளவுதான் பணம் இருக்கு? – கார்ட்டர்) கார்ட்டரின் மனைவி எட்வர்டை தொலைபேசியில் அழைத்து என் கணவனை என்னிடம் திருப்பிக் கொடு என்கிறாள். ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஒரே பெண்ணுடன் வாழ்கிற, வேறு பெண்ணுடன் தொடர்பே கொள்ளாத கார்ட்டரைப் பார்த்து (நிச்சயமா இதுவும் லிஸ்டில் இருக்கணும்) வரிசையாய் மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டுத் தனியாய் வாழும் எட்வர்ட் வியக்கிறார். அவர் ரகசியமாய் ஒரு பெண்ணை கார்ட்டரிடம் அனுப்பி வைக்க, அவருக்கு மனைவி குழந்தைகளின் ஞாபகம் வந்து விடுகிறது. இறக்கும்போது நமக்குப் பிரியமானவர்கள் மத்தியில் இருப்பதைவிட வேறெதுவும் தேவையில்லை என்று கார்ட்டர் உணர்கிறார். உடனே ஊர்திரும்ப வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறார்.
அமெரிக்கா வந்ததும் கார்ட்டர் எட்வர்டுக்குத் தெரியாமல் காரை அவர் மகள் வீட்டுக்குச் செலுத்தச் செய்கிறார். எட்வர்ட்மீது கோபம் கொண்டு அவரைப் பிரிந்து நீண்ட நாட்களாய் வாழ்கிறாள் அவர் மகள். தன்னைப் போலவே மரணத்துக்கு முன் எட்வர்ட் தன் மகளுடன் வாழவேண்டுமென்று நினைக்கிறார் கார்ட்டர். ஆனால் எட்வர்ட் மறுத்து, கோபமடைந்து போய்விடுகிறார். கார்ட்டர் வீடு திரும்பி குடும்பத்தோடு இணைகிறார். அவர்களோடு உண்டு மகிழ்கிறார். எட்வர்ட் தனிமையில் புழுங்குகிறார். அடுத்த நாளே தீவிரமாய் உடல் நலம் குன்றி கார்ட்டருக்கு அறுவைச் சிகிச்சை நடக்கிறது. அவர் எட்வர்டுக்கு எழுதிய கடிதத்தில் அவர் தன் மகளோடு சேர வேண்டுமென்ற விருப்பத்தை வெளியிடுகிறார் கார்ட்டர். தனிமையின் கொடுமையைத் தீவிரமாய் உணர்ந்திருக்கும் எட்வர்ட் நண்பனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய மகளோடு சேருகிறார். சிகிச்சை பலனின்றி கார்ட்டர் இறக்கிறார்.
இறுதிச்சடங்கில் கார்ட்டரின் இறுதிமாதங்கள் தன் வாழ்வில் மிகச்சிறந்த நாட்கள் என்று நினைவுகூறுகிறார் எட்வர்ட். அவர் கண்களில் துளிர்க்கும் கண்ணீரில் தூய்மையான நட்பு வழிகிறது.
ஜாக் நிக்கல்சனும், மார்கன் ஃப்ரீமனும் இணைந்து ஒரு இனிமையான அனுபவத்தைக் கொடுக்கிறார்கள். முதியவர்கள் உலகிற்குள் புகுந்து பார்த்ததுபோல் இருக்கிறது. மரணத்தை வெகுமென்மையாய் எதிர்கொள்ளும் இருவரின் மனமுதிர்ச்சியும் நமக்கும் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

அற்புதமான நாவல்கள்

இருபதாம் நூற்றாண்டில், அதுவும் அதன் பின் ஐம்பது ஆண்டுகளில், இந்தியாவில் பல அற்புதமான நாவல்கள் வெளிவந்துள்ளன. பல நல்ல இலக்கியங்கள், தேர்ந்த மொழி பெயர்ப்பாளர்களின் கடின உழைப்பால் தமிழ் இலக்கிய உலகிற்கு வந்தன.

அன்புள்ள ஜெகதீஷ் குமார்,நீங்க கேட்ட பட்டியல்:

1. கங்கைப் பருந்தின் சிறகுகள் - லக்ஷ்மீ நந்தன் போராவங்கம்
2. ஆரோக்கிய நிகேதனம் - தாரா சங்கர் பானர்ஜி
3. கொல்லப்படுவதில்லை - மைத்ரேயி தேவி
4. நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்த்யோபாத்யாய்
5, பதேர் பாஞ்சாலி - விபூதி பூஷண்பந்த்யோபாத்யாய்குஜராத்தி
6. வாழ்க்கை ஒரு நாடகம் - பன்னாலால் படேல்இந்தி
7. சதுரங்கக் குதிரைகள் - கிரிராஜ் கிஷோர்
8. தர்பாரி ராகம் - ஸ்ரீலால் சுக்லகன்னடம்
9. ஒரு குடும்பம் சிதைகிறது - எஸ். எல். பைரப்பா
10. மண்ணும் மனிதரும் - சிவராம காரந்த்
11. முதலில்லாததும் முடிவில்லாததும் - ஸ்ரீரங்க
12. சம்ஸ்காரா - யு. ஆர். அனந்தமூர்த்தி
13, சிக்கவீர ராஜேந்திரன் - மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்மலையாளம்
14. அண்டைவீட்டார் - பி. கேசவதேவ்
15. பாத்தும்மாவின் ஆடும் இளம்பருவத்தோழியும் - வைக்கம் முகமது பஷீர்.
16. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரப்பிள்ளை
17. மீசான் கற்கள் - புனத்தில் குஞ்ஞப்துல்லாமராட்டி
18. பங்கர்வாடி - வெங்கடேஷ் மாட்கூல்கர்
19. யயாதி - வி. எஸ். காண்டேகர்பஞ்சாபி
20. வெண்குருதி - நானக் சிங்தெலுங்கு
21. அற்ப ஜீவி - ஆர்.விஸ்வனாத சாஸ்திரிஉருது
22. அக்னி நதி - குர் அதுல் ஐன் ஹைதர்
thanks sammuvam,thanks baski reviews

19 மே, 2010

இ20 –உலகக் கோப்பை 2010 – தொடர்ந்து பொய்யாக்கப்படும் எதிர்பார்ப்புகள்










இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2010க்கான 20-20 உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. கிரிக்கெட் என்ற ஜென்டில்மேன் விளையாட்டைக் கண்டுபிடித்த நாடு ஒரு உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதற்கு இத்தனை வருடங்கள் பிடித்தது ஆச்சரியம்தான். உலகக் கோப்பைப் போட்டிகளின் தொடக்கத்தில் இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. கே.பி. ஒருவரைத்தவிர நட்சத்திர அந்தஸ்து கொண்ட வீரர்கள் இல்லாத இங்கிலாந்து அணியின் பலம் இம்முறை அவர்களின் துவக்கப் பந்துவீச்சு மற்றும் களப்பணி (அதாவது ஃபீல்டிங்). ரயன் சைட்பாட்டம், ப்ராட் அப்புறம் இன்னொருத்தர் பேர் ஞாபகம் வரமாட்டேனென்கிறது. சுழல் பந்து வீச்சு கிலோ என்ன விலை என்று கேட்கிற அணியின் ஸ்வான் கூட நன்றாக வீசுகிறார். இறுதிப் போட்டியில் முதல் பத்து ஓவர்களின் நாற்பத்துச் சொச்சம் ரன்களை மட்டுமே கொடுத்தார்கள். அடுத்த பத்தில் நூறு ரன்கள் ஒழுகின. (அதுதான் ஆஸ்திரேலியா)
துவக்க ஆட்டக்காரர்கள் கீஸ்வெட்டெர் மற்றும் லம்(ப்) இருவருமே நன்றாக ஆடுகிறார்கள். க்ளார்க்கை அவுட்டாக்க காலிங்வுட்டின் ஒரு கேட்ச் இன்னும் மனசிலேயே நிற்கிறது. ஆங்கிலேய அணி மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள். ஆஸ்திரேலிய அணியினர் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்து ஆடவில்லை என்று ஒத்துக் கொள்வதற்காகவாவது இந்த மாதிரித் தோல்விகள் அவர்களுக்குத் தேவை.




பெண்கள் அணியின் உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவிற்கு. அசத்தலான நகம் கடிக்கும் முடிவு. கிவி வீராங்கனைகள் உயிரைக் கொடுத்துப் போராடினார்கள். கடைசி பந்தில் ஐந்து ரன் வித்தியாசத்தில் தோற்றனர். வெறும் நூற்றுச் சொச்ச ரன்களை மட்டுமே எடுத்து அதை வெற்றிகரமாகப் பாதுகாத்தது ஆஸி. இரு அணியினரின் களப்பணியும், இந்திய (ஆண்கள்) அணியினுடையதைவிடச் சிறப்பாக இருந்தது. ஆஸி அணித்தலைவர் மைக்கேல் க்ளார்க் தலைமையில் எல்லா ஆஸி ஆண் வீரர்களும் பெண்கள் இறுதிப் போட்டியைப் பார்த்து நகம் கடித்தனர்; தலைமேல் கை வைத்தனர்; துள்ளிக் குதித்து உற்சாகத்தை பகிர்ந்து கொண்டனர்.
எனக்கென்னமோ இ20 உலகக் கோப்பை வருடத்திற்கொருமுறை வருவது சரியாகப்படவில்லை. கிரிக்கெட்டை அழகான நிலையற்ற தன்மைகளின் விளையாட்டு என்பார்கள். அது இ20ல் மிக அதிகம். கோப்பை வாங்கி ஒரு பிறந்தநாள் கொண்டாடுவதற்குள் அந்த மகிழ்ச்சியை இன்னொரு அணி பறித்து விடுகிறது. குட்டி அணிகளுக்கெல்லாம் இ20லாவது பெரிய அணிகளுடன் ஆடும் வாய்ப்பு கொடுக்கப் பட வேண்டும். நாலு வருடத்துக்கொருமுறை 24 அணிகளுடன் ஆடினாலென்ன?
இந்திய அணி எல்லாரும் எதிர்பார்த்த மாதிரியே விளையாடியது. சூப்பர் 8 ல் நல்ல வேளை மூன்று போட்டிகள்தான். மூன்றிலும் தோல்வியை தழுவியது. தோனியின் செல்லப் பிள்ளைகளான மணிக்கட்டு கழண்டு போன யுவராஜ், உள்ளூர்ப் புலி யூசுஃப், திடீர் நட்சத்திரம் விஜய், அனைவருமே அவரை ஏமாற்றிவிட்டனர். அணிக்குள் வந்ததிலிருந்து நன்றாக பந்து வீசிக்கொண்டிருந்த ஜடேஜா பலிகடா ஆனார். ஐ.சி.சி விருது வாங்கின காம்பீர் தடுமாறியதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ரன் எடுக்க வேண்டும் என்பதைவிட, தனக்கு ஷார்ட்பிட்ச் பந்தை ஆடத்தெரியும் என்று பிறருக்கு நிரூபிக்க வேண்டுமென்பதற்காகவே ஆடியதைப் போலிருந்தது. ராய்னா நன்றாக ஆடினார். மற்றவர்கள் மதுபான விடுதியில் ரகளை செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு வருடத்தில் சில ஒருநாள் போட்டிகளை மட்டுமே அதுவும் வேற்று நாட்டில்தான் ஆட முடிகிற பாகிஸ்தான் மூன்று உலககோப்பை அரையிறுதிப் போட்டிகளுக்கும் தேர்வாகியிருக்கிறது.
முதல் கோப்பையையே கைப்பற்றிய கிரிக்கெட் வல்லரசான இந்தியா, கடந்த இருஆண்டுகளிலுமே சொதப்பிக் கொண்டுதான் இருக்கிறது. அதனாலென்ன? இந்தா, அப்பாவி ஜிம்பாப்வே இருக்கிறது, ஆசிய கோப்பை இருக்கிறது. அப்புறம் டெஸ்ட் தகுதியைக் காப்பாற்றிக் கொள்ள ஆஸ்திரேலியாவை வேறு அழைத்திருக்கிறோம். அதெல்லாம் சீக்கிரம் மறந்து போய் விடும்.

15 மே, 2010

தி ரீடர் - உள்ளே புதைந்திருக்கும் ரகசியங்கள்


The Reader

கேட் வின்ஸ்லெட் 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் வென்ற The reader ஜெர்மனியில் நாற்பதுகளில் ஆரம்பித்து தொண்ணூறுகளில் முடிகிறது. பதினாறு வயதான பள்ளிச் சிறுவன் மைக்கேல் உடல் நலம் குன்றியபோது வீட்டுக்குக் கொண்டு சென்று உதவிய முப்பத்தாறு வயது ஹன்னாவுக்கு நன்றி சொல்ல அவள் வீட்டுக்குச் செல்கிறான். அவள் உடைமாற்றும் போது அவளைக் காமப்பார்வை பார்க்க, இருவருக்கும் ரகசியத் தொடர்பு ஏற்பட்டு தொடருகிறது. ஒவ்வொரு சந்திப்பிலும் உறவுக்கு முன் அவளுக்கு ஏதாவது புத்தகத்தைப் படித்துக் காட்ட வேண்டும். ஹோமரின் ஒடிஸ்ஸியையும், ஆன்டான் செகாவும், இன்னபிற நூல்களையும் அவன் படித்துக் காட்ட அவள் கேட்டு மகிழ்கிறாள். அழுகிறாள். அவளைப் படிக்கச் சொல்லும் போது அவள் தனக்குக் கேட்கவே பிடித்திருக்கிறது என்கிறாள். தனக்கு எழுதப் படிக்கத்தெரியவில்லை என்கிற ஏக்கம் அவளுக்குள் இருந்துகொண்டே இருக்கிறது.

இருவரும் கணவன் மனைவி போலவே நடந்து கொள்கிறார்கள். சைக்கிளில் ஊர்சுற்றுகிறார்கள். தேனீர் விடுதியில் பரிமாறுபவள் முன்பு ஹன்னாவை முத்தமிட்டு, இவள் என்னுடையவள் என்று பெருமையாக அறிவித்துக் கொள்கிறான் மைக்கேல். இப்படியே நாட்கள் கழிகின்றன. ஒருமுறை அவள் தீடீரென்று அவனை விட்டுப் போய் விடுகிறாள். மைக்கேல் உடைந்து போகிறான்.

சில வருடங்கள் கழித்து மைக்கேல் சட்டக்கல்லூரியில் சேருகிறான். மாணவர்கள் வழக்கு ஒன்றைப் பார்வையிட நீதிமன்றம் செல்கிறார்கள். அங்கு குற்றவாளிக் கூண்டில் ஹன்னா நிற்கிறாள். ஹிட்லரின் மரண அணிவகுப்பில் பாதுகாவலராக அவள் பணியிலிருந்த போது சர்ச்சுக்குள் அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட 300 கைதிகள் பற்றிய வழக்கு அது. அவளோடு சேர்ந்து மேலும் சில பாதுகாவலர்களும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். நீதிபதியின் கேள்விகளுக்கு ஹன்னா அளிக்கும் நேர்மையான, அப்பாவித்தனமான பதில்கள் பிற பாதுகாவலர்களுக்கும் அவளுக்கும் பாதகமான தீர்ப்பைத் தரும் என்று அஞ்சுகிறார்கள் மற்றவர்கள். எனவே இந்த சம்பவம் ஹன்னாவின் தலைமையிலேயே அவள் ஆணைப்படியே நிகழ்த்தப்பட்டது என்று அனைவரும் கூறுகிறார்கள். நீதிபதி அது சம்பந்தப்பட்ட ஒரு கடிதத்தை எழுதியது நீயா என்று ஹன்னாவைக் கேட்கிறார். அவள் இல்லையென்று மறுக்க, அவள் கையெழுத்தைப் பரிசோதிப்பதற்காக ஒரு தாளைக் கொடுத்து அவளை எழுதச் சொல்கிறார்கள். ஹன்னா தனக்கு எழுதப் படிக்கத்தெரியாது என்று ஒத்துக் கொள்ளத்தயாராயில்லை. தான்தான் அந்தக் கடிதத்தை எழுதியதாக ஒப்புக் கொள்கிறாள். அவளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது.

அவள் படிப்பறிவற்றவள் என்று தெரிந்த மைக்கேல் அந்த வழக்கு நடந்த காலம் முழுவதும் அங்கிருந்தும் அவ்வுண்மையை வெளிப்படுத்துவதில்லை. தனக்குச் சாதகமான ஒரு உண்மையை குற்றவாளியே மறைக்க நினைக்கும் போது, தான் எவ்வாறு அதை வெளியிடுவது என்று தன் பேராசிரியரிடம் கேட்கிறான் மைக்கேல்.

வழக்கு முடியும் வரை அவளைச் சந்திப்பதைத் தவிர்த்து விடுகிறான் மைக்கேல். காலம் ஓடுகிறது. அவள் ஞாபகத்தைத் தவிர்ப்பதற்காகவே நீண்ட காலம் செல்லாதிருந்த சொந்த ஊருக்குத் தன் விவாகரத்துச் செய்தியைப் பெற்றோரிடம் சொல்வதற்காகச் செல்கிறான். அங்கு அவன் பார்க்கும் ஹன்னாவுக்குப் படித்துக் காட்டிய புத்தகங்கள், அவள் நினைவுகளை மீண்டும் கிளறிவிடுகின்றன. எல்லாப் புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு திரும்புகிறான். வெறி பிடித்தவன் போல எல்லாப் புத்தகங்களையும் அவன் குரலில் பேசிப் பதிவு செய்து ஹன்னாவுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறான்.

ஹன்னாவுக்கு கேசட்டுகளைப் பார்த்து ஒரே மகிழ்ச்சி. நூலகத்திலிருந்து புத்தகங்கள் வாங்கி, அந்த கேசட்டுகளைப் போட்டு மெல்ல மெல்ல எழுதக் கற்றுக் கொள்கிறாள். வாழ்வில் முதல் முதலாக மைக்கேலுக்கு இரண்டுவரிகளில் ஒரு கடிதம் எழுதுகிறாள். அதைப் படித்த மைக்கேல் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், அந்தக் கடிதத்திற்கு பதிலும் போடாமல் இருந்து விடுகிறான். அவனை பதில் எழுதக் கேட்டு ஹன்னாவிடமிருந்து வரும் எந்தக் கடிதத்தையும் அவன் பொருட்படுத்துவதேயில்லை.

ஹன்னா விடுதலையாகும் தருணத்தில், சிறைஅதிகாரிகள் மைக்கேலைத் தொடர்பு கொண்டு அவன் ஒருவன் மட்டுமே ஹன்னாவுடன் தொடர்பிலிருப்பவன் என்பதால், ஹன்னா விடுதலையான பிறகு அவளது எதிர்காலத்துக்கு அவனே பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்கள். முதலில் தவிர்க்க முயற்சிக்கும் மைக் பிறகு ஏற்றுக்கொண்டு அவளை வந்து சந்திக்கிறான். மைக் அவளிடம் பட்டும் படாமல் பேசுவதும், தன்னைத் தொட்ட அவள் கையை விலக்கிக் கொண்டதையும் கண்ட ஹன்னா மெலிதாக அதிர்கிறாள். அடுத்த வாரம் அவளை அழைத்துச் செல்ல மைக் வரும் போது அவள் தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிகிறான். அவளது அறையில் அவள் கைப்பட எழுதி சுவற்றில் ஒட்டி வைத்த அவன் படித்துக் காட்டிய கதை வரிகளைப் படிக்கும் போதுதான், தனது குரலைக் கொண்டு அவள் எழுதக் கற்றுக்கொண்டது தெரிய வருகிறது. அங்கேயே அமர்ந்து அழுகிறான். தான் சேமித்து டீத்தூள் டப்பாவில் வைத்திருந்த ஏழாயிரம் மார்க்குகளை 300 பேர் கொலையுண்ட சம்பவத்தில் பாதிக்கப் பட்ட ஒருவரின் பெண்ணுக்குச் சேர வேண்டுமென்று உயில் எழுதி வைத்திருக்கிறாள். மைக் அதை உரியவரிடம் கொண்டு சேர்க்கும் போது தனக்கும், ஹன்னாவுக்கும் இடையிலான தொடர்பு பற்றிச் சொல்கிறான்.

மைக் எதனால் அவள் கடிதங்களுக்குப் பதிலளிப்பதில்லை. எதனால் அவளைத்தவிர்க்க நினைக்கிறான் என்று நேரடியாக சொல்லப்படுவதில்லை. வழக்கின் போது கடித்தத்தை எழுதியது தான்தான் என்று ஒப்புக்கொண்ட ஹன்னா, மைக்குக்கு முதல் கடிதம் எழுதும் போது, அவள் தனது ஒலிநாடாவை கேட்டுத்தான் எழுதக்கற்றுக் கொண்டாள் என்று மைக்குக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை உண்மையில் அந்தக் கடிதத்தை ஹன்னாவே எழுதி அந்த சம்பவம் நிகழக் காரணமாக இருந்திருப்பாளோ என்று மைக் நினைத்திருக்கலாம்.

மிக அழகான கதை. காமத்தின் அடிப்படையில் உருவாகும் ஒரு தொடர்பு வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. எல்லாருடைய உள்ளத்திலும் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ரகசியங்கள் வாழ்நாள் முழுக்க அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் என்பதன் ஒரு சிறிய உதாரணம்தான் the reade

மேலும் வாசிக்க