15 மே, 2010

தி ரீடர் - உள்ளே புதைந்திருக்கும் ரகசியங்கள்


The Reader

கேட் வின்ஸ்லெட் 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் வென்ற The reader ஜெர்மனியில் நாற்பதுகளில் ஆரம்பித்து தொண்ணூறுகளில் முடிகிறது. பதினாறு வயதான பள்ளிச் சிறுவன் மைக்கேல் உடல் நலம் குன்றியபோது வீட்டுக்குக் கொண்டு சென்று உதவிய முப்பத்தாறு வயது ஹன்னாவுக்கு நன்றி சொல்ல அவள் வீட்டுக்குச் செல்கிறான். அவள் உடைமாற்றும் போது அவளைக் காமப்பார்வை பார்க்க, இருவருக்கும் ரகசியத் தொடர்பு ஏற்பட்டு தொடருகிறது. ஒவ்வொரு சந்திப்பிலும் உறவுக்கு முன் அவளுக்கு ஏதாவது புத்தகத்தைப் படித்துக் காட்ட வேண்டும். ஹோமரின் ஒடிஸ்ஸியையும், ஆன்டான் செகாவும், இன்னபிற நூல்களையும் அவன் படித்துக் காட்ட அவள் கேட்டு மகிழ்கிறாள். அழுகிறாள். அவளைப் படிக்கச் சொல்லும் போது அவள் தனக்குக் கேட்கவே பிடித்திருக்கிறது என்கிறாள். தனக்கு எழுதப் படிக்கத்தெரியவில்லை என்கிற ஏக்கம் அவளுக்குள் இருந்துகொண்டே இருக்கிறது.

இருவரும் கணவன் மனைவி போலவே நடந்து கொள்கிறார்கள். சைக்கிளில் ஊர்சுற்றுகிறார்கள். தேனீர் விடுதியில் பரிமாறுபவள் முன்பு ஹன்னாவை முத்தமிட்டு, இவள் என்னுடையவள் என்று பெருமையாக அறிவித்துக் கொள்கிறான் மைக்கேல். இப்படியே நாட்கள் கழிகின்றன. ஒருமுறை அவள் தீடீரென்று அவனை விட்டுப் போய் விடுகிறாள். மைக்கேல் உடைந்து போகிறான்.

சில வருடங்கள் கழித்து மைக்கேல் சட்டக்கல்லூரியில் சேருகிறான். மாணவர்கள் வழக்கு ஒன்றைப் பார்வையிட நீதிமன்றம் செல்கிறார்கள். அங்கு குற்றவாளிக் கூண்டில் ஹன்னா நிற்கிறாள். ஹிட்லரின் மரண அணிவகுப்பில் பாதுகாவலராக அவள் பணியிலிருந்த போது சர்ச்சுக்குள் அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட 300 கைதிகள் பற்றிய வழக்கு அது. அவளோடு சேர்ந்து மேலும் சில பாதுகாவலர்களும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். நீதிபதியின் கேள்விகளுக்கு ஹன்னா அளிக்கும் நேர்மையான, அப்பாவித்தனமான பதில்கள் பிற பாதுகாவலர்களுக்கும் அவளுக்கும் பாதகமான தீர்ப்பைத் தரும் என்று அஞ்சுகிறார்கள் மற்றவர்கள். எனவே இந்த சம்பவம் ஹன்னாவின் தலைமையிலேயே அவள் ஆணைப்படியே நிகழ்த்தப்பட்டது என்று அனைவரும் கூறுகிறார்கள். நீதிபதி அது சம்பந்தப்பட்ட ஒரு கடிதத்தை எழுதியது நீயா என்று ஹன்னாவைக் கேட்கிறார். அவள் இல்லையென்று மறுக்க, அவள் கையெழுத்தைப் பரிசோதிப்பதற்காக ஒரு தாளைக் கொடுத்து அவளை எழுதச் சொல்கிறார்கள். ஹன்னா தனக்கு எழுதப் படிக்கத்தெரியாது என்று ஒத்துக் கொள்ளத்தயாராயில்லை. தான்தான் அந்தக் கடிதத்தை எழுதியதாக ஒப்புக் கொள்கிறாள். அவளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது.

அவள் படிப்பறிவற்றவள் என்று தெரிந்த மைக்கேல் அந்த வழக்கு நடந்த காலம் முழுவதும் அங்கிருந்தும் அவ்வுண்மையை வெளிப்படுத்துவதில்லை. தனக்குச் சாதகமான ஒரு உண்மையை குற்றவாளியே மறைக்க நினைக்கும் போது, தான் எவ்வாறு அதை வெளியிடுவது என்று தன் பேராசிரியரிடம் கேட்கிறான் மைக்கேல்.

வழக்கு முடியும் வரை அவளைச் சந்திப்பதைத் தவிர்த்து விடுகிறான் மைக்கேல். காலம் ஓடுகிறது. அவள் ஞாபகத்தைத் தவிர்ப்பதற்காகவே நீண்ட காலம் செல்லாதிருந்த சொந்த ஊருக்குத் தன் விவாகரத்துச் செய்தியைப் பெற்றோரிடம் சொல்வதற்காகச் செல்கிறான். அங்கு அவன் பார்க்கும் ஹன்னாவுக்குப் படித்துக் காட்டிய புத்தகங்கள், அவள் நினைவுகளை மீண்டும் கிளறிவிடுகின்றன. எல்லாப் புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு திரும்புகிறான். வெறி பிடித்தவன் போல எல்லாப் புத்தகங்களையும் அவன் குரலில் பேசிப் பதிவு செய்து ஹன்னாவுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறான்.

ஹன்னாவுக்கு கேசட்டுகளைப் பார்த்து ஒரே மகிழ்ச்சி. நூலகத்திலிருந்து புத்தகங்கள் வாங்கி, அந்த கேசட்டுகளைப் போட்டு மெல்ல மெல்ல எழுதக் கற்றுக் கொள்கிறாள். வாழ்வில் முதல் முதலாக மைக்கேலுக்கு இரண்டுவரிகளில் ஒரு கடிதம் எழுதுகிறாள். அதைப் படித்த மைக்கேல் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், அந்தக் கடிதத்திற்கு பதிலும் போடாமல் இருந்து விடுகிறான். அவனை பதில் எழுதக் கேட்டு ஹன்னாவிடமிருந்து வரும் எந்தக் கடிதத்தையும் அவன் பொருட்படுத்துவதேயில்லை.

ஹன்னா விடுதலையாகும் தருணத்தில், சிறைஅதிகாரிகள் மைக்கேலைத் தொடர்பு கொண்டு அவன் ஒருவன் மட்டுமே ஹன்னாவுடன் தொடர்பிலிருப்பவன் என்பதால், ஹன்னா விடுதலையான பிறகு அவளது எதிர்காலத்துக்கு அவனே பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்கள். முதலில் தவிர்க்க முயற்சிக்கும் மைக் பிறகு ஏற்றுக்கொண்டு அவளை வந்து சந்திக்கிறான். மைக் அவளிடம் பட்டும் படாமல் பேசுவதும், தன்னைத் தொட்ட அவள் கையை விலக்கிக் கொண்டதையும் கண்ட ஹன்னா மெலிதாக அதிர்கிறாள். அடுத்த வாரம் அவளை அழைத்துச் செல்ல மைக் வரும் போது அவள் தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிகிறான். அவளது அறையில் அவள் கைப்பட எழுதி சுவற்றில் ஒட்டி வைத்த அவன் படித்துக் காட்டிய கதை வரிகளைப் படிக்கும் போதுதான், தனது குரலைக் கொண்டு அவள் எழுதக் கற்றுக்கொண்டது தெரிய வருகிறது. அங்கேயே அமர்ந்து அழுகிறான். தான் சேமித்து டீத்தூள் டப்பாவில் வைத்திருந்த ஏழாயிரம் மார்க்குகளை 300 பேர் கொலையுண்ட சம்பவத்தில் பாதிக்கப் பட்ட ஒருவரின் பெண்ணுக்குச் சேர வேண்டுமென்று உயில் எழுதி வைத்திருக்கிறாள். மைக் அதை உரியவரிடம் கொண்டு சேர்க்கும் போது தனக்கும், ஹன்னாவுக்கும் இடையிலான தொடர்பு பற்றிச் சொல்கிறான்.

மைக் எதனால் அவள் கடிதங்களுக்குப் பதிலளிப்பதில்லை. எதனால் அவளைத்தவிர்க்க நினைக்கிறான் என்று நேரடியாக சொல்லப்படுவதில்லை. வழக்கின் போது கடித்தத்தை எழுதியது தான்தான் என்று ஒப்புக்கொண்ட ஹன்னா, மைக்குக்கு முதல் கடிதம் எழுதும் போது, அவள் தனது ஒலிநாடாவை கேட்டுத்தான் எழுதக்கற்றுக் கொண்டாள் என்று மைக்குக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை உண்மையில் அந்தக் கடிதத்தை ஹன்னாவே எழுதி அந்த சம்பவம் நிகழக் காரணமாக இருந்திருப்பாளோ என்று மைக் நினைத்திருக்கலாம்.

மிக அழகான கதை. காமத்தின் அடிப்படையில் உருவாகும் ஒரு தொடர்பு வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. எல்லாருடைய உள்ளத்திலும் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ரகசியங்கள் வாழ்நாள் முழுக்க அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் என்பதன் ஒரு சிறிய உதாரணம்தான் the reade

மேலும் வாசிக்க