5 அக்டோபர், 2010

எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவம்

நாவல் :          உப பாண்டவம்
ஆசிரியர் :  எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு : விஜயா பதிப்பகம்
பக்கங்கள் :  384
விலை :     200
பரிந்துரை : ஜெகதீஷ் குமார்
        உப பாண்டவம் மகாபாரதம் என்கிற இதிகாசத்தின் எண்ணற்ற கதாபாத்திரங்களின் நாம் பார்த்திராத பக்கங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. திரேதாயுகத்தில் விளங்கின அஸ்தினாபுரத்துக்குள்ளும், இந்திரப் பிரஸ்தத்துக்குள்ளும் யுத்தபூமியான குருக்ஷேத்திரத்துக்குள்ளும் சமகால மனிதனொருவன் பயணப்பட்டுத் தான் அடைந்த அனுபவங்களை விவரிப்பதைப் போலவே முழுக்கதையும் அமைந்துள்ளது. நாவல் என்றால் என்ன என்பதற்கான இலக்கண விதிகள் யாவை என்று எனக்கு முழுமையாகத் தெரியாததால், உப பாண்டவத்தில் அவை எத்தனை தூரம் மீறப்பட்டிருக்கின்றன என்று சொல்ல முடியவில்லை. இருப்பினும் நாம் வாசித்து வருகின்ற வழக்கமான நாவல் வரிசையில் உபபாண்டவத்தைச் சேர்த்து விட முடியாதென்றே தோன்றுகிறது. (இது போன்று நீட்டி முழக்குவதற்கு நான் ஒன்றும் அப்படி நிறைய நாவல்கள் படித்தவனல்லன். என் அனுபவத்தின் அடிப்படையிலேயே நான் மேற்கண்ட கருத்தைக் குறிப்பிட்டேன்.)
        இந்தியப் பெருங்கடல் போன்று விரிந்ததும், ஆழமானதுமான இதிகாசமாகிய மகாபாரதத்தில் சாதாரண ஜனங்களான நமக்கும் சில பாத்திரங்களைப் பற்றிய அறிமுகம் உண்டு. அவர்களில் பாண்டவர்கள், த்ரௌபதி, ஸ்ரீ கிருஷ்ணன், பிதாமகர் பீஷ்மர், துரோணாச்சாரியார், கர்ணன் போன்றவர்களை காவிய புருஷர்களாகவும், தெய்வீகப் பண்புகள் கொண்டவர்களாகவுமே நாம் இதுவரையிலும் அறிந்து வந்திருக்கிறோம். குணக்குறைகள் நிறைந்த துரியோதனன், துச்சாதனன், சகுனி போன்றவர்கள் கூட பரமாத்மாவின் சதுரங்க ஆட்டத்தின் பகடைக்காய்களாகத்தான் ஆட்டுவிக்கப்பட்டிருக்கிறார்களே தவிர அவர்களை அறவே வெறுக்குமளவிற்கு அவர்களின் பாத்திரம் சித்தரிக்கப்பட்டதாக என் அறிவுக்கு எட்டிய வரை இல்லை. ஆனால் என்னுடையது மிகவும் சிற்றறிவு என்பது இதற்குள் நுழைந்தவுடனேயே தெரிந்து விடுகிறது.
        எஸ். ராமகிருஷ்ணனுக்கு பத்து வயதில் ஒரு மழைநாளில் ஒரு சொல்லாகத்தான் பாரதம் அறிமுகமாகியிருக்கிறது.(அர்ச்சுனா, அர்ச்சுனா). பாரதம் வீட்டில் வைத்துப் படிக்கக்கூடாது என்கிற கிராமத்து நியதிப்படி ஊர்ச்சாவடியில் துணி சுற்றி வைக்கப்பட்டிருந்த நானூறு பக்க பாரதத்தை மூன்று நாட்களில் வாசித்து முடித்திருக்கிறார். ஆனால் அது முழு பாரதமல்ல, முழு பாரதம் ஒரு லட்சம் பக்கம் உள்ள புத்தகம் என்று தெரிய வந்திருக்கிறது.(அது ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்டது என்பது என் அறிவு)
பிறகு பல வருடங்கள் கழித்து பாரதக்கூத்து நடக்கும் ஆற்காடு பிரதேச கிராமங்களில் சுற்றித்திரிந்து பாரதம் ஒரு வாழ்வியல் என்றும், அஸ்தினாபுரம், இந்திரப் பிரஸ்தம், குருக்ஷேத்திரம், துவாரகை முதலிய இடங்களில் சுற்றித் திரிந்து அது ஒரு பெரிய நிலவியலின் முடிவற்ற சொல்வடிவமெனவும் உணர்ந்திருக்கிறார். உப பாண்டவம் மதமேறிய யானை மரங்களை ஒடித்து வெறி தீரத் தின்பது போல, அவர் இதிகாசச் சாற்றைக் குடித்துப் பித்தேறிய நிலையில் உருவான கற்பனை என்கிறார். அலைந்து கொண்டேயிருந்த தன் இயல்பின் வடிவமே இந்த நாவலும் உருக்கொண்டிருப்பதாக அவர் ஒப்புக்கொள்வதால், நாவலின் வினோதமான ஒழுங்கற்ற வடிவத்துக்கு நாம் அவரைக் குற்றம் சாட்ட முடியாது.
        மகாபாரதம் என்ற கதையை சுருக்கமாகவேனும் தெரிந்து கொண்டு உபபாண்டவத்தைப் படிக்கிறவர்களுக்கு ஓரளவு சுலபமாக இருக்கும். நான் சமீபத்தில் பகவத் கீதையை என் சொந்த முயற்சியில் படித்ததில் முன் கதைச் சுருக்கமாக பாரதக்கதை சொல்லப்பட்டிருந்தது. மேலும் முதல் அத்தியாயத்தின் சில ஸ்லோகங்களில் அதன் பாத்திரங்களின் பெயர்களும், விளக்கமாகச் சில உப கதைகளும் சொல்லப்பட்டிருந்ததால் எனக்கு உப பாண்டவத்துக்குள் நுழைவதற்கு உதவியாக இருந்தது.
இருப்பினும் நாவலை மேற்கொண்டு தொடர மிகவும் சிரமப்பட்டேன். அது என் வாசிப்புப் பழக்கத்தில் உள்ள குறையாகக் கூட இருக்கலாம். கதை ஒரே கோட்டில் நகராமல், முன் பின்னாவும், பின் முன்னாகவும் நகர்கிறது. திடீரென்று எதோடு எதைத் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்வதென்று புரியவில்லை. ஒரு வேளை சொல்லப்படுகின்ற எதற்கும் தொடர்பே இல்லையோ என்றும் தோன்றுகிறது. இப்படியும் சொல்லலாம். இந்த நாவலை எடுத்து எந்தப் பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாலும் புரியும்.
பாதி நாவலில் இருக்கும் போதே, நாவலைத் தொடர்வதில் எனக்குள்ள சிரமங்களைக் குறிப்பிட்டு எஸ்.ரா அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கு அவர் பதில் தரவில்லை. ஆனால் அதே வாரத்தில் அவர் தளத்தில் வாசிப்பது எப்படி என்ற தலைப்பில் வர்ஜீனியா வுல்ஃபின் ஒரு கட்டுரை பற்றி எழுதியிருந்தார். அதை அவர் எனக்குத் தந்த பதிலாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.
        நாவல் கொடுக்கும் அனுபவம் என்ன என்று சொல்லவேண்டுமென்றால் முதல் நூறு பக்கங்கள் படித்து விட்டு என்ன படித்தோம் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்றுமே புரியவில்லை. சலிப்பே ஏற்பட்டது. ஒரு புத்தகம் புரியவில்லை எனில் திரும்பப் படிக்க முயற்சிக்க வேண்டும் அல்லது கொஞ்ச காலம் ஆறப்போட்டு விட்டு மீண்டும் எடுத்துப் படிக்க வேண்டும் என்றெல்லாம் அந்தக் கட்டுரையில் எஸ்.ரா குறிப்பிட்டிருந்தார். அதனால் உப பாண்டவத்தை மீண்டும் ஒரு முறை வாசிக்க இருக்கிறேன். அப்போது இன்னுமொருமுறை அதன் நலம் பாராட்டலை இன்னும் அதிகப் புரிதலோடு எழுத முடியும் என்று நம்புகிறேன். இந்தப் பரிந்துரை ஒரு கோர்வையாக இல்லாதிருப்பினும் இதை எழுதுவதன் அவசியம், இதன் மூலம் உபபாண்டவம் பற்றின என் புரிதலைப் பரிசோதித்துக் கொள்வதற்காகவும், இந்த பரிந்துரையை வாசிக்கும், ஏற்கனவே உபபாண்டவத்தை வாசித்துள்ள யாரேனும் என் புரிதலை மேம்படுத்த உதவக்கூடும் என்ற எண்ணத்தாலும்தான்.
        நாவலின் துவக்கத்தில் ஆசிரியர் கிராமமொன்றில் நடக்கும் துரியோதனன் படுகளம் என்ற நிகழ்வுக்குச் செல்கிறார். துரியோதனனை பீமன் வதம் செய்த நிகழ்வை ஒரு கலைக்கூத்தாகவும், தெய்வீகச் சடங்கு போலவும் நிகழ்த்தி வழிபடுகின்றனர். துரியோதனனை ஒரு நாயகனைப் போலக் கொண்டாடுகிறார்கள் கிராம மக்கள். நாவலில் கூட ஆசிரியர் துரியோதனன் மீது கரிசனத்தோடும், அனுசரணையோடும் நடந்து கொள்வதை போலவே இருக்கிறது. இந்த நிகழ்வை விவரித்த பின் கதை நேரடியாக மகாபாரத காலத்துக்குச் சென்று விடுகிறது. ஒரு நதியின் கரையில் அதைக் கடக்க வேண்டி ஒரு பயணி நிற்கிறான். அவனை அழைத்துச் செல்ல படகோட்டியாக வியாசரே வருகிறார்.
        ஆற்றின் மறுகரையின் அந்தப் பயணி சூதர்கள் என்ற இனத்தவரைச் சந்திக்கிறான். அவர்கள் சூதர்களின் ஆசைகளே நகரமாகவும் நதியாகவும் உருவெடுத்திருக்கிறதென்று கூறி பாரதத்தின் பல்வேறு பாத்திரங்கள் எவ்வாறு சூல் கொண்டனர் என்று விவரிக்கின்றனர். குந்தி, மாத்ரி என்ற இரு பெண்களுக்கு துர்வாசர் கொடுத்த சூல்வாக்கின் மூலம் பிறந்தவர்களே பஞ்ச பாண்டவர்கள் என்றும், பாண்டு அவர்களின் தகப்பன் அல்லன் என்றும் கூறப்படுகிறது.(இந்த மாதிரி அதிர்ச்சித் தகவல்கள் நாவலெங்கும் விரவிக் கிடக்கின்றன.) பாண்டுவிற்கு குழந்தை கொடுக்குளவுக்கு வீர்யமோ, ஊக்கமோ இல்லை என்று கூறப்படுகிறது. அதே போல் காந்தாரிக்கு ஒரே கர்ப்பபிண்டமாகப் பிறந்து அது நூறு கலயங்களில் இடப்பட்டு கௌரவர்களாக வளர்ந்தது(னர்) என்கிறார். இரு உடலாளர்கள் மேல் ராமகிருஷ்ணனுக்கு மிகுந்த கவர்ச்சி இருக்கும் போலிருக்கிறது. சிகண்டி ஆண் கண்களுக்கு பெண்ணாகவும் பெண் கண்களுக்கு ஆணாகவும் தெரிவதை விளக்குகிறார். அர்ஜீனன் சகோதரர்களோடு மறைந்து வாழ்ந்த ஓராண்டில் பிருக்கன்னளை என்ற பெண்ணாக (நபும்சகனாக!) இருந்ததைக் குறிப்பிடுகிறார். துரியோதனன் கூட இடுப்புக்குக் கீழே மலர் போன்றும், இடுப்புக்கு மேலே வஜ்ரம் போன்றும் உடலமைப்பு கொண்டவன் என்கிறார். இது போன்று மகாபாரதத்தின் அறியாது மறைந்திருக்கின்ற ரகசியத் தகவல்கள் ஆங்காங்கே வருகின்றன.
        குறிப்பாக அர்ஜூனன் மிகுந்த குழப்பம் மிகுந்தவனாகவும், கொடுமைக்காரனாகவும் சித்தரிக்கப்படுகிறான். கீதோபதேசம் பெற்றும் கூட அவன் மனதில் துக்கமும், குழப்பமும் நீங்காததைப் போல் காட்டப்பட்டிருக்கிறது. குந்தியைப் போன்றே தோற்றம் கொண்ட ஒரு வேடுவப் பெண்ணையும், அவளது ஐந்து குழந்தைகளையும் அரக்கு மாளிகையில் விட்டு விட்டுத் தப்பிச் செல்கிறார்கள் பாண்டவர்கள். வேடுவப் பெண்ணும், குழந்தைகளும் பாண்டவர்களுக்குப் பதிலாகத் தீயில் வெந்து சாகிறார்கள். அதே போல் ஏன் த்ரௌபதி ஐவரின் மனைவியானாள் என்பது விளக்கப்படுகிறது. தாயார் குந்தியிடம் தங்கள் பாஞ்சாலதேசத்திலிருந்து ஒரு பொருளைக் கொண்டு வந்திருப்பதாகச் சொல்ல, அவள் ஐவரையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறாள். அது ஓர் பெண்ணென்று அறிந்தும் அவள் தன் முடிவை மாற்றிக் கொள்வதில்லை. த்ரௌபதியும் விரும்பி அவர்களை மணக்காமல் தகப்பனின் விருப்பத்தின் பேரில்தான் திருமணம் செய்கிறாள். மாமியாரை அவளுக்குப் பிடிப்பதில்லை. ஐந்து பேரிலும் அர்ச்சுனன் மட்டுமே பிடித்தவனாக இருக்கிறான்.
        நாவலில் ஆங்காங்கே அறியாத நகரின் குறிப்பு, தட்ச சூத்திரம், கவனகன் குறிப்பு, சமங்கை நதிக் குறிப்பு, உருபேதம், பஞ்சபட்சிகள், பிம்பவனம், சொர்ண உமிழ்கை என்று வினோதமான தலைப்புகளின் கீழ் சுவாரசியமான பல தகவல்கள் கொடுக்கப்படுகின்றன.
        நகரங்களின் உரையாடல் என்ற அத்தியாயத்தில் பாரத காலத்தில் இருந்த ஒவ்வொரு நகரத்தின் பிரத்யேகத் தன்மையும் விவரிக்கப்படுகிறது. கோவில்களன்றி பலிபீடங்கள் மட்டுமே கொண்டுள்ள அஸ்தினாபுரமும், அதன் பிரதிபிம்பமாகவும், வன்மையான இரவையும் கொண்ட இந்திரப் பிரஸ்தமும், ஒளிந்து வாழ்பவர்க்கான நகரமான விராட தேசமும், அவமானத்தால் வீழ்த்தப்பட்டு சதா வெம்மை கொண்ட பாஞ்சால தேசமும் நம் கண் முன் விரிகின்றன. 
        நாவலின் இறுதிப் பகுதியில் ஒவ்வொருவரும் எவ்வாறு இறக்கிறார்கள் என்று காட்டப்படுகிறது. த்ரௌபதி பனிமலையில் இறக்கிறாள். கண்ணன் வேடுவனால் பாதத்தில் அம்பு தாக்கி இறக்கிறான். அம்புப் படுக்கையில் மரண நேரத்துக்காகக் காத்திருக்கிறார் பிதாமகர் பீஷ்மர்.
        முன்பே சொன்னது போல நாவலுக்கென்று முழுமையான வடிவம் ஏதும் இல்லை என்பதால் பொறுமையாகவே படிக்கலாம். நிஜ பாரதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துப் படிப்பது சுவாரசியமாக இருக்கும். எஸ். ராமகிருஷ்ணனின் கவிதை மொழியில் படிப்பது சுகமாக இருக்கும். சில நேரங்களில் சற்றே தலை சுற்றினாலும். தமிழில் சமீபத்தில் வெளிவந்துள்ள முக்கியமான நாவல்களில் ஒன்று என்ற அடிப்படையிலும், மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள் மிகச்சில புனைவுகளில் ஒன்று இது என்பதாலும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். மேலும் மறு வாசிப்புக்கும், பரிசீலனைக்கும் உள்ளாக வேண்டிய நாவல் உப பாண்டவம்.
நன்றி : வாசகர் அனுபவம்

மேலும் வாசிக்க