7 டிசம்பர், 2025

வானப்ரஸ்தம் குறித்து நிர்மல்

 

வானப்ரஸ்தம்

வனப்பிரஸ்தம் கதை முதுமையை ஆன்மீக வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்றிக்கொள்ளும் தனிமனித தேர்வை கதை ஆராய்கிறது. அம்மா முதியோர் இல்லத்தில் நடந்துக் கொள்ளும் விதம் சந்தான லட்சுமியிடன் உருவாக்கும் குழப்பம் அழகாக காட்சிப்படுத்தப்படுள்ளது. கதையின் இயற்கை வர்ணணைகள் குறிப்பாக I-95ல் இருந்து இறங்கி மலைக்கிராமத்துக்குள் செல்கையில் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. அங்கு சம்யுக்தாக்கும், சந்தான லட்சுமி இருவரின் உணர்வுகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அம்மா தலைதிருப்பி அவளைப் பார்த்து களைப்பாகப் புன்னகைத்தாள். "அப்படியே கொஞ்ச நேரம் நிப்போம். அது என்ன பண்ணுதுன்னு பார்ப்போம்" போன்ற வரிகள் சந்தானலட்சுமியின் மனநிலையை திறம்பட காட்டுகின்றன. நேரடியாக கீதை கோட் செய்யப்படுகின்றது. சந்தான லட்சுமியும் கீதையில் முழுக்க பயிற்சி உடையவர். அவருடைய இயல்புக்கு அது பொருந்தி வருகின்றது. கிரிகோரியும் அதை தனக்கு புரியவில்லை என்றுதான் சொல்கின்றார். அதுவும் கதைக்கு பொருத்தமாகவே உள்ளது. கதையில் தாய் மகள் முரண்பாடுகள் டொமெஸ்டிக் விஷயமாக இன்னமும் பரவி வந்திருக்கலாமோ என தோன்றுகின்றது. அதில் முழுக்க தோய்ந்த வேதாந்தியாக “விடுதலை அடைந்து விட்டேன்” என சொல்லுமிடத்தில் சந்தான லட்சுமி இருப்பதால் அந்த பாத்திரம் ஐயம் , திரிபற்ற முழு ஞானியாகவே ஆகி விடுகின்றது. சந்தான லட்சுமி ஞானியாக முழுமையாக்கப்படுவதால், அவள் மனித பாத்திரமாக இல்லாமல் தத்துவக் கருவியாக மாறுகிறாள். இதனால் கதை, கதையாக இல்லாமல், ஆன்மீகக் கட்டுரையின் கதை வடிவமாக மாறுகிறது

வனப்பிரஸ்தம் கதை முழுமையை எய்தி விட்ட ஓருவருக்கும், அவரை குடும்ப உறவில் வைத்துப் பார்க்கும் இளவலுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் வழியே நகர்கின்றது. பழமை, பைத்தியக்காரத்தனம் என பார்வையுடன் வனப்பிரஸ்தம் சென்ற ஓருவரை “குணப்படுத்த” முயலும் இளைவல் முடிவில்  தெரிந்துக் கொள்வதென்ன என கதை ஆராய்கின்றது.

கதையை படித்ததும் காரை எடுத்துக் கொண்டு கதை சொல்லும் ஐ-95 சாலையில் செல்ல வேண்டுமென ஆசை வந்தது. அந்த அளவுக்கு இயற்கை காட்சிகள், கதை மாந்தர் உள ஓட்டத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கதையில் முழுமைக் கூடிய ஓருவர் உள்ளதால் சில நேரம் சத்சங்க வகுப்புகளை நினைவூட்டுகின்றது என்பது என் வாசிப்பு.   பொதுவாக சிறுகதை வடிவத்தில் முழுமை கூடிய ஓருவர் கதையெங்கும் வருகையில் அதை கையாள்வது பெரிய சிரமம். முழுமை கூடியவர்கள் பிழை அற்ற வாழ்வை நெருங்கியவர்கள், அதில் கான்பிளிக்ட் உருவாக்க இயலாது. ஒரு காட்சியில் வருகையில் கையாள்வது எளிது, கதையெங்கும் நெடுக வருகையில் அதை கையாள்வது கடினம். ஜெகதீஷ் அதை பரிட்சித்து பார்த்துள்ளார்.


மேலும் வாசிக்க