13 மார்ச், 2025

“நிமித்தம்” சிறுகதை குறித்து


 

என்னுடைய “நிமித்தம்” சிறுகதை குறித்து வந்த கருத்துக்கள்

சு.வெங்கட்

ஜெகதீஷ் உங்களுடைய நிமித்தம் சிறுகதையைப் படித்தேன். இது என்னுடைய பார்வை.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் தனக்கான வேலை செய்ய நினைக்கும் ஒருவனாகத்தான் ரகு நந்தனை முதலில் பார்த்தேன். ஆனால் அவனிடம் அந்த நிமிர்வு தொலைந்துபோகிறது. எப்படியாவது தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளத் துடிக்கும் அவனுக்கு லஞ்சம் கொடுப்பதில் இருக்கும் தயக்கம் முற்போக்கு இல்லை. தன் கை காசை இழக்கக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே. அவனுக்கு யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்குத் தேவையான ஒன்றைக் கொடுத்து காரியத்தைச் செய்துகொள்வது தெரிந்திருக்கிறது. இந்தியாவில் எந்த வித கூச்சமும் இல்லாமல் காலில் விழுந்து அவர்களின் ஈகோவை தூக்கிவிடுவதுபோல செய்து தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் ஒரு முறை உள்ளது. அது துபாயில் கனடாவில் வேலை செய்யாது என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் அந்நாடுகளில் நிர்ணயிக்கும் காலக் கெடுவை மதித்து நடக்கிறார்கள். காலில் விழுவது காரியத்தைச் சாதித்துக்கொள்ள உதவும் ஒரு முறை என்பது பரவலாகத் தெரிந்திருந்தாலும் அது இன்னும் இந்தியா போன்ற நாடுகளில் கலாச்சார ரீதியில் வேலை செய்கிறது. அப்படிதான் அந்த நேர்மையான அதிகாரியும் அதில் விழுகிறார் என்று நினைக்கிறேன். அது ஒரு துர்க்குண நிமித்தம்.

கண்ணில் புரை விழுந்து இருப்பவர் ரகுநந்தன் மனதின் மறு பாதியின் வடிவமாகவே பார்க்கிறேன். “தெரு நாய் ஒன்று மைதானத்துக்குள் மந்தமாக நடந்து கொண்டிருந்தது” அங்குள்ள சூழ்நிலையைக் காட்டும் ஒரு நல்ல ஆழ் மன பதிவு காட்சியாக இருந்தது. இது போன்ற கதைகள் மிக எளிதாக நமக்குள் இருக்கும் சுஜாதா வந்துவிடுவார். ஆனால் அதை நீங்கள் எளிதாகக் கடந்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

சு. வெங்கட்

விஜய்குமார் சம்மங்கரை

அவன் காலில் விழுந்து ஆசி வாங்குவது ஒருவித disturbed feeling ஐ உருவாக்குகிறது. கதை பிடித்திருந்தது.

விஜய்குமார் சம்மங்கரை

நிர்மல்

ஊழல் பழகி போன ஒரு இடம். அந்த இடத்தில் கூட இவன் நம்மவன் என ஒருவனை அடையாளம் கண்டுக் கொள்ளுதல் செய்ய வேண்டிய பணியை வேறு எதுவும் எதிர்பார்க்காமல் செய்ய தூண்டுகின்றது. ஒரு கல்வி பணியில் இருக்கும் உயர் அதிகாரி அதே போல கல்விபணியில் இருக்கும் இருக்கும் இன்னோருவரை தன்னை போன்றவராக காண்கின்றார். அது உயர் அதிகாரிக்கு மன விரிவினை தருகின்றது. ஊரையே நம்மவன் அவர் காண முடிந்திருந்தால் கதாநாயகனுக்கு வந்திருக்கும் சிக்கல் வந்திருக்காது. அக்க மகாதேவியின் பாடல் ஒன்று உண்டு .

இவனாரவ இவனாரவ இவனாரவனெண்டு எனிசடிரய்யா

இவ நம்மவ இவ நம்மவ இவ நம்மவனெண்டு எனிசய்யா

கூடல சங்கம தேவா நிம்ம மனெய மகனெண்டு எனிசய்யா

கூடல சங்கம தேவனிடம் “கூடல் சங்கம தேவா, நின் வீட்டில் நான் மகனென்று எண்ணச் செய் ஐயா!” என மன்றாடும் குரல். வீடுபேறினை நோக்கிய குரல். சம்சார வாழ்வில் அரச அதிகாரி என்னும் பேரூருவங்களிடம் , அதிகாரமற்ற சம்சாரிகள் அதெ தொனியில் மன்றாட வேண்டியுள்ளது.

நிர்மல்

பாலாஜிராஜூ

இதை விட அற்புதமான புத்தாண்டு பரிசு ஜெகதீசுக்கு அமையாது. அவருடைய கதைகளுடன் தொடர்ச்சியாக பயணம் செய்தவன் என்ற முறையில் 'நிமித்தம்' சிறுகதையை அவருடைய உச்ச படைப்பு என்றே நானும் வைக்கிறேன், 'This guy knows what he is doing' என்று தோன்றியது. நிச்சயமாக அவர் எழுத்தாளனாக முழு பரிணாமம் அடைந்துவிட்டார் என்று எண்ணிக்கொண்டேன். இது போன்ற புகழ்மொழி அவருக்கு ஒர் சுமையாக இருக்கலாம், ஆனால் இந்த இடத்தில் பகிரவேண்டும் என்பதால் சொல்கிறேன்.


'நிமித்தம்', 'பொற்குகை ரகசியம்', 'ஊனுடல்', 'நீலத் தழல்' - என்பது என்னுடைய வாசிப்பில் முதன்மையாக நிற்கும் அவருடைய சிறுகதைகள். Go strong Jegadeesh!

பாலாஜி ராஜூ

ஆஸ்டின் சௌந்தர்

நேற்றைய (12/30/2024) மாலை , எனக்கு இனிதான மாலை. இரு மலைகளுக்கு நடுவே ஆதவன் சென்று மறையும் அந்தியைக் காணும்பொழுது வரும் அதே உவகை , ஜெகதீஸின் , “நிமித்தம்” சிறுகதையை அகழ் இதழில் வாசித்தபொழுது அடைந்தேன். அசோகமித்திரன் ஒரு முன்னுரையில் சொல்லியிருப்பார், “நான் இந்தக் கதைகளை எழுதும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தேன், வாசிக்கும் நீங்களும் அதே மகிழ்வை அடைவீர்கள் “ என. அந்த மகிழ்வை “நிமித்தம்” எள்ளளவும் குறையாமல் கொடுத்தது. கதையின்  வெற்றி reading pleasure கொடுப்பதில் எல்லோரையும் சென்றடையும் என்பதில் உள்ளது. கதைநாயகனின் செயல், வாழ்க்கையின் துண்டு ஒன்று பறந்துவந்து இரத்தத்துளிகள் படர வாசகனின் அகத்தை தொட, இது இலக்கியம் என்றும் சொல்கிறது. 


“நிமித்தம்”


மேலும் வாசிக்க