26 நவம்பர், 2024

சஹிதா: அணையா நெருப்பு

 

கே.வி. ஷைலஜாவின் நாவலை முன்வைத்து


நன்றி: சொல்வனம்


மொழியாக்கங்களுக்குப் புகழ் பெற்ற கே.வி. ஷைலஜாவுக்கு சஹிதா முதல் நாவல். (பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் சிதம்பர நினைவுகள் அவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து தமிழகத்திலும் புகழ்பெற்ற நூல்) நான் வாசிக்கும் அவர்களது முதல் நூலும் அதுவே. சஹிதா ஒரு கேரள கிராமத்திலுள்ள இஸ்லாமியக் குடும்பத்துப் பெண். அவளுக்கு தன் இந்துத் தோழியின் இல்லத்தில் கண்ட கடவுள் கண்ணன் மீது காதல் ஏற்பட்டு விடுகிறது. கண்ணன் மீது கொண்ட மையல், ஆன்மிகத் தவிப்பாகப் பரிணாமம் அடைந்து, இந்த இல்லற வாழ்விலிருந்து விடுதலையடைய வேண்டும் என்ற தாகம் அவளை எங்கும் பின் தொடர்ந்தபடியே இருக்கிறது. 

இல்லற வாழ்வு என்ற சொற்றொடரில் இங்கு நான் குறிப்பிட விழைவது திருமண பந்தத்தை மட்டுமன்று. நாம் இந்த இக வாழ்வை மேற்கொள்ளும் போது பிற மனிதர்களிடம் கொள்ளும் பரிவர்த்தனை தவிர்க்க இயலாதது. நாம் வாழும் சமூகமும் தான் கட்டமைத்திருக்கிற விதிகளின் பாற்பட்டு ஒருவர் நடந்து கொள்ளவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கும். பொருளாதாரத்திலும், மனித உரிமைகளுக்கான சட்டங்களை இயற்றிப் பேணிக்காப்பதிலும் உயர் நிலையில் விளங்கும் சமூகங்களிலேயே கூட ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றுமான தனித்தனி விதிகள் அமைந்திருக்கும்போது, நம் நாட்டைப்போன்று இன்றும் பெண்களை ஆணுக்குக் கீழான உயிராக பார்க்கும் சமூகங்களில் ஒரு பெண் ஆன்மிக விடுதலை தேடிப் பயணம் மேற்கொள்ளுதல் என்பது சிந்தித்துப் பார்க்க இயலாத ஒன்று. என் தனிப்பட்ட வாழ்வில் இப்படி தாகங்கொண்ட இரு பெண்களை நான் பார்த்திருக்கிறேன். என் மனைவியும், அவரது தாயாரும். என் மாமியார் ஆன்மிகத்திலும், பக்தியிலும், தத்துவத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அத்வைத வேதாந்தத்தை முறையாக ஒரு குருவிடத்திலும், தன் கணவனிடத்திலும் கற்றவர். ஆனால் இறுதி வரை தான் ஒரு பெண்ணுடல் எடுத்ததாலேயே தன்னால் ஆன்மிகத்தில் தான் விரும்பும் நிலையை அடைய முடியவில்லை என்றும், விரும்பும் ஆன்மிகத்தலங்களுக்கு (காசி, ரிஷிகேஷ்) செல்ல முடியவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டே இருப்பார். பிறவித்தளையறுக்கும் வேதாந்தக் கல்வியைப் பெற்ற அவருக்கு, அடுத்த பிறவியில் தான் ஆணாகப் பிறந்தால் மட்டுமே வீடுபேறு அடைய முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. அதுவே இறைவனிடம் அவரது இறுதிக் கோரிக்கையாகவும் இருந்தது. இந்துக் குடும்பங்களில் பிறக்கும் பெண்களுக்கே ஆன்மிகப்பாதையைத் தேர்ந்தெடுத்தல் என்பது அசாத்தியமான விஷயமாக இருக்கும் போது, இந்த நாவலின் நாயகி சஹிதா ஒரு இஸ்லாமியக் குடும்பத்துப் பெண். அவள் சந்திக்கும் சவால்களும், அவளுக்குள் நிகழும் போராட்டங்களும் எத்தகையனவாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

சஹிதாவுக்குள்  சுடர் விட்டு எரியும், அணையா நெருப்பென அவளைக் கணந்தோறும் வாட்டும் அவளது ஆன்மிக நாட்டம் அவள் பெற்றோரையும், சகோதரியையும், கணவனையும், பெற்ற பெண்ணையும் கூடப் பிரிந்து வெளியேற அவளைத் தூண்டுகிறது. சஹிதா என்ற பெண்ணின் மனதின் ஆன்மிக ஏக்கங்களை, இல்லற வாழ்வின் மீது அவளுக்குண்டான கிலேசங்களை, தன்னைச் சுற்றிலும் உள்ள தனக்கு நெருங்கிய உறவுகள், தோழமைகள் இவர்களுக்குத் தன் தவிப்பைப் புரியவைத்து, அவர்களிடமிருந்து விலகிச் செல்லுதலை சாத்தியமாக்கிக் கொள்ள அவள் நிகழ்த்தும் போராட்டங்களை, இல்லறத்திலும் நிலைக்க இயலாமல், ஆன்மிகப் பாதையில் செல்வதால் தான் துறந்து செல்லப்போகும் உறவுகளின் இழப்பையும் தாங்க முடியாமல் அவள் மனத்துக்குள் என்னேரமும் நிகழும் கொந்தளிப்புகளை என அத்தனையையும் மிகத்துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.

சஹிதா ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல. அவளைச் சுற்றியுள்ள பல பெண்களின் கதையும் கூட. நாவலின் முற்பகுதியில் சஹிதாவைச் சுற்றியுள்ள, அவள் வாழ்விற்கு நெருக்கமான பல பெண்களின் கதையும் விரிகிறது. ஒன்பது வயதில் திருமணம் முடித்து, பதிமூன்று வயதில் பூப்பெய்தியதும் கணவன் வீட்டுக்குச் சென்று இரண்டரை ஆண்டுகள் மட்டுமே அவனோடு வாழ்ந்து, அவனை பாம்புக்கடிக்கு பலி கொடுத்து, தனியளாயினும், பிறருக்கு உதவுதல், பசியாற்றுதல் என்று தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கெனவே தன்னை மாற்றிக் கொண்ட சஹிதாவின் இத்தாமு; சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் அப்பாவுக்கு அபச்சாரம் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக தீட்டுத்துணி காயும் அறைக்குள்ளேயே தங்கி குருதிப்போக்கின் நாட்களைக் கழிக்கும் லீலா, மற்றும் அவள் வீட்டுப் பெண்கள்; ரத்தச் சிவப்பும், சுருண்ட கரு நீல முடியுமாக சஹிதா வீட்டுக்குள் ஒரு மோகினியைப் போல நுழையும் பேரழகியும், தன் கணவனைத் தொட மறுத்து பேய் பிடித்து ஆடும் ஜமீலா; சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து, அண்ணனின் பாசத்தில் திளைத்தும், அண்ணியின் புறக்கணிப்பின் வலியேற்று துன்புற்றும் நாட்களைக் கடத்தி, பின் சஹிதாவின் தந்தையின் அன்பின் குடைக்குள் நுழைந்து வாழும் தாய் அஸ்மா; உடன் பிறந்தவர்களுக்கும் கணவனுடன் பிறந்தவர்களுக்குமே வாழ்க்கையை ஒப்புக் கொடுத்து தளர்ந்து போன ஜரீனா பீவி;  திருமணம் முடிந்து துபாய் சென்ற கணவன் விபத்தில் சிக்கி மருத்துவப் படுக்கையில் இருப்பதைக் கூட அறியாது வாழும் நளினி; இப்படிப் பல பெண்களின் வாழ்க்கைப் பயணம் துரித கதியிலும், அதே நேரம் துல்லியமாகவும் விவரிக்கப்படுகிறது. சஹிதா என்ற ஒரு பெண் தன் உள்ளத்தில் கனன்று சுழலும் ஆன்மிக நெருப்பைக் காத்து, அதன் மூலம் விடுதலையடைய வேட்கை கொண்டுள்ள பயணத்தில் மத்தியில், இத்தனைப் பெண்களின் கதைகளும் உரைக்கப்படுவது எதனால்? ஒருவேளை அவள் தேர்ந்தெடுத்துள்ள பாதை அவளுக்கு அத்தனை எளிதாக இருக்கப் போவதில்லை என்பதை அவளுக்கும், வாசகர்களாகிய நமக்கும் உணர்த்துவதற்காகத்தானா? இத்தனைப் பெண்கள் அவளைச் சுற்றி தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கையில், அவள் மட்டும் தனக்குச் சிறகுகள் முளைத்து வெளியே பறந்து விட வேண்டும் என்று கனவை ஏந்திக் கொண்டிருப்பது நியாயமா என்று அவளைச் சுற்றியுள்ளவர்கள் சொல்லற்ற கேள்விகளால் துளைப்பதாகவே நான் கற்பனை செய்து கொண்டேன்.

ஒரு நாவல் என்பது பிரதானமாக அதன் முக்கியக் கதாபாத்திரங்கள் தங்கள் உள்ளத்தில் மேற்கொள்ளும் உளவியல் பரிணாம வளர்ச்சியே என்று நான் கருதுகிறேன். ஒரு வாசகராக ஒரு நாவலின் மையக் கதாமாந்தர்கள் எங்கனம் பல்வேறு சூழ்நிலைகளையும், சவால்களையும் எதிர்கொள்கின்றனர் என்றும், அவ்வனுபவங்களின் மூலம், அவர்கள் தாங்கள் இருந்த நிலையிலிருந்து என்ன மாதிரியான மாற்றங்களை அடைகிறார்கள் என்பதை அவதானிப்பதுமே நாவல் வாசிப்பில் வாசகனைக் கிளர்ச்சியடையச் செய்யும் செயல்களாகும். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் வாசகனையும் கதாமாந்தர்களுக்கு நிகழும் அனுபவங்கள் மிக நுண்மையாக பாதிக்கவும், அவனுள் மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்கின்றன. இந்த நாவலில் ஆசிரியர் தனது கதா மாந்தர்களான சஹிதா மற்றும் அவளுக்கு நெருங்கிய மனிதர்கள் எங்கனம் மாற்றமடைகின்றனர் என்பதை மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல், பிற பாத்திரங்களின் முக்கியத்துவம் மங்கி சஹிதாவின் ஆன்மிகத் தவிப்பே பிரதானமாக மேலோங்கி நிற்கிறது. சம்பவங்கள் அவளது உள ஏக்கத்தின் வெளிப்பாடாகவே நிகழ்கின்றன. உரையாடல்கள் அவள் எடுக்கவிருக்கும் முடிவின் சாதக, பாதகங்களைப் பற்றிய வாதப்பிரதிவாதங்களாகவே நிகழ்கின்றன. குறியீட்டளவில் கூட அவள் செல்லும் இடங்கள், காணும் கனவுகள், பிற உயிர்களின் செயல்களை அவள் பொருள்படுத்தும் விதம் ஆகியன அவளது ஆன்மிகத்தாகத்தின் பருப்பொருள்களெனவே விளங்குகின்றன.

மூன்று ஆண்கள் சஹிதாவுக்கு முக்கியமானவர்கள்: சஹிதாவின் அத்தா கரீம்;  அவளது கணவன் நாசிம்; அவளது ஆன்மிகத் தோழன் ஆதி. இது தவிர தன் மனைவியின் இழப்பில் மனநிலை பிறழ்ந்த நிசார், அவளைத் தன் தோழியாக வரித்துக் கொள்ளும் இசையமைப்பாளர் நந்தா, அவள் தொடங்கும் தொழிலுக்கு உதவி புரியும் சீமத்தாத்தா என்று மேலும் சில ஆண்களும் சஹிதாவின் வாழ்க்கைக்குள் வந்து அவளது அகத்தூண்டலின் வளர்ச்சிக்குப் பங்காற்றுகிறார்கள்.

சஹிதா சிறுவயதிலிருந்தே தந்தையின் அன்பிற்காக ஏங்குகிறாள். அவரோ அவளது தங்கை வஹிதாவையே தன் செல்வமாக நினைக்கிறார். அவரது ஆன்மிக நம்பிக்கை கூட அடிப்படை இஸ்லாமியத்திலிருந்து விலகி சூஃபி மரபின் மிண்டா தங்ஙளை வணங்குவதாக இருக்கிறது. ஒருவேளை சஹிதா தன்னுடைய தனித்துவம் மிக்க ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு அவள் தன் தந்தை மீது கொண்டிருந்த பிரேமை கூடக் காரணமாக இருக்கலாம். 

இறுதி வரை அவளுக்கு உடன் நிற்பவன் அவள் கணவன் நாசிமே. தன் தாய் ஜரீனாவின் சீற்றங்களையும், அவள் மருமகள் மீது காட்டும் வன்மத்தையும் பொறுத்துக் கொண்டு, மனைவிக்கு அரணாக எல்லா இடத்திலும் நிற்கிறான். சஹிதாவிடம் அவன் மேற்கொள்ளும் உரையாடல்கள் அவளுக்கு அவளது ஏக்கத்தின், கனவுகளின் அபத்தத்தைப் புரியவைத்து அவளை மீண்டும் இல்லற வழிக்குத் திருப்பும் முயற்சிகளாக இருப்பினும், சிறிது சிறிதாக அந்த உரையாடல்களின் மூலம், எதிர்காலத்தில் சஹிதா தன்னையும், குடும்பத்தையும் விட்டு நிரந்தமாக வெளியேறி விட்டால் தனக்குள் நிகழப்போகும் துக்கத்தைத் தேற்றிக்கொள்ளும் வழியாகவே அவன் காண்பதாகப் பார்க்கிறேன். அவர்களுக்குப் பெண் குழந்தை அமீரா பிறந்து பதினெட்டு ஆண்டுகள் ஆயினும் சஹிதா தன் நோக்கத்தில் மாறாதிருப்பதை அருகிருந்து கண்ணுறுகிறவன் அவன்தான். எனவே, உலகே எதிர்த்து நின்றாலும் அவளது முடிவுகளுக்குத் துணையாக நான் நிற்பேன் என்று உறுதி கொண்டவன் அவன். சஹிதா வீட்டை விட்டு வெளியேறும்போது அவள் ஆதியுடன் தன் பயணத்தைத் தொடரவேண்டும் என்ற முடிவில் உறுதியாயிருப்பவனும் அவனே. நாசிம் போன்ற கணவன் அமைந்திருக்கவில்லையெனில் சஹிதா தன் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியிருக்க முடியுமா என்பது ஐயமே.

அயல் நாட்டிலிருந்து வந்து, இந்திய ஆன்மிகத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டு தன் பெயரையும் மாற்றிக் கொண்ட ஆதி, சஹிதாவுக்குப் பொருத்தமான ஆன்மிகத் தோழன். அவன் அவளுடன் நிகழ்த்தும் உரையாடல் சஹிதாவுக்கு அவனைப்பற்றியும், தன்னைப் பற்றியுமே புரிந்து கொள்ள உதவுகின்றது.

நாவல் ஒரே கோட்டில் பயணிக்காமல் முன், பின்னாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. சஹிதாவுக்கு குழந்தை பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்தபின், அவளது சொந்தத் தொழில் முயற்சிகள் எல்லாம் விளக்கப்பட்டபின் அவளது திருமணம் நிகழ்ந்த விதம் வருணிக்கப்படுகிறது. சட்டென்று நாவல் நம்மை சஹிதாவின் குழந்தைப் பருவத்துக்குள் இட்டுச் செல்கிறது. மீண்டும், மீண்டும் சஹிதாவின் கடந்தகால வாழ்விற்குள் எட்டிப்பார்ப்பதன் மூலம், அவள் நிகழ்காலத்தின் ஏன் சிலவிதமான முடிவுகளை எடுக்கிறாள் என்பதை வாசகர் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது என்று நினைக்கிறேன். நாவலின் ஒரு அத்தியாயத்தில் சிறுமி சஹிதாவின் வீட்டுக்கு வரும் பிச்சைக்காரர்களைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. வேலாயுத பண்டாரமும், குட்டப்பனும் தனக்குப் பிச்சையளிக்க வரும் சிறுமி சஹிதாவுக்குச் சொல்லும் கதைகளில் அவள் மெய்மறந்திருக்கிறாள். அம்மா அதற்காக அவளைக் கண்டிக்கும்போதும், அடிக்கும்போதும் அவள் மனம் அவர்கள் சொல்லும் கதைகளையே நாடிச் செல்லுகிறது. குட்டப்பன்தான் அவளுக்கு சிதம்பரம் நடராஜர் பற்றிச் சொல்பவன். திருமணம் ஆகி கணவன் இல்லம் வந்தபின், அவனது அனுமதியுடன் கடவுளர் பிரதிமைகளை வீட்டுக்குள் (மாமியாருக்குத் தெரியாமல்) வைத்துக் கொள்கிறாள். தன் குழந்தைமையிலிருந்து உடன் வந்த நீலநிறக் கண்ணன் மாயமாகி அந்த இடத்திற்கு அண்ட சராசரத்தையும் தன் களி நடனம் மூலம் அளந்த சிவன் எப்படி வந்தானென்று அவளால் அப்போது கண்டடைய முடியவில்லை. 

அவளது கேரள வீட்டின் தோட்டத்திற்குப் பின்னால் வேலிப்படப்பிற்கு அந்தப்புறம் ஒரு பாழடைந்த மாடிவீடு. அதில் உடைகள் துறந்து வாழும், மனநிலை பிறழ்ந்த யாயா பாட்டி. சிறுமி சஹிதா மட்டுமே அவளை தைரியமாகக் காணச் செல்கிறாள். இந்தக் காட்சியை நாவலாசிரியர் விவரித்திருந்த விதம், இந்த நாவலின் கலை உச்சங்களின் ஒன்று இந்த இடம் என்று என்னை எண்ண வைத்தது. மேலும் சில பகுதிகளை இந்த நாவல், இந்த வடிவத்தில் அது கொண்டிருக்கும் கலை உச்சங்களெனக் குறிப்பிடலாம். அடுத்ததாக இந்த நாவலில் என் கவனத்தை மிகவும் ஈர்த்த பகுதி சஹிதாவுக்குக் குழந்தை அமீரா பிறந்ததும், அவர்கள் பகுதியில் வாழும் சாந்தம்மா சேச்சி முதல் பதினைந்து நாட்களுக்குக் குழந்தையையும், பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணையும் நான்தான் கவனித்துக் கொள்வேன் என்று ஆணையிட்டு விடுகிறாள். அந்தப் பதினைந்து நாட்களும் அவள் சஹிதாவையும், குழந்தையையும் எவ்வாறெல்லாம் கவனித்துக் கொள்கிறாள் என்று மிக நுட்பமாக விவரித்திருக்கிறார் ஷைலஜா. தமிழர் வாழ்க்கையின், மலையாளிகளின் வாழ்க்கையின் ஒரு மிக முக்கியமான பகுதி இவ்விடத்தில் மிகத்துல்லியமாக ஆவணமாக்கப்பட்டிருகிறது. இன்னொரு காட்சி. சரிதாவின் மாமனார் சீமத்தாத்தா இறந்து அவருக்கு இறுதிச்சடங்கும் முடிந்தபின் நிகழ்வது. சிறுவன் சரண் சீமத்தாத்தாவின் கார் பானட்டில் மீது ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறான். சரணின் பெரியப்பா ஓடி வந்து, “டேய் சரண், எறங்குடா, தாத்தா திட்டுவாரேடா,” என்று அவனை மிரட்ட, அவனோ காரின் மேல் குத்துக் காலிட்டு உட்கார்ந்து, “பெரிப்பா, தாத்தாதான் இப்ப இல்லயே, என்ன யாரும் இனிமே கேக்க முடியாது, நான் என்ன வேணாலும் செய்வேன்,” என்று அந்த காரை ஓங்கிக் குத்துகிறான். புரிந்து கொள்ளாத உளவியல் என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பொருந்தும் என்று இந்தக் காட்சி விளக்குகிறது. கீழ்மையும், வன்மமும் குழந்தைகளிடத்து வெளிப்படுவதைக் காணும்போது நாம் ஏன் துணுக்குறுகிறோம்?  இதில் ஒளிந்துள்ள உளவியல் மர்மம்தான் என்ன? நமக்குள் நாம் ஒளித்து வைத்துள்ள கீழ்மைகளை அவர்கள் நினைவுறுத்துவதாலா? தூய உயிர் என்று மட்டுமே நாம் நம்பும் குழந்தைகளிடத்தும் வன்மம் போன்ற கீழ்மைக் குணங்கள் சாத்தியமுண்டு என்று அறிவதால் ஏற்படும் துணுக்குறலா அது?

சௌகத் என்ற எழுத்தாளரின் மொழி ஆழம் என்ற நூலை வாசித்த சஹிதா அவருக்குக் கடிதம் எழுதுகிறாள். அவர் அவளை வந்து சந்திக்கிறார். ஒரு யோகியின் சுயசரிதம் நூலைப் பரிசளிக்கிறார். சஹிதா அதை வாசிக்கிறாள். இப்படிச் சின்னச் சின்னதான குறிப்புகள், எவ்வாறு மெல்ல, மெல்ல சஹிதா தன் ஆன்மிகப் பாதை எது என்பதில் தெளிவடைகிறாள் என்பதை காட்டுகின்றன. கவனமற்று வாசிக்கையில் நாம் தவறவிட்டுவிடக் கூடிய சாத்தியங்களுள்ள குறிப்புகள் அவை. குழலூதும் கண்ணனில் துவங்கி, சிதம்பர சிவன் வழியாக சன்யாச தீட்சை வேண்டும் ஆவலாகப் பரிணமிக்கிறது அவளது ஏக்கம். பின் தன் நண்பர்கள் ராதா, ஹரியின் குழந்தை விஷ்ணுவைப் பார்த்ததும், தன் வாழ்வைக் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. கூழாங்கல் மாற்றி விளையாடும் விஷ்ணுவின் கண்களில் அவள் கண்ணனையே காண்கிறாள். தன் ஆன்மிகச் சாதனையின் ஒரு பகுதியாக சஹிதா ரேக்கி ஹீலிங்க் செய்கிறாள். ஜோதி அம்மாவின் கடிதமும், நாசிமும், சஹிதாவும் காரில் செல்கையில் வழியில் குறுக்கிடும் நாடி ஜோதிடக்காரியின் ஆருடமும் சொல்வது ஒன்றையே: சஹிதாவின் வாழ்வின் பணி என்பது நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு விடுவதல்ல. மகத்தான காரியங்களுக்காகவே அவளது பிறப்பு அமைந்திருக்கிறது. நந்தா, சக்தி தம்பதியர் அளிக்கும் விருந்தில் நந்தா இசையமைத்த பாடலை எலலாரும் பாடுகிறார்கள். அந்தப் பாடலின் சாரமே அவளது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறது.

“காஷாயம் - சிவாலயம்

சர்வம் - கர்மம்

விருப்பாட்சம்

மகா மோட்சம்

சரணாகதி”

சஹிதாவின் கணவன், தோழிகள் அனைவரும் அவளிடம் அவள் முடிவு குறித்து வாதிடுகிறார்கள். மாற்றிக்கொள்ளும்படி மன்றாடுகிறார்கள். சஹிதாவை விட பத்து வயது அதிகமான சரிதாவால் மட்டும் அவள் முடிவை ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. ஒருவழியாக அவள் சன்யாசம் மேற்கொள்வதை ஏற்றுக் கொண்டாலும், அவள் இன்னொரு ஆடவனுடன் வெளியேறுவதில் அவளுக்கு உடன்பாடே ஏற்படுவதில்லை. மிகவும் கடுமையாக அவள் முடிவுகளை எதிர்க்கிறாள். சஹிதாவின் கணவன் நாசிம்தான் மனைவிக்கு ஆதரவாக அவளிடம் வாதிடுகிறாள்.

ஆனால் சஹிதாவின் இந்த முடிவை மூர்க்கமாக எதிர்ப்பதும், அவள் வெளியேறினால் மொத்தமாக அறுத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பதும் அவளது மாமியார் ஜரீனாதான். நாவலின் உச்ச நாடகீயத்தருணங்களில் ஒன்று ஜரீனா சஹிதாவின் பெற்றோர்களிடம் அவள் வெளியேறுவதற்கான நிபந்தனைகளை விதிப்பது. சஹிதா தன் மகள் அமீரா தன் முடிவு எவ்விதம் புரிந்து வைத்திருக்கிறாள் என்று அறிந்து கொள்ள அவளுடன் நிகழ்த்தும் உரையாடலும் நாவலின் கவித்துவம் கவிந்த நாடகீயத் தருணமே.

இறுதியில் முறையாக விவாகரத்து பெற்று ஆதியுடன் வெளியேறுகிறாள் சஹிதா. அவனுடன் ரமணாஸ்மரத்தில் பிக்ஷைக்கு நின்று கொண்டிருப்பதாய் ஒரு படிமம் அவள் மனக்கண்ணில் வந்து செல்கிறது. இறுதி வரை தன் முடிவில் உறுதியாக நின்று, தன் ஆன்மிகத் தவிப்பைத் தணித்துக் கொள்கிறாள் சஹிதா. வானம் குடையென விரிந்திருக்கும் இவ்வாழ்வு இனி அவளுக்கு என்ன மாதிரியான சவால்களை அளிக்கப் போகிறது? அனைத்தையும் துறந்து, இப்பேரிருப்பின் இயல்பில் கரைந்து விட எண்ணங்கொண்டு வெளியேறியவளை அப்பேரிருப்பே இருகரம் கொண்டு அணைத்துக் கொள்ளுமா? தன் சிறகுகளுக்குள் வைத்துக் அடைகாத்துக் கொள்ளுமா? அக்கம்மா தேவி போன்று பல பெண் ஞானியரைக் கண்ட தேசம்தான் நம்முடையது. வேதாந்த வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக நான் சென்ற ஆசிரமங்களில் நிறைய பெண் துறவியரைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் பொருள் தேடும் வாழ்வை விடுத்து ஞானத்துக்காக அனைத்தையும் துறந்து வந்ததைக் கண்டு வியந்திருக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் சஹிதாவுக்கு நிகழ்ந்தது போன்ற அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும்தானே! அத்தனை சவால்களையும் மீறித்தானே அவர்கள் இன்றிருக்கும் நிலையை அடைந்திருக்க இயலும்! அவர்கள் வாழ்விற்க்குள் சஹிதா போன்று எத்தனை நாவல்கள் பொதிந்திருக்கின்றனவோ?

நாவலாசிரியர் கே.வி. ஷைலஜாவின் மொழி மனதுக்கு நெருக்கமானது. நிறைய இடங்களில் அது கட்டற்றுப் பிரவகிக்கிறது. பல இடங்களில் அவரது மொழியின் தனித்துவம், இப்படி ஒரு நடையை நம்மால் மேற்கொள்ள முடியுமா என்ற ஏக்கத்தைத் தோற்றுவிக்கிறது. நீண்டகாலம் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வந்ததன் மூலம், அவரது மொழிக்கு லயமும், இசையும், சொற்களின் தனித்துவமும் ஒன்று கூடி, அவர் நமக்குக் காட்ட விரும்பும் உலகின் மாயத்தை எளிதில் நிகழ்த்திக் காட்டுகின்றன. மிகக் கச்சிதமான திட்டமிடல், அதே நேரம் நாவலில் கட்டற்றுப் பெருகும் பாங்கு, எண்ணற்ற கதை மாந்தர்கள் நாவலுக்குள் தோன்றிக் கொண்டே இருப்பது, அதே நேரம் நாவல் தன் குறிக்கோளை நோக்கி சீரொழுக்கான நதியைப் போன்று பயணிப்பது, நாவலின் உரையாடல்கள் அதன் மையத்தை நோக்கியே இருப்பது என்று ஓர் ஆகச் சிறந்த நாவலுக்குரிய அம்சங்களைப் பெற்றிருக்கிறது சஹிதா. நான் அண்மையில் வாசித்த நாவல்களில் முழுமையும், ஒருமையும் கூடி என்னை வசீகரித்த நாவல்களில் ஒன்று சஹிதா. அவரது வாசகர் பலருடையதைப் போல எனது அவாவும் அவர் நிறைய புனைவு எழுத வேண்டுமென்பதுதான். 

* * *


மேலும் வாசிக்க