பொற்குகை ரகசியம் நூல் வெளியீட்டு விழாவில் என் ஏற்புரையும், நன்றி நவிலலும்
இந்த மேடையில் அமர்ந்திருக்கும் என்னுடைய இலக்கிய ஆசிரியரும், இந்தியத் தத்துவம் குறித்த என் துவக்க கால ஐயங்களைக் களைந்த எனது ஞானாசிரியருமாகிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை வணங்குகிறேன். மேடையிலிருக்கும் எழுத்தாளர் கே.வி. ஷைலஜா அவர்கள், இனிய இளவல் எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி நவின் அவர்களை வணங்குகிறேன். அரங்கத்தில் வீற்றிருக்கும் மகத்தான படைப்பாளி நாஞ்சில் நாடன் சார், மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீ, மற்றும் கோவையின் முக்கியமான படைப்பாளிகள், இலக்கிய நண்பர்கள், வாசகர்கள், என் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அனைவரையும் வணங்குகிறேன்.
தமிழ்ல இது என்னோட முதல் புத்தகம். இது நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. சில ஆண்டுகளாகவே மொழிபெயர்ப்பு, சிறுகதைகளை எழுதிப்பார்ப்பதுங்கற முயற்சியில் இருந்தாலும், ஆசை என்னவோ பெரு நாவல்களை எழுதி விடணும்ங்கறதுதான். பல ஆண்டுகளா எழுதணும்கற ஆசை இருந்தாலும், அப்பப்போ வலைப்பூக்கள் மாதிரி கொஞ்சம் எழுதிப்பார்த்திருந்தாலும், நாம ஏன் இலக்கியத்தில ஈடுபடணும்கறத்துக்கு வலிமையான காரணங்கள் எனக்கு இல்லாததனால ஒரு கன்விக்ஷன் இல்லாமத்தான் ரொம்ப நாள் இருந்தேன். கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அத்வைத வேதாந்தத்தைக் கண்டுபிடிச்சேன். நானும், என் மனைவி அனுவும் சுவாமி குருபரானந்தரிடம் வேதாந்தம் கத்துக்க ஆரம்பித்தோம். அதோட துவக்கப்பாடத்தில ஒரு உபனிஷத் மாணவனுக்குத் தேவையான தகுதிகள்னு ஒரு பட்டியல் வருது. அதுல ஒரு தகுதியா ஷமாதி ஷட்க சம்பத்தி அப்படிங்கறது. இது ஆறு தகுதிகளோட தொகுப்பு. ஷமம் மனக்கட்டுப்பாடு, சமாதானம் - மனத்தைக் குவித்து ஒருமுகப்படுத்துதல் அப்படிங்கற இரண்டு தகுதிகளை வளர்த்துக்கறத்துக்கு ஒரு கருவியா வாசிப்பையும், எழுத்தையும் கையாள முடியும்னு தோணிச்சு. நான்கு ஆண்டுகளாகவே தொடர்ந்து வாசிப்பிலும், மொழிபெயர்ப்பிலும், புனைவெழுத்திலும் இருக்கிறேன். ஓரளவுக்கு மனம் குவிந்து செயலில் ஈடுபடமுடிகிறதுங்கற புரிஞ்சிகிட்டேன். அப்புறம் ஸ்வதர்மம்ங்கற ஒரு கோட்பாடு. தன்னறம். நான் ஈடுபட்டிருக்கிற ஆசிரியர் பணிதான் என் தன்னறம்ங்கற தெளிவு எனக்கு ரொம்ப முன்னாடியே வந்துடுச்சு. ஆனால் வாசிப்பும், எழுத்துல ஈடுபடறதும் என்னோட தன்னறம்தான்ங்கற தெளிவை என்னுடைய வேதாந்த ஆசிரியர்களும், எழுத்தாளர் ஜெயமோகன் போன்ற இலக்கிய ஆசிரியர்களும் கொடுத்தாங்க.
இப்ப நான் எழுதறதுங்கறது அங்கீகாரத்தை எதிர்பார்த்தோ, புகழுக்காகவோ இல்ல. வாசிக்கும்போது, எழுதும்போது மனம் அதில இயல்பா ஈடுபடறதில இருக்கிற ஆனந்தம், ஒரு புனைவை எழுதி முடித்தபிறகு அடையக்கூடிய திருப்தி. ஒரு மொழியில் தீவிரமாக இயங்கறப்ப நமக்கு ஏற்படற விடுதலை உணர்வு இவையெல்லாம்தான் இப்ப நான் எழுத்துல ஈடுபடறதுக்குக் காரணம். அதுவுமில்லாம மொழி என்னும் கருவியைக் கொண்டு வாழ்வு குறித்த அடிப்படையான ஐயங்களுக்கும், வியப்புகளுக்கும் ஆதாரமான ஒன்றைத் தொட்டு விட முடியும்ங்கற ஒரு சாத்தியம் இருக்குதில்லையா. அது தரக்கூடிய தரும் கிளர்ச்சியும்,சிலிர்ப்பும் ஒரு காரணம். சொற்களாலாலேயே உலகங்களையும், மாந்தர்களையும் கட்டி எழுப்பிவிட முடியும்ங்கற நம்பிக்கை தர்ற உத்வேகம், உவகை இவையெல்லாம்தான் நான் இப்ப எழுத்தில இயங்குவதற்கான அடிப்படையான காரணங்கள்.
இலக்கியம் என்னும் கலை மற்ற கலைகள் மாதிரி இல்லாம அறிவுத்துறையோட நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கு. அதனாலயே இலக்கியப் படைப்புகள்ல தத்துவதேடல் தவிர்க்க முடியாதது. நான் அடிப்படையில தத்துவ மாணவனாவும் இருக்கறதுனால, என் படைப்புகளை அடிப்படையான தத்துவக்கேள்விகளை எக்ஸ்ப்ளோர் பண்ணமுடியுமான்னு பார்க்கறேன். நாவல் மாதிரி பெரிய கேன்வாஸ்ல வொர்க் பண்ணும்போது அதோட சாத்தியங்கள் இன்னும் அதிகமா இருக்கும்னு நெனக்கறென்.
ஆனால் சிறுகதைகளில் நான் எதைச் சாதிக்க விரும்புகிறேன்? ஒரு சிறுகதையை எழுதுவதற்கு முன்பு நான் தீர்மானித்துக் கொள்ளும் விஷயங்கள் சில உண்டு. ஒரு கதையின் மைய மாந்தர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட தேர்வுகளில் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? அதற்கான ஆழமான காரணங்கள் யாவை? ஏன் தங்களை விதவிதமான சூழ் நிலைகளில் வலிந்து சிக்க வைத்துக் கொள்கிறார்கள்? ஒரு சிறு நிகழ்வை விவரிப்பதை நிமித்தமாகக் கொண்டு மானுட இயல்பின் சிக்கல்களை நோக்கிய வினாக்களை எழுப்பி விடமுடியுமா? சிறுகதை என்று மட்டுமல்ல, பொதுவாகவே புனைவை இயற்றும்போது, வாசகர் சிரமமின்றி அந்தப் புனைவுலகுக்குள் நுழைய அனுமதித்து, அப்புனைவை ஓர் அறாக்கனவென பொருட்படுத்தும் வண்ணம் இயற்ற வேண்டும் என்பதே என் பிரதானமான ஆவலாக இருக்கிறது. எழுத்தின் தொழில் நுட்பங்கள் பயின்று வருதல் ஒரு புறம் இருந்தாலும், எழுத்தில் போதனை செய்தல், மனம் போனபடி எழுதிவிட்டுப் பிறகு எழுதியதை நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்குதல் போன்ற சல்லித்தனமான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். பல்வேறு வடிவங்களில் கதைகளை எழுதிப் பார்க்கும் விளையாட்டாகவும் நான் புனைவெழுத்தை - குறிப்பாகச் சிறுகதை என்ற வடிவத்தை - காண்கிறேன். இந்த தொகுப்பில இருக்கிற கதைகள்ல சில விஷயங்களை எக்ஸ்ப்ளோர் பண்ண முயற்சி பண்ணியிருக்கேன். அசைவும், பெருக்கும், கல்லளை போன்ற கதைகள்ல கதாபாத்திரங்களோட ஆன்மிகத் தவிப்புதான் மையம். ஊனுடல், பேராசிரியரின் கிளி போன்ற கதைகள்ல உடல் மீதான இச்சைக்கும், உயிரின் மீதான ஈர்ப்புக்குமுள்ள இயல்பான அந்த கான்ஃபிலிக்ட தொட முயற்சி பண்ணிருக்கேன். தாய்மை என்பது பெருங்கருணையா அல்லது பெரும் சுயநலமா என்ற கேள்விதான் பிறப்பொக்கும் கதையில இருக்குது. கில்ட் ஃபீலிங்க் என்பது இலக்கியத்துக்கான ஒரு யுனிவர்சல் ரா மெட்டீரியல். அதை அடிப்படையா வைச்சும் சில கதைகள் இந்தத் தொகுப்பில இருக்கு. இதுதான் என் படைப்புகளின் இயல்போட ஒரு சுருக்கமான வரைபடம். இந்தத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரைல இது குறித்து இன்னும் விரிவா எழுதியிருக்கேன்.
இப்போ நன்றி சொல்லும் தருணம்
ஜெயமோகன்
நான் ரொம்ப நாட்களாவே இலக்கியம், குறிப்பா புனைவுகள் வாசிச்சுட்டு இருக்கேன். எழுதணும்கற ஆசையும் ரொம்ப நாளாவே இருந்தது. ஆனா ஒவ்வொரு தடவ ஏதாவது எழுதும்போதும், நாம எழுதறது இலக்கியமாங்கற சந்தேகம் இருந்துட்டே இருக்கும். இருபது வருடங்கள் முன்னாடி எழுத்தாளர் ஜெயமோகனைக் கண்டடைந்தேன். எவ்வளவு வாசிச்சிருந்தாலும், இலக்கியத்தோட அடிப்படைகள் அவருடைய எழுத்துக்கள் மூலம்தான் எனக்குத் தெளிவாச்சு. நவீனகால இலக்கிய விமர்சனத்த நிறைய வாசிச்சிருந்த எனக்கு சாரோட ரசனை விமர்சனம் பல திறப்புகளை ஏற்படுத்துச்சு. தமிழ் இலக்கியம் மட்டுமல்ல, உலக இலக்கியத்தை எப்படி வாசிக்கணும்கறதையும், நாம எழுதறதோட இலக்கியத்தரத்தை நாமே எப்படி நிர்ணயிச்சிக்கலாம்கறது அவர்கிட்டதான் கத்துகிட்டேன். ஒரு இலக்கிய வாசகனா, எழுத ஆசைப்படுறவனா இன்னிக்கு வரைக்கும் அவர்கிட்ட இருந்து கத்துகிட்டேதான் இருக்கேன். அவருடைய கண்ணீரைப் பின்தொடர்தல் நூலிலிருந்துதான் இந்திய இலக்கியம் குறித்த உண்மையான பெருமிதமே எனக்கு உருவாச்சு.
அதேபோல நான் அத்வைத வேதாந்தத்தைக் கற்க ஆரம்பித்த புதிதில் எனக்கு நிறைய குழப்பங்கள், ஐயங்கள் இருந்துது. நான் கற்றுக் கொண்டிருப்பது மரபான வேதாந்தம். அதைக் கற்றுக் கொடுக்கற ஆசிரியர்கள் எல்லாமே ஆனந்தாதான். நம்ம நாட்டில ஆனந்தான்னு பேர் முடிஞ்சாலே நமக்குக் கொஞ்சம் அலர்ஜிதான். அவங்களோட நம்பகத்தன்மை குறித்து ஒரு சந்தேகம் இருந்துட்டே இருக்கும். எனக்கு ஜெ-யோட தத்துவக்கட்டுரைகள வாசிக்கும் போது, - அவர் குறிப்பிட்ட சில காலம் கீதைக்கு உரை எழுதிட்டிருந்தார் -நிறைய ஞானிகளைக் குறித்தும், இலக்கியவாதிகளுக்கும், ஞானிகளுக்கும் இருக்கற தொடர்பு பற்றியும், இலக்கியத்துக்கும், தத்துவத்துக்கும் இருக்கற தொடர்பு பற்றியும், எல்லாவற்றுக்கும் மேலாக அவர் குரு நித்யா பற்றியும் நிறைய எழுதுவார். அதையெல்லாம் வாசித்த போதுதான் எனக்கு நம் மரபான தத்துவத்தின் மீது நம்பிக்கை வந்து, அதோட மாணவனா மாறினேன். எனக்கு இலக்கியத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொடுத்ததுக்கும், இந்திய தத்துவத்தைக் கற்பதிலுள்ள ஐயங்களைக் களைவதற்கும் உதவியாக இருந்த ஆசிரியர் ஜெயமோகனை நன்றியுடன் வணங்குகிறேன். இந்த மேடையில சில நிமிடங்கள்ல அவருக்கு நன்றி சொல்லி முடிச்சிட முடியாது.
அவருடைய கதைகளை மொழிபெயர்ப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கினார். ஒரு படைப்போடு மிக நெருக்கமாக உறவாடறதுக்கு மொழிபெயர்ப்பு ஒரு சக்தி வாய்ந்த கருவி. அவர் கதைகளை மொழிபெயர்க்கும்போது, சிறுகதைகள் நுட்பங்கள் பலவற்றை நான் கண்டுகொண்டேன். ஒரு மாஸ்டர் எப்படி ஷார்ட் ஃபார்ம் ஆஃப் ஃபிக்ஷனை கையாளறாருன்னு பாக்கறதுக்கு வாய்ப்பா இருந்துது. நாம சிறுகதை எழுதும்போது, நம்ம ஸ்டைல்ல எப்படி அவர் கையாண்ட நுட்பங்களை கொண்டு வர்லாங்கறது ஒரு எகஸைடிங்க்கான ப்ராஸ்பெக்டா இருந்துச்சு. ஜெயமோகன் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவையும், பெற்றுக் கொண்டவையும் ஏராளம். அவருக்கல்ல. இந்தப் பிறப்பில் அவரை வாசிக்கவும், அவரிடமிருந்து கற்கவும் பணித்த அந்தப் பேரிருப்புக்கு நன்றி கூறுகிறேன்.
அ. முத்துலிங்கம்
நான் தீவிரமாக எழுத்தில் ஈடுபடுவதற்கு அ. முத்துலிங்கம் அவர்களின் பாராட்டும், ஊக்கமும் ஒரு காரணம். முதலில் என் ஆங்கில மொழியாக்கங்களை வாசித்து விட்டுத்தான் அவர் என்னை அழைத்தார். அவருடன் அலைபேசியில் பேச அமைந்த ஒவ்வொரு தருணமும் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன். ஒவ்வொருமுறை உரையாடும்போதும் அவருடைய உற்சாகத்தையும், செயல் ஊக்கத்தையும் எனக்கும் மடை மாற்றிவிட்டு விடுவார். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும் பெரும்பாலானவற்றை அவர் வாசித்து விடுவார். அவற்றில் என் மொழியாக்கம் தனித்துத் தெரிவதாகவும், அதற்குக் காரணம் ஆங்கிலத்தில் நான் மொழியாக்கம் செய்யும் புனைவுகள் செறிவான இலக்கிய மொழியில் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டது என்னை மகிழ்ச்சியிலும், மேலும் எழுத்தில் ஈடுபட வேண்டும் என்ற செயலூக்கத்திலும் ஆழ்த்தியது. என் மொழியாக்கங்களை மட்டுமல்ல, என் சொந்தப் புனைவுகளையும் அவர் உடனுக்குடன் வாசித்துத் தன் கருத்துக்களைச் சொல்வார். சில கதைகளின் முடிவுகள் பலவீனமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். பல கதைகளில் என் மொழியையும், கற்பனையையும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். இந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதித் தருமாறு அவரிடம் வேண்டிக் கொண்டபோது மிகுந்த கருணையோடு ஓர் அழகிய முன்னுரையை எழுதிக் கொடுத்தார். அவரோடு தொடர்பு கொள்ளும் தருணங்களை எனக்கு வழங்கிய பேரிறையை நன்றியுடனும், உவகையுடனும் நினைத்துக் கொள்கிறேன்.
அகிலன் சார்
ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் நான் வேதியியல் இளங்கலை பயின்ற போது நவீனத் தமிழ் இலக்கியத்தில் என்னை ஆற்றுப்படுத்தியவர் அக்கல்லூரியின் ஆங்கில விரிவுரையாளர் அகிலன் எத்திராஜ். தற்போது காலச்சுவடுக்காக ஓர்ஹான் பாமுக் போன்றோரின் நூல்களை அற்புதமாக மொழிபெயர்த்து வருபவர். பாலகுமாரனையும், சுஜாதாவையும் வாசித்தபடி அவர்களின் கலவையான ஓர் எழுத்தாளனாக ஆகி விடவேண்டும் என்ற கனவிலிருந்த எனக்கு, எழுத்தின் பலவித சாத்தியங்களையும் அன்று இயங்கிக் கொண்டிருந்த நவீன எழுத்தாளர்கள் மூலம் அறிமுகப்படுத்தினார். கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு அன்று வந்து கொண்டிருந்த சுபமங்களாவின் இதழ்களைத் தொகுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார். அதைக் கொடுத்து என்னை வாசிக்கச் சொன்னார். ஒரு மாதம் எடுத்து அதை வாசித்த போதுதான் இலக்கியம் குறித்த என் பார்வை தெளிவுபட்டது. அசோகமித்திரன், வண்ணநிலவன், வண்ணதாசன், க.நா. சுப்ரமணியம் போன்றோரின் எழுத்துக்கள் பரிச்சயமாகின. வாரமலர் கவிதைகளுக்கும், கணையாழி கவிதைகளுக்குமுள்ள வேறுபாடு புலப்பட்டது. அப்போதிருந்து நான் வாசிக்கும் நூல்களை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கத் துவங்கினேன். சுஜாதாவின் “கணையாழியின் கடைசிப் பக்கங்கள்,” அதன் பின் அவர் தன் கட்டுரைகளில் அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்கள், என அவர் என் மீது செலுத்திய தாக்கம் என் வாசிப்பு மற்றும் எழுத்துப் பயணத்தில் ஒரு முக்கியமான வழி காட்டும் விளக்காக இருந்தது.
கே.வி. ஷைலஜா
இந்தத் தொகுப்பை வம்சியில் வெளியிட இயலுமா என்று மிகுந்த தயக்கத்துடன் ஷைலஜா அம்மாவிடம் கேட்டேன். பவாவும், அவரும் அமெரிக்கா வந்திருந்தபோது, நண்பர் ராஜன் வீட்டில் இருவரையும் சந்தித்து, அவர்களோடு இரு நாட்கள் செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் மொழியாக்கங்கள் குறித்து அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். அவர் என் கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்டு வம்சியில் வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சியே என்று தெரிவித்தார். வம்சி பதிப்பகம் தமிழகத்தின் மிக முக்கிய இலக்கியப் பதிப்பகங்களில் ஒன்று. அதிலிருந்து என் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவருவது எனக்குப் பெருமை. ஷைலஜா அம்மாவுக்கு என் எளிய நன்றி.
இதழ்கள், நண்பர்கள்
இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் சொல்வனம் இதழிலும், பிற, பதாகை, வல்லினம், உயிரோசை, அரூ ஆகிய இதழ்களிலும் வெளிவந்தன. அவ்விதழ்களுக்கு என் நன்றி. சொல்வனத்தின் ஆசிரியர்கள் பாஸ்டன் பாலா மற்றும் மைத்ரேயன் இருவரும் அந்த இதழில் எனக்குத் தந்த இடம் எனக்களித்த ஊக்கமும், நம்பிக்கையும் மிகப்பெரியது. பல கதைகளை எழுதி முடித்தவுடனேயே நண்பர் பாலாஜி ராஜூவுக்கு அனுப்புவேன். அவர் வாசித்துச் சொல்லும் கருத்துக்கள் என் கதைகளை மேம்படுத்துவதற்கு உதவின. நான் எழுதும் எல்லா எழுத்துக்களையும், மொழியாக்கங்களையும் முதலில் என் மனைவி அனுதான் வாசிப்பார். வாசிக்கையில் அவரது முக பாவனைகளில் ஏற்படும் மாற்றத்தை வைத்து, கதையில் திருத்தங்கள் தேவைபடுகின்றது என்பதை உணர்ந்து கொள்வேன். கதையை ஒரு பெண்ணின் பார்வையில் வாசிக்கும்போது நாம் தவறவிட்ட இடங்களைக் கண்டு கொள்ள முடியும். அவரது திருத்தங்களை மிகுந்த உறுதியோடு முன் வைப்பார். என்னால் அவற்றை எப்போதும் மறுக்க முடிந்ததில்லை. என் இலக்கியத் தோழமைகள் ஜமீலா, ஸ்வர்ணா, ஆஸ்டின் சௌந்தர், முத்து காளிமுத்து, மதன், விஸ்வனாதன் மகாலிங்கம், ஷங்கர் பிரதாப், சு. வெங்கட், பாலசுப்ரமணியம் நாச்சிமுத்து, அருண்குமார் அருணாசலம், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம், வெங்கட பிரசாத், ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் போன்றோர் என் கதைகளை வாசித்து அவ்வப்போது தங்கள் கருத்துக்களை என்னிடம் தெரிவிப்பார்கள். எல்லாருக்கும் நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் என் அன்பையும், பேருவகையையும் ஏற்றி வணங்குகிறேன்.
பெற்றோர்
நான் இளம் வயதிலேயே வாசிப்பிலும், எழுத்திலும் ஈடுபடுவதற்கு முக்கிய காரணம் என் அம்மா. நான் சிறுவயதில் படைப்பூக்கமாக எது செய்தாலும் எல்லாரிடமும் சொல்லி பெருமைப்படுபவர் என் அப்பா. இப்பவும் அப்படித்தான். அவர்கள் இருவரும் இந்த நிகழ்வில் இருப்பது எனக்குப் பெருமை. மகன் தந்தைக்காற்றும் உதவியாக இந்த நூல் வெளியீடே அவர்களுக்கு நான் செலுத்தும் ஒரு வகையான நன்றிதான்.
கோவை நண்பர்கள்
இந்த விழா நிகழ்வதெற்கென்று பல நண்பர்கள் உதவினார்கள். இருபது ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்காத எனக்கு அவர்கள் செய்த பேருதவியின் காரணமாகத்தான் இந்த விழாவை நிகழ்த்த சாத்தியமாகியிருக்கிறது. க்விஸ் செந்தில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து உதவினார். ஜி.எஸ்.எஸ்.வி. நவினும், விஜய் சூரியனும், நம்ம வெரி ஓன் யானை டாக்டர் பவித்ரா ஆகியோரை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். நிகழ்வுகளை ஸ்ருதி டிவி கபிலன் ஒளிப்பதிவு செய்வது எனக்குப் பெருமை. அவருக்கும் என் இதயபூர்வமான நன்றி.
நீங்கள்
இறுதியாக, இந்த அவையில் அமர்ந்திருக்கும் நீங்கள். முதலில் நான் ஓர் இலக்கிய வாசகன்; அப்புறம்தான் எழுத்தாளன். எனவே நீங்கள்தான் நான். ஓர் இலக்கிய வாசகன் ஆழ்ந்து பயணம் கொள்ளும் வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். வாசிக்கையில் அவ்வெண்ணமே உங்களையும் ஆட்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கிறேன்.