19 ஜூலை, 2024

நன்றி ஜெ!


 

அன்புள்ள ஜெ,

ஆசிரியரின் கருணை என்பது தாயின் கருணையையும் மீறியது. நீங்கள் என் விழாவுக்கு வருகிறேன் என்று ஒப்புக் கொண்டது, விழாவுக்கு வந்திருந்து சிறப்புரையாற்றியது, நிறைய விஷ்ணுபுரம் நண்பர்கள் கலந்து கொண்டது, அவர்கள் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தது என்று அனைத்துமே உங்களது பெருங்கருணையால்தான் நடந்தது. அனைத்துக்கும் நன்றி என்ற சொல்லை சமர்ப்பிப்பதன் போதாமையை உணர்கிறேன். எப்போதுமே வழங்குகின்ற இடத்திலேயே இருக்கின்ற உங்களது மேன்மையின் மீது எனக்குள்ள பிரமிப்பு உங்கள் அருகாமையில் கழித்த தருணங்களில் பன்மடங்கு அதிகமாயிற்று. என் உள்ளத்தில் ஓடும் நன்றியுணர்வை எவ்வளவு சொன்னாலும் மாளாது. என்னைப் போன்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு நீங்கள் வழங்கிக் கொண்டிருக்கும் கொடையால்தான் அறிவுத்துறையில் தொடர்ந்து ஈடுபடும் உத்வேகம் கிடைக்கிறது. 

நீங்கள் ஆற்றிய உரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறேன். உரை கேட்ட பல நண்பர்களும் அவ்வண்ணமே கருதினார்கள். அந்த உரையின் மீதான ஒரு சிறு விவாதமே விஷ்ணுபுரம் அமெரிக்க குழுவில் நடந்தது. இலக்கியத்தில் தனியனுபவத்தின் இடம் என்ற அந்த உரை என்னைப் போன்று எழுத விழைவோருக்கு ஒரு ஆவணமாக என்றும் இருக்கும். உங்களை விழாவுக்கு உரையாற்ற வேண்டும் என்று அழைத்தபோது, நீங்கள் பொதுவான ஒரு இலக்கிய உரையை ஆற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக இருந்தது. நீங்கள் செய்ததும் அதுவே.  இந்த உரையிலிருந்து நான் பெற்றுக் கொண்டவை ஏராளம். ஏற்கனவே பல விஷயங்களை உங்களிடமிருந்து அறிந்தேன் என்றாலும், அவை ரீஇன்ஃபோர்ஸ் செய்யப்படும் போது மனதில் ஓர் உத்வேகம் எழுகிறது. அந்த உரையின் கால அளவுகூட உங்கள் கருணையின் வெளிப்பாடுதான் என்பதை அறிந்தபோது நெகிழ்ந்து விட்டோம். 



உங்களது உரையிலும் சரி, மறுநாள் உங்களை அறையில் சந்தித்தபோது இலக்கியம் தொழிற்படும் நுட்பங்கள் குறித்து நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் நான் தொடர்ந்து எழுதுகையில் துணை நிற்கும். சிறுகதை வடிவம் மிகச் சவாலானது. ஆனால் நீங்கள் கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றினாலேயே ஒருவர் ஒரு நல்ல சிறுகதையை எழுதி விடமுடியும். சிறுகதையில் தத்துவம் அலசப்படலாமா, எனில் அது கதைக்குள் எவ்வாறு பயின்று வர வேண்டும் என்று ஒரு உதாரணம் கொடுத்தீர்கள். நேற்று நினைத்தாற்போல் உங்கள் தளத்துக்குச் சென்று ‘எண்ண எண்ணக் குறைவது’ வாசித்தேன். அப்படியே நீங்கள் சொன்ன இலக்கணத்தில் எழுதப்பட்ட கதை! உங்களோடு கழித்த அந்த அரைநாள் விலைமதிப்பற்றது. சிறுகதைத் தொழில் நுட்பம் குறித்தும், உங்கள் படைப்புகளின் மொழிபெயர்ப்பு எவ்வாறு அணுகப்படவேண்டுமென்பது குறித்தும் (வரும் சனியன்று நான் மொழிபெயர்த்த பவாவின் நூலை பத்தாயத்தில் வைத்து வெளியிடலாமென்று பவா இன்று என்னை அழைத்தார்), என் வேண்டுகோளுக்கிணங்க தாமஸ் மன்னின் மந்திர மலையை எவ்வாறு வாசிக்க வேண்டுமென்பது குறித்தும் உரையாடியது என்றும் என் மனதில் இருக்கும். 



இம்முறை க்விஸ் செந்தில் என்ற அற்புதமான மனிதரை நான் நண்பனாக அடைந்திருக்கிறேன். விழாவின் ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டுமென்று அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது சற்றும் தயங்காமல் எல்லா உதவிகளையும் செய்தார். அவரும் நிறைய ஆலோசனைகளைக் கொடுத்தார். விழா அன்று வாயிலிலேயே நின்று “ஜெகதீஷ், வர்ற நிறைய பேரை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் நின்று அவர்களை வரவேற்கிறேன். நீங்க உள்ள போய் ஆகவேண்டியதைப் பாருங்க,” என்று சொல்லி வாயிலிலேயே நின்று கொண்டார். சற்றே தயக்கத்துடனும், இறுக்கத்துடன் இருந்த என்னையும், அனுவையும் அவருடைய நட்பான கமெண்டுகளால் இலகுவாக்கினார். அவரை என்றென்றும் நினைவில் கொண்டிருப்பேன். அவர் முகம் நினைவுக்கு வரும்போதெல்லாம் அது ஒரு கௌபாய் தொப்பியை அணிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அவரும் நீங்களும், ஈரோடு கிருஷ்ணனும் ஸ்பகெடி வெஸ்டர்ன் கௌபாய் திரைப்படங்கள் குறித்து மேற்கொண்ட தீராத உரையாடல் எனக்கு எதுவுமே புரியாவிட்டாலும் கூட சுவாரசியமானது.  அவ்வப்போது ஜெய்சங்கர், மனோகர், ரவிச்சந்திரன் நடித்த கௌபாய் படங்களின் ரெஃபெரென்ஸ் வந்து போகும் போது கொஞ்சம் புரிந்தது. ஆனால் ஒன்று, கௌபாய் உடையோடு இரண்டு ஹோல்ஸ்டரிலும் செருகிய துப்பாக்கிகளோடு நியூயார்க்கில் ஆண்டுதோறும் நடைபெறும் சார்லஸ் ப்ரான்ஸனின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு நீங்கள் செல்வதாக இருந்தால் நான் உள்பட நம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் பலர் அதில் இணைந்து கொள்வது உறுதி. க்விஸ் செந்தில் முன்னிலை வகிப்பார் என்று நினைக்கிறேன்.


ஜி.எஸ்.எஸ்.வி. நவினின் இலக்கியப்பார்வை மீதும், அவரது எழுத்துக்கள் மீதும் எனக்குப் பெருமதிப்புண்டு. இந்த விழாவுக்காக எனக்கு நிறைய விஷயங்களில் உதவினார். எப்போதும் அழைத்தாலும் முகம் சுளிக்காமல் பேசி, நான் கேட்ட காரியங்களை உதவினார். தொகுப்புரைக்கு பவித்ராவை அவர்தான் கேட்டுக்கொண்டார். விஜய் சூரியன் பதாகைகளுக்கு உதவினார். மீனாம்பிகை மறைமுகமாகப் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இன்னும் எத்தனை பேர் எனக்குத் தெரியாமல் உதவியிருக்கிறார்களோ! ஒன்று மட்டும் நிச்சயம். அவர்களை அனைவரையும் இணைத்த ஒற்றைக் கயிறு நீங்கள்தான். உங்களுக்கு நன்றி சொல்வதன் மூலம் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

விழாவுக்கு கோவையின் முக்கிய படைப்பாளிகள் பலரை அழைத்திருந்தேன். நாஞ்சில் நாடன் சார் வந்திருந்து அரங்கத்தை இன்னும் பெரிதாக்கி விட்டார். செல்வேந்திரன், நரேன், விஜய் சம்மங்கரை, மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீ என்று பல படைப்பாளிகளும், நண்பர்கள் லக்ஷ்மண் தசரதன், ஓவியர் அருண்குமார் அருணாசலம் ஆகியோர் வந்திருந்தது என் மனதுக்கு நிறைவாக இருந்தது.


இம்முறை செய்ய நினைத்து இயலாமல் போன பல விஷயங்களில் ஒன்று நித்யவனத்துக்கு செல்லுதல். சில மருத்துவப்பரிசோதனைகளுக்காக நானும், அனுவும் தொடர்ந்து மருத்துவமனை செல்ல நேரிட்டு விட்டது. எனவேதான் திட்டமிட்ட நிறைய விஷயங்களைச் செய்ய இயலவில்லை. உங்கள் அமெரிக்க வருகையை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

மீண்டும் நன்றி

அன்புடன்

ஜெகதீஷ் குமார்


மேலும் வாசிக்க