5 ஏப்ரல், 2015

கவிஞர் தேவதேவனுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கவிஞருக்கு,
இன்றைக்குப் பூராவும் உங்கள் கவிதைளையே வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எங்கோ உச்சத்தில் இருக்கிறீர்கள். உங்களைத் தொட உங்கள் கவிதைகளின் வாயிலாகவே முயற்சிக்கிறேன்.
சில கவிதைகள் சட்டென்று நேரடியான அனுபவத்தைத் தந்து உவகை கொள்ள வைக்கின்றன. சில கவிதைகளில் உங்களோடு பயணிக்கத் துவங்கி நீங்கள் உச்சத்தை அடையும் போது என்னால் அங்கு வர இயலாது போய் விடுகிறது. இதன் காரணம் என் மொழியின் பற்றாக்குறையோ, கவிமனதைப் புரியாதிருப்பதோ அன்று. உங்களது ஆன்மீகத் தளத்தை நான் இன்னும் தொட இயலாதிருப்பதே காரணம் என்று புரிந்து கொள்கிறேன்.
ஒவ்வொரு கவிதையையும் இருமுறை வாசித்தேன். வாய் விட்டு சொல் சொல்லாக இன்னொரு முறை. ஒவ்வொரு முறை கவிதையை வாசித்து முடிக்கும் போதும் மனம் அமைதியான புன்முறுவலுடன் உவகை கொள்கிறது. கவிதை தரும் சித்திரங்கள் மனதில் நிலைத்து அதை ஒரு படி மேலுயர்த்துகின்றன.
ரயில் பெட்டியில் ஒரு கன்னிகாஸ்திரி என்ற கவிதையை நினைத்துக் கொள்கிறேன்.
வண்டி புறப்படவும்
தனியே விட்டுவிட்டு
மகிழ்ச்சியுடனே
விடைபெற்றுச் சென்றனர் தோழிகள்
என்ற துவக்க வரிகள் ரயில் பெட்டியில் நிகழும் அந்தத் தற்காலிகத் தனிமையையும் மௌனத்தையும் குறிக்கிறது. இந்த மௌனத்தை இட்டு நிரப்ப ஆயிரம் கவிதைகள் எழுதப்படலாம். கன்னிகாஸ்திரீயின் உள்ளக்குமுறல்களை வார்த்தைகளில் வடிக்கலாம். அவள் வரித்துக் கொண்ட வாழ்க்கை அவளுக்கு அளிக்க மறுத்த காமம் குறித்துப் பேசலாம். அவளது வறண்ட வாழ்க்கை குறித்து விவாதிக்கலாம்.
ஆனால் நீங்கள் ஒளியைக் குறித்துப் பேசுகிறீர்கள். அவள் உள்ளத்தில் உறையும் இறையைப் பாடுகிறீர்கள். ஆயிரம் ஆண்டுகாலத் தமிழ்க்கவிதை மரபின் தொடர்ச்சியாக நின்று அவளது ஆன்மாவின் ராகத்தை இசைக்கிறீர்கள்.
மேனியெங்கும்                          
மணப்பெண் போலொரு நாணத்தின் நறுமணம்
என்ற வரிகளில் கட்டுண்டு கிடந்தேன்.
சிலுவை மிளிரும் வெள்ளுடையையும்
தொண்டிதயம் ஒளிரும் என் கன்னிமையையும்
நேசருடன் ஒப்படைத்தேன் என்கிறாள்.
புகைவண்டி ஓடத்துவங்கிய பின் பாடும் இரும்பு ராகத்திலும். இயற்கைக் காட்சிகளிலும், சகபயணிகளின் மத்தியிலும் அவள் நேசருடன் கலந்திருப்பதாக எண்ணுகையில் பாடரும் பொருளில் அன்பைப்போல் மற்றொன்று பெண்மையன்றி வேறென்ன? என்று நீங்கள் விடுத்த வினா நினைவுக்கு வந்தது.
இக்கவிதையை என் மனைவிக்கு வாசித்துக் காட்டியபோது வியந்து முகத்தில் குறி காட்டினாள். அவள் இலக்கிய வாசகி அல்லள். ஆனாலும் அவள் இதயத்தை நேரடியாய் தொட்டது இக்கவிதை.
இன்னார் என்ற கவிதை எதனோடும் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளாதவனிடத்து மட்டுமே அன்பு சுரக்கும் என்கிறது. ஞானியின் பெருமையைப் பாடுகிறது. ஆண் பெண் கவிதை முலைதாங்கி பெண் என நாமம் ஏற்றுச் செல்லும் ஒரு முனையும்,தனித்துத் தவம் புரியும் மற்றொரு முனை குறித்தும் பேசுகிறது. சீட்டாட்டம் என்பது ஆடுபவர்களை ஆறு இதழ்கள் கொண்ட மலராகச் உருவகிக்கும் ஒரு சித்திரம். நக்ஷத்ர மீனும் ஒரு சித்திரத்தை அளித்து அதிர்வை ஏற்படுத்தும் கவிதையே. இன்னும் தொடுதல், மரத்தின் வீடு, குடும்பம், சந்திப்பு, உள்ளும் புறமுமாய்ச் சில படிமங்கள், தவவெளி மணமாயிற்று, வேலிப்பூக்கள், அசைவமும், சைவப்பெருமைகளும், தீ, உதயம், கவனிப்பாரற்றவை என்று உங்கள் வலைத்தளத்தின் ஒரு பக்கத்திலிருந்த கவிதைகளே என்னை ஆட்கொண்டன இன்று. ஒவ்வொரு கவிதையும் தரும் அனுபவம் புதுமையானதாகவும், உற்சாகமானதாகவும், அன்பின் வழியது உயிர்நிலை என்பதை வலியுறுத்தும் வண்ணமும் உள்ளது. இதோ எனக்கான கவியை அடைந்து விட்டேன் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.
ஓர் ஆத்ம குருவின் பாதம் பணியும் சீடனைப்போல் உணர்கிறேன். இத்தனை அன்பைப்பொழியும் பெருங்கருணையால் நிரம்பி இருக்கும் மகாகவிக்கு என் வணக்கங்கள்.
உங்களுக்காக விஷ்ணுபுரம் எடுத்த விழாவில் உங்களைச் சந்தித்தேன். உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். உம் கவிதைத் தொகுதிகளில் கையெழுத்து வாங்கினேன். அவற்றில் சில கவிதைகளை வாசிக்க முயன்று தோற்றேன். ஜெ உம் கவிதைளுக்கு எழுதிய விமர்சனக் கட்டுரைகள் பேருதவியாய் இருந்தன. உமது சில கவிதைகளை வாசித்த பின்னர் உங்களோடு நெருக்கமாய் உணர்கிறேன். அருகாமையில், தங்கள் அடி நிழலில்தான்.ஆட்சி பீடத்தில் அல்ல.
பேரன்பின் பிரவாகம் உங்கள் வலைத்தளமெங்கும் வழிந்து கிடக்கிறது. இனி அதில் திளைத்து ஈடேறுவேன். மேன்மையுறுவேன்.

மேலும் வாசிக்க