யூதாஸின் முத்தம் இழைத்த துரோகம்
உம் கைகளில் விலங்கு பூட்டியது.
நீர் தேவன் மகனோ என்ற
தேவாலயத்து உயர்த்துறவியின் கேள்வியிலேயே
பதில் இருந்ததைச் சுட்டிக் காட்டினீர்.
இறைவனுக்கெதிராய் சதி செய்த குற்றம் உம்மேல்.
இன்னொரு சீடனும் மும்முறை மறுதலித்தான் உம்மை.
இரு மன்னர்களின் அவையில் குற்ற விசாரணைக் கைதியானீர்.
மன்னன் மனைவி உம்மைக் கனவிற் கண்டாள்.
நேர்மையின் திருவுருவைச் சந்தேகித்தல்
வாள் முனைக்கு வலியச் சென்று கழுத்தைக் கொடுத்தல் என்றாள்.
களங்கம் ஏதும் காண இயலாது கைகழுவினர் இரு மன்னரும்.
மதம் பிடித்த தலைவர்
இறைவனின் திருக்குமாரனை
கொலைகாரன் ஒருவனுடன் குருசேற்றத் துணிந்தனர்.
வெறி பிடித்த ஊரும் துணை சேர்ந்தது.
கசையடிகள் தசை கிழித்து
குருதி வழியக் குருசு சுமந்தீர்
மண்டையோடுகளின் இருப்பிடமான கல்வாரி நோக்கி.
இதோ மானுடத்தின் மேன்மைக்காய் சிலுவையேறினீர்.
உம் உள்ளொளி காணும் திறனற்ற குருடரின்
வேதனைச் சுமையைச் சிலுவையில் சுமந்தீர்.
என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற ஓலம்
உயிர்ப்பெருந்திரளின் ஒற்றைக் குரலாய்
விண்ணோக்கி எழுந்தது
சிலுவையேற்றத்தின் இருளும் கிரகணமும்
கவிந்து கிடந்தது கல்வாரிக் குன்றின் மேல்.
நிலவு குருதி தோய்ந்து உறைந்தது.
உம் வாழ்வும், சொல்லும் செயலும்
அன்பின் பிரவாகமன்றோ!
உயிர்கள் மீது சூழும் பெருங்கருணையன்றோ!
இதோ மரணத்தையும் எமக்கே அர்ப்பணித்து
மகத்தான செயல் புரிந்தீர்.
உம் ரகசியப் பாதுகாவலர் இருவர்
உம் திருவுடலைப் பத்திரமாய்ச் சிறை வைத்தனர்.
ஒளியின் திருமகனாய் உயிர்த்தெழுந்தீர் மூன்றாம் நாள்.
இறைவனின் திருக்குமாரரே!
நீரே இனி எமக்கு
வழியும், ஒளியும் சத்தியமுமாயிருக்கிறீர்கள்.