19 நவம்பர், 2012

Life of Pi 1


Life of Pi யான் மார்டேல் எழுதி மான் புக்கர் பரிசு வாங்கிய நாவல். வேறு ஒரு நாட்டை மையமாக வைத்து நாவல் எழுதுவதற்காக வந்த மார்டல், பதினாறு வயது இந்தியச் சிறுவன் ஒருவனுடைய கதையை கேட்ட பிறகு அவரது மொத்த திட்டமும் மாறிவிட்டிருக்கிறது.

இந்த நாவல் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தன் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். நிதி பெருக்குவதற்காக எங்கள் பள்ளியில் நிகழ்ந்த ஒரு விலைக் குறைப்பு விற்பனையின் போது இந்த நாவல் என் கண்ணில் பட்டது. 2002 ல் வெளியான புத்தகம் என்று நினைக்கிறேன். ஆனால் பார்க்க ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியானதைப் போல் அரதப் பழசாக  இருந்தது. கிட்டத்தட்ட நூறு பக்கங்கள் பைண்டிங்கிலிருந்து கழன்று வந்து விட்டன. படிக்க முயற்சி செய்தால் மீதி பக்கங்களும் வந்து விடும் போலிருந்ததுஆனால் அதனுடைய விலைதான் என்னை ஈர்த்தது. ஐந்து ருபியா, இந்திய மதிப்புக்கு பதினைந்து ரூபாய். எனவே எல்லாப் பக்கங்களும் இருக்கின்றனவா என்பதை உறுதிப் படுத்திக்கொண்ட பிறகு அதை வாங்கி உடனே படிக்கவும் ஆரம்பித்து விட்டேன்.

கதையின் நாயகன் பிஸ்சின் படேல் என்ற பெயர் கொண்ட பதினாறு வயது சிறுவன்பாண்டிச்சேரியில் ஒரு விலங்குப் பண்ணை அதிபரின் மகன். பள்ளியில் அவனது சக மாணவர்கள் அவனை பிஸ்ஸிங் படேல் என்று அழைத்துக் கிண்டல் செய்யவே, தன்பெயரை மாற்றிக் கொள்வதென்று முடிவு செய்கிறான் படேல். புதிய பள்ளியில் சேர்ந்தவுடன் தன் பெயர் பை என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான். பெயர் கவர்ச்சியாக இருக்கவே உடனே பிரபலமடைந்து விடுகிறது.

பை ஒரு ஹிந்துவாக இருந்த போதிலும் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களிலும் ஆர்வம் கொண்டவனாயிருக்கிறான். மூன்று மதங்களையும் ஒரே நேரத்தில் பின்பற்றுவதில் ஆர்வம் கொள்கிறான். மூன்று மதங்களின் தலைவர்களும் அவனது தந்தையைச் சந்தித்து பையை தங்கள் மதத்தில் இணைய வற்புறுத்துகிறார்கள். ஆனால் பையோ மூன்று மதங்களின் கடவுள்களையும் ஒரே நேரத்தில் வழிபடத்தான் விரும்புகிறான்.

விலங்குப் பண்ணை அதிபரின் மகனானதால் விலங்குகளோடு வாழ்ந்து பழகும் வாய்ப்பு பைக்குக்கு  கிடைக்கிறதுகாட்டு விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றியும் அவை நடந்து கொள்ளும் விதம் பற்றியும் சகலமும் அறிந்திருக்கிறான் பைமதங்களில் அவனுக்குள்ள ஆர்வமும், விலங்குகள் பற்றிய அவனது அறிவும் அவன் கல்லூரியில் விலங்கியலும், மதவியலும் தேர்ந்தெடுப்பதற்குத் தூண்டுதலாக இருக்கின்றன.

கதை 1970  களில் நிகழ்கிறதென்று நினைக்கிறேன். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் எமெர்ஜென்சியை அறிமுகப்படுத்தியிருந்த நேரம்விலங்குப் பண்ணை நடத்துவதில் இனியும் லாபமில்லை என்று உணரும் பையின் தந்தை கனடாவிற்குக் குடியேற முடிவு செய்கிறார். விலங்கு பண்ணையை மட்டும் விற்று விட்டு விலங்குககளைத் தன்னுடனேயே வைத்துக்  கொள்கிறார்அமெரிக்காவில் விலங்குகளுக்கு நல்ல விலை இருப்பதால், பையின் குடும்பம் விலங்குகளுடன் ஒரு கார்கோ கப்பலில் கனடாவுக்குப் பயணமாகிறார்கள்.

வழியில் நடுக்கடலில் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்குகிறது. பை ஒரு life boat ல் (வாழ்க்கைப் படகா?)  விழுந்து கடலுக்குள் தூக்கி எறியப் படுகிறான். விபத்தில் அவனைத் தவிர அனைவரும் மாண்டு விடுகின்றனர். அவனோடு படகில் ஒரு காலொடிந்த வரிக்குதிரையும், ஒரு உராங் உடானும், ஒரு கழுதைப் புலியும், நானூற்றி ஐம்பது பவுண்டு எடை கொண்ட ஒரு ராயல் பெங்கால் புலியும் தப்பித்து விடுகின்றன.

இயற்கைக் காரணங்களாலோ, அல்லது படகில் உள்ள மற்ற உயிரினங்களாலோ ஏற்படும் மரணத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் விரைவிலேயே அனைவரும் கொள்ளப்பட்டு விடுவார்கள் என்று நமக்குத் தெரிந்தாலும்கடல் வாழ்வின் குரூரங்களிலிருந்தும், கொடூரமான காட்டு விலங்குகளிடமிருந்தும் பை தப்பித்து உயிர் பிழைக்கிறான் என்பதை மார்டேல் அற்புதமாக  விவரிக்கிறார்.

தொடர்ந்து வரும் பக்கங்கள் பை உயிர் வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட சம்பவங்களை விவரிக்கின்றன. படகில் உள்ள அத்தனைப் பொருட்களையும், அவனைச் சுற்றி நிகழும் சம்பவங்களையும் எவ்வாறு அவன் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மரணத்தை ஏமாற்றுகிறான் பை.
        நாவலின் பெரும்பகுதியில் பை ஒருவன் மட்டுமே மனிதக் கதாபாத்திரம் என்று நம்புவதற்குச் சற்று கடினமாக இருக்கிறது. நாவலின் ஸ்வாரஸ்யம் இதனால் கொஞ்சம் கூடக் குறைவதில்லை. சொல்லப்போனால் பை படகில் விழுந்து விலங்குகளோடு பயணிக்க ஆரம்பித்த பிறகு ஸ்வாரஸ்யம் அதிகமாகிறது. யான் மார்டெலின் எழுத்து நடை எளிமையாகவும், ஸ்வாரஸ்யமாகவும், மிகவும் இக்கட்டான, ஆபத்தான சூழ்நிலைகளை விவரிக்கும் போது கூட நகைச்சுவை இழையோடுவதாகவும் உள்ளது.
        நாம் ஏன் கடவுளை நம்ப வேண்டும் என்பதற்குப் பையின் வாழ்க்கை ஓர் உதாரணம். நாம் உயிர் போகும் பிரச்னையில் மாட்டிக் கொள்ளும் போதுதான் அந்த நம்பிக்கை தன்னை நிரூபித்துக் கொள்ளுகிறது. வாழ்வின் மீதும், இறைவன் மீதும் கொள்ளும் நம்பிக்கையே அற்புதங்களை நிகழ்த்துகிறது.   பெரும் தோல்விகளையும், ஆபத்துக்களையும் வெற்றி கொள்வதற்கான எளிய தீர்வுகளை ,வாழும் விருப்பம்  கொண்டவர்களுக்கு வாழ்க்கையே வழங்கி விடுகிறது. சௌகர்யமாக வாழ்ந்து வரும் சூழ்நிலையிலும் வாழ்வின் மீது அவநம்பிக்கையும், ஆர்வமின்மையும் கொண்டிருப்பவர்களுக்குப் பையின் வாழ்க்கை ஒரு பாடம்.
…………………………………………………………………………………………………………………………………………………………….

மேலும் வாசிக்க