19 ஜனவரி, 2011

மானசரோவர்

 மானசரோவர்
ஆசிரியர் : அசோகமித்திரன்
பதிப்பகம் : கிழக்கு
பக்கங்கள் : 207
விலை : ரூ. 90



மானசரோவர் திரையுலகை மையமாக வைத்து அசோகமித்திரன் எழுதியுள்ள மற்றுமொரு நாவல். அவரது மிகப் பிரபலமான இன்னொரு நாவலான கரைந்த நிழல்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை என்ற ஒரு அருமையான நாவலை வாசித்தது நினைவுக்கு வருகிறது. மானசரோவரில் அசோகமித்திரனின் கண்களினூடாக நாம் பார்க்கும் திரையுலகம் மட்டுமல்ல, அதை ஆதாரமாகக் கொண்டு வாழும் மனிதர்களும், அவர்களின் வினோத குணங்களும் காணக்கிடைக்கின்றன.

இரண்டு முறை வாசித்துவிட்டேன். அசோகமித்திரனின் நேர்மையான சொல் முறைக்காகவே மீண்டும் ஒரு முறை படிக்கலாம். இந்தக் குட்டி நாவலை பாகம் பாகமாகப் பிரித்து எழுதியிருக்கிறார். இரண்டு கதை சொல்லிகள் மாறி மாறி ஒவ்வொரு பாகத்திலும் தன்னிலையிலிருந்து கதை சொல்லுகிறார்கள். விறுவிறுப்பாகவும், அதேநேரம் ஆழ்ந்த தத்துவ தளங்களிலும் பயணப்பட்டுச் செல்லும் இந்த நாவலை சாவி வார இதழில் தொடராக எழுதினார் என்றறிய ஆச்சரியமாக இருக்கிறது. (ஆனால் ஏற்கனவே எழுதி வைத்திருந்த நாவலை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து வெளியிடச் செய்திருக்கிறார்). இருந்தாலும் வார இதழ் தொடர்களுக்கே உரித்தான வகையில் ஒவ்வொரு அத்தியாமும் ஒரு மெல்லிய அதிர்ச்சியோடு முடிகின்றது.

சத்யன் குமார் என்கிற வட இந்திய நட்சத்திர நடிகனுக்கும், தமிழ்த்திரையுலகில் கதைக்குழுவில் சொற்ப ஊதியத்துக்குப் பணிபுரிந்து கொண்டிருக்கும் கோபால்ஜிக்கும் (சத்யன் குமாரின் விளிப்பில்) இடையே நிலவும் அபூர்வமான நட்பின் தன்மைதான் கதை. ஒரு பெரிய நட்சத்திர நடிகனுக்கு அன்றாட வருமானத்துக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு நோஞ்சான் எழுத்தாளர் மீது (வேறு யார்? அசோகமித்திரன்தான்) ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பும், பிரமிப்பும், அதனால் அவன் அவரை நோக்கிச் செலுத்தப்படுவதும், அவரைப் பின்தொடர்ந்து சென்று இறுதியில் தன்னிலை தெளிதலுமே கதையின் அடிநாதம். பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பெஷாவரில் பிரிந்த இஸ்லாமியச் சிறுவன் பின் மும்பை வந்து சத்யன் குமார் என்ற நடிகனானவன். புகழின் உச்சத்தில் இருந்தவன். காதலில் தோற்றுத் துவண்டு போகும் அவனது சோக நடிப்புக்கும், இறுதியில் அவன் காதலுக்காக செய்யும் தியாகத்துக்கும் தேசமே சொக்கிக் கிடந்திருக்கிறது. ஜவஹர்லால் நேருவே தனியாக அழைத்துப் பாராட்டுமளவு பிரபலமானவன். முப்பதெட்டு வயதாகியும் திருமணம் புரிந்து கொள்ளாமலேயே இருந்து விட்டவன். புகழ் தேயத்தொடங்கும் போது மதராசிக் கம்பெனிகளுக்கு நடிக்க வரும் பிற வட இந்திய நட்சத்திரங்களைப் போலவே அவனும் படம் பண்ணுவதற்காகச் சென்னை வருகிறான். சமீபத்தில் விஜய் டிவியில் கமல் பேட்டி பார்த்தபோது ஒருவேளை இந்த சத்யன் குமார் பாத்திரம் யூசுஃப் கான் என்ற இயற்பெயர் கொண்ட இந்தி நடிகர் திலீப் குமாரைக் குறிக்கிறதோ என்று தோன்றியது. நிச்சயமாகத் தெரியவில்லை. வட இந்தியாவிலிருந்து தமிழகம் வரும் எவருக்குமே இது ஒரு விசித்திரப் பிரதேசமாகத்தான் காட்சி தரும். அதுவும் கதை நடப்பது அறுபதுகளில். ஹிந்தி தெரிந்த ஆட்களைச் சந்திப்பதே சிரமமாக இருக்கிறது. அங்கு அவன் சந்திக்கும் கோபாலின் புன்னகை யாரையோ அவனை நினைவுபடுத்துகிறது.
இவனது புகழும், கவர்ச்சியும் சற்றும் பாதிக்காதைப் போல நடந்துகொள்ளும் கோபால்ஜி இவன் மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விடுகிறார். அவர் வீட்டுக்கே தேடிச் சென்று அவர் கொடுக்கும் ஃபில்டர் காஃபிக்காகக் காத்திருக்கிறான். அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று நினைக்கிறான். கோபால்ஜியிடம் சத்யன் குமார் கொண்டிருக்கிற நெருக்கம் காரணமாக அவன் எப்போது சென்னைக்கு நடிக்க வந்தாலும் அவரையே அவனுக்கு உதவியாக அனுப்பி வைக்கின்றன படக்கம்பெனிகள். பெரிய நடிகர்கள் சகவாசத்தையெல்லாம் விரும்பாத கோபால் அவனுக்கு இலக்கிய ஆர்வம் உண்டு என்றறிந்து ஆச்சரியப்படுகிறார். ஆனால் அவன் அடிக்கடி வீட்டுக்கு வருவது அவர் மனைவிக்குப் பிடிக்கவில்லை. குடிகாரனையும், பொம்பளைப் பொறுக்கியையும் கூட்டிக் கொண்டு எதுக்கு வீட்டுக்கு வருகிறாய் என்கிறாள். கோபாலுக்குத் திருமணமாகி புக்ககம் சென்று விட்ட மகளும், பள்ளிக்குச் செல்லும் மகனும் உண்டு. திடீர் திடீரென்று பித்துப் பிடித்த மாதிரி உளறுகிறாள். மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார் கோபால். அவர் வீட்டில் யாருக்கும் ஆண்பிள்ளை தங்குவதில்லை. அதை நிரூபிப்பது போலவே அவர் மகனும் அன்றே இறந்து போகிறான். அவன் எப்படி இறந்து போகிறான் என்று நான் சொல்ல மாட்டேன். மனைவிக்குப் பைத்தியம் முற்றிவிடுகிறது. அவளை அவளது தாய் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு துணைநடிகையை அழைத்துக் கொண்டு மும்பை சென்று இவளைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறான் சத்யன் குமார். மனத்தில் மட்டும் கோபால்ஜியின் நினைவு நீங்குவதில்லை அவனுக்கு. மெல்லியதாக மாரடைப்பு வந்து படுத்தவுடன் அவரைப் பார்க்கவேண்டும் என்ற உந்துதல் அதிகமாகி விடுகிறது. உடனே கிளம்பிச் சென்னை செல்கிறான். காரை எடுத்துக் கொண்டு பல இடங்களிலும் சுற்றி அவரைத் தேடுகிறான். எங்கும் பார்க்க முடியவில்லை. பிறகு ஒரு பெண்கள் மறுவாழ்வு நிலையத்தை நடத்தி வரும் பெண்மணியின் மூலம் துப்பு கிடைத்து அவரது சொந்த ஊருக்கு அவரைப் பின்தொடர்ந்து செல்கிறான். அவரைச் சந்திக்கும் போது அவர் தனது குருநாதர் ஸ்தானத்தில் உள்ள ஒரு சித்தரோடு இருப்பதைப் பார்க்கிறான். கோபால்ஜி நான் ஏன் உங்களைப் பார்க்க வந்தேன் தெரியுமா என்று கேட்கிறான். கோபால்ஜி இல்லாத நேரம் அவர் வீட்டுக்குச் சென்றதையும், அங்கு அவரது மனைவியுடன் தான் நடந்து கொண்ட விதம் பற்றியும் சொல்ல விழைகிறான். கோபால்ஜி இப்போது அதெல்லாம் வேண்டாமே என்று மென்மையாக மறுக்கிறார். சித்தரோ அருகில் இருக்கும் நீர்நிலையில் சென்று முழுகிவிட்டு வா, அதுதான் உன் பாவங்களைத் தீர்க்கும் மானசரோவர் என்கிறார். சத்யன் குமார் அதுபோலவே செய்கிறான். இரண்டு நட்புள்ளங்களுக்கிடையே ஏற்பட்டிருந்த கறை  வடு எதையும் ஏற்படுத்தாமலேயே மறைந்து விட வழி வகுத்து விடுகிறார் சித்தர். அசோகமித்திரன் வழக்கம் போலத் தன் நாவலை படக்கென்று முடித்துக் கொள்கிறார்.

கிழக்கு பதிப்பகம் பற்றிச் சொல்ல வேண்டும். கச்சிதமான வடிவத்தில், ஏறக்குறைய எழுத்துப்பிழைகளே இன்றி, வாங்கக்கூடிய விலையில் நூல்களை வெளியிடுகிறார்கள். அவற்றின் வடிவமைப்பின் காரணமாகவே எனக்கு அவர்கள் வெளியிடும் புத்தகங்களின் மீது மோகம் வந்து விட்டது. கடல்புரத்திலேயும், மானசரோவரும், அவர்கள் வெளியிட்டதுதான். நிறைய இலக்கியத் தொடர்பான நூல்களை வெளியிட்டால் நமக்கெல்லாம் சலுகை விலையில் புத்தகங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
நன்றி : வாசகர் அனுபவம்.

மேலும் வாசிக்க