ரெயினீஸ் ஐயர் தெரு
ஆசிரியர் : வண்ணநிலவன்
பதிப்பகம் : கிழக்கு
பக்கங்கள் : 94
விலை : ரூ. 70
பரிந்துரை: ஜெகதீஷ் குமார்
எதிரும் புதிருமாக ஆறே வீடுகளைக் கொண்ட சிறிய தெருவைக் களமாகக் கொண்டு ஒரு அழகான சிறிய நாவலைப் படைத்திருக்கிறார் வண்ணநிலவன். வாசிக்க ஆரம்பித்து மூன்று மணி நேரத்தில் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். சற்று நேரம் அமர்ந்து அமைதியாக யோசித்துப் பார்த்தால் நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களுக்கு நாம் எந்த அளவில் நம் வாழ்வில் மரியாதையும் நேசத்தையும் கொடுக்கிறோம் என்று நமக்குத் தெரிந்து விடும். காரணங்களற்ற நேசம் யார் மீதும் கொண்டு விடுவதில்லை நாம். நம் சுய நலக் காரியங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு மட்டுமே அன்னிய மனிதர்களது இருப்பு அவசியமாகிறது நமக்கு. வண்ணநிலவனின் எழுத்தை வாசிக்கும் போது அண்டை மனிதர்களை நேசிக்கத் தவறும் குற்ற உணர்ச்சி இயல்பாகவே நம்முள் எழுகிறது.
சம்பிரதாயமான கதைகளைப் போல திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள் எவையுமில்லை இந்நாவலில். ஒவ்வொரு வீட்டிலும் வசிக்கும் மனிதர்களின் இயல்புகளும், எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் எளிய மொழியில் சித்தரிக்கப்படுகின்றன. அம்மாவை இழந்து பெரியம்மா வீட்டில் வாழும் டாரதிக்கு அவளது எபன் அண்ணன் மேல் எழும் இனந்தெரியாத நேசமும், போன வாரம் வரை இல்லாமலிருந்து, இப்போது தாயைப் பிரிந்து தன்னந்தனியே இரை பொறுக்கித் திரியும் கோழிக்குஞ்சுகள் மேலிருக்கும் பிரியமும் சொல்லப்படுகின்றன. அவளது சித்தி பெண் ஜீனோவும், அவர்கள் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நேசிக்கும் கல்யாணி அண்ணனும் கூட அவளது சிறிய உலகத்தில் முக்கியத்துவம் பெற்றவர்கள்.
அவளுக்கு எதிர்த்த வீட்டில் இருதயத்து டீச்சர் வசிக்கிறாள். அவளது கணவன் சேசய்யாவுக்குப் பன்னிரண்டு வருஷங்களாகத் தொண்டைப் புகைச்சல். சதா கோழி இறகை காதில் வைத்துத் திரித்துக் குடைந்து கொண்டிருக்கும், கருப்பட்டிப் புகையிலைத் துண்டு மாதிரி தொங்கும் சுருங்கிப்போன மார்புகள் கொண்ட அவளது அத்தையம்மாள் இடிந்தகரையாள் (அவள் நிஜப்பெயர் அவளுக்கே தெரியாது. இந்திய சர்க்காரின் சென்சஸ் குறிப்புகள், வோட்டர் ஜாபிதாக்களில் கூட இந்தப் பெயர்தான் இடம் பெற்று விட்டது), வார விடுமுறையில் காலேஜிலிருந்து வந்து நோயாளி சேசய்யா முன் ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு காலேஜ் கதைகளை ஓயாமல் பேசும் இருதயத்தின் தங்கை பிலோமி என்று அந்த வீட்டின் மனிதர்கள் நமக்கு அறிமுகமாகின்றனர்.
மூன்றாவது வீட்டிலிருக்கும் இருதயத்து டீச்சரின் மாணவி அற்புதமேரிக்கு டீச்சர் தன்னிடம் லீவு லெட்டர் கொடுத்து பள்ளியில் கொடுக்கச் சொல்லி விட்டார்களென்று ஒரே பெருமை. ஹென்றி மதுர நாயகத்தின் மகள் அவள். அவள் அண்ணன் சாம்ஸனுக்கு பிசாசு பிடித்திருக்கிறதென்று பேசிக் கொள்கிறார்கள். அவன் தன் எதிர்வீட்டு அன்னமேரி டீச்சர் வீட்டுக்குள் அம்மணமாக உடை மாற்றும் போதெல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். அவனும் எஸ்தர் சித்தியும் படுக்கை விரிப்பில் விசித்திரமாகக் கிடந்ததையும் அவள் பார்த்திருக்கிறாள். அவள் அண்ணனுக்காக இயேசு சாமியிடம் மனமுருகி வேண்டிக் கொள்வாள். சின்னப் பெண் வேறு என்னதான் செய்ய முடியும்?
அந்தத் தெருவில் எல்லாருடைய பரிதாபத்துக்குரியவனான தியோடர் எல்லாருக்கும் வலியச் சென்று உதவி செய்பவன். மனைவி போனதிலிருந்து குடித்துக் குடித்தே தன்னை அழித்துக் கொள்பவன். யாரும் அவனை நேசித்த மாதிரித் தெரியவில்லை. எபன் அண்ணனைத் தவிர. தியோடர் நெருங்கிப் பழகும் ஒரே மனிதன் கல்யாணி அண்ணன்தான். அந்தத் தெருவுக்கு அவன் வரும் போதெல்லாம் தியோடர்தான் அவன் கூடவே பேசிக் கொண்டு நடந்து வருவான்.
ரெயினீஸ் ஐயர் தெரு மனுஷர்கள் எல்லாம் மழையின் அடிமைகள். மழைக்காலமும், பண்டியல் காலமுமே அவர்களுக்கு பெரும் துக்கத்தை வரவழைத்த காலங்கள். ஆயினும் அவர்கள் மழைக்காலத்தில் பயத்தோடும், ஆனந்தத்தோடும் வீடுகளுக்குள்ளிருந்து வேடிக்கை பார்த்தார்கள். தெருவிலேயே பாழ்பட்ட வீடு ஆசிர்வாதம் பிள்ளையுடையது. அவரும் அவர் மனைவி ரெபேக்காளும் வாழ்ந்த அந்த வீடு வயதானவர்களுக்கே உரித்தான மோசமான வாசனை பிடித்துப் போனது. ஆசிரியராய் இருந்தபோது ஆசிவாதம் பிள்ளை மேல் வீசிக் கொண்டிருந்த பேப்பரும், சாக்பீஸும் கலந்த வாடையும், ரெபேக்காள் மேல் வீசிக்கொண்டிருந்த பாலின் முறுகலான வாடையும் போய்விட்டன. ஒவ்வொரு மழைக்காலத்திலும், ஒருமுறை அடுப்படியும், மறுமுறை இன்னொரு அறையும் இடிந்து போய்விட்டன. தியோடர்தான் அந்தக் கிழத்தம்பதியருக்கு உதவியாக இருக்கிறான். ஒரு காலத்தில் அழகான வீடுதான். அதுவும் சிறு வயதிலேயே செத்துப் போய்விட்ட அவர்களது மகள் அலீஸ் பட்டுப் பாவடை உடுத்தி, கனத்த பிருஷ்டங்கள் அடுப்படிக் கல்படியில் செதுக்கப்பட்டிருக்கும் தாமரை மீது அழுந்த அமர்ந்திருக்கும் போது வீடே மாளிகை போலத் தெரியும்.
மனிதர்களுக்கு இருப்பது போல, தெருக்களுக்கென்று தனியான குணம் இருக்கிறது. வாரத்தில் ஒவ்வொரு நாளும் ரெயினீஸ் ஐயர் தெரு ஒவ்வொரு விதமான தோற்றங்கொண்டு விடுகிறது. மாதத்தில் முதல் வாரத்தில் வருமானத்தின் காரணமாக செழிப்பான தோற்றம் கொண்டு விடுகிறது. அநேகமாய் அந்த வாரம் இராப்போஜனத்துக்கு வித விதமான மீன்கள்தாம். மீன், கறி வாங்குவதற்கென்றே எல்லா வீடுகளிலும் விதவிதமான பைகள் இருக்கின்றன. இருதயத்து வீட்டுக்கு அந்த சாக்குப்பை வந்து இருபது வருடங்களாகி விட்டன. நாட்களும், கிழமைகளும், வாரங்களும், மாதங்களும், மாதங்களும் கழிந்தாலும் துன்பங்கள் அறவே ஒழிந்து விட வில்லை ரெயினீஸ் ஐயர் தெருக்காரர்களுக்கு. அவை நீடித்துக்கொண்டே தான் இருந்தன. இருப்பினும் அருகில் நோக்கி ஆறுதல் பட்டுக்கொள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு மனிதர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுவுமன்றி ரெயினீஸ் ஐயர் தெருக்கார்களுக்கு வேன காலமே அற்புதமான காலம். வேனகாலத்தை ருசித்துப் பார்க்கவே வருடத்தின் பிற பத்து மாதங்களும் வாழ்ந்தார்கள்.
வண்ணநிலவனின் மொழி அற்புதமானது. தனித்துவமிக்கது. ஆங்காங்கே பழைய. புதிய ஏற்பாடுகளின் மொழிநடை உருவாக்கும் மாயம் சிலாகிக்கத்தக்கது. இவரைப் போல ஒரு வரி என்னால் எழுதி விட முடியாதா என்று வண்ணதாசன் சொல்கிறார். நான் அதிகம் பார்த்துப் பழகியறியாத பிரதேசத்து மக்கள் பற்றி வண்ணநிலவன் மூலம் அறிந்து கொள்வது பரவசமான அனுபவம். இதற்கு முன் இவரது கடல்புரத்தில் வாசித்துப் பரவசமடைந்தேன். இன்னுமொருமுறை வாசித்து விட்டுத்தான் அதுபற்றி எழுத வேண்டும். ரெயினீஸ் ஐயர் தெரு வெறும் எண்பத்தைந்து பக்கங்கள்தாம். ஒரு பிரம்மாண்ட நாவலுக்குண்டான குறிப்புகளை வாசித்துக் கொண்டிருப்பதுபோலச் சில சமயம் தோன்றியது. உணர்வுகளை விவரிப்பதிலும், மனித இயல்புகளை வெளிக்காட்டுவதிலும் வண்ணநிலவன் காட்டும் நேர்மையும், சிக்கனமும் அவரை நேசிக்க வைக்கிறது. இத்தனைக் கதை மாந்தர்களுக்கு நடுவே வண்ணநிலவன் எங்கிருக்கிறார் என்று தேடித் தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாரிடத்தும் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்திருப்பார் போல.
நன்றி : வாசகர் அனுபவம்.