தென் கொரிய இயக்குனரான கிம் கி டுக்கின் spring, summer,fall,winter ….and spring படம் முற்றிலும் புதிய காண்பனுபவத்தை வழங்கிய ஒரு திரைப்படம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, அவற்றின் நடுவே உள்ள ஏரி ஒன்றில் மிதந்தபடி நிற்கிற ஓர் பௌத்த ஆசிரமத்தில் பிறந்து வளரும் ஓர் இளம் துறவியும் அவனை வளர்க்கும் குருவும்தான் கதையின் பிரதான பாத்திரங்கள். குழந்தைப் பருவத்திலேயே அந்த இளம் துறவிக்குள் முகிழ்த்து வளரும் அகங்காரம், தன்னையே முன்னிலைப் படுத்தி, தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காக அவன் செய்யும் செயல்கள் மூலம் அறியப்படுகிறது.
ஏரியில் உலவும் தவளை, பாம்பு, மீன் போன்ற சின்ன உயிர்களின் உடலில் கயிற்றைக் கட்டி அவற்றை நீரில் விடுகிறான். அவை துடிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து மகிழ்கிறான்.(சிறுவனாயிருக்கும் போதுதான்). குரு இவன் செய்கைகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். இரவில் உறங்கும் போது அவன் முதுகில் பெரிய கல் ஒன்றைக் கட்டி விடுகிறார். காலையில் கல்லை அவிழ்க்கச் சொல்லிக் கேட்கும் அவனிடம், நீ போய் அந்த உயிரினங்களை விடுவித்து விட்டு வா. அதுவரை நீ கல்லைச் சுமந்து கொண்டுதானிருக்க வேண்டும். அவற்றில் ஏதாவதொன்று இறந்தாலோ, அந்தச் சுமை நீ இறக்கும் வரை உன் மனதில் தங்கி விடும் என்கிறார். (பால் மணம் மாறாத பச்சிளம்) சிறுவன் கல்லைச் சிரமத்தோடு சுமந்தபடி ஏரிக்குச் சென்று தவளையை விடுவிக்கிறான். மீனும் பாம்பும் இறந்து விடுகின்றன. குழந்தை குமுறிக் குமுறி அழுகிறான்.
இந்த முழு நிகழ்வுமே ஒரு அழகான ஸென் கதை சொல்லப்படுவதைப் போல கவித்துவத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. சொல்முறையில் இவ்வளவு எளிமையைக் கைக்கொண்டு ஓர் அடர்ந்த விஷயத்தை நிகழ்த்திக் காட்டமுடியும் என்று படத்தின் ஒவ்வொரு காட்சியுமே நிரூபிக்கிறது.
கிம் காட்சிகளை மிகவும் நிதானமாகக் காட்டுகிறார். ஆஸ்ரமத்திலிருந்து ஏரிக்கரைக்கு யாரோ ஒருவரைச் சுமந்து கொண்டு போவதும், வருவதுமாக இருக்கிறது படகு. ஏரி நடுவில் மிதக்கும் ஆஸ்ரமம் பல கோணங்களில் காட்டப்படுவதும், மாறும் காலநிலைகளில் ஏரியும், மலைகளும், ஆஸ்ரமமும் பல்வேறு ரூபங்கள் எடுத்து அழகு காட்டுவதும் மனதை வருடிக் கொண்டே இருக்கின்றன. பல காட்சிகளில் அருவியில் நீர் விழும் சப்தமும், துடுப்பு வலிக்கப்படும் ஓசையும், காற்றில் சருகுகள் புரளும் ஓசையுமே நிறைந்து படம் முழுக்க நிலவும் அமைதியை அடர்த்தியாக்குகின்றன. துறவிகளுக்கோ, அவர்களைச் சந்திக்க வரும் மனிதர்களுக்கோ உரையாடல் ஒரு அவசியமற்ற ஆடம்பரமாகவே படுகிறது போலும். பெரும்பாலும் எல்லாமே மவுனமாகவே நிகழ்கின்றன.
வசந்தம், இலையுதிர் காலம், குளிர்காலம் மூன்றும் தொடர்ந்து வருகின்றன. இளம் துறவியின் வாழ்விலும் எதிர்பாராத மாற்றங்கள். காமத்தின் வேட்கை அவனை வீழ்த்தி விடுகிறது. ஆசிரமத்துக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் ஒரு இளம்பெண்ணால் ஈர்க்கப்பட்டு அவள் மீது மோகம் கொள்கிறான். இருவரும் குரு அறியாமல் சந்தித்துக் கொள்கிறார்கள். இயற்கை தன் வேலையைக் காட்டி விடுகிறது. இருவரும் ரகசியத் தொடர்பும் குருவுக்குத் தெரிய வருகிறது. அவர் முன் விழுந்து மன்னிப்புக் கேட்கிறான் இளந்துறவி. பொருட்கள் மீது கொள்ளும் காமம் அவற்றைக் கைப்பற்றத் தூண்டும்; பிறகு அதுவே கொலையும் செய்யத் தூண்டும் என்று அவனை எச்சரிக்கிறார் குரு. அந்தப் பெண்ணைப் பார்த்து உடல் குணமாகி விட்டதா என்று கேட்கிறார். அவள் ஆமாம் என்று சொல்ல, அப்போ இதுதான் உனக்குத் தேவையான மருந்து என்று கூறி அவளைத் திருப்பி அனுப்பி விடுகிறார் குரு. இளந்துறவியால் அவள் பிரிவைத் தாங்க முடியவில்லை. குரு உறங்கும் நேரம் ஆசிரமத்தை விட்டுக் கிளம்பி விடுகிறான். (அங்குள்ள புத்தர் சிலையையும் எடுத்துக்கொண்டு).
அவன் உயிர்களைத் துன்புறுத்தியபோதோ, அவனது கள்ள உறவு பற்றி அறிந்தபோதோ எந்தச் சலனமுமின்றி நிகழ்வுகளை ஒரு சாட்சியாகவே பார்த்துக் கொண்டிருக்கும் குரு, தான் வளர்த்த துறவி தன்னை விட்டுப் பிரிந்த போதும் அப்படியே இருக்கிறார். புத்தர் சிலை இருந்த இடத்துக்குப் பின்னாலுள்ள புத்தரின் ஓவியத்துக்குத் தன் தினசரி வழிபாடுகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு, ஆசிரமத்தைப் பெருக்கித் தூய்மை செய்து கொண்டும், படகில் ஏரிக்கரை சென்று மூலிகைளைச் சேகரித்துக் கொண்டுமிருக்கிறார். பருவம் மாறி இலையுதிர்காலம் வருகிறது. செய்தித்தாள் துண்டொன்றில் தன்னை விட்டுச் சென்றவன் மனைவியைக் கொலை செய்து விட்டுத் தலைமறைவாகி விட்ட செய்தியைப் படிக்கிறார். உடனே அவன் வருகையை எதிர்பார்த்து ஆயத்தங்களைச் செய்கிறான். அவனும் வந்து சேருகிறான். கோபமும், வெறியும் கொண்ட இளைஞனாக. புத்தர் சிலையும் திரும்பி வந்து விடுகிறது. நீ தேடிச் சென்ற வாழ்வு உனக்கு விருப்பப்பட்ட மாதிரி இருந்ததா என்று கேட்கிறார் குரு. இளைஞன் கொதிக்கிறான். ஆசிரமத்துக்குள் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறான். குரு அவனை கட்டையால் மரண அடி அடித்து கட்டித் தொங்க விட்டு விடுகிறார். தொங்க விட்ட கயிற்றை தீபம் சுட்டு கீழே விழும் வரை தொங்குகிறான். குரு ஆசிரமத்துக்கு வெளியில் மரத்தரை முழுக்க புத்தரின் சூத்திரம் ஒன்றை தீட்டிக் கொண்டிருக்கிறார். இளைஞனின் வெறி இன்னமும் தீராததால் அவனைப் பார்த்து இந்தச் சூத்திரத்தின் எழுத்துக்கள் அனைத்தையும் கத்தியால் கீறி எடு என்கிறார். இளைஞன் அடிபணிகிறான். அதற்குள் காவல் துறை தேடி வருகிறது. இளைஞன் அவன் மீது பாயப்போக, என்ன செய்கிறாய்? பேசாமல் எழுத்துக்களைக் கீறு என்கிறார் குரு. அவனும் தன் வேலையைத் தொடர, காவலர்கள் விடியும் வரை காத்திருந்து அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் சென்றவுடன் குரு தன்னை மாய்த்துக் கொள்கிறார். அவனை வளர்த்த விதத்தில் தோல்வியடைந்து விட்டோம் என்பதால் தற்கொலை செய்து கொள்கிறாரா அல்லது இனியும் தன் வாழ்வை நீட்டிப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதால் அப்படிச் செய்தாரா என்று தெரியவில்லை.
குளிர்காலம் துவங்குகிறது. இளைஞன் இப்போது மத்திம வயதினனாகத் திரும்பி வருகிறான். மனமும் கனிந்திருக்கிறது. குரு வாழ்ந்த வாழ்க்கை முறையைத் தானும் தொடர்கிறான். முகத்தை மூடியபடி ஒரு பெண் குழந்தை ஒன்றைத் தூக்கிக் கொண்டு அங்கு வருகிறாள். அவள் யாரென்று முகத்திரை விலக்கி அறிய முற்படும்போது, அவள் தடுத்து விடுகிறாள். அவன் கையை மென்மையாகப் பற்றும்போது அவள் அவனிடம் ஏதோ சொல்ல நினைப்பதைப் போலவே இருக்கிறது. குழந்தையை அங்கேயே விட்டு விட்டுச் செல்கிறாள். செல்லும் வழியில் இறக்கிறாள். துறவி அவள் திரையை விலக்கி முகம் பார்க்கிறான். யார் அது? மன்னிக்கவும், எனக்குத் தெரியவில்லை. குழந்தை அவனிடமே வளர்கிறது.
குளிர்காலம் முடிந்து வசந்தம் மீண்டும் வருகிறது. குழந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பிஞ்சு மனசுக்குள்ளும் வன்மம் தலையெடுக்க ஆரம்பிக்கிறது. சிக்கல் நிறைந்த நிகழ்வுகள் கொண்ட ஒரு கதையை கிம் கி டுக் எளிமையாகவும், அழகாகவும், ஒரே நேர்கோட்டிலும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். வழக்கமான முறையில் எடுக்கப்படும் படம் பார்த்துப் பழகியவர்களுக்கு இப்படம் முதல் பார்வையில் ஒரு இனிமையான அதிர்ச்சி தரும். மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும். மீண்டும் பார்க்கையில் பல நுட்பமான அம்சங்கள் புரியவரும்.