அன்பு நண்பர்களுக்கு,
வரும் நவம்பர் பத்தாம் தேதி இந்தியா வருகிறேன். இலக்கிய நண்பர்கள் யாரையும் சந்திப்பேனா இல்லையா என்று தெரியவில்லை. ஊரில் எனக்கிருக்கும் இலக்கிய நண்பர்கள் இரண்டே இரண்டு பேர் தான். ஒருவன் யுவராஜ் எனக்கு சுஜாதா புத்தகங்களைக் கொடுத்து உதவியவன். இன்னொருவர் கே.சி. முருகன். தனிப்பயிற்சிக் கல்லூரி வைத்திருக்கிறார். அப்துல் கலாம், கண்ணதாசன், புஷ்பா தங்கதுரை, இந்த மாதிரிதான் அவரது வாசிப்புப் பழக்கம். ஊருக்குப் போனால் இருவரும் தத்துவம், இலக்கியம், கல்வி என்று மணிக்கணக்கில் பேசுவோம். என் திறமை மீது அபார நம்பிக்கை அவருக்கு. நான் அங்கு சென்றால் என்னை வைத்து மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை வகுப்பு ஒன்று எடுத்து விடுவார். நானும் நிறைய புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு போய் வகுப்பெடுப்பேன் . இடையிடையே எனக்குத் தெரிந்த, நான் அரைகுறையாகப் பயிற்சி செய்கிற எளிய யோகப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பேன். அவர்கள் முகத்தில் தெரியும் வெளிச்சத்தைப் பார்க்க பரவசமாக இருக்கும்.
இந்த ஆண்டு புத்தகச் சந்தைக்குச் செல்லலாமா என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் சென்னையின் மக்கள் நெருக்கத்தை நினைத்தாலே மூச்சுத் திணறுகிறது. நானெல்லாம் சுற்றிலும் கடல் சூழ்ந்த கோமணத் துண்டு அளவு நிலத்தில் ஹைடெக் ஆதிவாசி போல வாழ்ந்து வருபவன். ஊருக்கு வந்து சாலையைக் கடக்கக் கூட நூறு முறை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஈரோட்டில் ஏதாவது புத்தகச் சந்தை இருந்தால் போகலாம். மற்றபடி ஊர் சுற்றும் பழக்கமெல்லாம் என் ரத்தத்தில் இல்லை. வண்டியை எடுத்துக் கொண்டு உள்ளூரிலேயே சுற்றிச் சுற்றி வந்து கடைகளில் எதையாவது வாங்கிக் கொண்டு, ஓட்டல்களில் வித விதமான உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டே கழிந்து விடும் என் விடுமுறை.
சில புத்தகங்கள் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அதற்குக் கோவை விஜயா பதிப்பகம் போதும். மனைவியை மகிழ்வூட்ட மைசூர் சென்றாலும் செல்வேன். சிதம்பரம் செல்லலாமா என்று ஒரு ஆசை இருக்கிறது. ஈரோட்டுப் பக்கமாய் ஏதாவது இலக்கியச் சந்திப்புகள் இருந்தால் வருவேன். முடிந்தால் தெரிவியுங்களேன்.
8 நவம்பர், 2010
1 நவம்பர், 2010
அருகாமை
நான் அறியவில்லை
உன் அருகாமையின் அருமை.
திடீரென்று மலட்டு நிலமாகி விட்டது என் மனம்.
ஜன்னலூடே தலை நீட்டுகிற
பூச்செடியை புறக்கணித்து விட்டு
கணினித் திரையின் ரோஜாவை ரசிக்கும்
மனிதமந்தையில் ஒருவனானேன்.
நீ என் மீது வீசிய புன்னகைகள் சேகரித்தேன்.
சேகரித்த பெட்டி இன்று சேற்றுக்குள்.
குப்பைத்தொட்டியைக் கிளறிக் கிளறி
அந்தப் பொக்கிஷப் புன்னகைகளைப்
பொறுக்கி விடப் பார்க்கிறேன்.
நான் அறியவில்லை
உன் அருகாமையின் அருமை.
என் செல்ல தேவதையின் சிறகுகளை
போர்வையாக்கி உறங்கினேன்.
அவள் இமைகளுக்குள் பூக்கும்
கனவுகளைத் திருடிக் கொண்டேன்.
பூ தாங்கும் காம்புக்கு
என் காதலைப் பொழிய வேண்டுமென்று
புரியாமல் போனேன்.
அவள் என் உதிரத்தில் கலந்தாலும்
இதயத்துடிப்பின் அடிநாதம்
அவளே ஆனாலும்
என் சுவாசத்திலும் குறட்டையிலும்
உட்புகுந்து வெளிச் செல்லும் உயிர்
அவளே ஆனாலும்
குருதியோட்டம் அவள் பக்கம் பாயவில்லை.
துடிப்பின் ஒலி அவளறியாமலேயே போனது.
என் சுவாசம் வேறு திசையில் பயணித்ததை
நான் அறியவில்லை.
என்ன ஆயிற்று எனக்கு?
ஏனிப்படி மரத்து விட்டதென் மனம்?
காய்ந்து போன என் நந்தவனம்
இனி ஒரு தீக்குச்சியின் நெருப்புக்கு
இரையானால்தான் சரிவருமா?
உன் உதடுகள் உலர்ந்து போகும் வரை முத்தமிட்டிருக்கிறாய்.
நானோ உதடுகளை மட்டுமல்ல
உள்ளத்தையும் திறக்கவில்லை.
ஒரு குழந்தையைச் சீராட்டுவதைப் போல்
என் விரல் பிடித்து நெறிப்படுத்தினாய்.
நானோ உதாசீனத்தின் உச்சமாய்
உன்னை உதறி விட்டேன்.
நான் அறியவில்லை
உன் அருகாமையின் அருமை.
உன் எதிர்பார்ப்புகளுக்கு
சமாதி கட்டி விட்டு
என் அற்பக் கனவுகளுக்குத்தானே
ஆதரவளித்தாய்.
எனக்கு ரோஜா மலர்களை அளித்துவிட்டு
நீ முட்படுக்கையில்தானே படுத்துக் கொண்டாய்.
உன் விழிகளில் என் கனவுகளைக் காண
நிபந்தனை விதித்த வன்முறையாளன் தானே நான்.
ஒரு பரிவான தலை கோதல்
உன் பிஞ்சு விரல்களில்
முதுகில் பயணிக்கும் வருடல்.
வாங்கிச் சலித்தாலும்
கொடுக்கச் சலிக்காத
நீ இன்னும் கொடுத்துத் தீராத
உன் நீண்ட முத்தம்.
என் அசட்டுத்தனங்களுக்குக் கூட
நீ அளிக்கும் வரவேற்பு.
என் வயிற்றின் உணவின் அளவை
முகபாவத்தில் கண்டறியும் உன் பரிவு.
நான் சோர்ந்த நிமிடங்களில்
உன் நெஞ்சில் தலை புதைத்துத் தானே
நான் இளைப்பாறுவேன்.
இதோ முட்புதர் மண்டிய என் மனக்காட்டில்
சருமம் கிழிபடத் துவங்கியிருக்கிறேன் ஒரு தேடலை.
இதுவரை யோசனையின்றிக் கிறுக்கிய கிறுக்கல்களைச்
சரி செய்யும் நோக்கோடு.
தான் பிரசவித்த அலைகளில்
தன்னை வெளிப்படுத்தத் துடிக்கும் கடல்போல
இந்தச் செல்லரித்த வார்த்தைகளில்
வெளிப்படுத்த முயல்கிறேன்.
என் கிறுக்குத்தனங்களின், முரட்டுத்தனங்களின்
அசட்டுத்தனங்களின் , புறக்கணிப்புகளின்
வன்முறைக்கு உன்னை இலக்காக்கியதற்கு
நீண்டதொரு மன்னிப்பை.
இழந்த நிமிடங்களை மீட்டுத் தந்து விடுமா மன்னிப்பு?
சருகுகள் உயிர் பெற்றுப் பூத்து விடுமா?
என்னை மறுபடியும் புதிய மனிதனாக்க
உன் புன்னகையால் மட்டுமே முடியும்.
உன் விழியின் கருணை
உன் அணைப்பின் கதகதப்பு
உன் முத்தத்தின் எச்சில்
உன் ஒவ்வொன்றும் வேண்டும் எனக்கு.
தருவாயா?
தவறுக்குத் தண்டித்தல் ஒரு வகை.
தண்டனையே தராமல் தண்டித்தல் அதன் உச்சம்.
புறக்கணிப்பின் முட்கள் என்னைக் குத்திக் கிழிக்கும்.
மன்னிப்பின் மலர்களை மன்றாடுகிறேன்.
உன் விழியின் கருணை
உன் அணைப்பின் கதகதப்பு
உன் முத்தத்தின் எச்சில்
உன் ஒவ்வொன்றும் வேண்டும் எனக்கு.
தருவாயா?
30 அக்டோபர், 2010
கல்வி கடிதங்கள்
Hi Jagadeesh
எனது இரண்டாவது மகனை பள்ளியில் சேர்த்து விட்டு அங்குள்ள அடிப்படை வசதி இன்மை மற்றும் கல்வி கற்பிக்கும் முறையில் எனக்கு உடன்பாடிலாததால் பள்ளியோடு ஒரு பெரும் போராட்டத்தை தனியாக அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறேன். இது குறித்து ஏற்கனவே சில பதிவுகளும் போட்டிருக்கிறேன்.
பதிவுகளை படித்து எனது கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைப்பவர்கள் தங்கள் தளத்தில் கொஞ்சம் இது குறித்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது விருட்சத்தில் பின்னூட்டம் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன.் நியாயம் இல்லை என்று நினைத்தால் விருட்சத்தில் அதன் காரணங்களை பின்னூட்டம் இடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உங்கள் கருத்துக்கள் பெரிய உதவியாக இருக்கும்.
இது ஒரு தாயின் போராட்டம். பள்ளியில் வேறு எந்த பெற்றோரும் இது வரை பெரிதாக இதில் இறங்காத நிலையில்
இது ஒரு தனி மனித போராட்டம்.
Dept of Edu அதிகாரிகளிடம் புகார் அளிககு முன் பலரின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
நன்றி.
விருட்சம்
Hi Jagadeesh
Happy Diwali.
Its long time since I communicated to you.
My younger son is attending LKG and he is 3+. The school forces him and other kids to write in notbooks using pencil. It gives strokes, cursive writings, numbers, alphabets in English and Tamil etc. The kid is expected to write two 2 to 3 pages sometime. Kid is totally not interested and refuses to hold hand to do it. He also complaints at school when the teacher holds hand to make him write it pains. School never understands.
You are a teacher . So I thought it would be appropriate to discuss with you on this specific issue. Is it correct to expect kids of age 3+ to write using pencil that too numbers 1 - 8, cursive writing joining 3 letters, ப, ம, ய etc for 1 or more pages?
Kindly get back to me on this.
Thanks in advance
article in my website
Virutcham
With regards
எனது இரண்டாவது மகனை பள்ளியில் சேர்த்து விட்டு அங்குள்ள அடிப்படை வசதி இன்மை மற்றும் கல்வி கற்பிக்கும் முறையில் எனக்கு உடன்பாடிலாததால் பள்ளியோடு ஒரு பெரும் போராட்டத்தை தனியாக அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறேன். இது குறித்து ஏற்கனவே சில பதிவுகளும் போட்டிருக்கிறேன்.
பதிவுகளை படித்து எனது கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைப்பவர்கள் தங்கள் தளத்தில் கொஞ்சம் இது குறித்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது விருட்சத்தில் பின்னூட்டம் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன.் நியாயம் இல்லை என்று நினைத்தால் விருட்சத்தில் அதன் காரணங்களை பின்னூட்டம் இடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உங்கள் கருத்துக்கள் பெரிய உதவியாக இருக்கும்.
இது ஒரு தாயின் போராட்டம். பள்ளியில் வேறு எந்த பெற்றோரும் இது வரை பெரிதாக இதில் இறங்காத நிலையில்
இது ஒரு தனி மனித போராட்டம்.
Dept of Edu அதிகாரிகளிடம் புகார் அளிககு முன் பலரின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
நன்றி.
விருட்சம்
Hi Jagadeesh
Happy Diwali.
Its long time since I communicated to you.
My younger son is attending LKG and he is 3+. The school forces him and other kids to write in notbooks using pencil. It gives strokes, cursive writings, numbers, alphabets in English and Tamil etc. The kid is expected to write two 2 to 3 pages sometime. Kid is totally not interested and refuses to hold hand to do it. He also complaints at school when the teacher holds hand to make him write it pains. School never understands.
You are a teacher . So I thought it would be appropriate to discuss with you on this specific issue. Is it correct to expect kids of age 3+ to write using pencil that too numbers 1 - 8, cursive writing joining 3 letters, ப, ம, ய etc for 1 or more pages?
Kindly get back to me on this.
Thanks in advance
article in my website
Virutcham
அன்புள்ள விருட்சம்
தாமதத்திற்கும், நீண்ட நாள் தொடர்பின்மைக்கும் மன்னிக்கவும். ஆண்டு இறுதியாதலால் தேர்வுகள், சிறப்பு வகுப்புகள் என்று பரபரப்பாக இருக்கிறேன்.
உங்கள் கடிதம் கண்டவுடன் நான் காணாத உங்கள் மகன் மீது மிகுந்த பரிவேற்ப்பட்டது. இந்த நாட்களில் நம் நாட்டிலும் PLAY WAY SCHOOLS அதிகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்னமும் பழைய கல்வி முறையேதான் ஆரம்பப் பள்ளி நிலைகளிலும் தொடர்கிறது போலிருக்கிறது.
பக்கம் பக்கமாக எழுத வைப்பதும் அதைக் குழந்தைகளைச் செய்யச் சொல்லி வற்புறுத்துவதும் அவர்கள் மீது புரியப்படும் வன்முறைச் செயலாகவே எனக்குப்படுகிறது. அதுவும் உங்கள் பையனுக்கு ஆசிரியர் கைபிடித்து எழுதச் சொல்லித்தரும் போது அவனுக்குக் கைவலிக்கும் என்று கூட உணர முடியாத அளவுக்கு மரத்துத்தான் போயிருக்கிறது பல ஆசிரியர்களது மனம். பெரும்பாலான ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தல் என்பது பற்றிய எந்தக் கருதுகோள்களும் இல்லாமல் பணிக்கு வருகிறார்கள். தங்களது பள்ளி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தத்தில்தான் பெரும்பாலோர் பணிபுரிகிறார்கள். குழந்தைகள் சில நூறு ஆங்கில வார்த்தைகளை பேசவும், எழுதவும் பழகி விட்டால் அவர்கள் பணி வெற்றி அடைந்து விடுகிறது. ஒரு பள்ளியின் புகழ் கூட இது போன்ற காரணிகளால்தான் தீர்மானிக்கப் படுகிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் எல்லாருக்குமே கல்வி என்பது ஒரு குழந்தையின் மன வளம் சார்ந்தது என்பதும், அவனது படைப்புத்திறனும், கற்பனைத்திறனும் அது இருக்க வேண்டும் என்பதும், அவனை எல்லா விதங்களிலும் முழு மனிதனாக உருவமைக்க அது உதவ வேண்டும் என்பது தெரிவதில்லை. இல்லை தெரிந்தும் அதைப் புறக்கணிக்கிறார்களா என்று தெரியவில்லை.
நாமெல்லாம் சிறு வயதில் எப்படிப் படித்தோமோ, அதே முறையில்தான் இன்றைய குழந்தைகளும் படிக்கிறார்கள். உலகம் பலவிதங்களில் மாறிவிட்டது. அதிக மதிப்பெண் எடுக்க வைப்பது என்ற ஒரு குறிக்கோள் தவிர வேறெதுவும் பள்ளிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பல பெற்றோர்களுக்குத் தன் பிள்ளை ஒரு பதினைந்து வருடம் கழித்து பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாறிவிட வேண்டும் என்பதுதான் விருப்பம். அதனாலேயே அவர்களும் இந்த மாதிரிப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்.
ஆனால் இப்போது உலகம் முழுவதும் இந்தியா உள்பட, CHILD CENTERED LEARNING என்ற கருத்து பிரபலமடைந்து வருகிறது. இந்தியா தவிர பிற நாடுகளில் இது போன்ற வன்முறையான கல்வித்திணிப்பு அறவே கிடையாது. குறைந்த பட்சம் குழந்தைகளை மென்மையாகக் கையாள வேண்டும் என்பதாவது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
உங்கள் கடிதத்தை ஒட்டி என்னுடைய கருத்துக்களை இவ்வாறு வகைப்படுத்தலாம்.
உங்களைப் போலவே எனக்கும் குழந்தைகளை பக்கம் பக்கமாக எழுத வைப்பதில் சம்மதமில்லை. கையால் எழுதுதல் என்பது இந்தக் காலத்தில் அறவே ஒழிந்து விட்ட நிலையில் கையெழுத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமா என்று தோன்றுகிறது.
ஆசிரியர்கள் குழந்தையை மென்மையாகக் கையாள வேண்டும் என்பதை நீங்கள் அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லி விடலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் நேரடியாக பள்ளி நிர்வாகத்தைச் சந்தித்து எவ்வளவு பதமாக முடியுமோ அவ்வளவு பதமாக இந்தப் பிரச்னையைச் சொல்லி விடுவது நல்லது. ஒரு வேளை தான் ஆசிரியர் பற்றிக் குறை சொன்னால் அது பெரிய பிரச்னையாகி விடுமோ என்று அஞ்சி இனிமேல் உங்கள் குழந்தை உங்களிடம் இனிமேல் எதுவும் சொல்லாமல் விட்டு விடக்கூட வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் சில விஷயங்களில் நம்மை விட முதிர்ந்தவர்கள்.
இந்தக் கல்வி முறையே உங்களுக்குச் சம்மதமில்லை எனில் CHILD CENTERED LEARNING அடிப்படையில் கற்றுத் தரும் பள்ளிகளில் ஒன்றில் அவனைச் சேர்க்கலாம். இந்த மாதிரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வலிக்காமல் சொல்லித்தருவார்கள். அவர்களது CREATIVE THINKING ஐ வளர்ப்பதற்க்கான கல்வி முறையே அவர்களால் பின்பற்றப்படுகிறது. என்ன, மற்ற குழந்தைகளைப் போல அவனது வளர்ச்சியை மதிப்பெண்களைக் கொண்டு அளக்க முடியாது. அவனது EMOTIONAL GROWTH ஐ அவனுடன் அமர்ந்து பழகுவதன் மூலமும், அன்றாடம் அவன் புரியும் செயல்களில், எதிர்கொள்ளும் சூழ்நிலைகளில் அவனது படைப்புத்திறன் வெளிப்படுதன் மூலமே அவன் வளர்ச்சியை நாம் அறிந்து கொள்ள முடியும்.
உங்கள் மகனுக்கு அதிக நேரம் செலவிடும் தகப்பனாகத்தான் நீங்கள் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. பெற்றோர் ஒரு குழந்தையுடன் ஆக்கபூர்வமாகச் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவன் கற்கும் நேரமே.
உங்கள் கடிதம் பார்த்ததும், நம் இருவருக்கும் பெரிய பழக்கம் இல்லையென்றாலும் கூட மிகுந்த நட்பாக உணர்ந்தேன். உங்கள் எண்ணத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டது நீங்கள் எனக்குச் செய்த பெரிய மரியாதை. என் அனுபவத்தில் எனக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறேன். இந்த விஷயத்தில் நீங்களாகவே தெளிவாக முடிவெடுக்கும் அளவுக்குத் திறமை வாய்ந்தவர் தான். இருந்தாலும் நான் கொடுத்த தகவல்கள் உங்களுக்கு எவ்விதத்திலும் உதவினால் எனக்கு மகிழ்ச்சியே.
நன்றி.
Jegadeesh kumar
(ஜெகதீஷ் குமார்)
Jaegadeesh,
உங்கள் கருத்துக்கள் மிகவும் ஆறுதல் அளிக்கிறது. பள்ளியிடம் திரும்பத் திரும்ப பேசி ஆயிற்று. புரிந்து கொள்வதாகத் தெரியலை.
குழந்தைகளின் கல்விக்காக மணிக் கணக்கில் மெனக்கெடும் அப்பாக்கள் யாரையாவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். இது ஒரு தாயின் புலம்பல்.
உங்கள் கருத்துக்கள் மிகவும் ஆறுதல் அளிக்கிறது. பள்ளியிடம் திரும்பத் திரும்ப பேசி ஆயிற்று. புரிந்து கொள்வதாகத் தெரியலை.
குழந்தைகளின் கல்விக்காக மணிக் கணக்கில் மெனக்கெடும் அப்பாக்கள் யாரையாவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். இது ஒரு தாயின் புலம்பல்.
9 அக்டோபர், 2010
கிம் கி டுக் தரும் ஜென் அனுபவம்
தென் கொரிய இயக்குனரான கிம் கி டுக்கின் spring, summer,fall,winter ….and spring படம் முற்றிலும் புதிய காண்பனுபவத்தை வழங்கிய ஒரு திரைப்படம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, அவற்றின் நடுவே உள்ள ஏரி ஒன்றில் மிதந்தபடி நிற்கிற ஓர் பௌத்த ஆசிரமத்தில் பிறந்து வளரும் ஓர் இளம் துறவியும் அவனை வளர்க்கும் குருவும்தான் கதையின் பிரதான பாத்திரங்கள். குழந்தைப் பருவத்திலேயே அந்த இளம் துறவிக்குள் முகிழ்த்து வளரும் அகங்காரம், தன்னையே முன்னிலைப் படுத்தி, தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காக அவன் செய்யும் செயல்கள் மூலம் அறியப்படுகிறது.
ஏரியில் உலவும் தவளை, பாம்பு, மீன் போன்ற சின்ன உயிர்களின் உடலில் கயிற்றைக் கட்டி அவற்றை நீரில் விடுகிறான். அவை துடிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து மகிழ்கிறான்.(சிறுவனாயிருக்கும் போதுதான்). குரு இவன் செய்கைகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். இரவில் உறங்கும் போது அவன் முதுகில் பெரிய கல் ஒன்றைக் கட்டி விடுகிறார். காலையில் கல்லை அவிழ்க்கச் சொல்லிக் கேட்கும் அவனிடம், நீ போய் அந்த உயிரினங்களை விடுவித்து விட்டு வா. அதுவரை நீ கல்லைச் சுமந்து கொண்டுதானிருக்க வேண்டும். அவற்றில் ஏதாவதொன்று இறந்தாலோ, அந்தச் சுமை நீ இறக்கும் வரை உன் மனதில் தங்கி விடும் என்கிறார். (பால் மணம் மாறாத பச்சிளம்) சிறுவன் கல்லைச் சிரமத்தோடு சுமந்தபடி ஏரிக்குச் சென்று தவளையை விடுவிக்கிறான். மீனும் பாம்பும் இறந்து விடுகின்றன. குழந்தை குமுறிக் குமுறி அழுகிறான்.
இந்த முழு நிகழ்வுமே ஒரு அழகான ஸென் கதை சொல்லப்படுவதைப் போல கவித்துவத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. சொல்முறையில் இவ்வளவு எளிமையைக் கைக்கொண்டு ஓர் அடர்ந்த விஷயத்தை நிகழ்த்திக் காட்டமுடியும் என்று படத்தின் ஒவ்வொரு காட்சியுமே நிரூபிக்கிறது.
கிம் காட்சிகளை மிகவும் நிதானமாகக் காட்டுகிறார். ஆஸ்ரமத்திலிருந்து ஏரிக்கரைக்கு யாரோ ஒருவரைச் சுமந்து கொண்டு போவதும், வருவதுமாக இருக்கிறது படகு. ஏரி நடுவில் மிதக்கும் ஆஸ்ரமம் பல கோணங்களில் காட்டப்படுவதும், மாறும் காலநிலைகளில் ஏரியும், மலைகளும், ஆஸ்ரமமும் பல்வேறு ரூபங்கள் எடுத்து அழகு காட்டுவதும் மனதை வருடிக் கொண்டே இருக்கின்றன. பல காட்சிகளில் அருவியில் நீர் விழும் சப்தமும், துடுப்பு வலிக்கப்படும் ஓசையும், காற்றில் சருகுகள் புரளும் ஓசையுமே நிறைந்து படம் முழுக்க நிலவும் அமைதியை அடர்த்தியாக்குகின்றன. துறவிகளுக்கோ, அவர்களைச் சந்திக்க வரும் மனிதர்களுக்கோ உரையாடல் ஒரு அவசியமற்ற ஆடம்பரமாகவே படுகிறது போலும். பெரும்பாலும் எல்லாமே மவுனமாகவே நிகழ்கின்றன.
வசந்தம், இலையுதிர் காலம், குளிர்காலம் மூன்றும் தொடர்ந்து வருகின்றன. இளம் துறவியின் வாழ்விலும் எதிர்பாராத மாற்றங்கள். காமத்தின் வேட்கை அவனை வீழ்த்தி விடுகிறது. ஆசிரமத்துக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் ஒரு இளம்பெண்ணால் ஈர்க்கப்பட்டு அவள் மீது மோகம் கொள்கிறான். இருவரும் குரு அறியாமல் சந்தித்துக் கொள்கிறார்கள். இயற்கை தன் வேலையைக் காட்டி விடுகிறது. இருவரும் ரகசியத் தொடர்பும் குருவுக்குத் தெரிய வருகிறது. அவர் முன் விழுந்து மன்னிப்புக் கேட்கிறான் இளந்துறவி. பொருட்கள் மீது கொள்ளும் காமம் அவற்றைக் கைப்பற்றத் தூண்டும்; பிறகு அதுவே கொலையும் செய்யத் தூண்டும் என்று அவனை எச்சரிக்கிறார் குரு. அந்தப் பெண்ணைப் பார்த்து உடல் குணமாகி விட்டதா என்று கேட்கிறார். அவள் ஆமாம் என்று சொல்ல, அப்போ இதுதான் உனக்குத் தேவையான மருந்து என்று கூறி அவளைத் திருப்பி அனுப்பி விடுகிறார் குரு. இளந்துறவியால் அவள் பிரிவைத் தாங்க முடியவில்லை. குரு உறங்கும் நேரம் ஆசிரமத்தை விட்டுக் கிளம்பி விடுகிறான். (அங்குள்ள புத்தர் சிலையையும் எடுத்துக்கொண்டு).
அவன் உயிர்களைத் துன்புறுத்தியபோதோ, அவனது கள்ள உறவு பற்றி அறிந்தபோதோ எந்தச் சலனமுமின்றி நிகழ்வுகளை ஒரு சாட்சியாகவே பார்த்துக் கொண்டிருக்கும் குரு, தான் வளர்த்த துறவி தன்னை விட்டுப் பிரிந்த போதும் அப்படியே இருக்கிறார். புத்தர் சிலை இருந்த இடத்துக்குப் பின்னாலுள்ள புத்தரின் ஓவியத்துக்குத் தன் தினசரி வழிபாடுகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு, ஆசிரமத்தைப் பெருக்கித் தூய்மை செய்து கொண்டும், படகில் ஏரிக்கரை சென்று மூலிகைளைச் சேகரித்துக் கொண்டுமிருக்கிறார். பருவம் மாறி இலையுதிர்காலம் வருகிறது. செய்தித்தாள் துண்டொன்றில் தன்னை விட்டுச் சென்றவன் மனைவியைக் கொலை செய்து விட்டுத் தலைமறைவாகி விட்ட செய்தியைப் படிக்கிறார். உடனே அவன் வருகையை எதிர்பார்த்து ஆயத்தங்களைச் செய்கிறான். அவனும் வந்து சேருகிறான். கோபமும், வெறியும் கொண்ட இளைஞனாக. புத்தர் சிலையும் திரும்பி வந்து விடுகிறது. நீ தேடிச் சென்ற வாழ்வு உனக்கு விருப்பப்பட்ட மாதிரி இருந்ததா என்று கேட்கிறார் குரு. இளைஞன் கொதிக்கிறான். ஆசிரமத்துக்குள் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறான். குரு அவனை கட்டையால் மரண அடி அடித்து கட்டித் தொங்க விட்டு விடுகிறார். தொங்க விட்ட கயிற்றை தீபம் சுட்டு கீழே விழும் வரை தொங்குகிறான். குரு ஆசிரமத்துக்கு வெளியில் மரத்தரை முழுக்க புத்தரின் சூத்திரம் ஒன்றை தீட்டிக் கொண்டிருக்கிறார். இளைஞனின் வெறி இன்னமும் தீராததால் அவனைப் பார்த்து இந்தச் சூத்திரத்தின் எழுத்துக்கள் அனைத்தையும் கத்தியால் கீறி எடு என்கிறார். இளைஞன் அடிபணிகிறான். அதற்குள் காவல் துறை தேடி வருகிறது. இளைஞன் அவன் மீது பாயப்போக, என்ன செய்கிறாய்? பேசாமல் எழுத்துக்களைக் கீறு என்கிறார் குரு. அவனும் தன் வேலையைத் தொடர, காவலர்கள் விடியும் வரை காத்திருந்து அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் சென்றவுடன் குரு தன்னை மாய்த்துக் கொள்கிறார். அவனை வளர்த்த விதத்தில் தோல்வியடைந்து விட்டோம் என்பதால் தற்கொலை செய்து கொள்கிறாரா அல்லது இனியும் தன் வாழ்வை நீட்டிப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதால் அப்படிச் செய்தாரா என்று தெரியவில்லை.
குளிர்காலம் துவங்குகிறது. இளைஞன் இப்போது மத்திம வயதினனாகத் திரும்பி வருகிறான். மனமும் கனிந்திருக்கிறது. குரு வாழ்ந்த வாழ்க்கை முறையைத் தானும் தொடர்கிறான். முகத்தை மூடியபடி ஒரு பெண் குழந்தை ஒன்றைத் தூக்கிக் கொண்டு அங்கு வருகிறாள். அவள் யாரென்று முகத்திரை விலக்கி அறிய முற்படும்போது, அவள் தடுத்து விடுகிறாள். அவன் கையை மென்மையாகப் பற்றும்போது அவள் அவனிடம் ஏதோ சொல்ல நினைப்பதைப் போலவே இருக்கிறது. குழந்தையை அங்கேயே விட்டு விட்டுச் செல்கிறாள். செல்லும் வழியில் இறக்கிறாள். துறவி அவள் திரையை விலக்கி முகம் பார்க்கிறான். யார் அது? மன்னிக்கவும், எனக்குத் தெரியவில்லை. குழந்தை அவனிடமே வளர்கிறது.
குளிர்காலம் முடிந்து வசந்தம் மீண்டும் வருகிறது. குழந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பிஞ்சு மனசுக்குள்ளும் வன்மம் தலையெடுக்க ஆரம்பிக்கிறது. சிக்கல் நிறைந்த நிகழ்வுகள் கொண்ட ஒரு கதையை கிம் கி டுக் எளிமையாகவும், அழகாகவும், ஒரே நேர்கோட்டிலும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். வழக்கமான முறையில் எடுக்கப்படும் படம் பார்த்துப் பழகியவர்களுக்கு இப்படம் முதல் பார்வையில் ஒரு இனிமையான அதிர்ச்சி தரும். மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும். மீண்டும் பார்க்கையில் பல நுட்பமான அம்சங்கள் புரியவரும்.
5 அக்டோபர், 2010
எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவம்
நாவல் : உப பாண்டவம்
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு : விஜயா பதிப்பகம்
பக்கங்கள் : 384
பரிந்துரை : ஜெகதீஷ் குமார்
உப பாண்டவம் மகாபாரதம் என்கிற இதிகாசத்தின் எண்ணற்ற கதாபாத்திரங்களின் நாம் பார்த்திராத பக்கங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. திரேதாயுகத்தில் விளங்கின அஸ்தினாபுரத்துக்குள்ளும், இந்திரப் பிரஸ்தத்துக்குள்ளும் யுத்தபூமியான குருக்ஷேத்திரத்துக்குள்ளும் சமகால மனிதனொருவன் பயணப்பட்டுத் தான் அடைந்த அனுபவங்களை விவரிப்பதைப் போலவே முழுக்கதையும் அமைந்துள்ளது. நாவல் என்றால் என்ன என்பதற்கான இலக்கண விதிகள் யாவை என்று எனக்கு முழுமையாகத் தெரியாததால், உப பாண்டவத்தில் அவை எத்தனை தூரம் மீறப்பட்டிருக்கின்றன என்று சொல்ல முடியவில்லை. இருப்பினும் நாம் வாசித்து வருகின்ற வழக்கமான நாவல் வரிசையில் உபபாண்டவத்தைச் சேர்த்து விட முடியாதென்றே தோன்றுகிறது. (இது போன்று நீட்டி முழக்குவதற்கு நான் ஒன்றும் அப்படி நிறைய நாவல்கள் படித்தவனல்லன். என் அனுபவத்தின் அடிப்படையிலேயே நான் மேற்கண்ட கருத்தைக் குறிப்பிட்டேன்.)
இந்தியப் பெருங்கடல் போன்று விரிந்ததும், ஆழமானதுமான இதிகாசமாகிய மகாபாரதத்தில் சாதாரண ஜனங்களான நமக்கும் சில பாத்திரங்களைப் பற்றிய அறிமுகம் உண்டு. அவர்களில் பாண்டவர்கள், த்ரௌபதி, ஸ்ரீ கிருஷ்ணன், பிதாமகர் பீஷ்மர், துரோணாச்சாரியார், கர்ணன் போன்றவர்களை காவிய புருஷர்களாகவும், தெய்வீகப் பண்புகள் கொண்டவர்களாகவுமே நாம் இதுவரையிலும் அறிந்து வந்திருக்கிறோம். குணக்குறைகள் நிறைந்த துரியோதனன், துச்சாதனன், சகுனி போன்றவர்கள் கூட பரமாத்மாவின் சதுரங்க ஆட்டத்தின் பகடைக்காய்களாகத்தான் ஆட்டுவிக்கப்பட்டிருக்கிறார்களே தவிர அவர்களை அறவே வெறுக்குமளவிற்கு அவர்களின் பாத்திரம் சித்தரிக்கப்பட்டதாக என் அறிவுக்கு எட்டிய வரை இல்லை. ஆனால் என்னுடையது மிகவும் சிற்றறிவு என்பது இதற்குள் நுழைந்தவுடனேயே தெரிந்து விடுகிறது.
எஸ். ராமகிருஷ்ணனுக்கு பத்து வயதில் ஒரு மழைநாளில் ஒரு சொல்லாகத்தான் பாரதம் அறிமுகமாகியிருக்கிறது.(அர்ச்சுனா, அர்ச்சுனா). பாரதம் வீட்டில் வைத்துப் படிக்கக்கூடாது என்கிற கிராமத்து நியதிப்படி ஊர்ச்சாவடியில் துணி சுற்றி வைக்கப்பட்டிருந்த நானூறு பக்க பாரதத்தை மூன்று நாட்களில் வாசித்து முடித்திருக்கிறார். ஆனால் அது முழு பாரதமல்ல, முழு பாரதம் ஒரு லட்சம் பக்கம் உள்ள புத்தகம் என்று தெரிய வந்திருக்கிறது.(அது ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்டது என்பது என் அறிவு)
பிறகு பல வருடங்கள் கழித்து பாரதக்கூத்து நடக்கும் ஆற்காடு பிரதேச கிராமங்களில் சுற்றித்திரிந்து பாரதம் ஒரு வாழ்வியல் என்றும், அஸ்தினாபுரம், இந்திரப் பிரஸ்தம், குருக்ஷேத்திரம், துவாரகை முதலிய இடங்களில் சுற்றித் திரிந்து அது ஒரு பெரிய நிலவியலின் முடிவற்ற சொல்வடிவமெனவும் உணர்ந்திருக்கிறார். உப பாண்டவம் மதமேறிய யானை மரங்களை ஒடித்து வெறி தீரத் தின்பது போல, அவர் இதிகாசச் சாற்றைக் குடித்துப் பித்தேறிய நிலையில் உருவான கற்பனை என்கிறார். அலைந்து கொண்டேயிருந்த தன் இயல்பின் வடிவமே இந்த நாவலும் உருக்கொண்டிருப்பதாக அவர் ஒப்புக்கொள்வதால், நாவலின் வினோதமான ஒழுங்கற்ற வடிவத்துக்கு நாம் அவரைக் குற்றம் சாட்ட முடியாது.
மகாபாரதம் என்ற கதையை சுருக்கமாகவேனும் தெரிந்து கொண்டு உபபாண்டவத்தைப் படிக்கிறவர்களுக்கு ஓரளவு சுலபமாக இருக்கும். நான் சமீபத்தில் பகவத் கீதையை என் சொந்த முயற்சியில் படித்ததில் முன் கதைச் சுருக்கமாக பாரதக்கதை சொல்லப்பட்டிருந்தது. மேலும் முதல் அத்தியாயத்தின் சில ஸ்லோகங்களில் அதன் பாத்திரங்களின் பெயர்களும், விளக்கமாகச் சில உப கதைகளும் சொல்லப்பட்டிருந்ததால் எனக்கு உப பாண்டவத்துக்குள் நுழைவதற்கு உதவியாக இருந்தது.
இருப்பினும் நாவலை மேற்கொண்டு தொடர மிகவும் சிரமப்பட்டேன். அது என் வாசிப்புப் பழக்கத்தில் உள்ள குறையாகக் கூட இருக்கலாம். கதை ஒரே கோட்டில் நகராமல், முன் பின்னாவும், பின் முன்னாகவும் நகர்கிறது. திடீரென்று எதோடு எதைத் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்வதென்று புரியவில்லை. ஒரு வேளை சொல்லப்படுகின்ற எதற்கும் தொடர்பே இல்லையோ என்றும் தோன்றுகிறது. இப்படியும் சொல்லலாம். இந்த நாவலை எடுத்து எந்தப் பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாலும் புரியும்.
பாதி நாவலில் இருக்கும் போதே, நாவலைத் தொடர்வதில் எனக்குள்ள சிரமங்களைக் குறிப்பிட்டு எஸ்.ரா அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கு அவர் பதில் தரவில்லை. ஆனால் அதே வாரத்தில் அவர் தளத்தில் வாசிப்பது எப்படி என்ற தலைப்பில் வர்ஜீனியா வுல்ஃபின் ஒரு கட்டுரை பற்றி எழுதியிருந்தார். அதை அவர் எனக்குத் தந்த பதிலாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.
நாவல் கொடுக்கும் அனுபவம் என்ன என்று சொல்லவேண்டுமென்றால் முதல் நூறு பக்கங்கள் படித்து விட்டு என்ன படித்தோம் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்றுமே புரியவில்லை. சலிப்பே ஏற்பட்டது. ஒரு புத்தகம் புரியவில்லை எனில் திரும்பப் படிக்க முயற்சிக்க வேண்டும் அல்லது கொஞ்ச காலம் ஆறப்போட்டு விட்டு மீண்டும் எடுத்துப் படிக்க வேண்டும் என்றெல்லாம் அந்தக் கட்டுரையில் எஸ்.ரா குறிப்பிட்டிருந்தார். அதனால் உப பாண்டவத்தை மீண்டும் ஒரு முறை வாசிக்க இருக்கிறேன். அப்போது இன்னுமொருமுறை அதன் நலம் பாராட்டலை இன்னும் அதிகப் புரிதலோடு எழுத முடியும் என்று நம்புகிறேன். இந்தப் பரிந்துரை ஒரு கோர்வையாக இல்லாதிருப்பினும் இதை எழுதுவதன் அவசியம், இதன் மூலம் உபபாண்டவம் பற்றின என் புரிதலைப் பரிசோதித்துக் கொள்வதற்காகவும், இந்த பரிந்துரையை வாசிக்கும், ஏற்கனவே உபபாண்டவத்தை வாசித்துள்ள யாரேனும் என் புரிதலை மேம்படுத்த உதவக்கூடும் என்ற எண்ணத்தாலும்தான்.
நாவலின் துவக்கத்தில் ஆசிரியர் கிராமமொன்றில் நடக்கும் துரியோதனன் படுகளம் என்ற நிகழ்வுக்குச் செல்கிறார். துரியோதனனை பீமன் வதம் செய்த நிகழ்வை ஒரு கலைக்கூத்தாகவும், தெய்வீகச் சடங்கு போலவும் நிகழ்த்தி வழிபடுகின்றனர். துரியோதனனை ஒரு நாயகனைப் போலக் கொண்டாடுகிறார்கள் கிராம மக்கள். நாவலில் கூட ஆசிரியர் துரியோதனன் மீது கரிசனத்தோடும், அனுசரணையோடும் நடந்து கொள்வதை போலவே இருக்கிறது. இந்த நிகழ்வை விவரித்த பின் கதை நேரடியாக மகாபாரத காலத்துக்குச் சென்று விடுகிறது. ஒரு நதியின் கரையில் அதைக் கடக்க வேண்டி ஒரு பயணி நிற்கிறான். அவனை அழைத்துச் செல்ல படகோட்டியாக வியாசரே வருகிறார்.
ஆற்றின் மறுகரையின் அந்தப் பயணி சூதர்கள் என்ற இனத்தவரைச் சந்திக்கிறான். அவர்கள் சூதர்களின் ஆசைகளே நகரமாகவும் நதியாகவும் உருவெடுத்திருக்கிறதென்று கூறி பாரதத்தின் பல்வேறு பாத்திரங்கள் எவ்வாறு சூல் கொண்டனர் என்று விவரிக்கின்றனர். குந்தி, மாத்ரி என்ற இரு பெண்களுக்கு துர்வாசர் கொடுத்த சூல்வாக்கின் மூலம் பிறந்தவர்களே பஞ்ச பாண்டவர்கள் என்றும், பாண்டு அவர்களின் தகப்பன் அல்லன் என்றும் கூறப்படுகிறது.(இந்த மாதிரி அதிர்ச்சித் தகவல்கள் நாவலெங்கும் விரவிக் கிடக்கின்றன.) பாண்டுவிற்கு குழந்தை கொடுக்குளவுக்கு வீர்யமோ, ஊக்கமோ இல்லை என்று கூறப்படுகிறது. அதே போல் காந்தாரிக்கு ஒரே கர்ப்பபிண்டமாகப் பிறந்து அது நூறு கலயங்களில் இடப்பட்டு கௌரவர்களாக வளர்ந்தது(னர்) என்கிறார். இரு உடலாளர்கள் மேல் ராமகிருஷ்ணனுக்கு மிகுந்த கவர்ச்சி இருக்கும் போலிருக்கிறது. சிகண்டி ஆண் கண்களுக்கு பெண்ணாகவும் பெண் கண்களுக்கு ஆணாகவும் தெரிவதை விளக்குகிறார். அர்ஜீனன் சகோதரர்களோடு மறைந்து வாழ்ந்த ஓராண்டில் பிருக்கன்னளை என்ற பெண்ணாக (நபும்சகனாக!) இருந்ததைக் குறிப்பிடுகிறார். துரியோதனன் கூட இடுப்புக்குக் கீழே மலர் போன்றும், இடுப்புக்கு மேலே வஜ்ரம் போன்றும் உடலமைப்பு கொண்டவன் என்கிறார். இது போன்று மகாபாரதத்தின் அறியாது மறைந்திருக்கின்ற ரகசியத் தகவல்கள் ஆங்காங்கே வருகின்றன.
குறிப்பாக அர்ஜூனன் மிகுந்த குழப்பம் மிகுந்தவனாகவும், கொடுமைக்காரனாகவும் சித்தரிக்கப்படுகிறான். கீதோபதேசம் பெற்றும் கூட அவன் மனதில் துக்கமும், குழப்பமும் நீங்காததைப் போல் காட்டப்பட்டிருக்கிறது. குந்தியைப் போன்றே தோற்றம் கொண்ட ஒரு வேடுவப் பெண்ணையும், அவளது ஐந்து குழந்தைகளையும் அரக்கு மாளிகையில் விட்டு விட்டுத் தப்பிச் செல்கிறார்கள் பாண்டவர்கள். வேடுவப் பெண்ணும், குழந்தைகளும் பாண்டவர்களுக்குப் பதிலாகத் தீயில் வெந்து சாகிறார்கள். அதே போல் ஏன் த்ரௌபதி ஐவரின் மனைவியானாள் என்பது விளக்கப்படுகிறது. தாயார் குந்தியிடம் தங்கள் பாஞ்சாலதேசத்திலிருந்து ஒரு பொருளைக் கொண்டு வந்திருப்பதாகச் சொல்ல, அவள் ஐவரையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறாள். அது ஓர் பெண்ணென்று அறிந்தும் அவள் தன் முடிவை மாற்றிக் கொள்வதில்லை. த்ரௌபதியும் விரும்பி அவர்களை மணக்காமல் தகப்பனின் விருப்பத்தின் பேரில்தான் திருமணம் செய்கிறாள். மாமியாரை அவளுக்குப் பிடிப்பதில்லை. ஐந்து பேரிலும் அர்ச்சுனன் மட்டுமே பிடித்தவனாக இருக்கிறான்.
நாவலில் ஆங்காங்கே அறியாத நகரின் குறிப்பு, தட்ச சூத்திரம், கவனகன் குறிப்பு, சமங்கை நதிக் குறிப்பு, உருபேதம், பஞ்சபட்சிகள், பிம்பவனம், சொர்ண உமிழ்கை என்று வினோதமான தலைப்புகளின் கீழ் சுவாரசியமான பல தகவல்கள் கொடுக்கப்படுகின்றன.
நகரங்களின் உரையாடல் என்ற அத்தியாயத்தில் பாரத காலத்தில் இருந்த ஒவ்வொரு நகரத்தின் பிரத்யேகத் தன்மையும் விவரிக்கப்படுகிறது. கோவில்களன்றி பலிபீடங்கள் மட்டுமே கொண்டுள்ள அஸ்தினாபுரமும், அதன் பிரதிபிம்பமாகவும், வன்மையான இரவையும் கொண்ட இந்திரப் பிரஸ்தமும், ஒளிந்து வாழ்பவர்க்கான நகரமான விராட தேசமும், அவமானத்தால் வீழ்த்தப்பட்டு சதா வெம்மை கொண்ட பாஞ்சால தேசமும் நம் கண் முன் விரிகின்றன.
நாவலின் இறுதிப் பகுதியில் ஒவ்வொருவரும் எவ்வாறு இறக்கிறார்கள் என்று காட்டப்படுகிறது. த்ரௌபதி பனிமலையில் இறக்கிறாள். கண்ணன் வேடுவனால் பாதத்தில் அம்பு தாக்கி இறக்கிறான். அம்புப் படுக்கையில் மரண நேரத்துக்காகக் காத்திருக்கிறார் பிதாமகர் பீஷ்மர்.
முன்பே சொன்னது போல நாவலுக்கென்று முழுமையான வடிவம் ஏதும் இல்லை என்பதால் பொறுமையாகவே படிக்கலாம். நிஜ பாரதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துப் படிப்பது சுவாரசியமாக இருக்கும். எஸ். ராமகிருஷ்ணனின் கவிதை மொழியில் படிப்பது சுகமாக இருக்கும். சில நேரங்களில் சற்றே தலை சுற்றினாலும். தமிழில் சமீபத்தில் வெளிவந்துள்ள முக்கியமான நாவல்களில் ஒன்று என்ற அடிப்படையிலும், மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள் மிகச்சில புனைவுகளில் ஒன்று இது என்பதாலும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். மேலும் மறு வாசிப்புக்கும், பரிசீலனைக்கும் உள்ளாக வேண்டிய நாவல் உப பாண்டவம்.
நன்றி : வாசகர் அனுபவம்
30 செப்டம்பர், 2010
அகிராவின் ராஷோமோன்
லேகா அவர்கள் யாழிசை ஓர் இலக்கியப்பயணத்தில் பரிந்துரை செய்த அகிரா குரோசாவாவின் ராஷோமோன் திரைப்படம் பார்த்தேன். நான் உலக சினிமா பார்க்க ஆரம்பித்திருப்பதே இந்தச் சிலமாதங்களில் வலைத்தளங்களின் தொடர்பு ஏற்பட்ட பின்புதான். ஐம்பதுகளில் வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு கொலையை மையமாக வைத்துக் கொண்டு, நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது மனித மனம் கொள்ளும் திரிபுகளை விவரிக்கிறது.
படத்தின் துவக்கக் காட்சியில் ஒரு புத்தபிட்சுவும், இன்னொருவனும் ஒரு பாழடைந்த மண்டபத்தில் உறைந்துபோன முகங்களோடு அமர்ந்திருக்கிறார்கள். வெளியே அடை மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையின் தீவிரம் அவர்கள் இருவர் மனதிலும் தாக்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களின் தாக்கத்தைக் குறிப்பதாகப் படுகிறது. அங்கு அவர்களைச் சந்திக்கும் ஒரு வழிப்போக்கனிடம் இருவரும் தாங்கள் சாட்சியமளித்த ஓர் விசித்திரக் கொலை வழக்கைப் பற்றிச் சொல்கிறார்கள்.
கதை முழுவதும் சொல்ல ஆயாசமாக இருக்கிறது. ஒரு கொள்ளைக்காரன் காட்டுக்குள் வரும் ஒரு தம்பதியரை வழிமறித்து, மனைவியைக் கற்பழித்து விடுகிறான். கணவன் இறக்கிறான். அவன் யாரால் கொல்லப்பட்டான் என்று, பிடிபட்ட கொள்ளைக்காரன், தப்பிய மனைவி ஒவ்வொருவர் தரப்பு சாட்சியமும் காட்சிகளாக விரிகின்றது. இறந்த கணவனின் ஆவி கூட ஒரு மீடியத்தின் உதவியுடன் சாட்சி சொல்கிறது. இந்தக் கதைகளை வழிப்போக்கனிடம் பகிர்ந்து கொள்ளும், கொலையுண்ட உடலை முதலில் பார்த்தவன் அவை அனைத்தும் பொய் என்று சொல்லி தன் தரப்புக் கதையே உண்மை என்று இறுதியில் சொல்கிறான்.
அகிரா கதையில் பலவிஷயங்களை ஆராய்ந்திருக்கிறார். பெண் என்ற ஒரு பலவீனமான உயிரினம் ஆண்களின் பார்வைக்கு ஒரு போகப் பொருளாகவும், மோகம் தீர்ந்ததும் வீசி எரியப்படுகிற குப்பை இலையாகவுமே பார்க்கப்படுவதை நன்கு பதிவு செய்துள்ளார். இரண்டு ஆண்கள் உன்னை அனுபவித்திருக்கிறோமே, நீ ஏன் உன்னைக் கொன்று கொள்ளக் கூடாது என்கிறான் கணவன். கற்பழிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உணர்வுகள் இரண்டு பேருக்கும் நடுவில் அல்லாடுகின்றன. நான்கு கோணங்களில் சொல்லப்பட்ட கதைகளிலும் பெண் சுகிக்கப்படுக்கிறாள்; வீசி எறியப்படுகிறாள்; புறக்கணிக்கப்படுகிறாள். தன் குதிரையை இழப்பதை விட அவளை இழப்பதே மேல் என்கிறான் கணவன். தன் உயிரைக் காத்துக்கொள்ள அவளை இழக்கத் தயாராகிறான்.
பெண்ணின் நிலையற்ற மனதும் கோடி காட்டப்பட்டுள்ளது. கொள்ளைக்காரனோடு செல்லத் தயாராகி விடுகிறாள் அவள். அதற்கு அவன் தன் கணவனைக் கொல்ல வேண்டும் என்கிறாள். இருவரும் பொருதிக்கொள்ளும் காட்சியில், மகாவீரன் என்று மார்தட்டிக்கொள்ளும் கொள்ளைக்காரனின் கரங்கள் உயிர்ப்பயத்தால் நடுங்குகின்றன. இருவருமே தங்கள் உயிர் போய்விடுமோ என்ற நடுக்கத்துடனேயே சண்டையிடுவது வித்தியாசமான காட்சி.
முதல் மூன்று கதைகளிலுமேயே பொய்கள் இருக்கின்றன. தங்களை உத்தமராகக் காட்டிக் கொள்ளத் தங்களைக் கொலைகாரர் என்று சொல்லிக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். பொய்மை மனிதர்களின் இயல்பான குணமாகி விட்டது. மனிதன் தனக்குத்தானே பொய் சொல்லவும் பழகி விட்டான். சமயங்களில் அவன் சொல்வது உண்மையா, பொய்யா என்று அவனாலேயே பிரித்துச் சொல்ல முடியவில்லை என்பன போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. நாமும் இப்படித்தானே எங்கோ நடந்த துர்ச்சம்பவங்களைப் பற்றி உரையாடும் போது தத்துவ விவாதத்தில் இறங்கி விடுகிறோம். எந்த ஒரு மோசமான நிகழ்வும் மனிதனின் அடிப்படையான தன்மைகளின், ஒழுக்க நெறிகளின் அலசலுக்கு வழி வகுத்து விடுகிறது. நேர்மையையும், ஒழுக்கத்தையும் நம்மைத் தவிர்த்து எல்லாரிடமும் எதிர்பார்க்கிறோம். மனிதனின் மேலுள்ள நம்பிக்கை தகர்ந்து கொண்டே வருகிறது. உலகம் நரகம் போலவே மாறி வருகிறது. கதையின் நான்காவது கோணத்தைச் சொல்லுபவன் தான் சொல்லும் கோணமே உண்மை என்கிறான். தான் காவல் துறையிடம் சிக்கிக் கொள்ளக் கூடாதென்பதற்காகவே அதை நீதிமன்றத்தில் சொல்லவில்லை என்கிறான். அவன் சொல்வது உண்மைக்கதையா, இல்லையா என்று நாம்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டபின் மண்டபத்தின் உள்ளிருந்து கைவிடப்பட்ட குழந்தையொன்றின் அழுகுரல் கேட்கிறது. அந்தக் குழந்தையோடு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கிமோனோவை வழிப்போக்கன் எடுத்துக்கொள்கிறான். மற்றவன் அவனைத் தடுக்க மனிதாபிமானத்தோடு நடந்து கொள், இது அந்தக் குழந்தையைக் கண்டெடுப்பவர்களுக்கு உதவும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது எனும்போது, குழந்தையைக் கைவிட்ட அந்தப் பெற்றோர் மனிதாபிமானத்தொடு நடந்து கொண்டார்களா? கொலை நடந்த இடத்திலிருந்து அந்தப் பெண்ணின் விலையுயர்ந்த குறுவாளைத் திருடினாயே நீ மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டாயா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறான் வழிப்போக்கன். இவன் மௌனமாக நிற்கிறான். மனிதத்தில் நம்பிக்கை இழக்க மறுக்கும் புத்த பிட்சு குழந்தையை எடுத்துக்கொண்டு நடக்க இவன் கை நீட்டுகிறான். போய்விடு, பிடுங்குவதற்கு இன்னும் ஏதாவது இருக்குமா என்று பார்க்கிறாயா? என்கிறான் புத்தபிட்சு வெறுப்போடு. இவன் கண்ணீருடன் எனக்கு ஆறு குழந்தைகள், இது சேர்வதால் எனக்கு ஒரு பெரிய வேறுபாடும் ஏற்படப்போவதில்லை என்று குழந்தையைக் கேட்கிறான். மனிதம் இன்னும் சாகவில்லை என்று மகிழும் பிட்சு கண்ணீரோடு அவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு குழந்தையைத் தருகிறான். எத்தனையோ புதிர்கள் நிறைந்த மனித உள்ளத்தில் தவறுகள் புரிவதால் ஏற்படும் குற்ற உணர்ச்சிகள் உறுத்தி அவர்களை நல்வழிப்படுத்துகிறது என்றெண்ணலாம் போலத் தோன்றுகிறது.
27 செப்டம்பர், 2010
மாலத்தீவின் மாணவர்கள்
இந்த ஆசிரியர் தினத்தில் மாலத்தீவில் ஒரு ஆசிரியனாக எனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஒரு எண்ணம். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த திரு விருட்சம் அவர்களுக்கு நன்றி. மாலத்தீவுகளில் ஆசிரியர் தினம் அக்டோபர் ஐந்தாம் தேதிதான் கொண்டாடப்படுகிறது. அதுதான் உலக ஆசிரியர் தினம். நாம் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றுவதற்காக செப் 5ல் கொண்டாடுகிறோம்.
நான் இங்கு வந்து ஏழு வருடங்களாகிறது. ஓர் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியனாகவும், தற்போது துறைத்தலைவராகவும் இருக்கிறேன். இந்நாட்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். இங்குள்ள மாணவர்களுடன் பழகியதில் அவர்களைப் புரிந்துகொண்டேன் என்று சொல்வதை விட எனக்குள் இருந்த ஆசிரியனை நான் சுத்திகரித்துக் கொண்டேன் அல்லது மீள் உருவாக்கம் செய்து கொண்டேன் என்பதே உண்மை.
வகுப்பில் நுழைந்ததும் பதறிப்போய் எழுந்து வணக்கம் சொல்கிற, வகுப்புகள் நடைபெறுகின்ற போது ஆசிரியருக்கு எதிரான எந்தக் கருத்தையும் பேசாத, ஆசிரியர் சொல்வது சில சமயங்களில் தவறேயாயினும் அதை மறுத்துப் பேசாத, எங்கு அவரைச் சந்திக்க நேர்ந்தாலும் மரியாதையோடு விளிக்கிற நம் நாட்டு மாணவர்களுடன் பழகின ஆசிரியர்களுக்கு முதன் முதலில் மாலத்தீவின் குழந்தைகளோடு ஏற்படும் அனுபவம் ஒரு பெரிய கலாசார அதிர்ச்சிக்குரியதாகத்தான் இருக்கும். இங்கு வகுப்பறைகளுக்குள் மாணவர்கள் அதீத சுதந்திரம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர்கள் கூட அவர்களை ஓர் அளவிற்குத்தான் கண்டித்து வழி நடத்த இயலும். உலகிலேயே விவாகரத்தில் அதிக சதவீதம் உள்ள நாடு மாலத்தீவுகள் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் ஒற்றைப் பெற்றோருடன் தான் வாழ்கிறார்கள். அல்லது இரண்டு பெற்றோருமே விவாகரத்தாகி வேறு திருமணம் செய்து கொண்டதால் மாமா, அத்தை, பாட்டி இப்படி யாராவது ஒருவரது ஆதரவின் கீழ் வாழ நேர்கின்ற குழந்தைகள் அனேகர். பள்ளியில் சேரவிருக்கும் குழந்தைகளின் விண்ணப்ப படிவத்தில் தாய், தந்தை, பாதுகாவலர் ஆகிய மூன்று பேருடைய முகவரிகளுக்கும் தனித்தனி இடம் விடப்பட்டிருக்கும். பெரும்பாலான விண்ணப்பங்களில் மூன்று இடங்களுமே வேறு வேறு முகவரிகளால் நிரப்பப்பட்டிருக்கும்.
அன்பும், அக்கறையும் கிடைக்க வேண்டிய பருவத்தில் அவை மறுக்கப்பட்டு விடுவதால் ஏற்படுகின்ற வெறுப்பையும், கோபத்தையும் உமிழ்வதற்கு அவர்களுக்கு எளிய இலக்காகக் கிடைப்பவர்கள் வெளிநாட்டிலிருந்து அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகச் செல்லும் ஆசிரியரே. புதிதாகச் செல்லும் ஆசிரியரை அவர் ஆயத்தமாக இல்லையென்றால் ஒரு வழி பண்ணி விடுவார்கள். மாணவர்கள் மட்டுமல்ல, மாணவியரும் கூடச் சரியான முறையில் அணுகவில்லையெனில் ஆபத்துதான். அவர்கள் தாக்குதலுக்கு முதலில் இலக்காவது நமது ஆங்கில உச்சரிப்புத்தான். அவர்கள் ஒன்றும் மேற்கத்தியர்களைப் போல உச்சரிப்பதில்லையெனினும், நாம் பேசப் பேச அதைத் திருப்பிச் சொல்லிக் கிண்டலடிப்பார்கள். எனக்கு யெல்லோ (தட்’ஸ் நாட் யெல்லோ, இட்’ஸ் யெலோ)
நடத்துவதைக் கிரகித்துக் கொள்ளும் விஷயத்தில் அவர்கள் நம் மாணவர்கள் போல அல்ல. ஆசிரியர் நடத்துவதைப் புரிந்துகொள்ளவில்லையென்றால் நேரடியாகத் தூங்கப் போய்விடுவார்கள். அப்படித் தூங்கி விட்டால் பரவாயில்லை. பக்கத்து மாணவர்களுடன் அரட்டையில் இறங்குவதற்கும், டேபிள் மேல் மண்டை ஓடு, பிடித்த கால்பந்து வீரர் படம், துணியில்லாத பெண் படம் மற்றும் இன்னபிற ஓவியங்களை வரைவதற்கும், டேபிள் மேல் ஒட்டியிருக்கிற மைக்கா ஷீட்டை உரித்து எடுப்பதற்கும் இறங்கி விடுவார்கள். அவர்களை எந்த வகையிலும் கண்டித்தல் இயலாது. மிரட்டல், கத்தல் எதுவும் எடுபடாது.
நயமாகச் சொன்னால் அங்கே ஆசிரியன் என்று ஒரு ஜந்து இருப்பதைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அதே நேரத்தில் பள்ளி நிர்வாகம் வகுப்பு அமைதியாக நடக்கிறதா என்று கவனிப்பதற்காக நியமித்த மேற்பார்வையாளர்கள் பள்ளி முழுதும் சுற்றி வந்து கொண்டே இருப்பார்கள். வகுப்புக்குள் ஏற்படும் பிரச்னைக்கு ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும். மாணவர்கள் மீதான நடவடிக்கை எதுவும் கடுமையானதாக இருக்காது. மேற்பார்வையாளர் கூப்பிட்டு ஏன் செய்தாய் என்று கேட்பார். அவன் பதினைந்து நிமிடம் அமைதியாக நிற்பான். ஒழுக்கப் படிவம் என்று ஒன்றிருக்கிறது. அதைக் கொடுத்து நிரப்பச் சொல்வார். பிறகு மீண்டும் வகுப்புக்கு அனுப்பி விடுவார். திரும்பி வரும் மாணவன் இன்னும் வன்மத்தோடு ஆசிரியரைப் பழிவாங்குவான். ஆசிரியருக்கு எதிரான செயல்கள் சிலநேரங்களில் எல்லை மீறிப் போவதுண்டு. சில ஆசிரியர்கள் தெருவில் நடக்கும்போது மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கின்றனர். பக்கத்துத் தீவில் ஒரு ஆசிரியரை கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்கி அவரது கை முறிந்துவிட்டது. அந்தக் கும்பலில் ஒருவன் அந்த ஆசிரியர் புகார் செய்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவன். பல ஆசிரியர்கள் மாணவர்களின் தொல்லை தாங்காது வேலையை விட்டு விட்டுச் சென்றிருக்கிறார்கள். மீறி எப்படியும் சமாளித்து விடலாம் என்று தங்கிய சிலர் பள்ளி நிர்வாகத்தாலேயே தகுதியற்றவர் என்று அனுப்பி வைக்கப் பட்டிருக்கின்றனர். நான் பெரிய கசப்புச் சம்பவங்கள் ஏதுமின்றி ஏழுவருடங்கள் கழித்து விட்டேன். என் அனுபவத்தில் பல மாணவர்களைப் பார்த்துக் கத்தியிருக்கிறேன். பலரோடு மோதியிருக்கிறேன். பல நாட்கள் இன்றைக்கு நமக்கு அடி விழப் போகிறது என்று எதிர்பார்த்ததுண்டு. ஆனாலும் இதுவரை அப்படி நிகழ்ந்ததில்லை. நான் அவர்கள் நன்மைக்காகவே அவர்களைக் கண்டிக்கிறேன் என்று உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.
ஆசிரியர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களும் கூட குழந்தைகளை அடித்து வளர்க்க முடியாது. எனக்குத் தெரிந்து ஒரு மாணவி தன் தாய் தன்னை அடித்துவிட்டாள் என்பதற்காக போலீசில் சொல்லி விட்டாள். காவல்துறை அவள் தாயை வந்து தூக்கிக் கொண்டு போய் விட்டது. இந்த நாட்டின் சட்டத்தின் படி பதினாலு வயதிற்குட்பட்ட ஒருவர் கொலை செய்தால் கூட அவர்களுக்கு பதினாலு வயது முடிந்த பின்னரே அந்த வழக்கு துவங்கும்.
கசப்பான நிகழ்வுகள் பல இந்த மாணவர்களால் ஆசிரியர் சமூகத்துக்கு ஏற்பட்டாலும் பழகி விட்டால் இந்த மாணவர்கள் நம் மீது காட்டும் நேசம் எல்லையற்றது. வீட்டில் அவர்களுக்கு கிடைக்காத அன்பும், பரிவும் ஆசிரியர்களிடமிருந்து கிடைப்பதை அவர்கள் தாமதமாகவே உணர்ந்தாலும், அதன் பின் அவர்கள் நம்மைத் தங்களில் ஒருவராகவே எண்ணத் துவங்குகிறார்கள். ஒரு மாணவனுக்கு சில நாட்கள் பாடம் சொல்லிக் கொடுத்ததற்காக தினமும் என் வீட்டிற்கு இரண்டு இளநீர் தேடி வந்து விடும். இன்னொருவன் நள்ளிரவில் நண்பர்களோடு கடலில் மூழ்கிப் பிடித்த லோப்ஸ்டர்களில் ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றான். அது ஒன்று ஆயிரம் ரூபாய் இருக்கும். எப்படிச் சமைப்பது என்று தெரியாமலேயே சமைத்து உண்டோம். மாணவர்களின் பெற்றோர்களுக்கு நாம் நல்ல ஆசிரியர்கள் என்று தெரிந்துவிட்டால் நம் மீது அன்பைப் பொழிவார்கள். நம்மை அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுவார்கள்.
இந்நாட்டு மாணவர்களின் சில பண்புகள் வினோதமானவை. நாம் ஒருநாள் அதிக நேரம் தூங்கி பள்ளிக்குச் செல்வதில் தாமதமாகி விட்டால் காரணமாக என்ன சொல்வோம்? சைக்கிள் டயர் பஞ்சராகி விட்டது என்று ஏதாவது சொல்வோம். மரியாதை வேண்டியாவது தூங்கிவிட்டோம் என்ற உண்மையைச் சொல்ல மாட்டோம். அப்படியே சொன்னாலும் நம் வாத்தியார் தோலுறித்து விடுவார். ஆனால் வீட்டுப் பாடம் ஏன் செய்யவில்லையென்று கேட்டால் தூங்கிவிட்டேன், மறந்துவிட்டேன் என்று உண்மையில் என்ன காரணமோ அதைத்தான் சொல்வார்கள். அதே போல் நம் மாணவர்களைப் போல படித்து உயர வேண்டும் என்ற உணர்வூக்கம் இவர்களிடம் குறைந்தே காணப்படுகிறது. உணவு எடுத்துக்கொள்வதில் மிகுந்த கவனமற்றவர்கள். காலை ஏழு மணி முதல் ஒரு மணி வரை பள்ளி என்பதால், காலை உணவு எதுவும் உண்ணாமலேயே பள்ளிக்கு வந்துவிடுவார்கள். ஒழுங்காக நீர் அருந்துவதில்லை. பெரும்பாலான மாணவர்களின் உடல் மிகுந்த பலவீனமாகவே காணப்படுகிறது. பிரேயர் நடக்கையில் பலர் மயங்கி விழுவது வழக்கமான காட்சி. பெண்கள் கதறித் துடித்து மயங்கி விழுவதைக் கண்டு ஆரம்பத்தில் நான் அதிர்ந்ததுண்டு. முக்கியமாக அருகிலிருப்பவர்கள் எந்த எதிர்வினையுமின்றிக் கடந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறேன். ஆனால் இது வழக்கமாக நடக்கும் செயல், சிறிது நேரத்தில் அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள் என்று தெரிந்ததும் நானும் பதறுவதைக் குறைத்துக் கொண்டேன்.
பள்ளிகள் ஒவ்வொன்றும் அரசுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் தனித்தனிப் பெயர்களுடனேயே விளங்குகின்றன. ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனிப் பாடலே உண்டு. அதைத்தான் பிரேயரில் பாடுவார்கள். நூறு சதவீதம் இஸ்லாத்தைப் பின்பற்றும் நாடு மாலத்தீவுகள். தினமும் புனித குர் ஆன் வழிபாட்டோடுதான் பள்ளி துவங்கும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குக் குர் ஆன் கற்பிக்கப் படுகிறது. தங்கள் மதத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். இஸ்லாத்தில் ஆண்கள் நகை அணிவது தடை செய்யப்பட்டிருப்பதால், எங்கள் கைகளில் இருக்கும் மோதிரத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்க்கை முறையிலும், உடையணிவதிலும் மேற்கத்தியத் தாக்கம் நிறையவே இருக்கிறது. பெண்கள் மிகவும் நவீனமாக உடையணிகின்றனர். திருமணமானவர்களும், மற்றும் பல பெண்களும் புர்கா அணிந்து உடை அணிவதும் உண்டு. பள்ளிக்கு மாணவிகள் நடந்து அல்லது டாக்சியில் மட்டுமே வருகின்றனர். சைக்கிள் ஓட்டுவதில்லை. ஆசிரியர்கள் நாங்கள் எல்லாம் சைக்கிளில்தான் பள்ளிக்குச் செல்வோம். இங்கு நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் காதல் திருமணங்களே. பெற்றோருக்கு சரி சொல்வது மட்டுமே வேலை. எட்டாம் வகுப்பிலேயே தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள்.
கல்வி கற்றலும், கற்பித்தலும் மாணவர்களை மையமாக வைத்தே அமைய வேண்டும் என்பது மாலத்தீவுகள் அரசின் விருப்பம். அதற்கான பல்வேறு முயற்சிகளையும் அது எடுத்து வருகிறது. எல்லாப் பள்ளிகளிலும் மல்டி மீடியா ப்ரொஜெக்டர் உண்டு. ஏராளமான கணிப்பொறிகள் உண்டு. ஸ்மார்ட் போர்டு என்று ஒன்று உண்டு. அதை ஆன் செய்து விட்டால் கைகளே சாக்பீஸாகி விடுகிறது. கணிப்பொறியிலிருந்து நேரடியாக போதிக்கவேண்டியவற்றை எடுத்து நம் விருப்பப்படி அவைகளை மாற்றிக் கொள்ளலாம். வொர்க் ஷீட் என்பது நாம் எடுக்கும் தலைப்பின் கருத்துக்களை எளிய கேள்விகள், வரைபடங்கள், பொருத்துக வகைக் கேள்விகள் என்று விதவிதமான வடிவங்களில் வெளிப்படுத்தி மாணவர்களை அத்தலைப்பைப் புரியவைக்கப் பயன்படும். பள்ளித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நீங்கலாக, ஆசிரியர்களே தயாரிக்க வேண்டும். ஆசிரியர் என்றால் தெளிவாகச் சொல்லிக்கொடுத்தால் மட்டுமே போதும் என்று நினைத்திருந்த எனக்கு ஒரு பள்ளியின் நிர்வாகத்தின் செயல்பாடுகளிலும், ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமையைக் கட்டமைக்கும் பணியிலும் ஆசிரியர் ஒருவனின் பங்கு இன்றியமையாதது என்று கற்றுக் கொடுத்தது மாலத்தீவுகளின் அனுபவங்களே.
நன்றி: விருட்சம்.காம்
நன்றி: விருட்சம்.காம்
22 செப்டம்பர், 2010
ஜெயமோகன் கட்டுரைக்கு மறுவினை
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு கீதையும் யோகமும் குறித்து அவர் எழுதிய கட்டுரை ஒன்றுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரை பல்வேறு சிந்தனைகளைக் கிளறி விட்டது. அவருக்கு நன்றி. அந்தக் கடிதத் தொடர்பை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் ( அவர் தவறாக எண்ண மாட்டார் என்றெண்ணி)
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
(உங்கள் கட்டுரைக்கு மறுவினை எழுத வேண்டுமென்று ஆரம்பித்து இந்தக் கடிதம் வரைமுறையின்றி நீண்டு விட்டது. மன்னிக்கவும்)
கீதையும் யோகமும் என்ற கட்டுரை படித்ததும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கீதையை மதிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் இருவரிடமுமே நிலவி வரும் தவறான அபிப்ராயங்கள் பற்றி நீங்கள் அற்புதமாக எழுதியிருந்தீர்கள். இந்த எதிர்வினையை ஆற்றுவதற்கு எனக்குள்ள தகுதியை முதலில் சொல்லி விடுகிறேன். தகுதி இல்லை என்றே சொல்லலாம். இருப்பினும் கீதையைத் தட்டுத் தடுமாறிக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதையே ஒரு தகுதியாக முன்வைக்கிறேன். கோயில்களில் விற்கும் கீதை பதிப்பைத்தான் நான் முதலில் வாசித்தேன். அது பக்தி மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததும், வேதாந்தத்தின் அடிப்படைக் கருத்துக்களில் எனக்குப் பரிச்சயம் இல்லாமையும் முதலில் கீதையும் பிற மத நூல்களைப் போல் ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் ஒரு நூல் என்றே எண்ண வைத்தது. பிறகு சுவாமி குருபரானந்தர், சுவாமி ஓம்காரனந்தா போன்றோரின் வேதாந்தச் சொற்பொழிவுகளும், சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் கீதா சாரம் பற்றிய விளக்கங்களும் என் கருத்தை மாற்றின. கீழ்காணும் விஷயங்கள் கீதை கற்பது பற்றியான என் புரிதல்கள். அவற்றில் உங்கள் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள சில செய்திகளுக்கு ஆதரவாகவும், மாறாகவும் கருத்துக்கள் இருக்கக் கூடும்.
கீதை ஒரு இலக்கியமாகவும், மத நூலாகவும் அல்லது தத்துவ நூலாகவும் பிறர் தன்னை அணுகுகிற வாய்ப்பை அளித்தாலும் அதன் தலையாய நோக்கம் மனித வாழ்வின் சகல பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வை அளிப்பதே. அல்லது மனிதனின் முக்கியப் பிரச்னையான மனநிறைவின்மை என்ற குறையைத் தீர்ப்பதே.
எனவே கீதை கற்க விரும்புகிற ஒருவர் அதற்கான அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருந்தாலே ஒழிய அது அவருக்குப் புரிய சாத்தியமில்லை. தெய்வ சம்பத்து, அசுர சம்பத்து என்று பின்வரும் அத்தியாயமொன்றில் அவற்றை வகைப்படுத்திக் கூறுகிறார். மேலும் விவேகம் (நிலையற்றது, நிலையானது இவற்றின் அறிவு), வைராக்யம் (நிலையற்றதில் விருப்பமின்மை), ஷமாதி ஷட்க சம்பத்தி (மனம், புலன் கட்டுப்பாடு முதலிய ஆறு தகுதிகள்), முமுக்ஷுத்துவம் (விடுதலையின் மேலுள்ள வேட்கை) போன்றவை ஓர் உபநிஷத் மாணவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகளாக கூறப்படுகின்றது. நீங்கள் குறிப்பிட்ட, கீதை பற்றின மாற்றுக் கருத்துக்கள் கொண்ட அந்தச் சிலருக்கு இந்தத் தகுதிகள் இருக்க வாய்ப்பில்லை எனினும் திறந்த மனதோடு கீதையை அவர்கள் அணுகியிருந்தால் அதன் சாரத்தை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்..
அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜூனனின் கவலை குறித்து நீங்கள் விளக்கிய விதம் நன்றாக இருந்தது. பிறப்பிலிருந்தே உற்ற நண்பனாக விளங்கி வருகிற கிருஷ்ணன் அவனுக்கு கீதையை உபதேசிக்க எத்தனையோ தருணங்களிருந்தும் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அங்குதான் அர்ஜூனன் தன் உண்மையான பிரச்னை என்ன என்றும் அதைத்தான் ஒருவனே தீர்க்க முடியாதென்றும் உணர்கிறான். நாம் அனைவரும் வாழ்வில் வருகிற சிக்கல்களை நம் குறுகிய அறிவைக் கொண்டுதானே தீர்க்க முயல்கிறோம்? இனி நம் முயற்சியால் எதுவும் இயலாது என்று தெரிந்த பின்தானே நமக்கு மேலுள்ளவரின் துணையை நாடுகிறோம். கிருஷ்ணனும் அர்ஜூனன் தன்னை அவரது சிஷ்யன் என்று அறிவித்துக் கொள்கிறவரை எல்லாரையும் போல அவனுக்கு சாதாரண புத்திமதிகளைத்தான் சொல்லிகொண்டிருக்கிறான். அலி மாதிரிப் பேசாதே, இது ஒரு க்ஷத்ரியனுக்கு அழகல்ல, உன்னை உலகம் பழிக்கும், எழுந்து போ, போர் பண்ணு என்றெல்லாம். அர்ஜூனனும் அதுவரை தான் ஏன் போர் பண்ணக்கூடாது என்பதற்கான காரணங்களை அடுக்குகிறானே ஒழிய தான் குழப்பத்தில் இருக்கிறோம் என்று ஒப்புக்கொள்வதேயில்லை. அவன் சிஷ்யனாக மாறியபின் தான் கிருஷ்ணன் குருவாக இருந்து அவனுக்கு ஞானத்தை உபதேசிக்கிறார்.
ஆத்ம ஞானத்தை நாடும் ஒருவர் வேதாந்த மரபில் வந்த, ஸ்ரோத்திரிய பிரம்மநிஷ்டனாகத்(வேதாந்தம் கற்றவராகவும், ஞானத்தில் நிலை பெற்றவராகவும்) திகழ்கின்ற ஒரு குருவை அணுகி அவரிடமிருந்தே அதைக் கற்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதை கீதையில் கிருஷ்ணரே கூறுகிறார். கீதையும் ஒரு உபநிஷத்துதான். அதை முறையாக குருவிடமிருந்து கற்கும் போதே அது ஞானத்தைக் கொடுக்கிறது. அதற்கு முன் நாமாக அதைப் படிப்பதெல்லாம் கீதை கற்க உதவும் படிகளாக இருக்க முடியும். எனவே கீதை மேல் குற்றச்சாட்டை வைக்கிறவர்கள் அறைகுறையான புரிதலோடுதான் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஏதோ மாத நாவல் படிப்பது போல ஒருமுறை மேய்ந்து விட்டு இது போற்றத்தக்க நூல் அல்ல, இது கொலை நூல், இது அரைகுறை, இலக்கியத் திருட்டு என்றெல்லாம் சொல்வது அபத்தமான குற்றச்சாட்டு. குறைந்த பட்சம் அவர்கள் உங்களைப் போன்ற இலக்கிய நண்பர்களிடமாவது விவாதித்துத் தெளிவு படுத்திக்கொண்டிருக்கலாம்.
கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று கீதை சொல்கிறது என்பது இன்னொரு தவறான கருத்து. பலனை எதிர்பாராமல் பைத்தியக்காரன் கூட எந்தச் செயலையும் செய்வதில்லை. ஒரு செயல் செய்யப்படும்போது அதற்கு விளையும் பயன்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை என்பதுதான் கிருஷ்ணர் சொல்வது. ஒரு செயலின் பலனை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. எப்போதும் நம் செயல் நமக்குச் சாதகமாகவே அமையும் என்று எதிர்பார்த்தல் தவறு. எனவே செயலைச் செய்து விட்டு அதற்கு என்ன பலன் வந்தாலும் அது கர்மபலன்களை நிர்ணயிக்கிற சக்தியால் தரப்பட்டது என்று மனமுவந்து ஏற்றுக்கொள்ளவேண்டும். இது முதல் படி. இதற்கு அடுத்தபடியாக நாம் செய்யும் செயல்களில் விருப்பமோ, வெறுப்போ இன்றி அவற்றைக் கடமையாக எண்ணிச் செய்வது. இதுவே கர்ம யோகம். இதற்குக் கிடைக்கும் பலன் மனத்தூய்மை. இந்த மனத்தூய்மை நம்மை ஞானத்தை அடைவதற்குத் தகுதியாக்குகிறது. எனவே ஞானத்தை விரும்பும் ஒருவன் கர்மயோகம் செய்து மனத்தூய்மை அடைய வேண்டும். பிறகு முழுமையாகத் தன்னை உலகிலிருந்து விலக்கிக்கொண்டு ஞானயோகப்பயிற்சியில் ஈடுபடவேண்டும்.
நீங்கள் சாங்கிய யோகம் பற்றிச் சொல்லியிருந்தது சற்றுப் புரியவில்லை. சாங்கிய யோகத்தில் கிருஷ்ணர் ஆத்மா என்பதன் இலக்கணங்களையும், அதை அறிந்தவன் எவ்வாறு தன் வாழ்வைத் தொடர்வான் என்று சொல்கிறார். முழு உபதேசமும் இரண்டாவது அத்தியாயத்திலேயே முடிந்து விடுகிறது. உபநிஷதங்களின் போதனைமுறையே முதலிலேயே மெய்ப்பொருள் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுதல்தான். சிஷ்யன் தகுதியானவனெனில் அது அவனுக்கு உடனே ஞானத்தை அளிக்கிறது. இல்லையெனில் அவன் சந்தேகங்கள் அனைத்தும் தீரும் வரை குரு அவனுக்கு விளக்குகிறார். ஆத்மஞானத்தை உபதேசித்தபின்னரே கிருஷ்ணர் கீதையின் பின் வரும் அத்தியாயங்களில் அதற்கான தகுதிகளை வரிசைப்படுத்துகிறார்.
கீதை என்னும் நூலின் அவசியத்தையும், அது செயல்படும் விதத்தையும் கீழ்க்காணுமாறு புரிந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.
மனிதன் இயல்பாகவே துக்கத்தை விரும்புவதில்லை. ஆனந்தத்தையே நாடுகிறான். ஆனால் பொருட்களில் காணும் இன்பம் நிலையற்றதாகவும், பந்தத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. மேலும் எந்தப்பொருளின் தன்மையும் இன்பம் கிடையாது. அப்படி இருந்தால் அப்பொருளை அனுபவிக்கும் ஒவ்வொரு முறையும் அது ஒரே மாதிரியான இன்பத்தை அளிக்க வேண்டும். ஆனால் ஒருமுறை இன்பம் தரும் பொருளே மறுமுறை துன்பம் தருவதாக ஆகிறது. இதிலிருந்து ஆனந்தம் என்பது நமக்குள்தான் இருக்கிறது. பொருட்களின் சேர்க்கை ஏற்படும் போது அது வெளிப்படுகிறது என்பதை உணர்கிறோம். எனவே நமது உண்மையான இயல்பே ஆனந்தமாகத்தான் இருக்க வேண்டும். இருப்பினும் வாழ்வில் துக்கமே பெரும்பாலும் பீடித்துள்ளதாக உணர்கிறோம். நம் இயல்பான ஆனந்தத்தை எப்போதும் நம்மால் உணரமுடிவதில்லை. இந்த நிலைக்கு ஒன்று மட்டுமே காரணமாக இருக்க முடியும். நம் உண்மைத் தன்மையைப் பற்றிய அறியாமைதான் அது. அதை அறிந்து கொள்வதின் மூலமே நாம் சகல துன்பங்களிலிருந்தும் விடுதலை அடையமுடியும். அதுவே பரமானந்த நிலை எனப்படுகிறது. இந்நிலை அறிவை அடைவதன் மூலமே அடையப்படுகிறது. ஏதோ ஒரு செயலைச் செய்வதன் மூலம் அல்ல. பரமானந்த நிலை என்பது ஓர் அனுபவமும் அல்ல(it is not an experiential happiness).
இந்த அறிவை அடைவதற்கு முதலில் நாம் சில தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். அத்தகுதிகளைப் பெறுவதற்காகத்தான் கர்மயோகம் பரிந்துரைக்கப்படுகிறது. கீதையில் இரண்டே இரண்டு யோகங்கள்தான் சொல்லப்படுகின்றன. ஒன்று கர்மயோகம். ஞானத்துக்கு நம்மைத் தகுதியாக்குவது. இன்னொன்று ஞானயோகம். ஞானத்தை நமக்கு அளிப்பது. பக்தி யோகம், ராஜயோகம் போன்றவையும் கர்மயோகத்தின் கீழேயே வருகின்றன. தனி சாதனையாக அவற்றுக்கு ஞானம் தரும் சக்தி கிடையாது. அவை ஞானத்துக்கான தகுதிகளையே அளிக்கின்றன. எந்த ஓர் அறிவும் அதைச் சரியாகக் கொடுக்கும் கருவியினாலேயே அடையப்படுகிறது. உதாரணமாக நிறத்தைப் பார்க்க கண் என்ற கருவிதான் வேண்டும். மூக்கால் நிறத்தை அறிய முடியாது. அதுபோல் நான் என்கிற உண்மையை அறிய வேதம் என்ற ஒரே கருவிதான் உள்ளது. அதைக் கேட்டு, சிந்தித்து, சந்தேகம் தெளிந்து தன் மயமாக்கிக் கொள்வது ஒன்றுதான் ஞானம் அடைவதற்க்குண்டான ஒரே வழி.
இந்த வயதிலேயே ஏன் கீதைபடிக்கிறே? என்று இந்து மதத்தை சார்ந்தவர்களே கேட்கும் கேள்விகளுக்கும், கீதையை முற்றாகவே புறக்கணிக்கும் அறிவு ஜீவிகளுக்கும் மத்தியில் கீதை பற்றிய அடிப்படைப் புரிதலை சராசரி மனிதர்களிடம் ஏற்படுத்துவதற்காக தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வணக்கத்துக்குரியவை.
நன்றி.
ஜெகதீஷ் குமார்
மாலத்தீவுகள்
இந்தக் கடிதத்திற்கு ஜெயமோகன் அவர் தளத்தில் கொடுத்த மறுவினை
அன்புள்ள ஜெகதீஷ் குமார்
முன்னொரு காலத்தில் ஒருவர் குமுதம் அரசு பதில்களில் கேட்டிருந்தார், சரோஜாதேவி புத்தகத்தை எந்த வயதில் படிப்பது கீதையை எந்த வயதில் படிப்பது என்று. அரசு பதில், கீதையை செயலாற்றும் வயதில் வாசித்தான் பயன் உண்டு. சரோஜாதேவியை செயலாற்றா வயதில் படித்தால் தீங்கு இல்லை
ஜெ
இந்தக் கடிதத்திற்கு ஜெயமோகன் அவர் தளத்தில் கொடுத்த மறுவினை
அன்புள்ள ஜெகதீஷ் குமார்
முன்னொரு காலத்தில் ஒருவர் குமுதம் அரசு பதில்களில் கேட்டிருந்தார், சரோஜாதேவி புத்தகத்தை எந்த வயதில் படிப்பது கீதையை எந்த வயதில் படிப்பது என்று. அரசு பதில், கீதையை செயலாற்றும் வயதில் வாசித்தான் பயன் உண்டு. சரோஜாதேவியை செயலாற்றா வயதில் படித்தால் தீங்கு இல்லை
ஜெ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மேலும் வாசிக்க
-
நன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது. 1. ஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்க...
-
எனக்கு முதன் முதலில் எதனால் ஆன்மீகத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டதென்று யோசித்துப் பார்க்கையில் ஓஷோதான் ஞாபகத்துக்கு வருகிறார். இந்தியனாய் இருக்க...
-
கைவல்ய நவநீதம் கைவல்ய நவநீதம் என்பது வேதாந்தத் தத்துவங்களைக் கூறும் ஒரு தமிழ் நூல் . அதற்குப் பொன்னம்பல ஸ்வாமிகள் எழுதிய உரை ...
-
அசோகமித்திரன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் . அவரது படைப்புகள் பலவற்றை நான் படித்ததில்லை . சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் ...
-
ஆரம்பத்தில் சுவாரசியமின்றி பார்க்க ஆரம்பித்து இப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சி ஆதித்யா சானலில் எப்போது ஒளி பரப்பினாலும் வாயைத் திறந்து கொண்...