31 மார்ச், 2015

இரு கவிதைகள்

1.
செவ்வகத்தைச் சதுரம்
என்றே கொள்க.
இரண்டிலும்
எதிரெதிர் பக்கங்கள் இணையானவை
அளவில் சமமானவை.
நான்கு மூலைகளிலும் பாகை தொண்ணூறுதானே.
ஓரிணை மற்றோரிணையவிட நீண்டிருப்பது
காலத்தின் அவசியம் கருதியே.
ஓரிணை நீள்வதின் தேவை அறிந்து
காலந்தோறும் குறுக்கி வாழந்தது மற்றோரிணை.
நவீன சமத்துவம் கருத்தில் கொண்டு
இனி செவ்வகத்தைச் சதுரம் என்றே அழைத்து வைப்போம்.

2.
தண்ணீரினுள் அமிழும் பந்து
தலை சிலுப்பி மேலே எழும்பும்.
காற்றடைத்த பொருளுக்குத்
தண்ணீருடன் உறவு இல்லை.
மேற்பரப்பில் வழியும் நீரை வளிக்காற்று உண்டு விடும்.
பந்துக்கில்லை பந்தமும் பாசமும்.
பந்துக்குள்ளும், வெளியும் ஒரே காற்றுதான்.
தோல் கிழிந்தால் வேற்றுமை அழியும்.
பந்து என்பது காற்றேதான்.


                                                                      

24 மார்ச், 2015

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எழுதிய பதில் வராத கடிதம்

அன்புள்ள எஸ்ரா,

ஆத்மா நாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி வாசித்தேன். நீண்ட நாள் கழித்து உங்கள் சிறுகதை ஒன்றை வாசிக்கிறேன். பல்வேறு விவாதங்களை எழுப்பும் சிறுகதை இது. குமாரசாமி ஜேஜேயை நினைவுபடுத்தினான்( சொற்களின் இடைவெளிக்குள் நீந்துவது சுகமானது/ வெட்டவெளியில் மூத்திரம் அடிப்பது மாதிரி./ஊரைக்கூட்டி வைத்து முதலிரவு நடத்த முடியாது)
கவிதைகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ளும் சிறுகதை என்பதே புதுமையான அணுகுமுறையாக இருந்தது. கோழிரோம்த்தினைக் குறித்த விவாதத்தை பிரமிள் கவிதைக்கு நீட்டியது சுவாரஸ்யமான திருப்பம். கதைக்குள் நிறைய கவிதைகள். ஈழத்து மஹாகவியின் கவிதை சந்தத்துடன் இழைந்த சுகமான அனுபவம். கவிதையைக் குறித்து கவிதையைப் போன்றே ஒரு சிறுகதை.

என் போன்று அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லாம் உங்களை இணையத்தில்தான் அதிகம் வாசிக்க இயலும். நீங்கள் உங்கள் தளத்தில் நிறைய படைப்புகளை வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

15 மார்ச், 2015

சிவராம காரந்தின் அழிந்த பிறகு

சிவராம காரந்தின் அழிந்த பிறகு
சிவராம காரந்தின் அழிந்த பிறகு நாவலை சித்தலிங்கையா மொழிபெயர்ப்பில் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். ஜெயமோகன் எழுதிய கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற நூலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நாவல்களில் ஒன்று இது.
ரயிலில் நட்பு கொண்ட நண்பர் யசவந்த ராயர் மரணத்துக்குப் பிறகு அவரது வேண்டுகோள்களை நிறைவேற்றப் புறப்படுகிறார் ஆசிரியர் சிவராம காரந்த். இந்தப்பயணத்தில் அவர் சந்திக்கும் நண்பரின் உறவினர்கள் மூலமாக யசவந்தரின் வாழ்க்கை குறித்தும், அவரது மேன்மையான பண்பு நலன்கள் குறித்தும் அறிந்து கொள்கிறார். மட்டுமன்றி நற்பண்புகள் நிறைந்த ஒருவனைச் சுற்றி வாழும் சுயநலம் மிகுந்த உறவுகள் குறித்தும் அறிந்து கொள்கிறார். நண்பர் உயிரோடிருந்தால் தன்னை நம்பியிருந்த, தன் நலனையே பெரிதென மதித்த உயிர்களுக்கு என்னென்ன விதத்தில் உதவ வேண்டும் என்று எண்ணியிருந்திருப்பாரோ அவற்றைத் தன் கடமையாகவே எண்ணி செய்து முடிக்கிறார் ஆசிரியர். யசவந்த ராயரின் உறவுகளினூடாக ஆசிரியர் நிகழ்த்தும் பயணமே நாவலின் கதை.
       யசவந்த ராயர் இறப்பதற்கு முன் அவர் இறுதிக்காலத்தில் வரைந்த ஓவியங்களையும், நாட்குறிப்புகளையும், தன்னிடமிருந்த பதினைந்தாயிரம் ரூபாய் பணத்தையும் சிவராமகாரந்திடம் விட்டுச் செல்கிறார். அந்நாட்குறிப்புகளையும், அவரது ஓவியங்களையும் கொண்டு, தான் சிறிது காலமே பழகியிருந்த நண்பரின் குணச்சித்திரம் பற்றிய கற்பனையை உருவாக்கிக் கொள்கிறார் ஆசிரியர். நான்கு பேருக்கு தன் பெயரில் மாதாமாதம் பணம் அனுப்பச் சொல்லிக் கேட்டிருப்பார் யசவந்தர். அந்த நான்கு பேரையும் சந்தித்து நண்பரின் ஆளுமையைப் பற்றி அறிய விழைகிறார் காரந்த். அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் யசவந்தரின் உறவினர்களும், ஊர் மக்களும் அவரைப் பற்றிச் சொல்லும் கதைகளும், நிகழ்ச்சிகளும் அவர் பற்றித் தான் மனத்தில் வரைந்து வைத்திருந்த சித்திரம் சரியே என்பதை காரந்துக்கு உறுதிப் படுத்துகின்றன. யசவந்தரைச் சுற்றியிருந்த உறவுகளில் யார் அவர் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்பதையும், யார் அவர் செல்வத்தின் மீது மட்டும் குறியாயிருப்பவர்கள் என்பதையும் அவரது பயணம் அவருக்கு உணர்த்துகிறது. அவர் மீது அன்பு கொண்டவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாகவும், வாழ்க்கைக்கு உதவும் வண்ணமும் அவர் தன்னிடம் அளித்துச் சென்ற பணத்தைச் செலவிடுகிறார். தன் நண்பரின் கடமையைத் தானிருந்து செய்து முடித்து விட்ட திருப்தியில் மனம் நிறைகிறார்.
       நாவலில் கன்னட நிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சித்திரங்களாக அறிமுகப்படுத்துகிறார் காரந்த். அவருக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வம் யசவந்த ராயர் இறுதியாக விட்டுச் சென்ற ஓவியங்களை அவர் விவரிப்பதிலிருந்து தெரிகிறது. கதை முழுக்க ஒரு பெயராகவே வரும் யசவந்தர் தன் உயர்ந்த பண்பு நலன்களாலும், உறுதியான கொள்கைகளாலும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார். அவருக்கு இருக்கும் சில ஒவ்வாத பலவீனங்கள் கூட அவரது ஆளுமையின் பிரம்மாண்டத்தின் முன் மறைந்து விடுகின்றன.

       வேகமாகச் செல்லும் நாவல். வாசிக்கச் சுகமாகவும், ஸ்வாரஸ்யமாகவும் உள்ள நாவல். சித்தலிங்கையாவின் மொழிபெயர்ப்பு அருமையானது; எளிமையான சொற்களும், சிக்கலில்லாத வாக்கியங்களும் கொண்டது. தேசிய புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நாவலை www.openreadingroom.com என்ற தளத்தில் வாசிக்கலாம். தரவிறக்கிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. மேலும் பல முக்கியமான இந்திய நாவல்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் இந்தத் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. அழியாச் சுடர்கள், உலக இலக்கியம் தளங்கள் போன்று இத்தளமும் பரவலாக இலக்கிய வாசகர்களிடத்துச் சென்றடைய வேண்டும்.  

9 மார்ச், 2015

தமிழ் நாவல்கள் இணையத்தில் வாசிக்க



 நான் ஒரு பொக்கிஷத்தை அண்மையில் கண்டறிந்தேன். அது குறித்து ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதினேன். அவர் தளத்தில் வெளியானால் நிறைய பேரை அது சென்றடையும் என்பதற்காக. விரைவில் அவர் வெளியிடுவார் என நினைக்கிறேன்.

ஜெயமோகன் கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற நூலில் குறிப்பிட்டுள்ள பல நாவல்கள் கீழ்க்கண்ட தளத்தில் கிடைக்கின்றன. தரவிறக்கமும் செய்து கொள்ளலாம். அற்புதமான தளம். நாவல்கள் என்ற டேக் ஐ கிளிக் செய்து பாருங்கள்.


14 ஜனவரி, 2015

மீண்டும் எழுத்துக்கு

மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஒருபக்கமும், வீரியத்தோடும், விடாமலும் எழுத இயலுமா என்ற ஐயம் மறுபக்கமும் ஒன்றையொன்று சமன் செய்தபடி நாட்கள் கடந்துவிட இன்று முகநூலில் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தபோது உழவர் திருநாளிலிருந்தே எழுத ஆரம்பித்து விட்டால் என்ன என்று தோன்றியது. மீண்டும் எழுதத்துவங்கி இரண்டு நாட்களாகிறது. ஒருமணி நேரம் கணினித்திரையையும், படுக்கறையின் சகல பரிமாணங்களையும் பராக்கு பார்த்தபடி யோசித்ததில் முக்கால் பக்கம் எழுத முடிந்தது. கட்டுரையோ, சிறுகதையோ என்றால் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பே மனதில் ஒரு தெளிவான வடிவம் பிறந்திருக்கும். நீண்டநாள் கனவான நாவலைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மனத்துக்குள் தெளிவான வடிவம் இல்லாததாலும், எங்கேயாவது போய் முட்டி நின்று விடுவோமோ என்ற ஐயம் காரணமாகவும் வரிகள் மெதுவாகவே வளர்கின்றன.
மாலத்தீவுகளில் இருந்து வேலையை விட்டுவிட்டு வந்து இப்போது அமெரிக்காவில் தெற்குகரோலினா மாகாணத்தில் ஆசிரியர் பணிபுரிய ஆரம்பித்து ஐந்து மாதங்களாகி விட்டது. இந்த அமெரிக்க வாழ்க்கைக்குத் தகவமைத்துக் கொள்வதற்கே இத்தனை நாட்களாகி விட்டன. மாலத்தீவுகளைப் போல, இங்கே அவ்வளவு நேரம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் இருக்கும் நேரத்தை பள்ளியின் பணிச்சுமையை தளர்த்திக் கொள்ளும் செயல்களிலேயே செலவிட்டிருக்கிறேன். மீண்டும் எழுத ஆரம்பித்து இரண்டு நாட்களிலேயே ஏன் எழுத்தைத் தவம் என்று சொல்கிறார்கள் என்று புரிந்தது. எழுத்தைத் தவமாகக் கொள்ளவே எனக்கும் ஆசை. ஆனால் பழக்கங்கள் என்னை கட்டியிழுத்துக் கொண்டிருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக என் முயற்சியில் சோம்பலையும், தள்ளிப்போடும் குணத்தையும் வெல்லவேண்டும்.
        மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கும் நாள் தமிழர் திருநாள் என்பது மட்டுமல்ல. இன்றுதான் எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் எழுத்துலகை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். இன்று முழுதும் என் மனம் கனத்தபடியே இருந்தது. பெருமாள் முருகன் இறந்து விட்டதாக அறிவித்திருந்தார் அவர். உண்மையில் ஓர் எழுத்தாளனின் மரணமாகவே அது எனக்குப் பட்டது. அவரது நாவல்கள் பெயரை மட்டும் கேள்விப்பட்டதுண்டு. வாசித்ததில்லை. எல்லாவற்றையும் இணையத்திலேயே வாசிக்க விழையும் இக்காலத்தில், தமிழ் இலக்கியவாதிகள் தங்கள் படைப்புகளை இணையத்திலும் வெளியிடும் முயற்சியையும் மேற்கொள்ளவேண்டும். காசுக்கு விற்கப்படும் ஆயிரம் பிரதிகளால் எந்தத் தமிழ் எழுத்தாளனின் பொருளாதாரமும் மேம்பட்டு விடப்போவதில்லை. தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் வாசிக்கப்படும் ஜெயமோகன் தன் பெரும்பாலான படைப்புகளையும் இணையத்திலேயே வெளியிட்டு விடுகிறார். ஆண்டுக்கு ஐந்து நாவல்களைத் தளத்தில் வெளியிட்டு பிற எழுத்தாளர்கள் வெளியிடும் நாவல்களை சுண்டைக்காய் அளவுக்கு சின்னதாக்கி விடுகிறார். ஒரு சமூகத்துடன் உண்மையில் உரையாட விரும்பும் ஓர் எழுத்தாளனுக்கு இணையமே இன்றைய தேதியில் வலிமையான சாதனம். பிரசித்தமான பல எழுத்தாளர்களைவிட, வலைப்பதிவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களின் எழுத்து சுவையானதாகவும், சிந்தனைத் தீவிரத்துடனும் இருக்கிறது. வலைப்பூக்களில் குப்பையைக் கொட்டிக் கொண்டிருந்த பலர் இன்று முகநூலில் ஐக்கியமாகி விட, வலைப்பதிவு எழுதுபவர்கள் எண்ணிக்கை தேய்ந்து போய் இன்றைக்கு திறம் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படம் குறித்த பதிவுகளையே அதிகம் எழுதி வந்த சிலர் நல்ல பதிவர்களும் அவற்றைக் குறைத்துக் கொண்டு புத்தகங்கள் பக்கம் திரும்பி இருக்கிறார்கள்.பதிவர்கள், எழுத்தாளர்கள் என்ற வேறுபாடு இனியும் தேவையா என்று தோன்றுகிறது. நூல் வடிவில் தங்கள் எழுத்து வந்து விட்டதாலேயே எழுத்தாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள் புதியவர்கள் சிலர். பல பதிவர்கள் தங்கள் தளத்திலேயே கவிதை, சிறுகதை, குறுநாவல் என்று தரமிக்க படைப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எதற்கு வேறுபாடு. இனி எல்லாரும் எழுத்தாளர்களென்றே அறியப்படுவோம். அந்த வார்த்தை தரும் கவுரவம்தானே பலரை எழுத்துக்குள் ஈர்க்கிறது?
தொடர்ந்து எழுத எண்ணம் கொண்டுள்ளேன்.இலக்கியமும், ஆன்மிகமுமே கருப்பொருள்களாயிருக்கும். யார் வாசிக்கிறார்கள் என்ற கவலை அவசியமில்லை என்று நினைக்கிறேன். எனவே பின்னூட்ட வசதியையும் தடை செய்து விட்டேன். என்னை வாழ்த்த, வைய என் மின்ன்ஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
        இலக்கியம் பயிலவும், ஆன்ம ஞானத்தில் ஊறித்திளைக்கவும் என் எழுத்து எனக்குத் துணைபுரியும் என்று நம்புகிறேன். தொடர்ந்து இந்த எழுத்துத் தொழிலில் நான் ஈடுபட்டிருக்க எல்லாம் வல்ல இறை துணை நிற்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.


மேலும் வாசிக்க