பிறப்பொக்கும், கர்மா விமர்சனம்

 நண்பர் ஜமீலா எனது பிறப்பொக்கும், கர்மா ஆகிய சிறுகதைகளை வாசித்து விட்டு வாசிப்பனுபவமும் விமர்சனமும் எழுதியிருந்தார்.  அவரது விமர்சனம் கீழே

பிறப்பொக்கும் கதை பற்றி என் கருத்து ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக சோமுவும், பாலுவும் இருந்தாலும் செயலில் வேறுபட்டே நிற்கின்றனர்.  சோமு உடல் ஊனமுற்றவனாக இருந்தாலும்  லாட்டரி தொழில் செய்து குடும்பத்தைக் காக்கின்றான். பாலு பொய், புரட்டு, திருட்டு என எதற்கும் அஞ்சாதவனாய் திடீர் திடீரென காணாமல்  போகின்றவனாய் இருக்கின்றான். துணைக்கு செந்திலோடு விந்தி விந்தி நடந்து குடும்பத்தைக் காக்கும் சோமுவை வெளியில் கல்யாணி, லாட்டரிகடைக்கரர், அலியார், லல்லி அப்பா என எல்லோரும் மதிக்கின்றனர். பாலுவை யாரும் சட்டை செய்வதில்லை. ஆனால் இதற்கு மாறாக பாலுமேல்  அபரிமிதமான பாசம் வைத்திருக்கிறாள் அவன் அம்மா. சோமு மேல் பாசம் காட்டுவது குறைவுதான். சோமு வீட்டில் செலவழிக்கும் நேரம் குறைவு. ஆனால் பாலு இடையிடையே வீட்டிற்கு வந்தாலும் அம்மாவுடன் நேரம் செலவழித்து மனதைக் கரைப்பதில் கை தேர்ந்தவனாக இருக்கிறான். அவன் தாய் அவன் குறைகளை பெரிதாக மதிக்கவில்லை. மாறாக அவன் பக்கமே பேசுகிறாள். தன்னை கவனித்துக் கொள்ளும் மகனை இரண்டாம் பட்சமாக எண்ணி பொய் பித்தலாட்டம் செய்யும் மகன் மேல் பரிவு கொள்கிறாள். இன்னொரு காரணமாக இதைச் சொல்லலாம். சோமு உடல் ஊனமுற்றவனாகப் பிறந்த பின்னர் பாலு உடற்குறை யற்றவனாய் பிறந்ததும் அந்த தாய்க்கு அவன்மேல் தனிப்பாசம் இருந்திருக்கலாம். பிறப்பிலேயே வேறுபாடு பார்த்ததால் பிறப்பொக்கும் என்னும் தலைப்பு அம்மாவைப் பொறுத்தவரை இல்லைதான்.   இன்னும் கூட சில வீடுகளில் சிவப்பாக பிறந்தவர்கள் கவனிப்பும் கருப்பாகப் பிறந்தவர்கள் புறக்கணிப்பும் பெறுவதைப் பார்க்கலாம். கடமை உணர்வோடு குடும்பத்தைக் காப்பவன் வஞ்சிக்கப் படுகிறான்.பொய் புரட்டு திருட்டில் ஈடுபடுபவன் பணத்தையோ, பொருளையோஅனுபவிக்கிறான். இந்தக் கதையில் என்னைக் கவர்ந்த ஒன்று தங்க சங்கிலியை சோமு யாருக்காக வாங்கினான் என்பது. தனக்காகவா அல்லது  தன் தாய்க்காகவா இல்லை கல்யாணிக்காகவா என்று பல ஊகங்களை வாசகர் கற்பனைக்கே விட்டு விடுகிறார் ஆசிரியர். கதை சிறுவன் செந்தில் பார்வை வழியாகச் சொல்லப்படுவதால் அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. கல்யாணிக்கு ஒருவேளை வாங்கியிருக்கலாம். "சரி போகட்டும் விடு" என்று சொல்லும்போது  அவளுக்குக் காரணம் தெரிந்திருக்கிறது என்பது புரிகிறது. யார் கண்டார் அவனுடைய தாய் தனக்குத் தராமல் யாருக்கோ நகை வாங்கி வைத்திருக்கிறான் என்று பாலுவிடம் எடுத்துக் கொடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அருமையான கதையைக் கொடுத்த எழுத்தாளர் ஜெகதீஷ் குமாருக்கு வாழ்த்துக்கள்!


கர்மா கதை பற்றி...

கர்மா கதை படிக்க ஆரம்பித்தவுடன் உள்ளிழுத்துக் கொண்டது. திரு.பிராடி அண்டை வீட்டு நாயைச்  சுட, பின்னர் நாய்க்கடி பட்டு கர்மாவை உணர்வது தலைப்பிற்கு ஏற்றவாறு இருந்தாலும் உண்மையில் செல்வநாயகம் தம்பதியினர் தான் அடுத்த வீட்டினருக்குச் செய்த தீங்கு தன் பேரப்பிள்ளையையும், மருமகளையும் பாதித்து விடுமோ என தங்கள் கர்மாவை எண்ணி ஒவ்வொரு நிமிடமும் பதறுவதுதான் உண்மையில் நினைவில் வருகிறது. இன்னும் வராத நாற்றத்தை முகர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பது ஒருவேளை கர்மாவாக இருக்கலாம். அமெரிக்க வீடுகளுக்கு இடையே வாழும் இந்திய மக்களின் அனுபவம் நன்கு சொல்லப் பட்டிருக்கிறது. சிலர் நம்முடன் நல்ல உறவில் இருப்பார்கள். சிலர் இன்னும் நம்மை வேற்று மக்களாகவே கருதுவார்கள். ஆனால் வழிகளில் 'ஹலோ' 'ஹாய்'க்கு குறைவே இருக்காது. துடைப்பக் கட்டை மீசை, பாறை முகம் வார்த்தைப் பிரயோகங்கள் புன்சிரிப்பைத் தந்தது.
நல்ல கதையனுபவத்தைத் தந்த எழுத்தாளர் ஜெகதீஷ் குமாருக்கு வாழ்த்துக்கள்!!

அன்புள்ள ஜமீலா, முதலில் தமிழில் பதிலளிக்க இயலவில்லை. பிறப்பொக்கும் கதையை மிக ஆழமாகவும், நுட்பமாகவும் அலசியிருக்கிறீர்கள். பல இடங்களை நான் வாசக ஊகத்துக்கே விட்டிருந்தேன். மினிமலிச பாணியைப் பின்பற்றித்தான் இரு கதைகளையும் எழுதியிருந்தேன். வாசிப்பவருக்கும் கதையில் பங்கு கொடுக்கும் வகையில். பல மறைபொருட்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களுடைய விமர்சனம் எனக்கு மேலும் எழுத ஊக்கம் தருகிறது. நீங்கள் ஒரு தேர்ந்த விமர்சகரும் கூட என்பதற்கு இவை சான்று. எந்தக் கருதுகோள்களின் பாதிப்பும் இல்லாமல், உங்கள் வாசிப்புப் பலத்தில் இந்த விமர்சனத்தைக் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் நிறைய விமர்சனம் எழுத வேண்டும். மீண்டும் நன்றி!


Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை