என் புதிய சிறுகதை ஊனுடல் சொல்வனம் 275 வது இதழில் வெளியாகியுள்ளது.
ஆசிரியர்கள் மைத்ரேயன் மற்றும் பாஸ்டன் பாலா ஆகியோருக்கு நன்றி.
கடல் மீது எழுந்து நின்றிருந்த நிலவின் மென்னொளியும், அதன் கரையில் அமைந்த குடிலின் கால்களில் செருகப்பட்டிருந்த தீப்பந்தங்களின் ஒளியும் உணவுமேஜை மீது விழ, ஒரு கணம் கண்ணிமைக்காமல் அதையே பார்த்து நின்றான் சங்கமேஸ்வரன். கிரில் செய்யப்பட்ட லோப்ஸ்டர், சோறும் கருதியாவும், வறுத்த டூனா துண்டங்கள், ரொட்டியும் மசூனியும், டெவில் செய்யப்பட்ட கோழிக்கறி, தொட்டுக் கொள்ள ரிஹாக்குரு, அப்பளம். குடிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மதுவகையின் பெயர் ப்ளாக்பெர்ரி சங்கிரியா என்று நினைவு வந்தபோது சங்கமேஸ்வரனுக்குத் தன்மேலேயே வியப்பாக இருந்தது. வந்து ஒரு வாரத்தில் நிறையத்தான் கற்றிருக்கிறோம். அது சரி, ஒரு மனிதனால் இத்தனையும் ஒருவேளையில் உண்டு முடித்து விட முடியுமா என்று அவன் சிந்திக்க முற்படுகையில் மேஜையின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மனிதர் அவனை அழைத்து சுய நினைவுக்குக் கொண்டு வந்தார்.
“ஹே, பாய், பிரிங் மி எ ஹைனிக்கன்!”