14 மே, 2022

கானல் நதி - இச்சை எனும் உயிர்க்கொல்லி

கானல் நதி - இச்சை எனும் உயிர்க்கொல்லி


கானல் நதி பெரும்புகழ் கொண்ட பாடகனாக ஆகியிருக்க வேண்டிய ஒரு இசைமேதை படிப்படியாகத் தன்னையே அழித்துக் கொள்வதின் துல்லியமான ஆவணம். தனஞ்சய் முகர்ஜி கல்கத்தாவின் சிறு கிராமமான மாமுட்பூரில் பிறந்து வளருகிறான். மிக இளம் வயதிலேயே அவனது இசை மேதைமையைக் கண்டு கொண்ட அவனது தந்தை அவனை உள்ளூர் இசை ஆசிரியர் விஷ்ணு காந்த சாஸ்திரிகளிடம் சேர்த்து விடுகிறார்.இசை கற்கும் பொழுதே சரயு என்ற பெண்ணைக் கண்டு காதலுறுகிறான். அங்கு அவன் பாடம் கற்றபின், குருசரண் என்ற தபலாக் கலைஞன், பணக்காரன், அவன் வீட்டில் தங்கி சாதகம் செய்கிறான். வேலை எதுவும் செய்வதில்லை. கச்சேரிக்குப் போன இடத்தில் குடிப்பழக்கம் தொற்றிக் கொள்கிறது. காதலில் தோல்வி ஏற்படுகிறது. சரயுவை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். மனம் உடைந்து, குடி அதிகரிக்கிறது. 

இளம் பருவத்திலிருந்தே தனஞ்சய்க்குக் காம உணர்வுகளை அடக்க முடிவதில்லை. சங்கீதம் அவனுக்கு இயல்பாகவே வருகிறது. அவன் பாடிக் கேட்பவரெல்லாம் கரைகிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள். ஆனால் இசை குறித்த எண்ணங்களை விட காம எண்ணங்களே அவனை முழுதும் ஆக்ரமிக்கின்றன. உடம்பின் ஆதார சுனைகளிலிருந்து சீறிப்பாய்ச்ச்சும் தாரைகளினால் வழி நடத்தும் சந்தர்ப்பங்களினால் ஆகிறது அவன் வாழ்வு. பகல் வெளிச்சத்தை ஆன்மாவின் கையிலும், இரவு வேளைகளை சதைக்குள் பொதியவிட்டும் தவித்துக் கழிக்கிறான் நாட்களை. அவனே சொல்லிக்கொள்வது போல இசை என்னும் தொண்டுக்கிழவிக்கும், உடல் திரண்ட இளம்பெண்களுக்கும் இடையில் அல்லாடுகிறது அவன் வாழ்வு. இறுதியில் வெல்வது உடல்தான். பெற்றோரை படுக்கையறையில் பார்ப்பதில் தொடங்கி, தன் மித்தாலி அத்தையுடன் கொள்ளும் காம உணர்வில் தொடர்ந்து, தன் காதலி சரயுவிடத்தும் (மார்புப் பகுதியில் மெலிதாகத் துருத்திப் புடைத்திருந்த இரண்டு எலுமிச்சம் பழங்களிடமிருந்து பார்வையை விலக்க முடியாமல் தவித்தான்.), தன் அண்ணன் சுப்ரதோவின் மணப்பெண் ஸ்வப்னாவிடத்தும், ஏன் பார்க்கும் எல்லாப் பெண்களுமே அவனில் காம உணர்வைக் கிளர்த்துபவர்களாக இருக்கிறார்கள். படிப்படியாகச் சிதைகிறான் தனஞ்சய். நாவல் முழுவதுமே இந்த அழிவின் சித்திரமே வரையப்பட்டிருக்கிறது.

இந்த நாவலை யுவன் சந்திர சேகர் எழுதவில்லை என்றால் வியப்படைவீர்களா? அவரே அப்படித்தான் சொல்கிறார். தனஞ்சயின் நண்பன் குருசரணின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய வெளியுறவுத் துறைப் பணியிலிருப்பவரும், இசை குறித்து புகழ் பெற்ற நூல்கள் எழுதியவருமான கேசவ் சிங்க் சோலங்கி அவன் கதையை இந்த நாவலாக எழுதுவதாக, இந்த நாவலின் முதல் பகுதியில் வருகிறது. 

கதை 1940 களில் துவங்கி தனஞ்சயின் அகாலமரணம் வரை அவனோடே பயணிக்கிறது. நாவலில் பல்வேறு மாந்தர்கள் உடன் வரினும், முக்கியப் புள்ளியாக தனஞ்சயே இருக்கிறான். நாம் அவனோடு சேர்ந்து கச்சேரிக்குப் போகிறோம், அவன் பாடியது கேட்டு எல்லாரும் கண்ணீர் உகுக்கையில், பாராட்டு மழை பொழிகையில், இந்த மேதை ஏன் அழிகிறான் என்று விசனம் கொள்கிறோம். அவன் இடறும் இடங்களில், அவன் எல்லை மீறும் தருணங்களில், குடியில் தன்னை அழிக்கும் வேளைகளில் பதறுகிறோம். அவன் அழிவுக்கு சாட்சியாகவே வாசகராகிய நாமும் நிற்கிறோம். 

நாவல் பால்யம், வாலிபம், நாட்குறிப்பு, அழைப்பு என நான்கு பகுதிகளாக பகுக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதி அவன் பிள்ளைப் பருவத்தையும், அவன் இசை கற்பதையும், முதற்காதலில் விழுவதையும், அவனது குடும்ப நிலைமையையும், அவனது கிராமத்து சூழ்நிலையையும் தீட்டிக் காட்டுகிறது. அவனது அவனிடம் தன் குரு பற்றியும், இசை பயில்வதற்குத் தேவையான அர்ப்பணிப்பு பற்றியும் கூறுகிறார். வீரேஸ்வர் என்னும் இசை மேதையின் கதையைக் கூறுகிறார். 

...ஒவ்வொரு ராகமும் ஒரு மைதானம் மாதிரி. நடுவில் அடிக்கப்பட்டிருக்கும் முளைதான் சுருதி. மாட்டின் கழுத்தில் கட்டிய தாம்புக் கயிறு இருக்கிறதே, அதுதான் ஞானம். கற்பனாசக்தியைப் பசி என்று வைத்துக்கொள்ளலாம். பசியும் ஞானமும் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு தூரம் சஞ்சாரம் செய்யக் கிடைக்கும். என்கிறார்.

கழுத்துக் கயிறு அறுந்துவிட்டால், மைதானத்தில் எங்கே வேண்டுமானாலும் புல் தின்னலாம் அல்லவா? என்கிறான் தனஞ்சய்.

கயிறு அறுவதற்குப் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்கிறார் குரு.

இப்பகுதியில் இசை குறித்து சொல்லப்படுவன விஷ்ணுகாந்த சாஸ்திரிகள் மூலமும், அவரது நண்பர் உஸ்தாத் ஷவுகத் அலி மூலமும் பிற இசைக் கலைஞர்கள் மூலமுமே. நாவல் முழுக்க ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் பல்வேறு ராகங்களின் பெயர்களை அறிந்து கொள்கிறோம். தனஞ்சய் இசை குறித்துச் சிறிதே பேசுகிறான். 

முதல் முறையாகக் கச்சேரி கேட்க குருவோடு செல்கிறான் தனஞ்சய்.

அவசர அவசரமாய்த் திரட்டி வந்த ஸ்வர ரத்தினங்களை வாரிவாரி இறைக்கிறது ஸரோட். விண்மீன்கள்போல மினுங்குகின்றன அவை. செவியின் வழி நுழைந்து உள்ளே ஏதோ ஒரு நுட்பமான இடத்தில் சென்று தொடர்ந்து ஊன்றிக்கொள்கின்றன.

தான் பெரியவனானதும் ஒரு ஸரோட் கலைஞனாக வேண்டுமென்றும், ஒவ்வொரு கச்சேரியிலும் அதித்ருத் வாசிக்கும்போது தந்தி அறுகிற மாதிரிப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும் முடிவெடுத்துக்கொண்டான் தனஞ்சயன்.

என்று அவனது உள்ளத்தில் உருவாகும் தீர்மானம் இங்கு குறிக்கப்படுகிறது.

தன்னுள் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கும் இசையே, பாடுகையிலும், இசைக் கருவிகளை வாசிக்கையிலும் வெளிவருகிறது. அது நின்று விட்டதனாலேயே தான் பாடுவதை நிறுத்தி விட்டதாகக் கூறுகிறார் ஷவுகத் அலி. இவர்தான் தனஞ்சய்க்கு காட்பாண்டேயின் சங்கீத பத்ததியைப் பரிசளிப்பது. இந்தக் கருத்தை எல்லாக் கலைகளுக்கும் போட்டுப் பார்க்கத் தோன்றியது. தன்னுள் பெருகும் அந்தக் கலை ஏன் காலப்போக்கில் வற்றிவிடுகிறது? அது வற்றாமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? ஒரு மேதையால் கூட தனக்குள் உள்ள சங்கீதம் நின்று விடுவதைத் தவிர்க்க முடியாதா? அல்லது தன் கலை மூலம் முழுமை நிலை எய்திய கலைஞனுக்கு, அக்கலையில் தொடர்ந்து பொருளற்று போய்விடுகிறதா? நாவலில் சிறிது நேரமே வரும் ஷவுகத் அலி ஒரு மேதை. உலகப்புகழ் பெற்றவர். இவர் வாழ்க்கைக்குள் ஊடுருவிப்பார்த்து, அதனை தனஞ்சயனின் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்க வாய்ப்புக் கிடைத்திருந்தால் நாவலின் சில கதவுகள் திறந்திருக்கும். அந்த வாய்ப்பை ஆசிரியர் வழங்கவில்லை. மட்டுமல்ல, நாவலின் ஊடே பல்வேறு இசைக்கலைஞர்கள் வந்து சென்றாலும், எல்லாருமே கோட்டுச் சித்திரங்களாகவே நின்று விடுகின்றனர் என்றே எனக்குத் தோன்றுகிறது.

விஷ்ணுகாந்த சாஸ்திரி ஒரு விதிவிலக்கு. அவரும் தனஞ்சயின் துவக்க காலத்தில் மட்டுமே அவனோடு பயணிக்கிறார். அவன் சிதையும் போது அவனைச் சந்திப்பதில்லை. அவனை அவர் ஒரு மகன் போலவே நடத்துகிறார். ஒரு முறை கலைஞன் கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி விடக்கூடாது என்று குறிப்பாகச் சொல்கிறார். நோயுற்ற தந்தையைக் காண வரும் தனஞ்சய், போகும் வழியில் குருவின் வீட்டின் முன் நிற்கிறான். ஆனால் உள்ளே செல்வதில்லை. தன் நிலையை அவருக்குத் தெரிவிக்க மனமில்லாமல் நகர்ந்து விடுகிறார்.

தனஞ்சய் தான் இசையில் சாதிக்க வேண்டும் என்று வெளிப்படுத்தும் இடங்கள் ஒரு சிலவே. அவனது நாட்குறிப்புகளில் இசை குறித்த அவனது எண்ணங்கள் கவித்துவமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சங்கீதத்தின் தாழ்வாரத்தில் நுழையும்பொது உயிர்ப்பெருக்கின் மண்டலத்துக்குள் நுழைகிறேனா?  ஒரு கணம் நதி உறங்குவதை என் கண்ணால் பார்த்தேன். என்று அவன் குறிப்பிடுமிடமும், எறும்புகளின் உலகில் மகோன்னதமான சங்கீதப் ப்ரக்ஞை இருக்குமோ என்று கேட்குமிடத்திலும் நாட்குறிப்பு கவிதையாகவே மாறிவிடுகிறது.ஆனால் நாட்குறிப்பைப் படிப்படியாகக் காமம் ஆக்ரமித்து விடுகிறது. குன்றொன்றில் 96 வயது சலாவுதீன் கான் பாடுவதைக் கேட்டு மயங்கும் போது, தன் நண்பன் குருசரணிடம் நான் ஒரு புதிய கரானாவை உருவாக்குவேன் என்று சூளுரைக்கிறான். அந்த மேதை இவர்களிடம் பேசும்போது ப்ரம்மசரியம் இல்லாவிட்டால் சங்கீதத்தைப் பேண முடியாது என்கிறார். சரியாக அங்குதான் தனஞ்சயின் பலவீனமே அமைந்திருக்கிறது. 

அவன் நண்பன் குருசரண் பற்றிச் சொல்ல வேண்டும். நாவல் முழுக்க வந்தாலும், தனஞ்சயின் இசைக்கு அடிமை போலவே தன்னை நடத்தி, அவன் பாட்டைக் கேட்டு, கண்ணீர் மல்க அவன் காலில் விழுந்து வணங்கி, அவனது கலாட்டாக்களைப் பொறுத்துக் கொண்டு என்று நாவல் முழுக்க ஒரே விதமாகவே நடந்து கொண்டு ஒரு கோட்டுச் சித்திரமாகவே இவனும் எஞ்சி விடுகிறான் என்று படுகிறது. தனஞ்சயின் அழிவை காணும் எவரும் அவனிடம் பொருதி வெல்ல பலம் இல்லாதவர்கள் போலவே காட்டப்படுகிறார்கள். ஒருமுறை தன் தாயையும், சகோதரிகளையும் அவமானப்படுத்தும் போது மட்டும் குருசரண் தனஞ்சயை அவ்வாறு செய்ய வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறான். அப்பொழுதும் அவனுடன் வாதிட்டு அவனது இழிநிலைக்கு மாறான நிலை ஒன்றுண்டு என்று காட்டி அவனை ஆற்றுபடுத்த முனைவதில்லை. 

காஞ்சனா தேவி என்ற இசைக்கலைஞரிடம் தனஞ்சயை அனுப்புகிறான் குருசரண். அதுவும் உடலுறவில்தான் முடிகிறது. சிறிது காலம் பித்தனாய் அலைந்தபின் அவளைத் தேடி தனஞ்சய் செல்லும் போது, தனியாக இருப்பதையே தான் விரும்புவதாகச் சொல்கிறாள். தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட இனிமை எது என்று கேட்கிறாள். அந்த நிலையை அவள் எவ்வாறு அடைந்தாள் என்று சொல்லப்படுவதில்லை.

தனஞ்சய் ஏன் தன்னைக் குடியில் அழிக்கிறான்? சரயு வேறு ஒருவருடன் திருமணமாகிச் சென்று விடுவதைக் காரணம் காட்டுகிறான். ஆனால் காலப் போக்கில் மனதில் அவள் உருவம் மறைந்து பல பெண்ணுருவங்கள் எழுந்து விடுகின்றன. எங்கனம் அவன் அழிந்தான் என்ற கேள்விக்கான பதிலாக முழு நாவல் இருந்தபோதிலும், ஏன் என்ற கேள்விகளுக்கு பல இடங்களில் விடை இருப்பதில்லை. முழுக்க முழுக்க நிகழ்வுகளைச் சித்தரிக்கும் பாவனையை மேற்கொண்ட நாவல், எவ்விடத்திலும், விவாத பாவனையை மேற்கொள்ள விழையாததால், பாத்திரங்களின் இடையே கருத்து மோதல்கள் ஏற்படாமல், அதன் விளைவாக எழுப்பப்படும் வாழ்வு குறித்த ஆதாரமான கேள்விகளும் உருவாவதில்லை. 

நாவலுக்கென்று பிரத்யேகமான மணிப்பிரவாள நடையைக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். கதை நாற்பதுகளிலிருந்து அறுபதுகளின் பிற்பகுதி வரை நடப்பதால் அந்த நடையைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்திருக்கலாம்.நாவல் முழுக்க அநஂநடையே பயின்று வருகிறது. நன்றாகவும் இருக்கிறது. ஆனால் இதற்காக அவர் கடும் உழைப்பையும் செலுத்தியிருக்க வேண்டும். நூலின் பின்னுரையில் தான் தாரா சங்கர் பானர்ஜி, விபூதி பூஷன் பந்தோபாத்யாய போன்றோரின் நாவல்களை எழுதுமுன் வாசித்ததாகச் சொல்கிறார். அந்த பாதிப்பு நடையில் நன்கு தெரிகிறது. சிறு சிறு அத்தியாயங்கள். அதனாலேயே ஒவ்வொரு அத்தியாயத் துவக்கத்திலும், இயற்கை வருணனைகள் ஒன்றே போலத் தோற்றமளிக்கின்றன.

நாடகீயத்தருணங்கள் நாவலெங்கும் விரவிக் கிடக்கின்றன. ஆனால் அவசர, அவசரமாக முடித்து வைக்கப்படுகின்றன. திடுக்கிடும் நிகழ்வுகள் திடுமென்று வந்து செல்கின்றன. ராஜமுந்திரியில் ரயிலிலிருந்து இறங்கும் தனஞ்சய் தன் தங்கை அபர்ணாவைக் காண்பது தற்செயல் நிகழ்வு என்று எடுத்துக் கொண்டாலும், அவள் கன்னிகாஸ்த்ரீயாக மாறியுள்ளதாகக் காட்டியுள்ளது மெலோடிராமாட்டிக் விளைவுக்காகச் செய்யப்பட்டது போலத் தோன்றுகிறது. அடுத்த அத்தியாயத்திலேயே கல்கத்தாவில் சரயுவை (தற்செயலாக!) சந்திக்கிறான் தனஞ்சய். அவள் விபசாரியாக மாறியிருக்கிறாள்! அப்புறம் அடுத்த அத்தியாயத்திலேயே காஞ்சனா தேவி அவனை நிராகரிக்கிறார். தான் ஒரு முக்த நிலையை அடைந்ததைப் போலக் காட்டிக்கொள்கிறார். சரசரவென்று திணிக்கப்படும் இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு வாசகனாக நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. 

இறுதியில் ரயில்வே பிளாட்பாரத்தில் செருப்பு தைக்கும் அஸ்லம் கானுடன் இருக்கிறான். இன்னொரு வாழ்வு இருந்தால் உன்னைப்போலத்தான் வாழ்வேன் என்று சொல்கிறான். அங்கு அவர்களருகில் வசிக்கும் பிச்சி பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள். அவளை மீட்கிறான் தனஞ்சய். பின் இருமி இறக்கிறான்.

ஒரு புனைவின் அடிப்படையான குணங்களென்பன வாசகனை தன்னுலகில் நுழைய அனுமதித்து, அவற்றின் உணர்வு நிலைகளிலும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளிலும் பங்கேற்கும் வாய்ப்பை வழங்குவதும், அறாக்கனவென தன்னை நிலை நிறுத்தும் உறுதியைக் கொடுப்பதுமாகும். இவற்றில் முதல் உறுதியை இந்த நாவல் காப்பாற்றுகிறது. ஆனால் கனவுக்குள் நுழைந்து திளைக்கும் நாம் ஆங்காங்கே கனவு அறுந்து போகையில் திகைக்கிறோம். தனிப்பட்டமுறையில் என்னால் யுவன் உருவாக்கிய புனைவெனும் கனவில் தொடர்ந்து திளைக்க முடியவில்லை. 

ஆசிரியர் ஒரு இசைக் கலைஞனின் முழு வாழ்வைச் சொல்லவில்லை. அவனது அழிவை மட்டுமே ஆவணப்படுத்தியிருக்கிறார். ஆனால் தனஞ்சய் முகர்ஜி தன்னை அழித்துக் கொள்ள முனையும் ஒவ்வொரு தருணத்திலும், ஏன் அவ்வாறு அவன் முனைகிறான் என்று நம்முள் எழும் கேள்விக்கு நாவலுக்குள்ளேயே பதிலை அறிந்து கொள்ள இயலாது போகிறது. 

சில துணைப் பாத்திரங்களின் வாழ்வில் திடுக்கிடும் திருப்பங்கள் வருகின்றன. அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாமல் தன்ஞ்சயைப் போலவே நாமும் திணறுகிறோம். அவனது தங்கை திடீரென்று கன்னியாஸ்திரீயாக மாறி அவன் முன் நிற்கிறாள். அவனது காதலி சரயு அவலது கணவனால் விலைமாதாக மாற்றப்படுகிறாள். அவன் மீது காமம் பொங்கி விழுந்து பிராண்டிய காஞ்சனா தேவி திடீரென்று துறவியைப் போல பேசுகிறாள். பிளாட்பாரத்துப் பிச்சி தமிழ்த் திரைப்படக் காட்சியில் வருவது போல பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள். ஒரு வாசகனாக எனக்கு அடுத்து என்ன என்பதை விட ஏன், எப்படி என்ற கேள்விகளே முக்கியமானவை. அதற்கான விடைகளையே நான் ஒரு படைப்பில் தேட விழைவேன். ஏன் என்ற வினாவுக்கான விடை இந்த நாவலில் குறைவாகவே தட்டுப்படுகிறது என்பது என் எண்ணம்.


கானல் நதி - யுவன் சந்திரசேகர் - ஒரு வாசகனின் குறிப்புகள்

தனஞ்சய் முகர்ஜி எனும் இந்துஸ்தானி இசைக்கலைஞனின் அழிவை படிப்படியாக ஆவணப்படுத்துவதே கானல் நதி.

முன் கதை

  • கேசவ் சிங் சோலங்கி, இந்திய வெளியுறவுத் துறையில் பணிபுரிபவர். ஹிந்துஸ்தானி இசை குறித்து மூன்று புகழ்பெற்ற ஆராய்ச்சி நூல்களை எழுதியவர். சிறுகதைகளும் எழுதியவர். ஒரு முறை உஸ்தாத் சலாமத் கான் ரிஸ்வியின் சரோட் கச்சேரியில், புகழ் பெற்ற தபலா கலைஞர் குரு சரண்தாஸ் தன் நண்பனும், ஹிஸ்துஸ்தானி சங்கீத மேதையுமான தனஞ்சய் முகர்ஜி அகால மரணமடைந்ததைக் குறிப்பிடுகிறார். கேசவை அவர் குறித்து நூல் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறார். கேசவ் அம்மேதையின் கதையை நாவலாகவே எழுதுகிறார். சாரங்கன் அதை மொழிபெயர்க்கிறார். 1969 ல் எழுதப்படுகிறது.

  • நாவலின் அறிமுகப் படலத்தில் 1940 களின் கல்கத்தாவின் சிறு கிராமமான மாமுட்பூருக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். கிராமத்தின் விவரணைகள் மட்டுமன்றி, அதன் முக்கிய பாத்திரங்கள் சிலவற்றின் அறிமுகமும் நமக்குக் கிடைக்கிறது. பந்தார் தீஹி என்பது அருகிலுள்ள இன்னொரு கிராமம். ஹிந்துஸ்தானி இசை ஆசிரியர் விஷ்ணுகாந்த் சாஸ்திரிகள் அங்கு வசித்து வருகிறார். மாமுட்பூரின் கிரிதரமுகர்ஜியின் மனைவி தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கத் தயாராகிறாள். ஆண் குழந்தை பிறக்கிறது. தனஞ்சய் முகர்ஜி என்ற பெயர் சூட்டப்படுகிறது. 

  • பின் நாவல் பால்யம், வாலிபம், நாட்குறிப்பு, அழைப்பு என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

பால்யம்

  • இப்பகுதியில் தனஞ்சயின் பிள்ளைப் பருவம் விவரிக்கப்படுகிறது. தனஞ்சயின் பிள்ளைப் பருவத்தின் அழகான தருணங்கள் விவரிக்கப்படுகின்றன, தனஞ்சய் ஓர் இரவில் தன் பெற்றோர் அந்தரங்கமாக இருப்பதைப் பார்த்து விடுகிறான். அவனுக்கு அவர்கள் மேல் வெறுப்பேற்படுகிறது. பின் தனது அத்தை மித்தாலியின் அருகில் ஓர் இரவு படுக்கிறான். அவனுக்குள் முதல் முறையாகக் காம உணர்வு துளிர்க்கிறது. அடிக்கக் கைகள் உயர்த்தும் ஆசிரியையின் அக்குள் வேர்வையைக் கூட கவனிக்கிறான். மித்தாலி அத்தையின் தோழியுடன் சரயு என்னும் சிறு பெண்ணைக் கண்டு அவள் மீது காதலுறுகிறான். தனஞ்சயனின் அண்ணன் சுப்ரதோ, தங்கை அபர்ணா. ராகங்களை இனங்கண்டு கொள்ளும் அவனது திறனைக் கண்ட தந்தை அவனை விஷ்ணு காந்த சாஸ்திரியிடம் இசை கற்க அனுப்புகிறார். பாடம் துவங்குகிறது. நவதீப் காளி கோயிலில் தன் முதல் சரோட் கச்சேரியைக் கேட்கிறான் தனஞ்சய். 

  • குரு அவனை பர்தமானுக்கு கச்சேரி கேட்கக் கூட்டிச் செல்கிறார். போகும் வழியில் குரு சங்கீதத்தின் எல்லைகளைப் பற்றிப் பேசுகிறார். 

  • இருவரும் கச்சேரிக்குச் செல்கிறார்கள். அங்குதான் குருசரண் தபலா வாசிப்பை முதல் முதலாகப் பார்க்கிறான் தனஞ்சய்.

  • உஸ்தாத் ஷவுகத் அலி தன் நண்பர் விஷ்ணுகாந்த சாஸ்திரிகளைச் சந்திக்கிறார். தனஞ்சய் அவருக்குப் பாடிக்காட்டுகிறான். நீ அமோகமாய் வருவாய் என்று வாழ்த்துகிறார்.பாட்கண்டேயின் ஹிந்துஸ்தானி ஸங்கீத பத்ததியை அவனுக்குப் பரிசளிக்கிறார். சதாகாலம் தன்னுள் கேட்ட இசை நின்றதாலாயே கச்சேரி பண்ணுவதை நிறுத்தி விட்டதாய் தன் நண்பனிடம் சொல்கிறார் ஷவுகத்.

  • மித்தாலி அத்தை மூன்றாவது பிரசவத்துக்கு வருகிறாள். அவள் கணவர் இனக்கலவரத்தை அடக்க முர்ஷிதாபாத் சென்றிருக்கிறார். அன்றிரவுதான் அத்தை அவனைக் கட்டிப்பிடித்து உறங்குகையில் அவனுக்கு வித்தியாசமான உணர்வு ஏற்படுகிறது.

  • வீரேஸ்வர் கோஸ்வாமி மடம். அவர் கதையைத் தந்தை சொல்கிறார்.  அவர் ஒரு சங்கீத யோகி. அவர் சன்னிதியில் தன் மகன் பெரிய சங்கீதகாரனாக வர வேண்டும் என்று பிரார்த்தித்ததாகச் சொல்கிறார்.

  • மித்தாலிக்குப் பெண் குழந்தை பிறந்துவிட்டது. அவள் தோழி ஜம்னா தன் மகள் சரயுவுடன் வருகிறாள். அப்போதும் தனஞ்சயனின் கண்களில் காமம் மட்டுமே இருக்கிறது. செல்கையில் அவளும் அவனைத் திரும்பிப் பார்க்கிறாள்.

  • விஷ்ணு காந்த சாஸ்திரிகள் தன் குரு பற்றிக் கூறுகிறார். அவரது நியமங்கள் குறித்து. இசை பற்றி அவர் பேசியது குறித்து. தன் மீது கொண்ட வாஞ்சை குறித்து. தான் புல்லாங்குழல் வாசிக்க ஆசைப்பட்டதை அவர் தடுத்தது குறித்து - இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய ஆசைப்படுகிறவன் நீ. தனஞ்சயனுக்கு மகரக்கட்டு உடைந்து விடுகிறது. 

  • தனஞ்சயன் சுசுனியா பள்ளிக்கூடம் செல்லும் வழியில் சரயூவைச் சந்திக்கிறான்.

  • சுப்ரதோ வளர்ந்து விட்டான். அபர்ணா ருதுவாகி விடுகிறாள். சுப்ரதோ தான் கடும் உழைப்பைச் செலுத்துவதைச் சுட்டிக்காட்டுகிறான். மைனாவதிப் பாட்டி திரும்பத் திரும்பப் பேசுகிறாள். சுப்ரதோ அவளைத் திட்டுகிறான். அப்பா தளர்ந்து விடுகிறார். தனஞ்சயன் தான் பாடி சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் குடும்பச் சொத்துகளை மீட்டு விடலாம் என்று சொல்கிறான். மைனாவதிப் பாட்டி இறக்கிறாள்.

  • வீரேஸ்வர் மடத்தில் குருவும் சிஷ்யனும். அவனது காதல் அவருக்குத் தெரிந்திருக்கிறது. சவுக்கத்திடம் அவனை சேர்த்து விடவா என்று கேட்கிறார். அவனுக்கு வெளி நாடுகளில் புகழ் உண்டு. ஹிந்துஸ்தானி சங்கீதத்திலிருந்து முஸ்லீம்களைப் பிரித்து விட்டால் முக்கால் பகுதி சங்கீதம் காணாமல் போய்விடும் என்கிறார். அவன் காதலிக்கும் பெண்ணின் பெயர் என்ன என்று கேட்கிறார்.

வாலிபம்

  • 2.1 குரு அனுப்பி தனஞ்சயன் குருசரண் வீட்டுக்கு வருகிறான்.

  • 2.2 இருவரும் ஏரிக்கரையோரம் நடக்கிறார்கள். குருசரண் சங்கீதம் பற்றி நிறைய பேசுகிறான். தனஞ்சயன் கேட்டுக்கொள்கிறான்.

  • 2.3 தனஞ்சய்ன் அவன் வீட்டில் தங்குகிறான். அங்கு அவனுக்கு சரயூவின், மித்தாலி அத்தையின் நினைவுகள். அவள் பிரசவத்துக்கு வீடு வந்தது. அவள் புடைத்த வயிறு அவனுள் காம எண்ணங்களைக் கிளப்புவது. குழந்தை பிறந்து சில நாட்களில் இறப்பது. அவள் கணவன் கொலையுறுவது. அத்தையும் இறப்பது.

  • 2.4 குன்றொன்றில் ஏறி இருவரும் ஒரு கோயிலை அடைகிறார்கள். அங்கு ஒருவர் பாடும் பாடலில் தன்னை இழக்கிறார்கள், அவர் சலாவுதீன் கான். வயது 96. அவர்களிடம் பேசும்போது அவர் பிரம்மசரியம் இல்லாவிட்டால் சங்கீதம் அவ்வளவுதான் என்கிறார். அவருக்கு நவீன இசை மீது விமர்சனம். சங்கீதம் நெஞ்சில் இருந்து வருவது என்கிறார். காதைத் திறந்து வை என்கிறார். கீழிறங்கும் போது தனஞ்சயன் ஆவேசமாகச் சொல்கிறான். “நான் ஒரு புதிய கரானாவை உருவாக்குவேன்!”

  • 2.5 ஜலதரங்க மேதை அமித்பாபுவைச் சந்திக்கிறார்கள். ஜலதரங்கம் பற்றி பேசுகிறார். தனஞ்சயனைப் பாடச் சொல்கிறார். பேஹாக்கை சிறுமியைப் போல உலவ விடுகிறான் தனஞ்சய். அமித் மனைவி அவன் தலை மீது கைவைத்து ஆசிர்வதிக்கிறாள்.

  • தனஞ்சய் ஊருக்குப் போகவேண்டும் என்கிறான். குருசரண் தன் குடும்பத்து வியாபார சாம்ராஜ்யம் பற்றிச் சொல்கிறான். தான் ஒரு சங்கீத சர்வகலாசாலை ஆரம்பித்து அதில் தனஞ்சயை பேராசிரியராக நியமிப்பேன் என்கிறான். ஊருக்கு தானும் வருவதாகச் சொல்கிறான்.

  • இருவரும் மாமுட்பூர் செல்கிறார்கள். குருசரண் நடக்க சிரமப்படுகிறான். அப்பா தனஞ்சய்க்கு பேவர் லூபா கடிகாரம் பரிசளிக்கிறார். அவன் நினைவால் அவர் வாடுவதாக அம்மா சொல்கிறாள்.

  • சிற்பி தம்பதியரோடு இருக்கிறார்கள். அவர் மனைவி பாடகி. குடிக்கிறார்கள். தனஞ்சய்க்கு முதல் முறை. பாடகி சஞ்சுக்தா ரிச்சர்ட் எனும் நடனப்பெண்மணியுடன் தன்னை பத்திரிகைகள் ஒப்பிடுவதை குறித்து பொருமுகிறாள். காரில் திரும்பும்போது குருசரண் நீ குடிப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை என்று தனஞ்சயிடம் சொல்கிறான். குருசரண் வற்புறுத்தப்பட்டும் குடிக்கவில்லை.

  • சென்னையில் கச்சேரி கேட்க செல்லுமிடத்தில் கலைஞர் வராததால், குருசரண் தனஞ்சயைப் பாட வைக்கிறான்.

  • மேக் மல்ஹார், பூரியா, பைரவி ராகங்களில் பாடி கூட்டத்தைக் கிறங்க வைக்கிறான் தனஞ்சய்.

  • அறையில் குருசரண் தன் நண்பனின் இசைத்திறன் குறித்துப் புகழ்ந்துரைக்கிறான். சபை சிலிர்த்த இடம் எதுவுமே தன் நினைவில் இல்லை என்கிறான் தனஞ்சய்.

  • லொக்ஸ்மன் கெய்க்வாடின் பிரதம சிஷ்யன் அர்ஜூன் பிங்ளே இவர்கள் அறைக்கு வருகிறார். தன் குருவைத் தூற்றிப் பேசுகிறார். எல்லாரையும் தூற்றறுகிறார். தன் நிலை மாறவில்லை என்று புலம்புகிறார்.

  • அடுத்த நாள் லக்ஷ்மண் கச்சேரியின் போது தனஞ்சயை தன் அறைக்குக் கூட்டிச் செல்கிறார் அர்ஜூன் பிங்க்ளெ. இருவரும் குடிக்கிறார்கள். அர்ஜூன் மீண்டும் எல்லாரையும் தவறாகப் பேசுகிறார். தன் குருவை அப்படிப்பேசுவது பிடிக்கவில்லை தனஞ்சய்க்கு. குருசரண் உள்ளே நுழைந்து அவனை இழுத்துக் கொண்டு செல்கிறான்.

  • தனஞ்சய் தன் ஊருக்குச் செல்கிறான். குரு வீட்டுக்கு செல்கிறான். தான் கச்சேரி செய்தது பற்றிச் சொல்கிறான். அவருக்குப் பெருமை. ஆனால் புதுப்பழக்கங்கள் தொற்றி விடாதபடி ஜாக்கிரதையாக இருக்கச் சொல்கிறார். சரஸ்வதியும் லக்ஷ்மியும் சேர்ந்து உள்ள இடங்களைப் பார்த்தால் பிசாசுகளுக்குக் கொண்டாட்டம்தான். அவர் சொல்கையில் அவன் மனக்கண் முன் அர்ஜூன் பிங்க்ளே முகமு, பொன்னிற திரவமும் தோன்றுகின்றன.

  • சரயு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதால் அப்பா தனஞ்சய்க்கு அவளைப் பெண் கேட்கப் போயிருக்கிறார். சுப்ரதோ எரிச்சலடைந்திருக்கிறான். ஆனால் தனஞ்சய் சம்பாதிப்பதில்லை என்று பெண் கொடுக்க மறுத்து விடுகிறார்கள். சுப்ரதோவுக்கு கொடுக்க சம்மதம் என்கிறார். அவன் பதில் சொல்லும் இடைவெளியின் வாழ் நாளின் நீண்ட கணத்தை அனுபவிக்கிறன் தனஞ்சய். ஆனால் சுப்ரதோ மறுத்துவிடுகிறான். 

  • சரயுவுக்கு நிச்சமயமாகி விட்டது. கல்கத்தாவில் மாப்பிள்ளை. அவளை வீரேஸ்வர் கோயிலில் சந்திக்கிறான். பறவையொலிகளின் சுருதியைப் பிடித்துக்கொண்டு வீரேஸ்வர் தன் சாதகத்தைத் தொடங்கியிருப்பார் என்று நினைக்கும் போது அவரது அந்தரங்கத்தைப் புரிந்து கொண்ட மாதிரி அவனுக்குள் விதிர்ப்பு ஏற்பட்டது. சரயு கேட்க தனா பாடுகிறான். அவள் விசும்புகிறாள். அவன் முடிக்குமுன்னே போய் விடுகிறாள்.

  • வீட்டை வீட்டுப் புறப்படுகிறான். தட்சிணெஸ்வர காளி கோயிலுக்குச் செல்கிறான். அங்கு உடை மாற்றும் பெண்ணின் நிர்வாணத்தைக் காண்கிறான். அவனுள் துல்லியமான புகைப்படமாக அது பதிகிறது.

  • மீண்டும் குருசரண் வீட்டில். தனஞ்சய் பாடுகிறான். பாகே ஶ்ரீ . சரயு அல்லது ஒரு பெண்ணின் பிம்பம் மனதில் அல்லாடுகிறது. பாடிமுடித்ததும் குரு சரண் அவன் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் கொள்கிறான்.

  • நண்பர்கள் பூங்காவில் அமர்ந்திருக்கிறார்கள். சலாவுதீன் கான் தெற்கே போகிறார். தனஞ்சய் தான் துயரத்தோடு இருப்பதைச் சொல்கிறான். சாகும்வரை அவள் நினைவு விலகாது என்கிறான். குருசரண் தன் அண்ணன் மன நிலை பிறழ்ந்த அஜ்மீருக்குச் சென்ற போது தன் குடும்பம் நிலை குலைந்ததையும், பின் காலப்போக்கில் சரியானதையும் சொல்கிறான். சரயுவின் கணவன் அவளை வதைக்கும் செய்தி  தனஞ்சய்க்கு வந்திருக்கிறது. அவள் துன்புறுவது உனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதுதானே என்று கேட்கிறான் குரு. தனா பதறுகிறான். காஞ்சனா தேவியிடம் கொண்டு விடுகிறேன் என்று சொல்கிறான் குரு.

  • தனா ஊருக்குச் செல்கிறான். அண்ணனுக்கு திருமணம். இவனுக்குத் தலைவலியும், குடிப்பழக்கமும், சரயுவுக்கு பதில் காமம் கிளறும் பெண் உருவமும். சுப்ரதோவின் மணப்பெண் ஸ்வப்னா இவன் கனவில் வரும் காமம் கிளறும் பெண்போலவே இருக்கிறாள்.

  • ஒவ்வொரு ராகமும் பெண்ணின் குணபாவம் கொண்டது. ஸ்வப்னா - மிஸ்ர கமாஜ். உல்லாசம். தனா காஞ்சனா தேவியின் வீட்டில் இருக்கிறான். 40 வயது. கருப்பு. பிரம்மச்சாரி. இருவரும் பாடுகிறார்கள். தோடி. பாடலின் இடையில் தனாவின் மனக்கண்ணில் ஸ்வப்னா. கண் திறக்கையில் காஞ்சனா அவன் மீது விழுந்து புரள்கிறார். இருவரும் உறவு கொள்கிறார்கள். இனி அவளிடம் பாடம் கேட்க இயலாது.

நாட்குறிப்பு

தனா நாட்குறிப்புகளில் தன் எண்ணங்களை எழுதுகிறான். இது அவன் குருசரண் வீட்டுக்கு வந்த நாள் முதல். இசை குறித்தும், தன்னைச் சுற்றியிருப்பவர்கள் குறித்தும் எழுதுகிறான். தன் சாதக முறை குறித்து. நாட்குறிப்பின் முதற்பகுதியில் இசை குறித்து நிறைய எழுதியிருக்கிறார். ஜெய்ஜெய்வந்தியை பீம்சென் ஜோஷி பாடும்போதும் அது அவன் மனதில் ஒரு பெண்ணாகவே உருக்கொள்கிறது. முலைக்கண்கள், விடாய்க்குருதி என்று யோசிக்க வைக்கிறது. சினிமா இசையில் சிதார் கேட்டு மயங்குகிறான். நான் ஒரு தனி நதியாக உருவாகுவேன் என்று உறுதி பூணுகிறான்.மேலும் சங்கீதம் பற்றி. அதிலிருந்து பக்தியைக் கழற்றி விடவேண்டுமென்பது பற்றி. என்னெவெல்லாம் தான் இசையில் செய்வேன் என்பது பற்றி. சங்கீதத்தின் தாழ்வாரத்தில் நுழையும்பொது உயிர்ப்பெருக்கின் மண்டலத்துக்குள் நுழைகிறேனா?  பல தத்துவார்த்தக் கேள்விகள். பிஸ்மில்லாகான் கச்சேரியைக் கேட்டுக் கண்கள் துளிர்க்கிறான். சங்கீதம் சம்பந்தமாக அவனது அபிலாசைகள், கிலேசங்கள், வேகம் எல்லாவற்றையும் குருசரணிடம் கொட்டுகிறான். இந்த யோசனைகளின் உந்து சக்தி சரயு என்கிறான். மதறாஸில் கச்சேரியில் அர்ஜூன் பிங்க்ளேயின் மறக்க முடியாத சந்திப்பு பற்றிச் சொல்கிறான். தன் குரு பற்றி நினைக்கிறான்.

பின் மெல்ல குறிப்புகள் காமம் நோக்கி மையம் கொள்கின்றன. குருசரண் கச்சேரியில் பாடிய பாடகியின் உடலையே பார்க்கிறான். சரயு தட்சிணேசுவரத்தில் ஒரு உடலாக ஆகிறாள். குருவிடம் அவள் பற்றிப் புளம்புகிறான். அவன் உடம்பின் ஆதார சுனைகளிலிருந்து சீறிப்பாய்ச்ச்சும் தாரைகளினால் வழி நடத்தும் சந்தர்ப்பங்களினால் ஆகிறது அவன் வாழ்வு. அம்மணம் ஏன் இவ்வளவு கிளர்ச்சி உண்டாக்குகிறது? என்று கேட்டுக் கொள்கிறான். தனது நுண்ணிய வேதனைகளை, சரயுவுடன் சம்போகம் செய்யத் துடிப்பதாக குருசரண் அர்த்தப்படுத்திக் கொள்வதாக நினைக்கிறான். பகல் பொழுதில் சரயுவின் நினைவுகள் பவித்ரமாகவும், இருளின் முதல் சொட்டு விழுந்த மாத்திரத்தில் சரசரவென்று உடைகளை களைவதாகவும் ஆகிவிடுகிறது. பகல் வெளிச்சத்தை ஆன்மாவின் கையிலும், இரவு வேளைகளை சதைக்குள் பொதியவிட்டும் தவித்துக் கழிக்கிறான் நாட்களை. மைதுனம் முடித்த மறுகணம் குற்ற உணர்ச்சி கொள்கிறான். நாட்குறிப்பு எழுத எழுத தான் ஒரு எழுத்தாளனாகியிருக்க வேண்டும் என்று நினைக்கிறான். 

சணல் கிட்டங்கியில் சிப்பந்தியை குருசரண் அறைவதைக் காண்கிறான். அவனது மனோபீடத்திலிருந்து வேகமாக இறங்குகிறான் குருசரண். மக்கள் எல்லாரும் தனாவுக்கு வளர்ப்புப் பிராணிகள் போலத் தென்படுகிறார்கள். உணவு மேஜையின் சுத்தத்தில், நிசப்தத்தில் மலம் உண்ணுவது போல உணர்கிறான். 

குடிக்கையில் கண்ட எறும்புகளின் உலகில் மகோன்னதமான சங்கீதப் பிரக்ஞை இருக்குமோ என்று நினைக்கிறான். 

தூக்கம், பசி போய்விடுகிறது.

சரீர இச்சையை மீறமுடியாமல் அல்லாடும் தன்னைப்போலத்தான் காஞ்சனா தேவியும்? என்கிறான்.

பகலிலும் குடிக்கிறான். 

ஒரு கணம் நதி உறங்குவதை என் கண்ணால் பார்த்தேன். 

உடல் நடுக்கம், உடலின் உபாதைகள் துவங்குகின்றன. ஒலியையும், தனிமையையும் தின்று வாழும் புராணிக மிருகம் தனா.

சரயு கிடைக்காததனால்தான் தான் இப்படி ஆனோம் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறான். 

கைகள் சதா நடுங்க ஆரம்பிக்கின்றன. விரைவில் நசித்து வெளியேற விரும்புகிறான்.

மகத்தான கயிறிழுக்கும் போட்டி. ஒரு புறம் சங்கீதம் என்னும் தொண்டுக்கிழவி. மறுமுனையில் யௌவனம் ததும்பும் இளம்பெண்கள். நடுவில் அறுபடாத கயிறாக இழுபட்டு வதைபடுகிறேன் - தனா. இப்போது சரயு மாத்திரம் அல்ல. பார்க்கும் அத்தனைப் பெண்ணும் ஆக்கிரமிக்கிறாள்.

தற்கொலை இச்சை வருகிறது. சங்கீதம் மறக்கிறது. பாடிமுடித்தபின் குருசரண் தனாவின் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்கிறான்.

அழைப்பு

  • தனா சாதகம் செய்கிறான். சுவரங்கள் அதனதனிடத்தில் அமர்கின்றன. ஆனால் அந்த ஜ்வாலையை தரிசிக்கக் கிடைக்கவில்லை.

  • கச்சேரிக்குப் போக மட்டுமில்லை எதுவுமே செய்ய விருப்பமில்லை தனாவுக்கு. சாதகம் செய்கிறான். ஸோஹ்னி ராகம். மீண்டும் அதே பெண் உடல் வருகிறது. ஸ்வப்னா. அதனுடன் சம்போகம் செய்து மைதுனம் செய்கிறான். 

  • குடித்துவிட்டு குருசரணின் தாயையும் சகோதரிகளையும் கேவலமாகப் பேசுகிறான். அவனை அடிக்கப்போகிறான். இதெல்லாம் போதை தெளிந்தபிறகு குருசரண் சொல்லி தெரிய வருகிறது.

  • மீண்டும் குருசரணிடம் சண்டை. சாதகம் செய்யும் போது சரியாக வாசிக்கவில்லை என்று புகார். வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

  • ரயிலில் சீட்டு இன்றிப் பயணிக்கிறான். பரிசோதகரிடம் கன்னியாகுமரி செல்வதாகவும், தான் ஒரு பாடகன் என்றும் சொல்கிறான். பாடிக்காட்டுகிறான். பிரமிக்கும் பரிசோதகர் அவனுக்குச் சீட்டு எடுத்துத் தருகிறேன் என்று சொல்கிறார். அவன் கல்கத்தாவுக்கு எடுத்துத் தரச் சொல்கிறான்.

  • ராஜமுந்திரியில் இறங்குகிறான். அங்கு ஒரு கன்னியாஸ்திரீகள் கூட்டம் வருகிறது. அதில் அபர்ணா இருக்கிறாள். வியாதிஸ்தரான தந்தைக்கும், அபலையான தாய்க்கும் பாரமாக இருக்க விரும்பாமல் இயேசுவிடம் அடைக்கலம் அடைந்ததாகச் சொல்கிறாள். அண்ணனும் மனைவியைத் துன்புறுத்துகிறான். அவனை ஊருக்குப் போய் அவர்களோடு வசிக்கச் சொல்கிறாள். அவன் அது முடியாது என்கிறான். ஏன் கேள்விக்கு அவன் பதில் சொல்வதில்லை. கல்கத்தா கடைவீதியில் சரயுவை யாரோடோ நெருக்கமாகப் பார்த்ததாகச் சொல்கிறாள்.

  • விக்டோரியா ஹால் மைதானப் புல்வெளியில் படுத்திருக்கிறான் தனா. ஒரு ஜோடி வருகிறது. ஆண் விலகி விட பெண் இவனருகில் அமர்கிறாள். சரயு! கணவன் தன்னைக் கொடுமைப்படுத்தி விபச்சாரத்துக்கு அனுப்புவதாகச் சொல்கிறாள். எல்லாருக்கும் கொடுத்தபின் அவனுக்கென்று கொடுக்க மிச்சமிருக்கிறது. வேண்டுமா என்று கேட்கிறாள். அவனை ஊருக்குப் போகச் சொல்கிறாள். என்னோடு வருவாயா என்று அவளைக் கேட்கிறான். அது முடியாது, ஊர் வாய் பேசும். மேலும் நீ எப்படி என்னைக் காப்பாற்றுவாய் என்கிறாள். பின் ஏன் ஊர் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு நோயுற்ற தந்தையைக் காண என்கிறாள்.

  • காஞ்சனா தேவியைப் பார்க்கச் செல்கிறான். அவர் அவனை ஏற்க மறுத்து விடுகிறார். போகுமிடமெல்லாம் அந்தச் சரியில்லாத மனத்தையும் சுமந்து கொண்டுதானே போகிறார்கள். பார்க்கிற கேட்கிற எல்லாவற்றையும் அதே பிச்சைப் பாத்திரத்தில்தானே வாங்கிக் கொண்டாக வேண்டும்?..

  • ஊருக்குச் செல்கிறான். அப்பா மரணப்படுக்கையில். அம்மா இவனிடம் அழுது புலம்புகிறாள். அங்கேயே தங்கிவிடும்படிச் சொல்கிறாள். அவனுக்கு அவர்களைப் படுக்கையில் பார்த்தது நினைவு வருகிறது.

  • கனவு. அப்பாவின் தலை காலில் இடறுகிறது. நீரில் மூழ்குகிறது ரத்தத்தோடு. விழித்து எழுகிறான். வீட்டை விட்டு வெளியேறுகிறான். குருவின் வீட்டின் முன் சற்று தயங்கி பின் தொடர்கிறான்.

  • பந்தார் தீஹியில் எவனோ இவனைப் பின் தொடர்கிறான். இவன் ஓடுகிறான். குமுறிக் குமுறி அழுகிறான். 

  • நவதீப் படித்துறை. படகில் செல்கிறான். பிணம் ஆற்றில் மிதந்து வந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஜாலங்கி செல்கிறான். பிபாஸ் ராகத்தில் பாட ஆரம்பிக்கிறான். மாயாப்பூர் வருகிறது. படகுக்காரன் துண்டை விரித்து காசு வசூல் செய்து அவனிடம் தருகிறான். அதை அவனுக்கே கொடுத்து விடுகிறான். 

  • அங்கு ஆலமரத்தடியில் ஒரு பித்தன் இவனுக்கு போதை உருண்டை தருகிறான். அதைத் தின்றால் பெண் உருவம் கண்ணில் தோன்றுகிறது. அது பேயுருக்கொள்கிறது.

  • சில நாட்கள் கழித்து நவதீப் படித்துறைக்கு மீண்டும் வருகிறான். அங்கு ஒரு தம்பதி நிற்கிறார்கள். அந்தப் பெண் மீது காமம் கொண்டு பாய்கிறான். கணவனும் இவனும் உருண்டு சண்டை போடுகிறார்கள்.

  • குரு சரண் வீட்டுக்குப் போகிறான். உள்ளே விடுவதில்லை. தகராறு செய்கிறான். அங்கு அவனைத் துரத்தி விடுகிறார்கள்.

  • காவல் நிலையத்தில் வைத்து விடுகிறார்கள். குரு சரண் அவனை வெளியில் எடுக்கிறான். ஆனால் இவனைப் பாராது போய் விடுகிறார்.

  • நெறிசல் மிகுந்த எஸ்பளனேட் பகுதியில் ஒரு பெண்ணின் கைப்பையைப் பிடுங்கிக்கொண்டு ஓடுகிறான். அடி வாங்குகிறான்.

  • செருப்பு தைக்கும் அஸ்லம் கான் அவனைக் காப்பாற்றுகிறான். அவனோடே ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தங்குகிறான்.

  • அஸ்லம்கான் தன் கதையைச் சொல்கிறான். காதலித்தவளுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. அவள்தானே இல்லாமல் போனாள்? உலகத்தில் ஆட்கள் இல்லாமல் போய்விடவில்லையே. பார்க்கிறவர்களுக்கெல்லாம் அந்தப் பிரியத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்...என்கிறான். தனஞ்சய் தான் காஞ்சனா தேவியுடனேயே இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறான்.

  • பிளாட்பாரத்துப் பிச்சிப்பெண்ணை பெருவியாதிக்காரனும், இன்னொருவனும் கெடுத்து விடுகிறார்கள். தரையில் மல்லாந்திருக்கும் அவளை தனா கண்டறிகிறான்.

  • இருவரும் உறங்குகிறார்கள். மறுநாள் அவள் இல்லை. இருமல் வலுக்கிறது. அஸ்லமுடன் தேனீர் அருந்துகிறான். இன்னொரு முறை வாழக்கிடைத்தால் உன்னைப் போல் ஆகி விடுவேன் என்கிறான். தொடர்ந்து இருமுகிறான். ரத்தம் வருகிறது.

பின்னுரை

இந்த நாவலை எழுத தனக்கு எது உத்வேகமாக இருந்தது என்று எழுதுகிறார்.


 

மேலும் வாசிக்க