நான் என்னை முழுமையாக
வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினேன், அது முடியாது என்று நன்கு அறிந்திருந்தும்
கூட. ‘சார், அன்னிக்கு நைட் ஷிஃப்ட். வொர்க்கர்கிட்ட கெமிக்கல் இண்டென்ட்
கொடுத்தவுடனேயே நான் தூங்கிட்டேன். மறதியா இண்டென்ட்ல இரண்டு கிலோ டினோபாலை
எழுதிட்டேன். வொர்க்கரும் நான் எழுதிக் கொடுத்ததையே செஞ்சுட்டான். நான் பாட்டுக்கு
சுகமா தூங்கிட்டிருந்தேன். நான் மட்டும் தூங்காம முழிச்சிகிட்டு இருந்திருந்தா,
அந்த அசம்பாவிதத்தை தடுத்திருக்க முடியும். பர்கண்டி கலர் போட வைச்சிருந்த
லாட்டுக்கு வைட்டனிங்க் ஏஜன்டை சேர்த்து அதை மேலும் டை பண்ண முடியாதபடி
பண்ணிட்டேன். பத்தாயிரம் மீட்டர் துணி சார். பையருக்கும், கம்பெனிக்கும் பெரிய நஷ்டத்தை
ஏற்படுத்திட்டேன். ஆனா குத்தத்தை நீங்க உங்கமேல ஏத்துகிட்டீங்க. என்னை வார்ன்
பண்ணதோட விட்டுட்டாங்க. ஆனா நிறைய பட்டது நீங்கதான். உங்க வேலை போச்சு;
பிராவிடண்ட் ஃபண்ட் இல்லன்னுட்டாங்க. நீங்க சொன்ன மாதிரி அந்த சம்பவம் உங்க
வாழ்க்கையையே மாத்திருச்சு. எல்லாம் என்னால. உங்களையும், கம்பெனியையும் பத்தி
நினைக்கும் போது எனக்கு ரொம்ப குற்ற உணர்வா இருக்கு. இதுக்கு முன்னாடி நீங்க என்ன
பார்க்கணும்னு விரும்பிய போதெல்லாம் உங்கள நான் அவாய்ட் பண்ணினதுக்குக் காரணம்
இதுதான்.’
‘மஹேஷ். நீ அப்ப
ரெசிக்னேஷன் கொடுத்துருந்த. நீ குத்தத்த ஒப்புத்துக்கிட்டிருந்தீன்னா, எம்.டி உன்ன
சும்மா விட்டுருக்க மாட்டார். உனக்கு அந்த மாச சம்பளமும் கெடைச்சிருக்காது. அந்த
வருஷ போனசும் கெடைச்சிருக்காது. பொங்கல் நெருங்கிட்டிருந்தது, நினைவிருக்கா? அந்த
நேரத்துல் உன் குடும்பம் இருந்த நெலைமைக்கு, போனஸ் பணம் வரலைன்னா நீ திண்டாடிப்
போயிருப்ப. நீ புதுசா சேர இருந்த கம்பெனி நம்ம எம்.டிக்கு ரொம்ப பழக்கமானது. நீ
வாழ்க்கையில மேல வர்றதுக்கான எல்லா வாய்ப்புகளையும் அவர் பாழாக்கிருப்பார்.’
‘ஆனா, இதுல கடுமையா
பாதிக்கப்பட்டது நீங்கதான்.’
‘அப்படியா நினைக்கற?
சே, சே. சொல்லப்போனா அது எனக்கு ப்லெஸ்ஸிங்க் இன் டிஸ்கைஸ். இந்த கெரகம் புடிச்ச
வேலையை விடணும்னு நானும் ரொமப நாளா முயற்சி பண்ணிட்டிருந்தேன். ஆனா அதுக்கு தைரியம்
இல்லாம இருந்தது. அது இயற்கையாவே நடந்தப்ப, ,முதல்ல அதிர்ச்சியா இருந்தாலும்
அப்புறம் விடுதலையா இருந்தது. என் வாழ்க்கையை நிதானமா திரும்பிப் பார்க்கறதுக்கான
ஒரு வாய்ப்பு. வாழ்க்கையில சில முக்கியமான முடிவுகளை எடுக்கறது அந்த நிலைமையில
எளிதா இருந்தது. ஒரு வகையில இந்த மாதிரி நடந்தது எனக்கு மகிழ்ச்சிதான்.’
‘நீங்க இப்ப
உண்மையிலேயே மகிழ்ச்சியா இருக்கீங்களா சார்.’
‘அப்படிச் சொல்லலாம்.
வாழ்க்கையில எந்தத் தருணத்திலயும் ஒருத்தர் தன் வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியா இருக்கறான்னு
சொல்லிட முடியாது. ஆனா நிறைய பாரங்கள் என்னை விட்டு நீங்கிட்டதுன்னு மட்டும் சொல்ல
முடியும். என் பாக்கெட் காலியா இருக்கு; என் பாதை தெளிவா இருக்கு; அல்லக்கைகள்
யாரும் இல்லை; எஜமானர்களும் யாரும் இல்லை’ என்றார் சத்தமாகச் சிரித்தபடி.