13 ஏப்ரல், 2013

வீடு மல்லிகைப்பூ


 என் நாணயத்தின் மூன்றாம் பக்கம் என்ற சிறுகதையை ( மைக்ரோ நாவல் என்று நான் அதை அழைக்க விரும்பினேன். நானும் நாவல் எழுதினேன் என்றாகி விடுமல்லவா?) இப்படித்தான் ஆரம்பித்தேன். பிறகு ரொம்ப நாட்கள் அப்படியே கிடப்பில் போட்ட பிறகு, இக்கதையை ஆங்கிலத்தில் எழுதினால் என்ன என்று யோசித்து எழுதி முடித்தேன். (the coin) . பிறகு அதைத் தமிழிலும் மொழிபெயர்த்தேன். ஆனால் அதன் முதல் வடிவமான இதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

வீடு மல்லிகைப்பூ மணமும், பட்டுப்புடவை சரசரப்புமாக இருந்தது. ரகு ஒரு மூலையில் அமர்ந்து நான்கு மணி தேநீரை அருந்திக் கொண்டிருந்தான். ஓமத்ரா குடிப்பவன் போல மாறியிருந்த முகத்தை மறைக்கச் சிரமப்பட்டான். முழுசாய்க் குடிக்காமல் கீழே வைக்கக்கூடாது என்று மைதிலி சொல்லியிருக்கிறாள். மாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டு உபசரிப்பு பிடிக்கவில்லையென்று நினைத்துக் கொள்வார்களாம். மைதிலியின் அக்கா பெண் தன் பட்டுப் பாவாடையைக் கையில் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. முன்னரே அது ஓடுகிற பாதையில் டம்ளரை வைத்திருந்தால் குடிக்கிற சிரமம் இருந்திருக்காது. அவன் அதிர்ஷ்டம்  அப்படி... மீதமிருந்த கால் டம்ளரையும் நாக்கு படாமல் மடக்கு மடக்கென்று விழுங்கி விட்டான்.

சட்டைப்பைக்குள் அலைபேசி நான்காவது முறையாக அதிர ஆரம்பித்தது. எடுத்துப் பார்த்த போது அவன் எதிர்பார்த்த மாதிரியே நாகநாதன்தான் அழைத்துக் கொண்டிருந்தார். நேற்றைக்குப் பேசியபோது இன்றைக்குச் சந்திக்கலாம் என்று அவன்தான் சொல்லியிருந்தான். வீட்டில் விஷேஷம் நடப்பதால் இவனை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்று எண்ணியிருந்தான். ஆனால் வீட்டு சாமி கும்பிடும்போது மாப்பிள்ளை கட்டாயம் இருந்தாக வேண்டுமாம். இன்றைக்கு இவரைச் சந்திக்கவில்லையெனில் அப்புறம் பழசை மறந்து விட்டாய் என்று குத்திக் காட்டுவார்.
அவ்வளவுதான் அதோடு கிடப்பில் போட்டு விட்டேன்.

மேலும் வாசிக்க