21 செப்டம்பர், 2012

அ.முத்துலிங்கம் - கடிதம்


அன்புள்ள .மு.
 
கட்டுரைக்கு மிக்க நன்றி. அங்கதம் கலந்த, சிந்திக்க வைக்கும் கட்டுரை. இந்தியாவில் சுற்றுச்சூழல் குறித்த குருட்டுத்தனம் அமர்நாத் போன்ற மகத்தான இடங்கள் மட்டுமல்லாது, மத வழிபாட்டுக்குரிய எல்லா இடங்களிலுமே தொடர்கிறது. மற்றொரு புறம் தொழிற்சாலைகள் கழிவுநீரை நதிகளில் கலந்து விடும் திருட்டுத்தனம்.

காலச்சுவட்டில் என் பெயர் சிவப்பு மொழிபெயர்ப்பாளர்களிடம் தாங்கள் கண்டிருந்த பேட்டி சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. மொழிபெயர்ப்பு என்பது இவ்வளவு அர்ப்பணிப்பு வேண்டுகிற பணி என்பதை அறிந்து மிகவும் வியந்தேன். அதேபோல் ஜெயமோகனிடம் தாங்கள் ஊமைச்செந்நாயை அவர் எழுதிய விதம் குறித்து நிகழ்த்திய உரையாடலும் ஓர் எழுத்தாளன் மனம் எவ்வாறு சிந்திக்கிறது; சக எழுத்தாளர் அவரிடம் என்ன தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

நான் தங்கள் தளத்துக்கு அவ்வப்போது வருவதுண்டு. உங்கள் சிறுகதைத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். என் மனம் கவர்ந்த உங்கள் எழுத்து பற்றி என் தளத்தில் கீழ்கண்டவாறு எழுதினேன்.

--------------தீராநதியில் .முத்துலிங்கம் எழுதியுள்ள குற்றம், ஆனால் குற்றமில்லை வாசிக்கப்பட வேண்டிய கட்டுரை. சில மொழிபெயர்ப்புச் சிறுகதைகளை மின் புத்தகமாகப் படித்து வருகிறேன். ஒவ்வொரு சிறுகதை தரும் அனுபவம் அற்புதம்.
.முத்துலிங்கத்தின் கதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். எஸ்.ரா அவர்களுக்குப் பிடித்த எழுத்தாளர் என்று தெரிந்ததும், அவரை உடனே படிக்க வேண்டும் என்று தோன்றியது. சமர்ப்பணம் பகுதியிலேயே கவர்ந்து விடுகிறார். இவரும், இவரது ஆஃப்ரிக்க நண்பரும் ஒரு காட்டுக்குள் நின்றிருக்கிறார்கள். மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒரு காக்கையை நண்பரிடம் கண்ணால் ஜாடை காட்டுகிறார். நண்பர் தன்னிடம் இருந்த துப்பாக்கியில் குறிபார்த்து காக்கையைச் சுட்டுவிடுகிறார். அது பொத்தென்று அவர் காலடியில் வந்து விழுகிறது. காட்டுக்குள் எத்தனையோ மரங்களிருக்க, அந்த மரத்தில் வந்தமர்ந்த காக்கைக்கும், வராது போன அதன் சந்ததிகளுக்கும் இந்தக் கதைகளை அர்ப்பணம் செய்திருக்கிறார் .மு.
1958லிருந்து, 2003 வரை .மு. எழுதிய எழுபத்தைந்து சிறுகதைகளின் தொகுப்பு இது. இலங்கையின் கொஞ்சும் சங்கீதத் தமிழைப் படிக்கக் கிடைக்கும் வாய்ப்பை நினைக்கையில் மனதில் ருசிக்கிறது. அவர் கதைகளில் ஊடாடும் மெல்லிய பகடி கதைகளோடு நம்மைப் பிணைத்து இழுத்துச் செல்கிறது.
நூலின் முதல் கதை கோடைமழை. ஆனால் இதுதான் முதலா என்று தெரியவில்லை. தன் ஊரான கொக்குவில்லை அறிமுகப்படுத்துகிறார். இலங்கைமாப்பில் கண்டுபிடித்துப் பீற்றிகொள்ளுமளவுக்கு பிரபலமானதில்லையென்றாலும், கானா சேனாவின் கோடா போட்ட புகையிலைச் சுருட்டுக்கும், முறைப்படிக் காய்ச்சிய கள்ளச் சாராயத்தின் நெடிக்கும், சில பிரபலமான கொலைக்கேஸூகளுக்கும் பேர் போன கொக்குவில்லின் ஒழுங்கைகளும் (பாதைகள் என்று நினைக்கிறேன்), அவசரகாலச் சட்டத்தை மீறி மதகுகள் மீது குந்தி அரட்டை அடிக்கும் ஆண்களும், ரெயில்வே லைன் கரையை விளையாட்டு மைதானமாக்கிக் கொண்டுவிட்ட குழந்தைகளும் நமக்கு அறிமுகமாகின்றனர்.
கதை முழுக்கக் கோடையின் நெடி வீசிக்கொண்டே இருக்கிறது. கிழவியிடம் நகையை அடகு வைக்க வரும் இளைஞனும், அதை வேறொருவரிடம் வைத்ததாகச் சொல்லி, தானே வைத்துக் கொண்டு பணம் தரும் கிழவியும் மட்டுமே கதையில் வருகிறார்கள். இருவரும் பேசிக்கொள்வதை திரும்பத் திரும்பப் படிக்கவேண்டும் போல் சரளமான இலங்கைத் தமிழ். .மு. கொக்குவில் என்ற உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். கோடை மழையின் முதல் துளி மண்ணில் விழுந்து எழும் மண்வாசனை நம் நெஞ்சில் தங்கி விடுகிறது.--------

என் தளத்தில் சில சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். தங்களுக்கு நேரம் வாய்க்கும்போது வருகைதந்து   நான் என் எழுத்துக்களை மேம்படுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்க இயலுமா?

என் தளம்
http://jegadeeshkumark.blogspot.com

மேலும் வாசிக்க