அறைக்குள் மெல்லிய வெண்ணிறப் படலமாக இன்னுமும் சுழன்று கொண்டிருந்த சிகரெட் புகையால் சண்முக நாதனுக்கு மூச்செடுப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. வீட்டுக்காரம்மா மகன் கீழே சென்று இருபது நிமிடங்களாவது ஆகியிருக்கும். சிகரெட் படலம் போலவே அவன் கொடுத்துச் சென்ற அதிர்வால் ஏற்பட்டு விட்ட நெஞ்சுப் படபடப்பும் இன்னும் அடங்கவில்லை. முகத்துக்கு நேரே புகை விடாத குறைதான். உரையாடலின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் வாயில் சிகரெட்டைப் பொருத்தி, உதடு குவித்து, நிதானமாய் உறிஞ்சி மூன்று துவாரங்களிலும் புகையை அவிழ்த்து விட்டபின்புதான் மறுவாக்கியத்தைத் தொடங்குகிறான். நாற்பத்தெட்டு வயதான மனிதனின் முன்னிலையில் புகைபிடிப்பது மரியாதைக்கும் நாகரிகத்துக்கும் உகந்த காரியமல்ல என்று அறிவுக்கு எட்டாதவன் மேற்படிப்பு படித்து அயல்நாட்டில் உத்தியோகம் பார்த்து என்ன பிரயோஜனம்?
நாற்பத்தெட்டு வயதுதான் என்றாலும் உடலும், மனமும் சோர்ந்து போய் ஐம்பத்தெட்டு மாதிரி தோற்றம் கொண்டிருந்தார் சண்முகநாதன். தாடையைக் கைவிரல்கள் தடவியபோது இரண்டு நாள் தாடி சொரசொரவென்று உறுத்தியது. உப்பும் மிளகும் கலந்து போட்டதைப் போலாய் விட்டது தலையும் மீசையும் தாடியும். நாள் தவறாமல் சவரம் செய்து கொள்கிற பழக்கம் நின்று மூன்று வருடங்களாகி விட்டது. பிளேடின் பக்கங்களை மனதில் குறித்து வைத்து நாலு நாளைக்கு சவரம் செய்த பின்புதான் அடுத்த பிளேடு வாங்குகிற அளவுக்குக் கையிருப்பு. இப்போது சவரம் செய்து கொள்ளுவதில் பிடிப்பு இல்லாமல் போய் விட்டது. காபியில் முக்கி எடுத்த வெள்ளைக்காகிதம் போலாகி விட்டது அணிந்திருக்கிற வேட்டியும், சட்டையும். எத்தனைத் துவைத்தும் அவரிடமிருந்த நாலு செட் துணிகளாலும் மறந்து போன வெண்ணிறத்தை நினைவுக்குக் கொண்டுவரவே முடியவில்லை.
உண்மையிலேயே நாம் வீட்டைக் காலி பண்ண வேண்டிய நேரம் வந்து விட்டதோ என்று சிந்தித்தார் சண்முக நாதன்.
வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால் கையோடு கொண்டு போவதற்கு இரண்டே இரண்டு பொருட்கள்தாம் அவருக்கென்று சொந்தமாக இருந்தன. ஒன்று அவரது ட்ரங்குப்பெட்டி. மற்றொரு பொருள். . . அதுதான் அவர் கூட வருமா என்பது கேள்விக்குறியாய்க் கிடக்கிறது. அறைக்குள் இருந்த இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளும், வலைக்கம்பிகளில் கயிறு கயிறாய் ஒட்டடை படிந்திருக்கிற மேஜை விசிறியும், குடிநீர் வைத்துக் கொள்வதற்கென்றிருந்த ஒடுக்கு விழுந்த அலுமினிய அண்டாவும், அதை மூடி வைத்திருக்கிற தாம்பாளமும், துணிகளைத் தொங்கப் போடுவதெற்கென்று ஜன்னல் கம்பியிலிருந்து, வாயிற்கதவின் தாழ்ப்பாள் வரை இழுத்துக் கட்டப்பட்டிருந்த நைலான் கயிறும் கூட வீட்டுக்காரம்மாவுக்குத்தான் சொந்தம். நெடுநாள் அங்கே தங்கியிருந்ததன் விளைவாகத் தாமும், தமது ட்ரங்குப் பெட்டியும், தம் ஆத்மாவுக்கு மிக நெருக்கமான அப்பாவின் மேஜையும் கூட அவளுக்குச் சொந்தமான பொருட்களின் பட்டியலுக்குள் வந்து விட்டோமோ என்ற ஆழமான ஐயம் சண்முகநாதனுக்குள் எழுந்திருந்தது.
வீட்டுக்காரம்மா மகன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது சொன்ன பெயர் சண்முகநாதனுக்கு நினைவில் இல்லாதிருப்பினும், அவனது மெருகு குலையாத உடையும், திருத்தமான உடல் மொழியும் அவர் ஞாபகத்தில் நன்கு பதிந்து விட்டன. உள்ளே நுழைந்த சிறிது நேரத்துக்குள்ளாகவே எதிராளியின் அசைவுகளைக் கட்டுப்படுத்துபவனின் இருக்கையில் ஆரவாரமின்றி அமர்ந்து கொண்டான். அவர்களுக்குத் தர வேண்டிய சொற்பத்தொகைக்காக, அவ்வீட்டின் உறுப்பினர்கள் முன்னிலையில் குறுகி நிற்க வேண்டிய தன் அவல நிலையை எண்ணி நொந்து கொண்டார் சண்முக நாதன்.
எத்தனைக் கோணங்களில் வாதங்களைத் தன்னால் முன் வைத்து நிலைமையைச் சமாளித்திருக்க முடியும்? ஆனாலும் வாய் பேசாமல்தானே நின்றிருக்க முடிந்தது. இந்த ஊத்தை உடம்பில் கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருக்கிற உயிரை காப்பாற்றிக் கொள்ளத்தான் எத்தனைப் பாடு? தனது சுயமரியாதை அப்பாவின் மேஜை போல இன்னொரு புராதனப்பொருளாகத்தான் பாவிக்கப்பட இயலுமா என்று சண்முக நாதன் அங்கலாய்த்துக் கொண்டார்.
அப்பாவின் தலைமுறையில் எஞ்சியிருந்த ஒரே உயிர் சண்முக நாதன். அவர் தலைமுறை அவருக்கு விட்டுச் சென்ற ஒரே பொருள் அந்த மேஜை. மற்ற எல்லாமும் ஒரே நாளில் விதியாலோ வேறெந்தச் சூனியச்சக்தியாலோ துடைத்துச் செல்லப்பட, தொலைக்காட்சி அணைக்கப்பட்ட பின்னரும் நிழல்களாக எஞ்சி நிற்கிற பிம்பம் போல, இந்த மேஜை மட்டும் சண்முகநாதனிடம் நின்றுவிட்டது. அவரும் எங்கு சென்றாலும் அந்த மேஜையை தூக்கிக் கொண்டுதான் போனார். தான் மண்ணுக்குள் சென்ற பின் தான் அந்த மேஜை மீது பிறர் கைப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருந்தார். அப்பாவின் சுபாவத்தையும், ஆளுமையையும் அந்த மேஜை அப்படியே சுவீகரித்துக் கொண்டதைப் போலத்தான் சண்முக நாதனுக்குத் தோன்றியது.
அப்பா தர்மனைப் போல் வாழ்ந்தார். மனைவி பிள்ளைகளை அடகு வைத்துச் சூதாட முடியாத யுகத்தில் வாழ்ந்ததால், அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மட்டும் ஆடிய சூதில் பணயமாக வைக்கப்பட்டு இழக்கப்பட்டன. வெறும் மூன்று சீட்டு ஆட்டத்தில் ஒரு தலைமுறைச் சொத்தையே இழக்க முடியும் என்ற அறிதல் சண்முக நாதனுக்கு எரிச்சலை விட வியப்பையே அதிகம் தந்தது. இருபத்து நாலுமணி நேரங்களுக்குள் அப்பாவின் மேஜை நாற்காலி தவிர வீடு முழுக்கத் துடைத்தாற்போல் ஆகி விட்டது.
தான் நிர்மாணித்த சாம்ராஜ்யத்தைச் சிதைத்துத் தரை மட்டமாக்குவதற்கு அப்பா எடுத்துக் கொண்ட கால அவகாசம் மிக அற்பமே. மனப்பிறழ்வைக் காரணம் காட்டி மருத்துவர் அறிவுறுத்தியதால் ஓய்வுக்காக வீட்டிலேயே அமர்ந்து நிகழ்வுகளை வேடிக்கை பார்த்திருந்த அந்தச் சில நாட்கள் அவருக்குக் கொடுமையானதாக இருந்திருக்க வேண்டும். அவர் பேச்சிலிருந்த தோரணையும், கம்பீரமும் குறைந்து கொண்டே வந்து கடைசியில் பேச்சும் குறைந்து விட்டது. நெடுநாள் நண்பருடன் இயல்பாக உரையாடிக் கொண்டிருக்கும் ஒருவர் திடீரென்று அவர் கண்களைச் சந்தித்ததும் உடனே அறுந்து போய் விடுகிற சிந்தனை மாதிரி, அப்பாவின் தினசரி வாழ்க்கை நிகழ்வுகள் அப்படியே உறைந்து போய் விட்டன. எல்லாரையும் வெறிக்க வெறிக்கப் பார்ப்பார். எதிரில் நிற்பவர் மௌனம் கூட தன் நிலையை உத்தேசித்துத் தன்னை அவமதிப்பதாய்த் தோன்றும். சொந்த வீட்டிலேயே அன்னியப்படுத்தப்பட்டதாய் உணர்ந்து, நாற்காலி மேஜையோடேயே ஐக்கியமாகி விட்டார். யாரையும் சந்திக்க விருப்பமில்லை; தன்னைச் சந்திக்க யாரையும் அனுமதிக்கவும் இல்லை. அவர் சதா தனக்குள் மூழ்கிக் கிடந்ததை மோன நிலை என்று நிச்சயம் சொல்லிவிட முடியாது.
பிறகு ஒருநாள் அவரது பால்யகால நட்பு அவரைத் தேடி வந்தது. நட்பைப் பார்த்ததும் அப்பாவின் முகத்துக்கிடையேயிருந்த சுருக்கங்களுக்கிடையில் பூக்கள் பூத்துவிட்டன. பால்யகால நட்பு அவரை வெளியில் அழைத்துப் போயிற்று. உயர்குடிக்கென்று இருந்த மனமகிழ் மன்றத்தில் இணைந்து சூதாட ஆரம்பித்தார் அப்பா. வீட்டுக்குத் திரும்பி வரும் நேரம் நள்ளிரவு தாண்டியது. ஒவ்வொரு இரவு வீட்டுக்குத் திரும்பி வரும்போதும் இந்தியப் பாமரன் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் தன் தேசத்தைத் துண்டு துண்டாக இழந்ததைப் போல, தன் சொத்துக்களின் ஒவ்வொரு அங்கமாக இழந்து கொண்டே வந்தார் அப்பா.
திடீரென்று வேட்டியும், முண்டாசும் கட்டின ஆட்கள் வீட்டுக்குள் நுழைந்து பொருட்களையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியில் தூக்கிச் சென்ற போதுதான் சண்முக நாதன் உட்பட வீட்டில் அனைவருக்கும் அப்பாவின் நிலைமை தெரிய வந்தது. அப்பாவின் நிலை அந்தக் குடும்பத்தின் நிலை. குடும்பம் என்பது அவரைச் சார்ந்திருந்த அம்மாவும், சண்முக நாதனும் மட்டும்தான். பிறரெல்லாம் பணியாளர்கள். தங்கை திருமணமாகிப் போய் ஐந்து வருடங்களாகி இருந்தது. அண்ணன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அப்பா சொத்துக்களின் ஆதாரமின்றியே சர்வ போகத்தோடும் வாழ்ந்து வந்தான். குடும்பமும் அங்கேயே. தகவல் சொன்ன பிறகு அவனது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அப்பா போன செய்தி கூட அவனுக்கு இதுவரையிலும் தெரிவிக்கப்படவில்லை.
அருணாச்சலம் செட்டியார் கொடுத்தனுப்பியதாகச் சொல்லி ஓர் ஆள் வந்து துண்டுச் சீட்டு ஒன்றை நீட்டினான். அப்பா அவருக்குத் தரவேண்டியிருந்த நானூறு ரூபாய்க்கு பதிலாக அவருடைய நாற்காலியைத் தருமாறும், அதை அந்த ஆளே தூக்கிக் கொண்டு வந்து விடுவான் என்றும் அந்தச் சீட்டில் குறித்திருந்தது. இது அப்பாவுக்கு எதிர்பாராத தாக்குதலாக இருந்தது.
அப்பாவிடம் யாரும் இதுவரை பணம், பொருள் தொடர்பான காரியங்களில் கட்டளை இடும் அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. தன் சொந்த மற்றும் தொழில் வாழ்க்கை தொடர்பான நிர்வாகத்திலும், மேலாண்மையிலும் அவரே இயக்குனராக இருந்து வந்திருக்கிறார். ஆஸ்திரேலியாவிலிருந்து கனரக வாகனங்களின் உதிரிபாகங்களை அனுப்பித் தரும் எலியட் கூட தான் வியாபார நிமித்தம் அனுப்பும் கடிதங்களில் பொருட்கள் பற்றிய விபரங்களைக் குறித்தபின் நலம் விசாரித்திருப்பானே ஒழிய, தொகையைத் தருவதற்குண்டான கால அவகாசத்தையோ, தொகையை எதிர்பார்த்துள்ள தன் நிலையைக் குறித்தோ ஒருவரி எழுதியதில்லை. இந்த அறிவிக்கப்படாத ஒப்பந்தம் அப்பாவோடு தொழில் செய்கிறவர்கள், தொடர்பு கொள்கிறவர்கள் அனைவரும் கால இடைவெளியின்றி அறிந்து கொள்கிற செய்தியாக இதுவரை இருந்து வந்திருக்கிறது. தன்னிடமிருந்து செல்ல வேண்டிய எந்தச் செய்தியும், எந்தப் பொருளும் எப்போது செல்ல வேண்டும் என்ற நேரம், தேதியை அப்பாவே குறிப்பார். தன்னால் இயற்றப்பட்ட, யாராலும் மாற்ற இயலாத விதிகள் அடங்கிய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக முப்பத்தைந்து வருடங்களாகத் திகழ்ந்திருந்தார் அப்பா.
அருணாச்சலம் செட்டியார் அனுப்பிய ஆள் அப்பாவின் நாற்காலியைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு சென்ற அன்றிரவே அப்பாவின் உயிர் போய்விட்டது. அவன் சென்ற பிறகும் அப்பா இருந்த இடத்தை விட்டு அகலாமல் நின்று கொண்டே இருந்தார். மூன்று மணி நேரமாவது நின்றிருப்பார். அம்மா உள்ளே வந்து படுங்கள் என்று விரித்த பாயைக் காட்டினாள். அவர் நகரவில்லை. யாரிடமும் பேசவுமில்லை. இரவு எட்டு மணியைப் போல மேஜை மீது ஏறி குறுக்கிப் படுத்துக் கொண்டார். அப்படியே தூங்கி விட்டார். பதினோரு மணிபோல தொண்டையை நசுக்கிக் கொண்டு வருவது போல நீண்ட கேவல் சத்தம் கேட்டது. அம்மாவும் சண்முக நாதனும் அடுப்படியை ஒட்டிய அறைக்குள் படுத்திருந்தார்கள் இருவருமே விழித்திருந்தாலும் அப்பாவைப் போய்ப் பார்க்க அச்சம். அதுவும் அப்பா அழுதுகொண்டிருக்கையில் அவரைப் போய்ப் பார்த்து அவரது பிம்பத்தை இன்னும் சிதைக்க வேண்டாமே என்று இருவருக்குமே தோன்றியிருந்தது.
அப்பாவிடமிருந்து கடைசியாக எழும்பிய ஒலி அந்தக் கேவல்தான் என்று மூன்று மணிக்குச் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து வந்த சண்முக நாதனுக்குத் தெரிந்து விட்டது. தூங்கும் நேரத்தில் அவருகே சென்று வாஞ்சையோடு அவர் முகத்தை ஒருமுறை பார்க்க வேண்டுமென்று விரும்பியிருந்தார் சண்முகநாதன். கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டியபடி கால்களைக் குறுக்கி ஒருக்களித்துப் படுத்திருந்த அப்பாவின் முகத்தைப் பார்த்ததுமே சண்முகநாதனுக்குத் தெரிந்து போயிற்று. கண்களும், வாயும் அரைகுறையாகத் திறந்து கிடக்க, மூச்சு நின்றிருந்தது.
காலையில் பத்து மணிக்குள் உறவினர்களும், நண்பர்களும் கூடி விட்டனர். அருணாச்சலம் செட்டியாரும் வந்திருந்தார். சண்முகநாதனைத் தனியே அழைத்துப் போய் அப்பாவின் அகால மரணத்துக்கு மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்த பிறகு, அப்பாவின் இரண்டாவது பிராமிசரி நோட்டு தற்போதுதான் கைக்குக் கிடைத்ததாகவும், அதன்படி அப்பா மேலும் எழுநூறு ரூபாய் தர வேண்டியிருப்பதாகவும், ஆனால் தற்போதுள்ள நிலையில் அந்தத் தொகையைத் தருமாறு நிர்பந்திப்பது உசிதமான காரியமல்லாததால், ஒருவாரம் பத்துநாள் கழித்து ஆள் அனுப்பி தொகைக்கு பதில் மேஜையை எடுத்துக் கொள்வதாகவும் கூறினார்.
அப்பா அந்த மேஜையிலேயே உயிர் விட்ட விஷயம் தெரிய வந்த பிறகு அருணாச்சலம் செட்டியாருக்கு மேஜை மீதிருந்த கவர்ச்சி போய்விட்டது. மேஜை தப்பி விட்டது.
சண்முக நாதனுக்கு அப்பா என்றால் உயிர். அப்பாவின் வேஷ்டி, அப்பாவின் மூக்குப்பொடி டப்பா, அப்பாவின் குண்டு மசி பேனா, அப்பாவின் அகன்ற தேகம், அவரது உருண்டு திரண்ட விரல்கள்; அவர் தொடர்பான ஒவ்வொன்றும் அவருக்குப் பிடித்தமான விஷயங்கள்தாம். தன்னைச் சுற்றி அப்பா உருவாக்கி வைத்திருந்த ஒளிவட்டத்துக்குள் திரும்பத் திரும்ப ஈர்க்கப்படும் விட்டில் பூச்சி போல மாறிவிட்டோமோ என்ற சந்தேகம் சண்முகநாதனுக்கு ஏற்பட்டிருந்தது.
என்ன ஆனாலும் சரி அப்பாவின் கடைசி எச்சமாய் நிற்கும் இந்த மேஜையை மட்டும் இழக்கவே போவதில்லை என்று முடிவு செய்து கொண்டார் சண்முகநாதன். அப்பா இறந்த அன்றே கைவிட்டுப் போக வேண்டிய மேஜை. அப்பாவே அதன் மேல் உயிரை விட்டு அதைக் காப்பாற்றி விட்டார். சடலம் கிடந்த மேஜையைத் தனதாக்கிக் கொள்ள மனம் வரவில்லை அருணாச்சலம் செட்டியாருக்கு.
அப்பாவோடு தொடர்புடையது என்ற விஷேச அந்தஸ்து தவிர்த்தும் பல்வேறு குணாதியங்கள் அந்த மேஜைக்கு உண்டு. ஈட்டி மரத்தால் செய்யப்பட்டிருந்தது அந்த மேஜை. அதனால் தேக்கால் செய்யப்பட்டது போல் மொழுமொழுவென்றல்லாமல் சற்றுச் சொரசொரப்பாகவே காணப்படும். மேற்பக்க விளிம்புகளில் பதினெட்டாம் நூற்றாண்டு மர வேலைப்பாடுகள் அடங்கியது. முன்பக்கம் இருந்த இரண்டு ட்ராயர்களும் இழுப்பதற்குச் சற்றுக் கடினமாகி விட்டாலும், உள்ளே பேனாக்கள் வைப்பதற்கு, மைப்புட்டி வைக்க, கோப்புகள், சிறுபுத்தகங்கள் வைக்க தனித்தனி அறைகள் கொண்டிருந்தது. உள்ளேயும் குட்டிக் குட்டியாய் சிற்பங்கள். நடனப்பெண் சிற்பங்கள்; எரிதழலில் நின்று தவம் புரியும் யோகியர் சிற்பங்கள், கல்லாலின் புடையமர்ந்து சின்முத்திரையில் ஆத்மஞானம் தரும் தக்ஷிணாமூர்த்தி சிற்பம் அனைத்தும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருந்தன. மேஜையின் நான்கு கால்களும் அலங்கார விளக்குகளைப் போலச் செய்யப்பட்டிருந்தன.
மேஜையின் மதிப்பு கூடிப்போனதற்கு அது வந்த வழியும் காரணம். சிக்கிம் சமஸ்தானத்தின் ராஜாவாக இருந்த சோக்யல் வாங்க்சுக் நம்க்யலிடமிருந்து அவரிடம் கணக்கராக உத்தியோகம் பார்த்திருந்த பகதூர் பண்டாரிக்கு இனாமாக வழங்கப்பட்டது. பண்டாரி சண்முகநாதனின் கொள்ளுத்தாத்தாவுக்கு நண்பர். வியாபார விஷயமாக சிக்கிம் சென்றிருந்த அவருக்கு பிரம்மச்சாரியாயிருந்த பண்டாரி துறவறம் ஏற்று ரிஷிகேசத்துக்குச் செல்லும் முன் இந்த மேஜையை அன்புப் பரிசாக வழங்கியிருக்கிறார்.
இந்த விபரங்களெல்லாம் தெரியாமலேயே வீட்டுக்காரம்மா மகனுக்கு மேஜையை இரண்டு முறை நேரில் பார்த்தே மகத்துவம் தெரிந்து விட்டது. கொடுக்கவேண்டிய எட்டு மாத வாடகை பாக்கி, கைமாற்றாக வாங்கி வைத்திருந்த ஆயிரத்து எழுநூற்று நாற்பது ரூபாய் எல்லாவற்றையும் கழித்துக்கொண்டு கையில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விட்டு எடுத்துக் கொள்வதாய்ச் சொல்கிறான். அவன் வேலை பார்க்கும் ஊரில் ஏலம் விட்டு நல்ல தொகை பார்க்க முடியுமாம். மேஜையின் சரித்திரப் பின்னணியை அவர் வாயிலிருந்தே கேட்டுத் தெரிந்து கொண்டான்.
படுத்தால் தூக்கம் வருமா தெரியவில்லை. இருந்தாலும் படுத்தால் பரவாயில்லை என்று தோன்றியது சண்முக நாதனுக்கு. கிழிந்த பாயை விரித்து மல்லாக்கப் படுத்தார். விட்டம் பார்த்தபடி சிந்தனையைத் தொடர்ந்தார். மேஜையைத் தன்னிடமிருந்து பிரித்துக் கற்பனை செய்து பார்ப்பதே கொடுமையாக இருந்தது. இருந்தாலும் வீட்டுக்காரம்மா மகன் போட்டு விட்டுப் போன கல் நிறைய அலைகளைக் கிளப்பி விட்டபடியே இருக்கிறது. அவனிடம் மேஜையைக் கொடுத்து விட்டால் தன்னைப் பிடித்திருக்கிற சனியன் ஒழிந்து விடும். ஆனால் ஏதோ உடலுறுப்பு ஒன்றை விற்றுக் காசாக்குவதைப் போலிருந்தது அப்படி நினைப்பது. மேஜையை ஏலம் எடுக்கிறவன் தான் வைத்திருப்பதை விட கவுரவமான இடத்தில் மேஜையை வைத்திருப்பான் என்பது வாஸ்தவம்தான். ஆனால் அதன் பரப்புகளில் ஒட்டியிருக்கிற அப்பாவின் வாசனையைக் காப்பாற்றி வைக்க முடியுமா அவனால்?
சண்முகநாதன் சிந்தனையைத் தீவிரமாக்கினார். விடிவதற்குள் ஒரு முடிவு எடுக்க வேண்டும். மேஜையை வீட்டுக்காரம்மா பையனிடம் கொடுத்துவிட்டால் பத்தாயிரம் கிடைக்கும். மேஜையும் பத்திரமாய், அதற்குப் பாந்தமான இடத்தில் இருக்கும். இல்லையென்றால் மேஜையைத் தூக்கிக் கொண்டு வெளியேற வேண்டும். அதைக் கொண்டு போக வண்டி வாடகைக்குப் பணம் இருக்கிறதா தன்னிடம் என்று தெரியவில்லை. அதற்கு முன் வீட்டு வாடகை பாக்கி?
மோட்டுவளையின் உத்திரத்தின் பிசிறுகள் விளிம்பாகத் தெரியும் வரை யோசித்ததில் மேஜையைக் கொடுத்து விடுவதுதான் சரி என்று அவருக்குப் பட்டது. அப்படியே தன்னையும் ஒரு விலை கொடுத்து வாங்கிக் கொண்டால் மேஜையுடனே சென்று அதனருகில் சமாதியாகி விடலாம். சரி கொடுத்து விடலாம் என்று படக்கென்று முடிவெடுத்தார். முடிவெடுத்த கணமே நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. எடுத்த முடிவு சரியில்லை என்று உடனே தெளிவாகி விட்டது. புத்திக் கயிறு கொண்டு மனக்குரங்கைக் கட்டவேண்டியிருந்தது சண்முகநாதனுக்கு. எடுத்த முடிவு எடுத்ததுதான். இந்தச் சடலம் நடமாடும் வரை அப்பாவின் ஞாபகங்கள் இதற்குள் இருந்து விட்டுப் போகட்டும்.
மேற்கூரையில் சலசலப்புச் சத்தம் கேட்டது. முட்டைக் கண்ணியாகத்தான் இருக்கும். இன்றைக்கு அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்தோமா என்பது நினைவில் இல்லை. ஏதாவது மிஞ்சி இருக்கிறதா பார்க்கலாம் என்றெண்ணியபடி எழுந்து உட்கார்ந்தார். சட்டென்று வீட்டுக் கூரையில் நட்சத்திரங்கள் தெரிந்தன. இரண்டு ஒடுகள் வெகு வேகமாகப் பிரிக்கப்பட்டிருந்தன. நட்சத்திரங்களை நிழல் மறைத்தது. பொத்தென்று மூட்டையைப் போல் ஓர் உருவம் உள்ளே குதித்தது.
ஏய் ஏய் என்று கத்தியபடியே பதறி எழுந்தார் சண்முக நாதன். மின் விளக்கின் இயக்கு பொத்தான் அவன் தலைக்குப் பின் இருந்தது. ஓடு பிரிந்த ஓட்டை வழியே வழிந்த நிலா வெளிச்சத்தில் அவன் உருவம் தெளிவாகத் தெரிந்தது. கிராமத்தான் மாதிரி தெரிந்தான். நெஞ்சு விரிந்து, வயிறு ஒட்டி, கருத்த தேகத்துடன் கள்ளர் பரம்பரைத் தலைவன் மாதிரி இருந்தான்.
அவன் கையில் இருந்ததைக் கத்தி என்று சொல்லி விட முடியாது. ராணுவ வீரர்கள் உபயோகிக்கிற குறுவாள் மாதிரி இருந்தது. முன்னோக்கிக் குனிந்திருந்தான். இருளுக்கு அவன் கண்கள் பழக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் கண்கள் துருதுருவென்று அறையை அலசின. சண்முக நாதன் அவன் அசைவுகளைப் பின் தொடர்ந்தார். அவன் கையிலிருந்த ஆயுதத்தைப் பார்த்ததும் அவருக்குப் பேச்சு எழவில்லை. பதட்டம் உள்ளுக்குள்ளேயே துடித்துக் கொண்டிருந்தது.
அவன் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்தார். அவனோ கத்தியால் எடு எடு என்று சைகை செய்தான். அவன் எதை எடுக்கச் சொல்கிறான் என்று அவருக்குப் புரிந்து விட்டது. அதுதான் தன்னிடம் இல்லையே. ட்ரங்குப் பெட்டிக்குள் ஏதேனும் ஐந்து, பத்து இருக்கலாம். அவனிடம் இரு என்று கைகாட்டி விட்டுத் திரும்பினார். வேகமாய்த் திரும்பியதில் அவரது பதட்டமான கையொன்று தண்ணீர் அண்டாவைத் தட்டி விட்டு விட்டது. பலத்த சத்தம் திருடனைத் துணுக்குற வைத்தது. சினங்கொண்டு கத்தியால் மேஜை மீது ஓங்கிக் குத்தினான். சண்முகநாதனின் இதயம் விம்மி வீங்கி விட்டது. அடுத்தவிநாடி வெடித்து விடும் என்று தோன்றியது சண்முகநாதனுக்கு. திருடன் கத்தியை மேஜையிலிருந்து பிடுங்க முயற்சித்துக் கொண்டிருந்தான். கத்தியின் ஒவ்வொரு அசைவுக்கும் மேஜையின் பிளவு நீண்டு கொண்டே போனது. சண்முகநாதனின் இயல்பான பதற்றம் அவரது உடலைக் குலுக்கி முன்னகர வைத்தது. திருடன் தாக்கப்பட்டு விடுவோமோ என்ற அனிச்சை உணர்வின் தூண்டுதலால், கத்தியைக் கைவிட்டான். குனிந்து மேஜையின் காலைப் பற்றினான். பலமாய் இழுத்ததில் மேஜையின் கால் முறிந்து அவன் கையோடு வந்து விட்டது. எழுந்து சண்முகநாதனை மேஜைக்காலால் தாக்கினான். தாடையில் விழுந்த அடியில் தடுமாறி விழுந்தார். திருடன் சரிந்து கிடந்த மேஜை மேல் கால் வைத்து ஒரே எம்பில் கூரையைப் பற்றினான். அறைக்குள் சில விநாடிகள் இருள் பரவி, மீண்டும் நட்சத்திரங்கள் கூரையில் தோன்றியதை வெறித்துப் பார்த்தபடி தரையில் கிடந்தார் சண்முகநாதன்.
விடிந்ததும் நடந்தவை இரவில் நடந்தவைக்குச் சற்றும் குறைந்தவையல்ல. முப்பது நிமிடங்களில் தெருவுக்குள் தள்ளப்பட்டார் சண்முகநாதன். மேஜையைப் போலத் தான் ஓர் உபயோகமற்ற பொருளாய் மாறி ஆண்டுகள் கழிந்துவிட்டன என்று நினைத்துக் கொண்டார். ட்ரங்குப் பெட்டியும், புராதனச் சின்னத்துக்குரிய தகுதிகளைச் சமீபத்தில் இழந்து விட்ட அப்பாவின் மேஜையும் அவரது அடுத்தகட்ட தீர்மானத்துக்காகக் காத்திருந்தன. தற்கொலை புரிந்து கொள்வது தன்னைப் பொறுத்தவரை ஒரு ஆடம்பரமான முடிவாகத்தான் இருக்கும் என்று பட்டது சண்முகநாதனுக்கு. தொழில் அடங்கி வீட்டுக்குள் முடங்கிப் போன அப்பாவைப் போலவே தானும் உறைந்து நின்று கொண்டிருப்பதாய்ப் பட்டது அவருக்கு.
தெரு வெறிச்சோடியிருந்தது. ஐந்தாறு வீடுகள்தாம் தெருவில். அதுவும் காம்பவுண்ட் சுவர் கொண்டவை. வெளியில் யாரும் இந்நேரம் வர வாய்ப்பில்லை. மேஜையைத் தானே தலையில் தூக்கிக் கொண்டு நடந்து விடலாமா என்று நினைத்தார். எங்கு போவது? அது தெரியவில்லை. ஆனால் இங்கிருந்து நகர்ந்து விட வேண்டும்.
பத்தடி தூரத்தில் இருந்த புளியமரத்தடியில் ஒருவன் குத்தவைத்து அமர்ந்திருப்பது தெரிந்தது. யாராக இருக்கும் என்று கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்தார். தன்னைப் பார்ப்பது தெரிந்தவுடன் அவன் எழுந்து அவரை நோக்கி வந்தான். கூரையில் கசிந்த நட்சத்திர ஒளியில் மட்டுமே பார்த்திருந்தாலும், அருகில் வந்ததுமே அவனை அடையாளம் தெரிந்து விட்டது. சண்முகநாதனுக்குத் தனக்குள் பொங்கியது கோபமா, அச்சமா என்று தெரியவில்லை. அவன் கைகளை உயர்த்திக் குவித்தபடி அவர் கால்களில் விழுந்தான்.
சண்முகநாதனுக்கு பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வது என்றுமே சிரமமாகத்தான் இருந்திருக்கிறது. அவன் பெயர் முனியப்பனா, முனுசாமியா என்பதை யோசித்துக் கொண்டிருந்தார். அப்பாவின் உடைந்த மேஜையை அவனே சுமந்து வந்திருந்தான். சண்முகநாதன் தன் தற்போதைய புகலிடமான அவன் வீட்டைப் பார்த்தான். தாழ்வான குடிசை வீடு. இவர்கள் உள்ளே நுழைந்தவுடன் மல்லாந்து படுத்திருந்த அவன் மனைவி திடும்மென்று எழுந்து அமர்ந்தாள். முகம் நிறைய மஞ்சள் அப்பியிருந்தாள்.
இருவரும் சண்முகநாதனிடம் திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்டபடியே இருந்தனர். திருடனின் மனைவிதான் அவனைத் திரும்பவும் சண்முகநாதனிடம் அனுப்பியிருக்கிறாள். ஈட்டி மரம் அவர்கள் குலதெய்வத்துக்கு இணையானதாம். மேஜையை உடைத்த பின், காலை வீட்டில் கொண்டு வந்து வெளிச்சத்தில் பார்த்தபின் தான் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் அவர்களின் குலத்தொழில் மரப்பாச்சி பொம்மை செய்வதாம். மரப்பாச்சி பொம்மைகள் ஈட்டி மரத்திலேயே செய்யப்பட்டு வருகின்றன. தன் குழந்தைப் பருவத்தில் தனக்களிக்கப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளைக் கொண்டு உறவு முறைகளைக் கற்றுக் கொண்டதை நினைவு கூர்ந்தார் சண்முகநாதன். ஈட்டி மரம் மருத்துவம் கொண்டது. அதைக் கையாள்வதால் குழந்தைகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று விளக்கினான் அவன். இப்போது அந்தத் தொழிலைத் தான் நிறுத்திப் பல வருடங்களாகி விட்டதாகவும், திருப்பதியிலோ, மதுரை மீனாட்சி கோவிலிலோ நேர்த்திக் கடன் செய்யவும், தொட்டில் கட்டவும் தேவைப்படுகிற நேரங்களில் மேட்டுமே மரப்பாச்சி பொம்மைகள் செய்கிற வாய்ப்பு தனக்கு அமைவதாகவும் சொன்னான். தன் குலதெய்வத்துக்கு நிகரான மரத்தால் செய்யப்பட்ட மேஜையைச் சிதைத்தற்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருந்தான்.
சண்முகநாதனுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. எல்லாருக்குமே போற்றிப் பாதுகாக்கிற விஷயம் என்று ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அவனைப் பார்த்து உடைந்தகாலைக் கொண்டு தனக்கு ஒரு மரப்பாச்சி பொம்மை செய்து தரமுடியுமா என்று கேட்டார். குடிசைக்கு வெளியில் இருந்த மண்திட்டில் அமர்ந்து நெகுநெகுவென்று மர இழைகளைச் சீவித்தள்ளியபடி அவன் கைகள் பொம்மையை உருவாக்குவதப் பார்த்தபடியிருந்தார்.
அவன் அவர் கையில் பொம்மையைக் கொடுத்ததும், பொம்மையைச் சற்று நேரம் உற்று நோக்கியபடி இருந்தார். பிறகு அவனிடம் அந்த மேஜையை அவனே வைத்துக் கொள்ளும்படிச் சொன்னார். எந்தெந்த பகுதிகளை பொம்மைகளாக இழைக்க முடியுமோ அவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளும்படிச் சொன்னார். பொம்மைகளைக் கோயில்களில் சென்று விற்கும் படிச் சொன்னார். திருடனும், அவன் மனைவியும் கண்ணீர் விட்டார்கள்.
மேஜையை அவர் கண் முன்னாலேயே பாகங்களாகப் பிரித்தான். ஒரு இழுப்பறை வெகுநாட்களாகத் திறக்கப்பட முடியாமல் இருந்தது. மேஜையின் பிற இழுப்பறைகள் காலியாகவே இருந்தபடியால், அந்த இழுப்பறையும் காலியாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்திருந்தார் சண்முகநாதன். ஆனால் மேஜையின் பாகங்கள் பிரிக்கப்பட்டபோது அந்த இழுப்பறை திறக்கப்பட்டு, உள்ளிருந்து அப்பாவின் குண்டுப் பேனா கீழே விழுந்தது. திருடன் எடுத்து அவர் கையில் கொடுக்க அவர் தன் சட்டைப்பைக்குள் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டார். திருடனின் மனைவி அவருக்கு ஓர் அலுமினியத் தட்டில் பழைய சோறும், பச்சை மிளகாயும் கொண்டு வந்து வைத்தாள். சண்முகநாதன் குடிசைக்கு வெளியே பார்த்தபோது மெதுவாக மழை தூற ஆரம்பித்திருந்தது.