18 பிப்ரவரி, 2013

வாசிப்பு


வாசிப்பு பழக்கம் நீண்ட நாள் கழித்து தற்போதுதான் கொஞ்சம் கை கூடியிருக்கிறது. தொலைக்காட்சியிலிருந்தும், குறிப்பாக  கிரிக்கெட்டிலிருந்தும்  வெளி  வருவது சிரமமாக இருப்பினும், ஒரு நாளைக்கு ஐம்பது பக்கங்களாவது வாசித்து விடுவது பழக்கமாகி விட்டது. பெரும்பாலும் நாவல்கள்தான்  வாசிக்கிறேன்.   இணையத்தில் வாசிக்கும் கட்டுரைகளைக் கணக்கில் கொள்ளுவதில்லை. இணையத்தில் தினமும் ஜெயமோகனின் தளத்துக்குச் செல்வது வாடிக்கையாகி விட்டது. தினமும் ஏதேனும் ஒரு நல்ல கட்டுரையாவது கொடுத்து விடுகிறார். அப்படியும் இல்லையெனில் அவரது தளத்தை மேய்ந்து பழைய கட்டுரைகளை வாசிக்கிறேன். பெரும்பாலும் இலக்கியக் கட்டுரைகள். எவ்வாறு வாசிக்க வேண்டும் என்றும், எவற்றை வாசிக்க வேண்டும் அவை ஆற்றுப்படுத்துகின்றன. அடுத்ததாக அடிக்கடிச் செல்லும் தளம் எஸ்.ராமகிருஷ்ணனுடையது. தவறாமல் சாரு நிவேதிதாவின் தளத்துக்கும் செல்கிறேன். வீண் வம்புக்கு ஆசைப்படும் மனத்தின் ரகசிய ஆசை கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்

ஆனால் இணைய வாசிப்பை விட புத்தக வாசிப்புதான் நிறைவாக இருக்கிறது. சமீபத்தில் தினமும் மதியமும், மாலையும்  புத்தகம்  வாசிப்பதை பழக்கமாகக் கைக்கொண்டிருக்கிறேன். வீட்டில் இனையைத்துக்குள் நுழைவதில்லை. என் மனைவிக்கு இதனால் பெரும் மகிழ்ச்சி. வாசித்த புத்தகங்கள் பற்றி இந்த தளத்தில் எழுதி வருகிறேன். ஒரு புத்தகத்தைப் பற்றிய வாசிப்பு அனுபவத்தை எழுத வேண்டுமென்ற எண்ணத்தோடு அதை வாசித்தால் வாசிப்பு தடை படுகிறது என்று புரிந்து கொண்டேன். எனவே வாசிக்கும் எல்லாப் புத்தகங்களையும் பற்றி எழுதத் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளேன். இது குறித்து என் நெருங்கிய நண்பர்கள் பலர் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடும்.

அப்படி சமீபத்தில் வாசித்து இன்னும் அனுபவத்தை எழுதாத நாவல்களில் ஒன்று ஜெயமோகனின்  விஷ்ணுபுரம். அற்புதமான நாவல் இந்திய தத்துவ தரிசனங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. வாசிக்கவும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதன் தத்துவ விவாதங்கள் எனக்கு விருப்பமானவை. ஆனாலும் இன்னொருமுறை வாசித்து விட்டு எழுதலாம் என்று இருக்கிறேன். அடுத்தது லைலா. இது ஜேன் அண்ட் மோட்டார் சைக்கிள் மெயன்ட்நன்ஸ் என்ற நாவலின் இரண்டாம் பகுதி. இதுவும் தத்துவ நாவல்தான். கதை பத்து பக்கம் தான். மற்றதெல்லாம் தத்துவம். ஒரு நாவலாக இது என்னைக் கவரவில்லை. தோஸ்தோயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் வாசித்து முடித்து விட்டேன். அருமையான நாவல். அது பற்றிய வாசிப்பனுபவம் விரைவிலேயே வெளிவரும். தற்போது வாசிப்பது யயாதி இரண்டாம் பாகம். வி.எஸ். காண்டேகர் ஒரு இதிகாச கிளைக்கதையை அருமையான உளவியல் நாடகமாக உருமாற்றியிருக்கிறார். மேலும் வாசிப்புக்காக காத்திருப்பவை சிக்மன்ட் பிராய்டை பிரதான  கதாபாத்திரமாகக் கொண்ட ஒரு நாவல், ஈக்கோ எழுதிய பூகோவின் தனி ஊசல், சார்லஸ் டிக்கன்சின் ஆலிவர் டிவிஸ்ட் முதலியன. வாசிப்பு பயணம் தடையற நிகழ இறையை வேண்டுகிறேன்.

மேலும் வாசிக்க