ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களது தர்மத்தின் மதிப்புதான் என்ன? என்ற சிறிய நூல் தர்மம் என்று நாம் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயத்தினுடய மதிப்பையும் பூரணமாக அறிந்து கொள்ள உதவுகிறது. தர்மம் என்ற சொல்லுக்குப் பெரும்பாலோர் தானம் செய்வது என்ற பொருளையே மனதில் கொள்கின்றனர். ஆனால் தர்மம் என்ற சொல்லுக்கு வாழ்க்கை நெறி என்பதே பொருளாகும். நமது வேதங்கள் சமுதாயத்தில் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று பல்வேறு நெறிகளை வகுத்துக் கொடுத்துள்ளன. அவ்வாறு தர்மத்தைப் பின்பற்றி வாழும் மனிதனின் மனம் சரியான திசையில் வளர்ச்சி அடைகின்றது. இதன் மூலம் வாழ்வின் சகல துன்பங்களிலிருந்தும் விடுபடுவதற்கான பாதையில் பயணிப்பதற்கான முழு தகுதியை அவன் அடைகிறான். எனவே இந்த உலக வாழ்க்கையில் நிம்மதியாகவும், ஆனந்தமாகவும் வாழ விரும்புபவர்களும், வாழ்வு கொடுக்கும் இன்பம், துன்பம் என்ற இரட்டைகளிலிருந்து விடுபட் விரும்புபவர்களும் தர்மம் என்றால் என்ன, அதை எவ்வாறு பின்பற்றுவது என்று தெளிவாக அறிந்து செயல்பட வேண்டும். இதை தெளிவாகச் சொல்வது மட்டுமல்ல, தர்மத்தைப் பின்பற்றுவதற்குத் தேவையான பண்புகளை விளக்கி, அப்பண்புகளை நம் மயமாகவே ஆக்கிக் கொள்வதற்கான யுக்திகளையும் அளிக்கிறது இந்த நூல்.
தர்ம நெறிப்படி வாழ்வதன் முக்கிய நோக்கம் ஒருவனை உள்ளத்தூய்மை பெறச் செய்வதே. இதனால் அவன் மனம் ஆத்ம ஞானம் பெறுவதற்கு ஏற்ற பாத்திரமாகிறது. ஆத்ம ஞானத்தை அடைவதற்கான வழிகளைப் பற்றி அவர் விளக்கியுள்ள மற்றொரு நூல் சாதனமும், சாத்யமும். இந்நூல் ஒரு மனிதனின் இறுதி லட்சியம் என்ன என்பது பற்றியும், அதை அடைவதற்கான பாதையைப் பற்றியும் பேசுகிறது.
விலங்குகள் தங்கள் இயல்புப்படியே வாழ்கின்றன. அதுபோலன்றி மனிதனுக்கு எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவன் செயல்பாடுகளுக்கான அளவுகோல்கள் கொடுக்கப்படாவிட்டால் அவன் செயல்கள் அழிவுக்கு வழிவகுத்து விடும். அந்த அளவுகோல்களே தர்மம் எனப்படும்
பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தெய்வ சம்பத் என்ற தலைப்பில் இருபது பண்புகளைப் பட்டியலிடுகிறார். அப்பண்புகள் அனைத்தும் இந்நூலில் விளக்கப்பட்டு, அவற்றின் உட்கூறுகள் பற்றிய விசாரமும் நடத்தப்படுகின்றது. கீதையில் கிருஷ்ணர் கூறும் அப்பண்புகளாவன; தற்பெருமையின்மை, டம்பமின்மை, அஹிம்சை, பொறூமை, நேர்மை, குருவுக்குப் பணிவிடை, தூய்மை, விடாமுயற்சி, தன்னடக்கம், இந்திரிய விஷயங்களில் ஆசையின்மை, அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி இவற்றிலுள்ள தோஷத்தைக் கண்டறிதல், தீமைகளைச் சிந்தித்தல், பற்றின்மை, இது எனக்கு சொந்தம் என்ற புத்தியின்மை, மக்கள், மனைவி, வீடு இவற்றில் அபிமானமின்மை, இஷ்டமானவை, இஷ்டமில்லாதவை இவற்றில் சமமான சித்தத்தைப் பெற்றிருத்தல், என்னிடத்தில் மாறாததும், என்னைத் தன்னைவிட வேறாகக் கருதாததுமான பக்தி, தனித்த இடத்தை நாடல், ஜனங்களின் கூட்டத்தில் நாட்டமின்மை, ஆத்ம விஷ்யமான ஞானத்தில் எப்பொழுதும் ஈடுபட்டிருத்தல் தத்துவ ஞானத்தின் பலனான மோக்ஷத்தை எப்பொழுதும் மனதில் நிறுத்தல் ஆகியனவாகும். இவற்றை ஞானம் என்றே கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். பொய் சொல்லக்கூடாது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏன் பொய் சொல்லக்கூடாது என்று யாராலும் நாம் மனமார ஏற்றுக்கொள்ளும்படி விளக்க முடிவதில்லை. பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தி விடும், பிறருக்கு அதனால் பாதிப்பு என்று விளக்கங்கள் வருகின்றனவே தவிர, உலகத்தில் பொய் சொல்லி நன்றாக வாழ்கிறவர்களையும் நாம் பார்க்க நேர்வதால் நம்மால் பொய் சொல்லக்கூடாது என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆனால் இந்நூலில் ஸ்வாமிஜி ஒவ்வொரு பண்பையும் நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கு அற்புதமான விவாதங்களை முன் வைத்து, நம்மைத் தெளிவு பெறச் செய்கிறார்.