26 ஜூன், 2010

கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம்


   உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முதல் கவியரங்கத்தைப் பார்த்தேன். தலைமை கவிஞர் வைரமுத்து ; துவக்கி வைத்தவர் ஈரோடு தமிழன்பன். எல்லாரும் கொடுக்கப்பட்ட நேரத்தில் முதல் பத்துநிமிடங்களுக்கு கலைஞர் மேல் வாழ்த்து மழையாகப் பொழிந்து கொண்டிருக்க, அவர் எந்த உணர்ச்சியும் காட்டாமல் விட்டேத்தியாக அமர்ந்திருந்தார். கூட்டம் மட்டும் அவ்வப்போது பலவீனமாகக் கைதட்டியது. தமிழன்பன் படிமங்களில் விளையாடி ரத்தம், சதை, சிங்கங்கள் என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருந்தபோது பலத்த அமைதி நிலவியது. தான் சரியாகத்தான் சொல்கிறோமா என்று வாசித்த வரிகளையே திரும்ப வாசித்துக் காட்டினார். வைரமுத்து தமிழ்த்தாய் கலைஞர் பேனாவில் மைதொட்டு கண்களுக்கு எழுதிக் கொள்ளப் பிரியப்படுவதாய்ச் சொன்னார்.
        கவிஞர்கள் விவேகாவும், நா. முத்துக் குமாரும் கவிதை வாசித்தபோது, திரைப்படப் பாடலாசிரியர் என்ற ஒரு தகுதி மட்டும் கவியரங்கத்தில் கவிதை படிக்கப் போதாது என்று தோன்றியது. விவேகா கலைஞரை சாஸ்திரி, மேஸ்திரி என்றெல்லாம் புகழ்ந்து கொண்டிருந்தார். மாத்திரைகள் கொண்டிருப்பதால் தமிழ் ஒரு மருத்துவம் என்ற சகிக்க முடியாத உவமையை இருவருமே சொன்னார்கள். கிச்சு கிச்சு மூட்டுவதற்காகவே எழுதப் பட்டிருந்த கவிதை வரிகளுக்குச் சிரிக்கவோ, கைதட்டவோ நேரமின்றி மறத்தமிழர்கள் தங்கள் பார்வையில் கேமரா வரும் போதெல்லாம் எழுந்து நின்று கையசைத்துக் கொண்டிருந்தார்கள்.
        கலைஞரின் பேத்தி கயல்விழி வெங்கடேஷும் கவிதை படித்தார். அவர் வாசித்த அழகைப் பார்த்தால் சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் பிறந்து வளர்ந்திருப்பார் என்று தோன்றியது. மா.....................றி விடும், கலைங்கர் அவர்கல் ச்செம்மொழியின் காவழர் என்றெல்லாம் முழங்கியபோது செம்மொழி சீக்கிரம் செத்துவிடும் என்று தோன்றியது. ஒரு தலைமுறைத் தமிழர்களுக்கு தமிழ் உச்சரிப்பே சரியாக வரவில்லை என்று  நினைக்கும்போது யார் மீது கோபப் படுவதென்றே தெரியவில்லை. ழ மட்டும் ஒழுங்காக உச்சரித்தால் மட்டும் போதும் யாராவது சொல்லியிருப்பார்கள் போல. ள,ண,ன உச்சரிப்புகளும் முக்கியமானவை. baல்லி, guதிரை, baயன்படுதல் என்றெல்லாம் பேசுகிறார்கள். திரும்பவும் முனைவர் மா. நன்னன் வந்து தமிழ் உச்சரிப்பு சொல்லிக் கொடுத்தால் பரவாயில்லை.
ஆறுதலாக தமிழச்சி தங்கபாண்டியனும், மரபின் மைந்தன் முத்தையாவும் (முத்தையா என்று பெயர் போடப்பட்டது). சுத்தமாகத் தமிழை உச்சரித்தார்கள். முத்தையாவின் மரபு சார்ந்த கவிதை கேட்கச் சுகமாக இருந்தது. மற்றவர்கள் புதுக்கவிதை என்ற பெயரில் அடுக்கு மொழியில் கட்டுரை வாசித்துக் கொண்டிருந்தார்கள். திரைப்பாடல்களும், கவியரங்கக் கவிதைகளும் கவிதைகளில் சேர்த்தி கிடையாது என்று சுஜாதா சொன்னது ஞாபகம் வந்தது.
        ஒவ்வொரு கவிஞருக்குமே தனித்தனி தலைப்பு கொடுக்கப் பட்டிருந்தாலும் எல்லாமே ஒரே மாதிரி இருந்தன. குறிப்பாகத் தலைப்பு சம்பந்தமாகவோ, தமிழ் சம்பந்தமாகவோ எதுவும் இல்லை. எல்லாருக்குமே கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. வைரமுத்து கலைஞர் ஆறாவது முறையாக தமிழக முதல்வராக வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். திருவள்ளுவர் தமிழ் கையில் வந்தால் அதிகாரம் படைப்பார் என்றும், கலைஞர் அதிகாரம் கையில் வந்தால் தமிழை உயர்த்துவார் என்றும் சொன்னார் இன்னொரு கவிஞர்.
        மாலை கருத்தரங்கத்திலும் வாழ்த்து மழைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. நரம்பு புடைக்க, உணர்ச்சி வசப்பட்டுப் பாராட்டிக் கொண்டிருந்த லியாகத் அலிகானை இடைமறித்து, ‘கருத்தரங்கத் தலைவரே என்று அழைத்தாலே மகிழ்வேன். எல்லாக் கட்சித் தலைவர்களும் கூடி இருக்கும் நேரத்தில் புகழ்மழை தேவையில்லை’ என்றார் கலைஞர். அதன் பின்னர்தான் உன்மத்த நிலையிலிருந்து இறங்கி வந்தனர் பேச்சாளர்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் ஒருவர் எல்லாரும் தமிழில் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். எங்கே இதைச் சட்டமாக இயற்றிவிடப் போகிறார்களோ என்று பயமாக இருந்தது. அப்புறம் நான், துணைமுதலமைச்சர், சமீபத்தில் கழகத்தில் இணந்த குஷ்பூ எல்லாருக்கும் இக்கட்டான நிலைமையாகி விடும்.
        கலைஞர் இறுதியுரையில் இனி செயின்ட் ஜார்ஜ் கோட்டை செம்மொழி அலுவலகமாகச் செயல்படும் என்று அறிவித்தபோது அரங்கத்தில் மகிழ்ச்சிக் கரவொலி. எல்லார் பேசியதும் கேட்டுக் கொண்டேன். என் மனதில் உள்ள திட்டங்களை விழாவின் இறுதி நாளில் நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் செம்மொழித் தபால் தலையை வெளியிட்டபின் அறிவிப்பேன் என்றார். தமிழ் வலைப் பதிவர்களுக்கு ஏதாவது மானியம் அறிவிப்பாரா என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். நல்ல திட்டங்கள் வர வேண்டும். தமிழ் நூல்களை வாசிக்கும் இயக்கம் வரவேண்டும். இரண்டுமணி நேரம் ஓடும் திரைப்படத்துக்கு இருநூறு ரூபாய் செலவழித்து விட்டு, இடைவேளையில் குளிர்பானத்துக்கும், பாப்கார்னுக்கும் நூறு ரூபாய் செலவழிக்கத் தயாராயிருக்கும் தமிழனை காசு கொடுத்துத் தமிழ் புத்தகங்கள் வாங்கிப் படிக்க ஊக்கமளிக்கும் திட்டங்கள் வந்தால் நல்லது.
        இதை எழுதிமுடித்த கையோடு வாலி தலைமையிலான கவியரங்கத்தைப் பார்க்க நேர்ந்தது. கடைசியாகக் கவிஞர்கள் பழனிபாரதியும், பா. விஜயும் பேசினார்கள். வழக்கம் போல் முதல்வர் புராணமாக இருந்தாலும் அழகான உச்சரிப்பும், ஆச்சரியமான உவமைகளும் உள்ளடக்கின ரசிக்கத்தக்க கவிப்பொழிவு. கலைஞரும் கேட்டு மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்.
        செம்மொழி விழாவில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் சரவணபவன் முப்பது ரூபாய்க்குத் தரும் சாப்பாடு. தண்ணீர் பாட்டிலோடு திருப்தியான சாப்பாடு தருகிறார்கள். வீட்டில் சமைத்து வைத்திருந்தாலும் டேஸ்ட் பார்க்க வந்தேன் என்றார்கள் கோவைக்காரர்கள்.

மேலும் வாசிக்க