17 நவம்பர், 2025

வானப்ரஸ்தம் - சிறுகதை



காருக்குள் ஏறி அமர்ந்ததும் சம்யுக்தாவுக்கு முதலில் தோன்றிய விஷயம், அடுத்த பதினோரு மணி நேரத்துக்கு தன்னுடன் பயணிக்கப் போகும் அம்மா என்னவெல்லாம் பேசப்போகிறாள் என்பதுதான். வண்டியைத் துவக்கிவிட்டு, பக்கவாட்டில் திரும்பி அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். அம்மா சம்பங்கி நிறச் சேலையும், நெற்றியில் விபூதியும், கூந்தலில் மல்லிகையும் அணிந்து பாந்தமாக அமர்ந்திருந்தாள். முகத்தில் எப்போதும் தவழும் புன்னகையில் பூரித்த கன்னங்கள் மின்னின. தலை நரையைக் கணக்கில் கொள்ளாவிடில் அக்கா என்று சொன்னால் நம்பிவிடுவார்கள்.

“என் பொண்ணு கார் ஓட்டறாள்ங்கறதை நினைத்தால் எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?” என்றாள் அம்மா.

“தேவையான மருந்தெல்லாம் எடுத்துட்டியா? ஒரு வாரம் ஆசிரமத்துல இருக்கப்போறே. பக்கத்துல மருந்துக்கடையெல்லாம் இருக்கோ என்னமோ.”

“அதெல்லாம் எடுத்துட்டேன். அங்கிருந்து பத்து மைல்ல விண்ட்கேப்புன்னு ஒரு சின்ன ஊர். அங்க எல்லா கடையும் இருக்கு. நெட்ல பார்த்தேன். எதாவது வேணும்னா நீ போய் வாங்கிட்டு வர மாட்டியா என்ன?”

கார் அபார்ட்மெண்ட் வளாகத்தைத் தாண்டி, விட்ச்மென் தெருவுக்குள் நுழைந்து, மாகாணங்களை இணைக்கும் ஐ-95 சாலைக்குள் நுழையும் வரை அம்மா வேறு எதுவும் பேசவில்லை. சம்யுக்தா காரை தானியக்க மோடில் போட்டு விட்டு இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தபோது அம்மா கேட்டாள். “சம்யு, நான் ஒன்னு சொல்லட்டுமா?”

“அம்மா, கல்யாணம் பத்தி தயவு செஞ்சு பேச வேண்டாம்.”

அம்மா சிரித்தாள். “நான் எதுக்குடி உங்கிட்ட அது பத்தி பேசப்போறேன்? உனக்கு என்ன விருப்பமோ அதுமாதிரி பண்ணிக்கோ.”

சம்யுக்தாவுக்கு வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்படி அம்மா சொல்லியிருப்பாளா? ஒருவேளை அப்பா இல்லாமல் ரொம்பவும் விடுதலையாக உணர்கிறாளோ? அல்லது எல்லாரையும் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறாளா? தன்னுடைய யூகம் சரிதானா?

வெயிலேறி விண்ட்ஷீல்டின் வழியே நெஞ்சைச் சுட்டது. மூன்று வழிச்சாலையில் கார்களும், டிரக்குகளும் ஒரே திசை நோக்கி விரைந்து கொண்டிருந்தன. அவற்றின் இரைச்சல் காதுகளில் ரீங்கரித்தபடியே இருந்தது. அம்மாவின் பூவாசத்தையும் மீறி வெளியிலிருந்து மெலிதான டீசல் வாசம்.

“நீயும் இந்த உபநிஷத் வகுப்பில கலந்துக்கலாமில்லையா?” என்றாள் அம்மா.

“அம்மா, இந்தப் ப்ராஜக்ட் இன்னும் ஒரு மாதத்துல முடியுது. நான் வேலை செய்தே ஆகணும். அங்க வைஃபை கிடைக்கும்னு நீ சொன்னதாலதான் நான் உன் கூடவே தங்க ஒத்துகிட்டேன். ஏன், தனியா கலந்துக்கறதுக்கு கூச்சமா இருக்கா?”

அம்மா சிரித்தாள். “கூச்சமா? எனக்கா? அச்சம், தயக்கம் இவைகளிலிருந்து நான் எப்போதோ விடுதலை அடைந்து விட்டேன்,” என்றாள் ஆங்கிலத்தில். அம்மாவிடமிருந்து இன்னொரு ஆச்சரியம். கோயம்புத்தூரில் இருந்தவரை சம்யுக்தா அவள் ஆங்கிலம் பேசிக் கேட்டதேயில்லை. 

அம்மா தொடர்ந்தாள். “நான் அடைந்த விடுதலைக்கான வாய்ப்பு உனக்கும் உண்டு, சம்யுக்தா. அதை நீயும் பற்றிக்கொள்ள வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறேன்.”

“என்ன சொல்லப் போகிறாய்? உன்னை மாதிரி கீதையும், உபநிஷத்தும் கற்க வேண்டுமென்றா?” என்றாள் அவளும், ஆங்கிலத்தில். சொன்னபிறகு துணுக்குற்றாள். ‘உனக்கு வயதாகிக் கொண்டே போகிறது. அப்பா இல்லாமல் தனிமையில் வாழ்கிறாய். உனக்கு வேண்டுமானால் இந்த சாஸ்திர படிப்பு சரியாக இருக்கலாம். நான் வாழ்வை துடிப்புடன் வாழ்பவள். எனக்கு எதற்கு இந்த வெற்று வேதாந்தம்?’ என்பதான தொனி அந்தக் கேள்வியில் இருந்ததை உணர்ந்தாள்.

“அதுக்கெல்லாம் நேரம் இல்லைம்மா. இந்த ப்ராஜக்ட் முடிந்ததும் அடுத்த கம்பெனி அமைவதற்காகப் போராட வேண்டும். அடுத்த வருடம் விசா புதுப்பிக்க வேண்டியிருக்கிறது. கிரீன்கார்டுக்கு விண்ணப்பிக்கலாமா, வேண்டாமா என்று இரட்டை மனதாக இருக்கிறது.” 

“அசோச்யான் அன்வ சோசஷ்த்வம்,” என்றாள் அம்மா.

“ம்?”

“ஒண்ணுமில்லை. கீதா வாக்யம்.”

 * * *

இரண்டு மாதங்களுக்கு முன் அலைபேசியின் மறுமுனையில் வேறு குரல் கேட்டபோதே சம்யுக்தாவுக்கு வியப்பாக இருந்தது. இந்தியாவில் அப்போது காலை ஏழு மணி. இந்த நேரத்தில் அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாள்? “ஓ, சந்தான லட்சுமியா? அவ இப்ப கிளாஸ்ல இருக்காளே. இதோ இப்ப வரச் சொல்றேன்,” என்றது அந்தக் குரல். அம்மா அலைபேசி வைத்துக் கொள்வதில்லை. அப்பா இருந்தபோதிலிருந்து அப்படித்தான். இப்போது முதியோர் இல்லத் தொலைபேசிக்கு அழைத்துதான் அவளிடம் பேச வேண்டும். அப்பா போய் மூன்றே மாதங்களில் முதியோர் இல்லம் ஒன்றில் அவளை இணைத்து விடச் சொல்லி அம்மாவே கேட்டுக் கொண்டாள். அமெரிக்காவில் இருந்து தான் திரும்பி வந்து விடுவதாகச் சொன்னதை அவள் ஏற்கவில்லை.  சம்யுக்தா முதலில் தயங்கினாலும் பின்னர் அவளுக்கும் அந்த முடிவே சரியென்று பட்டது. அதற்குப் பிறகுதான் அம்மாவிடம் மாற்றங்களைக் காணத்துவங்கினாள். 

அலைபேசியில் அம்மாவின் உற்சாகமான குரலைக் கேட்டதும் சம்யுக்தாவின் மனதில் அந்த மெல்லிய கவலை மீண்டும் தொற்றிக் கொண்டது. “வாரம் ஒருமுறை கீதை வகுப்பு. சுவாமிஜி சொல்றத அப்படியே குறிப்பெடுக்கறது, அதைச் சரிபார்க்கறதுன்னு பொழுது போறதே தெரியலை. ஸ்ரவண, மனன, நிதித்யாசனத்துல வாழ்க்கை அழகா ஓடுது. என்னைப் பத்தி நீ ஏன் கவலைப்படறே?” என்பாள். சம்யுக்தா அமெரிக்கா போன புதிதில் அம்மா மிகுந்த பதற்றத்தோடேயிருந்தாள். “பார்த்து பத்திரமா இருந்துக்கடி. உங்க அப்பா பிடிவாதத்துனாலதான் உன்னை அங்க அனுப்ப சம்மதிச்சேன். உன்னை அங்க விட்டுட்டு எனக்கு மனசே ஓட மாட்டேங்குது,” என்பாள். ஆனால் இப்போது அவளது கவலைகள் அடியோடு பறந்து விட்டன போலிருந்தது. “ஆறு எங்க போகணுமோ அங்கதானே போயிட்டுருக்கு. நம்ம வேலை ஒழுங்கா படகை ஓட்டுறதுதான்,” என்பாள். ஒவ்வொரு அழைப்பிலும் அவளிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்களை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தபடியே இருந்தாள் சம்யுக்தா. பேச்சில் இரண்டு நிமிடத்துக்கொருமுறை, சுவாமிஜியோ, பகவானோ, பகவத்கீதையோ மேற்கோள்களாக வந்து விழும். ஆன்மிகவாதிகளுக்கு அடிமையாகும் கும்பலில் அம்மாவும் ஒருத்தியாகி விட்டாளோ என்று தோன்றியது அவளுக்கு. 

ஆரம்பத்தில், ஒருவேளை அப்பாவுடன் வாழ்ந்தபோது இருந்த குடும்ப பாரம் இறங்கி விட்டதால்தான் இவ்வளவு இலகுவாகி விட்டாள் என்று   நினைத்திருந்தாள். ஆனால் நாள் செல்லச் செல்ல உரையாடல்களில் அவள் காட்டிய உற்சாகம், அவள் நடவடிக்கைகளில் ஏற்பட்டிருந்த துள்ளலும், துடிப்பும் வழக்கத்துக்குச் சற்று அதீதமாக இருந்ததாகப் பட்டது. எதெற்கெடுத்தாலும் பெருத்த சப்தத்தோடு அவள் சிரித்தது வினோதமாக இருந்தது. முதியோர் இல்லக் காப்பாளரிடம் கேட்டபோது, உணவருந்துவதற்கும், கீதை வகுப்புகளில் கலந்து கொள்வதற்கும் தவிர அவள் அறையை விட்டுப் பெரும்பாலும் வெளியே வருவதில்லை என்று சொன்னார். ஒருமுறை முதியோர் இல்லத்தில் இருந்து அம்மாவின் சினேகிதி விஜயராணி அழைத்திருந்தாள். “ என்னடி, உங்கம்மா வேப்பமரத்தடியில் மணிக்கணக்கில உட்கார்ந்திருக்கா! ஒரு வார்த்தைப் பேச்சில்லை. நான் போய் பக்கத்துல உட்கார்ந்ததை கண்டுக்கவேயில்லை. அப்படியே வெற்றுப்பார்வைப் பார்த்துட்டு உட்கார்ந்திருக்கா. முகத்தில புன்னகை மட்டும் மாறாம அப்படியே இருக்கு.”

ஒரு வேளை தன் அம்மாவுக்கு மெல்ல மெல்ல மனநிலை பிறழ்ந்து கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் தோன்றியது சம்யுக்தாவுக்கு. “அம்மா உலகின் மீதான பிடிப்பை மெல்ல மெல்ல இழந்துகொண்டிருக்கிறாளோ என்று அச்சமாக இருக்கிறது, நித்யா,” என்றாள் தன் அறைத்தோழியிடம். “நீ ஏன் உன் அம்மாவை இங்கு அழைத்துக் கொண்டு வரக்கூடாது? உனக்கும் அவர்களோடு நேரம் செலவழிக்க முடியும். அவர்களுக்கும் இடமாற்றம் ஆறுதலையும், புத்துணர்ச்சியையும் தரலாம் அல்லவா!”  என்று ஆலோசனை சொன்னாள் நித்யா.

அம்மாவைக் கூட்டி வந்து சில மாதங்கள் தன்னுடன் வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்தாள் சம்யுக்தா. அவர்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் குடியிருப்பின் வெளியில் திரியும் வீடற்றவர்களான சில ஆஃப்ரோ அமெரிக்கர்களை நினைவு கூர்ந்தாள். ஒரு நாள் வேலையிலிருந்து காரில் திரும்பும்போது குடியிருப்புக்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்தாள். அப்போது அவர்களில் ஒருவன் அவள் காரை நோக்கி வேகமாக வந்து சன்னல் கண்ணாடியைத் தட்டி காசு கேட்டான். “கேன் யு ஸ்பேர் எ டாலர் ஃபார் யுவர் ப்ரதர்?” நெஞ்சில் அறையும் உரத்த குரல். அன்று அவள் இதயத்தில் ஏற்பட்ட அதிர்வு அவளுக்கு இன்னமும் நினைவிருக்கிறது. 

அவர்களது அபார்ட்மெண்ட் குடியிருப்பின் வெளிக்கதவு இயங்குவது நின்று வெகு நாளாயிற்று. அது இருபத்துநாலு மணி நேரமும்  திறந்தே கிடந்தது. ஒருமுறை ஒரு வீடற்ற கருப்பன் குடியிருப்புக்குள் நுழைந்து யாரோ ஒருவருடைய அபார்ட்மெண்ட் கதவைத் தடதடவென்று தட்டி விட்டு ஓடி விட்டான். தன் கதவு எப்போது தட்டப்படுமோ என்று பயந்தபடியே இருந்தாள் சம்யுக்தா. இந்த மாதிரி சூழ்நிலையில் இங்கு வந்து வாழ அம்மா விரும்புவாளா? மேலும் இங்கு அவள் பழகுவதற்காக இந்தியர்களும் யாரும் வசிக்கவில்லை. இந்தியர்களைக் காண வேண்டுமெனில் சார்ல்ஸ்டன் கோயிலுக்குச் சென்றால்தான் உண்டு. அம்மா இப்போதிருக்கும் நிலையில் வேறு வினையே வேண்டாம். 

அந்தக் கோடையில் அவளுக்கு இரு வார விடுமுறை வரும். அப்போது நண்பர்களுடன் மயாமி கடற்கரை செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தாள். அம்மாவையும் அமெரிக்கா வரவழைத்து ஃப்ளோரிடா கூட்டிச் சென்று டிஸ்னிவோர்ல்ட், நாசா போன்ற இடங்களை சுற்றிக் காட்டினால் என்ன என்று தோன்றியது அவளுக்கு.

அமெரிக்கா வந்திறங்கிய மறுநாளே அம்மா சொன்னாள். “பென்ஸில்வேனியாவில் அக்ஷரவித்யா குருகுலம் இருக்கிறது. அங்கு ஒரு வார உபநிஷத் வகுப்பு. அதற்கு என்னைக் கூட்டிப் போவாயா?”

“அமெரிக்கா வந்து உண்மையான அமெரிக்க வாழ்க்கையை சுத்திப் பாக்காம, இங்கேயும் அதே வேதாந்த புராணமா?” என்றாள் சம்யுக்தா.

“வெறும் கட்டிடங்களையும், பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் காண்பதில் எனக்கு ஆர்வமில்லை,” என்றாள் அம்மா.

நான் வீட்டிலேயே இருந்து கொள்கிறேன், நீ வேண்டுமானால் சுற்றுலா சென்று வா என்றாள் அம்மா. சம்யுக்தா சற்றே எரிச்சலடைந்தாள். ஆனாலும் வேறு வழியின்றி நித்யாவையும், நண்பர்களையும் ஃப்ளோரிடா போகச் சொல்லி விட்டு, அம்மா சொன்ன வகுப்புக்கு முன்பதிவு செய்தாள். எடுத்திருந்த விடுப்பை ரத்து செய்து வீட்டிலிருந்து பணிசெய்வதற்கு அனுமதி வாங்கிக் கொண்டாள். குருகுலம் பென்ஸில்வேனியாவின் பொகோனோ மலைத்தொடர்களில் அமைந்திருப்பதாக இணையம் சொன்னது. அவள் இதுவரை மலைப்பாதையில் கார் ஓட்டியதில்லை.

“எனக்கு இதிலெல்லாம் கொஞ்சம் கூட விருப்பமேயில்லை. உன் கூட கொஞ்சநாள் இருக்க முடியும்கறதுக்காகத்தான் வர்றேன்,” என்றாள்.

“ஏன் விருப்பமில்லை?”

“இவையெல்லாம் பழைய சாஸ்திரங்கள். மாணவர்களைத் தங்களுடைய ஆதிக்கத்துலயே வைச்சுக்கறதுக்காக ஆன்மிகத் தலைவர்கள் பயன்படுத்தும் கருவிகள்.”

“அப்படி எந்த புத்தகத்துல போட்டிருக்கு?”

“ம்மா! எனக்குன்னு சொந்த புத்தி இருக்கு.”

“அதைப் பயன்படுத்தினால் வீடுபேறு அடைய முடியும்னுதான் உபநிஷத் சொல்லுது.”

அதற்குமேல் அம்மாவிடம் அவள் வாதாட விரும்பவில்லை. வெற்று வாக்கியங்களோடு போராடிக் கொண்டிருப்பதால்தான் அவள் தன் அறைக்குள்ளேயே சிறைப்பட்டுக் கிடப்பதாகத் தோன்றியது சம்யுக்தாவுக்கு.

* * *

“என்னடி ரோடு நீளமா ஒரே மாதிரி போயிட்டிருக்கு? காரும், டிரக்குமா ஒரே இரைச்சல். இப்படியேதான் முழுப்பயணமும் இருக்குமா?”

சம்யுக்தா ஆர்வமானாள். “அம்மா, பேக் ரோடில் போலாமா? மலைப்பாதை வழியா இரண்டு பக்கமும் காடும், வயல்வெளிகளுமா இருக்கும்.”

அம்மா உற்சாகமாகத் தலையாட்டினாள். சம்யுக்தா அடுத்த எக்ஸிட்டில் காரை வெளியேற்றி பின்பக்கச் சாலைகளுக்குள் நுழைந்தாள்.

வண்டி ஒரு மலைக்கிராமத்தில் நுழைந்திருந்தது. நெடிதுயர்ந்த மரங்களுடன் கூடிய அடர்வனம் ஒருபுறம். கச்சிதமாக வெட்டப்பட்ட புல்வெளிகளும், சிறு முகடுகளின் சிகரத்தில் பதிக்கப்பட்ட சிறுசிறு மரவீடுகளும் மறுபுறம். வாகன இரைச்சல்கள் தேய்ந்து விட்டன. அதை ஒரு பறவையின் கூச்சல் பதிலீடு செய்திருந்தது. அது கூட ஒரு வினாடி கழித்து மலைக்காற்றில் கரைந்து விட்டது. பச்சைக்கம்பளத்தில் உருளும் கருப்பு ரத்தினங்கள் மாதிரி வயல்வெளியில் ஆங்காங்கே மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. பிரம்மாண்ட உருளைகளாய் அறுவடை செய்த வைக்கோற்புற்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. மலைப்பாதையில் ஜூலை மாதத்து சூரியனின் உக்கிரம் சற்று தணிந்திருந்ததாகப் பட்டது. சம்யுக்தா சாளரக் கண்ணாடியைக் கீழிறக்கினாள். சிலுசிலுவென்று மலைக்காற்று உள்ளே புகுந்தது. சம்யுக்தாவின் புறங்கைகளில் மயிர்க்கால்கள் எழுந்து நின்றன. இடதுபுறம் இருந்த பைன் மரச்செறிவிலிருந்து நாசியைத் துளைக்கும் இனிய மணம் எழுந்தது. சம்யுக்தாவின் இதழ்களில் அவளறியாமல் ஒரு புன்னகை பூத்தது.

ஒரு பதினைந்து நிமிட பயணத்துக்குப் பிறகு ஜிபிஎஸ்ஸின் சொல்படி ஒரு குறுகிய சாலையில் வண்டியைத் திருப்பினாள். சட்டென்று வயல்களும், வீடுகளும் மறைந்து இரு புறமும் மரங்கள் அடர்ந்த காட்டுப்பாதை குறுகலாகவும், வளைந்தும் நெளிந்தும் சென்று கொண்டிருந்தது. வந்த வழியே திரும்பலாமா என்று ஒரு கணம் யோசித்தாள். ஆனால் சுழற்சாலைகளில் காரை வளைத்துத் திருப்பிச் செல்லும் சாகசம் பிடித்திருந்தது. திரும்பி அம்மாவைப் பார்த்தாள். அவள் முகத்தில் எப்போதும் மாறாதிருந்த புன்னகை மேலும் மலர்ந்திருந்தது. காரைப் புதிய உற்சாகத்துடன் செலுத்தினாள்.

சில நிமிடங்கள் கழித்துதான் கவனித்தாள். அவளது அலைபேசியில் ஜிபிஎஸ் உறைந்திருந்தது. சிக்னல் சுத்தமாகக் கிடைக்கவில்லை. சம்யுக்தாவுக்கு சற்றே வயிறு கலங்கி எதுக்களித்துக் கொண்டு வந்தது. இப்போது மலைகளினூடே செல்லும் மண்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இருபுறமும் அலையலையாக, மடிந்து கிடந்தன மலைகள். திறந்திருந்த சன்னலினூடாக ஒற்றைப் பறவையின் கேவலொன்று அவர்களை வந்தடைந்தது. அம்மாவின் முகத்தில் சின்ன இருள் படர்ந்திருப்பதைப் பார்த்தாள்.

“வாந்தி வர்ற மாதிரி இருக்குடி.”

காரை மலைப்பாதையின் ஓரமாக நிறுத்தினாள். அம்மா இறங்கி சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் போனாள். அந்தப்புறம் புல்வெளி ஒரு மெல்லிய சரிவாகக் கீழறங்கியது. அங்கிருந்து இறங்கி நடந்து காட்டுக்குள் போய் விட முடியும் என்பது போல. அம்மா முந்தானையை இடுப்பில் இறுக்கிக் கொண்டு புல்வெளியில் அமர்ந்தாள். சம்யுக்தா காரைப் பூட்டி விட்டு அவளை நோக்கிச் சென்றாள். அலைபேசியை உயர்த்தி, உயர்த்திப் பிடித்து அலைவரிசை கிடைக்கிறதா என்று பார்த்தபடியே நடந்தாள். அம்மாவின் அருகில் அமர்ந்தாள். அங்கே இருந்த மனித ஜீவன்கள் அவர்கள் இரண்டு பேர்தான். அவர்களைத் தவிர அங்கிருந்த உயிர்கள் மரங்களும், காட்டுச்செடிகளும், கொடிகளும்தான் என்று அவளுக்குத் தோன்றியது.

அம்மா மூச்சை இழுத்து மலைக்காற்றால் நுரையீரலை நிரப்பினாள். “இப்ப பரவாயில்லடி,” என்றாள்.

சம்யுக்தாவுக்கும் நெஞ்சு எதுக்களித்தது சற்றே சமநிலைக்கு வந்த மாதிரி இருந்தது.

 “அங்கே பார். சட்டென்று பார்த்தால் இந்த மலைகள், இந்த வானம், மரம் செடி கொடிகள், என் இந்த உடல் எல்லாமே என்னால் நிறைந்திருப்பதாகவே தோன்றுகிறது. இதைத்தானே ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் என்று உபநிஷத் சொல்கிறது!”

“சரியான பாதையில்தான் போய்ட்டிருக்கமான்னு சந்தேகமா இருக்கும்மா,” என்றாள் சம்யுக்தா, அலைபேசியிலிருந்து கண்களை எடுக்காமலேயே.

சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்கள். பக்கவாட்டில் திரும்பி அம்மாவின் தலைக்குப் பின்னால் மடிந்து கிடந்த மலைத்தொடர்களைப் பார்த்தாள். ஒவ்வொரு சுருளும், சலனமற்ற பச்சை அலைபோல, நிலத்தின் மீது மெதுவாக உருளும் பாம்பைப் போல தோன்றியது.  இருபுறமும் உயர்ந்து, பின்னால் மறைந்து, மீண்டும் தோன்றும் அந்த மடிப்புகள், இயற்கையின் ஒரு மௌன இசைக்கோவையைப் போல இருந்தன. அம்மா அந்த இசையில் கரைந்தவளைப் போல அமர்ந்திருந்தாள். மலைக்காற்று அவர்களைத் தழுவிக் கொண்டிருந்தது. ஈரமண்ணும், மட்கும் இலைகளும் கலந்த மெல்லிய வாசனை. வெயில் சற்றும் உறைக்கவில்லை. பக்கத்திலிருந்த மேப்பிள் மரத்தின் கிளைகளினூடே சூரிய ஒளி ஊடுருவி அதன் இலைகளைப் பொன்னிறத்தில் ஒளிரச் செய்து கொண்டிருந்தது. தொலைதூரத்தில் ஏதோ ஒரு மலையிலிருந்து பறவையின் கூக்குரல் எழுந்து எதிரொலித்தது. 

அம்மா அப்படியே இயற்கைக்குள் மூழ்கி விட்டது போலிருந்தது. 

சம்யுக்தாவுக்கு வழி தவறி வந்திருக்கிறோமோ என்ற பதற்றம் அடங்கவேயில்லை. அப்போது பின்னாலிருந்து ஏதோ அசையும் சப்தம் கேட்டது.

சம்யுக்தாவுக்கு நெஞ்சில் ஏதோ நிரடியது. மெல்லத் தலையைத் திருப்பினாள். பக்கவாட்டுப் பார்வையில் அவளுக்கு நான்கடி தள்ளி ஒரு கரிய உருவம் நின்றிருப்பது தெரிந்தது. அது ஒரு கரடி.

மெல்லக் கையை நீட்டி அம்மாவின் தொடையைத் தொட்டு கவனத்தை ஈர்த்தாள். அம்மா திரும்பிப் பார்த்த பார்வையில் எந்த அதிர்ச்சியும் தென்படவில்லை. ஒருவேளை அது கரடி இல்லையோ? இப்போது சம்யுக்தா நன்றாகத் திரும்பினாள். அது கரடியேதான். இரண்டடி உயரத்தில், மினுமினுக்கும் கருப்பு உடலுடன் நான்கு கால்களில் நின்று கொண்டிருந்தது. முகத்தில் வெள்ளைத் தீற்று. அதன் நாசியிலிருந்து நீர் கசிந்து கொண்டிருந்தது. கரடிக்கு நேர் எதிர்ப்புறத்தில் அவளது கார் நின்று கொண்டிருந்தது.

தயங்கித் தயங்கி எழுந்தாள். அம்மாவின் கையை இறுகப்பிடித்தாள். அம்மா உறைந்து போனதைப் போல அமர்ந்திருந்தாள். கையை இழுத்து அவளை எழச் செய்தாள். 

முணுமுணுப்பாகச் சொன்னாள். “அம்மா, நட.”

மெல்லத் திரும்பி பள்ளம் நோக்கி எதிர்த்திசையில் நடந்தார்கள். அம்மா விருப்பமில்லாது அவளோடு நடந்ததைப் போலிருந்தது. கரடி கொஞ்ச நேரம் அங்கேயே நின்று பார்த்து விட்டு வந்த திசையே சென்று விடும் என்று நம்பினாள் சம்யுக்தா. அதன் பின் அவர்கள் திரும்பிச் சென்று காரில் ஏறிக்கொள்ள முடியும். நடந்தபடியே மெல்லத் தலை திருப்பிப் பார்த்தபோது கரடியும் இவர்களை நோக்கி அசைந்து, அசைந்து வந்து கொண்டிருந்தது. சம்யுக்தாவுக்கு வயிற்றில் மெல்லிய நடுக்கம் உண்டாயிற்று. “அது நம்ம பக்கமா வருதும்மா,” என்றாள்.

அம்மாவின் முகத்தில் அவளால் எந்த உணர்ச்சியையும் படிக்க முடியவில்லை. அவளுடன் அப்போது பேச முடியும் என்று சம்யுக்தாவுக்குத் தோன்றவில்லை. அவளது நடையில் சிறு தள்ளாட்டம் புலப்பட்டது.  கண்களில் அயர்ச்சி. மூச்சு மெல்லிய ‘விர்’ ஒலியுடன் வந்து கொண்டிருந்தது. விரைவில் அவளுக்கு எதையாவது உண்ணக் கொடுக்க வேண்டும். இந்தக் காட்டுக்குள் எதாவது பழமரங்கள் தென்படுமா? அத்தனைக் களைப்பிலும் அவள் முகத்தில் எப்போதிருக்கும் அந்தத் தெளிவு மாறவே இல்லை. எங்கே செல்லப்போகிறோம் என்று அறிந்தவளைப் போல உறுதியான அடிகள் வைத்து நடந்தபடியே இருந்தாள். அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த கரடியின் கால்தடங்களின் உணர்வு பின் கழுத்தில் குறுகுறுவென்று ஓடியபடியே இருந்தது. அம்மாவுக்கும் அந்தக் குறுகுறுப்பு இருக்குமா என்று ஐயமாக இருந்தது சம்யுக்தாவுக்கு.

புல்வெளி முடிந்து காட்டுப்பாதை துவங்கியிருந்தது. நீண்டு வளர்ந்திருந்த செடிகொடிகளைக் கைகளால் விலக்கியபடி, விழுந்து கிடந்த மரக்கிளைகளைத் தாண்டியபடி நடந்தார்கள். கரடிக்கும் அவர்களுக்குமிடையேயான தொலைவு குறைந்ததை அறிந்து வேகத்தை அதிகரித்தாள். மீண்டும் திரும்பிய போது, கரடியும் வேகத்தை அதிகரித்திருந்தது தெரிந்தது. எந்த நேரமும் கரடி அவர்கள் மீது பாய்ந்து விடக்கூடும் என்று எண்ணியபோது சம்யுக்தாவுக்குக் கால்கள் உதற ஆரம்பித்தன. “இப்ப என்னம்மா பண்றது?”

அம்மா தலைதிருப்பி அவளைப் பார்த்து களைப்பாகப் புன்னகைத்தாள். “அப்படியே கொஞ்ச நேரம் நிப்போம். அது என்ன பண்ணுதுன்னு பார்ப்போம்,” என்றாள்.

“இல்லை, எனக்குப் பயமா இருக்கு.”

“சரி, அப்ப நடப்போம்.” நடந்தபடியே இருந்தார்கள். அம்மா முகத்தில் வியர்வை பூத்திருப்பதைக் கவனித்தாள். அவள் முகத்தில் அச்சம் இல்லை, ஆனால் பிடித்திருந்த கையில் மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தாள். அவள் மருந்து உட்கொள்ளும் நேரம் தாண்டியிருந்தது. திடீரென்று அம்மா மயங்கி விழுந்து விடுவாளோ என்று பயந்தாள். 

அவள் பயந்தமாதிரியே அம்மாவின் நடை தளர்ந்து கொண்டே வந்தது. ஆனால் உறுதியோடு மகளோடு நடந்து கொண்டிருந்தாள்.

காட்டுப்பாதை ஒரு சிறிய தடாகத்தருகில் கொண்டு விட்டது. அருகில் மரங்கள் அற்ற வெற்று நிலம்.  தடாகத்தருகில் சிறுபாறை ஒன்றின் மீது ஆறடி உயரத்தில், கருத்த உடலும், விழுதுகள் போன்று தொங்கும் சடைமுடியுமாக ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். பழுப்பு நிறத்தில் முரட்டுத் துணியாலான சட்டையும் கால்சராயும், மலையேறும் பூட்ஸூகளும் அணிந்திருந்தார். அவருக்கு அருகில் ஓர் இரட்டைக் குழல் துப்பாக்கி பாறை மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. இருவரும் அவரை நோக்கி விரைந்து போனார்கள். அவர் இவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த கரடியைக் கண்டு விட்டார். ஓர் ஓரமாகத் தள்ளி நிற்குமாறு இவர்களிடம் சைகை செய்தார்.

“தயவு செய்து சுட்டு விடாதீர்கள்,” என்றாள் அம்மா. 

அவர் துப்பாக்கியில் கைவைக்கவேயில்லை. மெல்ல எழுந்து தன் கால்சராயிலிருந்து ஓர் உலோகக் குப்பியை எடுத்து தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த கரடியின் மீது பீய்ச்சினார். 

மூன்றடி தூரத்திலிருந்தாலும் அவர் பீய்ச்சிய மருந்து கரடியில் முகத்தில் சரியாகத் தெளித்தது. உடனே கரடி அந்த இடத்திலேயே நின்று உடலைச் சிலிர்த்துக் கொண்டது. பெரும் ஒலியுடன் மூன்று முறை தும்மியது. மீண்டும் ஒரு முறை உடலைக் குலுக்கியபின் திரும்பி எதிர்த்திசையில் ஓடியது.

“ஹலோ, என் பெயர் கிரிகோரி ராபின்சன்,” என்றபடி இவர்களை நோக்கிக் கையை நீட்டினார். சம்யுக்தா அச்சத்துடன் மெல்லப் பின்வாங்கினாள். அம்மா பலவீனமாகப் புன்னகைத்தபடி கை நீட்டினாள். “சந்தான லட்சுமி. இது என் மகள் சம்யுக்தா,” என்றாள்.

“வழி தவறி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் எங்கிருந்து வருகிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் அழைத்துச் செல்கிறேன்,” என்றார்.

அம்மா தளர்ந்து பாறை மேல் கையூன்றி அமர்ந்தாள். “இல்லை. நாங்களே திரும்பிப் போய்க் கொள்கிறோம்,” என்றாள் சம்யுக்தா.

“உங்களிடம் சாப்பிட ஏதாவது கிடைக்குமா? மிகக் களைப்பாக இருக்கிறது,” என்றாள் அம்மா. சம்யுக்தா அம்மாவை முறைத்தாள்.

“என் வீடு இங்குதான் இருக்கிறது. வாருங்கள், நான் சமைத்த உணவை உங்களுக்கு அளிக்கிறேன்,” என்றார். 

அங்கிருந்து நூறடி நடந்தவுடனேயே மரச்செறிவின் நடுவில் அவர் வீடு இருந்தது. அது ஒரு டிரைலர் வீடு. ஒரு படுக்கையறை, ஒரு குளியலறை, ஒரு வரவேற்பறை என்று மிகக் குறுகலான இடமாக இருந்தது. அம்மா உள்ளே சென்றவுடன் உரிமையோடு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். சம்யுக்தா தயங்கியபடி சுவரோரம் நின்று கொண்டிருந்தாள். அங்கிருந்து உடனே கிளம்பி விட வேண்டும் என்று ஓர் எச்சரிக்கைக் குரல் தீனமாக அவளுக்குள் ஒலித்தபடியிருந்தது. 

கிரிகோரி இருவருக்கும் அவர் சமைத்த இறைச்சி கலந்த சோற்றை தட்டுக்களில் பரிமாறி அளித்தார். சம்யுக்தா வேண்டாமென்று மறுத்து விட்டாள். அம்மா இறைச்சி உண்பதில்லை. அவள் மறுப்பதற்காகக் காத்திருந்தாள். அவளோ ஆர்வத்துடன் தட்டை வாங்கி, இறைச்சித் துண்டங்களை நகர்த்தி வைத்துவிட்டு சோற்றை ஆர்வத்துடன் உண்ண ஆரம்பித்து விட்டாள்.

“கரடியைக் கண்டு பயந்து விட்டீர்களா?” என்றார் கிரிகோரி.

“அம்மா அப்படியே உறைந்து நின்று விட்டாள். நான்தான் சுதாரித்துக் கொண்டு அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றேன்,” என்றாள் சம்யுக்தா.

“சொல்லப்போனால் உங்கள் தாய் செய்ததுதான் சரி. காட்டில் கரடியைக் கண்டால் பதறாமல் சில நிமிடங்கள் அங்கேயே நின்றாலே போதும். கரடி தானாகவே விலகிப் போய்விட வாய்ப்பிருக்கிறது.”

“அப்படி விலகவில்லையென்றால்…”

கிரிகோரி சிரித்தார். “உண்மைதான். நீங்கள் அதனிடமிருந்து மெதுவாக விலகுவதும் ஒரு உத்திதான். ஆனால் பதற்றப்பட்டு ஓடினால் ஒருவேளை அது உங்கள் மீது பாய்ந்து விடக்கூடும்.” 

“கிரிகோரி, உங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள். இங்கே எப்படி வாழ்கிறீர்கள்? உங்கள் குடும்பம் எங்கே?” என்றாள் அம்மா.

“நான் இங்கு வந்து பத்து ஆண்டுகளாகிறது. என் மனைவியின் இறப்புக்குப் பிறகு,” என்றார் கிரிகோரி. 

“வாழ்க்கை எப்படிச் செல்லுகிறது?”

“ம், எனக்கென்ன குறை? என் வீட்டின் பின்னால் உருளைக்கிழங்கும், முட்டைக்கோஸும் பயிரிடுகிறேன். இறைச்சி தேவையாயிருக்கும்போது காட்டுக்குள் சென்று மானையோ, பறவைகளையோ சுட்டு எடுத்து வருவேன். கண்ணை மூடினால் உறக்கம். கண்ணைத் திறந்தால் கானகம். என் மனதுக்கு நெருக்கமான உலகம். இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது. மூச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. எதுவும் என் கையில் இல்லை. எதையும் நான் செய்வதில்லை. அதனால் எந்தக் கவலையும் இல்லை,” என்றார் கிரிகோரி.

“நீர் ஒரு ஸ்திதப்ரஞன்,” என்றாள் அம்மா.

“அப்படியென்றால்?”

“புத்தியில் நிலைபெற்றவன். தத்துவம் அறிந்த யோகி நடந்தாலும், உண்டாலும், உறங்கினாலும், விழித்திருந்தாலும் தான் எதுவும் செய்வதில்லை, பொறிகள்தான் புலன்களில் போகின்றன என்றறிந்து வாழ்வைக் கடத்துவான் என்று கீதை சொல்கிறது.”

கிரிகோரி வாய்விட்டுச் சிரித்தார். “நான் யோகியா என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது கேட்க நன்றாக இருக்கிறது.”

அம்மா உடனே வேதாந்த ஆசிரியையாக மாறி விளக்க ஆரம்பித்து விட்டாள். “கீதை என்பது ஒரு வேதாந்த நூல். மனித வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் தன்னை அறிதலே என்று வேதாந்தம் சொல்கிறது. தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை. தன்னை அறிந்தவனுக்கு கவலைகள் ஏதுமில்லை. அதற்கான பாதையைத்தான் கீதை காட்டுகிறது. செய்யும் செயல்களை பற்றற்றுச் செய்தல் கர்மயோகம் எனப்படுகிறது. கர்மயோகம் செய்தவனுக்கு மனத்தூய்மை வாய்க்கிறது. மனத்தூய்மை அடைந்தவன் தன்னை அறியும் தகுதி பெறுகிறான். தன்னை அறிந்தவனுக்கு அதற்கப்புறம் செய்வதற்கு வேறேதும் இல்லை. ஆனந்தமாக மீதமிருக்கும் வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதுதான், உங்களைப்போல,” என்றாள்.

“இல்லையில்லை, உங்களைப் போல,” என்று அம்மாவை நோக்கிக் கைகாட்டிச் சிரித்தார் கிரிகோரி.

அம்மாவும் கை தட்டிச் சிரித்தாள். “ஞானியும் இப்படித்தான் காரணமில்லாமல் சிரித்துக் கொண்டே இருப்பான். அவனுக்கும் பைத்தியக்காரனுக்கும் மேலோட்டமாகப் பார்த்தால் வேறுபாடு புரியாது,” என்றாள் அம்மா.

அம்மா ஆர்வத்துடன் பொழிந்து கொண்டேயிருந்தாள். கிரிகோரி பரவசத்துடன் கேட்டுக் கொண்டே இருந்தார்.

சம்யுக்தா அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். தலைக்கு மேல் மெல்லிய மஞ்சள் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்த சாண்டலியரின் வெளிச்சத்தில் தேவதையைப் போல் இருந்தாள் அம்மா.

“வாருங்கள், இருட்டுவதற்குள் உங்களைக் கொண்டு போய் விட்டு விடுகிறேன்,” என்றார் கிரிகோரி.

கிரிகோரி தன்னுடைய ஜீப்பில் அவர்களை கார் நிற்குமிடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தார். அம்மா அவரிடம் கைகூப்பி விடைபெற்று காருக்குள் ஏறிக்கொண்டாள். கிரிகோரி சம்யுக்தாவிடம் மலைப்பாதையின் வரைபடம் ஒன்றை அளித்தார்.  சம்யுக்தா கண்களில் நன்றியோடு அவரைப் பார்த்தாள்.

“உன் தாய் சொன்ன நிறைய விஷயங்கள் எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. யுவர் மதர் இஸ் எ செயிண்ட்,” என்றார்.

அவர் சென்றதும் காருக்குள் ஏறி அம்மாவைப் பார்த்து புன்னகைத்தபடி சம்யுக்தா சொன்னாள். “அவர் வீட்டில வைஃபை கிடைச்சது. திரும்பவும் லீவு போட்டுட்டேன். நானும் உன்னோட வகுப்பில கலந்துக்கப் போறேன்.”

“பார்றா! அது இருக்கட்டும். நான் அமெரிக்க வாழ்க்கையைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டியே, இப்ப பார்த்தாச்சா?” என்று கேட்டாள் அம்மா.


​​​​​​​​முடிந்தது.

நன்றி: தினமணி தீபாவளி மலர் 2025


8 நவம்பர், 2025

வானப்ரஸ்தம் -என் புதிய சிறுகதை தினமணி தீபாவளி மலரில்




என்னுடைய புதிய சிறுகதை தினமணி தீபாவளி மலரில் வெளிவந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இதழின் ஆசிரியர் பாவைசந்திரன் தொடர்பு கொண்டு மலருக்கு ஒரு சிறுகதை வேண்டும் என்று கேட்டார். மூன்றே நாட்கள்தான் அவகாசம். நான் சிறுகதை எழுத குறைந்தது பதினைந்து நாட்களாவது எடுத்துக் கொள்வேன். வந்த வாய்ப்பை விட முடியுமா? எழுத ஆரம்பித்து இரண்டு நாட்களில் கதையை முடித்து விட்டேன். ஒரு நாள் முழுக்க திருத்தங்கள் செய்தேன். அனு வாசித்து விட்டு நன்றாக வந்திருப்பதாகச் சொன்னாள். அது போதுமெனக்கு. தலைப்பு வைப்பதில் எனக்கு எப்போதுமே தடுமாற்றம்தான். அதற்கு எப்போதுமே அனுவிடம்தான் சரணடைவேன். அவள் தந்த தலைப்புதான் “வானப்ரஸ்தம்.” முதலில் எனக்கு இந்தத் தலைப்பு வைக்க தயக்கமிருந்தது. அந்தத் தலைப்பின் பொருத்தம் குறித்து அனு விளக்கியபின் சமாதானமானேன். 

கதை ஓவியர் மணியம் செல்வனின் அற்புதமான ஓவியங்களுடன் வெளிவந்திருக்கிறது. சிறுவயதில் என் ஹீரோ அவர். அவர் மாதிரி ஓவியம் வரைய முயன்றிருக்கிறேன். அவர் என் கதைக்கு ஓவியம் வரைந்ததை ஓர் ஆசியாகவே கொள்கிறேன்.

தீபாவளிமலர் ஈரோடு, பவானி, கோயம்புத்தூர் என்று எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பாவைசந்திரனைத் தொடர்பு கொண்டபோது ஏஜண்டுகளிடம் முன்பதிவு செய்து மட்டுமே வாங்கமுடியும் என்று சொன்னார். அவரே என் வீட்டுக்கு ஒரு மலரை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். கதையின் ஒளிப்படங்களை எனக்கு அனுப்பி வைத்தார்.

சிறுகதையின் தத்துவத்தைக் கையாள்வது சற்று கடினம். ஏற்கனவே ஒன்றிரண்டு கதைகளில் முயன்றிருக்கிறேன். இக்கதையிலும்.

16 அக்டோபர், 2025

ஸ்பைடர் - சிறுகதை

 

ஸ்பைடர் 

சிறுகதை

நன்றி: அகழ் இணைய இதழ்

ஜெகதீஷ் குமார்

தனஞ்சயன் ஆள்காட்டி விரலை முன்னோக்கி நீட்டினான். ஸ்பைடர் தலையை சற்றே முன்னோக்கி நீட்டி அவனை ஐயமாகப் பார்த்தது. இப்போது முழுக்கையையும் முன்னுக்கு நீட்டினான். அதன் காதுகள் விடைத்து மேலெழும்பின. மூச்சு வேகமாக இளைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.  “ஸ்பைடர்! ஊய்!” என்றான். கொஞ்சமாக அதன் கழுத்துப்பகுதி மட்டும் கீழே தாழ்ந்தது. 

அப்பா சத்தம் எதுவும் போட மாட்டார். நாற்காலியில் அமர்ந்தபடியே ஆட்காட்டி விரலைக் கொண்டு காற்றில் ஒரு சின்ன நிமிண்டல், அவ்வளவுதான். ஸ்பைடர் சரக்கென்று முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு அவர் முன்னால் நிற்கும். மூச்சிளைப்பில் அதன் நெஞ்சு ஏறித்தாழ்வதையும், வெண்ணிற நீள் வட்டம் போட்ட வயிறு அதிர்ந்து நடுங்குவதையும் அவருக்கு அருகிருந்து வாய் பிளந்தபடி பார்த்திருக்கிறான். அதே போல ஸ்பைடரை செய்ய வைத்து விட வேண்டும் என்று அவனுக்கு ஆவலாக இருந்தது. அதைச் செய்ய வைக்க இன்னமும் அதனுடன் நன்றாகப் பழக வேண்டுமா, அல்லது தன் கை அப்பாவினுடையதைப் போல இன்னமும் நீளமாக வளர வேண்டுமா என்று அவனுக்குத் தெரியவில்லை.

வண்டிப்புகை வாசனை வந்தது. குழாய்க்குள் இருந்து சீனி வெடிகள் வெடிப்பது போன்ற சத்தத்துடன் அப்பாவின் டிவிஎஸ் 50 வேலிப்படல் தாண்டி உள்ளே நுழைந்தது. அவன் பிறப்பதற்கு முன்பே வாங்கிய வண்டி என்று அப்பா சொல்வார். வண்டியை ஸ்டாண்டு போட்டு நிறுத்தியவுடன் ஸ்பைடர் அவரை நோக்கி ஓடியது. அவரைச் சுற்றிச் சுற்றி வந்து முகர்ந்தது. அப்பா ஒருகையால் அதன் தாடையைத் தடவிக் கொடுத்தபடியே இவனைப் பார்த்துக் கையாட்டினார். தனஞ்சயன் முகத்தில் புன்னகையுடன் அவரை நோக்கி ஓடினான். வண்டியின் முன்பக்கப் பையில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தார். அதற்கு அடியில் ஒரு  பாட்டில். அதை எடுத்துக் கொண்டு படிகளேறி வீட்டுக்குள் நுழையுமுன் திரும்பி, “தா, ஸ்பை! போ, போய் பையனோடு விளையாடு,” என்றார். ஸ்பைடர் திரும்பி பாய்ச்சலாகச் சென்று பூந்தொட்டிகளினருகில் நின்று கொண்டது. வாலை வேகமாக ஆட்டியபடி இவனை கழுத்துயர்த்திப் பார்த்தது. விளையாடுவதற்கு அழைக்கிறதாம்! தனஞ்சயன் வியப்பும், கடுப்புமாகப் பார்த்தபடி அதை நோக்கி நடந்தான். பொட்டலத்தைத் திறந்து ஒரு நெய் பிஸ்கட்டை உடைத்து வாயில் போட்டு மென்றான். ஒரு துண்டை மேலே வீசினான். ஸ்பைடர் காற்றில் மேலெழும்பி அத்துண்டைக் கச்சிதமாகக் கவ்வியது.

கொஞ்ச நேரத்துக்கு ஏதோ முன்னேற்றம் ஏற்பட்டமாதிரி இருந்தது. இவன் தூக்கி எறிந்த பந்தை ஓடிப்போய்க் கவ்விக் கொண்டு வந்து இவனிடமே சமர்ப்பித்தது. குரலெழுப்பி அதட்டி, படுக்கச் சொன்னால் மூலையில் போட்டிருந்த கறுப்பு விரிப்பின் மீது  வாலை மடக்கி பின்புறத்தில் செருகிக் கொண்டு அமர்ந்து, முன்னங்கால்களில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டது. கண்ணை மூடி தூங்குவது மாதிரி நடிக்கக்கூட செய்தது. ஆனால் இவனது விரல் நீட்டலுக்கு மட்டும் எதிர்பார்த்த செயல் நடைபெறவில்லை. இந்த அரையாண்டு விடுமுறையில் ஸ்பைடருடன் நிறைய நேரம் செலவு செய்ய வேண்டும் என்று உறுதி செய்து கொண்டான்.

இங்கிருந்து பார்த்தபோது அப்பா தரையிலமர்ந்து, பாட்டிலிலிருந்து டம்ப்ளரில் ஊற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. தனஞ்சயனுக்கு வயிற்றில் என்னவோ செய்தது. அம்மா வேலையிலிருந்து வரும் நேரம். 

எதிர்பார்த்தமாதிரியே நடந்தது. அம்மா ஆட்டோவில் வந்து இறங்கினாள். இறங்கியவுடனேயே வீட்டுக்குள் அப்பா அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டாள். விடுவிடுவென்று நடந்து உள்ளே சென்றாள். தோள்பையை உருவி விசிறியடித்தாள். அவள் ஆங்காரமாகக் கத்தும் சத்தம் கேட்டது. பதிலுக்கு அப்பாவின் ஒலி மழுப்பிய குரல் - சற்றே தயங்கிய படி, சற்றே குழறியதைப் போல.

 இப்போதைக்கு வீட்டுக்குள் போகாமல் இருப்பது நல்லது என்று நினைத்துக் கொண்டான். இதற்கு முன் இப்படி நடந்த சண்டையில் பக்கத்தில் உட்கார்ந்து ரெகார்டு நோட்டில் வரைந்து கொண்டிருந்தவனின் முதுகில் கோபத்தில் இரண்டு முறை அறைந்திருக்கிறாள் அம்மா.

“இப்படியே பண்ணிட்டிருந்தீன்னா உன்னப் பார்த்து நீ பெத்ததும் உருப்படாமப் போயிடும்,” என்றாள் அன்று.

“டேய், தனம்! தனம்! வாடா இங்கே!” 

அப்பா அழைக்கும் குரல். குரலில் எப்போதும் இல்லாத சீற்றம். அவனையும், ஸ்பைடரையும் அவர் எப்போதும் கடிந்து கொண்டதே இல்லை.

வாயிலை நோக்கி ஓடினான். ஸ்பைடர் அவனைப் பின்தொடர்ந்து போனது.

“தனம், உள்ளே வந்து என் வயலினை எடுத்து பாக்ஸில போட்டு எடுத்துட்டு வெளியே போய் வெயிட் பண்ணு,” என்றார். அப்பா குடித்திருக்கும்போது வயலினைத் தொடுவதில்லை.

உள்ளே போய் வயலின் வைத்திருந்த பூஜையறையை நோக்கிச் சென்ற போது கவனித்தான். பீரோவிலிருந்து துணிகளை அள்ளி பைக்குள் திணித்துக் கொண்டிருந்தார் அப்பா. அம்மா அடுக்களைக்குள் நின்றிருப்பது அங்கிருந்து கேட்ட மூச்சுச் சப்தத்திலிருந்து தெரிந்தது. 

வயலின் பெட்டியை மடியில் வைத்துக் கொண்டு துணி துவைக்கும் கல்லின் மேல் அமர்ந்திருந்தான். விட்டேத்தியாகச் சுற்றிக்கொண்டிருந்த ஸ்பைடரை நோக்கி மீண்டும் ஆட்காட்டி விரலை நீட்டினான். வேகமாக ஓடி வந்து அருகில் நின்று கழுத்தைத் தாழ்த்தி குறுகுறுவென்று பார்த்தது. ஆனால் முன்னங்கால்களைத் தூக்கி மேலெழும்பவில்லை.

அப்பா துணிப்பையோடு வெளியே வந்து அருகில் நின்றார். இவனைப் பார்த்துப் புன்னகைத்தார். “நல்லாப் படிக்கணும் என்ன?” என்றார்.

“இன்னும் ரெண்டு வாரம்தான் ஸ்கூலு. அப்புறம் லீவு வுட்டுருவாங்க.”

“எத்தினி நாளு?”

“அடுத்த மாசம் மூணாம் தேதிதான் ஸ்கூல் தொறப்பாங்க.”

பத்து நிமிடம் கழித்து வீட்டு முன்னால் டெம்போ ஒன்று வந்து நின்றது. வேலுமணி ஓட்டிக்கொண்டு வந்திருந்தான். அப்பாவுடன் பட்டறையில் வேலை செய்பவன். அப்பா துணிப்பையைத் தூக்கிக் கொண்டு நேரே டெம்போவை நோக்கிப் போனபோதுதான் அவர் வீட்டை விட்டுப் போகப்போகிறார் என்பது தனஞ்சயனுக்கு உறைத்தது. வயலின் பெட்டியைத் தூக்கிக் கொண்டு பின்னாலேயே ஓடினான். அம்மா வாசலில் வந்து நின்று இவர்களைப் பார்த்தாள். பையையும் வயலினையும் டெம்போவின் திறந்த பின்பக்கம் வைக்கச் சொல்லி விட்டு இவர் முன்னால் ஏறினார். அம்மாவை ஏறிட்டுப் பார்த்த அவர் பார்வையில் கோபமும், உறுதியும் தெரிந்தன. வண்டி கிளம்பி, வளைந்து திரும்பி வேலிப்படலுக்கு வெளியே போய் நின்றது. அப்பா இவனிடம் கையை ஆட்டி புன்னகையுடன் விடை கொடுத்தார். “அப்புறம் பாப்பம் என்ன?” என்றார். பின்னர் வாயைக் குவித்து மெல்லியதாக ஒரு சீழ்க்கை ஒலியை எழுப்பினார். 

துணி துவைக்கும் கல்லருகில், மூச்சிளைத்தபடி நின்றிருந்த ஸ்பைடர் வேகமாக ஓடிப்போய் டெம்போவின் திறந்திருந்த பின்பக்கம் ஏறி அமர்ந்து கொண்டது.

தனஞ்சயன் கிளம்பிச் சென்ற டெம்போவையே திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். 

“ஒரே நாள்ல இரண்டு சனியன்களும் ஒழிஞ்சுது,” என்றாள் வாசலில் நின்றிருந்த அம்மா.

* * *

விடுமுறை விட்ட இரண்டாவது நாளில் அதே டெம்போவில் அப்பா வீட்டுக்கு வந்து இறங்கினார். அவனை அவர் வசிக்குமிடத்துக்குக் கூட்டிப் போவதாக அம்மாவிடம் சொன்னார். “லீவு வுட்டோன்ன கொண்டாந்து வுட்டர்றேன். பையம்மேல எனக்கும் உரிமை இருக்குல்ல?” என்றார். அம்மா எதுவும் ஆட்சேபணை சொல்லாதது தனஞ்சயனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  பத்து நாட்களுக்குத் தேவையான துணிகளை தனஞ்சயன் எடுத்துக் கொண்டதும் இருவரும் அவரது டிவிஎஸ்சில் கிளம்பிச் சென்றார்கள். 

அப்பா தங்கியிருந்த இடம் ஊருக்குத் தள்ளி ஏதோ பட்டிக்காட்டுக்குள் இருந்தது. அந்தியூர் செல்லும் சாலையிலிருந்து கிளை பிரிந்த ஒரு குறுகிய தார் ரோட்டுக்குள் நுழைந்து பதினைந்து நிமிடங்கள் பயணித்து அவரது இடத்தை அடைந்தார்கள். பழுப்புச் சுவர்களுடன் தகரக்கூரை வேய்ந்த கட்டிடம். பெரிய அளவு சோளப்பொறியைப் போன்றிருந்தது. ரோட்டிலிருந்து கொஞ்சம் இடம் விட்டு உள்ளே தள்ளி இருந்த அந்தக் கட்டிடத்தைச் சுற்றி எந்த வீடுகளுமே இல்லை. பின்னால் கரும்பு வயல் தோகை விசிறிக்கொண்டிருந்தது.

வண்டி விட்டிறங்கியதும் தனஞ்சயனின் கண்கள் சுழன்று தேடின. பின் வீட்டுக்குள் ஓடிப்பார்த்தான். இரண்டே அறைகள். முன்னறையில் ஒரு மூலையில் துருப்பிடித்த பம்பு அடுப்பும், கழுவாத தட்டுகள் இரண்டும் இருந்தன. உள்ளே க்ரீஸ் ஆயிலின் வீச்சம். அப்பா வேலை முடித்து வரும் போது அவர் சட்டையில் முகர்ந்த அதே நாற்றம். கொடிகளில் கொத்தாகத் துணிகள். தரையெங்கும் சிதறிக் கிடந்த பட்டறை சாமான்கள் - ஸ்பேனர்கள், உளிகள், மரம் அறுக்கும் ரம்பம். 

அவர் உள்ளே வந்தவுடன் கேட்டான். “ஸ்பைடர் எங்கே?”

“பின்னாடிதாண்டா கட்டிப்போட்டிருக்கேன்.”

வெளியே வந்து பின்புறம் ஓடினான். ஸ்பைடர் கரும்பு வயலைப் பார்த்தபடி தியானத்தில் அமர்ந்திருந்தது.

ஓடிப்போய் கயிற்றை அவிழ்த்து ஸ்பைடரை விடுவித்தான். 

“இந்த இடம் பிடிச்சிருக்காடா?” என்றான்.

“வுர்ஃப்!” என்றது ஸ்பைடர்.

இருவரும் வீட்டு முன்னால் வந்தார்கள். வாயிலில் நின்ற அப்பா அவனை பெருமையாகப் பார்த்தார். “நீ இல்லைன்னுதான் பொக்குனு போய்ட்டான்னு நெனக்கிறேன். எனக்கு அவகிட்ட வுட்டுட்டு வர மனசில்லைடா. இனி நல்லா குஷியாயிடுவான்,” என்றார்.

திடீரென்று ஸ்பைடர் தயங்கிப் பின்வாங்குவதைப் போலிருந்தது. அதன் காதுகளும் நாசித்துவாரங்களும் விடைத்து, காற்றில் எதையோ முகர்ந்து தேடுவதைப் போல தவித்தது. எம்பிக் குதித்து அசைந்தபடியே இருந்தது.

“வ்ரூம்! வ்ரூம்!” என்று வண்டிகள் வரும் பெருத்த ஓசை. வண்டி முழுக்க ஜல்லிக்கற்கள் நிரப்பிக் கொண்டு நான்கு லாரிகள் கடந்து சென்றன. அவை சென்ற அதிர்வு அவர்கள் வீட்டுச் சுவர்களில் தெரிந்தது. ஸ்பைடர் சுவற்றோடு ஒடுங்கிக் கொண்டது. உடல் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது. 

“பயந்துடுச்சுப்பா,” என்றான்.

“இந்தாண்டியே போனா எங்க பட்டறை தாண்டி ஒரு ஜல்லிக்கல் ஃபேக்டரிகீது. அங்கேர்ந்துதான் இந்த வண்டிங்க லோடேத்தீட்டுப் போகுதுங்க.”

அவனை விட்டு விட்டு அப்பா வேலைக்குப் போய் விட்டார். அன்று முழுக்க ஸ்பைடருடன் வெளியில் சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தான். இருட்டி கொஞ்ச நேரத்திலேயே அப்பா வந்து விட்டார். அவனுக்கும், ஸ்பைடருக்கும் புரோட்டா வாங்கி வந்திருந்தார். 

சாப்பிட உட்காரும்போது அப்பா குடித்திருக்கவில்லை என்பதை கவனித்தான். வீட்டில் எங்கு தேடியும் பாட்டில்கள் எதுவும் அகப்படவில்லை. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

சாப்பிட்டு முடித்ததும் இரண்டாவது அறையில் வைத்திருந்த வயலினை எடுத்துக் கொண்டு வந்து அவன் முன்னால் உட்கார்ந்து வாசிக்க ஆரம்பித்தார். எல்லாம் பழைய சினிமாப் பாடல்கள். ஜன்னல் வழியே கரும்புக்காட்டிலிருந்து குளிர் காற்று வீசி அவர்களது உடலைத் தழுவிக் கொண்டிருந்தது. அந்தச் சின்ன வீடு முழுக்க வயலின் இசை வழிந்து கொண்டிருந்தது.

“இந்தப் பாட்டில இந்த வயலின் பீஸ் வருதுல்ல,” என்றபடி ஒரு கோர்வையை வாசித்தார். “இது சாச்சாத் நானே வாசிச்சது.” 

பிறகு மேலும் சில பரிச்சயமான இசைக்கோர்வைகளை வாசித்தார். “இதெல்லாமும் நானே வாசிச்சதுடா மவுனே!”

இன்னும் கொஞ்ச நேரம் வாசித்தபின் நிறுத்தி விட்டுச் சொன்னார். “பெரியவருக்கு மட்டும் ஒரு நாப்பது படம் வாசிச்சிருப்பேன். இப்ப அவரோட இருந்திருந்தேன்னா நூறு தாண்டியிருக்கும்.”

அப்பா அவரது பழைய வேலையைப் பற்றி அவனிடம் அதிகம் பேசியதில்லை. சென்னையில் அவர்கள் இருந்த காலம் தனஞ்சயனுக்கு மங்கலாகத்தான் நினைவிருக்கிறது.

அப்பா அன்றைக்கு நிறையப் பேசினார். “பெரியவருக்கு நீன்னா ரொம்பப் பிடிக்கும் தெரியுமா? ஒரு நா உன்னை அவராண்ட கூட்டீட்டுப் போனேன். என்ன சொல்லீருவாரோன்னு பயந்து, பயந்துதான் போனேன். உன்னைப்பார்த்தவுடனே தூக்கி வைச்சுச் செல்லங்கொஞ்ச ஆரம்பிச்சுட்டாரு. அவரு வெள்ளை ஜிப்பால உங்கைப்பட்டு அழுக்காயிடுச்சு. நாந்தான் பதட்டமா பாத்துட்டே இருக்கேன். அவரு அதெல்லாம் கண்டுக்கவேயில்லை. ரமணர் படத்துக்கு முன்னாடி இருந்த வாழைப்பழத்தை எடுத்து உங்கையில கொடுத்தார். அதை நீ சப்பிக்கிட்டு திருதிருன்னு முழிச்சிகிட்டிருந்த.” அப்பா ‘கெக்கெக்’ என்ற ஒலியோடு சிரித்தார்.

“‘கொஞ்சம் வளர்ந்ததும் நானே இந்தப் பயலுக்கு வயலின் சொல்லிக்குடுப்பேன்'னு சொன்னார்,” என்றார். வயலினைப் பக்கவாட்டில் படுக்க வைத்தார்.

“நூறென்ன? அவரோட ஆயிரமாவது படத்துக்குக் கூட வாசிச்சிருக்க முடியும். எம்பையன அவரோட சிஷ்யபுள்ளையா ஆக்கியிருக்க முடியும். எல்லாம் இந்த சனியன் புடிச்ச குடியால வந்த வெனை.” 

அவரது விரல்கள் வயலினின் உடல் முழுக்கத் தடவிக் கொண்டிருந்தன. பின் அதை தூக்கி மடியில் வைத்து அதன் முனையைப் பிடித்து, “இதுக்குப் பேரு என்ன தெரியுமா?” என்றார்.

தனஞ்சயன் தலையாட்டினான்.

“ஸ்க்ரோல்,” என்றார். அவர் சொல்லும்போது அது ‘வுஸ்குரோல்’ என்று ஒலித்தது. தனஞ்சயன் சிரிப்பை அடக்கியதில் அவன் முகத்தில் சிறு புன்னகை ஒன்று தோன்றியது.

“ஒரு நா ரெகார்டிங்குக்கு தண்ணி போட்டுட்டுப் போய்ட்டேன். காலைலதான் ரெண்டு படம் முடிச்சிட்டு மத்தியானம் தெரிஞ்சவன் தங்கச்சி கல்யாணம் ஒன்னுக்குப் போயிருந்தேன். அங்க ஊத்திக் குடுத்துட்டானுவ. அப்ப ரெகார்டிங் இருக்குன்னு தெரியாது. திடீர்ன்னு பெரியவர் கூப்பிடுறாருன்னு செய்தி. எப்படி மறுக்க முடியும்? அதான் போனேன்.

“இந்த ஸ்க்ரோலுக்குக் கீழ சைடில நாலு துருத்தீட்டு நிக்குதுல்ல. அதுக்கு ட்யூனிங் பெக்குன்னு பேரு. அன்னிக்குப் பதினைஞ்சு பேரு வரிசையா உக்கார்ந்து வாசிக்கிறோம். பெரியவருக்கு நான் வாசிக்கறது மட்டும் வித்தியாசமா கேட்டிருக்கு. ரெண்டு மூணு தடவ ரிஹர்சல் எடுத்தும் திருப்பித் திருப்பி வாசிக்கச் சொல்லறாரு. எனக்கு நான் என்ன தப்பு பண்ணறேன்னே தெரியல. அவரு எரிச்சலாயிட்டாரு. வயலின் ரோவுக்குள்ள நடந்து வந்து எம்முன்னாடி நின்னுட்டாரு. குனிஞ்சு ட்யூனிங்க் பெக்கைத் திருகி ஜிஸ்ட்ரிங்கை டைட் பண்றாரு. ஃபிங்கர் போர்டுல அது டைட்டாகறது எனக்குத் தெரியுது. அவர் மூச்சுக்காத்து எம்மேல படுது. ஜவ்வாது வாசனை. சட்டுன்னு மூஞ்சீல அறைஞ்சாப்ல நிமிர்ந்து என்ன முறைச்சுப் பாக்கறாரு. அரேஞ்சர் சண்முகத்தைக் கூப்பிட்டு, ‘இந்தப் பயல வுடனே வெளிய அனுப்பு’ன்னு கத்தறாரு….”

அப்பா ஆட்காட்டி விரலால் ஒரு தந்தியை நிமிண்டினார். “டொய்ங்ங்!” என்ற அதிர்வோசை! அந்தத் தந்தியைத்தான் பெரியவர் சரி செய்திருப்பாரோ என்று தனஞ்சயன் நினைத்துக் கொண்டான்.

அப்பா பெருமூச்சு விட்டார். “ஆறு வருஷமாச்சி மவுனே! அவர் ரெகார்டிங் தியேட்டர் வாசல் மிதிச்சி. பல தடவ அவர் வாசல்ல போய் நின்னேன். அவர் கார்ல வந்து இறங்குனதும் கால்ல வுழுந்து கதறினேன். முடியவே முடியாதுன்னுட்டார். அதற்கப்புறம் வயலினைப் புடிக்கவே மனசில்ல. அவர்கிட்ட நீ கத்துகிட்டு, அவரு மாதிரியே நீயும் வரணும்னு பெரிய கனவெல்லாம் கண்டேன். எல்லாம் போச்சி.”

“அப்பா, ஸ்பைடர் எங்க தூங்கும்?”

அப்பா அவனைப் புரியாமல் பார்த்தார். “ஆய்ங்?”

“ஸ்பைடர்.” தனஞ்சயன் கைகாட்டினான். அவர்களது வீட்டில் ஸ்பைடருக்கென்று ஒரு சின்னக் கூண்டு உண்டு. இரவில் அதில்தான் ஸ்பைடர் படுத்துக் கொள்ளும்.

“ஓ! அதுவா? அதை பின்னாடி கொண்டு போய்க் கட்டிப் போட்டுடலாம். காத்து நல்லா வரும். ஜாலியாத் தூங்குவான்.”

தனஞ்சயன் எழுந்து நின்று விட்டான். “அப்பா! தோட்டத்துக்குள்ளருந்து பாம்பு கீம்பு வந்து கடிச்சி வச்சிருச்சுன்னா என்ன பண்ணுவே? ஸ்பைடர் வீட்டுக்குள்ள, நம்ம கூடவே தூங்கட்டும்,” என்றான்.

“இங்க வேணாம்டா மவுனே! இங்க பட்டறை சாமான்லாம்கீது. எதுலயாவது புரண்டு காயம் பண்ணிக்கப் போறான். இவ்வளவு நாள் வெளியதான் கட்டிப் போட்டிருந்தேன். அதெல்லாம் பாம்பு வந்தா நம்ப ஸ்பைடர் கடிச்சு தொம்சம் பண்ணிருவான்.”

தனஞ்சயனுக்கு மனசே இல்லை. “அப்பா, உம்பட்டறையில இருந்து ஸ்பைடருக்கு ஒரு கூண்டு பண்ணிக் குடுப்பா,” என்றான்.

“தாராளமாப் பண்ணிறலாம். நாளைக்கு நம்ம பட்டறைக்குப் போலாம். நாமளே மரத்தை அறுத்து ஒரு கூண்டு செய்வோம். அது வரைக்கும் ஸ்பைடர் வெளியவே படுத்துக்கட்டும்,” என்றார் அப்பா. 

* * *

அப்பாவின் பட்டறை இன்னும் ஊருக்குள் தள்ளி இருந்தது. அவர்கள் வீட்டிலிருந்து டிவிஎஸ்சில் அதை அடைய இருபது நிமிடங்களுக்கும் மேலானது. சுண்ணம் பூசப்படாத, ஓடு வேய்ந்த இரண்டு பெரிய கட்டிடங்கள். இரண்டுக்கும் நடுவில் ஒரு சிறிய வெண்ணிற கட்டிடம். உள்ளே அப்பாவின் நண்பன் வேலுமணி மேஜைக்கருகில் குத்தவைத்து அமர்ந்து தரையைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன திடீர்னு, பையனைக் கூட்டீட்டு வந்திருக்க? மதியத்துக்கு மேலதான உனக்கு வேலை?” என்றான்.

“சும்மா நாம வேலை செய்ற இடத்தை பையனுக்குக் காட்டலாமேன்னு. சாமில் ரூம் சாவி குடேன்.”

“ஏற்கனவே நீ எடுத்துட்டுப் போன பொருள் எல்லாம் திரும்ப வரலேன்னு முதலாளி கோச்சுக்கறாருப்பா.”

“எல்லாம் கொண்டாந்துர்றேன். அதெல்லாம் என்ன சும்மாவா கொண்டு போனேன்? பட்டறை வேலையை வீட்டில வைச்சு செய்ஞ்சு எடுத்து வரத்தானே?”

வேலுமணி சாவியை அவர் கையில் கொடுத்தான். “பையனை உள்ள கூட்டீட்டு போற. பாத்து பதனமா நடக்கச் சொல்லு. நிறைய இரும்பு சாமான் போட்டது போட்டபடி இருக்கு,” என்றான்.

இடதுபுறமிருந்த கட்டிடத்துக்குள் நுழைந்தார்கள். உள்ளே நுழைந்து கதவை மூடியதும் ஜன்னல்களினூடே வந்த வெளிச்சம் போதாமல் மின் விளக்கைப் போட வேண்டியிருந்தது. உள் கூரையின் உத்தரத்திலிருந்து நூலாம்படைகள் தொங்கின. சுவற்றோரம் நீள நீளமான மரப்பலகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வேலுமணி சொன்னது போலவே ஆங்காங்கே இரும்புச் சாமான்கள் சிதறிக்கிடந்தன. மரம் அறுக்கும் சின்ன ரம்பங்கள், பெரிய சைஸ் சுத்தியல்கள், எமரி பேப்பர்கள், இன்னும் தனஞ்சயனுக்குப் பெயர் தெரியாத பல கருவிகள். உள்ளே மரத்தூள் நெடி நாசியைத் தாக்கி, சுவாசிக்க சிரமமாக இருந்தது. 

பலகைகளுக்கு பின்னால் மரம் அறுக்கும் இயந்திரம் இருந்தது. இரண்டாள் படுத்து உறங்கும் அளவு பெரிய பரப்பு மைக்கா ஷீட் பாவிய மேஜை; நடுவில் ஒரு நீளமான பிளவுடன் இருந்தது.

மரப்பலகை அடுக்கிலிருந்து அப்பா மூன்று நீளமான பலகைகளை எடுத்தார். “இது போதும். இதை சைசுக்கு தக்கன அறுத்து ஸ்பைடருக்கு ஒரு கூண்டு பண்ணிறலாம்,” என்றார்.

“இவ்ளோ பெரிய பலகைங்கள வீட்டுக்கு எப்படிப்பா தூக்கிட்டு போறது?”

அப்பா அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். 

பலகைகள் மீது பென்சிலால் அளவுகளைக் குறித்தார் அப்பா. பின் வயரை இழுத்து, பிளக்கை சுவற்றில் செருகி இயந்திரத்துக்கு உயிர் கொடுத்தார். மேஜைப்பரப்பின் மீதிருந்த நீண்ட பிளவினூடாக வட்ட வடிவ ரம்பம் ஒன்று மெல்லிய ‘விர்’ சத்தத்துடன் வெளிவந்தது.

 “தனம், அந்த எண்ட்ல போய் நில்லு,” என்றார் அப்பா. அவர் ஒரு கண்ணாடியை மாட்டிக்கொண்டு, அவனிடமும் ஒன்று கொடுத்து மாட்டிக் கொள்ளச் சொன்னார்.

தனஞ்சயன் மேஜையின் மறுமுனைக்குப் போய் நின்றதும், அப்பா மேஜையின் பக்கவாட்டில் எதையோ திருக, ரம்பம் அதிவேகத்தில் சுழல ஆரம்பித்தது. உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும் சீவிடுகளின் ஓசையைப் போல செவிகளைத் துளைக்கும் ஒலி. ஒரு பலகையை மேஜையின் மீது வைத்து ரம்பத்தினூடாக மெல்ல நகர்த்தினார். பென்சில் கோட்டின் மீது ரம்பம் லாவகமாக அறுக்க ஆரம்பித்தது. அது அறுக்க அறுக்க, அப்பா பலகையை மறுமுனை நோக்கித் தள்ளிக் கொண்டே வந்தார். ரம்பத்தினின்றும் மரத்தூள் மஞ்சள் பூத்தூவலாய்ச் சிதறி, வியர்வை பளபளக்கும் அவர் முகத்தில், முழங்கைகளில் படர்ந்தது.

தனஞ்சயனுக்குக் கையெட்டும் தூரத்தில் பலகை வந்ததும், “அப்படியே பலகையை ரெண்டு பக்கமும் பிடிச்சு மெல்ல இழு,” என்றார். அப்படியே செய்தான். அவன் இழுக்க வேண்டிய தேவையே இல்லாதது போல மிக எளிதாக, மிக மென்மையாக, பலகையின் இரு துண்டுகளும் அவனை நோக்கி வந்தன. தனஞ்சயன் முகத்தில் புன்னகை தோன்றியது. இரு துண்டுகளையும் பக்கவாட்டில் சாய்த்து வைத்தான்.

“அது ரெண்டையும் கூரைக்கு வைச்சுக்கலாம்.” 

வாசலில் நின்று கொண்டு வேலுமணி கூப்பிட்டான். “முதலாளி உன்னை வரச்சொல்றாருப்பா!”

அப்பா வாசலை நோக்கி முறைத்தார். 

“இரு. இந்தா வந்துடறேன்,” என்றார் அவனிடம்.

இயந்திரத்தை அணைத்து விட்டு அப்பா சென்றதும், தனஞ்சயன் மேஜை மீது சாய்ந்தபடி பராக்கு பார்த்தான். பின் மேஜையைச் சுற்றி வந்து அப்பா நின்றிருந்த இடத்தில் குவிந்திருந்த மரத்தூளை காலால் ஒதுக்கினான். திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

மேஜையின் பக்கவாட்டில் தடவும்போது இயந்திரத்தின் ஸ்விட்ச் தட்டுப்பட்டது. அதைத் திருகினான். இயந்திரம் ஓட ஆரம்பித்தது. வட்டவடிவ ரம்பம் அதிவேகத்தில் இயங்குவது ஏனோ தெருப்பையன்கள் விடும் பம்பரத்தை நினைவுபடுத்தியது. இயந்திரம் ஓடும் ஒலி வெளியே கேட்குமா என்று யோசித்தான். அப்பா கதவை மூடிவிட்டுத்தான் சென்றிருந்தார்.

இன்னொரு பலகையை எடுத்து பென்சில் குறிகளைத் தேடினான். பென்சில் குறியின் வழியாக பலகையை ரம்பத்தினூடு செலுத்தினான். அந்தப் பக்கத்திலிருந்து இழுத்ததைவிட இலகுவாக இருந்தது. பாதி பலகைக்கு மேல் அறுபட்டதும்  மறுபக்கம் ஓடி, அங்கிருந்து பலகையை இழுத்தான். சட்டென்று வேலை முடிந்து விட்டது. அவன் கையில் இப்போது இரு பலகைத் துண்டுகள். அப்பா வருவதற்குள் இன்னொரு பலகையையும் அறுத்து முடித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். 

மூன்றாவது பலகையில் பென்சில் குறி நடுபாகத்திலிருந்து கொஞ்சம் திசை மாறிச் சென்றது. பலகையை ரம்பத்தில் சிறிது தூரம் செலுத்தியபிறகு சற்றே திருப்ப வேண்டியிருந்தது. இப்போது இயந்திரம் சற்றே அதிர ஆரம்பித்தது. “தடதட” வென்று பெருஞ்சத்தம். யாரோ அலறும் குரல். சட்டென்று கவிந்த ஓர் அமைதி.

விழித்தபோது அப்பாவின் மடியிலிருந்தான். அவர் அவனது வலதுகையைத் துணி சுற்றிப் பிடித்துக்கொண்டிருந்தார். அதிலிருந்து ரத்தம் ஊறிக்கொண்டிருந்தது. அலறிய குரல் அவனுடையதுதான். “ஏண்டா மவுனே இப்பிடிப் பண்னுனே?” என்றார் அப்பா, நடுங்கும் குரலில்.

* * *

இடதுகை கட்டைவிரலும், ஆட்காட்டி விரலும் சேரும் சதைப்பகுதி கிழிந்திருந்தது. பவானி மருத்துவமனையில் காயத்தைத் தூய்மை செய்து, கட்டுப்போட்டு விட்டார்கள். இரண்டு மூன்று மாத்திரைகளை உட்கொள்ள செய்து, பிருஷ்டத்தில் ஒரு ஊசியும் போட்டு விட்டார்கள். வலி இப்போது நன்றாகக் குறைந்திருந்தது. ஆனால் சற்றே கிறக்கமாக உணர்ந்தான் தனஞ்சயன். 

“வீட்டில இருந்து அம்மா வரலிங்களா?” என்றாள் நர்ஸ்.

“இந்தா வந்துட்டே இருக்கா?”

அம்மா சாயங்காலம் வரை வரவில்லை. அப்பா அவனைக் கூட்டிக்கொண்டு அவரது வீட்டுக்கே திரும்பி விட்டார். “இப்பிடி பண்ணிப்போட்டேனேடா! உங்கம்மாவுக்குத் தெரிஞ்சா கத்துவாளேடா!” என்று அவனருகில் அமர்ந்து புலம்பிக்கொண்டே இருந்தார். தனஞ்சயனுக்குத் தூக்கம் அழுத்திக்கொண்டு வந்தது. அவர் குரல் காதில் கேட்டுக்கொண்டிருந்த ஒரு கணத்தில் சட்டென்று உறக்கத்துக்குள் நழுவி விட்டான். 

விழிப்பு வந்தபோது அப்பா பக்கத்து அறையில் தரையில் படுத்துக் கிடப்பது தெரிந்தது. லுங்கி கலைந்து அண்ட்ராயர் தெரிய கால்பரப்பிப் படுத்திருந்தார். கைவலி சற்றே கூடியிருந்தது. மெல்ல எழுந்து அவரை நோக்கி நடந்தான். அவரது தலைமாட்டில் ஒரு பாட்டில் கிடந்தது. திடீரென்று நினைவு வர, வீட்டுக்கு வெளியே வந்து, கரும்பு வயல் பக்கம் ஓடினான். அங்கே ஸ்பைடர் இல்லை.  

வானம் மெல்ல வெளுத்துக் கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றிலும் தேடினான். “ஸ்பைடர்! ஸ்பைடர்!” என்று பலமுறை கத்திப்பார்த்தான். எங்கேயும் ஸ்பைடரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டுக்குள் ஓடி அப்பாவைக் குலுக்கி எழுப்பினான். கண்களைச் சுருக்கிக் கொண்டு எழுந்தார். 

“நேத்து ராத்திரி ஸ்பைடரைக் கட்டிப் போடல,” என்றான்.

இருவரும் டிவிஎஸ்சில் ஸ்பைடரைத் தேட ஆரம்பித்தார்கள். முதலில் அப்பா பட்டறை வரைக்கும் சென்றார்கள். பின் அதையும் தாண்டி சென்று கொண்டே இருந்தார்கள். ஒரு மரத்தடியில் இரண்டு நாய்கள் சுற்றிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.

 “கண்டுபிடிச்சுடலாம்டா மவுனே. இங்கதான் எங்கியாவது இருப்பான்,” என்றார் அப்பா.

மேலும் ஐந்து நிமிடங்கள் பயணித்தபின், தார் ரோட்டிலிருந்து பிரிந்து ஜல்லிக்கல் தொழிற்சாலைக்குச் செல்லும் மண்பாதையில் ஸ்பைடரைக் கண்டுபிடித்தார்கள். பெரிய சைஸ் வண்டி ஏதாவது ஏறி இருக்க வேண்டும். பின்னங்கால்கள் முழுமையாக நசுங்கி சிதைந்து இருந்தன. முன்பாகத்தில் எந்தக் காயமும் இல்லை. ஸ்பைடர் தூங்குவது போலவே இருந்தது. அப்பா வேட்டியை உருவி ஸ்பைடரின் பின்பாகத்தில் சுற்றினார். அவர் கண்கள் கலங்கி இருந்தன. “ பத்திரமா புடிச்சுக்கோடா மவுனே,” என்றார். அவர் குரல் நடுங்கிக் கொண்டிருந்தது. 

மண்பாதையில் லாரி டயர் தடம் இருந்ததை இருவருமே கவனித்தார்கள். கார் ஒன்று எதிரில் வந்துகொண்டிருந்தது. அப்பா கண்சுருக்கி காரை உற்றுப்பார்த்தார். பின் கையை குறுக்கே போட்டு காரை நிறுத்தினார்.

கார் கண்ணாடியைத் திறந்து வெளியே தலை நீட்டிய கண்ணாடி அணிந்த பெரியவரிடம், “ஏங்க முதலாளி, அநியாயமா உங்க வண்டி எங்க நாயை கொண்ணு போட்டுடுச்சுங்க,” என்றார். துணிசுற்றிக் கிடந்த ஸ்பைடர் பக்கம் கை நீட்டிக் காட்டினார். 

பெரியவர், “அடடா! ஆனா நம்ப வண்டி எதும் நேத்து லோடேத்த வரலயே. நல்லாத் தெரியுமா? வண்டி நம்பர் எதும் பாத்திங்களா?” என்றார்.

“ஏங்க நடுராத்திரி நடந்துருக்கு. வண்டி நம்பர் எங்க போயி பாத்துகிட்டு? இப்ப இதுக்கென்ன பதில் சொல்றீங்க?” என்றார் அப்பா.

பெரியவர் முகம் மாறியது. “யோவ் எங்க வண்டின்னு எப்படி நிரூபிப்பே? சரி அப்படியே இருந்தாலும் என்ன பண்ணீர முடியும் உன்னால?” என்றார்.

அப்பா ஒரு கணம் அமைதியானார். ஸ்பைடருக்குப் பக்கத்தில் குத்தவைத்த அமர்ந்திருந்த தனஞ்சயனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தார் அப்பா. தோள்கள் வேகமாக ஏறி இறங்குவதிலிருந்து அவர் வேகமாக மூச்சு வாங்குவது தெரிந்தது. மிகுந்த கோபம் வந்தால் அப்பாவுக்கு மூச்சு வேகமாக வரும். பெரியவரைப் பார்த்து கை நீட்டினார் அப்பா. 

 “ஸ்பைடர்ன்னா எம்பையனுக்கு உசிரு தெரியுமா?,...” என்றார். 

பின் விருட்டென்று திரும்பி டிவிஎஸ்சை நோக்கிச் சென்றார். தனஞ்சயன் ஸ்பைடரை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு பின்னால் ஏறி அமர்ந்ததும் வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றார்.

அப்பாவின் வீட்டுக்குப் பின்னாலிருந்த கரும்பு வயலில் ஸ்பைடரைப் புதைத்தார்கள். அப்பா அன்று வேலைக்குப் போகவில்லை. தனஞ்சயன் அன்று முழுக்க அழுது கொண்டே இருந்தான். அம்மா சாயங்காலமாய் ஒரு டாக்சியில் வந்து இறங்கினாள். அப்பாவிடம் பயங்கரமாய்க் கத்தி சண்டை போட்டாள். “எல்லாம் ஆச்சு. எம்பையனையும் கொன்னு போட்டிருப்பே. இனி வீட்டுப்பக்கம் தயவு செஞ்சு வராதே!” என்று கையெடுத்துக் கும்பிட்டாள். தனஞ்சயன் அவளோடு காரில் ஏறி வீட்டுக்குப் போனான்.

* * *

இதெல்லாம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. அப்பா வீட்டுக்கு வருவதேயில்லை. ஒரு நாள் தனஞ்சயன் பேருந்து நிலையத்துக்கு அருகிலிருந்த கடை ஒன்றில் நோட்டுப் புத்தகம் வாங்குவதற்கு சென்ற போது அப்பாவைப் பார்த்தான். கடை முன்னால் டெம்போ ஒன்று வந்து நின்றது. உள்ளே அப்பா. வேலுமணிதான் ஓட்டிக்கொண்டு வந்திருந்தான். 

“கண்ணு, அப்பா சென்னைக்குப் போறேண்டா,” என்றார் டெம்போவுக்குள் அமர்ந்தபடியே. அவர் நிறைய மாறி இருந்ததாக தனஞ்சயனுக்குப் பட்டது. சற்றே மெலிந்திருந்தார். எப்போதும் அவரை தாடியோடுதான் பார்த்திருக்கிறான். இப்போது மழமழவென்று சவரம் செய்திருந்தார். வழக்கத்துக்கு மாறாக பேண்ட் அணிந்திருந்தார்.

“அங்க சினேகிதகாரன் ஆர்கெஸ்ட்ரா வைச்சிருக்கான். அவன்கிட்ட வாசிக்க முடியுமான்னு கேட்டேன். ரொம்ப தயக்கத்துக்கு அப்புறம் சரின்னுருக்கான்,” என்றார். 

சில கணங்கள் இருவர் நடுவிலும் மௌனம்.  பின் “இனி வயலின வுடறதா இல்லடா கண்ணு,” என்றார். 

டெம்போவுக்குள்ளிருந்து கை நீட்டி அவனது கையைப் பற்றினார். காயம் இப்போது நன்றாக ஆறியிருந்தது. அதன் தழும்பைத் தடவினார். சட்டென்று அவர் முகம் உற்சாகமானது. 

“இந்தத் காயத்தால உனக்கு அந்த இடம் கொஞ்சம் விரிஞ்சு குடுத்துருக்கு. ஸ்ட்ரிங் எல்லாம் நல்லா ரீச் ஆகும்,” என்றார்.

தனஞ்சயன் ஒன்றும் பேசவில்லை.

“பெரியவர் கிட்ட போய் தினம் நிப்பேன். அவர் அடிச்சு தொரத்துனாலும் சரி. ‘எம்பையனுக்கு சொல்லித்தரேன்னு நீங்கதானே சொன்னீங்க? அவன் ஸ்கூல் முடிஞ்சோன்ன நேர உங்ககிட்டதான் கூட்டிட்டு வருவேன்’னு சொல்லப்போறேன்,” என்றார்.

வண்டி கிளம்பிப்போனதும் தனஞ்சயன் கடை முன்னாலேயே சற்று நேரம் நின்றான். இடது உள்ளங்கையை விரித்து விரித்துப் பார்த்தான். கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்குமிடையேயான இடைவெளி தற்போது அதிகமாயிருந்த மாதிரிதான் பட்டது.

* * *










 


மேலும் வாசிக்க