23 செப்டம்பர், 2024

மொழிபெயர்ப்புக்கான கனடிய இலக்கியத் தோட்டத்தின் விருது



கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2023-க்கான மொழிபெயர்ப்பு விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பவா செல்லத்துரையின் புகழ்பெற்ற நூலான “சொல்வழிப்பயணம்” நூலை A Journey Through Words என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயெர்த்திருந்தேன். அதற்கு முன் ஜெயமோகனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவை அமெரிக்க, ஆங்கில இதழ்களில் வெளியாகி கவனம் பெற்றன. புது தில்லியின் ரத்னா பதிப்பகம் அவற்றை நூலாக A Fine Thread and Other Stories என்ற பெயரில் வெளியிட்டது. இப்பணிகளைக் கருத்தில் கொண்டு எனக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 

கனடிய இலக்கியத்தோட்டத்தின் நிறுவனர்களில் ஒருவரான எழுத்தாளர் திரு. முத்துலிங்கம் சென்ற மாதம் அலைபேசியில் அழைத்து என்னிடம் இதை அறிவித்தார். எனக்கு விருது அறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியைவிட அவர் மூலம் தெரிவிக்கப்பட்டதுதான் பெரும் உவகை கொள்ள வைத்தது.  முத்துலிங்கம் அய்யா தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளி. அவர் கையால் இந்த விருது வழங்கப்படுவது எனக்குப் பேறு. 

இதற்கான விருது விழா கனடாவின் ஓண்டாரியாவில் வரும் அக்டோபர் 20 தேதி நடக்கிறது. என் மனைவி அனுஷாவும், நானும் அங்கு பதினெட்டாம் தேதி வாக்கில் செல்வோம். கனடா செல்வதற்கான விசாவுக்கு விண்ணப்பித்து, இன்னும் இரண்டொரு நாட்களில் கனடிய எம்பஸியிலிருந்து  கடவுச்சீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்,

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும்.



என்னுடன் சேர்ந்து புனைவுக்கான விருதை ஏ.எம். றஷ்மியும், அல்புனைவு விருது பி. விக்னேஸ்வரனுக்கும், கவிதை விருது இளவாலை விஜயேந்திரனுக்கும், இலக்கியம் மற்றும் சமூகப்பணிக்கான விருது பார்வதி கந்தசாமிக்கும் வழங்கப்படுகிறது. 

இவ்வாண்டுக்கான இயல் விருது பெறுபவர் சிந்து வெளி ஆய்வாளர் திரு. ஆர். பாலகிருஷ்ணன். இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல, அது ஒரு நாகரிகத்தின் மொழி’ என்றும் ‘சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்திற்கான இலக்கியம்’ என்றும் தொடர்ந்து வலியுறுத்திவருபவர். சிந்துவெளி நாகரிகத்துக்கும் பண்டைய தமிழகத்திற்கும் உள்ள உறவு குறித்த பாலகிருஷ்ணன் எழுதிய ‘Journey of a Civilization: Indus to Vaigai’ என்கிற நூல் வெளியானபோது, அது சிந்துவெளி ஆய்வுலகில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது. பின்னர் வெளியான அதன் தமிழ்ப் பதிப்பான ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடைய பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது முப்பது ஆண்டிற்கும் மேலான ஆராய்ச்சியில் உருவான இந்த நூலை மக்கள் பதிப்பாகக் கொண்டுவர தமிழ்நாடு அரசிற்கு அர்ப்பணித்துள்ளார். அது விரைவில் வெளிவர உள்ளது. திருக்குறள், சங்க இலக்கியம் ஆகிய இரண்டையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதை தனது வாழ்நாள் பணியாகச் செய்து வருகிறார் பாலகிருஷ்ணன். 

கனடிய இலக்கியத்தோட்டத்தின் விருதுகள் மீது எனக்கு மிகுந்த மதிப்புண்டு. சென்ற ஆண்டுகளில் பெரும் மேதைகளுக்கு இயல் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கான மொழிபெயர்ப்புகள் இதற்கு முன்பு  கல்யாண் ராமன்,  ரா. கார்த்திகேசு, வைதேகி ஹெர்பெர்ட், மார்த்தா ஆன் செல்பி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் நிரையில் இணைவது எனக்குப் பெருமை. அதே நேரம், தொடர்ந்து செயலில் ஈடுபட்டிருக்கச் செய்யும் வினையூக்கியாகவும் இவ்விருதினைக் கொள்வேன்.




மேலும் வாசிக்க