17 ஏப்ரல், 2024

சீதா ராமன் - ஜமீலா கணேசன் கட்டுரை - என் பார்வை





சீதா ராமன் - ஜமீலா கணேசன் கட்டுரை

மிக நுட்பமாகவும், விரிவாகவும் எழுதப்பட்ட கட்டுரை ஜமீலா. இலக்கிய நயம் பாராட்டல் கட்டுரைகளுக்குண்டான எல்லா இலக்கணங்களோடும் பொருந்தி வரும் விதத்தில் எழுதியிருக்கிறீர்கள். இஸ்கான் ஊர்வலத்தில் சிறுவர்களுக்குள் பார்த்த வில் சுமந்த ராமன் உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய ஓர் எளிய கேள்விக்கு விடை தேடிச் செல்லும் பயணமாகவே இந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது. அன்பே உருவான ராமன், தாடகையை வதம் செய்யத் தயங்கிய ராமன், ராமகாதையின் பிற்பகுதியில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவிக்கும் நிலைக்கு ஏன் தள்ளப்பட்டான் என்பதுதான் அந்தக் கேள்வி. கட்டுரை ஆசிரியர் சிந்தித்து, ஆராய்ந்து அதன் காரணம் ராமன் சீதை மேல் கொண்டிருந்த காதலே என்ற முடிவுக்கு வருகிறார். அவன் தசரத ராமனோ, கோசலா ராமனோ அல்ல, சீதா ராமனே என்று உறுதியாகக் கூறுகிறார். அதற்குக் கம்பனைத் துணைக்கழைத்துக் கொள்கிறார். அவனது பாடல்களிலிருந்து, வால்மீகியில் நாம் காண இயலாத காதல் ததும்பும் பகுதிகளை நமக்கு எடுத்து விளக்குகிறார். 


கம்பன் மிதிலைக்குள் நுழைகையில் இருவரும் பார்த்துக் கொள்வதிலிருந்து துவங்கி (That அண்ணலும் நோக்கினான் moment!), மறு நாள் தோழியரோடு கோயில் பூஜைக்கு வரும் சீதையைக் கண்டு ராமன் மயங்கி நிற்றல், சீதையின் கண் வழி புகுந்த காதல் (பால் உறு பிரை), ராமன் வில்லை முறித்ததும் (எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்), முறித்தது அவன் இல்லையெனில் உயிர் துறப்பேன் என்று அவள் சொல்லுதல், ராமன் தேர் உலா வருகையில் பெண்கள் அவனழகு கண்டு மயங்குதல் (தோள் கண்டார்- தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார்-தடக்கை கண்டார்), திருமணத்துக்கு முந்தைய இரவு, திருமண நிகழ்வு, கானகம் புகுதல், அதிகம் பேசாத ராமன் காட்டில் இருக்கும் போது, பதினாறு பாடல்களில் இயற்கையழகை விவரிக்கிற சாக்கில் அன்பு மனைவியின் அழகை விவரித்தல் (காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை), பஞ்சவடியில் இலக்குவன் பர்ணசாலை அமைக்கையில் ராமனும் சீதையும் கண்களாலேயே பேசுதல் (தோளின் கண் நயனம் வைத்தாள்), சீதையைப் பிரிந்து ராமன் இரவெல்லாம் துடித்தல் (காய்த்து இரும்பை, கருமகக் கம்மியன்), சுக்ரீவன் சீதையின் அணிகலன்களை காட்டுகையில் ராமன் துடித்தல் (இரும்பு கண்டனைய நெஞ்சம் எனக்கில்லை) என்று சீதை மேல் ராமனுக்கிருந்த காதல் குறித்து கம்பன் எங்கெல்லாம் பாடியிருக்கிறான் என்ற விரிவானதொரு வரைபடத்தையே அளித்திருக்கிறார் ஜமீலா.

கட்டுரை முழுவதும் சீதை குறித்தும், ராமன் குறித்தும் தனக்குள் தோன்றும் வியப்புக்களை, கேள்விகளை, ஒரு குழந்தைக்குரிய ஆர்வத்தோடு முன்வைத்து, அதற்குக் கம்பனில் விடை கிடைக்குமா என்று பார்த்திருக்கிறார். கம்பனுக்கும் முன்பே தமிழில் ராமகாதை பரிச்சயம் இருந்திருக்கிறது என்பதை நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் ஐம்பத்து நாலாவது பாடலுக்கு எழுதிய உரையை மேற்கோள் காட்டி நிறுவுகிறார். கம்பன் மேல் அவருக்குள்ள காதலும், ஒரு மேதையின் முன் பணிந்து நின்று, வியந்து மகிழும் குழந்தையுள்ளமுமே இக்கட்டுரையைச் சிறப்பு மிக்கதாக்குகின்றன.  நான் வாசிக்கும் சில இலக்கியக் கட்டுரைகள் முழுவதும், “எனக்கு எவ்ளோ தெரீது பாத்தியா?” என்று ஆசிரியரின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும். அதுவே வாசிப்பிலிருந்து நம்மை வெளியே தள்ளி விடும். பணிவில் ஓர் அழகு இருக்கிறது. கற்றோர்க்கு நன்றாம் பணிதல். மேதைமையின் முன் பணிதலே இக்கட்டுரையை சிறப்பு மிக்கதாக்குகிறது. வாசிக்க, வாசிக்க இன்பமூட்டுகிறது.

கம்பன் பாடல்களை மேற்கோள் காட்டியிருந்த விதத்திலேயே ஆசிரியர் கம்பனில் எவ்வளவு தோய்ந்திருக்கிறார் என்பதற்குச் சான்றாக இருந்தது. நம்மையும் கம்பனைக் கற்கத் தூண்டுகிறது இந்தக் கட்டுரை. இது போன்ற கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து எழுதினால் கம்பனில் நுழைவதற்கு பலருக்கு உதவியாயிருக்கும்.


எரி நட்சத்திரம் - சிறுகதை, பாலாஜி ராஜூ - என் பார்வை

 


எரி நட்சத்திரம் - சிறுகதை, பாலாஜி ராஜூ

அன்புள்ள பாலாஜி,

கதை எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் மொழி தீவிரமாகவும், தத்துவார்த்தமாகவும் ஒழுகிச் செல்கிறது. அழகாகக் கதையைக் காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள். உரையாடல்கள் தேர்ந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கை வருணனை மிகத் துல்லியமாக வந்திருக்கிறது. நீங்கள் கதையில் சாதிக்க நினைத்ததைச் சாதித்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

மலைகளின் மீது அவருக்கிருக்கும் பிரேமை நன்றாக வெளிப்பட்டிருந்தது. இயற்கை இக்கதையில் ஒரு பாத்திரமாகவே வெளிப்பட்டது. அந்தத் தம்பதிகளின் பயணம் குறித்த குறிப்புகளும் அழகானவை.

கதையின் முடிவும் எனக்குப் பிடித்திருந்தது. ஒரு சிறுகதைக்குத் தேவையான சின்ன வெளிப்பாடு. “ஆம்” என்று மட்டும் சொன்னேன் - என்ற வரி மிகக் கனமானது.

இவ்வளவு சிறிய கதையில் உங்களால் கனமான விஷயத்தைக் கூற முடிகிறது. எனக்குச் சற்றுப் பொறாமை.

எரி நட்சத்திரத்தில் துவங்கி அதிலேயே முடிவது கதையை அழகாக்குகிறது. அவர் எரி நட்சத்திரம் பார்த்த அதே வீட்டில், அதே சாளரம் வழியே, கதை சொல்லியும் பார்ப்பது கவித்துவமான தருணம்.

ஒரு புனைவெழுத்தாளனுக்குரிய மொழி உங்களுக்குக் கைவந்து விட்டது. எந்த எழுத்தாளரையும் நினைவூட்டவில்லை. நீங்கள் நிறைய புனைவு எழுதுங்கள். பல ஆங்கிலப் பதங்களை மிக அழகாகத் தமிழ்ப்படுத்தியிருந்தீர்கள். 

அமெரிக்க வாழ்க்கையை எழுதும் தமிழர்கள் மிகச்சிலரே. அவ்வகையில் நீங்கள் தனித்துவம் மிக்கக் கதைகளை எழுதக்கூடும்.

தயவு செய்து விமர்சனங்களுக்காகவோ, உயர் பீடத்திலிருப்பவர்களின் அங்கீகாரம் இன்னும் வரவில்லை என்பதற்காகவோ, உங்கள் எழுத்து இன்னும் தகுதி பெறவில்லை என்ற முடிவுக்கு வரவேண்டாம். எழுத்தில் இயங்கும் போது எழுத்தாளனுக்கென்றே ஒரு சிறு ஆணவம்தான் அவனை படைப்பில் ஈடுபடுத்துகிறது. தனி வாழ்க்கையில் அந்த ஆணவத்தோடு இருக்கத் தேவையில்லை. ஆனால் எழுதும்போது அது தேவை. (எனக்குச் சொல்லிக் கொள்பவை). தொடர்ந்து எழுதுங்கள்.

என் கண்ணில் பட்ட சிறு, சிறு விஷயங்களைச் சொல்கிறேன். வாகனம் என்று முதலில் சொல்கிறீர்கள். என்ன வாகனம் என்று சொல்லவில்லை. பின்னர் அவரே ஆர்.வி என்று சொல்கிறார். எனவே என்ன வாகனம் என்று சொல்லத் தேவையில்லை. சிறு குருவிகள் என்ன வகை என்று எழுதினால் நன்றாக இருக்கும். “பொருட்களால் நிறைந்திருந்த வாகனம்” என்னென்ன பொருட்கள் என்று பட்டியலிட்டால் வாசகன் கற்பனையிலேயே அவை பயணத்துக்கான பொருட்கள் என்பதைக் கண்டுவிட முடியும். கதையில் பொதுவான தகவல்களைத் தருவதற்கு பதில் குறிப்பான தகவல்களைத் தரலாம்.

“நான் இதே வீட்டை வாங்கியிருப்பதையும் இங்கு குடிபெயரப்போவதையும் அவரிடம் சொல்லவில்லை.” - இந்த வரி தேவையா என்று யோசிக்கவும். நீங்கள் அந்த மனிதர் சொன்ன அதே எண்ணுள்ள வீட்டுக்குள்தான் நுழைகிறீர்கள். அவ்வீடு எவ்வகையாயினும் உங்களுக்குத் தொடர்புள்ளதாக இருக்குமென்பதை வாசகன் ஊகித்து விடுவான்.

கதையின் உள்ளடகத்தில் எனக்கிருக்கும் ஐயங்கள் சில:

கதை சொல்லி ஒரு விதமான குற்ற உணர்வுடன் அக்கதையைக் கேட்பதாகப் படுகிறது. அது ஏன்? அப்படி ஏதேனும் காரணம் இருந்தால் அதைக் கதையில் கோடி காட்டலாம்.

எரி நட்சத்திரம் கணத்தில் தோன்றி மறையும் ஒன்று, அது போல்தான் மனித வாழ்க்கையும் உறவுகளும் என்பதாக நான் புரிந்து கொள்கிறேன். அது அபூர்வமாகத் தோன்றக் கூடியது. மனித வாழ்வும் அங்கனமே. இதை இன்னும் எக்ஸ்ப்ளோர் செய்யக் கதையில் இடம் இருக்கிறதா?

கதை சொல்லி இக்கதையில் அவருடைய கதையைக் கேட்பதன் மூலம் அடையும் மாற்றம் என்ன?

இது மாதிரி பலவிஷயங்களை வாசகன் ஊகத்துக்கு விட்டிருப்பதைப் புரிந்து கொள்கிறேன். இருப்பினும் இன்னும் சில முறை வாசித்து, நிரப்ப வேண்டிய இடைவெளிகள் உள்ளனவா என்று பார்க்கலாம்.

அவர் காலி செய்து விட்டுச் சென்ற அதே வீட்டை கதை சொல்லி வாங்கியிருக்கிறான். அவ்வீட்டில் அவரது நினைவுகள் உள்ளன. இதற்கும் மேலதிகமாக இக்கதை சொல்ல வருவதென்ன? (இக்கதைசொல்லி போலவே, எனக்கும், வீட்டை வாங்குகையில் என் வீட்டு முன்னாள் சொந்தக்காரர் குறித்து எதுவும் தெரியாது. அமெரிக்க வாழ்வின் இந்த குரூர யதார்த்தத்தை இக்கதை நன்றாகப் பதிவு செய்திருக்கிறது) சிறுகதை வாழ்வின் ஒரு துணுக்கை விவரிப்பதோடு நின்று விடாமல், ஆதாரமான ஒரு கேள்வியை எழுப்பக்கூடியதாகவும் அமைந்தால் சிறப்பாக இருக்கும். உதாரணத்துக்கு, கதைசொல்லி உள்ளத்தில் அந்த வேளையில் உழன்று கொண்டிருக்கும் சொந்தப் பிரச்னையை எதிரொலிப்பதாக அந்தக் கதை அமைந்திருந்தால்?

எழுத்துப் பிழை, நிறுத்தற்குறிப்பிழைகள் சில உள்ளன. நூறாண்டுகள் கழித்தும் ஏதோ ஒரு வாசகன் இக்கதையை வாசிக்க வாய்ப்புள்ளதால், இப்போதே திருத்தி விடுவது நல்லது. (எனக்கும் சொல்லிக் கொள்கிறேன்).

இந்தக் கதை ஓர் இலக்கிய இதழில் வெளியாவதற்கான முழுத்தகுதியும் கொண்டது. நீங்கள் இதை சொல்வனத்துக்கு அனுப்பலாம். தொடர்ந்து நீங்கள் படைப்புகளை இதழ்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதே என் கோரிக்கை. சொல்வனம், பதாகை போன்ற இதழ்கள் பாதுகாப்பானவை என்றே நினைக்கிறேன். அவற்றுக்கு நீங்கள் அனுப்பலாம்.


கரிப்பு - சிறுகதை, பாலாஜி ராஜூ - என் பார்வை


 

கரிப்பு - சிறுகதை, பாலாஜி ராஜூ

அன்புள்ள பாலாஜி,

கதை மிகவும் நன்றாக வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்க இயலவில்லை. மொழி நன்றாக கைகூடி வந்திருக்கிறது. உங்கள் ஊர் சூழ்நிலையை அப்படியே கண்முன் வரைந்து காட்டியிருக்கிறீர்கள். நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட கதையைப் போல் தெரிகிறது. இதைப் பாராட்டாகவே சொல்கிறேன். கதையின் ஒவ்வொரு பகுதியிலும் முழுமை கூடியிருக்கிறது. கிணற்றை ஒரு படிமமாக மாற்ற நீங்கள் எந்த சிரத்தையும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தது நல்லது. எனவே கிணறு இயல்பாகவே படிமமாகி விட்டிருக்கிறது. ஊரின் மக்களும், அவர்களது வாழ்வியலும் அழகாக, நேர்த்தியாக, அவற்றுக்கான தனித்துவம் மிக்க சொற்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வாசிக்க மிகச் சுகமாக இருந்தது. லாரி ஓட்டும் மலையாளிகள் குளிக்கும் உப்புத்தண்ணிக் கிணறு அவர்களைக் காவு வாங்கி விடுவதைக் கதையாக்கி இருப்பது சிறுகதை வடிவம் குறித்த உங்களது போதத்தைக் காட்டுகிறது.

நேரடியாகக் கதை சொல்லல் முறையைக் கையாண்டிருக்கிறீர்கள். உண்மையில் இப்படிச் சொல்வதுதான் கடினம். எனக்கு எந்தக் குறையும் கண்ணில் படவில்லை. இது ஆகச் சிறந்த கதையா என்பதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் இது தனித்துவம் மிக்க கதை என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.


மேலும் வாசிக்க