31 மார்ச், 2015

இரு கவிதைகள்

1.
செவ்வகத்தைச் சதுரம்
என்றே கொள்க.
இரண்டிலும்
எதிரெதிர் பக்கங்கள் இணையானவை
அளவில் சமமானவை.
நான்கு மூலைகளிலும் பாகை தொண்ணூறுதானே.
ஓரிணை மற்றோரிணையவிட நீண்டிருப்பது
காலத்தின் அவசியம் கருதியே.
ஓரிணை நீள்வதின் தேவை அறிந்து
காலந்தோறும் குறுக்கி வாழந்தது மற்றோரிணை.
நவீன சமத்துவம் கருத்தில் கொண்டு
இனி செவ்வகத்தைச் சதுரம் என்றே அழைத்து வைப்போம்.

2.
தண்ணீரினுள் அமிழும் பந்து
தலை சிலுப்பி மேலே எழும்பும்.
காற்றடைத்த பொருளுக்குத்
தண்ணீருடன் உறவு இல்லை.
மேற்பரப்பில் வழியும் நீரை வளிக்காற்று உண்டு விடும்.
பந்துக்கில்லை பந்தமும் பாசமும்.
பந்துக்குள்ளும், வெளியும் ஒரே காற்றுதான்.
தோல் கிழிந்தால் வேற்றுமை அழியும்.
பந்து என்பது காற்றேதான்.


                                                                      

24 மார்ச், 2015

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எழுதிய பதில் வராத கடிதம்

அன்புள்ள எஸ்ரா,

ஆத்மா நாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி வாசித்தேன். நீண்ட நாள் கழித்து உங்கள் சிறுகதை ஒன்றை வாசிக்கிறேன். பல்வேறு விவாதங்களை எழுப்பும் சிறுகதை இது. குமாரசாமி ஜேஜேயை நினைவுபடுத்தினான்( சொற்களின் இடைவெளிக்குள் நீந்துவது சுகமானது/ வெட்டவெளியில் மூத்திரம் அடிப்பது மாதிரி./ஊரைக்கூட்டி வைத்து முதலிரவு நடத்த முடியாது)
கவிதைகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ளும் சிறுகதை என்பதே புதுமையான அணுகுமுறையாக இருந்தது. கோழிரோம்த்தினைக் குறித்த விவாதத்தை பிரமிள் கவிதைக்கு நீட்டியது சுவாரஸ்யமான திருப்பம். கதைக்குள் நிறைய கவிதைகள். ஈழத்து மஹாகவியின் கவிதை சந்தத்துடன் இழைந்த சுகமான அனுபவம். கவிதையைக் குறித்து கவிதையைப் போன்றே ஒரு சிறுகதை.

என் போன்று அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லாம் உங்களை இணையத்தில்தான் அதிகம் வாசிக்க இயலும். நீங்கள் உங்கள் தளத்தில் நிறைய படைப்புகளை வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

15 மார்ச், 2015

சிவராம காரந்தின் அழிந்த பிறகு

சிவராம காரந்தின் அழிந்த பிறகு
சிவராம காரந்தின் அழிந்த பிறகு நாவலை சித்தலிங்கையா மொழிபெயர்ப்பில் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். ஜெயமோகன் எழுதிய கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற நூலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நாவல்களில் ஒன்று இது.
ரயிலில் நட்பு கொண்ட நண்பர் யசவந்த ராயர் மரணத்துக்குப் பிறகு அவரது வேண்டுகோள்களை நிறைவேற்றப் புறப்படுகிறார் ஆசிரியர் சிவராம காரந்த். இந்தப்பயணத்தில் அவர் சந்திக்கும் நண்பரின் உறவினர்கள் மூலமாக யசவந்தரின் வாழ்க்கை குறித்தும், அவரது மேன்மையான பண்பு நலன்கள் குறித்தும் அறிந்து கொள்கிறார். மட்டுமன்றி நற்பண்புகள் நிறைந்த ஒருவனைச் சுற்றி வாழும் சுயநலம் மிகுந்த உறவுகள் குறித்தும் அறிந்து கொள்கிறார். நண்பர் உயிரோடிருந்தால் தன்னை நம்பியிருந்த, தன் நலனையே பெரிதென மதித்த உயிர்களுக்கு என்னென்ன விதத்தில் உதவ வேண்டும் என்று எண்ணியிருந்திருப்பாரோ அவற்றைத் தன் கடமையாகவே எண்ணி செய்து முடிக்கிறார் ஆசிரியர். யசவந்த ராயரின் உறவுகளினூடாக ஆசிரியர் நிகழ்த்தும் பயணமே நாவலின் கதை.
       யசவந்த ராயர் இறப்பதற்கு முன் அவர் இறுதிக்காலத்தில் வரைந்த ஓவியங்களையும், நாட்குறிப்புகளையும், தன்னிடமிருந்த பதினைந்தாயிரம் ரூபாய் பணத்தையும் சிவராமகாரந்திடம் விட்டுச் செல்கிறார். அந்நாட்குறிப்புகளையும், அவரது ஓவியங்களையும் கொண்டு, தான் சிறிது காலமே பழகியிருந்த நண்பரின் குணச்சித்திரம் பற்றிய கற்பனையை உருவாக்கிக் கொள்கிறார் ஆசிரியர். நான்கு பேருக்கு தன் பெயரில் மாதாமாதம் பணம் அனுப்பச் சொல்லிக் கேட்டிருப்பார் யசவந்தர். அந்த நான்கு பேரையும் சந்தித்து நண்பரின் ஆளுமையைப் பற்றி அறிய விழைகிறார் காரந்த். அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் யசவந்தரின் உறவினர்களும், ஊர் மக்களும் அவரைப் பற்றிச் சொல்லும் கதைகளும், நிகழ்ச்சிகளும் அவர் பற்றித் தான் மனத்தில் வரைந்து வைத்திருந்த சித்திரம் சரியே என்பதை காரந்துக்கு உறுதிப் படுத்துகின்றன. யசவந்தரைச் சுற்றியிருந்த உறவுகளில் யார் அவர் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்பதையும், யார் அவர் செல்வத்தின் மீது மட்டும் குறியாயிருப்பவர்கள் என்பதையும் அவரது பயணம் அவருக்கு உணர்த்துகிறது. அவர் மீது அன்பு கொண்டவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாகவும், வாழ்க்கைக்கு உதவும் வண்ணமும் அவர் தன்னிடம் அளித்துச் சென்ற பணத்தைச் செலவிடுகிறார். தன் நண்பரின் கடமையைத் தானிருந்து செய்து முடித்து விட்ட திருப்தியில் மனம் நிறைகிறார்.
       நாவலில் கன்னட நிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சித்திரங்களாக அறிமுகப்படுத்துகிறார் காரந்த். அவருக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வம் யசவந்த ராயர் இறுதியாக விட்டுச் சென்ற ஓவியங்களை அவர் விவரிப்பதிலிருந்து தெரிகிறது. கதை முழுக்க ஒரு பெயராகவே வரும் யசவந்தர் தன் உயர்ந்த பண்பு நலன்களாலும், உறுதியான கொள்கைகளாலும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார். அவருக்கு இருக்கும் சில ஒவ்வாத பலவீனங்கள் கூட அவரது ஆளுமையின் பிரம்மாண்டத்தின் முன் மறைந்து விடுகின்றன.

       வேகமாகச் செல்லும் நாவல். வாசிக்கச் சுகமாகவும், ஸ்வாரஸ்யமாகவும் உள்ள நாவல். சித்தலிங்கையாவின் மொழிபெயர்ப்பு அருமையானது; எளிமையான சொற்களும், சிக்கலில்லாத வாக்கியங்களும் கொண்டது. தேசிய புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நாவலை www.openreadingroom.com என்ற தளத்தில் வாசிக்கலாம். தரவிறக்கிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. மேலும் பல முக்கியமான இந்திய நாவல்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் இந்தத் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. அழியாச் சுடர்கள், உலக இலக்கியம் தளங்கள் போன்று இத்தளமும் பரவலாக இலக்கிய வாசகர்களிடத்துச் சென்றடைய வேண்டும்.  

9 மார்ச், 2015

தமிழ் நாவல்கள் இணையத்தில் வாசிக்க



 நான் ஒரு பொக்கிஷத்தை அண்மையில் கண்டறிந்தேன். அது குறித்து ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதினேன். அவர் தளத்தில் வெளியானால் நிறைய பேரை அது சென்றடையும் என்பதற்காக. விரைவில் அவர் வெளியிடுவார் என நினைக்கிறேன்.

ஜெயமோகன் கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற நூலில் குறிப்பிட்டுள்ள பல நாவல்கள் கீழ்க்கண்ட தளத்தில் கிடைக்கின்றன. தரவிறக்கமும் செய்து கொள்ளலாம். அற்புதமான தளம். நாவல்கள் என்ற டேக் ஐ கிளிக் செய்து பாருங்கள்.


மேலும் வாசிக்க