மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஒருபக்கமும்,
வீரியத்தோடும், விடாமலும் எழுத இயலுமா என்ற ஐயம் மறுபக்கமும் ஒன்றையொன்று சமன்
செய்தபடி நாட்கள் கடந்துவிட இன்று முகநூலில் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொண்டிருந்தபோது உழவர் திருநாளிலிருந்தே எழுத ஆரம்பித்து விட்டால் என்ன என்று
தோன்றியது. மீண்டும் எழுதத்துவங்கி இரண்டு நாட்களாகிறது. ஒருமணி நேரம்
கணினித்திரையையும், படுக்கறையின் சகல பரிமாணங்களையும் பராக்கு பார்த்தபடி யோசித்ததில்
முக்கால் பக்கம் எழுத முடிந்தது. கட்டுரையோ, சிறுகதையோ என்றால் எழுத
ஆரம்பிப்பதற்கு முன்பே மனதில் ஒரு தெளிவான வடிவம் பிறந்திருக்கும். நீண்டநாள்
கனவான நாவலைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மனத்துக்குள் தெளிவான வடிவம்
இல்லாததாலும், எங்கேயாவது போய் முட்டி நின்று விடுவோமோ என்ற ஐயம் காரணமாகவும்
வரிகள் மெதுவாகவே வளர்கின்றன.
மாலத்தீவுகளில் இருந்து வேலையை விட்டுவிட்டு
வந்து இப்போது அமெரிக்காவில் தெற்குகரோலினா மாகாணத்தில் ஆசிரியர் பணிபுரிய ஆரம்பித்து
ஐந்து மாதங்களாகி விட்டது. இந்த அமெரிக்க வாழ்க்கைக்குத் தகவமைத்துக் கொள்வதற்கே
இத்தனை நாட்களாகி விட்டன. மாலத்தீவுகளைப் போல, இங்கே அவ்வளவு நேரம் கிடைப்பதில்லை.
கிடைத்தாலும் இருக்கும் நேரத்தை பள்ளியின் பணிச்சுமையை தளர்த்திக் கொள்ளும்
செயல்களிலேயே செலவிட்டிருக்கிறேன். மீண்டும் எழுத ஆரம்பித்து இரண்டு நாட்களிலேயே
ஏன் எழுத்தைத் தவம் என்று சொல்கிறார்கள் என்று புரிந்தது. எழுத்தைத் தவமாகக்
கொள்ளவே எனக்கும் ஆசை. ஆனால் பழக்கங்கள் என்னை கட்டியிழுத்துக் கொண்டிருக்கின்றன.
கொஞ்சம் கொஞ்சமாக என் முயற்சியில் சோம்பலையும், தள்ளிப்போடும் குணத்தையும்
வெல்லவேண்டும்.
மீண்டும்
எழுத ஆரம்பித்திருக்கும் நாள் தமிழர் திருநாள் என்பது மட்டுமல்ல. இன்றுதான்
எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் எழுத்துலகை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார்.
இன்று முழுதும் என் மனம் கனத்தபடியே இருந்தது. பெருமாள் முருகன் இறந்து விட்டதாக
அறிவித்திருந்தார் அவர். உண்மையில் ஓர் எழுத்தாளனின் மரணமாகவே அது எனக்குப் பட்டது.
அவரது நாவல்கள் பெயரை மட்டும் கேள்விப்பட்டதுண்டு. வாசித்ததில்லை. எல்லாவற்றையும்
இணையத்திலேயே வாசிக்க விழையும் இக்காலத்தில், தமிழ் இலக்கியவாதிகள் தங்கள் படைப்புகளை
இணையத்திலும் வெளியிடும் முயற்சியையும் மேற்கொள்ளவேண்டும். காசுக்கு விற்கப்படும்
ஆயிரம் பிரதிகளால் எந்தத் தமிழ் எழுத்தாளனின் பொருளாதாரமும் மேம்பட்டு
விடப்போவதில்லை. தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் வாசிக்கப்படும் ஜெயமோகன் தன்
பெரும்பாலான படைப்புகளையும் இணையத்திலேயே வெளியிட்டு விடுகிறார். ஆண்டுக்கு ஐந்து
நாவல்களைத் தளத்தில் வெளியிட்டு பிற எழுத்தாளர்கள் வெளியிடும் நாவல்களை
சுண்டைக்காய் அளவுக்கு சின்னதாக்கி விடுகிறார். ஒரு சமூகத்துடன் உண்மையில் உரையாட
விரும்பும் ஓர் எழுத்தாளனுக்கு இணையமே இன்றைய தேதியில் வலிமையான சாதனம்.
பிரசித்தமான பல எழுத்தாளர்களைவிட, வலைப்பதிவர்கள் என்று தங்களை அழைத்துக்
கொள்பவர்களின் எழுத்து சுவையானதாகவும், சிந்தனைத் தீவிரத்துடனும் இருக்கிறது. வலைப்பூக்களில்
குப்பையைக் கொட்டிக் கொண்டிருந்த பலர் இன்று முகநூலில் ஐக்கியமாகி விட, வலைப்பதிவு
எழுதுபவர்கள் எண்ணிக்கை தேய்ந்து போய் இன்றைக்கு திறம் உள்ளவர்கள் மட்டும்
தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படம் குறித்த பதிவுகளையே
அதிகம் எழுதி வந்த சிலர் நல்ல பதிவர்களும் அவற்றைக் குறைத்துக் கொண்டு புத்தகங்கள்
பக்கம் திரும்பி இருக்கிறார்கள்.பதிவர்கள், எழுத்தாளர்கள் என்ற வேறுபாடு இனியும்
தேவையா என்று தோன்றுகிறது. நூல் வடிவில் தங்கள் எழுத்து வந்து விட்டதாலேயே
எழுத்தாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள் புதியவர்கள் சிலர். பல
பதிவர்கள் தங்கள் தளத்திலேயே கவிதை, சிறுகதை, குறுநாவல் என்று தரமிக்க படைப்புகளை
வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எதற்கு வேறுபாடு. இனி எல்லாரும்
எழுத்தாளர்களென்றே அறியப்படுவோம். அந்த வார்த்தை தரும் கவுரவம்தானே பலரை
எழுத்துக்குள் ஈர்க்கிறது?
தொடர்ந்து எழுத எண்ணம் கொண்டுள்ளேன்.இலக்கியமும்,
ஆன்மிகமுமே கருப்பொருள்களாயிருக்கும். யார் வாசிக்கிறார்கள் என்ற கவலை அவசியமில்லை
என்று நினைக்கிறேன். எனவே பின்னூட்ட வசதியையும் தடை செய்து விட்டேன். என்னை
வாழ்த்த, வைய என் மின்ன்ஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இலக்கியம்
பயிலவும், ஆன்ம ஞானத்தில் ஊறித்திளைக்கவும் என் எழுத்து எனக்குத் துணைபுரியும்
என்று நம்புகிறேன். தொடர்ந்து இந்த எழுத்துத் தொழிலில் நான் ஈடுபட்டிருக்க எல்லாம்
வல்ல இறை துணை நிற்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.