11 நவம்பர், 2011

இந்தியா வருகிறேன்


வரும் நவம்பர் 14ம் தேதி மாலத்தீவுகளிலிருந்து கிளம்பி திருவனந்தபுரம் வருகிறேன், மனைவியுடன். மறுநாள் அதிகாலை ரயில் பிடித்து ஈரோடு பயணம். மாலையில் வீடு சேர்ந்து விடுவேன். நசுக்கி நசுக்கி நாற்பத்தியிரண்டு நாட்கள் விடுமுறை கொடுத்திருக்கிறார்கள். போக வரவே மூன்று நாட்கள் தேவைப்படுகிறது.
இந்த விடுமுறையில் என் பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க வேண்டியிருக்கிறது. தத்கலில் விண்ணப்பிக்கலாமென்றிருக்கிறேன். மனைவியின் சகோதரி ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து இங்கு வருவதேயில்லை என்று ஒரே புலம்பல். அவர்கள் வீட்டுக்குச் சென்று ஒரு நாலு நாட்கள் சென்று தங்குவதாக உத்தேசம். பயணச்சீட்டு முன் அனுமதிக்கு முயன்றபோது இரண்டு மாதங்களுக்கு முன்பே கடும் சிரமமாக இருந்தது. நண்பன் முனிராஜ் ஏஜன்டாக இருக்கிறான். அவன் தயவில் பயணச்சீட்டு கிடைத்து விட்டது.
விடுமுறையில் வேறென்ன செய்வதென்று முடிவு செய்யவில்லை. கொட்டித் தீர்க்கிற மழை நான் வந்து இளைப்பாறுவதற்குள் தீர்ந்து விடும் என்று நம்புகிறேன். மழை இல்லாவிடினும், எட்டு வருட தீவு வாழ்க்கையின் விளைவாக இந்தியாவின் மக்கள் நெருக்கமும், சாலை நெரிசலும் பூதாகரமாகத் தெரிகிறது. எங்கள் ஊர் கொமாரபாளையம் ஒரு சின்ன டவுன். அதிலேயே சாலையைக் கடப்பதற்கு பத்து நிமிடம் தயங்கித் தயங்கித்தான் கடக்கிறோம். புற நகரப் பேருந்தில் ஏறி அமர்ந்து அது நகர ஆரம்பித்தவுடன் வாந்தி வருவது மாதிரி இருக்கிறது. இதனாலேயே நீண்ட தூரப்பயணங்களை அது ரயிலில் இல்லையென்றால் இருவருமே தவிர்க்க விரும்புவோம். சில வருடங்களுக்கு முன் நானா பேருந்து நெரிசலுக்கிடையில் தொங்கிக்கொண்டெல்லாம் பயணம் செய்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்க்க வியப்பாக இருக்கிறது. இங்கிருந்து வேலையை விட்டு விட்டு வந்து ஒரு ஆறுமாதம் இந்தியாவிலேயே வாழ்ந்தால்தான் இந்தியனுடைய சராசரி வாழ்க்கைக்கு உடலும், மனமும் பழகும் போல.
பயணம் மட்டுமல்ல. உணவும் பெரிய பிரச்னைதான். விடுமுறையில் சென்றால் என்னென்ன உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும், எந்தெந்த உணவகங்களில் சாப்பிட வேண்டும் என்று பட்டியலிட்டு வைத்திருப்போம். ( இங்கு கிடைக்கும் மால்தீவியன், மேற்கத்திய உணவு வகைகளுக்குப் பழகி விட்டாலும், நமது இட்லி, சாம்பார், காளான் சில்லி, சிக்கன் மன்சூரியன், ரோஸ்ட், முட்டை புரோட்டா இன்னபிற ஐயிட்டங்கள் நாக்கிலேயே முன் ஜென்ம ஞாபகங்களாகத் தங்கி அவ்வப்போது மேலெழுந்து சங்கடப்படுத்துகின்றன.) ஆனால் நாக்கு தேடுதல் வேட்டையைத் துவங்கி விட்டாலும், வயிறு வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்து விடுகிறது. மேலும் இங்கு காலை ஆறுமணிக்குப் பள்ளி செல்ல வேண்டியிருப்பதால் காலை உணவு பெரும்பாலும் ப்ரட், காஃபி தான். தமிழ்நாட்டில் சட்னி, சாம்பார் சகிதமாக சிலபல இட்லிகளை உள்ளே தள்ளி விட்டு, அம்மாவின் கோரிக்கைக்கிணங்க இரண்டு தோசையும், ஒரு முட்டை தோசையையும் கபளீகரம் செய்து விட்டு முத்தாய்ப்பாக பசுமாடு, குடிநீர் வாரியம் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட தேநீரையும் அருந்தி விட்டுப் பார்த்தல் மறுநாள் காலையில்தான் மதிய உணவு சாப்பிட முடியும் போல இருக்கிறது. இருந்தாலும் விடாப்பிடியாக மூன்று வேளையும் வைக்கப்பட்ட உணவை அருந்திதான் ஆக வேண்டியிருக்கிறது.
இன்னொரு அலர்ஜியான விஷயம், உறவினர், தெரிந்தவர் இல்லங்களுக்குச் செல்லுதல். உள்ளே நுழைந்தவுடன் முறுக்கு, பஜ்ஜி, போண்டா, முட்டை போண்டா, மிக்சர் என்று தட்டில் குவிக்கப்பட்டு முன்னால் வைக்கப்படும். எடுத்து அள்ளிச் சாப்பிடுங்க என்று உரிமையான உபசரிப்பும் தொடரும். வேறு வழியின்றி ஒரு முறுக்குத் துணுக்கை எடுத்து வாயில் திணித்து ஊற வைத்தபடி இருந்தால், என்ன அப்படியே வச்சிருக்கீங்க? எடுத்துச் சாப்பிடுங்க. என்ற அன்புத் தொல்லை வேறு. மேலும் அங்கேயே இருந்து மதிய உணவையும் முடித்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற அன்புக்கட்டளையும் அடுத்ததாக வைக்கப்படும். இதற்கு அஞ்சியே பல வீடுகளுக்கு நான் செல்ல மறுத்து விடுகிறேன். எங்க வீட்டுக்கு வரவே இல்லை என்ற குறை பலபேரிடமிருந்தும் ஒவ்வொரு வருடமும் கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன்.
பொதுவாக விடுமுறையில் எனக்குப் பிடித்த விஷயம் நண்பன் ஜெயச்சந்திரனைச் சந்தித்து ஆன்மிகம் பேசுவது. என் மனைவிக்கு – கோயிலுக்குச் செல்லுவது. அருகில் பவானி கூடுதுறையில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரன் ஆலயம் இருக்கிறது. அதற்கு வாரம் ஒருமுறையாவது செல்வோம். உள்ளே நுழைந்தவுடன், ஜோபானா, ஜோபானா, என்று திருடர்கள் பற்றி எச்சரிக்கிற ஒலிபெருக்கித் தொல்லையை எரிச்சலுடன் கடிந்து கொள்கிற என்னைச் சமாளிக்க வேண்டியிருக்கும் என் மனைவிக்கு.
இந்த ஆண்டு கோவையில் புத்தகக் கண்காட்சி நிகழ்ந்த போது, அங்கிருக்கும் என் தம்பியைத் தொடர்பு கொண்டு சில நூல்கள் வாங்கச் சொன்னேன். அவன் சென்று அவற்றை வாங்கிவிட்டு, அங்கு பேச வந்திருந்த ஜெயமோகனைச் சந்தித்திருக்கிறான். எனக்கே அவரைச் சந்தித்த மகிழ்ச்சி பிறந்தது. பெரும்பாலும் நாவல்கள்தாம் வாங்கினான். பஷீரின் சில நாவல்கள், காலச்சுவடு கிளாசிக் வரிசையிலிருந்து சில, ஜெயமோகனின் நாவல் கோட்பாடு (அதில் அவர் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்.) அந்தப் புத்தகங்களை விடுமுறையில் வாசிப்பதாக உத்தேசம். மற்றபடி எந்தத் திட்டமும் இல்லை. அவ்வப்போது திட்டங்கள் உருப்பெறும்; செயலுறும்.
தொடர்புக்கு :      888361 5356

7 நவம்பர், 2011

தோஸ்தோயெவ்ஸ்கி - ஜெயமோகன் கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகன்  
Image courtesy : Vishnupuram Ilakkiya vattam. Picasa Web album.

தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் வாசிப்பனுபவம் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகனிடம் என் சந்தேகங்களை எழுப்பியிருந்தேன். அதற்கு அவர் அளித்த விளக்கம்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நெடுநாளாயிற்று உங்களுக்கு எழுதி. அண்ணாவும், (மகாகவி) பாரதியும் கிளப்பி விட்டிருந்த விவாதப்புயலுக்கிடையில் நீங்கள் எப்போது எங்களுக்கு படைப்பிலக்கிய ஆசிரியனாகவும் விமர்சகராகவும் கிடைப்பீர்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன்.

தஸ்தாயெவ்ஸ்கி இடமிருந்து செய்யப்பட இலக்கியத் திருட்டு பற்றிய கடிதம் கண்டதும், எனக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் நினைவுக்கு வந்து விட்டது. அந்நாவலை வாசிக்கும் முன் உங்களது பரிந்துரையையும், எஸ். ராமகிருஷ்ணனின் பரிந்துரையையும் வாசித்தேன். நீங்கள் அந்நாவலைப் பற்றி கொஞ்சமே குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்பது என் அபிப்ராயம். எஸ். ராமகிருஷ்ணன் ரஸ்கோல்நிகாஃப்  காணும் அந்தக் குதிரைக்காரன் கனவை முக்கியமானதாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.எனக்கு குற்றமும் தண்டனையும் கொடுத்த வாசிப்பனுபவம் அபாரமாக இருந்தது. எல்லாக் கதை மாந்தர்களுமே உணர்ச்சிப் பிழம்பாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ரஸ்கோல்நிகாஃப் அதன் உச்ச கட்டம். பல்வேறு நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழும் ரஸ்கோல்நிகாஃப் ஏன் கொலை செய்கிறான் என்பது புதிராகவே இருக்கிறது. நாவலின் வாசிப்பனுபவம் குறித்து நான் எழுதியதைத் திரும்ப வாசிக்கும் போது பல இடங்களில் இந்தக் குழப்பமே எதிரொலிப்பதை உணர்கிறேன்.
அந்தப் பதிவு :
எனக்கு ரஸ்கோல்நிகாஃப் எழுதி பத்திரிகையில் வெளியான கட்டுரை முக்கியமாகப் படுகிறது. அக்கட்டுரையில் அவன் குற்றம் பற்றியும், குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டும் காரணிகள் பற்றியும் விவரிக்கிறான். ரஸ்கோல்நிகாஃபைப் பின்தொடரும் காவல்துறை அவனது அப்போதைய நடவடிக்கைகளை இந்தக் கட்டுரையோடு தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறது.  இருவகையான மனிதர்களைப் பற்றி அந்தக் கட்டுரையில் பேசுகிறான் ரஸ்கோல்நிகாஃப். அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்குக் கைதியாகி, வாழ்வை எவ்வித எதிர்ச்செயலுமின்றி வாழ்ந்து மடிபவர்கள் ஒருவகை; தான் வாழும் காலத்திலேயே  காலம் தாண்டிச் சிந்திக்கும், தங்கள் சிந்தனைகளால் எதிர்கால உலகின் அமைப்பை மாற்ற எத்தனிக்கும் மனிதர்கள் மற்றொரு வகை. சட்டம், ஒழுங்கு, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அனைத்தும் முதல் வகை மனிதர்களுக்காகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. உலகின் பெரும்பான்மை மக்கள் இவர்களே. ஆனால் ஒரு சிறுதொகையிலேயே காணப்படும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் எந்த வரையறைக்குள்ளும் தங்களை இருத்திக் கொள்ளாதவர்கள். தங்களது அரிய சிந்தனைகளை நிலைநாட்டுவதற்காகச் சட்டங்களை மீற அவர்களுக்கு இயற்கையே அனுமதி வழங்குகிறது. அவர்கள் இழைக்கும் எந்தக் குற்றமும் மானுட இனத்தின் மேன்மை கருதியே. அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவனுக்குக் கொலை செய்வதற்குக்கூட உரிமை இருக்கிறது என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரை அமைக்கபட்டிருக்கிறது. தன்னை இந்த இரண்டாவது மனிதர்களில் ஒருவனாகவே கருதிக் கொள்வதால், ரஸ்கோல்நிகாஃப்தான் இந்தக் கொலையைப் புரிந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
அடுத்ததாக ஸ்விட்ரிகாலோஃபின் பாத்திர வடிவமைப்பு. துப்பாக்கி முனையில் டூநியாவைத் தன்னைக் காதலிக்கும்படிக் கேட்கிறார். டூனியா தன்னைக் காதலிக்கவில்லை என்று அறிந்ததும் அவளை விட்டு விலகி விடுகிறார். இதற்குப் பிறகான ஸ்விட்ரிகாலோஃபின் மனநிலையை தோஸ்தோயெவ்ஸ்கி அற்புதமாக வர்ணித்திருக்கிறார். என்னைப் பொருத்தவரை நாவலின் எழுச்சி மிகுந்த இடம் இது. என்னை நெகிழச் செய்த இடமும் இதுதான்.
எனக்கு இருக்கும் ஐயங்கள் இவைதாம். ரஸ்கோல்நிகாஃப் ஏன் கொலை செய்தான்? டூனியாதான் அவன் மனமாற்றமடைந்து சரணடையக் காரணமா?
அவள் அவனை எவ்வகையில் பாதிக்கிறாள். அந்த பாதிப்பை அறிந்து கொள்கிற மாதிரி சம்பவங்கள் எதுவும் அழுத்தமாகப் பதிவு செய்யபட்டிருக்கின்றவா?
நவம்பர் டிசம்பரில் விடுமுறைக்கு இந்தியா வருகிறேன். உங்களைச் சந்திக்க ஆவல். ஆனால் இல்லத்தில் வந்து சந்திக்கக் கூச்சமாக இருக்கிறது. நீங்கள் எங்கேனும் உரையாற்றினால் வந்து பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
வீட்டில் அனைவருக்கும் என் அன்பு.
ஜெகதீஷ் குமார்.
மாலத்தீவுகள்
...................................

அன்புள்ள ஜெகதீஷ் குமார்
          நான் வெவ்வேறு கட்டுரைகளிலாக குற்றமும் தண்டனையும் பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் மிக ஆரம்பகாலத்தில். ஆகவே திரும்பத்திரும்ப எழுதுவதை பின்னாளில் தவிர்த்துவிட்டேன். இரு மேதைகளையும் பற்றி ஒரு நூலளவில் எழுதும் எண்ணம் நெடுநாட்களாக உள்ளது.

  குற்றமும் தண்டனையும் ஒரு பேரிலக்கியம். பேரிலக்கியம் அளிக்கும் அனுபவமென்பது நாம் அதுவரை உருவாக்கியிருக்கும் சிந்தனைக்கட்டுமானத்தைச் சிதறடிப்பதே. அந்தச் சிதறல்களை நாமேதான் பொறுக்கி அடுக்கி மீண்டும் நம் அகத்தைக் கட்டிக்கொள்ளவேண்டும். அதுவே அந்த பேரிலக்கியம் நமக்களிக்கும் கொடை. ஆகவே பலசமயம் பிறர் கருத்துக்களுக்கு பெரிய மதிப்பில்லை. அவற்றை நாம் விவாதிப்பதே முக்கியமானது.

  குற்றமும் தண்டனையும் நாவலில் எல்லா பகுதிகளுமே மையத்துக்கு பல வகைகளில் பங்களிப்பாற்றுகின்றன. நீங்கள் குறிப்பிடும் அந்த கட்டுரை ரஸ்கால்நிகாபின் சிந்தனையோட்டத்தை, அவனுடைய மேல் மனதைக் காட்டுகிறது. அதில் அவன் தன் வாழ்க்கை மற்றும் செயல்களுக்கான நியாயப்படுத்தல்களை செய்துகொண்டு இருக்கிறான். அந்த தளத்துக்கு நேர் எதிரான அவன் ஆழ்மனமே அந்த கனவில் வெளிப்படுகிறது. அந்த கனவு அவனுடைய சிந்தனைகளுக்கு நேர் மாறாக அவனுக்குள் இருக்கும் அடிப்படையான கருணையை அன்பை வெளிப்படுத்துகிறது. அந்த குதிரை கொல்லப்படுவது பிற்பாடு அவன் செய்யும் கொலையைப்போலவே இருப்பதை கவனிக்கவும். அங்கே அந்தக்கொலையை மன்னிக்கமுடியாத பாவமாகவே ரஸ்கால்நிகாஃபுக்குள் உறையும் குழந்தை காண்கிறது. நாம் செய்யும் செயலை நம்ம்முள் உள்ள சிந்தனையாளன் ஒப்புக்கொள்ளலாம் நமக்குள் உள்ள குழந்தை ஒப்புக்கொள்ளுமா என்பதே முக்கியமான வினா.

இவ்வாறு நாவலின் எல்லா பகுதிகளையும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்திக்கொண்டு வாசியுங்கள். நிகழ்வுகளை தனித்தனியாக பிரித்துக்கொள்ளாதீர்கள். இன்னொரு உதாரணம், மார்மல்டோஃப் ஆற்றும் அந்த மதுக்கடைப் பிரசங்கம். அந்த குடிகாரனின் கண்ணீர் பேச்சில் உள்ள அப்பட்டமான களங்கமற்ற வேகத்தை நாம் ஸ்விட்ரிகைலாஃபின் பேச்சுகளில் உள்ள அறிவார்ந்த கபடத்துடன் இணைத்து வாசிக்கலாம்.

ரஸ்கால்நிகாபின் போராட்டம் நான் ஏற்கனவே சொன்னதுபோல அவனுடைய உள்ளே உள்ள அறிஞனுக்கும் குழந்தைக்குமான சமர். அவனுள் உள்ள தர்க்கத்துக்கும் கருணைக்குமான விவாதம். கருணையே வெல்கிறது. ஆகவேதான் அவன் சோஃபியா மார்மல்டோவாவை நோக்கிச்சென்று மண்டியிடுகிறான். அந்த விவாதத்தில் எல்லாருமே ஏதேனும் வகையில் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். டூனியாவும்தான். ஆனால் சோபியாவின் பங்கே முக்கியமானது

நாவலை உங்களுக்குள் ஒரு பெரிய சதுரங்கமாக ஆக்கிக்கொண்டு விளையாடிக்கொண்டே இருங்கள். பல வருடங்களுக்கு.

ஜெ
-----------------------------------------
அன்புள்ள ஜெ

ஆழமான, தெளிவான விளக்கத்துக்கு நன்றி. என் மறுவாசிப்புக்கு இது மிக்க உதவியாக இருக்கும்.

உங்கள் செயற்பாடுகளைக் கவனிக்கும்போது உங்களோடு பழக சிரமமாக இருக்காது என்பது தெளிவே.

நான் ஏதாவது உளறிக் கொட்டி விடுவேனோ என்ற தயக்கம்தான்.

என் போன்ற வாசகர்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருப்பதற்கு மீண்டும் நன்றி.


ஜெகதீஷ் குமார்.
jeyamohan


மேலும் வாசிக்க