வரும் நவம்பர் 14ம் தேதி மாலத்தீவுகளிலிருந்து கிளம்பி திருவனந்தபுரம் வருகிறேன், மனைவியுடன். மறுநாள் அதிகாலை ரயில் பிடித்து ஈரோடு பயணம். மாலையில் வீடு சேர்ந்து விடுவேன். நசுக்கி நசுக்கி நாற்பத்தியிரண்டு நாட்கள் விடுமுறை கொடுத்திருக்கிறார்கள். போக வரவே மூன்று நாட்கள் தேவைப்படுகிறது.
இந்த விடுமுறையில் என் பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க வேண்டியிருக்கிறது. தத்கலில் விண்ணப்பிக்கலாமென்றிருக்கிறேன். மனைவியின் சகோதரி ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து இங்கு வருவதேயில்லை என்று ஒரே புலம்பல். அவர்கள் வீட்டுக்குச் சென்று ஒரு நாலு நாட்கள் சென்று தங்குவதாக உத்தேசம். பயணச்சீட்டு முன் அனுமதிக்கு முயன்றபோது இரண்டு மாதங்களுக்கு முன்பே கடும் சிரமமாக இருந்தது. நண்பன் முனிராஜ் ஏஜன்டாக இருக்கிறான். அவன் தயவில் பயணச்சீட்டு கிடைத்து விட்டது.
விடுமுறையில் வேறென்ன செய்வதென்று முடிவு செய்யவில்லை. கொட்டித் தீர்க்கிற மழை நான் வந்து இளைப்பாறுவதற்குள் தீர்ந்து விடும் என்று நம்புகிறேன். மழை இல்லாவிடினும், எட்டு வருட தீவு வாழ்க்கையின் விளைவாக இந்தியாவின் மக்கள் நெருக்கமும், சாலை நெரிசலும் பூதாகரமாகத் தெரிகிறது. எங்கள் ஊர் கொமாரபாளையம் ஒரு சின்ன டவுன். அதிலேயே சாலையைக் கடப்பதற்கு பத்து நிமிடம் தயங்கித் தயங்கித்தான் கடக்கிறோம். புற நகரப் பேருந்தில் ஏறி அமர்ந்து அது நகர ஆரம்பித்தவுடன் வாந்தி வருவது மாதிரி இருக்கிறது. இதனாலேயே நீண்ட தூரப்பயணங்களை அது ரயிலில் இல்லையென்றால் இருவருமே தவிர்க்க விரும்புவோம். சில வருடங்களுக்கு முன் நானா பேருந்து நெரிசலுக்கிடையில் தொங்கிக்கொண்டெல்லாம் பயணம் செய்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்க்க வியப்பாக இருக்கிறது. இங்கிருந்து வேலையை விட்டு விட்டு வந்து ஒரு ஆறுமாதம் இந்தியாவிலேயே வாழ்ந்தால்தான் இந்தியனுடைய சராசரி வாழ்க்கைக்கு உடலும், மனமும் பழகும் போல.
பயணம் மட்டுமல்ல. உணவும் பெரிய பிரச்னைதான். விடுமுறையில் சென்றால் என்னென்ன உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும், எந்தெந்த உணவகங்களில் சாப்பிட வேண்டும் என்று பட்டியலிட்டு வைத்திருப்போம். ( இங்கு கிடைக்கும் மால்தீவியன், மேற்கத்திய உணவு வகைகளுக்குப் பழகி விட்டாலும், நமது இட்லி, சாம்பார், காளான் சில்லி, சிக்கன் மன்சூரியன், ரோஸ்ட், முட்டை புரோட்டா இன்னபிற ஐயிட்டங்கள் நாக்கிலேயே முன் ஜென்ம ஞாபகங்களாகத் தங்கி அவ்வப்போது மேலெழுந்து சங்கடப்படுத்துகின்றன.) ஆனால் நாக்கு தேடுதல் வேட்டையைத் துவங்கி விட்டாலும், வயிறு வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்து விடுகிறது. மேலும் இங்கு காலை ஆறுமணிக்குப் பள்ளி செல்ல வேண்டியிருப்பதால் காலை உணவு பெரும்பாலும் ப்ரட், காஃபி தான். தமிழ்நாட்டில் சட்னி, சாம்பார் சகிதமாக சிலபல இட்லிகளை உள்ளே தள்ளி விட்டு, அம்மாவின் கோரிக்கைக்கிணங்க இரண்டு தோசையும், ஒரு முட்டை தோசையையும் கபளீகரம் செய்து விட்டு முத்தாய்ப்பாக பசுமாடு, குடிநீர் வாரியம் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட தேநீரையும் அருந்தி விட்டுப் பார்த்தல் மறுநாள் காலையில்தான் மதிய உணவு சாப்பிட முடியும் போல இருக்கிறது. இருந்தாலும் விடாப்பிடியாக மூன்று வேளையும் வைக்கப்பட்ட உணவை அருந்திதான் ஆக வேண்டியிருக்கிறது.
இன்னொரு அலர்ஜியான விஷயம், உறவினர், தெரிந்தவர் இல்லங்களுக்குச் செல்லுதல். உள்ளே நுழைந்தவுடன் முறுக்கு, பஜ்ஜி, போண்டா, முட்டை போண்டா, மிக்சர் என்று தட்டில் குவிக்கப்பட்டு முன்னால் வைக்கப்படும். எடுத்து அள்ளிச் சாப்பிடுங்க என்று உரிமையான உபசரிப்பும் தொடரும். வேறு வழியின்றி ஒரு முறுக்குத் துணுக்கை எடுத்து வாயில் திணித்து ஊற வைத்தபடி இருந்தால், என்ன அப்படியே வச்சிருக்கீங்க? எடுத்துச் சாப்பிடுங்க. என்ற அன்புத் தொல்லை வேறு. மேலும் அங்கேயே இருந்து மதிய உணவையும் முடித்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற அன்புக்கட்டளையும் அடுத்ததாக வைக்கப்படும். இதற்கு அஞ்சியே பல வீடுகளுக்கு நான் செல்ல மறுத்து விடுகிறேன். எங்க வீட்டுக்கு வரவே இல்லை என்ற குறை பலபேரிடமிருந்தும் ஒவ்வொரு வருடமும் கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன்.
பொதுவாக விடுமுறையில் எனக்குப் பிடித்த விஷயம் நண்பன் ஜெயச்சந்திரனைச் சந்தித்து ஆன்மிகம் பேசுவது. என் மனைவிக்கு – கோயிலுக்குச் செல்லுவது. அருகில் பவானி கூடுதுறையில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரன் ஆலயம் இருக்கிறது. அதற்கு வாரம் ஒருமுறையாவது செல்வோம். உள்ளே நுழைந்தவுடன், ஜோபானா, ஜோபானா, என்று திருடர்கள் பற்றி எச்சரிக்கிற ஒலிபெருக்கித் தொல்லையை எரிச்சலுடன் கடிந்து கொள்கிற என்னைச் சமாளிக்க வேண்டியிருக்கும் என் மனைவிக்கு.
இந்த ஆண்டு கோவையில் புத்தகக் கண்காட்சி நிகழ்ந்த போது, அங்கிருக்கும் என் தம்பியைத் தொடர்பு கொண்டு சில நூல்கள் வாங்கச் சொன்னேன். அவன் சென்று அவற்றை வாங்கிவிட்டு, அங்கு பேச வந்திருந்த ஜெயமோகனைச் சந்தித்திருக்கிறான். எனக்கே அவரைச் சந்தித்த மகிழ்ச்சி பிறந்தது. பெரும்பாலும் நாவல்கள்தாம் வாங்கினான். பஷீரின் சில நாவல்கள், காலச்சுவடு கிளாசிக் வரிசையிலிருந்து சில, ஜெயமோகனின் நாவல் கோட்பாடு (அதில் அவர் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்.) அந்தப் புத்தகங்களை விடுமுறையில் வாசிப்பதாக உத்தேசம். மற்றபடி எந்தத் திட்டமும் இல்லை. அவ்வப்போது திட்டங்கள் உருப்பெறும்; செயலுறும்.
தொடர்புக்கு : 888361 5356