26 மார்ச், 2010

அத்வைதம்


ஒன்றுமற்றதிலிருந்து
ஓர் புள்ளியாய்த் தோன்றி
வெடித்தேன் சிதறுண்டேன்
பிரபஞ்ச வெளியாய் பால் வீதியாய்ப் பரவினேன்
என் பிரம்மாண்டத்தை வேடிக்கை பார்ப்பதற்காய்
உடலுக்குள் குடிபுகுந்தேன்
தனிமை வாட்ட துணை வேண்டி என்
விலா எலும்பைப் பறிகொடுத்தேன்
கூடி முயங்கினேன் நுரைத்துக்
குமிழ்களாய் பெருகினேன்
குமிழ்கள் என்னைச் சூழ்ந்து கொள்ள
மூச்சுத் திணறிற்று
உடல் என்னும் உடை சிறையாகிப் போயிற்று
ஒன்றுமற்றதிலிருந்து எல்லாம் ஆனேன்
எல்லாம் ஆனபின் என்னைத் தேடினேன்
தேடித் தீர்ந்தபின் உண்மை உணர்ந்தேன்
இரண்டற்றதாய் நானே இருந்தேன்

கடவுள் அறிதல்


தேர்வில் மதிப்பெண் வர
பிள்ளையார் முன்
தேங்காய் உடைத்ததுண்டு.
படக்கதைகள் படித்து
சக்தி மிக்கவர்
விஷ்ணுவா விநாயகரா ஒப்பிட்டதுண்டு.
கல்விக்கண் திறந்ததால்
கடவுளர் பலரல்ல ஒன்றெண்டு தேர்ந்ததுண்டு.
கர்த்தர் முன் மண்டியிட்டு
கண் மூடிக்கதறியதுண்டு.
கால் முட்டி தேய்ந்ததுண்டு.
நீயே கடவுள் உன்னை உணர்
ஆன்மாவை அனுபவி அத்தனையும் தெளிவாகும்
குண்டலினி துளைத்தால் மண்டைக்குள் ஏதோ மலரும்.
யாராரோ சொல்லியதை எனதென்று ஏற்றதுண்டு.
கடவுள் உலகம் எல்லாம் கற்பனை
இருப்பது சூன்யம் ஒன்று மட்டுமே
என்றான் புத்தன் திகைத்தேன்
சூன்யம் பார்க்கிற ஆள் யாரப்பா?
சூன்யம் மறைந்தால் அவனும் மறைவானோ?

உள்ளொளி


இருளில் தேடுகிறேன்.
இருளின் குழந்தைகள் துணை நிற்க.
உள்ளே இருப்பது
ஒளி காணும் ஆர்வமா?
ஒளி பார்க்கும் நப்பாசையா?
விளக்கின் மேல் நம்பிக்கை
விளக்கைச் சமைக்குமா?
இருளைக் கொல்ல ஒளியே தேவை.
இருளின் வாசமே நிரந்தரம் எனில்
ஒளியின் வேட்கை எப்படி என்னுள்?
ஒளி மட்டும் கற்பிதமல்ல.
இருளும்தான்.

25 மார்ச், 2010

சாதன சதுஷ்டயம் - 5



ஸமாதானம்
மன ஒருமுகப்பாடு. சித்தஸ்ய ஸ்தைர்யம். ஏகாக்ர:
யோக சாஸ்திரம் இதையே ஸமாதி: என்கிறது.
தியானிக்க வேண்டிய பொருளில் இருக்க வேண்டிய மன ஒருமுகப்பாடே ஸமாதானம் எனப்படுகிறது.

ஸமாதானத்தை அடைவதற்கான உபாயம் என்ன?
1. வைராக்யம் அதிகரித்தல் வேண்டும்.
2. முமுக்ஷுத்வம் – அடைய விரும்பும் பொருளில் ஆர்வம்.
3. அப்யாஸம் – மனதை ஒருமுகப்படுத்தி தொடர்ந்து பயிற்சி செய்தல். தியானப் பயிற்சி.
4. த்ருதி: - உறுதி. உறுதியாக இருந்து பழகுதல். செய்ய வேண்டும் என்று முடிவு செய்த
விஷயங்களை உறுதியோடு நின்று செய்து முடிக்க வேண்டும்.

ஸமாதானத்தை அடைவதன் பலன் என்ன?
1. மனோ பலம் – மோஹம் (குழப்பம்) என்ற எதிரியிடமிருந்து நம்மைக் காப்பாற்றும்.
2. ஸ்ரவண நிஷ்டா – சாஸ்திரத்தை முழுமையாகக் கூர்ந்து கேட்போம்.



முமுக்ஷுத்வம்

மோக்ஷம் வேண்டும் என்கிற தீவிர ஆசை. தீவிர இச்சா. இச்சை என்றாலே நம்மைச்
செயலில் தூண்டும் அளவுக்கு வளர்ந்த ஆசை என்று அர்த்தம்.
ஜானாதி – ஆசைப்படுதல் – செயல்படுதல்
அறிதல் – இச்சதி – யததே.
முமுக்ஷுத்வத்தின் இருபடிகள்
1. மோக்ஷத்தை அடையும் ஆசை.
2. மோக்ஷத்தைஅடையும் பாதையைக் கண்டு கொள்ளல்.
மோக்ஷத்தைஅடையும் பாதையைக் கண்டு கொண்டவனுக்கு ஜிக்ஞாஸு என்று பெயர்.
ஜிக்ஞாஸு என்றால் ஞாதும் இச்சும் – கண்டு கொண்டதை அறிய வேண்டும் என்பதில் உள்ள ஆவல்.
முமுக்ஷுத்வத்தை அடைவதற்கான உபாயம் என்ன?
1. விவேகம் – அநித்யத்தின் மீது வைராக்யமும், நித்யத்தின் மீது ஆசையும் வளர்த்தல்.
2. கர்ம யோகம் – மேலான பொருள் மீது ஆசை வர சித்த சுத்தி வேண்டும். அதற்குக் கர்ம யோகம் பழக வேண்டும்.

முமுக்ஷுத்வத்தை அடைவதன் பலன் என்ன?
1. ஸ்ரவண சித்தி:
2. தடைகள் நீங்கி முன்னேறும் சக்தி கிடைக்கும்.
3. பிற அனைத்து சாதனைகளையும் பின்பற்றுவது எளிதாகும்.

ஓம் பூர்ணமதப் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவஷிஷ்யதே

சாதன சதுஷ்டயம் - 4


திதிக்ஷா
திதிக்ஷா என்ற சொல்லுக்குப் பொருத்துக் கொள்ளுதல், சகித்துக் கொள்ளுதல் என்றுபொருள். த்வந்த்வ ஸ்ஹிஷ்னுத்துவம் அதாவது, குளிர், வெப்பம், மானம், அவமானம் போன்ற எதிரெதிர் அனுபவங்களான இருமைகளை சகித்துக் கொள்ளுதல்.
அசிந்தயா சஹனம் – acceptance. மனதளவில் குறை சொல்லாமல் எதையும் செய்தல்.
துன்பம் வரும்போது அதை நீக்க முழு முயற்சி செய்ய வேண்டும். அதை நீக்கும் போதும் அதன் பின்னரும் பொறுமையாக இருக்க வேண்டும்.

திதிக்ஷாவை அடைவதற்கான உபாயம் என்ன?
பொறுமையைப் பழகியே பொறுமையாக இருக்க வேண்டும்.
எதை மாற்ற முடியாது என்று தெரிகிறதோ அதைப் பொறுத்துக் கொள்ளும் அறிவைப் பழக வேண்டும். மாற்ற முடியுமெனில் அதை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
மாற்ற முடியாத துன்பங்களை தவமாகப் பாவித்து அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நம் பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். கஷ்டத்தை தாங்கும் சக்தியுடையவனே பலமுள்ளவன். நாயமாத்மா பலஹீனேன லப்யதே – இந்த ஆத்மா பலவீனர்களால் அடையப்படுவதில்லை என்று கீதையில் பகவான் கூறுகிறார்.
முமுக்ஷுத்வம் – மோக்ஷத்தை அடையும் விருப்பத்தை அதிகப்படுத்திக் கொள்ளுதல்.
உபேக்ஷா – indifference கஷ்டத்தைக் கொள்ளாமல் இருத்தல்.
வரும் துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பரிகாரம் செய்தல் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அந்தப் பரிகாரங்களையே பரிகாரம் செய்ய வேண்டும்.

திதிக்ஷாவை அடைவதன் பலன் என்ன?
பொறுமையே ஒரு பலன்தான்.
மற்ற சாதனைகளை பொறுமை இருந்தால்தான் செய்ய வேண்டும் - சாதனாந்தர நிஷ்டா
சாதனைகளைப் பின்பற்றுவதற்குண்டான தடைகளை நீக்கும்.
அஹிம்சையைப் பின்பற்ற முடியும்.

ஸ்ரத்தா:
ஸ்ரத்தா என்பதற்கு நம்பிக்கை அல்லது விசுவாசம் என்று பொருள்.
எதில் நம்பிக்கை?
குரு வேதாந்த வாக்யேஷூ விஸ்வாஸ: ஸ்ரத்தா
குரு மற்றும் வேதாந்த வாக்யங்களில் நம்பிக்கை வேண்டும்.

நம்பிக்கையின் அவசியம்
ஏற்கனவே தெரிந்த ஒன்றை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. தெரியாத ஒன்றை அடையும் வரை அதன் மீது நம்பிக்கை வேண்டும்.
ஸ்ரத்தையே ஞானத்தின் முதல் படி.
அறிவு வந்துவிட்டல் ஸ்ரத்தையின் தேவை இல்லை.
ஸ்ரத்தையே ஞானமாகப் பரிமாணம் அடைகிறது. ஸ்ரத்தாவான் லபதே ஞானம் என்கிறது
கீதை. உபநிஷத் விஷயத்தில் ஞானம் ஏற்படும் வரை ஸ்ரத்தை தேவை.
கீதை மூன்று வித ஸ்ரத்தைகளைப் பற்றிக் கூறுகிறது. சாத்விகம், தாமஸம், ராஜஸம்.
இதில் சாத்விக ஸ்ரத்தையே நமக்குத் தேவை.


ஸ்ரத்தையை அடைவதற்கான உபாயம் என்ன?
உபநிஷத் இறைவனின் வார்த்தை என்கிற புத்தி.
குரு ஈஸ்வர வாக்யத்தை எடுத்துச் சொல்கிறார் என்கிற புத்தி.
ஞானத்தின் பலனைப் பார்க்கும் பொழுது ஸ்ரத்தை வரும். எனவே ஞானம் யாரிடம்
உள்ளதோ அவரிடம், குருவிடம் சென்று சேவை செய்யும் போது ஸ்ரத்தை வளரும்.
வினயம் – பணிவு. உடல், சொல் மற்றும் அறிவு அளவில் பணிவைக் கைக்கொள்ள
வேண்டும். திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்.

ஸ்ரத்தையை அடைவதன் பலன் என்ன?
ஞானத்திற்கு நாம் ஒரு பாத்திரமகின்றோம். பாத்திரம் என்றாலே கீழே விழுவதிலிருந்து காப்பாற்றப் படுதல் என்று அர்த்தம். ஸ்ர்த்தை நிறைந்த மனிதனிடம் அளிக்கப்படும் ஞானம் கீழே விழுந்து வீணாகாது காப்பாற்றப் படுகிறது.
குரு ஒரு சிஷ்யனிடம் சோதனை செய்யும் விஷயம் – ஸ்ரத்தா.
சிஷ்யனிடம் உள்ள ஸ்ரத்தையே குருவைப் பேச வைக்கும்.
சாஸ்திர விசாரம் முடியும் வரை நம்மை ஞானயோகத்தில் ஈடுபடுத்துவதே
ஸ்ரத்தைதான்.
சாஸ்திரம் பலனைக் கொடுக்க வேண்டுமெனில் ஸ்ரத்தை அவசியம்.ப்ரமாண வியாபாரம்.
ஆன்மிக வாழ்விற்கு மட்டுமல்ல, சாதாரண வாழ்விற்கே நம்பிக்கை அவசியம்.

சாதன சதுஷ்டயம் - 3


ஷமாதி ஷட்க ஸம்பத்தி:
ஷமம்
ஷமம் என்ற சொல்லுக்கு மன அமைதி அல்லது மன ஒடுக்கம் என்று பொருள்.
ஞானத்தை அடையும் பிரதானமான கருவி மனம். மனம் ஒரு கருவி. அது என்றுமே கர்த்தாவின் கையில்தான் இருக்க வேண்டும். புத்திதான் கர்த்தா. மனம் கருவி. புத்தியின் சொல்படி மனம் நடக்க பயிற்சி அளிக்க வேண்டும். பதிவுகளை எடுத்துக் கொண்டு சதா சஞ்சலப்படும் மனம் ஞானத்துக்குரிய கருவி அல்ல.

எந்த சாதனைகளை மேற்கொண்டு மனதை நம் வசப்படுத்த முடியும்?
வைராக்யம்
அடுத்த சாதனையான தமம்.
மனதை ஒழுங்குபடுத்த கீதையில் பகவான் வைராக்யம், அப்யாஸம் என்ற இருவித உபாயங்களைக் கொடுக்கிறார்.
நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், தீய பண்புகளை நீக்குதல்.
வாய்மை என்னும் குணம் மனதை அமைதிப்படுத்தும்.
தேவையற்றவைகளை நினைக்காதே என்று மனதுக்கு ஆர்டர் போட வேண்டும்.
த்யானம், ஜெபம் பழகுதல்.


மனதை அமைதிப்படுத்துவதால் கிடைக்கும் பலன் என்ன?
வைராக்யத்தை அதிகப்படுத்தும்.
இந்திரியக் கட்டுப்பாடு வரும்.
ஞானயோகம் மனதைக் கொண்டு செய்யும் ஒரு சாதனை. எனவே மன அமைதி ஞானயோகத்துக்குத் துணை செய்யும்.
மன அமைதியே ஒரு பலன்.
ஷமம் தமம் போன்ற குணங்கள் ஒன்றுக்கொன்று உதவி செய்யும். இதற்கு அந்யோன்ய ஆஸ்ர: என்று பெயர்.

தமம்
இந்திரிய ஒழுக்கம் அல்லது புலன் அடக்கம்.
குறிப்பாக ஞானேந்திரியங்களான கண், காது, நாக்கு முதலியவற்றை நன்முறையில் பயன்படுத்துதல்.
உடலின் ஆரோக்யம் உணவைச் சார்ந்தது. மனதின் ஆரோக்யம் ஐம்புலன்கள் மூலம் எந்த விஷயத்தை மனத்துக்கு கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தது.
உடலுக்கு ஒரு வாய். மனதுக்குப் பத்து வாய்கள். எனவே மனதுக்குத் தேவையற்ற விஷயங்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
புத்தர் நடக்கும் விதத்தைப் பற்றி வர்ணிக்கும் பொழுது,
அலோல சக்ஷு: யுக மாத்ர தர்ஸி என்று சொல்லப் படுகிறது.
அதாவது, அவர் அசையாத கண்களுடண், எவ்வளவு தூரம் பார்க்க வேண்டுமோ அவ்வளவு தூரம் மட்டுமே பார்த்துக் கொண்டு நடப்பாராம்.

எந்த உபாயங்களின் மூலம் தமத்தை வளர்த்துக் கொள்ள முடியும்?
ஓரிடத்தில் இருந்து பழுகுதல். எடுத்துக்காட்டாக, அதிகம் பேசுவது நம் பலவீனமெனில் வாரத்தில் ஒருநாள் மௌனம் காத்தல்.
விரத ரூபமாக ஸ்ங்கல்பத்தை மேற்கொள்ளுதல்.
புலன்களுக்கு நூறு சதவீதம் சுதந்திரம் கொடுக்காமலிருத்தல்.
எந்தச் சூழ்நிலையில் இருந்தால் கட்டுப்பாட்டை இழப்போமோ அந்தச் சூழ்நிலையில் இருந்து விலகி இருத்தல்.
சத்சங்கம் மற்றும் துர்சங்கத் தியாகம்.


தமத்தின் பலன்கள் யாவை?
இந்திரிய சக்தி – புலன்கள் சக்தியுடன் இருக்கும்.
ஷமத்தை வளர்க்க மிகவும் உதவும்.
குருசேவை போன்றவற்றில் ஈடுபட முடியும்.

உபரமம்
ஷமம், தமம் முதலியவற்றைத் தொடர்ந்து செய்தல், தேவையற்றதிலிருந்து விலகி நம்கடமைகளை மட்டும் செய்தல் (ஸ்வதர்ம அனுஷ்டானம்) முதலியன உபரமம் எனப்படும்.

உபரமத்தை அடைவதற்கான உபாயம் என்ன?
மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து ஷம, தமத்தை மேற்கொள்ள வேண்டும்.


உபரமத்தை அடைவதன் பலன் என்ன?
ஷம, தமம் நமக்குள் நிற்கும்.
ஸ்ரவணத்துக்கு உதவும்.

சாதன சதுஷ்டய சம்பத்தி - 2


வைராக்யம்
ராக: என்றால் பற்று, ஒட்டிக் கொள்ளுதல் என்று பொருள்.
விராக: என்றால் பற்றின்மை, பற்று நன்றாகப் போய் விடுதல் என்று பொருள்.
எனவே வைராக்யம் என்பதற்கு பற்று நீங்கிய தன்மை, பற்றை விட்ட தன்மை உடையமனநிலை என்று பொருள்.
வைராக்யம் என்பது ஒரு செயலன்று. அது ஒரு சாத்யம். A state of mind.

எதில் பற்றற்ற தன்மை இருக்க வேண்டும்?
“இக அமுத்ர போகே விராக:”
இந்த உலகிலும், பிற உலகங்களிலும் இன்பத்தைக் கொடுக்கும் பொருட்களில்
விருப்பமில்லாது இருத்தலே வைராக்யம் எனப்படும்.
இவ்வுலகப் பொருட்களை சாஸ்திரம் இரு வகையாகப் பிரிக்கிறது.
ஒன்று த்ருஷ்டம் அதாவது பார்க்கப்படும் பொருட்கள். மற்றொன்று ஸ்ருதம். கேட்கப்பட்ட பொருட்கள். இவ்விரு வகையான பொருட்கள் மீதும் பற்றின்றி இருத்தலே வைராக்யம்.
பற்றின்மையும், வெறுப்பும் ஒரே விதமான குணங்கள் அல்ல.
பொருட்கள் கொடுக்கும் இன்பத்திற்கு அடிமையாகாமல் இருத்தலே பற்றின்மை ஆகும்.

வைராக்யத்தை எந்தெந்த உபாயங்களின் மூலம் அடையலாம்?
வைராக்யத்தின் மூல காரணம் விவேகம் ஆகும். ஆனால் விவேகமே வைராக்யத்தைக் கொடுத்து விடாது. எனவே கீழ்க்காணும் உபாயங்களை மேற்கொள்ள வேண்டும்.

1. விவேக அப்யாஸம் அடைந்த அறிவை மீண்டும், மீண்டும் மனதில் கொண்டு வந்து பயிற்சி செய்தல்.
2. துக்க தோஷ அனுதர்ஸனம் – பொருட்கள் சிறு,சிறு இன்பத்தை அளித்தாலும், அவை இறுதியில் துன்பத்திற்கே வழி வகுக்கின்றன என்ற தெளிவு.
3. உலகின் பொருட்கள் நிலையற்றது என்ற அறிவை மீண்டும், மீண்டும் கொண்டு வருதல்.
4. பொருட்களை அன்பவிக்கும் என் புலன்கள் நிலையற்றவை என்று தெளிதல்.
5.பலஹீனத்துவம் – பொருட்கள் என்னையும், என் புலன்களையும் பலவீனப்படுத்தும்.
6. அத்ருப்திகரத்வம் – இவ்வுலகில் எப்பொருளுக்கும், எம்மனிதனுக்கும் ஒருவனை முழுமையாகத் திருப்திப்படுத்தும் ஆற்றல் கிடையாது.
7. எந்தப் பொருளுக்கு அடிமையாகி விடுகிறோமோ அந்தப்பொருளை பகிர்ந்து கொடுக்கும் எண்ணம் வராது.
8. பொருட்கள் நம் சுதந்திரத்தைப் பறித்து விடும்.
இது போன்ற தொடர்ந்த விவேக அப்யாஸமே நாளடைவில் வைராக்யமாகப் பரிணாமம் அடையும்.

சங்கல்பத் த்யாகம்
ஒரு பொருளைப் பற்றி நினைத்து, நினைத்துதான் அப்பொருள் மீது பற்று வருகிறது.
இது போன்ற சங்கல்பத்திற்குக் காரணம், ஸோபனா அத்யாஸம். அதாவது அது எனக்கு
நன்மையைத் தரும் என்னும் எண்ணம்.
எனவே வைராக்யம் பூரணமடைய விஷயத் தியானம் செய்யாமல் இருக்க வேண்டும்.

சத்சங்கம்
சிறு சிறு வைராக்யமுள்ளவர்கள் ஒன்று கூடும்போது அவர்கள் ஒருவ்ருக்கொருவர்உதவி செய்து கொள்வதால் வைராக்யம் மேலும் வளர்கிறது.
நம்மை விட வைராக்யம் அதிகமுள்ளவர்களிடம் பழகி நம் வைராக்யத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கர்மயோகம்
கர்மயோக முறைப்படி நம் தர்மத்தை அனுசரித்து வாழ்தல் வைராக்யத்தைத் தரும்.
விசாரம் செய்து ஞானம் வரவில்லையெனில் மீண்டும் மீண்டும் விசாரம் செய்.
கர்மயோகம் செய்து வைராக்யம் வரவில்லையெனில் மீண்டும் மீண்டும் கர்மயோகம் செய் என்று ஒரு கூற்று உண்டு.

வைராக்யத்தின் பலன் என்ன?
தைத்ரிய உபநிஷத் ஸ்லோகம் ஒன்று கீழ்வருமாறு கூறுகிறது.
ஒரு பொருளை அனுபவிக்கும் போது ஒரு மடங்கு சுகம் எனில், அந்தப் பொருள் மீது
உள்ள வைராக்யம் நூறு மடங்கு சுகம் தரும்.
சாஸ்த்ரப் ப்ரவிருத்தி – வைராக்யம் சாஸ்திரம் நோக்கி, நிலையானதை நோக்கி
நம்மைச் செலுத்தும்.
சத்குண ஹேது: வைராக்யம் நற்பண்புகளான தெய்வீக குணங்களை அடைய உதவும்.

சாதன சதுஷ்டய சம்பத்தி - 1


சாதன சதுஷ்டய சம்பத்தி
விவேகம்

விவேகம் என்ற சொல்லுக்குப் பின் வரும் பொருள்கள் உண்டு.
(1) ப்ருதக்த்வேன ஞானம் – பிரித்துப் புரிந்து கொள்ளுதல்
பிரித்துப் புரிந்து கொள்ளுதல் எனும் போதே இரண்டு முற்றிலும் வேறான பொருட்கள் கலந்திருக்கின்றன என்று அர்த்தம்.
(2) விஷேஷ ரூபேண ஞானம் – தெளிவாகப் புரிந்து கொள்ளுதல்.
(3) அன்யோன்ய தர்ம (அ) வ்யாவர்த்த ரூபேண ஞானம் – ஒரு விதமான வஸ்து மற்றொன்றுடன் கலந்து விடாமல் புரிந்து கொள்ளுதல்.
(4) விசாரம் – ஆராய்தல்
(5) சத்வ சுத்தி: - மனத்தூய்மை.

வேதாந்தம் என்பது ஒரு கண்ணாடியைப் போல. அந்தக் கண்ணாடி முன் நின்றால் அதுநம் மனதையும், அதற்கு ஆதாரமாய் இருக்கும் தத்துவத்தையும் காட்டும்.
அந்தக் கண்ணாடி முன் நிற்கையில் நமக்கு ஒரு சுய அறிவு வேண்டும்.
ஒரு ஸ்லோகம் சொல்கிறது. இரு கண் அற்றவர்க்குக் கண்ணாடி எவ்விதம் உதவும்?யாருக்கு சுய அறிவு இல்லையோ அவனுக்கு சாஸ்திரம் எவ்விதம் உதவும்?
அந்த சுய அறிவே விவேகம், சுயம் ப்ரக்ஞா எனப்படுகிறது.

தர்க்க சாஸ்திரம் மனதில் தோன்றும் ஒவ்வோர் எண்ணத்தையும் ஞானம் என்கிறது.
அதிலும் யதார்த்த ஞானம் மற்றும் அயதார்த்த ஞானம் என்று இருவிதமான ஞானம் உண்டு.எவ்விதம் பொருள் உள்ளதோ அவ்விதமே தோன்றும் எண்ணத்துக்கு யதார்த்த ஞானம்என்று பெயர். வெளியில் ஒரு பொருள் இருக்க, மனதில் வேறு எண்ணம் தோன்றினால்அதற்கு அயதார்த்த ஞானம் அல்லது விபரீத ஞானம் என்று பெயர்.
எனவே யதார்த்த ஞானத்துடன் இருத்தலே விவேகம் என்ப்படுகிறது.

விவேகத்தின் லக்ஷணம்
நித்ய அநித்ய வஸ்து விவேக:
எது நிலையானது, எது நிலையற்றது என்பது பற்றிய அறிவு விவேகம் எனப்படும்.
நிலையான மற்றும் நிலையற்ற இரண்டு முற்றிலும் வேறான பொருட்கள்
கலந்திருக்கின்றன. அவ்விரு பொருட்கள், ஜடமான உலகமும், உணர்வு சொரூபமான ப்ரம்மமும் ஆகும்.
ப்ரம்மம் நித்யமானது, உலகம் அநித்யமானது என்ற அறிவே விவேகம்.
இந்த அறிவின் அடிப்படையிலேயே பிற குணங்கள் உருவாகும். எனவே இதுவேவேதாந்தத்தின் முதல் படியாகவும், பிற மூன்று குணங்களுக்கும் விதையாகவும் அமைந்துள்ளது.
விவேகம் என்ற அறிவை நாம் இவ்வுலக வாழ்விலிருந்தே பெற வேண்டும்.
இவ்வுலக வாழ்வு நமக்கு விவேகத்தைக் கொடுத்திருந்தால் நாம் இவ்வுலகை நன்குபயன்படுத்தியிருக்கிறோம் என்று பொருள். எனவே நன்றாக விவேகம் வந்தவுடன் உலகை விட்டு விடுவோம்.

விவேகத்தின் மூலம் உலகின் மீது நமக்கு என்ன விதமான பாவனை ஏற்படும்?
உலகப் பொருட்களிடமிருந்து விலகும் தன்மை.
உலகின் அனைத்துப் பொருட்கள் மீதும் வைராக்யம் (பற்றற்ற தன்மை) எனும் பாவனை.
நித்யமான பொருளை அடையும் விருப்பம்.
உலகில் மேற்கொள்ளப்படும் செயல்கள் அனைத்தும் சாதனையேயன்றி சாத்யமில்லைஎன்கிற தெளிவு.

எந்த உபாயத்தின் மூலம் நிலையானது, நிலையற்றது பற்றிய அறிவு அடையப்படும்?
1. சாஸ்திரம் அல்லது ஸ்ருதி என்று அழைக்கப்படும் வேதாந்தம் அல்லது உபநிஷத்.
2. ஸ்ருதி சம்மத தர்க்கம் – உபநிஷத்துகளை மையமாகக் கொண்டு விளக்கும் தர்க்கம்.
3. கேவல தர்க்கம் – சுய அறிவைக் கொண்டு சிந்தித்தல். உ– ம். எதெல்லாம்
உறுப்புகளுடன் கூடியதோ அதெல்லாம் அழிவுக்குரியது.
4. அனுபவப் ப்ரமாணம் – நம் மற்றும் பிறரது அனுபவங்கள்.

இதில் அனுபவம் என்பது ஆராய்ந்து பார்க்கப்பட்டால் மட்டுமே அறிவைக் கொடுக்கும்.
ஆராய்ந்து பார்க்கப்படாத அனுபவம் விருப்பு, வெறுப்புகளையே வளர்க்கும்.

அனுபவத்தை ஆராய்ந்து பார்க்கும் மனதை அடைதல் எவ்வாறு?
மனதை சாத்விக குணப் ப்ரதானமான மனதாக மாற்ற வேண்டும்.
சாத்விக மனமே அனுபவத்தை ஆராயும் தன்மை கொண்டது.
சாத்விக மனம் அறிவைக் கொடுக்கும்.
ராஜஸ மனம் விருப்பு, வெறுப்பைக் கொடுக்கும்.
தாமஸ மனம் சோம்பேறித்தனத்தைக் கொடுக்கும்.

மனதை சத்வ குணப் ப்ரதானமாக மாற்றுவது எப்படி?
கீதையில் பகவான் சாத்விக குணம் சம்பந்தமான விஷயங்களைக் கூறுகிறார்.
அவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பயில வேண்டும்.
சாத்விக குணங்களாவன: சாத்விக பூஜை, சாத்விக ஸ்ரத்தை, சாத்விக ஆஹாரம் முதலியன.
ஸ்வாமி சித்பவானந்தரிடம் ஒரு முறை சாத்விக ஆஹாரம் பற்றிக் கேட்டதற்கு, “அளவாய்ச் சாப்பிட்டால் அது சாத்விக உணவு” என்றார்.
எனவே எந்தச் செயலுமே அளவுடன் இருந்தால் அது சாத்விகம் என்று அறிந்து கொள்ளலாம்.
விவேகத்தினால் விளையும் பலன் என்ன?
உலகம் நிலையற்றது என்ற அறிவால், இவ்வுலகின் மீது வைராக்யம் என்ற பாவனை ஏற்படும். எனவே வைராக்யம் என்ற அடுத்த குணத்துக்கு விவேகமே விதை.
நிலையான பொருளான பரமாத்மாவை அடைய வேண்டும் என்கிற ஆர்வம் –
முமுக்ஷுத்வம் – ஏற்படும்.

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.



சாதன சதுஷ்டயம்
1
ஓம் ஸஹனா அவது ஸஹனௌ புனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினா வதீதமஸ்து மாவித் விஷாவஹைஹி
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
சதுஷ்டயம் என்றால் நான்கினுடைய சேர்க்கை என்று பொருள். சாதன சதுஷ்டயம் என்றால் நான்கு சாதனைகளின் தொகுப்பு என்பது பொருள்.
வேதாந்தத்தின் முதல் மற்றும் முக்கியமான படி இது.
இந்த நான்கு சாதனைகளும் ஒரு மனிதன் தன் இறுதி இலக்கான மோக்ஷத்தை அடைவதற்கான அடிப்படைத் தகுதிகளாகும்.
சங்கரர் இந்த உலகிற்கான லக்ஷணம் கொடுக்கையில், சாதன சாத்ய சொரூபம் ஜகத் என்றார். எனவே இவ்வுலகில் அனைத்து விஷயங்களுமே வெவ்வேறு சாதனைகளின் மூலம் அடையப் பெறும் சாத்யங்களின் தொகுப்பாகவே உள்ளன.


சாத்யம் என்றால் என்ன?
சாதனேன ஆப்யம் சாத்யம்.
ஒரு சாதனையினால் அடையப்படுவது சாத்யம்.
வாழ்வில் நாம் எதை அடைய வேண்டுமென்றாலும் சாதனையின் மூலமாகத்தான் அடைய முடியும். சாதனையின்றி சாதிப்பார் இல்லை என்பது முதுமொழி.

சாத்யத்தின் மற்றுமொரு விளக்கம் – எது நம்மால் தேர்ந்தெடுக்கப்படுகிறதோ அது சாத்யம் எனப்படுகிறது. இதற்குப் புருஷார்த்தம் என்று பெயர்.
சாத்யத்தை தேர்ந்தெடுப்பதில் நமக்கு CHOICE உண்டு. ஆனால் சாதனையில் நமக்கு CHOICE கிடையாது.

சாதனை என்றால் என்ன?
எது நம்மை சாத்யத்தில் சேர்க்குமோ அது சாதனை எனப்படும்.
சாத்யம் ஒன்றாக இருப்பினும் சாதனை பலவாக இருந்து அவற்றின் தொகுப்பே அந்த சாத்யத்தைக் கொடுக்கும்.
சாதனைகள் நேரடி சாதனை (சாக்ஷாத்) மற்றும் அமுக்கிய சாதனை என்று
இரு வகைப்படும்.
ஹோமகுண்டத்திற்க்கு செங்கல் நேரடி சாதனை என்றால்,அதைச் சுமந்துவரும் கழுதை அமுக்கிய சாதனை.



எந்த சாத்யத்தை அடைவதற்காக இந்த நான்கு சாதனைகளும்?
மோக்ஷம் என்ற சாத்யத்தை அடைவதற்காக. இந்நான்கு சாதனைகளும் அதை
அடைய நம்மைத் தகுதிப்படுத்தும்.
எது சாதனையின்றி சாத்யமாகவே உள்ளதோ அது பரமசாத்யம்(ULTIMATE GOAL) எனப்படும். அதற்கு மேல்அடைவதற்கு வேறு சாத்யமே இல்லை.



மோக்ஷம் அல்லது முக்தி
மோக்ஷம் என்பது மனதின் முழுநிறைவு. ஆழ் மனதில் உள்ள நிறைவு.
வயிற்றுக்கு வரும் பசி போல மனதுக்கு வரும் பசியே ஆசை. மனதின் ஒரு ஆசையைத் தீர்த்தால் மற்றோர் ஆசை பிறக்கிறது. நிறைக்க முடியாத இப்படிப்பட்ட மனதை நிறைத்தலே மோக்ஷம் எனப்படுகிறது.
மோக்ஷம் என்பதற்குப் பிறிதொரு பொருள் பந்தநிவிர்த்திஹி அதாவது பந்தத்தில் (கட்டுகளில்) இருந்து விடுபடுதல்.
பந்தம் என்பது நம் மனதில் இருக்கிற ஒரு பாவனை (Self Judgement)
நம்மைக் குறித்து நாம் கொண்டிருக்கும் முடிவே பந்தம் எனப்படும்.
அஹம்தா மமதா பந்தஹ நான் எனது என்னும் எண்ணமே பந்தம்.
நமக்குத் தொடர்பில்லாத ஒன்றைத் தொடர்பு படுத்திக் கொள்வதே பந்தம்.
நான் அல்லாத ஒன்றை நான் என்று நினைப்பதே பந்தம்.

பந்தம் எப்படி வந்தது?
எதை நீ, நீ என்று நினைக்க வேண்டுமோ, எதை நீ, உனக்கு அல்லாதது என்று நினைக்க வேண்டுமோ அது உனக்குத் தெரியவில்லை.
எனவே நீ அல்லாததை நீ என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்.
இதற்குக் காரணம் அறியாமை. அஞ்ஞானம்.


எதைப் பற்றிய அறியாமை?
நான் யார் என்பதைப் பற்றிய அறியாமை.
எனவே நான் யார் என்கிற அறிவை அடைய வேண்டும்.
அந்த அறிவை, அறிவைக் கொடுக்கும் கருவியின் மூலமே அடைய வேண்டும்.
அறிவைக் கொடுக்கும் கருவிக்கு ப்ரமாணம் என்று பெயர்.
ப்ரமா – ஞானம், கரணம் – கருவி.
ப்ரமாணங்களில் பல வகை உண்டு. அறிவை நேரடியாகக் கொடுக்கும் கருவிக்கு ப்ரத்யக்ஷப் ப்ரமாணம் என்று பெயர். யூகத்தின் மூலம் அறிவைக் கொடுக்கும் கருவி அனுமாணப் ப்ரமாணம் எனப்படும்.
சொற்கள் மூலம் அறிவைக் கொடுக்கும் கருவிக்கு ஷப்தப் ப்ரமாணம் என்று பெயர்.
உபநிஷத் அல்லது வேதாந்தம் ஒரு ஷப்தப் ப்ரமாணம் ஆகும்.
வேதாந்தோ நாம உபநிஷத் ப்ரமாணம்
வேதாந்தம் என்பது உபநிஷத் ரூபமாக இருக்கும் ப்ரமாணம்.

வேதாந்தம் எதைப் பற்றிய அறிவைக் கொடுக்கிறது?
அழியாத, நித்யமான பொருளைப் பற்றிய அறிவைக் கொடுக்கிறது.
கண்ணால் காணும் அனைத்தும் அழிவுக்குறியது என்று சாஸ்திரம் கூறுகிறது.
அழியாத ஒரே ஒரு பொருள்தான் உண்டு. அதை அறியவே உபநிஷத் துணை புரிகிறது.

அழியாத பொருளை அறிவதால் என்ன பலன்?
அழியாத பொருள் பற்றிய அறிவை அடைந்தால், அந்த அழியாத பொருளையே அடையலாம்.
அறிவைக் கொடுக்கும் கருவியைப் பயன் படுத்தும் போது அது அறிவைக் கொடுக்க
வேண்டுமெனில் அதற்கு சாதன சதுஷ்டய சம்பத்தி எனப்படும் நான்கு பண்புகளும் அவசியம்.

சாதன சதுஷ்டய சம்பத்தி எனப்படும் நான்கு பண்புகளும் யாவை?
1. விவேகம்
2. வைராக்யம்
3. ஷமாதி ஷட்க சம்பத்திஹி (இது ஆறு பண்புகளின் தொகுப்பு ஆகும்)
அவை, ஷமம் – மனக்கட்டுப்பாடு
தமம் – இந்த்ரியக் கட்டுப்பாடு
உபரமம் – விலகியிருத்தல், கடமையைச் செய்தல்
திதிக்ஷா – பொறுமை, சகித்துக் கொள்ளுதல்
ஸ்ரத்தா – நம்பிக்கை
ஸமாதானம் – மன ஒருமுகப்பாடு
4. முமுக்ஷுத்வம்
இந்த நான்கு சாதனைகளும் சம்பத்தி (செல்வம்) எனப்படும்.
இந்த நான்கு சாதனைகளின் இருப்பிடம் நமது மனம். எனவே இது ஒரு அகச்செல்வம் ஆகும்.
இந்நான்கு பண்புகளும் நம்மிடம் குறைவாக இருப்பதால், இவையே நமக்கு முதலில்சாத்யமாகி விடுகின்றது. அதாவது, சாதன சதுஷ்டயம் சாத்ய சதுஷ்டயமாகி விடுகிறது.இந்நான்கு சாதனைகளைப் பற்றி விரிவாகவும், இந்த சாதனைகள் ஒவ்வொன்றின் லக்ஷணம், அவற்றை அடையும் உபாயம் மற்றும் அவற்றை அடைவதால் உண்டாகும் பலன் ஆகியவை பற்றி பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காணலாம்.

மேலும் வாசிக்க