சீதா ராமன் - ஜமீலா கணேசன் கட்டுரை - என் பார்வை





சீதா ராமன் - ஜமீலா கணேசன் கட்டுரை

மிக நுட்பமாகவும், விரிவாகவும் எழுதப்பட்ட கட்டுரை ஜமீலா. இலக்கிய நயம் பாராட்டல் கட்டுரைகளுக்குண்டான எல்லா இலக்கணங்களோடும் பொருந்தி வரும் விதத்தில் எழுதியிருக்கிறீர்கள். இஸ்கான் ஊர்வலத்தில் சிறுவர்களுக்குள் பார்த்த வில் சுமந்த ராமன் உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய ஓர் எளிய கேள்விக்கு விடை தேடிச் செல்லும் பயணமாகவே இந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது. அன்பே உருவான ராமன், தாடகையை வதம் செய்யத் தயங்கிய ராமன், ராமகாதையின் பிற்பகுதியில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவிக்கும் நிலைக்கு ஏன் தள்ளப்பட்டான் என்பதுதான் அந்தக் கேள்வி. கட்டுரை ஆசிரியர் சிந்தித்து, ஆராய்ந்து அதன் காரணம் ராமன் சீதை மேல் கொண்டிருந்த காதலே என்ற முடிவுக்கு வருகிறார். அவன் தசரத ராமனோ, கோசலா ராமனோ அல்ல, சீதா ராமனே என்று உறுதியாகக் கூறுகிறார். அதற்குக் கம்பனைத் துணைக்கழைத்துக் கொள்கிறார். அவனது பாடல்களிலிருந்து, வால்மீகியில் நாம் காண இயலாத காதல் ததும்பும் பகுதிகளை நமக்கு எடுத்து விளக்குகிறார். 


கம்பன் மிதிலைக்குள் நுழைகையில் இருவரும் பார்த்துக் கொள்வதிலிருந்து துவங்கி (That அண்ணலும் நோக்கினான் moment!), மறு நாள் தோழியரோடு கோயில் பூஜைக்கு வரும் சீதையைக் கண்டு ராமன் மயங்கி நிற்றல், சீதையின் கண் வழி புகுந்த காதல் (பால் உறு பிரை), ராமன் வில்லை முறித்ததும் (எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்), முறித்தது அவன் இல்லையெனில் உயிர் துறப்பேன் என்று அவள் சொல்லுதல், ராமன் தேர் உலா வருகையில் பெண்கள் அவனழகு கண்டு மயங்குதல் (தோள் கண்டார்- தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார்-தடக்கை கண்டார்), திருமணத்துக்கு முந்தைய இரவு, திருமண நிகழ்வு, கானகம் புகுதல், அதிகம் பேசாத ராமன் காட்டில் இருக்கும் போது, பதினாறு பாடல்களில் இயற்கையழகை விவரிக்கிற சாக்கில் அன்பு மனைவியின் அழகை விவரித்தல் (காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை), பஞ்சவடியில் இலக்குவன் பர்ணசாலை அமைக்கையில் ராமனும் சீதையும் கண்களாலேயே பேசுதல் (தோளின் கண் நயனம் வைத்தாள்), சீதையைப் பிரிந்து ராமன் இரவெல்லாம் துடித்தல் (காய்த்து இரும்பை, கருமகக் கம்மியன்), சுக்ரீவன் சீதையின் அணிகலன்களை காட்டுகையில் ராமன் துடித்தல் (இரும்பு கண்டனைய நெஞ்சம் எனக்கில்லை) என்று சீதை மேல் ராமனுக்கிருந்த காதல் குறித்து கம்பன் எங்கெல்லாம் பாடியிருக்கிறான் என்ற விரிவானதொரு வரைபடத்தையே அளித்திருக்கிறார் ஜமீலா.

கட்டுரை முழுவதும் சீதை குறித்தும், ராமன் குறித்தும் தனக்குள் தோன்றும் வியப்புக்களை, கேள்விகளை, ஒரு குழந்தைக்குரிய ஆர்வத்தோடு முன்வைத்து, அதற்குக் கம்பனில் விடை கிடைக்குமா என்று பார்த்திருக்கிறார். கம்பனுக்கும் முன்பே தமிழில் ராமகாதை பரிச்சயம் இருந்திருக்கிறது என்பதை நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் ஐம்பத்து நாலாவது பாடலுக்கு எழுதிய உரையை மேற்கோள் காட்டி நிறுவுகிறார். கம்பன் மேல் அவருக்குள்ள காதலும், ஒரு மேதையின் முன் பணிந்து நின்று, வியந்து மகிழும் குழந்தையுள்ளமுமே இக்கட்டுரையைச் சிறப்பு மிக்கதாக்குகின்றன.  நான் வாசிக்கும் சில இலக்கியக் கட்டுரைகள் முழுவதும், “எனக்கு எவ்ளோ தெரீது பாத்தியா?” என்று ஆசிரியரின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும். அதுவே வாசிப்பிலிருந்து நம்மை வெளியே தள்ளி விடும். பணிவில் ஓர் அழகு இருக்கிறது. கற்றோர்க்கு நன்றாம் பணிதல். மேதைமையின் முன் பணிதலே இக்கட்டுரையை சிறப்பு மிக்கதாக்குகிறது. வாசிக்க, வாசிக்க இன்பமூட்டுகிறது.

கம்பன் பாடல்களை மேற்கோள் காட்டியிருந்த விதத்திலேயே ஆசிரியர் கம்பனில் எவ்வளவு தோய்ந்திருக்கிறார் என்பதற்குச் சான்றாக இருந்தது. நம்மையும் கம்பனைக் கற்கத் தூண்டுகிறது இந்தக் கட்டுரை. இது போன்ற கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து எழுதினால் கம்பனில் நுழைவதற்கு பலருக்கு உதவியாயிருக்கும்.


Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை