Tuesday, March 31, 2015

இரு கவிதைகள்

1.
செவ்வகத்தைச் சதுரம்
என்றே கொள்க.
இரண்டிலும்
எதிரெதிர் பக்கங்கள் இணையானவை
அளவில் சமமானவை.
நான்கு மூலைகளிலும் பாகை தொண்ணூறுதானே.
ஓரிணை மற்றோரிணையவிட நீண்டிருப்பது
காலத்தின் அவசியம் கருதியே.
ஓரிணை நீள்வதின் தேவை அறிந்து
காலந்தோறும் குறுக்கி வாழந்தது மற்றோரிணை.
நவீன சமத்துவம் கருத்தில் கொண்டு
இனி செவ்வகத்தைச் சதுரம் என்றே அழைத்து வைப்போம்.

2.
தண்ணீரினுள் அமிழும் பந்து
தலை சிலுப்பி மேலே எழும்பும்.
காற்றடைத்த பொருளுக்குத்
தண்ணீருடன் உறவு இல்லை.
மேற்பரப்பில் வழியும் நீரை வளிக்காற்று உண்டு விடும்.
பந்துக்கில்லை பந்தமும் பாசமும்.
பந்துக்குள்ளும், வெளியும் ஒரே காற்றுதான்.
தோல் கிழிந்தால் வேற்றுமை அழியும்.
பந்து என்பது காற்றேதான்.


                                                                      

Tuesday, March 24, 2015

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எழுதிய பதில் வராத கடிதம்

அன்புள்ள எஸ்ரா,

ஆத்மா நாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி வாசித்தேன். நீண்ட நாள் கழித்து உங்கள் சிறுகதை ஒன்றை வாசிக்கிறேன். பல்வேறு விவாதங்களை எழுப்பும் சிறுகதை இது. குமாரசாமி ஜேஜேயை நினைவுபடுத்தினான்( சொற்களின் இடைவெளிக்குள் நீந்துவது சுகமானது/ வெட்டவெளியில் மூத்திரம் அடிப்பது மாதிரி./ஊரைக்கூட்டி வைத்து முதலிரவு நடத்த முடியாது)
கவிதைகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ளும் சிறுகதை என்பதே புதுமையான அணுகுமுறையாக இருந்தது. கோழிரோம்த்தினைக் குறித்த விவாதத்தை பிரமிள் கவிதைக்கு நீட்டியது சுவாரஸ்யமான திருப்பம். கதைக்குள் நிறைய கவிதைகள். ஈழத்து மஹாகவியின் கவிதை சந்தத்துடன் இழைந்த சுகமான அனுபவம். கவிதையைக் குறித்து கவிதையைப் போன்றே ஒரு சிறுகதை.

என் போன்று அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லாம் உங்களை இணையத்தில்தான் அதிகம் வாசிக்க இயலும். நீங்கள் உங்கள் தளத்தில் நிறைய படைப்புகளை வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

Sunday, March 22, 2015

எழுநிலம் நாவல் - அத்தியாயம் 3

3
அம்மா வீடு கட்டுவது பற்றிச் சொன்னபோது, இவ்வளவு விரைவாகக் காரியங்கள் நடந்தேறும் என்று கிருத்திகா எதிர்பார்க்கவில்லை. தேவையான சாமான்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டு அந்த மாதக் கடைசியிலேயே கிளம்பிவிட்டாள் அம்மா. தம்பிதான் மணலிவரை பொருட்களைச் சுமப்பதற்கு ஒத்தாசையாகப் போய் வந்தான். அப்பா கூடப் போகவில்லை. மடத்து வேலையும், புதிதாக நிதி நிறுவனம் அமைக்கும் வேலையும் இருப்பதால் தன்னால் வர இயலாதென்று சொல்லிவிட்டார். கிருத்திகாவுக்கு மாதப்பரீட்சை இருந்தது. சாமான்களைக் கட்டிக்கொண்டு தம்பியோடு அம்மா பேருந்திலேறியபோது கிருத்திகாவின் மனத்தில் வெற்றிடம் ஒன்று சட்டென்று உருவானது. வயிறு திருகிக்கொண்டது. கோபால் அவளைப் பார்த்துக் கையசைத்தான். ‘அய்யாவுக்கு ஜாலி. ரெண்டு நாள் மணலில.’ என்றான்.  அம்மா ஜன்னல் வழியே கிருத்திகாவைப் பார்த்து, ‘ஒழுங்கா சாப்புடுறி. எங்கக்காகிட்ட உங்க ரெண்டுபேர் செலவுக்கும் மாசாமாசம் காசு கொடுக்கறேன்னு சொல்லிருக்கேன். முதல் மாசத்துக்கு இப்பவே கொடுத்தாச்சு. உங்க ரெண்டுபேருக்கும் அவ ஒண்ணும் இலவசமா இடம் கொடுக்கல. என் நகை அஞ்சு பவுன் இருக்கு அவகிட்ட.’ என்றாள். வழக்கம்போலவே கண்களால் புன்னகைத்தாள். கிருத்திகா சரி என்று தலை மட்டும் ஆட்டினாள். வாய்பேசினால் குரல் நடுங்கி அழுது விடுவோம் என்று அச்சமிருந்தது. நிறைய அழுதாயிற்று அம்மாவுடன் சேர்ந்து. கண்ணீர் வற்றும் வரை.
அம்மாவை வழியனுப்பி வைத்துவிட்டு பெரியம்மா பெண் பார்வதியுடன் வீடு திரும்பும்போது கிருத்திகாவை அம்மாவின் நினைவுகள் சூழ்ந்து கொண்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் வீட்டின் நிலைமை அவளுக்கு மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்தது. அதுவும் அவளாகப் புரிந்து கொண்டதுதான். அம்மா எதுவும் சொன்னதில்லை. இவளே கேட்டாலும், ‘இது எங்க புருஷன் பொண்டாட்டி விவகாரம். இதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத விஷயம். உங்களுக்கு வேணுங்கறத நான் செய்றேன். எவ்ளோ தூரம் படிக்கணுமோ நான் படிக்க வைக்கிறேன். உங்கப்பா ஏன் அப்படி இருக்காரு, ஏன் வீட்டைக் கவனிச்சுக்க மாட்டேங்கறாருங்கறதெல்லாம் என் பிரச்னை. அது பத்தியெல்லாம் யார் பேசுனாலும் எனக்குப் பிடிக்காது’ என்று கறாராகச் சொல்லி விடுவாள்.
வீட்டில் மகிழ்ச்சி என்ற பொருள் அம்மாவால் உருவாக்கி அளிக்கப்படுகிறதென்பதே கிருத்திகாவுக்கு வெகு அண்மையில்தான் தெரிய வந்தது. இரண்டு பேரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே தன் தலையாய கடமை என்பதைப் போலச் செயல்பட்டிருந்தாள் அம்மா. அடுத்து கணவனுக்குப் பணிவிடை செய்தல். சமயங்களில் இல்லத்தில் நிலவும் அமைதிக்குப் பொருள் தெரியாது திகைத்து நின்றிருக்கிறாள் கிருத்திகா. துள்ளாட்டம் போட்டபடி வீட்டுக்குள் வந்து தோழிகளுக்குள் நிகழ்ந்த ஏதோ ஓர் உற்சாகமான நிகழ்வை விவரிக்க விழைவாள். அம்மா ஓர் ஓரமாய் ஒடுங்கி அமர்ந்திருப்பதையும், அப்பாவின் அறையிலிருந்து புகை சுழன்று மிதப்பதையும் கண்டு அவள் உற்சாகம் வடிந்து விடும். பலமுறை உறைந்து நின்று அந்த அமைதியின் புதிருக்கு விடை தேடியிருக்கிறாள். அண்மைக்காலங்களில் அப்புதிர் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்ந்த வண்ணம் இருந்தது.
கிருத்திகாவுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அப்பாவிடம் ஒட்டுதல் இல்லை. ஏனென்று அப்போது அவளால் விளக்க இயன்றிருக்காது. இத்தனைக்கும் கண்களை அம்மாவிடமிருந்து கடன் வாங்கியது தவிர, பிற அத்தனை புற அம்சங்களையும் அப்பாவிடமிருந்தே சுவீகரித்திருந்தாள். ‘ பரவாயில்ல, அப்பா மாதிரி நல்ல நெறமா வந்து பொறந்துருக்கு. மலரு மாதிரி மாநிறமாப் பொறந்திருந்தா மாப்பிள்ளை பாக்கறதுக்குள்ள பெரும்பாடாயிரும்’ என்று வீட்டுக்கு வரும் உறவினர்கள் சொல்லுகையில் கிருத்திகாவுக்கு எரிச்சல் பொங்கிக் கொண்டு வரும். ‘உங்கப்பா உன்னத்தூக்கினாலே நீ வீறு வீறுன்னு அழுவே.’ என்பாள் அம்மா. ‘ஏனோ தெரியல. அப்பனுக்கும், புள்ளைக்கும் அப்ப இருந்தே ஏழாம் பொருத்தம்.’
திருமணமானதிலிருந்தே அப்பா இப்படித்தான் என்று பெரியம்மா ஒருமுறை சொல்லியிருக்கிறாள். சுற்றுமுற்றும் பார்த்தபடி அம்மா அங்கு வரவில்லை என்று உறுதி செய்து கொண்ட பிறகுதான் பேச ஆரம்பித்தாள் பெரியம்மா. பெரியம்மாவும், அம்மாவும் அண்ணன், தம்பிக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். மணலியில் பெரிய இடம். அப்பா இல்லாத குடும்பமாதலால், திருமணம் முடிந்தவுடனேயே சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்து விட்டார்கள். அம்மா வீடும் கொமாரபாளையத்தில் வசதி படைத்த இடம்தான். இருவருக்கும் ஐம்பது பவுன் போட்டு அனுப்பி வைத்திருந்தார்கள். திருமணத்திற்குப் பிறகு இரு சகோதரர்களுமே கொமாரபாளையம்தான் ஜவுளித் தொழிலுக்கு உகந்த இடம் என்று தீர்மானித்து இங்கேயே வந்து விட்டார்கள். அப்பா போக்கியத்துக்கு ஒரு வீட்டை எடுத்துக் கொண்டு, ஒரு பழைய பட்டறையை லீசுக்கு எடுத்து ஆறு தறிகள் போட்டு தொழிலை ஆரம்பித்திருந்தார். மூத்தவர் வந்த இரண்டு ஆண்டுகளிலேயே எட்டு தறிகள் கொண்ட பட்டறை ஒன்றைச் சொந்தமாக்கி, எழுநூற்று ஐம்பது சதுர அடியில் ஒரு வீட்டையும் கட்டி விட்டார்.
கிருத்திகாவின் அப்பாவும், பெரியப்பா ரத்தினசாமியும் தொழில் ஆரம்பித்த நேரம் லுங்கிகள் விசைத்தறியில் ஓட்டக்கூடாது என்ற சட்டம் வந்து விட்டது. விசைத்தறியில் ஓட்டி ஏராளமான லுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதால், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் கைத்தறியை நம்பிப் பிழைப்பு நடத்துபவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாக நீண்ட காலமாக எழுந்து வந்த குரலுக்கு அரசு கடைசியாக செவிசாய்த்திருந்தது. இதனால் கைத்தறிக்காரர்கள் மகிழ்ந்தாலும், வட மாநிலங்களுக்கு லுங்கி ஏற்றுமதி செய்து பெரும் லாபம் கண்டு வந்த குட்டிக் குட்டி விசைத்தறி முதலாளிகளுக்கு இச்செய்தி பலத்த இடியாக வந்திறங்கியது. பலர் விசைத்தறித் தொழிலை விட்டு வட்டித் தொழிலுக்கும், டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைப்பதற்கும் சென்று விட்டனர். பள்ளிபாளையத்தில் விசைத்தறிகள் பழைய இரும்பு போல கிலோக்கணக்கில் விற்கப்பட்டதாம். பல விசைத்தறித் தொழிலாளர்கள் பக்கத்து ஊர்களுக்கு நிலக்கடலை விவசாயம் செய்யப் போய் விட்டனர். செழிப்பில் ஊறிக்கிடந்த ஊர் இரண்டு வருடங்கள் தொழில் நலிந்து வறண்டு கிடந்தது. கட்டணம் செலுத்த இயலாததால் நிறைய பேர் தங்கள் குழந்தைகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலிருந்து விலக்கி அரசுப் பள்ளிகளில் சேர்த்து விட்டனர். இருபத்து நான்கு மணி நேரமும் தறிச்சத்தம் கேட்ட ஊர் அமைதியில் சுருண்டு கிடந்தது.
கிருத்திகாவின் அப்பாவுக்கு தொழில் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது. அவர் கல்லூரி படிப்பு முடித்தவர். தன் அறிவின் மீது அபார நம்பிக்கை கொண்டவர். எனவே தறிகளை வந்த விலைக்கு விற்று விட்டு வட்டிக்கு கடன் விடும் சிறிய நிறுவனம், அல்லது கடை என்று சொல்லலாம், ஒன்றைத் துவங்கினார். தொழிலற்று வருந்திக் கிடந்த தொழிலாளர்கள் அநேகர் அவரிடம் கடன் வாங்கினார்கள். வாராவாரம் அசலும், வட்டியும் சேர்த்து ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்ட வேண்டும். பத்து சதவீதம் மாத வட்டி வந்தது. தறித்தொழிலில் இரு மாதங்களில் உழைத்து வரும் வருமானம், இத்தொழிலில் ஒரே மாதத்தில் வந்தது. பெரும்பாலும் தொழிலாளிகள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் சதாசிவத்துக்கு அலைய வேண்டிய அவசியமும் இல்லாது போய் விட்டது. காசு வீடு தேடி வந்தது.
ரத்தினசாமி பள்ளியிறுதி வரை மட்டுமே படித்தவர். ஆனால் தறித்தொழிலில் பதினான்கு வயதிலிருந்தே உழன்று வருபவர். இக்கட்டான சூழ்நிலையிலும் இத்தொழிலை விட அவருக்கு மனம் வரவில்லை. மரணப்படுக்கையில் வீழ்ந்து விட்ட இத்தொழிலை காப்பற்றுவதற்காக, தொழிலைத் தொடர்வதற்கான ஆதாரமும், ஆர்டர்களும் தேடி வேற்று மாநிலங்களுக்குப் பயணமான பிற தறிக்காரர்களுடன் அவரும் பயணமானார். இத்தொழிலில் நிலைநிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறு வயதில் கற்ற இந்தி மொழி அவருக்குக் கை கொடுத்தது. குஜராத் மாநிலம் சூரத்துக்கும், மஹாராஷ்டிர மாநிலம் பம்பாய்க்கும் பயணம் செய்து பல்வேறு ஜவுளி முதலாளிகளிடம் ஆர்டர் கேட்டார். மிகுந்த முயற்சிக்கும் அலைச்சலுக்கும் பின் கிடைத்த சில ஆர்டர்கள் நசிந்து போக இருந்த அவரது தொழிலை உயிர்ப்பிக்கப் போதுமானதாக இருந்தது. காடாத்துணி ஆர்டர்கள்தாம். லுங்கி அளவுக்கு லாபம் தரவிட்டாலும், தறியை ஓட்டத்தில் வைத்திருக்க நிச்சயம் உதவும். புதுத் தெம்புடன் ஊர் திரும்பினார். அவர் பட்டறையில் தறித்தொழில் மீண்டும் உயிர் பெற்றது. அவர் கடும் உழைப்பாளி. இரண்டே வருடங்கள்; அவர் தொழில் விடாது நடக்கும் விதமாக ஆர்டர்கள் வந்த வண்ணம் இருந்தன. வெளிநாட்டு ஆர்டர்கள் எடுத்து ஏற்றுமதி செய்யும் பெரு முதலாளிகள் குறித்த காலத்தில் உற்பத்தியை முடிக்கும் பொருட்டு ரத்தினசாமி போன்ற சிறு தறி முதலாளிகளிடமும் ஆர்டர்களைக் கொடுத்து வந்தனர். ஏற்றுமதி ரகங்களுக்கு வரும் லாபம் மிகப்பெரிது. தரமாகத் தயாரிக்கப்பட்டு, குறித்தகாலத்தில் ஏற்றுமதியும் செய்யப்பட்டு விட்டால் ஆர்டர் பணம் உடனே கிடைத்து விடும். இந்திய முதலாளிகளைப் போல மேலை நிறுவனங்கள் கூலிப்பணத்தை இழுத்தடிப்பதில்லை. எனவே மளமளவென்று ரத்தினசாமியின் பொருளாதார நிலை உயர்ந்தது. வீட்டைக்கட்டினார். சொந்தமாகத் தறிகள் வாங்கிப்போட்டார்.

தன் வழியைப் பின்பற்றுமாறு அண்ணன் தன்னிடம் துவக்கத்திலேயே கூறியதை சதாசிவம் ஏற்கவில்லை. இனி இந்தத் தொழிலில் ஈடுபட்டு நேரத்தையும், உழைப்பையும் விரயமாக்கத் தன்னால் இயலாது என்று கூறி நிதித்தொழிலைக் கையிலெடுத்திருந்தார். முதலில் கொழுத்த லாபம் கொடுத்த அத்தொழில் காலம் செல்லச் செல்ல கிடைத்துக் கொண்டிருந்தது லாபமல்ல, முதல் மட்டுமே என்று நிரூபித்தது. கடன் வாங்கிய பலர் இடையிலேயே தொழில் தேடி ஊர் விட்டுச் சென்று விட்டனர். முதற் சில மாதங்களில் வசூலிக்கப்பட்டிருந்த தொகையைக் கொண்டு கொமாரபாளையத்திலேயே பைபாஸ் தாண்டி முட்காடாக இருந்த  பகுதியொன்றில் ஆயிரத்து முன்னூறு சதுர அடிகளில் ஒரு துண்டு நிலத்தை வாங்கினார். நிலத்துக்குக் கொடுக்க வேண்டிய தொகை முழுவதும் தன்னிடம் இல்லாததால் முக்கால் பங்கு தொகையை அவரும், கால் பங்கு தொகையை அவரது நண்பர்கள் இருவருமாகப் பகிர்ந்து கொண்டார்கள். நிலம் அவர்கள் மூவரது பெயரிலும் பதிவாகியிருந்தது. போட்ட முதல் நிலத்தில் போய் மாட்டிக் கொண்டு விடவே, தொழில் நசித்த நிலையில் சதாசிவம் கையில் பணமின்றித் திணறினார். நிலத்தை உடனே விற்க முடியவில்லை. அடிமாட்டு விலைக்குக் கேட்டார்கள். இந்தக் கால கட்டத்தில் அம்மாதான் கர்சீஃப் தைத்து வீட்டின் அன்றாடத் தேவைகளைக் கவனித்துக் கொண்டாள். அவளது மாத சம்பாத்தியம் இரண்டாயிரத்தில் வீட்டுச் செலவுகளைப் பராமரித்து, பிள்ளைகள் இருவரின் மகிழ்வுச் செலவுகளையும் கவனித்துக் கொண்டாள். 

Sunday, March 15, 2015

சிவராம காரந்தின் அழிந்த பிறகு

சிவராம காரந்தின் அழிந்த பிறகு
சிவராம காரந்தின் அழிந்த பிறகு நாவலை சித்தலிங்கையா மொழிபெயர்ப்பில் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். ஜெயமோகன் எழுதிய கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற நூலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நாவல்களில் ஒன்று இது.
ரயிலில் நட்பு கொண்ட நண்பர் யசவந்த ராயர் மரணத்துக்குப் பிறகு அவரது வேண்டுகோள்களை நிறைவேற்றப் புறப்படுகிறார் ஆசிரியர் சிவராம காரந்த். இந்தப்பயணத்தில் அவர் சந்திக்கும் நண்பரின் உறவினர்கள் மூலமாக யசவந்தரின் வாழ்க்கை குறித்தும், அவரது மேன்மையான பண்பு நலன்கள் குறித்தும் அறிந்து கொள்கிறார். மட்டுமன்றி நற்பண்புகள் நிறைந்த ஒருவனைச் சுற்றி வாழும் சுயநலம் மிகுந்த உறவுகள் குறித்தும் அறிந்து கொள்கிறார். நண்பர் உயிரோடிருந்தால் தன்னை நம்பியிருந்த, தன் நலனையே பெரிதென மதித்த உயிர்களுக்கு என்னென்ன விதத்தில் உதவ வேண்டும் என்று எண்ணியிருந்திருப்பாரோ அவற்றைத் தன் கடமையாகவே எண்ணி செய்து முடிக்கிறார் ஆசிரியர். யசவந்த ராயரின் உறவுகளினூடாக ஆசிரியர் நிகழ்த்தும் பயணமே நாவலின் கதை.
       யசவந்த ராயர் இறப்பதற்கு முன் அவர் இறுதிக்காலத்தில் வரைந்த ஓவியங்களையும், நாட்குறிப்புகளையும், தன்னிடமிருந்த பதினைந்தாயிரம் ரூபாய் பணத்தையும் சிவராமகாரந்திடம் விட்டுச் செல்கிறார். அந்நாட்குறிப்புகளையும், அவரது ஓவியங்களையும் கொண்டு, தான் சிறிது காலமே பழகியிருந்த நண்பரின் குணச்சித்திரம் பற்றிய கற்பனையை உருவாக்கிக் கொள்கிறார் ஆசிரியர். நான்கு பேருக்கு தன் பெயரில் மாதாமாதம் பணம் அனுப்பச் சொல்லிக் கேட்டிருப்பார் யசவந்தர். அந்த நான்கு பேரையும் சந்தித்து நண்பரின் ஆளுமையைப் பற்றி அறிய விழைகிறார் காரந்த். அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் யசவந்தரின் உறவினர்களும், ஊர் மக்களும் அவரைப் பற்றிச் சொல்லும் கதைகளும், நிகழ்ச்சிகளும் அவர் பற்றித் தான் மனத்தில் வரைந்து வைத்திருந்த சித்திரம் சரியே என்பதை காரந்துக்கு உறுதிப் படுத்துகின்றன. யசவந்தரைச் சுற்றியிருந்த உறவுகளில் யார் அவர் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்பதையும், யார் அவர் செல்வத்தின் மீது மட்டும் குறியாயிருப்பவர்கள் என்பதையும் அவரது பயணம் அவருக்கு உணர்த்துகிறது. அவர் மீது அன்பு கொண்டவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாகவும், வாழ்க்கைக்கு உதவும் வண்ணமும் அவர் தன்னிடம் அளித்துச் சென்ற பணத்தைச் செலவிடுகிறார். தன் நண்பரின் கடமையைத் தானிருந்து செய்து முடித்து விட்ட திருப்தியில் மனம் நிறைகிறார்.
       நாவலில் கன்னட நிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சித்திரங்களாக அறிமுகப்படுத்துகிறார் காரந்த். அவருக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வம் யசவந்த ராயர் இறுதியாக விட்டுச் சென்ற ஓவியங்களை அவர் விவரிப்பதிலிருந்து தெரிகிறது. கதை முழுக்க ஒரு பெயராகவே வரும் யசவந்தர் தன் உயர்ந்த பண்பு நலன்களாலும், உறுதியான கொள்கைகளாலும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார். அவருக்கு இருக்கும் சில ஒவ்வாத பலவீனங்கள் கூட அவரது ஆளுமையின் பிரம்மாண்டத்தின் முன் மறைந்து விடுகின்றன.

       வேகமாகச் செல்லும் நாவல். வாசிக்கச் சுகமாகவும், ஸ்வாரஸ்யமாகவும் உள்ள நாவல். சித்தலிங்கையாவின் மொழிபெயர்ப்பு அருமையானது; எளிமையான சொற்களும், சிக்கலில்லாத வாக்கியங்களும் கொண்டது. தேசிய புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நாவலை www.openreadingroom.com என்ற தளத்தில் வாசிக்கலாம். தரவிறக்கிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. மேலும் பல முக்கியமான இந்திய நாவல்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் இந்தத் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. அழியாச் சுடர்கள், உலக இலக்கியம் தளங்கள் போன்று இத்தளமும் பரவலாக இலக்கிய வாசகர்களிடத்துச் சென்றடைய வேண்டும்.  

Monday, March 9, 2015

தமிழ் நாவல்கள் இணையத்தில் வாசிக்க நான் ஒரு பொக்கிஷத்தை அண்மையில் கண்டறிந்தேன். அது குறித்து ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதினேன். அவர் தளத்தில் வெளியானால் நிறைய பேரை அது சென்றடையும் என்பதற்காக. விரைவில் அவர் வெளியிடுவார் என நினைக்கிறேன்.

ஜெயமோகன் கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற நூலில் குறிப்பிட்டுள்ள பல நாவல்கள் கீழ்க்கண்ட தளத்தில் கிடைக்கின்றன. தரவிறக்கமும் செய்து கொள்ளலாம். அற்புதமான தளம். நாவல்கள் என்ற டேக் ஐ கிளிக் செய்து பாருங்கள்.