Sunday, July 31, 2011

கெய்ஷாவின் நினைவுகள்


ஆர்தர் கோல்டன் எழுதிய கெய்ஷாவின் நினைவுகள் என்ற நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்ற நாவல். ஆனால் திரில்லர் வகை நாவல் அல்ல. நாவலாசிரியர் ஜப்பானிலேயே நெடுங்காலம் வாழ்ந்தவர் என்று தெரிகிறது. ஒரு கெய்ஷா தன் வாழ்க்கை நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்வதைப் போல் நாவல் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. என் பள்ளியில் என்னோடு பணிபுரியும் மால்தீவியன் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் அந்தப் படம் அடங்கிய குறுந்தகடு இருப்பதாகச் சொன்னார். நாவலை முடித்து விட்டு வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.
கெய்ஷா என்பது நம்ம ஊர் தேவதாசிகளைப் போல, ஜப்பானிய தொழிலதிபர்களையும், அரசியல்வாதிகளையும், கலைஞர்களையும் மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இனம். இப்படி ஒரே வாக்கியத்தில் அவர்களைப் பற்றிச் சொல்லிவிடவும் முடியாது. வரலாற்றிலிருந்து தடயமின்றிப் போன ஒரு இனத்தின் வாழ்க்கை முறையும், அவர்கள் அனுபவித்த வலி,  அவமானம் ஆகியவையும், துல்லியமாக ஆவணமாக்கப்பட்டிருப்பது இந்த நாவலின் சிறப்பு. நம் கண்ணுக்குப் புலப்படாது இருந்து வந்த ஓர் உலகின் இருண்ட மூலைகளையும், கெய்ஷா என்ற பெண்கள் இனத்தின் ரகசியம் மிகுந்த இடுக்குகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக அமைந்திருக்கிறது இந்த நாவல்.
 ஜப்பானில் தேனீர் வீடுகள் (விடுதிகள் அல்ல) என்று சொல்லப்படும் இடங்களில் மாலை நேரங்களில் ஊரின் பெரிய புள்ளிகள் தங்கள் இளைப்பாறலுக்காகக் கூடுகிறார்கள். அவர்கள் அருகிலிருந்து மது, தேனீர் முதலியவற்றை ஊற்றித் தருவதும், அவர்கள் மகிழும் வண்ணம் நகைச்சுவைத் துணுக்குகளையும், மெல்லிய காமக்கிளர்ச்சியூட்டும் கதைகளையும், கருத்துக்களையும் சொல்லி அவர்களை இளைப்பாற்றுவதே கெய்ஷாக்களின் பணி. கெய்ஷா என்பது பாலியல் தொழிலாளர்கள் இனம் அல்ல. ஊருக்குள்ளே பாலியல் தொழிலாளர்களுக்கு என்று வேறு தனியிடம் இருக்கிறது. அதே நேரம் ஒரு குறிப்பிட்ட கெய்ஷாவை ஒருவர் விரும்பினார் என்றால் அந்த கெய்ஷாவின் இருப்பிடமான ஒகியாவின் ஒப்புதலோடு அவளை தன் ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு கெய்ஷாவை வைத்துக் கொள்பவர் அந்த கெய்ஷாவின் தன்னா எனப்படுகிறார். அதற்கு பிரதியுபகாரமாக தன்னா கெய்ஷாவுக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல தன்னா கிடைத்து விட்டால் அந்த கெய்ஷாவுக்கும், அவள் சார்ந்திருக்கிற ஒகியாவிற்கும் நல்ல காலம்தான்.
இது ஓர் ஆங்கில நாவலாகையாலும், நான் ஓர் இலக்கிய விமர்சகன் அல்லனென்பதாலும் இந்நாவலின் கதையைச் சுருக்கமாகச் சொல்லலாம் என்று இருக்கிறேன். என்னால் வேறு என்ன செய்ய முடியும் என்று தோன்றவில்லை. சமீபத்தில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வாசித்து முடித்தேன். ஆனால் அது பற்றிய வாசிப்பனுபவத்தை எழுதலாம் என்று யோசித்தால் பிரமிப்பாக இருக்கிறது. பாதையில் கிடப்பவற்றையெல்லாம் வாரிச்சுருட்டிக் கொண்டு சுழித்தோடும் காட்டாற்றைப் போல அவ்வளவும் வேகம்; அதேநேரம் அது காட்டும் தத்துவ தரிசனம் கடலைப் போல் அவ்வளவு ஆழம்! சரி இன்னொரு முறை வாசித்து விட்டு எழுதலாமென்றால் பக்க அளவு பயமுறுத்துகிறது. வேறென்னெ செய்ய முடியும் என்னால். கதையைத்தான் சுருக்கிச் சொல்ல முடியும். எப்படியும் முயற்சி செய்து எழுதி விடலாமென்றுதான் இருக்கிறேன். அப்படியே வி.எஸ்.காண்டேகரின் யயாதியையும்.
நாவலின் முன்னுரையில், இந்தக் கதையை நமக்குச் சொல்லும் கெய்ஷா, தான் இறந்த பிறகுதான் இது புத்தகமாக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறாள். நிறையப் பெரிய மனிதர்கள் பற்றிய தகவல்கள் சொல்லப்படுவதால் அவளுக்கு ஏற்படும் சங்கடத்தை தவிர்க்கவே அவ்வாறு சொல்கிறாள். அவள் விருப்பப்படியே நாவல் வெளியிடப்பட்டது என்கிறார் நாவலாசிரியர்.
யொரொய்டொ என்ற ஒரு கடலோர ஜப்பானிய கிராமத்தில், ஓர் ஏழை மீனவனின் ஒன்பது வயதுப் பெண்தான் சியோ (ச்சியோ என்று படிக்கவும்). தாய் மரணப்படுக்கையில் கிடக்கிறாள். தந்தைக்கு வயதாகி விட்டது. இரண்டு பெண்கள். அவர்கள் எதிர்காலம் குறித்த கவலை தந்தையின் முகத்தில் எப்போதும் கவிந்தபடியே இருக்கிறது. அருகிலிருக்கும் சிறு நகரத்தில் அவரிடம்  மீன்களை மொத்த விலைக்கு வாங்கும் திரு. தனகா, சியோவின் சாம்பல் நிறக் கண்களைக் கண்டு வியந்து போகிறார். தன்னை வாட்டும் துயரத்தின் வெம்மை தன் மகள்களைச் சுட்டெரித்து விடுமோ என்று அஞ்சும் தந்தை இருவரையும் அவரோடு அனுப்பி வைக்கிறார். முதல் பார்வையில் மீட்பராகத் தெரிந்த தனகா உண்மையில் தங்களை கியோட்டோவில் விற்பதற்காகத்தான் கொண்டு செல்கிறார் என்பதைக் கண்டு கொள்கிறாள் சியோ. கியோட்டொவில் ஜியோன் என்பது கெய்ஷாக்கள் வசிக்கும் பிரத்யேக இடம். அங்கு பல தேநீர் வீடுகளும், கெய்ஷாக்கள் வசிக்கும் ஒகியோக்களும், விபசார விடுதிகளும் உள்ளன. சியோவின் அழகும், அவளது சாம்பல் நிறக்கண்களும் அவளை ஓர் ஒகியோவில் கொண்டு சேர்க்கின்றன. அழகற்ற அவளது சகோதரி ஒரு விபசார விடுதியில் விடப்படுகிறாள்.
ஒகியோவுக்குள் வந்ததும், சியோ வேலைக்காரியாகவே நடத்தப்படுகிறாள். நாள் முழுதும் ஒகியோவை தூய்மைப்படுத்துவது, துணிகளைத் துவைப்பது, என்று உடலை உருக்கும் வேலை. ஒகியோவின் தலைமைப் பொறுப்பில் தாய் இருந்தாலும் கூட ஒகியோவின் பிரதான கெய்ஷோவான ஹட்சுமோமோவுக்குத்தான் வரவேற்பும், மரியாதையும். அவளால்தான் ஒகியோவுக்கு வருமானம். அவளது அழகும், வனப்பும் அவளது மவுசு கூடுவதற்குக் காரணமாக இருந்தாலும், அவளது புத்தி சரியில்லை. சியோவை இப்போதே தன் போட்டியாக நினைக்க ஆரம்பித்து விடுகிறாள். அவளை ஒகியோவிலிருந்து விரட்டுவதற்கான பல்வேறு சதிவேலைகளைச் செய்கிறாள். அப்பாவி சியோவும் அதிலெல்லாம் மாட்டிக் கொண்டு அவளால் ஒகியோவிற்கு விளையும் நஷ்டங்களுக்குப் பொறுப்பேற்கும் கடனாளியாகிறாள். ஹட்சுமொமோ தன் பரம எதிரியான, இன்னொரு ஒகியாவில் வசிக்கும் மமீஹாவின் கிமோனோவை ஒரு முறை திருடிக் கொண்டு வந்து விடுகிறாள். கெய்ஷா உடுத்தும் கிமோனோ விலை உயர்ந்தது. ஒரு கிமோனோ விலை ஒரு சாதாரணத் தொழிலாளியின் பலமாதச் சம்பளத்துக்கு சமம். மமீஹாவின் கிமோனோவை மைகொண்டு எழுதி சேதப்படுத்துமாறு சியோவை மிரட்டுகிறாள் ஹட்சு. அதை அவளே கொண்டு போய் மமீஹாவிடம் கொடுக்குமாறும் பணிக்கிறாள். இதற்கான பழியும், கிமோனோவின் விலைக்கான கடனும் சியோ மீதே விழுகிறது.
ஒகியோவிற்கு வந்த நாட்களிலிருந்தே, அங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்று விரும்பும் சியோ தன் சகோதரியை விபசார விடுதியில் சந்தித்து இருவரும் தப்பிக்கத் திட்டமிடுகிறாள். தப்பிக்க ஒரு நாளைக் குறிக்கிறார்கள் இருவரும். அந்த நாளன்று சியோ கூரையேறித் தப்பிக்க முயற்சி செய்து காலை முறித்துக் கொள்கிறாள். அவள் சகோதரி மட்டும் தப்பி யொரொய்டோவுக்கே போய் விடுகிறாள். அங்கிருந்து தன் தோழனோடு ஓடிப்போய் விடுகிறாள். சியோவின் துயரம் தொடர்கிறது. அவள் அதுவரை பட்டிருக்கிற கடன்கள் அவள் கெய்ஷாவாக மாறி வாழ்நாள் முழுவதும் வேலை செய்தாலும் அடைக்க முடியாது வளர்ந்து நிற்கின்றன. வாழ்க்கையே இருண்டு போய்விடுகிறது சியோவுக்கு. சில நாட்களிலேயே அவள் பெற்றொர் இறந்த செய்தியும் வருகிறது. யாருமற்ற அநாதையாகி விடுகிறாள் சியோ. ஒரு முறை ஒரு சிறுவேலைக்காக வெளியே செல்லும் வழியில் நடுத்தெருவில் தன் நிலையை எண்ணி கதறி அழுகிறாள். வழியில் வரும் ஒரு கனவான் அவளைக் கண்டு தேற்றுகிறார். தன் கைக்குட்டையைக் கொண்டு அவள் கண்ணீரைத் துடைக்கிறார். அவரது பரிவும், கனிவும், நளினமிக்க விரல்களும் அவள் மனதில் அப்போதே அழியாத சித்திரமாகப் படிந்து விடுகின்றன. அவரது முதல் தோற்றமே அவளுக்கு வாழ்வின் மீது அசையாத நம்பிக்கை பிறக்கக் காரணமாகி விடுகிறது. அவர் விட்டுச் சென்ற கைக்குட்டையோடு, வாழ்வின் மீதான நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டு இல்லம் திரும்புகிறாள் சியோ.
அவளது மனமாற்றத்துக்குப் பின் காட்சிகள் மாற ஆரம்பிக்கின்றன. அவளது சம வயதினளான பூசணியுடன் (அவள் முகம் பூசணிக்காய் போலிருப்பதால் அந்தப் பெயர்) சியோ கெய்ஷோ பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறாள். ஒரு கெய்ஷாவாக உருவாக, இசை, பாடல், நடனம் முதலியவற்றை முழுமையாகக் கற்றல் அவசியம். கெய்ஷாவான பின்னரும் இந்தக் கல்வி நிதமும் தொடரும். இந்நிலையில் ஹட்சுவின் கொடுமைகளும் தொடர்கின்றன. சியோ கெய்ஷாவாகி விட்டால் ஒகியோவின் தாய் அவளை தத்தெடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு உண்டு என்று அறிந்தே அவளை வெளியில் விரட்டுவதற்கான அனைத்து சதி வேலைகளையும் செய்கிறாள் ஹட்சு. வயது ஆக ஆக சியோவின் வனப்பும் கூட ஆரம்பிக்கின்றது. அவளது கண்கள் காண்பவரைச் சிறைப்படுத்துகின்றன. ஹட்சுவின் எதிரி மமீஹா சியோவை ஓர் அற்புதமான கெய்ஷாவாக உருவாக்கிக் காட்டுவதாகவும், இருபது வயதுக்கு முன் அவள் பட்ட கடன்கள் அனைத்தையும் அடைக்கப் போவதாகவும் தாயிடம் சூலுரைக்கிறாள். கெய்ஷா மரபுப்படி மமீஹா சியோவின் சகோதரியாகிறாள். அவள் பெயர் சியோவிலிருந்து சயூரியாகிறது. மமீஹா அவளைத் தன்னுடன் தேனீர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று, ஊரின் பெரிய மனிதர்களிடம் அறிமுகப்படுத்தும் படலம் ஆரம்பிக்கிறது.
இந்நிலையில் மமீஹா சயூரியின் மிஸுவாஜூக்கு ஏற்பாடு செய்கிறாள். பயிற்சி நிலையிலுள்ள ஒரு கெய்ஷாவின் மீது பல பேருக்கு கண் உண்டு. எனவே கெய்ஷாவின் மிஸுவாஜூக்குப் பலர் போட்டியிடுவர். மிஸுவாஜ் என்றால் கன்னி கழிதல் என்று மொழி பெயர்க்கலாம். மமீஹா திட்டமிட்டே நகரின் வசதியான இரண்டு பெரும்புள்ளிகளிடையே இதற்கான போட்டியை உருவாக்குகிறாள். ஒருவர் நொபு, இவாமுரா எலக்ட்ரிகல்ஸின் தலைவர். மற்றொருவர் ஒரு மருத்துவர். இறுதியில் மருத்துவர் போட்டியில் வெற்றி பெற, மிஸுவாஜ் நடக்கிறது. இருப்பினும் நொபுவை சயூரியின் தன்னாவாக ஆக்குவதே மமீஹாவின் திட்டம். நொபு ஒரு கரத்தை இழந்த, கோரமுகம் கொண்டவர்.  இருப்பினும் அவர் மிகுந்த நற்குணம் கொண்டவர் என்கிறாள் மமீஹா. இவாமுரா எலக்ட்ரிகல்ஸின் சேர்மன் யாரென்று தெரியவரும் போது சியோ அதிர்ந்து போகிறாள். சயூரி சிறுமியாக இருந்து நடுத்தெருவில் அழும்போது தேற்றிய கனவானே அவர். அவரது சகாவான நொபு தனக்கு தன்னாவானால் தன் வாழ்வு மீண்டும் இருண்டு விடும் என்று நினைக்கிறாள். சேர்மனை வைத்துக் கொண்டு எப்படி நொபுவின் ஆசை நாயகியாக வாழ்க்கையை ஓட்டுவது என்று அவளுக்குப் புரியவில்லை. சேர்மனின் வசீகரம் அவளைப் பின் தொடர்ந்தபடியே இருக்கிறது.
வெளித் தோற்றத்தில் கரடு முரடாக இருந்தாலும், பார்ப்பவர்கள் மீது எரிந்து விழுந்தாலும் நொபு சயூரி மீது கருணையோடிருக்கிறார். அவளுக்கு நிறையப் பரிசுப் பொருட்களை வழங்குகிறார். நொபுவைச் சந்திக்கும் போதெல்லாம் அவரோடு நிழலாக எப்போதும் சேர்மன் இருப்பது, அவர் மீதான ஏக்கத்தை அதிகரித்தபடியே இருக்கிறது.
நொபுவால் சயூரியை உரிமையாக்கிக் கொள்ள முடியவில்லை. அது இரண்டாம் உலகப்போரின் காலம். உணவு மற்றும் இதரப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க ராணுவத்தின் உதவி அவசியமாயிருக்கிறது. எனவே ஒரு புகழ் பெற்ற ராணுவத்தலைமை அதிகாரி சயூரியின் தன்னாவாக இருப்பது அவளுக்கும், அவளது ஒகியாவிற்கும் நன்மை பயக்கும் என்று மமீஹா தீர்மானிக்கிறாள். அவ்வாறே ஒரு ராணுவ அதிகாரியும் அவளது தன்னாவாகிறாள். உலகப்போரின் நெருக்கடிகளுக்கிடையிலும் சயூரியின் ஒகியாவிற்கு பொருட்கள் தடையின்றி வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் நொபு சயூரியைப் பார்க்க வருவதை நிறுத்திக் கொள்கிறார். இதனால் சயூரிக்குச் சேர்மனைப் பார்ப்பதும் சிரமமாகி விடுகிறது.
விரைவிலேயே அமெரிக்காவின் குண்டுகள் ஜப்பானிய நகரங்களில் விழ ஆரம்பிக்கின்றன. போரின் கரங்கள் ஜப்பானிய மக்களின் குரல்வளையை நெறிக்கத் துவங்குகின்றன. ஜியோனின் தேனீர் வீடுகளும், ஒகியாக்களும் மூடப்படுகின்றன. கெய்ஷாக்கள் தொழிலை விட்டு விட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கின்றனர். சிலர் பாலியல் தொழிலுக்கும் செல்கிறார்கள். சயூரியின் தன்னா கைது செய்யப்படுகிறார். சயூரிக்கு நொபுவின் தயவில் கிமோனோ தயாரிப்பவர் ஒருவர் வீட்டில் வேலை கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகள் துணிகளுக்குச் சாயமிட்டு அவள் கைகளில் காய்ப்பேறி விடுகிறது. எடை குறைந்து பொலிவிழந்து இருக்கிறாள் சயூரி. போர் முடிவுக்கு வந்ததும் அவளை மீண்டும் மீட்கிறார் நொபு. இம்முறையாவது அவளுக்குத் தான் தன்னாவாக வேண்டுமென்று தன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். சயூரிக்குத் தன் வாழ்வையே புனரமைத்த நொபுவின் ஆசை நாயகியாவது பொருத்தமாகத்தான் இருக்கும். வேறு யாராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சேர்மன் இவாமுராவை அவளால் மறக்க முடியவில்லை. அவரை அருகில் வைத்துக் கொண்டு நொபுவோடு வலம் வருவதை சயூரியால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
மீண்டும் ஜியோனுக்கு வரும் சயூரி தேனீர் வீடுகளுக்குச் செல்லத் துவங்குகிறாள். நொபுவுக்கு அவரது தொழிற்சாலைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் ஒருவரின் தயவு தேவைப்படுகிறது. அதற்காக சயூரி அடிக்கடி தேனீர் வீட்டுக்கு வந்து அவரை மகிழ்விக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறார். சயூரியின் வரவால் மகிழும் அமைச்சர் அவள் ஒருநாளேனும்  தன் படுக்கைக்கு வர வேண்டுமென்று நினைக்கிறார். இன்னொருவர் நிழல் இனியும் அவள் மீது படக்கூடாது என்கிறார் நொபு. இனி தானே அவளது ஏகபோக உரிமையாக இருக்க வேண்டுமென்கிறார். மீண்டும் அதே பிரச்னை சயூரிக்கு. சேர்மன் மட்டுமே அவள் மனதின் நாயகர். அவரது சகாவின் ஆசை நாயகியாவதை விட, வேறெதற்கும் தயாராகிறாள். வேறொருவரோடு தானிருப்பதைக் கண்டால் நொபு தன்னை விட்டு விலகி விடுவாரென்று தீர்மானித்து அமைச்சரோடு தனியறையில் தவறு செய்கிறாள். அதை நொபு பார்க்க வேண்டுமென்றும் திட்டமிடுகிறாள். ஆனால் அவள் அந்த நிலையிலிருப்பதை வந்து கண்டது சேர்மன் இவாமுரா. அதற்கப்புறம் சில பக்கங்களில் கதை முடிந்து விடுகிறது. எப்படி என்பதை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
உலகிலிருந்து மறைந்து போன ஒரு பகுதியை , அதன் அங்கத்தினர்களான கெய்ஷாவின் வாழ்க்கை முறையை அந்த வாழ்க்கையின் பங்கேற்பாளன் ஒருவனின் துல்லியத்தோடு சித்தரிக்கிறார் ஆர்தர் கோல்டன். அவரது இறுதியுரையில் அந்த கெய்ஷா பாத்திரம் கற்பனையானது என்று சொல்லும்போது நம்ப முடியவில்லை. ஒரு பெண், அதுவும் வாழ்க்கை முழுதும் பிறரது கைப்பாவையாகவே வாழ விதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாயிலாகக் கதை கூறப்படும் போது, அவளது உணர்வுகளையும், ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும், சோகங்களையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம். கதை சொல்லும் ஸ்வாரஸ்யம் கொஞ்சமும் குறையாத நாவல் கெய்ஷாவின் நினைவுகள்.
  

Sunday, July 24, 2011

மார்க்வெஸ்ஸின் மூன்று கதைகள்.


கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் மூன்று கதைகள்.
மார்க்வெஸ் மாய யதார்த்தக் கதைகளின் முன்னோடி என்று கருதப்படுகிறவர். அவரது ஒரு நூற்றாண்டுத் தனிமை என்கிற நாவல் பிரசித்தி பெற்றது. (ஆங்கிலத்தில் மின் புத்தகமாக வைத்திருக்கிறேன். இன்னும் படிக்கவில்லை). தமிழில் மாய யதார்த்தத்தின் அடிப்படையில் அமைந்த, யுவன் சந்திரசேகரின் குள்ளச் சித்தன் சரித்திரம் என்ற நாவலைப் படித்திருக்கிறேன். அது பற்றி ஏற்கனவே என் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.
இவ்வகைக் கதைகளில் நமது யதார்த்த உலகுக்குள் அதீதமான மாயச் சம்பவங்கள் பின்னிப் பிணைந்து கிடக்கும். எந்த நிகழ்வும்  எப்படியும் நடக்கும். யாரும் எங்கும் பிரசன்னமாவர்கள். இக்கதைகள் தரும் அனுபவம் அபூர்வமானது. இதைத்தான் இக்கதை சொல்ல வருகிறது என்று அறுதியிட்டுக் கூற இயலாது. இக்கதைகள்  வினோதமானதும், புதிரானதுமான சூழ்நிலைகளுக்குள் நம்மை ஆழ்த்தி, நமது ஆதாரமான குணங்களையும், உணர்வெழுச்சிகளையும், தார்மீக சிந்தனைகளையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.
ஏதோ ஒரு நாளில் என்ற கதையில் பட்டம் பெறாத பல் டாக்டர் ஒருவரை  பல் மருத்துவத்துக்காகப் பார்க்க வருகிறார் நகர மேயர். அவரைப் பார்க்கப் பிடிக்கவில்லை மருத்துவருக்கு. பார்க்கவில்லைஎன்றால் சுட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார். அவரை அனுமதித்ததும், ஈறில் சீழ் கட்டியிருப்பதால் இதற்கு வலிநீக்க மருந்து உபயோகிக்க முடியாது. அப்படியேதான் பல்லைப் பிடுங்க வேண்டும் என்கிறார். தன் சக மனிதர்கள் இருபது பேர் துன்புறுத்தப் பட்டதற்கு மேயரிடம் பழி தீர்த்துக் கொள்கிறார் மருத்துவர். சாதாரண ஜனங்கள் தங்களை ஆதிக்கம் செலுத்தும் சக்திகளை வாய்ப்பு கிடைக்கும் போது பழி வாங்குவதற்குத் தயாராக இருப்பார்கள் என்பதை உணர்த்தும் கதை.
மேற்குறிப்பிட்ட கதை போலல்லாமல் மாய யதார்த்தம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கான அருமையான கதை மிகப்பெரும் சிறகுகளுடன் ஒரு வயோதிகன். தங்கள் வீட்டின் முற்றத்தில் சிறகுகள் கொண்ட ஒரு வயோதிகன் விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போகின்றனர் ஒரு தம்பதியர். அண்டை வீட்டுக்காரி அவன் ஒரு சபிக்கப்பட்ட தேவதூதன் என்கிறாள். இருப்பினும் அவளைக் கொள்ள மனம் வரவில்லை அவ்வீட்டின் தலைவனுக்கு. மறுநாள் வீட்டில் அந்த தேவதூதனைப் பார்க்க கூட்டம் கூடி விடுகிறது. அவனைப் பார்க்கக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. நகரத்தின் பங்குத்தந்தை வந்து அவனைப் பார்த்துவிட்டு இது சாத்தானின் செயலாக இருக்கக் கூடும் என்றும் இவனை அடித்து விரட்ட வேண்டுமென்றும் சொல்கிறார். . அவர் அவனை விரட்டுவதற்காக பிஷப்புக்குக் கடிதம் எழுதுகிறார்.
இருப்பினும் தேவதூதனின் புகழ்  கூடிக் கொண்டே போகிறது. உலகிலேயே துயரமிக்க நோயாளிகள் ஆரோக்கியம் நாடி அவனைப் பார்க்க வருகிறார்கள்  குழந்தைப் பருவத்திலிருந்தே இதயத்துடிப்புகளை எண்ணிக்கொண்டு வந்து தற்போது எண்களே இல்லாமல் போய்விட்ட ஏழைப்பெண், நட்சத்திரங்களின் சப்தம் தொல்லைப்படுத்துவதால் தூங்க முடியாமல் போய்விட்ட போர்த்துக்கீசியன், விழித்திருந்தபோது செய்தவற்றை மாற்றிச்செய்ய இரவில் தூக்கத்தில் நடக்கும் ஒருவன் எல்லாம் அவர்களில் அடக்கம். அவனும் ஏதோ அதிசயங்கள் நிகழ்த்துகிற மாதிரிதான் தெரிகிறது. பங்குத்தந்தை இந்த தேவதூதன் எப்போது ஒழிவான் என்று காத்திருக்கிறார்.
ஆனால் பிஷப் அவனை வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு ஒரு முடிவெடுத்த மாதிரித் தெரியவில்லை. இந்த நேரத்தில் சிலந்தியாக மாற்றப்பட்ட ஒரு பெண் அங்கு கொண்டு வரப்படுகிறாள். அவளைப் பார்க்கக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. தேவதூதன் நிகழ்த்தும் அதிசயங்களும் அவனுக்கு சாதகமாக இல்லை.  பார்வை திரும்பப் பெறாத குருடனுக்கு மூன்று புதிய பற்கள் முளைத்தது. பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டவன் நடப்பதற்கு பதிலாக லாட்டரியில் ஜெயித்தது, தொழுநோயாளியின் புண்களிலிருந்து சூரியகாந்திப் பூக்கள் முளைவிட்டது போன்றவை. எனவே மக்கள் கூட்டம் சிலந்திப் பெண்ணைப் பார்க்க முட்டுகிறது. அருட் தந்தை நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். ஆனால் தேவதூதன் வந்து சேர்ந்த வீட்டுக்காரனான பெலயோவோ இதுநாள் வரை அவனை வைத்துச் சம்பாதித்த பணத்தில் சுகமாக வாழ ஆரம்பிக்கிறான். நோய் பீடிக்கப்பட்ட முதியவன் அவர்களுக்கு ஒரு சுமையாகி விடுகிறான். கடைசியில் அவன் சிறகுகள் உயிர் பெற்று அங்கிருந்து பறந்து வெளியேறும் பொது அவனுக்கும், அந்த வீட்டுக்காரர்களுக்கும் விடுதலை கிடைத்தது போலாகிறது.
ஆர். சிவகுமார் இக்கதையை மிக அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கு மிக்க நன்றி.

              
கர்லூப் பறவைகள் என்ற கதை கர்லூப் பறவைகளால் கண்கள் கொத்தப்பட்டுப்  பார்வை இழந்த மூன்று இளைஞர்களைப் பற்றியது. இந்தக் கதையைப் படித்தவுடன் ஒரு வினோதமான கதையைப் படித்த உணர்வு ஏற்பட்டாலும் ஆசரியர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிய வில்லை. இரண்டாவது முறை வாசித்துப் பார்த்தேன். அப்போதும் புரியவில்லை. கண் பார்வை இழந்த மூன்று பேரும் கைகள் கோர்த்தபடி நடக்கிறார்கள். தடவித் தடவித் தங்கள் இருப்பிடத்திற்கு வழி தேடுகிறார்கள். பிணங்களின் மீது நடப்பதாக பாவனை செய்து கொள்கிறார்கள். அவர்கள் கண்ணை இழந்த கதை செய்தித்தாள்களில் வந்திருந்த போதிலும் யாரும் நம்பவில்லை. இவை ஊடகங்களால் மிகைப்படுத்தப் பட்ட செய்தி என்றே நம்புகிறார்கள். தயவு செய்து யாராவது இதை வாசித்து விட்டு எனக்குப் புரிய வைத்தால் மகிழ்வேன்.

Monday, July 18, 2011

கதைப் பார்வை


  யாரும் சிரிக்க மாட்டார்கள் - மிலன் குந்தேரா
தன் நலனுக்காகவும், தன் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் பிறர் வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் விளையாட தனக்கு அனுமதி உண்டு என்றெண்ணும் ஒரு பேராசிரியர் தன் செயல்களால் தானே அழிகிறார். தான் குப்பை என்று கருதும் கட்டுரை ஒன்றுக்கு முன்னுரை எழுதித் தருமாறு வேண்டிக் கொள்ளப் படுகிறார். எழுதித் தர விருப்பம் இல்லாமல்அதை தவிர்ப்பதற்காக அவர் செய்யும் தகிடுதத்தங்கள் அவருக்கே குழி பறிக்கின்றன.  குந்தேரா பரபரப்பாக நிறையக் காட்சிகளை அடுக்குகிறார். வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது.
ஓணான் கோடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் - பவா.செல்லத்துரை.
கதையின் தலைப்பு சொல்வதைப் போல் இக்கதை நினைவுகளின் தொகுப்புதான். பாட்டியோடு மல்லாட்டை உரிக்கப் போகும் பேரனுக்கு, மல்லாட்டையிலிருந்து வெளிவரும் இளஞ்சிவப்பு நிற விதைகள் அவனது சிநேகிதியோடு மரத்தில் ஓணான் கோடி சுற்றி ஊஞ்சலாடிய நினைவுகளை மேல் கொணர்கின்றன. பாவாவின் நிதானமான, துல்லியமான, விவரணைகளுடன் கூடிய கதை சொல்லும் பாணியில், அவரது பால்ய கால நினைவுகள் ஒரு சித்திரமாகவே விரிகின்றன. வாழ்க்கை என்கிற பிரம்மாண்டமான திரைச்சீலை ஓவியத்தின் ஒரு தீற்றலை மட்டும் தரிசித்தது போன்றதொரு கதை.

விருந்தாளி - ஆல்பெர் காம்யு
       
பாலைவனமொன்றை ஒட்டிய மலைச் சிகரத்தில் தனித்து வாழும்  ஓர் ஆசிரியர் உதவி செய்யும் உள்ளம் படைத்தவராயிருக்கிறார். பஞ்ச காலத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோதுமை தானியத்தைத் தன் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அவரிடம் கொலைக் குற்றம் செய்த ஒரு அரேபியன் ஒப்படைக்கப்படுகிறான். மறுநாள் அவனை மலைக்குக் கீழே உள்ள நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அரேபியன் அவருடன் ஓரிரவு தங்குகிறான். அவனை கொண்டு செல்ல மனமில்லாத ஆசிரியர் மறுநாள் காலை அவனை வெளியில் நிறுத்தி ஒரு பக்கம் நீதி மன்றம் மறு பக்கம் அவனது சக மனிதர்களான அரேபியர்கள்; எந்த பக்கம் என்று அவனையே தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகிறார். கொலைகாரன் நீதிமன்றத்தையே தேர்ந்தெடுக்கிறான். ஆசிரியரது அறையில் உள்ள கரும்பலகையில் தன் சகாவை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அவரைக் கொல்வோம் என்று எழுதியிருக்கிறது.
                
முதல் பார்வைக்கு சாதாரண கதை போல் தோன்றினாலும் கதை பல அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. ஒரு கொலைகாரனுடன் தனியே இரவைக் கழிக்கும் ஆசிரியரின் மனநிலை; இவன் தப்பித்துப் போய் விட மாட்டானா என்ற எதிர்பார்ப்பு; அதிகம் பேசாத, ஆசிரியரையும்  தன்னோடு வருமாறு அழைக்கிற அரேபியன் ஆசிரியர் தனக்குச் செய்த உதவிக்கு காட்டும் நன்றியுணர்வு எல்லாம் நுட்பமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கதை நிகழும் களமும், சூழ்நிலையும், காலநிலையும் காம்யூவின் எழுத்தில் நமக்குள் நிகழ்கின்றன. மிகவும் பிரசித்தி பெற்ற கதை.

இந்தக் கதை எழுதப்பட்ட காலத்தில் மிகுந்த கவனம் பெற்றது என்று ஜெயமோகனின் குறிப்பு சொல்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன் உடல் நலம் திரும்பி விட்டது என்ற நம்பிக்கையில் ஊர் திரும்பிய மனைவிக்கு அவர் உடல் நலம் மீண்டும் மோசமாகிவிட்டது என்று தந்தி வருகிறது. உடனே அவரைப் பார்க்க ரயிலில் கிளம்புகிறாள். ரயில் பயணத்தில் இரவில் அவளும், கூடவே பயணிக்கும் கதையின் நாயகனும் கொள்ளும் பதட்டமும், மன உளைச்சலுமே கதை. அவர் நலமாகத்தான் இருக்கிறார் என்று எண்ணி மனதைத் தேற்றிக் கொள்ளப் பார்க்கிறார்கள். மனம் அவர்கள் சொல் கேட்பதில்லை. பதட்டமுற்றபடியே இருக்கிறது. ரயில் ஊர் சென்று சேரவும் விடியவும் சரியாக இருக்கிறது. கணவன் நிலைமை என்ன என்று தெரிய வருகிறது. மனமும் அமைதி அடைகிறது.
      முடிவு சற்று மிகைப்படுத்தப்பட்டதைப் போல் தோன்றினாலும் ஜெயமோகன் சொன்னதைப் போல் மனித உளவியல் அங்ஙனம்தான் செயல் படுகிறது. ஒரு விஷயம் நிஜத்தில் நடந்து அதை எதிர்கொள்ளும் வலியை விட அது நடந்து விடுமோ என்று எதிர்பார்த்து துடிக்கும் anxiety  கொடுமையானது.

Thursday, July 14, 2011

சிறுகதைக்குள் நுழைதல்


சமீப காலமாகவே உலக இலக்கியம் மற்றும் அழியாசுடர்களுக்கு அடிக்கடிச் சென்று அங்குள்ள கதைகளைப் படித்து வருகிறேன். அங்கு படித்த கதைகள் தந்த அனுபவம் பற்றி இங்கு பகிர்ந்து கொள்ளலாமென்ற எண்ணம். நிறைய வாசித்திருந்தாலும் செவ்வியல் இலக்கியங்கள் படிக்கும் முறையான பயிற்சி ஏதும் எனக்கில்லை. எனவே இங்கு பகிரப்படுபவைகளை விமர்சனமாகக் கொள்ளலாகாது. நான் கதைகளை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டேன் என்பதையே அவை காட்டும். மேலும் நல்ல சிறுகதைகள்  படிக்க விழையும் ஒருவருக்கு இந்தப் பதிவுகள் தூண்டு கோலாக அமைந்தால் அது எனக்கு மகிழ்ச்சி தரும்.
பெரும்பாலும் உலக இலக்கியம் தளத்திலுள்ள கதைகளையே வாசித்து வருகிறேன். நேரடித் தமிழ்க் கதைகளைப் படிப்பதைவிட மொழிபெயர்ப்புக் கதைகளில் நமக்குத் தட்டுப்படும் உலகம் பிரத்யேகமானது. தொடர்ந்த நிதானமான வாசிப்பில் கதைகள் கொண்டிருக்கும் பல்வேறு தளங்கள் நமக்குப் புலப்படுமெனினும், இணையத்தில் நீண்ட நேரம் வாசிக்கையில் கண் வலிக்கிறது. அதனாலயே ஒரு முறை வாசிப்பில் இக்கதைகள் பற்றி எழுத வேண்டியிருக்கிறது.
முதல் கதை நான் காலச்சுவடு தளத்தில் படித்தது. பா. வெங்கடேசன் எழுதிய வெறும் கேள்விகள் என்ற சிறுகதை. முதுமையின் விளிம்பில் இருக்கும் ஒரு மனிதன் தான் சந்திக்கும் நபர்களிடம் தனக்கு அறிமுகமானவர்களைப் பற்றி அவர்கள் உயிரோடிருக்கிறார்களா என்று அறிந்து கொள்ளாமலேயே விசாரிக்கும் கேள்விகள் அவனை சங்கடத்துக்குள்ளாக்குகின்றன. தன கேள்விகளால் உருவாகும்  பிரச்னைகளைச் சமாளிக்க விரும்பும் அவன் தன் கேள்விகளின் போக்கை மாற்றுகிறான். பார்ப்பவர்களிடம் தனக்கு அறிமுகமானவர்களை இறந்தவர்களாக முடிவு செய்து கொண்டு கேள்விகள் கேட்கிறான். விதியோடு தான் ஆடும் விளையாட்டில் வென்று விட்டதாகவே நினைக்கிறான். ஒரு முறை கோபத்தில் வீடு விட்டு வெளியேறி அலைந்து, தன் பால்ய கால சிநேகிதியைக்  கண்டு அளவளாவுகிறான். வீடு திரும்பியவுடன்தான் அவள் ஏற்கனவே இறந்து விட்டாள் என்றும், அது அவனுக்கும் முன்பே தெரியும் என்று அவனது வீட்டார் மூலம் தெரிய வருகிறது. விதி இவனை எதிர்த்துக் காய் நகர்த்தியிருக்கிறது என்று புரிந்து கொள்கிறான். இருப்பினும் அவன் மனம் தான் கொண்டிருக்கும் புரிதல்களையே ஏற்றுக்கொண்டு திருப்தியடைகிறது.
ஒரு முதியவனின் உலகில் புகுந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது இக்கதையில். அவனது பார்வையில் அவனது வீட்டார் அனைவரும் அடையாளமிழந்து விடுகிறார்கள். மகளைப் போலிருந்த பெண், மனைவியைப் போல் தோற்றமளித்த பெண் என்றுதான் அவன்  தன் வீட்டுப் பெண்களைப் பார்த்துப் புரிந்து கொள்கிறான்.
நீளம் நீளமான வாக்கியங்கள் குழப்பினாலும் தன் அடையாளங்களை மெல்ல மெல்ல இழக்கும் ஒரு முதியவனைப் பற்றிய, நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தருகிற கதை.
கதையை வாசிக்க    வெறும் கேள்விகள்
செல்மா லாகர் லேவ் என்ற, ஆயிரத்து எண்ணூறுகளில் வாழ்ந்த ஒரு ஸ்காண்டிநேவிய பெண் எழுத்தாளரின் தேவமலர் என்கிற சிறுகதை (மொழிபெயர்ப்பு க.நா.சு.) யதார்த்த வாதம் கொடிகட்டிப் பறந்த காலந்தில் எழுதப்பட்ட அற்புதமான மாயக்கதை. நான் இந்தக் கதையை வாசித்து விட்டு என் பள்ளிக் குழந்தைகளுக்குச் சொன்னபோது அவர்கள் தன்னிலை மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். காலம் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தும் நல்ல இலக்கியத்தின்வலிமை எனக்கு அப்போது புரிந்தது.
ஊரை விட்டு ஒதுக்கி காட்டில் குடும்பத்தோடு வாழப் பணிக்கப்படுகிறான் ஒரு திருடன். அவன் மனைவி ஒரு நாள் பிச்சை எடுப்பதற்காக ஊருக்குள் வருகிறாள். அப்போது மதகுரு ஒருவரின் தோட்டத்தைக் கண்டு பார்வையிட, அங்கிருப்பவர்கள் அவளை விரட்ட முனைகிறார்கள். அவள் மறுக்கிறாள். மதகுரு வந்ததும் இதைவிட அற்புதமான தோட்டத்தை கடவுள் காட்டில் எங்களுக்காக சிருஷ்டிக்கிறார்  என்கிறாள். அதைக் காட்டினால் கணவனுக்கு விடுதலை என்கிற நிபந்தனையோடு அவளோடு செல்கிறார் மதகுரு. காட்டில் அவர் காணும் அற்புதத் தோட்டம் கடவுளின் வருகைக்கான வரவேற்புக் கம்பளம் என்று புரிந்து கொள்கிறார். ஆனால் அவருடன் வந்த  சந்தேக மனம் படைத்த சிஷ்யனின் செயலால் தோட்டம் நாசமடைகிறது. கள்ளங்கபடற்ற உள்ளத்தில் மட்டுமே கடவுள் குடியிருப்பார் என்பதை விளக்கும் கதை. கதை தரும் அனுபவம் சுகம்.
புதுமைப்பித்தனை  கல்லூரியில் படித்தது மறக்கமுடியாதது. அவரது பால் வண்ணம் பிள்ளை தந்த அதிர்வுகள் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன. கட்டிலை விட்டிறங்காக் கதை என்ற அவரது சிறுகதை  குழந்தைப் பேறற்ற ஒரு அரசனின் கட்டிலில் குடியிருக்கும் மூட்டைப் பூச்சி ஒன்றின் குடும்பம் பற்றியது. புதுமைப் பித்தனின் கையில் தமிழ் ஒரு வாளைப் போல சுழன்று கொண்டே இருக்கிறது. அவரது உரைநடை வீச்சின் வேகம் நமது மனதின் வேகத்தை விட அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. புதுமைப்பித்தனை முழுமையாகப் படித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.
லெனினை வாங்குதல் என்ற கதை ஒரு ரஷ்ய எழுத்தாளருடையது. பெயர் நினைவுக்கு வரவில்லை.  புகைப்படத்தில் மிக இளமையாகத் தெரிகிறார். ரஷ்யாவில் கம்யூனிசம் அழிந்த பின்னரும் அந்த சித்தாந்தத்தில் நம்பிக்கையோடு இருக்கும் அவரது தாத்தாவைப் பற்றிய கதை. இணையத்தில் பொருட்களை விற்கு இ பேஇலிருந்து லெனினின் சடலத்தை தன் பேரனின் உதவியோடு  மலிவான (பத்து டாலர்!)விலைக்கு வாங்குகிறார் தாத்தா. கம்யூனிச காலத்தின் நினைவுச் சின்னங்களைச் சேகரிக்கையில் தான் முன்பு செய்த மிகப்பெரும் தவறு அவருக்குத் தெரிய வருகிறது. பெரிய கதை. பொறுமையாகப் படித்தால் பலனுண்டு.
தொடர்ந்து கதைகள் படித்தபடி அவை உருவாக்கும் சலனங்களை இங்கு பகிர்ந்திட எண்ணம். குறைந்த பட்சம் எனக்காவது அது உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். கொஞ்ச நாட்கள் கழித்துக் கதைகளை மீண்டும் வாசிக்க வாய்ப்பு ஏற்படுபோது நான் அவற்றை எவ்வளவு மோசமாகப் புரிந்து கொண்டேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவாவது இவை பயன்படட்டுமே. மேலும் ஒத்த கருத்துள்ள நண்பர் எவரேனும் இப்பதிவுகளைப் படித்துக் கருத்துத் தெரிவிக்கும் போது அது என் புரிதல் மேம்பட உதவும் என்று நம்புகிறேன்.

Monday, July 11, 2011

ஜி. எச்

சிறுகதை
எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டால் அதற்கான பதிலைக் கொஞ்சம் குழப்பமாகத்தான் சொல்ல முடியும். கடவுள் இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ என்னால் உறுதியாச் சொல்லி விட முடியாது. இதே பதில்தான் காதல் இருக்கிறதா என்ற கேள்விக்கும். இளமைப் பருவத்தின் ஆரம்ப நாட்களில் அது இருப்பது போலவும் தோன்றுகிறது. மத்திம மற்றும் இறுதி நாட்களில் அது இருக்கிறது என்று நிரூபிப்பதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கிறது.
ஆனால் ஆவிகள் இருக்கிறதா என்ற கேள்வி வந்தால் அதற்கான பதில் என்னைப் பொறுத்தவரை எளிது. என் காரண அறிவும், நான் கற்றுத் தேர்ந்த கல்வி எனக்குக் கொடுத்திருக்கிற பின்புலமும் ஆவிகள் இல்லை என்று நான் அறுதியிட்டுக் கூற உதவி செய்யும். ஆவிகளில் எனக்கு இதுவரை நம்பிக்கையிருந்ததில்லை. சிறுவயதில் பார்த்த திகில் திரைப்படங்கள் கூட பயமுறுத்தினதில்லை.  ஒரு முறை மதியம் தூங்கி எழுந்திருந்த போது, காயப்போடப்பட்டிருந்த  தாத்தாவின் வேஷ்டியில் ஏற்பட்ட அலைவுகள் ஆவிகள் அசைவது போலவே இருந்தது. நீண்ட நேரம் அதன் அசைவுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைச் சிந்தனைச் சிற்பி போல பாவித்துக் கொண்டு அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேனே தவிர பயமெதுவும் ஏற்படவில்லை. ஆவிகளை விட அறியாமைதான் அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறது. நம்மை மீறிய கடவுள் என்ற ஒரு சக்தி உண்டா என்ற முடியாத விவாதத்தைப் போல, ஆவிகள் இருக்கின்றனவா இல்லையா என்பதும் ஒரு தீராத சர்ச்சைக்குரிய கேள்விதான்.
ஆவிகள் மீதான நம்பிக்கையின்மை என் முனைவர் பட்ட ஆய்வுக்குத் தடையாக நின்றது. முதுகலையில் உளவியல் எடுத்துப் படித்த பின்பு, முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பித்த போது எனக்கு வழிகாட்டியாகக் கிடைத்த பேராசிரியர் என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்ன தலைப்பு பாரா நார்மல் பிஹேவியர் மற்றும் பாரா சைக்காலஜி. அதிலும் கடைசியாக நான் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக் கட்டுரை ஆவிகள் பற்றியதாக இருந்தது. ஆவிகளை நேரில் கண்டதாகச் சொல்கிறவர்கள், ஆவிகளோடு தொடர்பு கொள்வதாகச் சொல்கிறவர்கள் இந்த மாதிரியான நபர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அந்தக் குறிப்பிட்ட அனுபவத்திற்குப் பின் அவர்களது உளவியலில் ஏற்பட்டிருக்கிற பாதிப்பு குறித்துத்தான் ஆய்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும். இணையத்திலும், புத்தகங்களிலும் நான் தேடின ஆவிகள் பற்றிய அனுபவங்கள் காதுகளுக்குள் குரல் கேட்டல், நிழல் மனிதன் ஒருவன் தொடர்ந்து வருவது, படுக்கையில் தினமும் அருகில் உறங்கும் பெண் என விசித்திரமானவையும், வினோதமானவையுமான நிகழ்வுகளாக இருந்தன. என்னதான் இணையத்திலும், நூல்களிலும் இது சம்பந்தமான தகவல்கள் குவிந்து கிடப்பினும், நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்களிடமிருந்து ஆவிகள் சம்பந்தப்பட்ட அனுபவங்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறைந்த பட்சம் எழுபது சதவீதமாவது இருக்க வேண்டும் என்று என் வழிகாட்டிப் பேராசிரியர் கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.
முப்பது சதவீதத்தை முடித்து விட்டு மீதி எழுபது சதவீதத்துக்குத் திணறிக் கொண்டிருந்தேன். சேந்தமங்கலம் அருகே ஒரு கிராமத்தில் ஓர் இளம்பெண்ணுக்கு ஆவி பீடித்திருப்பதாகவும், நாற்பது வருடங்களுக்கு முன் சாதி மாறித் திருமணம் செய்து கொண்டதால் ஊர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட ஓர் இளைஞனின் ஆவிதான் அவள் மீது இறங்கியிருக்கிறதென்றும் நாமக்கல்லில் இருக்கிற என் சித்தப்பா தகவல் கொடுத்தார். ஆவி பீடிக்கும் சமயங்களில் ஆண்குரலில் பேசுகிறாளாம். நாற்பது வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளை அட்சரம் பிசகாமல் ஒப்பிக்கிறாளாம். தன்னைக் கொன்றவர்களின் தலைமுறை தழைக்கக் கூடாது என்பதற்காகவே அந்தப் பெண்ணின் மீது இறங்கியிருப்பதாகவும், அவர்களை வேரறுக்காமல் விடமாட்டேன் என்றும் நடுத்தெருவில் வந்து வெறியாட்டம் போடுகிறாளாம். எல்லை முனியப்பன் கோயில் பூசாரியைக் கொண்டு அவளுக்குப் பேயோட்டும் வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. இப்போது போனால் நிறையத் தகவல்கள் சேகரிக்க முடியும் என்று என் சித்தப்பா சொன்னார்.
சேந்தமங்கலத்திற்குப் போவதற்காக மனதளவில் என்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் போதுதான் நவநி மாமா அலைபேசியில் கூப்பிட்டார்.
‘மாமா எத்தனை வருஷம் ஆச்சு? லோக்கல் நம்பரா இருக்கு. எப்ப இந்தியா வந்தீங்க?’ என்றேன்.
‘நாலு நாளாச்சு. இப்போ ஏற்காட்டில் தங்கியிருக்கேன். உன்னைப் பாக்கணும். வர்றியா?’
மாமாவை வீட்டுக்கு வாங்க என்று சொல்லத் தயக்கமாக இருந்தது. ‘ மாமா, நாளைக்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. சேந்தமங்கலம் வரைக்கும் போகணும். நாளான்னிக்கு வரட்டுமா?’
‘இல்லை. நான் இன்னும் ரெண்டு நாள்ல கெளம்பறேன். நீ அந்த வேலையை அப்புறம் பண்ணக் கூடாதா? நான் உன்னைப் பாக்கறது கூட அவ்வளவு சிரமமா?’ என்றார். அவரது குரலில் குற்றம் சாட்டும் தொனி இருந்தது.
அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் மிகுந்துதான் இருந்தது. சேந்தமங்கலம், பயணத்தை இன்னொரு நாள் ஒத்திப் போட்டு விடலாம். முதலில் நவநி மாமாவைப் பார்க்கலாம். பத்து வருடங்களிருக்குமா அவரைப் பார்த்து?
ஏற்காட்டில் அவரைப் பார்த்து விட்டு அங்கிருந்து சேந்தமங்கலம் சென்று விடலாம் என்ற திட்டத்துடன் என் ஆய்வுக்குறிப்புகளை ஒரு பையில் எடுத்துப் போட்டுக் கொண்டு, மறுநாள் காலை கிளம்பிப் பேருந்தில் ஏற்காடு பயணமானேன். வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. தெரிந்தால் நிச்சயம் போகவிட மாட்டார்கள்.
என் அத்தை பையன் நவநி மாமா என்கிற நவநீத கிருஷ்ணன் பத்து வருடங்களுக்கு முன் என் வாழ்வின் கதாநாயகன். அவர் உடையணிகிற நேர்த்தியும், நடையின் கம்பீரமும், மென்மையான அதே நேரம் அழுத்தமான பேச்சும், நான் இருக்கிறேன் ஆதரவாய் என்று சொல்லும், உதட்டில் நிரந்தரமாகவே தங்கியிருக்கிற புன்னகையும் எவரையும் பார்த்ததும் வசீகரித்து விடும். நான் அவரைப் பார்த்துப் பார்த்து, பெரியவனானால் இவரைப் போலவே நானும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். இப்போது கூட தொண்ணூறு சதவீதம் அவரைப் போலவேதான் என்னைப் பாவித்துக் கொண்டு நடந்து கொள்கிறேன்.
அவரது வசீகரம் என்னைக் கவர்ந்தது போலவே என் அக்காவையும் கவர்ந்தது. நவநி மாமாவுக்கும் அக்காவைப் பிடித்திருந்தது. அக்கா பனிரெண்டாவது முடிக்கும் வரை, நவநி மாமாவும், அவளும் பழகிக் கொள்வதையும், நெருங்கிப் பேசுவதையும் எங்கள் வீட்டில் யாரும் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. நவநி மாமாவின் பெற்றோர் அவருடைய சிறு வயதிலேயே ஒருவர் பின் ஒருவராகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அவரது பாட்டியின் ஆதரவில்தான் படித்து வந்தார். எங்கள் குடும்பம் கொஞ்சம் வசதி கூடின குடும்பமாக இருந்த படியால் நவநி மாமா எங்களோடு நெருங்கி வருவது என் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. கையில் காசு இல்லாவிட்டால் கவர்ச்சி, வசீகரம் எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்?
குறிப்பாக எங்கே இவன் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு போய் விடுவானோ என்று அவருக்கு பயமிருந்தது. அந்த பயத்தாலேயே அக்கா கல்லூரி செல்ல ஆரம்பித்த பிறகு நவநி மாமா வீட்டுக்கு வரும்போதெல்லாம் என் பெற்றோர் அவரிடம் கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தனர். நவநி மாமாவும் புரிந்து கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.
 அந்த நாட்களில்தான் நான் நவநி மாமாவுக்கு நெருக்கமானேன். அக்காவுக்கும், அவருக்குமிடையே கடிதப் பரிமாற்றத்துக்கும், பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் நான்தான் உதவினேன். மாமா கொலுசு, மெட்டி, கைக்கடிகாரம், கைப்பை என்று விதவிதமாக என்னிடம் கொடுத்து அனுப்புவார். அக்காவிடமிருந்து இதுவரை ஒரே ஒரு பரிசுதான் அவருக்குச் சென்றிருக்கிறது.. ஒரு வெள்ளிக் குத்து விளக்கு. இதென்ன எண்பதுகளின் திரைப்படக் காதலர்கள் போல நடந்து கொள்கிறீர்கள் என்று நான் கிண்டலடித்தது ஞாபகம் வருகிறது. அக்காவுக்குக் கல்லூரி முடிந்ததும் இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நேரத்தில் நவநி மாமாவுக்கு துபாயில் மென்பொருள் துறையில் வேலை கிடைத்தது. அவருக்கு ஒரே மகிழ்ச்சி. வெளிநாட்டு வேலை என்றால் என் அப்பா நிச்சயம் மனமுவந்து தன் பெண்ணைக் கொடுப்பார். பிரச்னை ஏதுமின்றி அக்காவைத் திருமணம் செய்து கொள்ளலாம். பூரிப்பாகவும், துள்ளலாகவும் துபாய் புறப்பட்டுப் போனார்.
அவர் போனபின் அப்பாவுக்கு வசதியாகப் போயிற்று. அமெரிக்காவிலிருந்து வந்த வரனை அக்காவுக்கு முடித்து அனுப்பி வைத்து விட்டார். துபாயை விட அமெரிக்கா பெரிய இடமாயிற்றே! தகவல் நிச்சயம் மாமாவுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும். ஆனால் அக்கா திருமணத்திலிருந்து அவர் எங்கிருக்கிறார், என்ன ஆனார் என்ற தகவலே இல்லை, இப்போது என்னைக் கூப்பிடும் வரைக்கும்.
மாலையில் ஏற்காடு சென்று சேர்ந்ததும் அவர் அலைபேசியில் வழிகாட்டியபடி அவர் இருக்குமிடம் சென்று சேர்ந்தேன். மான் பூங்காவுக்கு எதிரில் உள்ள ஓர் ஒற்றையடிபாதயில் சென்றால் மரங்கள் சூழ்ந்த ஓர் ஆடம்பரமான வில்லா வீடு. ஏதோ பயணியர் விடுதி போலிருந்தது. வாசலிலேயே மாமா நின்றிருந்தார். என்னை பார்த்து அதே ஆதரவுப் புன்னகையைக் காட்டி, ‘உள்ளே வா’ என்றார்.
இத்தனை வருடங்கள் மாமாவிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தின மாதிரித் தெரியவில்லை. அப்படியேதான் இருந்தார். கன்னங்கள் கொஞ்சம் சதை போட்டிருந்தன; தொந்தி கொஞ்சம் போட்டிருந்தது. ஆனால் முகத்தில் இப்போது நிரந்தரமாக ஒரு சோகக்களை தங்கி விட்டிருந்தது.
‘இத்தனை நாள் எங்கே போனீங்க மாமா?’ என்றேன்.
‘அயர்லாந்திலே இருக்கேன்’, என்றார். ‘உன் அக்காவுக்குக் கல்யாணம் ஆனதும் ரொம்ப நொந்து போயிட்டேன்.  பணம் இல்லாத்தத்துனாலதான் உங்க அக்கா எனக்குக் கிடைக்கலங்கற வெறியில, நிறையப் பணம் சம்பாதிக்கணும்னு தோணிச்சு. அயர்லாந்தில டப்ளினுக்கு ஒரு சாஃப்ட்வேர் டிசைனராப் போனேன். அங்கு நான் தயாரிச்ச வர்ச்சுவல் சிட்டி சாஃப்ட்வேர் இன்னிக்கு யு.கே முழுக்கப் பிரபலம். மாசம் பத்தாயிரம் டாலர் சம்பளம் குடுத்தான். இன்னிக்கு நேஷனல் பாண்டுகள்ல மட்டும் என் பேரில எண்பது லட்சம் ரூபாய் இருக்கு. ஆனால் என்ன பண்றது? இன்னும் தனியாத்தான் இருக்கேன்’ என்றார்.
‘கல்யாணம் பண்ணிக்கலயா, மாமா?’
‘முடியலடா. மறக்க முடியல உங்க அக்காவை. அவளோட எல்லா நினைவுகளையும் தூக்கிப் போட்டுரணும்னுதான் நினைக்கிறேன். ஆனால் முடியல. நான் தயாரிச்ச சாஃப்ட்வேர் பேர் என்ன தெரியுமா? அகல் விசி.’ என்றார்.
நான் புன்னகைத்தேன். அக்கா பெயர் அகல்யா. அவரால் இன்னும் மறக்க முடியவில்லைதான்.
பச்சை நிறத்தில் உருண்டையான ஒரு பாட்டிலை எடுத்து அதிலிருந்த திரவத்தைக் கோப்பையொன்றில் ஊற்றினார். ‘நீ குடிப்பியா? காலேஜெல்லாம் முடிச்சிட்டே’ என்றார்.
‘சேச்சே அந்தப் பழக்கமெல்லாம் இல்லை’ என்றேன்.  நான் நண்பர்களோடு பியர் குடித்ததுண்டு. ஆனால் இது பிராந்தியோ விஸ்கியோ (இந்த இரண்டு பெயர்கள்தாம் எனக்குப் பொதுவாகத் தெரிந்தவை) தெரியவில்லை. அவர் முன்னிலையில் இன்னும் அதே பதினாலு வயதுச் சிறுவனாகத்தான் உணர்ந்தேன். அவர் ஒரு கோப்பை முடித்து விட்டு இன்னொரு கோப்பை என்று தொடர்ந்து கொண்டே இருந்தார்.சரிதான். தமிழ் சூழலில் காதல் தோல்விக்கு அடுத்த கட்டம் எப்படி இருக்க வேண்டுமோ, அந்தப் பாதையில்தான் இது செல்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
‘இது வாடகை வீடா?’ என்றேன். அப்போதுதான் அந்த வீட்டைக் கவனித்திருந்தேன். வீடு தூய்மையாக இருந்தது. தரையும் மரத்தாலானது. அங்கங்கே மலர் ஜாடிகள் வைக்கப்பட்டு, சுவர்களில் நவீன ஓவியங்கள் தொங்கவிடப்பட்டு, உயர்ரக தேக்கு நாற்காலிகளும், மேஜையும் கட்டிலுமாகத் திருத்தமாக இருந்தது.
‘இதுவா, இதை நான் வாங்கி ஏழு வருஷமாச்சு. இந்தியா வரும் போதெல்லாம் இங்கதான் தங்குவேன்’
‘ஏன் மாமா, ஒரு தடவை கூட எங்களை வந்து பாக்கணும்னு தோணல இல்ல?’ என்றேன்.
தான் பலமுறை பார்க்க வேண்டும் என்று விரும்பி அதற்கு முயற்சித்ததாகவும், ஆனால் அதற்கான மனவலிமையைத் தான் இதுவரை பெறவில்லை என்றும் கூறினார். அங்கே தான் வந்தால் வீணாகத் தகராறுதான் ஏற்படும் என்பதலாயே, எங்கள் உறவினர்களைப் பொறுத்தவரை தான் இறந்து போய்விட்டவராகவே இருக்க விரும்பியதாகவும் தெரிவித்தார். அதற்குப் பிறகு தான் அயர்லாந்தில் நிலைபெறுவதற்காகப் பட்ட சிரமங்களையும், அங்கு தான் நிகழ்த்திய சாதனைகளையும் விவரித்துக் கொண்டே போனார்.
அதிகாலை மூன்று மணி ஆகி விட்டிருந்தது. இதுவரையிலும் இரண்டு பாட்டில்களை முடித்திருந்தார். என்னால் என்னவென்று புரிந்து கிரகித்துக் கொள்ள முடியாத புலம்பல் ஒன்று அவரிடமிருந்து வெளிப்பட்ட வண்ணமே இருந்தது. இதற்கு மேல் போனால் அவர் மயங்கி விழுவதற்கோ, வாந்தி எடுத்துவிடுவதற்கோ அபாயம் இருந்த போதிலும், இத்தோடு போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறுவதற்குத் தயக்கமாகத்தானிருந்தது.
‘நான் காலையில சில டெலிகேட்ஸைப் பார்க்க வேண்டியிருக்கு. காலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பிப் போய்விட்டுப் பத்துப் பதினோரு மணிக்கெல்லாம் திரும்பி வந்துடுவேன். நீ இங்கேயே தூங்கிட்டிரு. நான் வந்ததும் ரெண்டு பேரும் ஏற்காடு சுத்திப் பார்க்கலாம்.’ என்றார். பிறகு என் அருகில் பார்வையைச் செலுத்தி, ‘அதென்ன பையில?’ என்றார்.
அது என் ஆய்வுக்கான குறிப்புகள் அதில் இருக்கின்றன என்று சொல்லி, என் ஆய்வு பற்றியும், ஆவிகள் பற்றியதான என் தேடுதல் பற்றியும் அவரிடம் விளக்கினேன்.
அவர் சிரித்துக் கொண்டார். ‘சரி. நீ அந்த சோஃபாவில படுத்துக்கோ. கம்பளி இருக்கு. நான் உள்ள கட்டில்ல படுத்துக்கறேன். காலையில எந்திரிச்சிட்டீன்னா குளிச்சு ரெடியாயிரு. கெய்சர்ல சுடுதண்ணி போட்டுக்க. ஃப்ரிட்ஜ்ல இருந்து ஏதாவது சாப்பிடு.’ என்றபடி உள்ளே போனவர் திரும்பி, ‘அந்தப் பையைக் கொடு’ என்று என்னிடமிருந்து வாங்கி மேஜை மேல் வைத்தார்.
படுத்து நெடுநேரமாகியும் மாமாவின் புலம்பல் அறைக்குள்ளிருந்து கேட்டபடியே இருந்தது. சிறிது நேரத்திலேயே ஆழ்ந்து உறங்கி விட்டேன். காலையில் விழிப்பு வந்தபோது மணி ஏழரையாகியிருந்தது. மாமா உள்ளே இல்லை. வெளியே போயிருக்க வேண்டும். அவரது படுக்கைக்கு அருகில் பாட்டில்கள் சிதறிக் கிடந்தன. நான் குளித்து விட்டுச் சிறிது நேரம் உள்ளேயே இருந்து அந்த வீட்டை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். பிறகு சலிப்பு மேலிட வெளியே கிளம்பலாம் என்று முடிவெடுத்தேன்.
ஒரு உணவகத்தில் சிற்றுண்டியை முடித்து விட்டு, சற்று நேரம் ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ஆட்டோ பிடித்தேன். அதன் ஓட்டுனர் இருநூறு ரூபாய் கொடுத்தால் ஏற்காடு முழுக்க சுத்திக் காட்டுகிறேனென்றான். லேடீஸ் சீட், பட்டுப் பண்ணை, கரடிக்குகை என்று சுற்றினோம். ஒவ்வொரு இடத்திலும் சார் போலாமா, சார் போலாமா என்று ஓட்டுனர் அவசரப்படுத்தியபடியே இருந்தான். இறுதியில் நான் பொறுமையிழந்து என்னைக் கொண்டு போய் மான் பூங்காவுக்கு அருகில் விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டேன்.
போகும் வழியில் ஓட்டுனர் என்னிடம், ‘ பாஸ், என்ன படிக்கிறீங்களா?’ என்றான்.
‘ஆமாம். பாரா சைக்காலஜி.’
‘நான் கூட யெம்மேங்க பாஸ். சோசியாலஜி. அண்ணாமலைல பண்ணியிருக்கேன். அதென்னங்க பாஸ் பாரா சைக்காலஜி?’
நான் விளக்கினேன்.
‘அட! அப்ப நீங்க ஜி.எச். பத்தித் தெரிஞ்சிகிட்டா உதவியா இருக்குமே!’
‘ஜி. எச்சா? ஏன் அங்க யாராவது ஆவி பார்த்த மன நோயாளிங்க இருக்காங்களா?’ என்றேன்.
‘ அதில்லிங்க பாஸ். இங்க ஏற்காட்டில ஜி.எச்னா கோஸ்ட் ஹவுஸ். பேய் வீடு. உள்ள போக முடியாது. போலீஸ் தடுப்பு போட்டிருக்கு. தூர நின்னு வேணா பார்த்துக்கலாம்.’
‘அதென்னது அது? சொல்லுங்களேன்’ என்றேன்.
‘ அதிருக்கும் பாஸ், ஏழெட்டு வருஷம். இங்கிலாந்தோ, அயர்லாந்தோ ஒரு ஃபாரின் நாட்டில இருந்து. . . நம்ம ஆள்தான். . . பெரிய கைபார்ட்டின்னு நினைக்கிறேன். இங்க வந்து அந்த வீட்டை வாங்கினான். வாங்கி ஒரு மாசத்துக்கு ஆளு வீட்டை விட்டே வெளிய வரல. பெருங்குடிகாரன். வீட்டுக்குள்ள இருந்தே பாட்டில் பாட்டிலா குடிச்சே தீர்த்துருக்கான். அப்புறம் ஒரு நாள் தொண்டையில சுட்டுகிட்டுச் செத்துப் போயிட்டான். அப்ப அது பெரிய ந்யூசு. நான் அப்ப ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தேன். நம்மூர் ஆளு ஒருத்தன் கையில துப்பாக்கி இருக்கறதே பெரிய ந்யூசு இல்லையா?. . . ‘
அவன் தொடர்வதற்காகக் காத்திருந்தேன்.
‘ அப்புறம் போலீஸ் வந்து கேசெல்லாம் எழுதி. . . அவன் எந்த நாட்டில இருந்து வந்தானோ அங்க விசாரிச்சா இவனப் பத்தி ஒண்ணுமே தெரியல. கொஞ்ச நாள் காத்திருந்து பார்த்துட்டு, அநாதைப் பொணமாத்தான் எரிச்சாங்க. அப்பலேர்ந்து வீடு பூட்டித்தாங்கெடக்கு. . . ’
‘ஆனா கொஞ்ச நாள்ல ஊருக்குள்ள ஒரு வதந்தி பரவ ஆரம்பிச்சுச்சு. தினம் சரியா பனிரெண்டு மணிக்கு பெட்ரூம்ல தானா விளக்கு எரியற மாதிரி. விளக்குன்னா, ஏதோ அகல் விளக்கு, நெய் விளக்கு மாதிரி. ஒவ்வொரு ராத்திரியும் சின்னதா தீபம் எரியறது ஜன்னல் வழியா தெரியறது. கூடவே விடாது அழுகைக் குரல். கேவல் சத்தம். ஒரு ஆம்பளை அழுதுகிட்டே புலம்பற மாதிரி.  ரெண்டு, மூணு பேரு யதேச்சையா இதப் பார்க்கப் போய் ஜூரம் கண்டு படுத்த படுக்கையாயிட்டாங்க. இப்போ புதுசா அந்த ஆளோட ஆவி வெளிய வந்து உலாத்துறதாகவும் பேசிக்கறாங்க.’ என்றான்.
மான் பூங்கா வந்து விட்டது. ‘ அந்த வீடு எங்க இருக்கு?’ என்றேன். அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை முற்றிலும் உணர்ந்தவனாக.
‘ இங்கதாங்க. எதுத்தாப்பில ஒத்தயடிப்பாதை போகுதுல்ல. அதுக்கப்புறம் நிறைய மரம், வீடே தெரியாது. கொஞ்சம் உத்துப் பார்த்தாத்தான் தெரியும். உள்ளே போயிராதீங்க. உயிருக்கு நான் கேரண்டி இல்ல. அந்த கேஸ் டீடெய்ல்ஸ் வேணும்னா சொல்லுங்க. எஸ்.ஐ நம்ம ஆளுதான். அறிமுகப்படுத்தி வைக்கிறேன். வரட்டுமா பாஸ்!’ என்றான்.
நான் மான் பூங்காவுக்கு அருகில் இறங்கி எதிரில் தெரிந்த ஒற்றையடிப்பாதையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆட்டோ ஓட்டுனர் முக்கு திரும்பப்போனவன் வண்டியைத் திருப்பிக் கொண்டு வந்து என்னருகில் நிறுத்தினான். ‘ என்ன பாஸ் பேகை மறந்து ஆட்டோவிலேயே வுட்டுட்டீங்க. இந்தாங்க பாஸ்.’ என்றான். நான் என் பையை வாங்கிக் கொண்டு அவனுக்கு நன்றி சொல்லி வழியனுப்பினேன்.
எனக்கு ஏதோ புரிந்த மாதிரித் தெரிந்தது. சட்டென்று என் பையைத் தூக்கி ஜிப்பைத் திறந்து பார்த்தேன். உள்ளே பளபளவென்று வெள்ளிக் குத்து விளக்கு ஒன்று படுத்துக் கிடந்தது.