Posts

Showing posts from April, 2015

கவிஞர் தேவதேவனுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கவிஞருக்கு, இன்றைக்குப் பூராவும் உங்கள் கவிதைளையே வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எங்கோ உச்சத்தில் இருக்கிறீர்கள். உங்களைத் தொட உங்கள் கவிதைகளின் வாயிலாகவே முயற்சிக்கிறேன். சில கவிதைகள் சட்டென்று நேரடியான அனுபவத்தைத் தந்து உவகை கொள்ள வைக்கின்றன. சில கவிதைகளில் உங்களோடு பயணிக்கத் துவங்கி நீங்கள் உச்சத்தை அடையும் போது என்னால் அங்கு வர இயலாது போய் விடுகிறது. இதன் காரணம் என் மொழியின் பற்றாக்குறையோ, கவிமனதைப் புரியாதிருப்பதோ அன்று. உங்களது ஆன்மீகத் தளத்தை நான் இன்னும் தொட இயலாதிருப்பதே காரணம் என்று புரிந்து கொள்கிறேன். ஒவ்வொரு கவிதையையும் இருமுறை வாசித்தேன். வாய் விட்டு சொல் சொல்லாக இன்னொரு முறை. ஒவ்வொரு முறை கவிதையை வாசித்து முடிக்கும் போதும் மனம் அமைதியான புன்முறுவலுடன் உவகை கொள்கிறது. கவிதை தரும் சித்திரங்கள் மனதில் நிலைத்து அதை ஒரு படி மேலுயர்த்துகின்றன. ரயில் பெட்டியில் ஒரு கன்னிகாஸ்திரி என்ற கவிதையை நினைத்துக் கொள்கிறேன். வண்டி புறப்படவும் தனியே விட்டுவிட்டு மகிழ்ச்சியுடனே விடைபெற்றுச் சென்றனர் தோழிகள் என்ற துவக்க வரிகள் ரயில் பெட்டியில் நிகழும் அந்தத் த

யூதாஸின் முத்தம் இழைத்த துரோகம்

யூதாஸின் முத்தம் இழைத்த துரோகம் உம் கைகளில் விலங்கு பூட்டியது. நீர் தேவன் மகனோ என்ற தேவாலயத்து உயர்த்துறவியின் கேள்வியிலேயே பதில் இருந்ததைச் சுட்டிக் காட்டினீர். இறைவனுக்கெதிராய் சதி செய்த குற்றம் உம்மேல். இன்னொரு சீடனும் மும்முறை மறுதலித்தான் உம்மை. இரு மன்னர்களின் அவையில் குற்ற விசாரணைக் கைதியானீர். மன்னன் மனைவி உம்மைக் கனவிற் கண்டாள். நேர்மையின் திருவுருவைச் சந்தேகித்தல் வாள் முனைக்கு வலியச் சென்று கழுத்தைக் கொடுத்தல் என்றாள். களங்கம் ஏதும் காண இயலாது கைகழுவினர் இரு மன்னரும். மதம் பிடித்த தலைவர் இறைவனின் திருக்குமாரனை கொலைகாரன் ஒருவனுடன் குருசேற்றத் துணிந்தனர். வெறி பிடித்த ஊரும் துணை சேர்ந்தது. கசையடிகள் தசை கிழித்து குருதி வழியக் குருசு சுமந்தீர் மண்டையோடுகளின் இருப்பிடமான கல்வாரி நோக்கி. இதோ மானுடத்தின் மேன்மைக்காய் சிலுவையேறினீர். உம் உள்ளொளி காணும் திறனற்ற குருடரின் வேதனைச் சுமையைச் சிலுவையில் சுமந்தீர். என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற ஓலம் உயிர்ப்பெருந்திரளின் ஒற்றைக் குரலாய் விண்ணோக்கி எழுந்தது சிலுவையேற்றத்தின் இருளு